search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் - வெற்றியின் விளிம்பில் பாகிஸ்தான் அணி
    X

    சதமடித்த அப்துல்லா ஷபிக்

    இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் - வெற்றியின் விளிம்பில் பாகிஸ்தான் அணி

    • இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 337 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 120 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

    காலே:

    பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அரை சதமடித்த சண்டிமால் 76 ரன்னில் அவுட்டானார்.

    பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்டும், ஹசன் அலி, யாசீர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி சதமடித்து 119 ரன்னில் அவுட்டானார்.

    இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.

    4 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணி மூன்றாம் நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 329 ரன்களை எடுத்து இருந்தது.

    இந்நிலையில், 4-வது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. இலங்கை அணி மேலும் 8 ரன்கள் சேர்த்த நிலையில் 337 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சண்டிமால் 94 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பாகிஸ்தான் சார்பில் முகமது நவாஸ் 5 விக்கெட்டும், யாசீர் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 342 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபிக் - இமாம் உல் ஹக் களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது.

    இமாம் உல் ஹக் 35 ரன்னிலும், அசார் அலி 6 ரன்னிலும் ஆட்டமிழந்து நடையை கட்டினர். அடுத்து இறங்கிய பாபர் அசாம் அரை சதமடித்து 55 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஷபிக் சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், நான்காம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 222 ரன்கள் எடுத்துள்ளது. அப்துல்லா ஷபிக் 112 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதி நாளான இன்று வெற்றிக்கு 120 ரன்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் பாகிஸ்தான் கைவசம் 7 விக்கெட்கள் மீதம் உள்ளதால் பாகிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    Next Story
    ×