search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    2022-ம் ஆண்டே வார்னர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்- ரிக்கி பாண்டிங் அதிரடி கருத்து
    X

    2022-ம் ஆண்டே வார்னர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்- ரிக்கி பாண்டிங் அதிரடி கருத்து

    • தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற போட்டியுடன் அவர் விடை பெற்றிருக்க வேண்டும்.
    • பேட்ஸ்மேனாக இருக்கும் நீங்கள் ரன்களை அடிக்கவில்லை என்றால் நீங்களாகவே உங்களது இடத்தை காலி செய்ய வேண்டும்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரன் குவிக்க திணறினார். முதல் டெஸ்டில் 2 இன்னிங்சிலும் சேர்த்து 11 ரன்னே எடுத்தார். 2-வது டெஸ்டில் முதல் இன்னிங் சில் 15 ரன் எடுத்த அவர் காயம் காரணமாக 3-வது டெஸ்டில் விலகினார்.

    இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெற வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று நினைத்தால் அவர் தனது 100-வது போட்டியை மெல்போர்னில் விளையாடி இரட்டை சதம் அடித்த பிறகு ஓய்வு பெற்றிருக்க வேண்டும். சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் ஓய்வு பெறும் சிறந்த தருணத்தை அவர் தவற விட்டு விட்டார். அனைத்து வீரர்களும் இதைதான் விரும்புவார்கள். ஆனால் இந்த வாய்ப்பு வார்னருக்கு வராமல் கூட போகலாம். ஏனென்றால் அதற்கு இன்னும் 12 மாதங்கள் இருக்கிறது.

    தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, ஆஷஸ் தொடருக்கு முன்பாக நடைபெற உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் வார்னரை விளையாட வைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விரும்பும் என்று கருதுகிறேன்.

    அதே போல் ஆஷஸ் தொடரின் கடைசி போட்டி வரை அவர் விளையாட வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் ரன்களை அடிக்கவில்லை என்றால் நீங்களாகவே உங்களது இடத்தை காலி செய்ய வேண்டும். இதுபோன்ற நிலைமை என்னை போன்றவர்களுக்கும் நடந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு வார்னர் இந்நேரம் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிட்னியில் நடந்த போட்டியுடன் அவர் விடை பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் மெல்போர்னில் தனது 100-வது போட்டியில் இரட்டை சதம் அடித்திருந்தார். சொந்த ஊரான சிட்னியில் தனது 101-வது போட்டியில் சிறப்பாக தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்திருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    36 வயதான டேவிட் வார்னர் 103 டெஸ்டில் 8,158 ரன்கள் எடுத்துள்ளார். 25 சதம், 34 அரை சதம் அடித்துள்ளார்.

    Next Story
    ×