search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோட்டார் புனித சவேரியார் ஆலயம்
    X
    கோட்டார் புனித சவேரியார் ஆலயம்

    கோட்டார் புனித சவேரியார் ஆலயம்

    ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது குமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் புனித சவேரியார் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    குமரி மாவட்ட தலைநகரமான நாகர்கோவில் நகரின் மைய பகுதியான கோட்டாரில் அமைந்துள்ளது சவேரியார் ஆலயம். சவேரியார் திருப்பலி நடத்தியதால் அவரது பெயரை தாங்கி நிற்கும் இந்த ஆலயத்துக்கு சாதி, மத வேறுபாடு பார்க்காமல் அனைத்து சமுதாய மக்களும் வந்து செல்கின்றனர். அப்படி வந்து செல்வோர் தங்களது வேண்டுதல்படி நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது என்ற நம்பிக்கையும் கொண்டுள்ளனர்.

    உலகிலேயே சவேரியாருக்கு முதன்முதலாக ஆலயம் எழுப்பப்பட்டது குமரி மாவட்டம் கோட்டாரில்தான். கோவாவுக்கு அடுத்தபடியாக இங்குள்ள சவேரியார் ஆலயம்தான் இந்தியாவில் புகழ் பெற்ற ஆலயமாக உள்ளது இன்னும் சிறப்புக்குரியது.

    இந்தியா வந்த சவேரியார்

    இந்த ஆலயம் பெயர் வர காரணமான சவேரியார் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். அவர் நவார் மாகாணத்தில் சேவியர் அரண்மனையில் உயர் குலத்தில் பிறந்தவர். 1529-ம் ஆண்டு புனித இன்னாசியாரை சந்தித்த பிறகுதான் அவரது வாழ்க்கை ஆன்மிக பாதையில் திரும்பியது. 1537-ம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். 1540-ம் ஆண்டு லிஸ்பென் சென்று அங்கு 9 மாதங்கள் இறை பணி செய்தார்.

    1542-ம் ஆண்டு கோவா சென்றார். அங்கு சிறையில் இருப்போர் மற்றும் ஏழைகளை சந்திப்பதும், நோயாளிகளுக்கு பணிவிடை செய்வதுமாக தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். கோவாவில் இருந்து கடற்கரையோரமாக தமிழகம் வந்தார். மணப்பாடு பகுதியில் இறை பணி செய்து வந்த அவர், அடிக்கடி குமரி மாவட்டம் கோட்டாருக்கும் வந்து சென்றார்.

    பாண்டிய மன்னரை வென்றார்


    இந்தநிலையில் திருவிதாங்கூர் மன்னனுக்கும், மதுரை பாண்டிய மன்னனுக்கும் இடையே போர் நடந்தது. அப்போது சிலுவையை கையில் ஏந்தி பாண்டிய மன்னனின் படைகளை திரும்பி போக செய்ததுடன் திருவிதாங்கூர் மன்னரை வெற்றி பெறச் செய்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த மன்னர், சவேரியாருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். உடனே சவேரியாரை அழைத்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இறை பணியை செய்ய அனுமதி அளித்தார்.

    மேலும் ஆலயம் கட்டுவதற்கு கோட்டார் பகுதியில் நிலத்தையும் வழங்கி பொருள் உதவியும் செய்து கொடுத்தார். அதன்பிறகு கோட்டாரை மையமாக கொண்டு சவேரியார் இறை பணியை தொடர்ந்து செய்தார். பின்னர் அவர், பசிபிக் கடல் தீவுகள், இலங்கை, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்று இறை பணி செய்தார். இறுதியாக சீனாவுக்கு செல்லும் வழியில் சான்சியன் தீவில் கடுமையான காய்ச்சல் காரணமாக 1552-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி உயிர்நீத்தார்.

    புனிதர் பட்டம்

    6 மாதம் கழித்து சவேரியார் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையை திறந்து பார்த்த போது அவரது உடல் சிதைவு இல்லாமல் இருந்தது அனைவரையும் ஆச்சரியப்பட செய்தது. அதன்பிறகு இன்னும் சவேரியார் உடல் கோவாவில் உள்ள நல்ல இயேசு ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பல நூறு மைல்கள், பல்வேறு நாடுகளுக்கு சென்று இயேசுவின் போதனைகளை கூறி ஊழியம் செய்த சவேரியாருக்கு 1622-ம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.

