என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிறரை நேசிப்பதே மனிதநேயம்
    X

    பிறரை நேசிப்பதே மனிதநேயம்

    மனிதநேயமென்றால் நேசிப்பதும், நேசிக்கப்படுவதும் ஆகும் என அன்னை தெரசா கூறினார். அண்ணல் காந்தி, அன்னை தெரசா, டாக்டர் அப்துல்கலாம் ஆகியவர்கள் மனித நேயத்திற்கு உதாரண புருஷர்கள்.
    தவக்காலத்தின் நோக்கமே பழையன களைந்து புதுவாழ்வுக்கு மாறுவதாகும். நாம் வாழும் இன்றைய உலகம் மனித நேயமற்றது. ஆனாலும் மனித நேயத்தை ஆங்காங்கே, அவ்வப்போது காணமுடிகிறது. அதற்கு உதாரணம் தான் கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த பெருமழையில், சாதி, இன, மொழி கடந்த உதவிக்கரத்திலே நாம் மனித நேயத்தை கண்டோம்.

    மனிதநேயமென்றால் நேசிப்பதும், நேசிக்கப்படுவதும் ஆகும் என அன்னை தெரசா கூறினார். அண்ணல் காந்தி, அன்னை தெரசா, டாக்டர் அப்துல்கலாம் ஆகியவர்கள் மனித நேயத்திற்கு உதாரண புருஷர்கள். பணத்தை கடனாகத்தராதே. மாறாக அன்பை கடனாக தா! அது உனக்கு வட்டியோடு அன்பை பெற்றுத்தரும் என்றார் அன்னை தெரசா.

    லூக்கா (16:19-31) ஒரு ஊரில் ஜஸ்வர்யவான் (பணக்காரன்) ஒருவன் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தான். அதே ஊரில் ஏழை ஒருவனும் வசித்தான். அந்த ஏழையின் பெயர் லாசர். இவன், பணக்காரன் வீட்டின் வாசல் அருகே கிடந்தான். அவனது உடல் முழுவதும் பருக்கள் இருந்தன. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவித்தான். ஆனால் பணக்காரனோ, லாசரை கண்டுகொள்ளவில்லை. அடுத்தவர் மீது அக்கறைப்படாதவனாக வாழ்ந்தான்.

    பணம் ஒரு மனிதனை சுயநலவாதியாக்கும். அடுத்தவர் நலனில் அக்கறைப்படவைக்காது. அந்த இருவருமே இறந்தனர். ஏழை லாசருக்கு பரலோகத்தில் ஆபிரகாமின் மடி இடம் கிடைத்தது. ஆனால் பணக்காரனோ நரகத்திற்கு தள்ளப்பட்டான். இந்த தண்டனை எதற்காக? அவனுடைய இரக்கமற்ற, மனித நேயமற்ற செயலுக்காகத்தான். உலகில் இருந்த போது லாசரை பற்றியே அவனுக்கு அக்கறையில்லை. அவன் உயிருடன் இருந்தபோது உருப்படியான காரியமே செய்யவில்லை.

    மாடு, உயிரோடு இருக்கையிலே பால், எருவை தருகிறது. உழவுக்கு பயன்படுகிறது. இறந்த பிறகு உணவாகிறது. உரமாகிறது. தோலாக பயன்படுகிறது. ஆனால் பன்றியோ உயிருடன் இருக்கையில் உதவாக்கரை. இறந்த பிறகே அது உணவாக பயன்படுகிறது. அதுபோல பணக்காரன், மாடாக அல்ல பன்றியாகவே வாழ்ந்தான்.

    எனவே அவனுக்கு ஆபிரகாமின் மடியில் இடமில்லை. நரக நெருப்பே அவனுக்கு அடைக்கலம் தந்தது. இந்த தவக்காலத்தில் நாம் மாடாகவா? பன்றியாகவா? என எண்ணிப்பார்த்து பழையதை களைந்து புதியன உடுத்தி ஆண்டவரது உயிர்ப்பிலே பங்கெடுக்க நம்மையே நாம் தயாரிப்போமா?

    அருட்பணி. சூ.ஸ்டீபன்கஸ்பார், பங்குத்தந்தை, வேடசந்தூர். 
    Next Story
    ×