search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரார்த்தனை
    X
    பிரார்த்தனை

    தவக்கால சிந்தனை: வாலிப பருவம்

    தேவ பிள்ளைகளே நாமும் எப்போதும் செல்போனை உபயோகப்படுத்தாமல் கடவுளுக்கு நேரத்தை ஒதுக்கி, பெற்றோர்களுக்கு கீழ்படிந்து இந்த வாலிப பருவத்தில் உள்ளத்திலே நல்ல சிந்தனைகளை சிந்தித்து செயல்பட இந்த தவக்காலத்தில் தீர்மானிப்போம்.
    இறைவன் தன் படைப்புகளில் வெப்பத்தை தணிக்க மழை, இருளை போக்க சூரியன் என்று ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளதாகவே படைத்துள்ளார். அதுபோலவே மனிதனையும் படைத்துள்ளார். அதுவும் அவருடைய சாயலாகவே படைத்துள்ளார் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இப்படி தேவ சாயலாக உள்ள மனிதனின் வாழ்வில் மிக முக்கியமானது வாலிப பருவம். இந்த வாலிப பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவனது வாழ்க்கையை சீரமைக்கின்றன. எனவே இந்த வாலிப பருவத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று சற்று தியானித்து பார்ப்போம்.

    இன்றைய வாலிபர்கள் தடுமாற்றத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் அன்றைய நாட்களிலே காலையில் எழுந்தவுடன் வேதம் வாசிக்க வேண்டும். கோவிலுக்கு செல்ல வேண்டும். பின்னர் படிக்க வேண்டும். நேரத்திற்கு கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கோ செல்ல வேண்டி இருந்தது. மாலையில் வந்ததும் உறவுகளோடு விளையாடி விட்டு நிம்மதியாக தூங்க சென்றனர்.

    ஆனால் இந்த காலத்தில் வாலிபர்களின் நிலை காலையில் எழுந்தவுடன் எது எப்படி இருந்தால் எனக்கு என்ன? என்னுடைய செல்போனுக்கு யார், யார் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்கள். யார் எனக்கு போன் செய்துள்ளார்கள் என்று பல்வேறு விஷயங்களை செல்போனிலேயே தேடிக்கொண்டிருக்கின்றனர். இப்படி செல்போனில் ஒவ்வொன்றாக தேடிக்கொண்டிருப்பதினால், பெற்றோர்களின் அன்பு, உறவுகளின் நட்பு கிடைக்காமல் தனிமைப்படுத்தப்பட்டு அவனின் வாழ்க்கை தடுமாற்றத்தில் முடிகிறது.

    இயேசு தன் வாலிப பருவத்தில் தான் இறை வாழ்க்கையை ஆரம்பித்தார். அவருடைய இளமையான துடிப்பும், தேவனின் அருளும் அவர் நினைத்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க வழிவகுத்தன. அவர் எப்போதுமே விண்ணக தந்தையோடு ஜெபத்தில் நிலைத்திருந்து, பெற்றோருக்கு கீழ்படிந்தவராக வாழ்ந்தார் என்று வேதத்தில் சொல்லப் பட்டுள்ளது.

    வேதாகமத்தில் பிரசங்கி 11-ம் அதிகாரம் 10-ம் வசனத்தில், நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் சரீரத்தில் இருந்து தீங்கையும் நீக்கிப்போடு, இளவயதும், வாலிபமும் மாயையே என்று சொல்லப்பட்டுள்ளது. ஆம் தேவ பிள்ளைகளே நாமும் எப்போதும் செல்போனை உபயோகப்படுத்தாமல் கடவுளுக்கு நேரத்தை ஒதுக்கி, பெற்றோர்களுக்கு கீழ்படிந்து இந்த வாலிப பருவத்தில் உள்ளத்திலே நல்ல சிந்தனைகளை சிந்தித்து செயல்பட இந்த தவக்காலத்தில் தீர்மானிப்போம். வெற்றி பெறுவோம்.

    ரவிபிரபு, நற்செய்தி ஊழியங்கள், காங்கேயம்.

    Next Story
    ×