search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டிஎன்பிஎல்- 2வது தகுதி சுற்றில் வென்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது நெல்லை கிங்ஸ்
    X

    டிஎன்பிஎல்- 2வது தகுதி சுற்றில் வென்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது நெல்லை கிங்ஸ்

    • 44 பந்துகளில் 73 ரன்களை குவித்த அஜித்தேஷ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடினார்.
    • 20 ஓவர் முடிவில் நெல்லை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து நெல்லை ராயல் கிங்ஸ் அபாரமாக வென்றது.

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று நெல்லை சங்கர் நகரில் உள்ள ஐ.சி.எல். மைதானத்தில் நடைபெறும் 2-வது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்சும், நெல்லை ராயல் கிங்சும் மோதின.

    டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. திண்டுக்கல் அணி பேட்டிங் செய்தது.

    திண்டுக்கல் அணியின் துவக்க வீரர் விமல் குமார் 16 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த நிலையில், சிவம் சிங்-பூபதி குமார் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது.

    குறிப்பாக சிவம் சிங் பந்துகளை சிக்சர்களாக விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

    பூபதி குமார் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அரை சதம் கடந்த சிவம் சிங் 76 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவர் 46 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எட்டினார்.

    அவரைத் தொடர்ந்து ஆதித்ய கணேஷ் 13 ரன்களிலும், சரத் குமார் 9 ரன்களிலும் ஆட்டமிழக்க, திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. சுபோத் 6 ரன்களுடனும், கேப்டன் பாபா இந்திரஜித் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    நெல்லை அணி தரப்பில் சோனு யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினார். சந்தீப் வாரியர், பொய்யாமொழி, லக்சய் ஜெயின் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் களமிறங்கியது.

    அஜித்தேஷ் குருசுவாமி அதிரடியாக விளையாடினார். 44 பந்துகளில் 73 ரன்களை குவித்த அஜித்தேஷ் இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை.

    ரித்திக் ஈஸ்வரன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடினார்.

    நிதிஷ் ராஜகோபால் மற்றும் அருண் கார்த்திக் தலா 26 ரன்களும், சுகேந்திரன் 22 ரன்களும் எடுத்தனர்.

    19.4 ஓவரின்போது 2 பந்துக்கு 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அஜித்தேஷ் மற்றும் ரித்திக் விளையாடினர்.

    இந்நிலையில், 20 ஓவர் முடிவில் நெல்லை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து நெல்லை ராயல் கிங்ஸ் அபாரமாக வென்றது.

    இதன்மூலம், நெல்லை ராயல் கிங்ஸ் 2வது குவாலிபையர் சுற்றில் வெற்றிப் பெற்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

    நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் அணியுடன் நெல்லை ராயல் கிங்ஸ் மோதுகிறது.

    Next Story
    ×