search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஒருநாள் போட்டியில் முதல் சதம்: என் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன்- ரிஷப்பண்ட்
    X

    ரிஷப்பண்ட்

    ஒருநாள் போட்டியில் முதல் சதம்: என் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன்- ரிஷப்பண்ட்

    • இங்கிலாந்தில் விளையாடுவதை நான் ரசிக்கிறேன்.
    • இந்த தொடர் மட்டுமில்லை. இந்த ஆண்டு முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளோம்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது போட்டியில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது.

    மான்செஸ்டரில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 45. 5 ஓவர்களில் 259 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    கேப்டன் ஜாஸ் பட்லர் 60 ரன்னும் ( 3 பவுண்டரி, 2 சிக்சர் ), ஜேசன் ராய் 31 பந்தில் 41 ரன்னும் ( 7 பவுண்டரி ) எடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா 24 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.யசுவேந்திர சாஹல் 3 விக்கெட்டும் , முகமது சிராஜ் 2 விக்கெட்டும் , ஜடேஜா ஒரு விக்கெட்டும் கைப்பற்றி னார்கள்.

    பின்னர் விளையாடிய இந்திய அணி 42.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 261 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ரிஷப்பண்ட் ஒருநாள் போட்டியில் முதல் முறையாக சதம் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அவரது ஆட்டம் அதிரடியாக இருந்தது. ரிஷப்பண்ட் 113 பந்தில் 125 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 16 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். ஹர்திக் பாண்ட்யா 55 பந்தில் 71 ரன் (10 பவுண்டரி) எடுத்தார். இருவரும் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்தது முக்கியமான தாகும்.

    ரீஸ் டாப்லே 3 விக்கெட்டும், கார்சே, ஓவர்டன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்கள்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 100 ரன்னில் வெற்றி பெற்றது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. தற்போது ஒரு நாள் தொடரையும் வென்று முத்திரை பதித்தது.

    ஒருநாள் தொடரை வெல்ல காரணமாக இருந்த ரிஷப்பண்ட் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒருநாள் போட்டியில் முதல் சதத்தை அடித்து இருக்கிறேன். இதை என் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன் என்று நம்புகிறேன். களத்தில் இருந்த போது பந்தில் மட்டுமே எனது கவனம் இருந்தது. இங்கிலாந்தில் விளையாடுவதை நான் ரசிக்கிறேன். அதிகமான போட்டிகளில் விளையாடும் போதுதான் அனுபவம் கிடைக்கிறது.

    இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு ஏற்ற வகையில் இருந்தது. எனவே இங்கிலாந்தை 259 ரன்னில் ஆல் அவுட் செய்ததற்காக பந்து வீச்சாளர்களை பாராட்டுகிறேன். இந்த தொடர் மட்டுமில்லை. இந்த ஆண்டு முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த தொடரில் 100 ரன்கள் எடுத்து 6 விக்கெட் கைப்பற்றிய ஹர்திக் பாண்ட்யா தொடர் நாயகன் விருதை பெற்றார்.

    Next Story
    ×