search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மூலவர் பாண்டுரங்க விட்டலர்
    X
    மூலவர் பாண்டுரங்க விட்டலர்

    திருமண வரம், மகப்பேறு தரும் பாண்டுரங்கன்

    திருமணம் வேண்டியும், மகப்பேறு வேண்டியும் பக்தர்கள் விட்டிலாபுரம் பாண்டுரங்கர் கோவிலில் திரட்டுப்பால் செய்து வழிபட்டுப் பயனடைகிறார்கள்.
    பழமையும், புதுமையும் இணைந்தது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விட்டிலாபுரம் பாண்டுரங்கர் ஆலயம். இங்குள்ள மூலவர் ‘பாண்டுரங்க விட்டலர்’ என்ற திருநாமத்துடன் கிழக்குத் திசை நோக்கி நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். அருகில் ருக்மணி, சத்யபாமா வீற்றிருந்து அருள்கிறார்கள். உற்சவரின் அருகில் ருக்மணி, சத்யபாமா, பூமாதேவி, ஸ்ரீதேவி, நீலாதேவி ஆகியோரும் வீற்றிருக்கிறார்கள்.

    இங்கு மார்கழி மாதத்தில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழா, முற்காலத்தில் மிக பிரமாண்டமாக நடந்துள்ளது. இந்த கோவில் பூலோக வைகுண்டமாக போற்றப்படுவதால் இங்கு பரமபத வாசல் கிடையாது. விட்டலாபுரத்தில் நம்மாழ்வார் விக்கிரகம் எழுந்தருளிய காலத்தில் இக்கோவில் மிகச் சிறப்பாக விளங்கியுள்ளது. இசை, நாட்டியம் இவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் அரங்கேற்றத்துக்கு முன்பு, பாண்டுரங்க விட்டலரை வணங்கிச் சென்று தங்களது அரங்கேற்றத்தினை நடத்துகிறார்கள்.

    இங்கு இறைவனுக்கு படைக்கப்படும் திரட்டுப்பால், பால்பாயசம் மிக விசேஷம். திருமணம் வேண்டியும், மகப்பேறு வேண்டியும் பக்தர்கள் இக்கோவிலில் திரட்டுப்பால் செய்து வழிபட்டுப் பயனடைகிறார்கள். கல்வி -கேள்விகளில் குழந்தைகள் சிறந்து விளங்க சில பக்தர்கள் பால்பாயசம் அளித்தும் வழிபடுகிறார்கள்.

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் விட்டிலாபுரம் கிராமம் உள்ளது. திருநெல்வேலி - திருச்செந்தூர் மெயின் ரோட்டில் செய்துங்கநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு. திருநெல்வேலி சந்திப்பில் இருந்து டவுண் பஸ் வசதியும் உள்ளது.
    Next Story
    ×