search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    படமாகும் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறு
    X

    படமாகும் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறு

    • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 6 சிக்சர் மற்றும் அதிவேகமாக அரை சதமடித்த வீரர் ஆகிய இரட்டை உலக சாதனைகளை யுவராஜ் சிங் படைத்தார்.
    • எனது சொந்த சுயசரிதை படத்தில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக என்னை அறிமுகம் செய்ய முடிவு எடுத்துள்ளேன்.

    பஞ்சாப்பை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த பெருமைக்குரியவர். 2000 ஐசிசி ஜூனியர் உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற அவர் இந்தியா கோப்பையை வெல்ல உதவினார். அதன் காரணமாக கங்குலி தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நிரந்தர இடத்தை பிடிக்கும் அளவுக்கு அசத்தினார்.

    அதைத் தொடர்ந்து தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் ஸ்டுவர்ட் பிராட்க்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து அசத்தினார். அதே போட்டியில் 12 பந்துகளில் 50 ரன்கள் தொட்ட அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 6 சிக்சர் மற்றும் அதிவேகமாக அரை சதமடித்த வீரர் ஆகிய இரட்டை உலக சாதனைகளை படைத்தார்.

    இதனை தொடர்ந்து 2011 உலகக் கோப்பையில் 362 ரன்களையும் 15 விக்கெட்டுகளையும் எடுத்த அவர் 28 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருது வென்றார். அத்தொடரில் தமக்கு புற்றுநோய் இருந்தும் அதை பொருட்படுத்தாமல் நாட்டுக்காக அவர் விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்த விதம் ஒவ்வொரு இந்திய ரசிகனாலும் எப்போதும் மறக்க முடியாது. அதைத் தொடர்ந்து 2019-ல் ஓய்வு பெற்ற அவர் அவ்வப்போது வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

    இந்நிலையில் தம்முடைய வாழ்க்கை வரலாற்றை சுயசரிதை திரைப்படமாக எடுக்க உள்ளதாக யுவராஜ் சிங் அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    என் பகுதியில் நான். எனது சொந்த சுயசரிதை படத்தில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக என்னை அறிமுகம் செய்ய முடிவு எடுத்துள்ளேன். அதற்காக வாழ்த்துங்கள் நண்பர்களே. இன்னும் ஓரிரு வருடத்தில் பெரிய திரையில் இறுதி முடிவை பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்டேட்டுகளுக்காக காத்திருங்கள்.

    என்று யுவராஜ் கூறியுள்ளார்.

    Next Story
    ×