search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    7 விக்கெட்டுகள்: முகமது சமியின் சாதனைத் துளிகள்
    X

    7 விக்கெட்டுகள்: முகமது சமியின் சாதனைத் துளிகள்

    • உலகக் கோப்பையில் அதிகமுறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய பந்து வீச்சாளர்.
    • உலகக் கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்.

    மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 398 ரன் இலக்கை நோக்கி சென்ற நியூசிலாந்து 327 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி அபாரமாக பந்து வீசி 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் சாய்த்தார். இதன்மூலம் அவர் பல்வேறு சாதனைகள் படைத்தார்.

    அவரது சாதனைகள்....

    1. ஒருநாள் கிரிக்கெட் மற்றும் உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக ஸ்டூவர்ட் பின்னி 4 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் சாய்த்தது இந்திய பந்து வீச்சாளரின் சாதனையாக இருந்தது.

    2. ஒரு உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளராகியுள்ளார். சமி தற்போது வரை இந்த தொடரில் 23 விக்கெட் வீழ்த்தியுள்ளார். முன்னதாக ஜாகீர் கான் (2011) 21 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.

    3. ஒரு உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார். மிட்செல் ஸ்டார்க் (2019) 27 விக்கெட்டுகள் உடன் முதல் இடத்தில் உள்ளார். மெக்ராத் (2007) 26 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    4. உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். மெக்ராத் (7/15), பிக்கெல் (7/20), டிம் சவுத்தி (7/33), வின்ஸ்டன் டேவிஸ் (7/51) ஆகியோர் ரன் குறைவாக கொடுத்த அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றனர்.

    5. உலகக் கோப்பையில் 4 முறை ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். முன்னதாக ஸ்டார்க் உடன் 3 முறை வீழ்த்தி சமன் நிலையில் இருந்தார்.

    6. உலகக் கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.

    நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருது முகமது சமிக்கு வழங்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில் "என்னுடைய வாய்ப்புக்காக நான் காத்திருந்தேன். நான் அதிக அளவில் ஒயிட் பால் கிரிக்கெட்டில் விளையாடவில்லை. நாங்கள் யார்க்கர், ஸ்லோவர் பந்துகள் பற்றி பேசும்போது, இது என்னுடைய மனதில் இருந்தது.

    புதுப்பந்தில் விக்கெட் வீழ்த்த நான் முயற்சி செய்தேன். என்னால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு முயற்சி செய்தேன். கேன் வில்லியம்சன் கேட்ச்-ஐ தவறவிட்டேன். அதை மோசமாக உணர்ந்தேன். நான் என்னுடைய முழு வேகத்தில் பந்து வீச முயற்சி செய்தேன். அவர்கள் அவர்களுடைய முறைப்படி விளையாடிக் கொண்டிருந்தனர்.

    ஆகவே, வாய்ப்பை நான் எடுத்துக் கொண்டேன். விக்கெட் நன்றாக இருந்தது. பனி இருக்குமோ என்ற அச்சம் இருந்தது. புற்கள் நன்றாக நறுக்கப்பட்டிருந்தது. பனி இறங்கியிருந்தால், நிலைமை மோசமாக இருந்திருக்கும.

    நான் இதை ஆச்சர்யமாக உணர்கிறேன். ஏனென்றால் இது மிகப்பெரிய மேடை. நாங்கள் 2015, 2019 அரையிறுதி போட்டிகளில் தோல்வியடைந்தோம். எனக்கு கிடைத்த வாய்ப்பை, சிறப்பாக மாற்ற பார்க்கிறேன். இனி எப்பொழுது நம் அனைவருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவில்லை." என்றார்.

    Next Story
    ×