search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்திய அணியின் வெற்றிநடை தொடருமா?: இங்கிலாந்துடன் இன்று மோதல்
    X

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா - இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர்

    இந்திய அணியின் வெற்றிநடை தொடருமா?: இங்கிலாந்துடன் இன்று மோதல்

    • இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் டேவிட் மலான், ஜோருட் தவிர மற்றவர்கள் சொதப்பி வருகிறார்கள்.
    • ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 106 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    லக்னோ:

    13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் 29-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

    நடப்பு உலகக்கோப்பை தொடரில் அசைக்க முடியாத அணியாக வலம் வரும் இந்தியா தனது முதல் 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக விளங்குகிறது. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி இருக்கும் இந்திய அணி எல்லா ஆட்டங்களிலும் சிரமமின்றி இலக்கை விரட்டிப்பிடித்தது.

    இந்திய அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (354 ரன்கள்), ரோகித் சர்மா (311 ரன்கள்), லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மன் கில்லும், பந்து வீச்சில் பும்ரா (11 விக்கெட்), குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், முகமது ஷமியும் நல்ல நிலையில் உள்ளனர். கணுக்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீளாததால் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இந்த ஆட்டத்திலும் ஆடமுடியாது.

    நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படவில்லை. தனது முதல் 5 ஆட்டங்களில் ஒரு வெற்றி (வங்காளதேசத்துக்கு எதிராக), 4 தோல்வி (நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளிடம்) கண்டுள்ள இங்கிலாந்து அணி ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணி எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளுக்குரிய முடிவு ஒருசேர சாதகமாக அமைந்தால் மட்டுமே சிறிய வாய்ப்பு கிட்டும்.

    இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் டேவிட் மலான், ஜோருட் தவிர மற்றவர்கள் சொதப்பி வருகிறார்கள். கேப்டன் ஜோஸ் பட்லர், பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், ஹாரி புரூக் ஆகியோரின் பேட்டிங் ஏமாற்றம் அளித்து வருகிறது. நட்சத்திர வீரர்களை அதிகம் கொண்ட இங்கிலாந்து ஒரு அணியாக ஒருங்கிணைந்து ஜொலிக்க முடியாததால் சறுக்கலை சந்தித்து வருகிறது.

    இந்திய அணி தனது வெற்றி உத்வேகத்தை தொடர்ந்து அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்க எல்லா வகையிலும் தீவிரம் காட்டும். அதேநேரத்தில் இங்கிலாந்து அணி நெருக்கடியின்றி செயல்பட்டு வெற்றிப்பாதைக்கு திரும்ப முழு முயற்சி மேற்கொள்ளும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 106 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 57-ல் இந்தியாவும், 44-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டையில் முடிந்தது. 3 ஆட்டம் முடிவில்லாமல் போனது. உலகக் கோப்பையில் மோதிய 8 ஆட்டங்களில் 4-ல் இங்கிலாந்தும், 3-ல் இந்தியாவும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

    இங்கிலாந்து: பேர்ஸ்டோ, டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டன், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அட்கின்சன், அடில் ரஷித்.

    பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    Next Story
    ×