search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்திய சக்கர நாற்காலி கிரிக்கெட் அணி கேப்டன் என கூறி மோசடி: மாற்றுத்திறனாளி வாலிபர் மீது வழக்குப்பதிவு
    X

    இந்திய சக்கர நாற்காலி கிரிக்கெட் அணி கேப்டன் என கூறி மோசடி: மாற்றுத்திறனாளி வாலிபர் மீது வழக்குப்பதிவு

    • பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட செல்வதாக கூறி பல தனியார் நிறுவனங்களிடம் பணமும் வசூல் செய்துள்ளார்.
    • அவர் கொண்டு வந்த கோப்பை மேற்கு வங்காளத்தில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் வாங்கியதும் உளவுத்துறை விசாரணையில் கண்டறியப்பட்டது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கீழ செல்வனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்பாபு. மாற்றுத்திறனாளி வாலிபரான இவர் இந்திய சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் கேப்டன் என்று கூறி வலம் வந்திருக்கிறார்.

    மேலும் அவர் கடந்த மாதம் லண்டனில் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்த தாகவும், அதில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 20 நாடுகள் விளையாடியதாகவும், தனது தலைமையிலான இந்திய அணி இறுதி போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து கோப்பையை வென்றதாகவும் கூறியிருக்கிறார்.

    அதனை கூறி அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்தித்து வாழ்த்து பெற்ற வினோத்பாபு, அவர் மூலமாக முதல்-அமைச்சரையும் சந்தித்தார். முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சருடன் வினோத் பாபு கோப்பையுடன் உள்ள படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

    இந்த நிலையில் வினேத் பாபு இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டன் இல்லை என்பதும், அவர் உலகக் கோப்பையை வென்றதாக கூறியது பொய் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து உளவுத்துறை நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    முதல்-அமைச்சரை வினோத்பாபு சந்தித்து விட்டு சென்ற மறுநாள் சர்வதேச கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் உளவுத்துறையினர் விசாரித்தனர். இதில் வினோத் பாபு கூறியது போல் பாகிஸ்தானில் எந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியும் நடக்கவில்லை என்பது தெரியவந்தது.

    இந்தியாவில் மேற்கு வங்காளம் மற்றும் ஜான்பூரில் நடந்த உள்ளூர் கிளப்பில் வீல் சேர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வினோத்பாபு, இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடுவது போல் வீடியோ எடுத்து பாகிஸ்தானில் விளையாடியதாக நம்ப வைத்துள்ளார்.

    மேலும் அவர் கொண்டு வந்த கோப்பை மேற்கு வங்காளத்தில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் வாங்கியதும் உளவுத்துறை விசாரணையில் கண்டறியப்பட்டது.மேலும் அவர் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட செல்வதாக கூறி பல தனியார் நிறுவனங்களிடம் பணமும் வசூல் செய்துள்ளார்.

    இந்த நிலையில் சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் இந்திய கேப்டன் என்று கூறி மோசடியில் ஈடுபட்ட வினோத்பாபுவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏ.பி.ஜெ.மிசைல் பாரா ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் உறுப்பினர்கள் ராமநாதபுர மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் மனு அளித்தனர்.

    அதன்பேரில் விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதில் பேக்கரி உரிமையாளர் உள்பட பலரிடம் வினோத் பாபு பணமோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 2 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×