என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    உலக கோப்பை கிரிக்கெட் - இந்தியா, ஆப்கானிஸ்தான் நாளை மோதல்
    X

    உலக கோப்பை கிரிக்கெட் - இந்தியா, ஆப்கானிஸ்தான் நாளை மோதல்

    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
    • சேப்பாக்கத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    புதுடெல்லி:

    13-வது ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 10 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை ரவுண்ட் ராபின் முறையில் மோதவேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இந்த ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்திய அணி 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானை நாளை எதிர்கொள்கிறது. புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

    ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற இந்தியாவுக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில் தொடக்க ஆட்டத்தில் விளையாடவில்லை. அவர் நாளைய போட்டியிலும் ஆட மாட்டார். அவர் இந்திய அணியோடு டெல்லி செல்லவில்லை. சென்னையிலேயே தங்கி இருக்கிறார். மருத்துவக் குழு தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சு, பீல்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள்.

    விராட் கோலி, கே.எல்.ராகுலின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. உடல் தகுதி குறித்து விமர்சனம் செய்தவர்களுக்கு தனது பேட்டிங் மூலம் ராகுல் பதிலடி கொடுத்தார்.

    நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரேயாஸ் அய்யர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் அவர் இடத்தில் சூர்யகுமார் யாதவ் இடம் பெறுவாரா என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல இஷான் கிஷனும் நல்ல வாய்ப்பை பயன்படுத்தவில்லை.

    பந்துவீச்சில் மாற்றம் இருக்குமா எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை ஆடுகளம் என்பதால் 3 சுழற்பந்து வீரர்கள் இடம் பெற்றனர். நாளைய போட்டியில் 2 சுழற்பந்து வீரர் என்ற நிலை ஏற்பட்டால் அஸ்வின் கழற்றி விடப்படுவார். முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹஷ்மத்துல்லா ஷகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்திடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து முதல் வெற்றியைப் பெறும் வேட்கையில் உள்ளது.

    அந்த அணியில் ரஷித்கான் சுழற்பந்தில் முத்திரை பதிக்கக் கூடியவர். அவரை நம்பியே அந்த அணி அதிகமாக இருக்கிறது. இது தவிர நூர் அகமது, முஜிபுர் ரகுமான் போன்ற சிறந்த வீரர்களும் ஆப்கானிஸ்தானில் உள்ளனர்.

    இரு அணியும் இதுவரை 3 ஆட்டத்தில் மோதி உள்ளன. இதில் இந்தியா 2-ல் வெற்றி பெற்றது. ஒரு போட்டி சமனில் முடிந்தது.

    பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    Next Story
    ×