search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மும்பை வான்கடே மைதானத்தில் சச்சின் சிலை- ரசிகர்கள் கொண்டாட்டம்
    X

    மும்பை வான்கடே மைதானத்தில் சச்சின் சிலை- ரசிகர்கள் கொண்டாட்டம்

    • வான்கடே மைதானத்தில் தான் சச்சின் தனது கடைசி போட்டியில் விளையாடினார்.
    • ஏப்ரல் 24-ம் தேதிக்குள் ஏற்பாடுகள் முடிந்துவிட்டால் ஐபிஎல் தொடரின் போது சிலை திறப்பு விழா நடைபெறும்.

    மும்பை:

    2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31-ம் தேதி முதல் தொடங்கி மே 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. லீக் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டிருந்தது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தலால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடைபெற்ற சூழலில், இந்த முறை அனைத்து அணிகளும் தங்களது ஹோம் மைதானத்தில் விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து ரசிகர்களும் உற்சாகத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

    இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு மிகப்பெரிய சிலை ஒன்றை வான்கடே மைதானத்தில் நிறுவ உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    சச்சின் டெண்டுல்கர் வரும் ஏப்ரல் 24-ம் தேதியன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். எனவே அவருக்கு நினைவுப்பரிசாக இருக்கும் வகையில் இந்த சிலையை திறக்கவுள்ளனர். வான்கடே மைதானத்தில் தான் சச்சின் தனது கடைசி போட்டியில் விளையாடினார். இதற்காக அங்கு ஏற்கனவே சச்சின் டெண்டுல்கரின் பெயரில் பெவிலியன் இருக்கும் சூழலில் தற்போது கூடுதல் சிறப்பை சேர்க்கவுள்ளனர்.

    ஏப்ரல் 24-ம் தேதிக்குள் ஏற்பாடுகள் முடிந்துவிட்டால் ஐபிஎல் தொடரின் போது சிலை திறப்பு விழா நடைபெறும். இல்லையென்றால் அக்டோபரில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் போது இந்த விழாவை நடத்துவார்கள் எனக்கூறப்பட்டுள்ளது.

    கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் பாராட்டப்படும் சச்சின் தனது கிரிக்கெட் பயணத்தில் 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒருநாள் போட்டிகள், மற்றும் ஒரே ஒரு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அனைத்து வடிவ கிரிக்கெட்டையும் சேர்த்து மொத்தமாக 34,357 ரன்களை விளாசியுள்ளார். இதில் 100 சதங்கள் என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×