search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    பணிவிடை புரிய வந்தவர் இயேசு

    இறை மகன் இயேசுவின் அன்பும், அமைதியும், அருளும், ஆசியும் உங்கள் அனைவரோடும் என்றும் தங்குவதாக அமையும்.
    ஆண்டவராம் மீட்பர் அவனிக்கு அமைதியை அருளமானிட மகனாய் மரியாவிடம் பிறந்த நாளே கிறிஸ்துமஸ் பெருவிழா வாகும். அகில உலகம் உளம் மகிழ்ந்து குடும்பம் குடும்பமாய்க் குதூகலித்துக் கோலாகலமாய் கொண்டாடும் குடும்ப விழா. விண்ணையும் மண்ணையும் இணைக்க வந்தவர். உன்னை அன்பு செய்வது போல் உன் அயலானையும் அன்பு செய்யச் சொன்னவர். சொன்னதேயன்றி தம் வாழ்நாளில் செய்து காட்டியவர். புத்துலகம் படைத்து புதுயுகம் கண்டவர்.

    மனித மகனாக உலகில் மரியாவிடம் பிறந்ததாலேயே மனித குலத்தின் பாவக்கறைகளைப் போக்க முடிந்தது. மக்களோடு உடனிருந்தார். நம்மோடு இன்னும் உரையாடி உறவாடுகிறார்.

    அவர் பணிவிடை பெறும் பொருட்டு இம்மண்ணுலகு வரவில்லை பணிவிடை புரிவதற்காகவே வந்தார். ஏழை, எளியவர்க்கு இரங்கினார். இயற்கையோடு இணைந்த வாழ்வே வாழ்ந்தார். பிறர் துன்பம் கண்டு கண்ணீர் சிந்தினார். தமது உயிரையே கையளிக்கும் அளவுக்கு இவ்வுலகின் மீது அன்பு கூர்ந்தார். இன்னா செய்தார்க்கும் இனியவே செய்தார்.

    உலகம் உய்ய வந்த மீட்பராம் இயேசு காட்டிய அன்பை நாமும் அயலாரிடம் காட்டு வோம். வாதும் சூதும் அகற்றி அவர் தந்த அமைதியை அனைவருக்கும் பொழிவோம். அவர் தந்த நீதியும், நேர்மையும் தழைக்கச் செய்வோம். உயர்ந்தோர், தாழ்ந்தோர், உள்ளோர், இல்லாதோர் என்ற பாகுபாடு நீங்கி மண்ணில் சமத்துவம் மலரச் செய்வோம். கண்ணால் காண இயலாதக் கடவுளைக் காண, கண்ணால் காணும் சகோதரனை அன்புச் செய்து சகோதரத்துவம் போற்றுவோம். நோய்வாய்ப்பட்டோர், ஆதரவற்றோர்க்கு அன்பால் ஆறுதல் அளிப்போம்.

    குடிசையில் வாழும் ஏழைக்கு உதவிக்கரம் நீட்டுவதால் குடிலில் பிறந்த இறைவனைக் காண்போம். பசித்தவரின் பசிக்கு உணவு ஊட்டுவதால் இறை இயேசுவின் பகிர்தலில் பங்குப் பெறுவோம். ஆடம்பரமும் ஊதாரித்தனமும் நிறைந்த பணவிரயங்களைத் தவிர்த்து எளியோரை நலன்களால் நிரப்பிடுவோம். இறை மகன் இயேசுவின் அன்பும், அமைதியும், அருளும், ஆசியும் உங்கள் அனைவரோடும் என்றும் தங்குவதாக அமையும்.

    Next Story
    ×