search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம்
    X
    தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம்

    கேட்ட வரம் தரும் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம்

    தமிழகத்தில் வேளாங்கண்ணிக்கு அடுத்தப்படியாக பிரசித்திபெற்ற கிறிஸ்தவ தேவாலயம் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம். இந்த தேவாலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    முத்துநகருக்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் முக்கியமானது இங்குள்ள தூய பனிமய மாதா பேராலயம். வங்கக் கடற்கரையோரம் அமைந்துள்ள இந்தப் பேராலயம் தமிழகத்தில் வேளாங்கண்ணிக்கு அடுத்தப்படியாக பிரசித்திபெற்ற கிறிஸ்தவ தேவாலயம்.

    1542களில் தூய பிரான்சிஸ் சவேரியார் முத்துக்குளித்துறைப் பகுதிகளில் வருகை தந்த வேளையில் பனிமய அன்னை ஆலயம் இருக்கவில்லை. ஆனால் அவரே இந்த ஆலயத்தின் நாயகியாம் பனிமய அன்னையின் திரு ரூபத்தை இவ்வாலயத்திற்கு அளித்திட முயற்சி எடுத்தவர். சிறு கோவிலாக இவ்வாலயத்தை எழுப்பியவரும் இவரே.

    இந்த அன்னையின் ஆலயத்திற்கு வருகை தந்த மாமனிதர்களில் ஒரு சிலர்: தமிழ் அறிஞர் வீரமாமுனிவர், தூயவராம் ஜோசப் வாஸ் அடிகள், அன்னை தெரசா, பாளியோன் மரித் தாயார். இது போன்று எண்ணற்ற மாமனிதர்கள், மாமேதைகள் ஆவலுடன் வருகை தந்த தனிப்பெரும் பேற்றினை பெற்றுள்ள தூய பனிமயத் தாயின் ஆலயத்தில் தற்போது தங்கத் தேர்த் திருவிழா நடைபெறுகிறது.

    மீனவர்களின் பாதுகாவலராகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கும் பனிமய மாதாவின் தேர்ச் சிறப்பு சொல்லிலடங்காது. சிலுவைக்குப் பதிலாக நட்சத்திரத்தைக் கொண்டிருக்கும் இத்தேரிலுள்ள தங்கக் கிரீடம், கடவுளின் தந்தை சிலை, புறா வடிவில் தூய ஆத்மா, குழந்தை வடிவில் இயேசுநாதர், தூய அன்னை, மீனவ சமுதாயத்தினரின் கதை சொல்லும் அடித்தள வடிவமைப்பு என்று ஒவ்வொரு அம்சமும் அர்த்தமுள்ளது.

    கி.பி. 1582-ம் ஆண்டு இயேசு சபை குருக்கள் கூடி சிறிய ஆலயமாகக் கட்டினர். 1713-ம் ஆண்டு தற்போதுள்ள புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. 427 ஆண்டு வரலாற்றைக் கொண்டது இந்த தேவாலயம். சிற்றாலயமாக இருந்த இத் தேவாலயம் 1982-ம் ஆண்டு பேராலயமாகத் தரம் உயர்த்தப்பட்டது.               
                          
    இப்பேராலயத்தில் வீற்றிருக்கும் தூய பனிமய மாதா சொரூபம் 1555-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி "சாந்தலேனா' என்ற கப்பல் மூலம் தூத்துக்குடி வந்தது சிறப்பு அம்சம். இப் பேராலயத்தில் இயேசுபிரான் தொங்கி மரித்த மரச்சிலுவையின் ஒரு துண்டு விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட பொன்மயமான பாத்திரத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அன்னையின் விழாக் காலங்களில் நடக்கும் பகல் ஆராதனையின்போது இதை வைத்தே ஆசி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
                                 
    இப் பேராலயத்துக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இங்கு தினமும் காலை, மாலையில் திருப்பலி நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலியும், மாலையில் நற்கருணை ஆசீரும் நடைபெறும். இங்கு ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை திருவிழா நடைபெறும். இதில், நாட்டின் பல பகுதிகளில் இருந்து மட்டுமன்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்பர். தூத்துக்குடி நகரின் தெற்கு கடற்கரை சாலையில் கம்பீரமாக வீற்றிருக்கும் இத் தேவாலயம் ஆன்மிகத் தலமாக மட்டுமன்றி சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது.

    தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் திருநெல்வேலியில் இருந்து 50 கி.மீ. தொலைவிலும், மதுரையில் இருந்து 140 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. தூத்துக்குடிக்கு தமிழகத்தின் அனைத்து முன்னணி நகரங்களில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. மேலும், சென்னை, மைசூரில் இருந்து ரயில் வசதியும், செனையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான சேவையும் உள்ளது. தூத்துக்குடியில் தங்குவதற்கு நட்சத்திர விடுதிகள் முதல் சாதாரண விடுதிகள் வரை பல உள்ளன.
    Next Story
    ×