search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பட்லர் பதிலடி சதம்: ஆர்சிபியை வீழ்த்தி தொடர்ந்து 4-வது வெற்றியை ருசித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்
    X

    பட்லர் பதிலடி சதம்: ஆர்சிபியை வீழ்த்தி தொடர்ந்து 4-வது வெற்றியை ருசித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

    • சஞ்சு சாம்சன் 42 பந்தில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • பட்லர் சிக்ஸ் அடித்து சதம் அடித்ததுடன் அணியை வெற்றி பெற வைத்தார்.

    ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 19-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய ஆர்சிபி விராட் கோலியின் சதத்தால் (ஆட்டமிழக்காமல் 72 பந்தில் 113 ரன்) 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.

    பின்னர் 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வால் ரன்ஏதும் எடுக்காமல் 2-வது பந்திலேயே ஆட்டமிழந்தார்.

    அடுத்து பட்லர் உடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதலில் நிதானமாக விளையாடியது. அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ரன்ரேட் 10 என்ற வகையில் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

    பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் குவித்தது. 10 ஓவரில் 95 ரன்கள் சேர்த்தது. பட்லர் 30 பந்தில் அரைசதம் அடித்தார். அதனைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் 33 பந்தில் அரைசதம் அடித்தார். 15-வது ஓவரின் 4-வது பந்தில் இந்த ஜோடி பிரிந்தது. சிராஜ் பந்தில் சாம்சன் 42 பந்தில் 69 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் குவித்திருந்தது.

    அடுத்து வந்த ரியான் பராக் 4 ரன்னிலும், ஜுரேல் 2 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தனர். 5-வது விக்கெட்டுக்கு பட்லர் உடன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார்.

    இந்த ஜோடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. கடைசி ஓவரில் 1 ரன் தேவைப்பட்டது. ஆனால் சிக்ஸ் அடித்து சதம் அடித்ததுடன் அணியை வெற்றி பெற வைத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் 19.1 ஓவரில் 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பட்லர் 58 பந்தில் சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 4 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

    Next Story
    ×