என் மலர்
OTT

ராம்போ முதல் உருட்டு உருட்டு வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் அப்டேட்
- விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் வெளியான படம் 'பாம்'.
- ஹிருத்திக் ரோஷன் - ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள படம் 'வார் 2'.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
ராம்போ:
அருள்நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'ராம்போ' படத்தை, கொம்பன், குட்டிப்புலி, புலிக்குத்தி பாண்டி, விருமன் போன்ற படங்களைத் தந்த, புகழ் பெற்ற இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார். தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி, இம்முறை நகர வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள "ராம்போ" நகர பின்னணியில் ஒரு அதிரடி ஆக்சன் கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.
ஒரு தைரியமான இளம் குத்துச்சண்டை வீரன், ஒரு பெண்ணுக்கு உதவ முயற்சிக்கும் போது தொடங்கும் கதை, அதன்பின் அவன் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. முத்தையாவின் இயக்கத்தில், உணர்வுப்பூர்வமான அம்சங்களுடன், அதிரடி, ஆக்சன் நிரம்பிய அழுத்தமான படமாக இப்படம் வெளிவரவுள்ளது. பிக் பாஸ் புகழ் ஆயிஷா இந்த படத்தின் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமாகி உள்ளார். மேலும் மலையாள நடிகர் ரஞ்சித் சஜீவ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். ஹரீஷ் பேரடி மற்றும் VTV கணேஷ் முக்கியமான வேடங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தை வீட்டிலிருந்தபடியே அனுபவிக்க நாளை முதல் 'ராம்போ' படத்தை சன் நெக்ஸ்ட் தளத்தில் பார்த்து ரசியுங்கள்...
மிராய்
கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் வெளியான படம் 'மிராய்'. மனோஜ் மஞ்சு வில்லனாக நடித்துள்ள இப்படம் விதியும் தெய்வீகமும் மோதும் உலகில் அமைக்கப்பட்டுள்ள 'மிராய்', மனிதகுலத்திற்கு சமநிலையையும் நம்பிக்கையையும் மீட்டெடுக்க அனைத்து தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டிய தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு போர்வீரனின் கதையைச் சொல்கிறது.
அதிக விஎஃப்எக்ஸ் கலந்த கதையாக உருவான இப்படம் கடந்த மாதம் 12-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலிலும் சாதனை செய்தது. இந்த நிலையில், 'மிராய்' படம் ஜியோ ஹாட் ஸ்டாரில் நாளை தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
வேடுவன்
தமிழில் மண்டேலா, குருதி ஆட்டம், கூலி, கைதி, லவ்வர் போன்ற படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் கண்ணா ரவி. இவர் தற்போது பவன் இயக்கத்தில் 'வேடுவன்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் கண்ணா ரவி, சஞ்சீவ் வெங்கட், ஸ்ராவினிதா, ஸ்ரீ காந்த், ஐஸ்வர்யா ரகுபதி, வினுஷா தேவி, லாவண்யா, ரேகா நாயர், பார்வதி, ஜீவா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜீ 5 நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள 'வேடுவன்' வெப் தொடர் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த வெப் தொடர் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

வார் 2
ஹிருத்திக் ரோஷன் - ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள படம் 'வார் 2'. இந்தப் படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். படத்துக்கு ப்ரிதம் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், 'வார் 2' படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது.
பாம்
விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் வெளியான படம் 'பாம்'. இதில் ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், நாசர், அபிராமி மற்றும் சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் நாளை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
உருட்டு உருட்டு
இயக்குனர் பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில் காமெடி கதைக்களத்தில் வெளியான படம் 'உருட்டு உருட்டு'. இதில் கதாநாயகனாக நாகேஷின் பேரன் கஜேஷ் நடித்துள்ளார். இப்படம் நாளை சிம்பிலி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
திரிபநாதரி பார்பரிக்
மோகன் ஸ்ரீவத்சா இயக்கத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவான படம் 'திரிபநாதரி பார்பரிக்'. இதில் சத்யராஜ், சத்யம் ராஜேஷ், உதய பானு மற்றும் சாஞ்சி ராய் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாக உள்ளது.
இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும் ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் நாளை வெளியாக உள்ளது.






