search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நளபுராணம்
    X
    நளபுராணம்

    நளபுராணம் பாராயணம் செய்தால் சனி தோஷம் விலகும்

    சனி பாதிப்பு உள்ளவர்கள், ‘நளபுராணம்’ பாராயணம் செய்து, திருநள்ளாறு திருத்தலத்தில் வழிபட்டால் சனியால் உண்டாகும் அனைத்து விதமான தோஷங்களும் விலகிவிடும்.
    ராமாயணம், மகாபாரதம் காலத்திற்கும் முற்பட்டது நளன் தமயந்தி சரித்திரம். நிடத நாட்டில் மாவிந்த நகரைத் தலைநகராகக் கொண்டு வீரசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவரது மகன் நளன். ஒருநாள் நளனின் பேரழகினைக் கண்ட அன்னப்பறவை ஒன்று, “மன்னா! உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டில் குண்டினபுரம் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வரும் வீமசேனன் எனும் மன்னனின் மகள் தமயந்திதான்” என்று கூறி அவளது குணநலன்களை சொன்னது.

    அதைக் கேட்டு தமயந்தியின் மீது நளனுக்கு காதல் வந்தது. அவன் தன் காதலை கூறும்படி அன்னப்பறவையை தூது அனுப்பினான். அன்னமும் தமயந்தியிடம் சென்று, நளனின் ஆட்சித் திறத்தினையும், அறிவு மற்றும் நற்பண்புகளையும் கூறியது. அதைக் கேட்டு தமயந்திக்கும் நளனின் மீது காதல் உண்டானது.

    இந்நிலையில் தமயந்திக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் நளன் உட்பட மண்ணுலக மன்னர்கள் பலரும், இந்திரன் உட்பட விண்ணுலக தேவர்கள் சிலரும் பங்கேற்றனர். தேவர்கள் நளன் மீது தமயந்தி கொண்டக் காதலை அறிந்து, அனைவரும் நளனின் உருவத்திலேயே சுயம்வரத்திற்கு வந்திருந்தனர். கையில் மணமாலையுடன் வந்த தமயந்தி ஒரு கனம் திகைத்துப் போனாள்.

    ‘இவர்களில் உண்மையான நளனை எப்படிக் கண்டறிவது?’ என்று குழம்பிய தமயந்தி, ‘தேவர்களின் கண்கள் இமைக்காது; அவர்கள் சூடும் மாலை வாடாது’ என்பதனை அறிந்திருந்து வைத்திருந்தாள். அதன் மூலம் உண்மையான நளனைக் கண்டறிந்து மணமாலையை சூட்டினாள். அவர்கள் இல்லற வாழ்க்கையில் இரு குழந்தைகளும் பிறந்தனர்.

    தமயந்தி, நளனை மணந்து கொண்டதால் கோபம்கொண்ட இந்திரனும் அவனுடன் வந்த தேவர்களும், சனி பகவானிடம் நளனைப் பிடித்து துன்புறுத்தும்படிக் கூறினர். சனி பகவான் ஏழரை ஆண்டுகள் நளனைப் பிடித்தார். இதனால் புஷ்கரனோடு சூதாடி நளன் தன் அரசாட்சியை இழந்தான். மனைவியோடு காட்டில் வாழ்ந்தான். அப்போது மனைவியையும் இழந்தான். கணவனைக் காணாததால் தமயந்தி தந்தையோடு சென்று வசித்தாள். கார்கோடகன் என்ற பாம்பு கடித்து, நளன் உடல் கருப்பானதோடு, உருவமும் குள்ளமாக மாறியது. இதையடுத்து அவன் வாகுகன் என்ற பெயரில் அயோத்தியின் அரசனாக இருந்த ரிதுபன்னனிடம் தேரோட்டியாக சேர்ந்தான்.

    இந்த நிலையில் தனக்கு மீண்டும் சுயம்வரம் என்றால் நளன் தன்னைத் தேடி வருவான் என்று நினைத்தாள் தமயந்தி. தன் தந்தையிடம் கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்யச் சென்னாள். ரிதுபன்னன் சுயம்வரத்திற்கு புறப்பட்டான். அவனது தேரோட்டியாக நளனும் அங்கு வந்தான். அவனைக் கண்டறிந்த தமயந்தி, அவனுக்கு மாலையிட்டாள். கார்கோடகன் அளித்திருந்த ஆடையையும் நளனுக்கு வழங்கினாள். அதை அணிந்ததும் நளன் சுயஉருவைப் பெற்றான். நளனும், தமயந்தியும் மீண்டும் இணைந்தனர்.

