search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மகளிர் டி20 உலக கோப்பை- முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா

    • 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் அயபோங்கா ககா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    கேப் டவுன்:

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நேற்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில் 2வது அரையிறுதி போட்டி இன்று கேப்டவுனில் நடந்தது. இதில் போட்டி தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணியுடன் மோதியது, டாஸ் வென்று முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டாஸ்மின் பிரிட்ஸ் 68 ரன்களும், லாரா வல்வார்ட் 53 ரன்களும் எடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. சிறப்பாக ஆடிய சோபியா 28 ரன்னிலும், டேனி வியாட் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அலைஸ் கேப்சி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அதன்பின்னர் நாட் ஷிவர் பிரன்ட், கேப்டன் ஹீதர் நைட் நிதானமாக ஆடினர். நாட் ஷிவர் பிரன்ட் 40 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

    அதன்பின்னர் கேப்டன் ஹீதர் நைட் வெற்றிக்காக கடுமையாக போராடினார். ஆனால் மறுமுனையில் அமி ஜோன்ஸ் (2 ரன்), சோபி (1 ரன்), கேத்ரின் ஷிவர் பிரன்ட் (0) என விரைவில் பெவிலியன் திரும்பியதால் ஆட்டம் தென் ஆப்பிரிக்காவிற்கு சாதகமாக திரும்பியது.

    கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் பந்தை எதிர்கொண்ட கிளென் ஒரு ரன் தட்டிவிட்டு அடுத்த வாய்ப்பை கேப்டனுக்கு கொடுத்தார். ஆனால் 2வது பந்தில் கேப்டன் நைட் ரன் எடுக்கவில்லை. மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 25 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த டீன், 4வது பந்தில் ஒரு ரன் மட்டுமே அடித்தார். கடைசி இரண்டு பந்துகளில் கிளென் 4 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், முதல் முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் அயபோங்கா ககா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஷப்னிம் இஸ்மாயில் 3 விக்கெட் வீழ்த்தினார். டாஸ்மின் பிரிட்ஸ் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.

    நாளை மறுநாள் நடக்கும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன், தென் ஆப்பிரிக்கா பலப்பரீட்சை நடத்த உள்ளது.

    Next Story
    ×