search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இங்கிலாந்துடன் நாளை மோதல்: அரைஇறுதி ஆர்வத்தில் இந்தியா
    X

    இங்கிலாந்துடன் நாளை மோதல்: அரைஇறுதி ஆர்வத்தில் இந்தியா

    • முன்னாள் கேப்டன் வீராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.
    • காயம் அடைந்த ஹர்த்திக் பாண்ட்யா நாளைய போட்டியிலும் இடம்பெற மாட்டார்.

    13-வது ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    10 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டிகளில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் நாடுகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தான் மோதிய 5 ஆட்டத்திலும் வென்று 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லியில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும், அகமதாபாத்தில் நடந்த 3-வது போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும், புனேயில் நடந்த 4-வது ஆட்டத்தில் வங்காளதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்திலும், தர்மசாலாவில் நடைபெற்ற 5-வது போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது.

    இந்திய அணி 6-வது போட்டியில் இங்கிலாந்துடன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மோதுகிறது. லக்னோவில் பிற்பகல் 2 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

    இந்திய அணியின் அதிரடி நாளையும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தை வீழ்த்தி 6-வது வெற்றியுடன் அரை இறுதிக்கு தகுதி பெறும் வேட்கையில் உள்ளது.

    இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை 17-ந்தேதி மான்செஸ்டரில் மோதிய ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசியாக நடந்த 5 போட்டி தொடரில் இந்தியா 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனால் பலவீனமான இங்கிலாந்துக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும்.

    முன்னாள் கேப்டன் வீராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.

    கோலி ஒரு சதம், 3 அரைசதத்துடன் 354 ரன்களும், ரோகித் சர்மா ஒரு சதம், ஒரு அரைசதத்துடன் 311 ரன்களும் எடுத்து உள்ளனர். கோலி இன்னும் ஒரு செஞ்சுரி அடித்தால் தெண்டுல்கரின் சாதனையை (49) சமன் செய்வார்.

    லோகேஷ் ராகுல் (177 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மன் கில்லும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். பந்துவீச்சில் பும்ரா 11 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 8 விக்கெட்டும், ஜடேஜா7 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

    காயம் அடைந்த ஹர்த்திக் பாண்ட்யா நாளைய போட்டியிலும் இடம்பெற மாட்டார்.

    கடந்த போட்டியில் வாய்ப்பு கிடைத்த முகமது ஷமி சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார். இதனால் அவர் அணிக்கு முக்கியத்துவம் பெற்று விட்டார்.

    நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அஸ்வின் இடம்பெற்றால் குல்தீப் யாதவ் கழற்றிவிடப்படலாம்.

    இங்கிலாந்து அணியின் நிலை பரிதாபமாக இருக்கிறது. அந்த அணி 1 வெற்றி, 4 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. அந்த அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும் நிலையில் உள்ளது.

    நடப்பு சாம்பியனான பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    Next Story
    ×