    பின்னர் பரத்வாஜ முனிவரின் வழிகாட்டுதல்படி, தர்ப்பை புற்கள் நிறைந்த வனமான திருநள்ளாறு திருத்தலம் வந்து, தீர்த்தம் உண்டாக்கி நீராடினார். அங்கு சுயம்புவாக தோன்றிய தர்ப்பை புற்கள் படிந்த தழும்புடன் கூடிய தர்ப்பாரண்யேஸ்வரர் லிங்கத்திற்கு மலர்கள் சூட்டி வழிபாடு செய்தான். இதையடுத்து அவனைப் பிடித்திருந்த ஏழரைச் சனி முற்றிலுமாக நீங்கியது. இழந்த செல்வங்கள் அனைத்தையும் திரும்பப் பெற்று, நல்ல முறையில் அரசாட்சியை தொடர்ந்தான்.

    நளன் இங்கு ஈசனின் கருவறைக்குள் நுழைந்ததுமே, அவனைப் பற்றியிருந்த சகல துன்பங்களும், சனி தோஷங்களும் உள்ளே நுழைய அஞ்சி வெளியிலேயே தங்கிவிட்டது. அதனால்தான் அம்பாள் சன்னிதி அருகில் கட்டை கோபுரத்தின் வெளிச்சுவற்றின் மாடத்தில் சனி பகவான் சன்னிதி இருக்கிறது.

    தன்னால் மிகவும் துன்பப்பட்ட நளனிடம் சனி பகவான், “சோதனை காலத்திலும் மிளிர்ந்த நள வேந்தே! வேண்டிய வரம் கேள்” என்றாராம்.

    உடனே நளன், “சனிபகவானே! நான் பட்ட துன்பம் யாருக்கும் ஏற்படக்கூடாது. என் மனைவி பட்ட துன்பமும் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. வருங்காலத்தில் எனது கதையைப் படிப்பவர்களுக்கு உங்களால் எந்தவிதமான துன்பமும் வரக்கூடாது” என்ற வரத்தைக் கேட்டான்.

    “நளனே! உன்னுடையக் கதையைக் கேட்போரை, படிப்போரை நான் துன்புறுத்தமாட்டேன். இது உறுதி” என்று கூறினார். எனவே சனி பாதிப்பு உள்ளவர்கள், ‘நளபுராணம்’ பாராயணம் செய்து, திருநள்ளாறு திருத்தலத்தில் வழிபட்டால் சனியால் உண்டாகும் அனைத்து விதமான தோஷங்களும் விலகிவிடும். திருநள்ளாறு செல்பவர்கள், முதலில் ஆலயத்தின் வட மேற்கில் உள்ள நள தீர்த்தத்தில் நீராடி, உடுத்திக் குளித்த துணியை, அதற்கென குளக்கரையில் வைக்கப்பட்டுள்ள தொட்டியில் சமர்பித்துவிட்டு, அருகிலுள்ள நளனின் கலி தீர்த்த விநாயகர், பைரவர் சன்னிதியில் முறைப்படி வழிபட வேண்டும்.

    பின்னர் தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் கருவறையில் வீற்றிருக்கும் இறைவனுக்கு சாம்பிராணி தூபம் காட்டி, தீபம் ஏற்றி நறுமண மலர்கள் சாத்தி வழிபட வேண்டும். பின்னர் அம்பாள் சன்னிதியில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டு சனிபகவான் சன்னிதியிலும் வழிபாடு செய்ய வேண்டும்.

    தமிழ் மாதத்தின் கடைசி சனிக்கிழமைகளிலும், தமிழ் மாதப் பிறப்பு நாட்களிலும், அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் இத்தல நள தீர்த்தத்தில் நீராடி வழிபடுவது சிறப்பானது.

    அமைவிடம்

    காரைக்காலில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 5 கிமீ தூரத்தில் திருநள்ளாறு திருத்தலம் அமைந்திருக்கிறது.
    Next Story
    ×