search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா நிறைவடைந்ததையொட்டி கொடிமரத்தில் இருந்து கொடி இறக்கப்பட்ட காட்சி.
    X
    வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா நிறைவடைந்ததையொட்டி கொடிமரத்தில் இருந்து கொடி இறக்கப்பட்ட காட்சி.

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய திருவிழா நிறைவு

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் நடைபெற்று வந்த ஆண்டு திருவிழா நிறைவடைந்தது. விழாவின் நிறைவு நாளையொட்டி நடைபெற்ற கொடி இறக்க நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று, மாதாவை தரிசனம் செய்தார்கள்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. இங்கு ஆரோக்கியமாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 8-ந் தேதியையொட்டி ஆண்டுதோறும் 11 நாட்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை தரிசனம் செய்வார்கள்.

    திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து ஆரோக்கியமாதாவின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டு, மாலை 6 மணியளவில் கொடி இறக்க நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைந்தது. கொடி இறக்க நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மாதாவை தரிசனம் செய்தார்கள்.

    கொடிக்கம்பத்தில் இருந்து இறக்கப்பட்ட கொடியை பேராலயத்துக்கு எடுத்து செல்லும்போது அதை பக்தர்கள் தொட்டு வணங்கினர். இதைத்தொடர்ந்து பேராலய கீழ்கோவிலில் மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசிர், தமிழில் திருப்பலி ஆகிய பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடை பெற்றன.
    Next Story
    ×