    புனித சவேரியார்

    கீழ்த்திசை நாடுகளின் திருத்தூதர், இரண்டாம் பவுல், கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் என்றெல்லாம் குமரி மாவட்ட மக்கள் சவேரியாரை கூறுவது உண்டு. சவேரியாரின் வருகைக்கு முன்னரே குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தாலும், அவரது வருகைக்கு பின்னர்தான் ஏராளமான இடங்களில் கிறிஸ்தவ சபைகள் தொடங்கப்பட்டன. கோட்டார் சவேரியார் ஆலயத்துக்கு அனைத்து சமுதாய மக்களும் வந்து செல்வதால் இந்த ஆலயம் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    இந்த பேராலயத்தின் பங்குத்தந்தையாக கிரேஸ் குணபால் ஆராச்சியும், இணை பங்குத்தந்தையாக டோனி ஜெரோம் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

    ஆலயம் கடந்து வந்து பாதை

    * 1605-ம் ஆண்டு மூவொரு இறைவன் ஆலயமானது தூய சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

    * 1640-ம் ஆண்டு கற்களால் ஆன புதிய ஆலயம் கட்டப்பட்டது.

    * 1643-ம் ஆண்டு தூய இன்னாசியார், தூய சவேரியாரின் திருபண்டங்கள் கோட்டார் ஆலயத்தில் வைக்கப்பட்டன.

    * 1752-ம் ஆண்டு மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை உடலின் எஞ்சிய பாகங்கள் கோட்டார் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

    * 1865-ம் ஆண்டு மேற்கு, வடக்கு, தெற்கு பகுதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. அதன்பிறகு தான் ஆலயம் சிலுவை அடையாள தோற்றத்தை பெற்றது.

    * 1876-ம் ஆலய பீடம் அழகிய மரத்தால் வடிவமைக்கப்பட்டது. மரத்தால் செய்யப்பட்ட தூய சவேரியார் சொரூபம் கோவாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பீடத்தில் நிறுவப்பட்டது.

    * 1930-ம் ஆண்டு கொல்லம் மறைமாவட்டத்தில் இருந்து கோட்டார் தனி மறைமாவட்டமாக பிரிக்கப்பட்டு கோட்டார் ஆலயம் பேராலயமாக உயர்த்தப்பட்டது.

    * 1955-ம் ஆண்டு ஆலயம் மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட்டு, தூய ஆரோபண அன்னை ஆலயம், பேராலயத்தோடு இணைக்கப்பட்டது. ஆலயத்தின் வடக்குப் பகுதியில் தூய லூர்து அன்னை கெபி அழகுற கட்டப்பட்டது.

    * 1956-ம் ஆண்டு சவேரியார் இந்தியாவுக்கு வந்து 400 ஆண்டுகள் ஆனதன் நினைவாக ஆலயத்தில் கோபுரம் கட்டப்பட்டு அதன் மீது சொரூபம் நிறுவப்பட்டது.

    * 1992-ம் ஆண்டு தூய சவேரியார் இந்தியாவுக்கு வருகை புரிந்து 450 ஆண்டுகள் ஆனதன் நினைவாக பேராலயம் புதுப்பிக்கப்பட்டது.

    * 1994-ம் ஆண்டு முதல் தூய ஆரோபண அன்னை ஆலயத்தில் முழுநேர நற்கருணை ஆராதனை தொடங்கப்பட்டது.

    * 2009-ம் ஆண்டு வெண்கலத்தால் ஆன கொடிமரம் நிறுவப்பட்டது.

    * 2010-ம் ஆண்டு திருப்பீடம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

    * 2013-ம் ஆண்டு மாதா சிறப்பு பவனி தொடங்கப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு மாதமும் 2-ம் சனிக்கிழமை மாலை 6.15 மணிக்கு லூர்து அன்னை கெபியின் முன் ஜெபமாலை சிறப்பு நற்கருணை ஆசீர் வழிபாடு நடக்கிறது.

    * 2014-ம் ஆண்டு தூய லூர்து அன்னை கெபி புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

    * 2016-ம் ஆண்டு பேராலய மறுசீரமைப்பு பணி துவங்கப்பட்டது.

    * 2017-ம் ஆண்டு புதுப்பொலிவு பெற்ற பேராலய அர்ச்சிப்பு விழா, புனித சவேரியாருடைய இந்திய வருகையின் 475-ம் ஆண்டு நிறைவு விழா, கோட்டார் சவேரியார் பேராலய பெருவிழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
    Next Story
    ×