என் மலர்

  ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

  இயேசு
  X
  இயேசு

  சிறு வயதிலேயே பல அற்புதங்களை நிகழ்த்திய இயேசு கிறிஸ்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இயேசு கிறிஸ்துவை அற்புதங்களின் நாயகராக கண்டதாலேயே, அவர் வாழ்ந்த யூத சமூகத்தைச் சேர்ந்த பலரும் அவரை இறைமகனாக ஏற்றுக் கொண்டனர்.
  இறைமகன் இயேசு மனிதராக இந்த உலகில் வாழ்ந்த காலத்தில், கணக்கற்ற அற்புதங்களைச் செய்ததாக பைபிள் கூறுகிறது. அவர் இன்றும் வாழும் கடவுளாக இருக்கிறார் என்பதற்கு மக்கள் மத்தியில் நிகழும் பல்வேறு அற்புதங்கள் சான்று பகர்கின்றன. இயேசு கிறிஸ்து சிறு வயதிலேயே பல அற்புதங்களை நிகழ்த்தியதாக, பைபிளில் சேர்க்கப்படாத சில பழங்கால நூல்கள் குறிப்பிடுகின்றன.

  ஆனால், இயேசுவின் இறையாட்சிப் பணியில் முதல் அற்புதம் கானா ஊர் திருமண வீட்டில் நடைபெற்றதாக பைபிள் சொல்கிறது. திருமண விருந்துக்கான திராட்சை ரசம் தீர்ந்துபோன நிலையில், இயேசு தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றி அற்புதம் செய்தார். “எனது நேரம் இன்னும் வரவில்லை” என இயேசு முதலில் கூறினாலும், அவரது தாய் மரியாவின் பரிந்துரையை ஏற்று இந்த அற்புதத்தை நிகழ்த்தியதாக நற்செய்தியாளர் யோவான் எடுத்துரைக்கிறார்.

  இயேசு கிறிஸ்துவை அற்புதங்களின் நாயகராக கண்டதாலேயே, அவர் வாழ்ந்த யூத சமூகத்தைச் சேர்ந்த பலரும் அவரை இறைமகனாக ஏற்றுக் கொண்டனர். இஸ்ரவேலில் தோன்றிய இறைவாக்கினர்கள், முன்பு அறிவித்த இறையாட்சியை செயல்படுத்த வந்த ‘இறைமகன்’ இயேசு தான் என்ற யூதர்களின் நம்பிக்கைக்கு, அவரது அற்புதங்கள் அனைத்தும் அடித்தளம் அமைத்துக் கொடுத்தன. தமது வாழ்நாளில் மூன்று விதமான அற்புதங்களை இயேசுபிரான் செய்ததாக காண்கிறோம்.

  முதலாவதாக, அவர் பலவித பிறவிக் குறைபாடுகள் கொண்டவர்களையும், காய்ச்சல், தொழுநோய், ரத்தப்போக்கு, முடக்குவாதம் உள்ளிட்ட பல நோய்களையும் குணப்படுத்தினார். தீய ஆவியின் தொல்லைகள் என்று கருதப்பட்ட மனநோய், வலிப்பு போன்றவற்றையும் சுகமாக்கினார்.

  இயேசுவுக்கு 700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இறைவாக்கினர் எசாயா, கடவுள் ஆட்சியில் நிகழவிருக்கும் அற்புதங்களாக முன்னுரைத்தவை இயேசுவின் காலத்தில் நிறைவேறின. “அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும், காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர், வாய் பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்” (எசாயா 35:5-6) என்ற இறைவாக்கை இயேசு நிறைவு செய்தார்.

  இரண்டாவதாக, இயேசு இயற்கை மீது அதிகாரம் கொண்டவராகத் திகழ்ந்தார். அவர் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றி அற்புதம் செய்ததை (யோவான் 2:1-11) பைபிள் எடுத்துரைக்கிறது. இரவு முழுவதும் உழைத்து பலன் கிடைக்காத சீமோன் குழுவினருக்கு, வலைகள் கிழியும் அளவுக்கு மீன் கிடைக்கச் செய்ததை லூக்கா (5:1-11) நற்செய்தி கூறுகிறது.

  இயேசு ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கியதாக (மாற்கு 6:34-44) நான்கு நற்செய்தி நூல்களும் சான்று பகர்கின்றன. கலிலேய கடல் மீது இயேசு நடந்த அதிசயத்தையும் (மாற்கு 6:46-51), காற்றும் கடலும் இயேசுவின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்த அற்புதத்தையும் (மத்தேயு 8:23-27) நற்செய்திகள் படம்பிடித்துக் காட்டுகின்றன.

  மூன்றாவதாக.. இயேசு கிறிஸ்து வாழ்வின் மீது, அதாவது உயிரின் மேல் அதிகாரம் கொண்டிருந்தார். “வழியும் உண்மையும் வாழ்வும் நானே” (யோவான் 14:6) என்று கூறிய இயேசு, இறந்துபோன மூன்று நபர்களை மீண்டும் உயிருடன் எழுப்பியதாக நற்செய்திகளில் காண்கிறோம். தொழுகைக்கூடத் தலைவர் ஒருவரின் இறந்துபோன மகளுக்கு, அவரது வீட்டிலேயே இயேசு உயிர் கொடுத்ததாக (மத்தேயு 9:23-26, மாற்கு 5:35-43) நற்செய்திகள் கூறுகின்றன. நயீன் ஊர் கைம்பெண்ணின் மகனை கல்லறைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இயேசு உயிர்பித்ததாக லூக்கா (7:11-17) நற்செய்தியாளர் கூறுகிறார். அதையும் தாண்டி இறந்து அடக்கம் செய்யப்பட்டு நான்கு நாட்களான பிறகு, தமது நண்பர் லாசரை இயேசு உயிரோடு எழுப்பியதாக யோவான் (11:17-44) நற்செய்தி எடுத்துரைக்கிறது.

  அனைத்திற்கும் மேலாக, ஆண்டவர் இயேசு, சாவை வென்று தாமே உயிர்த்தெழுந்து தம் சீடர்களுக்கு காட்சிக்கொடுத்தது, அவரது இறைத்தன்மைக்கு சிறப்பான சான்றாக உள்ளது. “என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக் கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்” (யோவான் 10:18) என்று கூறிய இயேசு உலக மக்களின் பாவங்களுக்காக சிலுவையில் தம் உயிரையே கையளித்தார். இருந்தாலும், இறந்த மூன்றாம் நாளில் அதை இறைத் தந்தையிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

  இயேசு கிறிஸ்து மரணத்தை வென்ற அற்புதமே, அவர் மனிதராய் தோன்றிய கடவுள் என்பதை சீடர்கள் உறுதியுடன் நம்ப வழிவகுத்தது. பல்வேறு எதிர்ப்புகள், கொடுமைகள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தாண்டி, கிறிஸ்தவம் வளர்ந்து பரவி வருவதும் ஆண்டவர் இயேசுவின் அற்புதமே என்பதில் சந்தேகமில்லை. அற்புதங்களின் நாயகரான இறைமகன் இயேசுவிடம் முழுமையாக நம்பிக்கை கொண்டால், நம் வாழ்விலும் அதிசயங்கள் நிகழும் என்பது உறுதி!

  - டே.ஆக்னல் ஜோஸ்
  Next Story
  ×