search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    இயேசு
    X
    இயேசு

    நிரந்தர ஆசிர்வாதங்களை கொடுப்பவர்

    நம்முடைய வாழ்விற்கு தேவையான நிரந்தரமான ஆசிர்வாதங்களை வழங்கி நமது ஜெபத்திற்கு பதில் கொடுப்பவராய் இருக்கிறார்.
    கோவிலுக்குள் செல்பவரிடம் பிச்சை கேட்பதற்காக அவரை நாள்தோறும் கோவிலின் ‘அழகு வாயில்’ என்னுமிடத்தில் வைப்பர். அவர் கோவிலுக்குள் சென்றுகொண்டிருந்த பேதுருவையும் யோவானையும் கண்டு பிச்சை கேட்டார்.

    பேதுருவும் யோவானும் அவரை உற்றுப்பார்த்து, ‘‘எங்களைப் பார்’’ என்று கூறினர். அவர், ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் அவர்களை ஆவலுடன் நோக்கினார். பேதுரு அவரிடம், ‘‘வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்’’ என்று கூறி, அவரது வலக்கையைப் பற்றிப் பிடித்துத் தூக்கிவிட்டார்கள்.

    உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன. அவர் குதித்தெழுந்து நடக்கத் தொடங்கினார். துள்ளி நடந்து, கடவுளைப் போற்றியவாறே அவர்களோடு கோவிலுக்குள் சென்றார். அவர் நடப்பதையும் கடவுளைப் போற்றுவதையும் மக்கள் அனைவரும் கண்டனர். அவர்கள் எல்லாரும் கோவிலின் அழகு வாயில் அருகே பிச்சை கேட்டுக் கொண்டிருந்தவர் இவரே என்று அறிந்துகொண்டனர்; நடந்ததைப் பார்த்துத் திகைப்பு மிகுந்தவராய் மெய்மறந்து நின்றனர்.

    கோவில் நுழைவாயிலின் பெயரோ ‘அழகு வாயில்’. ஆனால் அதற்கு சற்றும் பொருத்தம் இல்லாத வகையில் கால் ஊனமுற்றிருந்த மனிதரை, பிச்சையெடுப்பதற்கு சிலர் கொண்டு வந்து அங்கு அமர வைத்தார்கள். வருவோர் போவோரிடம் எல்லாம் கேட்பது போன்றே, அவர் பேதுருவிடமும் யோவானிடமும் ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு பிச்சை கேட்டார். பேதுருவும் யோவானும் அவரை உற்றுப்பார்த்து, ‘எங்களைப் பார்’ என்று கூறிய உடன், அவர் பொன்னோ பொருளோ ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன்தான் அவர்களை ஆவலுடன் நோக்கினார். ஆனால் அவர்கள் அவருடைய வாழ்க்கையில் மிகப் பெரும் மாற்றத்தை கொடுப்பார்கள் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

    அவர் கேட்டது அன்றாட தேவைக்கான பணமோ பொருளோ தான். பிறப்பில் இருந்தே நடக்க முடியாத தன்னால், வாழ்நாள் முழுவதும் பிச்சையெடுத்து தான் வாழ்வை கடத்த வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தார். தன்னாலும் மற்றவர்களை போல் சுயமாக எழுந்து நடக்க இயலும் என்று அவர் எண்ணியது கூட இல்லை.

    ‘என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல’ என்று எசாயா நூலில் கூறப்பட்டுள்ளது. தன் வாழ்வின் அன்றைய பொழுதிற்கு தேவையானதை கேட்ட உடனேயே கால் ஊனமுற்றிருந்த நபருக்கு, பேதுருவும் யோவானும் இயேசுவின் பெயரால் அந்த மனிதர் எண்ணி பார்க்காத, சுகத்தையும் பலத்தையும் கொடுத்தார்கள்.

    அந்த நடக்க முடியாதவரை போல், சில நேரங்களில் நம்முடைய தேவை இதுதான் என்று நாம் நினைத்து ஒரு காரியத்தை குறித்து ஜெபிக்கலாம். ஆனால் அனைத்தையும் அறிந்த தேவன் நம்முடைய தற்போதைய நிலையை மட்டும் எண்ணாமல், எதிர்காலத்தையும் கண்ணோக்குகிறார். அவர் தற்காலிக ஆசிர்வாதத்தையோ அல்லது விடுதலையையோ நமக்கு கொடுப்பவர் இல்லை. நம்முடைய வாழ்விற்கு தேவையான நிரந்தரமான ஆசிர்வாதங்களை வழங்கி நமது ஜெபத்திற்கு பதில் கொடுப்பவராய் இருக்கிறார்.
    Next Story
    ×