search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மரியாள்
    X
    மரியாள்

    மரியாளின் அமல உற்பவம்

    இறைவனின் தாயாக திகழும் கன்னி மரியாள் தமது தாயின் வயிற்றிலேயே அமல உற்பவியாக தோன்றியதைக் கொண்டாடும் இந்த திருநாள், டிசம்பர் 8ந்தேதி சிறப்பிக்கப்படுகிறது.
    இறைவனின் தாயாக திகழும் கன்னி மரியாள் தமது தாயின் வயிற்றிலேயே அமல உற்பவியாக தோன்றியதைக் கொண்டாடும் இந்த திருநாள், டிசம்பர் 8ந்தேதி சிறப்பிக்கப்படுகிறது. தொடக்கப் பாவத்தின் கறைகள் அனைத்தில் இருந்தும் இறையன்னை மரியாள் பாதுகாக்கப்பட்டதை இந்த பெருவிழாவில் கொண்டாடி மகிழ்கிறோம்.

    பின்னணி

    கடவுளின் பிரதிநிதியாக நாசரேத்துக்கு சென்ற வானதூதர், “அருள் நிறைந்தவரே வாழ்க!” (லூக்கா 1:28) என்று கன்னி மரியாளை வாழ்த்துகிறார். தூய ஆவியால் நிரப்பப்பட்ட எலிசபெத்து, “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்” (லூக்கா 1:42) என போற்றுகிறார். மீட்பராம் இறைமகனை தம் கருவில் தாங்குமாறு, மரியாள் பாவமின்றி உற்பவத்தார் என்பதையே மேற்கண்ட வார்த்தைகள் உறுதி செய்கின்றன. ஆகவே தான், “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது” என மரியாள் பாடினார் என்பதில் சந்தேகமில்லை.

    வரலாறு

    முதன்முதலாக, புனித அன்னாவின் வயிற்றில் கன்னி மரியாள் கருவாக உற்பவித்ததைக் கொண்டாடும் விழா கி.பி.7ஆம் நூற்றாண்டில் கீழைத் திருச்சபையில் தோன்றியது. 8ஆம் நூற்றாண்டில், ‘மரியாளின் உற்பவ விழா’ மேலைத் திருச்சபையில் கொண்டாடப்பட்ட சான்றுகளை அக்காலத் திருப்பலி நூல்களில் காண்கிறோம். 11ஆம் நூற்றாண்டில், “கன்னி மரியாள் தொடக்கப் பாவமின்றி உற்பவித்தார்” என்று கூறும் ‘அமல உற்பவ நம்பிக்கை’ உருவானது. 1050ல் கூடிய வெர்செல்லி சங்கத்தில், மரியாளின் அமல உற்பவத்துக்கான விழாவை திருத்தந்தை 9ம் லியோ பரிந்துரை செய்தார்.

    பைசாந்திய பேரரசு முழுவதும் மரியாளின் அமல உற்பவ விழாவைக் கொண்டாடுமாறு, பேரரசர் முதலாம் மனுவேல் 1166ஆம் ஆண்டு ஆணையிட்டார். 1439ல் கூடிய பாசல்-புளோரன்ஸ் பொதுச்சங்கத்தின் அமர்வு, மரியாளின் அமல உற்பவத்தை உறுதி செய்தது. 1476ல் மரியாளின் உற்பவ விழாவுக்கு அனுமதி வழங்கிய திருத்தந்தை 4ம் சிக்ஸ்துஸ், 1477 பிப்ரவரி 28ந்தேதி அதற்கான ஞானப்பலன்களை அறிவித்தார். திரெந்து பொதுச்சங்கத்தை அடுத்து, உருவான நாள்காட்டியிலும் இந்த விழா இடம் பெற்றது. 1568ல், மரியாளின் உற்பவ விழாவுக்கான திருப்பலி மற்றும் திருப்புகழ்மாலை செபத்துக்கு திருத்தந்தை புனித 5ம் பியுஸ் அனுமதி வழங்கினார்.

    17ஆம் நூற்றாண்டில், மரியாளின் உற்பவ விழா திருச்சபை முழுவதும் கொண்டாடப்பட்டது. 1708ல் திருத்தந்தை 11ம் கிளமென்ட், மரியாளின் உற்பவ விழாவை கடன் திருநாளாக அறிவித்தார். திருத்தந்தை 14ம் கிரகோரி (1831-1846) காலத்தில், மரியாளின் அமல உற்பவத்தை விசுவாசக் கோட்பாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 1854 டிசம்பர் 8ந்தேதி, ‘மரியாளின் அமல உற்பவம்’ குறித்த நம்பிக்கையை திருத்தந்தை 9ம் பியுஸ் திருச்சபையின் விசுவாசக் கோட்பாடாக அறிவித்தார். இதையடுத்து, ‘மரியாளின் அமல உற்பவம்’ என்ற பெயரை இந்த விழா பெற்றது. 1969ல் சீரமைக்கப்பட்ட நாள்காட்டியில், இந்த திருநாள் பெருவிழாக்களின் பட்டியலில் உள்ளது.
    Next Story
    ×