என் மலர்
கிரிக்கெட் (Cricket)

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் பல சாதனைகள் படைத்த இந்திய அணி
- இந்திய அணியில் நேற்று ‘டாப் 5’ வீரர்கள் முதல் முறையாக 50 ரன்னுக்கு மேல் எடுத்து சாதனை படைத்தனர்.
- இதற்கு முன்பு ஆஸ்திரேலியா 2 முறை இதுமாதிரி சாதனை படைத்துள்ளது.
உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்தது.
இந்திய அணியில் நேற்று 'டாப் 5' வீரர்கள் முதல் முறையாக 50 ரன்னுக்கு மேல் எடுத்து சாதனை படைத்தனர்.
ரோகித்சர்மா 61 ரன்னும், சுப்மன்கில் 51 ரன்னும், விராட்கோலி 51 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 128 ரன்னும், லோகேஷ் ராகுல் 102 ரன்னும் எடுத்தனர். 2 சதமும், 3 அரைசதமும் அடிக்கப்பட்டது.
இதற்கு முன்பு ஆஸ்திரேலியா 2 முறை இதுமாதிரி சாதனை படைத்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக 2013-ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்திலும் (5 அரைசதம்) 2022-ம் ஆண்டு சிட்னியில் நடந்த போட்டியிலும் (1 சதம் + 4 அரைசதம்) அந்த அணியின் 'டாப் 5' வீரர்கள் 50 ரன்னுக்கு மேல் எடுத்து இருந்தனர்.
இந்த ஆண்டில் இந்திய அணி ஒருநாள் போட்டியில் 8-வது முறையாக 350 ரன்னுக்கு மேல் குவித்துள்ளது. இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிக முறை 350 ரன்னுக்கு மேல் குவித்த அணி என்ற சாதனையை புரிந்தது. இதற்கு முன்பு 2019-ல் இங்கிலாந்து 7 தடவை எடுத்து இருந்தது.
உலகக் கோப்பையில் 7-வது முறையாக இந்தியா 400 ரன்னுக்கு மேல் குவித்து 2-வது இடத்தை பிடித்தது. தென்ஆப்பிரிக்கா 8 தடவை 400 ரன்னுக்கு மேல் எடுத்து உள்ளது.
உலகக் கோப்பையில் இந்திய அணியின் 2-வது அதிகபட்ச ஸ்கோராகும். 2007-ல் பெர்முடாவுக்கு எதிராக 413 ரன் குவித்ததே அதிகபட்சமாகும்.






