search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டெண்டுல்கரின் 29 ஆண்டு கால சாதனையை தகர்த்த சர்பராஸ் கான் சகோதரர்
    X

    டெண்டுல்கரின் 29 ஆண்டு கால சாதனையை தகர்த்த சர்பராஸ் கான் சகோதரர்

    • சச்சினின் 29 ஆண்டு கால சாதனைக்கு முஷீர் கான் நேற்று முற்றுப்புள்ளி வைத்தார்.
    • இந்த ஆட்டத்தை சச்சின், வெங்சர்க்கார் உள்ளிட்டோர் நேரில் பார்த்தார்.

    மும்பை:

    89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை - விதர்பா அணிகள் இடையிலான இறுதிப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் மும்பை 224 ரன்னும், விதர்பா 105 ரன்னும் எடுத்தன. 119 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய மும்பை அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்திருந்தது.

    முஷீர் கான் 51 ரன்னுடனும், கேப்டன் அஜிங்யா ரஹானே 58 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. முஷீர் கான், ரஹானே தொடர்ந்து பேட்டிங் செய்தனர். ரஹானே 73 ரன்னில் (143 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஹர்ஷ் துபே பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் அக்ஷய் வாத்கரிடம் சிக்கினார். இதைத்தொடர்ந்து ஸ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கினார்.

    மறுமுனையில் நிலைத்து நின்று பொறுமையாக ஆடிய முஷீர் கான் 255 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம், 19 வயதான முஷீர் கான் ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இளம் வயதில் சதம் அடித்த மும்பை வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து தட்டிப்பறித்தார். இதற்கு முன்பு 1994-95-ம் ஆண்டு ரஞ்சி இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக டெண்டுல்கர் தனது 21 வயதில் சதம் அடித்ததே (140, 139 ரன்கள்) இந்த வகையில் சாதனையாக இருந்தது. அந்த 29 ஆண்டு கால சாதனைக்கு முஷீர் கான் நேற்று முற்றுப்புள்ளி வைத்தார்.

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தை டெண்டுல்கர் நேரில் பார்த்த காட்சி. அருகில் முன்னாள் வீரர் வெங்சர்க்கார் உள்ளார்.

    இந்த ஆட்டத்தை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முன்னாள் வீரர் வெங்சர்க்கார் உள்ளிட்டோருடன் அமர்ந்து நேரில் பார்த்தார். அவர் முன்னிலையிலேயே முஷீர் கான் சாதனையை தகர்த்தார். இந்திய டெஸ்ட் அணியில் சமீபத்தில் அறிமுகமான சர்ப்ராஸ்கானின் தம்பியான முஷீர் கான் பரோடாவுக்கு எதிரான கால்இறுதி ஆட்டத்தில் இரட்டை சதம் விளாசி இருந்தது நினைவிருக்கலாம். மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் இந்த ஆட்டத்தை நேரில் கண்டுகளித்தார்.

    அணியின் ஸ்கோர் 332 ரன்னாக உயர்ந்த போது வேகமாக மட்டையை சுழற்றிய ஸ்ரேயாஸ் அய்யர் 95 ரன்னில் (111 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) ஆதித்ய தாக்கரே பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சற்று நேரத்தில் முஷீர் கான் 136 ரன்னில் (326 பந்து, 10 பவுண்டரி) ஹர்ஷ் துபே பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

    முடிவில் மும்பை அணி 130.2 ஓவர்களில் 418 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதனால் விதர்பா அணிக்கு 538 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஷம்ஸ் முலானி 50 ரன்னுடன் (85 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். விதர்பா தரப்பில் ஹர்ஷ் துபே 5 விக்கெட்டும், யாஷ் தாக்குர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய விதர்பா அணி நேற்றைய முடிவில் 2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது. அதர்வா டெய்ட் 3 ரன்னுடனும், துருவ் ஷோரேய் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறும். வலுவான நிலையில் இருக்கும் மும்பை அணி 42-வது முறையாக ரஞ்சி கோப்பையை வெல்வது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

    Next Story
    ×