என் மலர்

  ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

  உழைப்பை இறைவனிடம் ஒப்புக்கொடுங்கள்
  X
  உழைப்பை இறைவனிடம் ஒப்புக்கொடுங்கள்

  உழைப்பை இறைவனிடம் ஒப்புக்கொடுங்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடவுளின் கரத்தில், நம்மிடம் இருக்கும் உழைப்பு, திறமையை ஒப்புக்கொடுப்போம். அவ்வாறு செய்யும்போது, தேவன் நம்முடைய உழைப்பை ஆசீர்வதித்து, நம் குறைகளை எல்லாம், தன் மகிமையால் நிறைவாக்குவார்.
  இறை இயேசுவில் பிரியமானவர்களே! இன்று நம்மில் பலரும் கடன் பிரச்சினையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறோம். பலர் தங்கள் இன்னுயிரை இழப்பதற்கும் இந்த கடன் ஒரு காரணமாக இருக்கிறது. கடன் பிரச்சினை பற்றி விவிலியத்தில் உள்ள 2 அரசர்கள் நூலின், 4-ம் அதிகாரத்தில் ஒரு செய்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

  இறைவாக்கினர் குழுவினரைச் சார்ந்த ஒருவரின் மனைவி, எலிசாவிடம் வந்து கதறி அழுது, “உம் அடியவனாகிய என் கணவர் இறந்து விட்டார். அவர் ஆண்டவருக்கு அஞ்சி நடந்தவர் என்பது உமக்குத் தெரியும். அவருடைய கடன்காரன் என் இரு பிள்ளைகளையும் தனக்கு அடிமைகளாக எடுத்துக்கொள்ள வந்திருக்கிறான்” என்றாள்.

  எலிசா அவளை நோக்கி, “நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? உன் வீட்டில் என்ன வைத்திருக்கிறாய்? என்று சொல்” என்றார். அதற்கு அவள் “உம் அடியவளாகிய என்னிடம் கலயத்தில் சிறிது எண்ணெய் மட்டுமே இருக்கிறது. வேறு ஒன்றும் வீட்டில் இல்லை” என்றாள்.

  எலிசா, “நீ சென்று உன் அண்டை வீட்டார் அனைவரிடமிருந்தும் பல வெற்றுப் பாத்திரங்களைக் கேட்டுக் வாங்கிக் கொள். பின் உன் புதல்வர்களுடன் வீட்டினுள் சென்று கதவை மூடிக்கொள். பாத்திரங்களில் அந்த எண்ணெயை ஊற்று. நிறைந்தவற்றை ஒரு பக்கத்தில் எடுத்து வை” என்றார்.

  அந்தப் பெண் அவ்வாறே செய்தாள். பக்கத்து வீட்டினரிடம் இருந்து பாத்திரங்களைப் பெற்ற பிறகு, புதல்வர்களுடன் வீட்டிற்குள் சென்று கதவை மூடிக்கொண்டார். பின்னர் வீட்டில் இருந்த எண்ணெயை, பாத்திரங்களில் ஊற்றினார். எல்லாப் பாத்திரங்களும் நிறைந்தபின், அவள் தம் மகன் ஒருவனை நோக்கி, “இன்னும் ஒரு பாத்திரம் கொண்டு வா” என்றாள். அதற்கு அவன், “வேறு பாத்திரம் இல்லை” என்றான். அத்தோடு எண்ணெய் வருவதும் நின்றுவிட்டது.

  அவள் இதுபற்றி எலிசாவிடம் வந்து தெரிவித்தாள். அதற்கு அவர், “நீ போய் எண்ணெயை விற்று உன் கடனைத் தீர்த்துவிடு. எஞ்சியதைக் கொண்டு நீயும் உன் புதல்வர்களும் பிழைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

  கடனால் இறந்தவரின் மனைவி, எலிசாவிடம் வந்து தன்னுடைய பிரச்சினையைக் கூறியபோது, ‘நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?, உன்னிடத்தில் என்ன இருக்கிறது?’ என்ற இரண்டு கேள்விகளை மட்டும் கேட்டார்.

  அப்போது அந்தப் பெண், தன்னிடம் ஒன்றுமே இல்லை என்று கூறாமல், தன்னிடம் இருக்கும் சிறிதளவு எண்ணெயைப் பற்றிச் சொன்னாள். அதை எலிசாவின் வழியாக கேட்ட தேவன், அந்த சிறிதளவு எண்ணெயை பெருகச் செய்து, அந்தப் பெண்ணின் கடனைத் தீர்த்ததுடன், அவர்களின் பிற்கால வாழ்க்கைக்கு தேவையானதையும் செய்துகொள்ளும்படி அற்புதம் நிகழ்த்தினார்.

  நம்மிடமும் இன்று ஒன்றும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கடவுளின் கரத்தில், நம்மிடம் இருக்கும் உழைப்பு, திறமையை ஒப்புக்கொடுப்போம். அவ்வாறு செய்யும்போது, தேவன் நம்முடைய உழைப்பை ஆசீர்வதித்து, நம் குறைகளை எல்லாம், தன் மகிமையால் நிறைவாக்குவார்.

  சி.கிறிஸ்டோ, சென்னை.
  Next Story
  ×