என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுதிர் நாயக் மறைவு
- பர்மிங்காம் டெஸ்ட்டில் அறிமுகமாகி ஒரு இன்னிங்சில் 77 ரன்கள் குவித்தார்.
- மும்பை அணியின் தேர்வுக் குழு தலைவராக சுதிர் நாயக் பணியாற்றினார்
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க வீரரும், பிரபல பயிற்சியாளருமான சுதிர் நாயக் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78.
மும்பை கிரிக்கெட் வட்டாரத்தில் முக்கிய வீரராக வலம் வந்தவர் சுதிர் நாயக். 1970-71 சீசனில் அவரது தலைமையிலான மும்பை அணி ரஞ்சிக் கோப்பையை வென்றது. எனினும் 1972ல் முக்கிய பேட்ஸ்மேன்கள் அணிக்கு திரும்பியதால் ஆடும் லெவனில் சுதிர் இடம்பெறவில்லை. 1974ல் இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின்போது, பர்மிங்காம் டெஸ்ட்டில் அறிமுகமாகி ஒரு இன்னிங்சில் 77 ரன்கள் குவித்தார். இதுவே அவரது அதிகபட்ச ரன் ஆகும்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக 1974ல் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 141 ரன்களும், 2 ஒருநாள் போட்டிகளில் 38 ரன்களும் அடித்துள்ளார். இதுதவிர 85 முதல்தர போட்டிகளில் விளையாடி 4500 ரன்கள் எடுத்துள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பயிற்சியாளராக செயல்பட்டார். மும்பை அணியின் தேர்வுக் குழுவின் தலைவராகவும், அதன்பின் வான்கடே ஸ்டேடியத்தின் ஆடுகள பராமரிப்பாளராகவும் பணியாற்றினார்.
மும்பையில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர் சமீபத்தில் பாத்ரூமில் வழுக்கி விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சையின்போது அவர் கோமா நிலைக்கு சென்றார். அதில் இருந்து மீண்டு வராமலேயே அவரது உயிர் இன்று பிரிந்துள்ளது. அவரது மறைவுக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.






