search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மாங்கல்ய மகரிஷி, மங்களாம்பிகை
    X
    மாங்கல்ய மகரிஷி, மங்களாம்பிகை

    கன்னியரின் கல்யாணக் கனவை நிறைவேற்றும் மாங்கல்ய மகரிஷி

    அருள்மிகு மாங்களீஸ்வரர் ஆலத்தில் உள்ள மாங்கல்ய மகரிஷியை வணங்கி பிரார்த்தனை செய்தால், அமைதியான அன்பான கணவனைப் பெண்கள் பெறலாம் என்பது நம்பிக்கை.
    இடையாற்று மங்கலம் என்ற சிற்றூரில் உள்ளது அருள்மிகு மாங்களீஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் மாங்களீஸ்வரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை.

    2006-ம் ஆண்டு ஜூன் முதல் நாள் இந்த ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இங்கு மேற்கு பிரகாரத்தில் அருள்பாலிக்கும் மாங்கல்ய மகரிஷி இந்த ஊரில் அவதரித்து இங்கேயே சித்தியானவர் எனக் கூறுகின்றனர் பக்தர்கள். இவர் இங்கு அருள்பாலிக்கும் இறைவனுக்கும், இறைவிக்கும் திருமணம் செய்து வைத்தவர் என்றும் தல வரலாறு சொல்லப்படுகிறது.

    இந்த மாங்கல்ய மகரிஷி கன்னிப் பெண்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார். திருமணமாகாதவர்கள் உத்திர நட்சத்திரத்தில் இந்த மகரிஷிக்கும், இறைவன் இறைவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து, சீப்பு, கண்ணாடி, குங்குமம், மஞ்சள், சட்டைத்துணி, பழம், பூ போன்ற மங்கலப்பொருள்களை பெண்களுக்கு தானம் செய்ய வேண்டும். இப்படி வழிபடும் கன்னியரின் கல்யாணக் கனவு பலிக்கிறது. மனதிற்கு பிடித்த மணாளனை அவர்கள் கரம் பற்றுகின்றனர்.

    மணமானதும் அவர்கள் தம் கணவருடன் இந்த ஆலயம் வந்து, மாங்கல்ய மகரிஷியை வழிபட்டு சர்க்கரைப் பொங்கல், கேசரி, அக்கார வடிசல் போன்ற இனிப்பு பிரசாதங்களை அவருக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வினியோகம் செய்கின்றனர். தவிர அந்தக் கன்னியர்கள் தங்களது வேண்டுதல் பலித்து, திருமணம் நிச்சயமாகி, பத்திரிகை அடித்ததும், அந்த முதல் பத்திரிகையை சமர்பிப்பது மாங்கல்ய மகரிஷியின் பாதத்தில்தான்.

    இந்த மாங்கல்ய மகரிஷியை வணங்கி பிரார்த்தனை செய்தால், அமைதியான அன்பான கணவனைப் பெண்கள் பெறலாம் என்பது நம்பிக்கை.

    தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயத்தில் உள்ள இறைவன் - இறைவியை, உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆராதனை செய்து வழிபட்டால் கூடுதல் பலன் கிடைக்கக்கூடும் என்பது ஐதீகம்.

    திருச்சி - அன்பில் சாலையில் உள்ள லால்குடி பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது இடையாற்று மங்கலம் என்ற தலம்.
    Next Story
    ×