search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    விமர்சனங்களுக்கு மத்தியில் சாதனைகள் படைத்த டேவிட் வார்னர்
    X

    விமர்சனங்களுக்கு மத்தியில் சாதனைகள் படைத்த டேவிட் வார்னர்

    • பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் 164 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 26-வது சதத்தை அவர் பதிவு செய்தார்.

    ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் விளையாடுகிறது. இதற்கான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 346 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 16 பவுண்டரி 4 சிக்சருடன் 164 ரன்கள் குவித்து அவுட்டானார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 26-வது சதத்தை அவர் பதிவு செய்தார்.

    குறிப்பாக இத்தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அவர் தன்னுடைய கடைசி தொடரின் முதல் போட்டியிலேயே சதமடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேரி சோபர்ஸ்க்கு நிகராக 26 சதங்களை அடித்த வீரராக வார்னர் சாதனை படைத்துள்ளார். அதை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த 3-வது வீரர் என்ற பிரைன் லாரா சாதனையை அவர் முறியடித்துள்ளார். அந்த பட்டியலில், 12 சதங்களுடன் குமார் சங்ககாரா முதல் இடத்திலும் 11 சதங்களுடன் அரவிந்தா டீ சில்வா 2-வது இடத்திலும் 10 சதங்களுடன் டேவிட் வார்னர் 3-வது இடத்திலும் 9 சதங்களுடன் பிரையன் லாரா 4-வது இடத்திலும் உள்ளனர்.

    குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் 8 இன்னிங்ஸில் 5 சதம் உட்பட வார்னர் 1009* ரன்களை 144.14 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இது மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் மேத்தியூ ஹெய்டன் (8643), மைக்கேல் க்ளார்க் (8625) ஆகிய ஜாம்பவான்களை முந்தி அதிக ரன்கள் அடித்த 5-வது ஆஸ்திரேலிய வீரராகவும் டேவிட் வார்னர் (8651*) சாதனை படைத்துள்ளார்.

    Next Story
    ×