search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோட்டார் புனித சவேரியார்
    X
    கோட்டார் புனித சவேரியார்

    கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் இன்று தேர்ப்பவனி: ஏற்பாடுகள் தீவிரம்

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் தேர்ப்பவனி இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தன.
    கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாகவும், உலகில் புனித சவேரியாருக்கு எழுப்பப்பட்ட முதல் பேராலயமாகவும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயத்தின் 10 நாள் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி, டிசம்பர் 3-ந் தேதி நிறைவு பெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. நேற்று 7-ம் நாள் திருவிழா நடந்தது. 8, 9, 10-ம் நாள் திருவிழாக்களின் போது தேர்ப்பவனி நடைபெறுவது வழக்கம். 8-ம் நாள் திருவிழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு தேர்ப்பவனி நடைபெற இருக்கிறது.

    இதற்கிடையே திருவிழாவில் பங்கேற்பவர்களை கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றச் செய்வது, அதிகமாக கூட்டம் கூடாமல் இருக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று காலை நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது.

    இதில், நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், நாகர்கோவில் துணை சூப்பிரண்டு வேணுகோபால், மாநகராட்சி நகர்நல அதிகாரி கின்ஷால், கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், கோட்டார் புனித சவேரியார் பேராலய பங்குத்தந்தை ஸ்டேன்லி சகாயசீலன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது பங்குத்தந்தை மற்றும் ஆலய நிர்வாகிகளிடம் அதிகாரிகள் கூறியதாவது:-

    சவேரியார் பேராலய திருவிழாவின் 9, 10-ம் நாள் திருவிழாக்களின்போது வழக்கமாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றும் வகையில் கூட்டம் அதிகமாகாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். திருப்பலியின்போது 100 பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட வேண்டும். அதன்பிறகு வருபவர்களை ஆலயத்துக்குள் சென்று பிரார்த்தனை செய்து செல்லும் வகையில் பக்தர்களை நகர்த்த வேண்டும். கூட்டம் ஒரே இடத்தில் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணியச் செய்ய வேண்டும். கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

    இதுதொடர்பாக பங்குத்தந்தை ஸ்டேன்லி சகாயசீலன் கூறுகையில், “கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றியும், அதிகாரிகள் உத்தரவு படியும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 9, 10-ம் நாள் திருவிழாக்களின் போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக கூடாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். அதன்படி நடத்த திட்டமிட்டுள்ளோம். வழக்கமாக 8, 9, 10-ம் நாள் திருவிழாக்களின் போது ஆலயத்துக்கு வெளியே சுற்றுவட்டார பகுதிகளில் தேர்ப்பவனி நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு பேராலய வளாகத்துக்குள் தேர்ப்பவனி நடத்த அதிகாரிகள் அனுமதி தந்துள்ளார்கள். எனவே தேர்ப்பவனி சுற்று வட்டாரப்பகுதியில் நடைபெறாது. பேராலய வளாகத்துக்குள் மட்டுமே தேர்ப்பவனி நடைபெறும். அதேபோல் கொடியிறக்கத்து அன்று அதாவது 8-ந் தேதி புனித இஞ்ஞாசியார், புனித சவேரியார் திருப்பண்டம் முத்தி செய்தல் நிகழ்ச்சி, அன்பின் விருந்து நிகழ்ச்சி நடைபெறாது” என்றார்.

    எனவே இன்று இரவு 10.30 மணிக்கு நடைபெற உள்ள தேர்ப்பவனி புனித சவேரியார் பேராலய வளாகத்துக்குள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தன. இந்த திருவிழாவையொட்டி வருகிற 3-ந் தேதி குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×