என் மலர்tooltip icon

    சினிமா

    எஸ்.பி.பாலசுப்ரமணியம், இளையராஜா
    X
    எஸ்.பி.பாலசுப்ரமணியம், இளையராஜா

    நண்பனை இழந்து வாடும் இளையராஜா... எஸ்.பி.பி.க்காக வெளியிட்ட உருக்கமான வீடியோ

    பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல் தெரிவித்து உள்ளார்.
    இசைக்கும், ஸ்வரங்களுக்கு இடையிலான உறவுதான் எஸ்.பி.பிக்கும், இளையராஜாவுக்கும் இடையிலான நட்பு. இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதற்கு முன்பு பாவலர் பிரதர்ஸ் என்ற பெயரில் இளையராஜா நடத்தி வந்த கச்சேரிகளில் முதன்மை பாடகர் எஸ்.பி.பி. தான். இளையராஜா இசையில் அதிக பாடல்களை பாடியவர் எஸ்.பி.பி. இருவரும் இணைந்து 80-களில் நடத்திய இசை ராஜாங்கம் இன்றளவும் பேசப்படுகின்றன.

    பாடல் உரிமம் விவகாரத்தில் எஸ்.பி.பி., இளையராஜா இருவருக்கும் கருத்துவேறுபாடு வந்தபோதும், ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த மதிப்பை குறைத்து கொண்டதில்லை. சில மாதங்களிலேயே கசப்பு மறந்து அந்த இசைக்கூட்டணி மீண்டும் மலர்ந்தது. 

    இதனிடையே எஸ்.பி.பி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, சீக்கிரம் எழுந்து வா பாலு என உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் இளையராஜா.

    இந்நிலையில், எஸ்.பி.பி. இன்று மரணமடைந்த நிலையில், அவருக்கு இரங்கல் தெரிவித்து இளையராஜா வீடியோ  வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியுள்ளதாவது: “சீக்கிரம் எழுந்துவா, உன்னை பார்க்க நான் காத்திருக்கிறேன் என்றேன், நீ கேக்கல. கந்தர்வர்களுக்காக பாட சென்றுவிட்டாயா பாலு, உலகம் சூனியமாகிவிட்டது. பேசுவதற்கு பேச்சு வரல. சொல்வதற்கு வார்த்தை இல்லை. எல்லா துக்கத்திற்கும் ஒரு அளவு உண்டு, இந்த துக்கத்திற்கு அளவில்லை” என உருக்கமாக பேசியுள்ளார்.
    Next Story
    ×