என் மலர்tooltip icon

    தரவரிசை

    விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி, ரோபோ சங்கர் ஆகியோர் நடிப்பில் எழில் இயக்கத்தில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’. இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
    டெய்லர் கடை நடத்தி வரும் விஷ்ணு விஷால், எம்.எல்.ஏ ரோபோ சங்கருக்கு வலது கையாகவும் இருந்து வருகிறார். விஷ்ணு விஷாலுக்கு நண்பராக சூரி. இதே ஊரில் வசிக்கும் நிக்கி கல்ராணி, போலீசாக வேண்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவரின் முயற்சியை கண்டு இவரை காதலித்து வருகிறார் விஷ்ணு விஷால்.

    விஷ்ணு விஷால் எம்.எல்.ஏ.விடம் இருப்பதால் நிக்கி கல்ராணியின் அப்பா அவரிடம் பத்து லட்சம் கொடுத்து போலீசாக்க வேண்டும் என்று கூறுகிறார். விஷ்ணுவும் தன்னுடைய காதலிக்காக பத்து லட்சத்தை வாங்கி ரோபோ சங்கரிடம் கொடுக்கிறார்.

    ரோபோ சங்கர் கட்சியின் அமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகின்றது. சாகும் நிலையில் இருக்கும் அமைச்சர் ரோபோ சங்கரை அழைத்து 500 கோடி ஒரு இடத்தில் இருப்பதாக சொல்லிவிட்டு இறக்கிறார். அந்த 500 கோடியை அபகரிக்க, அமைச்சர் மனைவியின் தம்பி ரவிமரியா திட்டம் போடுகிறார்.

    இந்நிலையில், ரோபோ சங்கருக்கு விபத்து ஏற்பட்டு கோமா நிலைக்கு செல்கிறார். மறுபக்கம் நிக்கி கல்ராணி சொந்த முயற்சியால் போலீசாகி விடுகிறார். தனக்கு தெரியாமல் பணம் கொடுத்ததால் விஷ்ணு விஷாலிடம் பத்து லட்சம் பணத்தை திரும்ப கேட்கிறார்.

    இறுதியில் ரோபா சங்கர் கோமா நிலையில் இருந்து மீண்டாரா? இவரிடம் இருந்து பத்து லட்சம் பணத்தை திரும்ப வாங்கி, விஷ்ணு விஷால் தன் காதலில் ஒன்று சேர்ந்தாரா? அந்த 500 கோடி எங்கு இருக்கிறது என்று ரவிமரியா கண்டுபிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஷ்ணு விஷால், முதல் முறையாக முழு நேர காமெடி படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை இவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இப்படம் மூலம் வெற்றி கண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். மேலும் படத்தில் சூரிக்கும், ரோபா சங்கருக்கும் அதிக வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

    நாயகியாக நடித்திருக்கும் நிக்கி கல்ராணி ஆக்‌ஷன் கலந்த போலீசாக நடித்திருக்கிறார். போலீஸ் உடையிலும், மற்ற உடையிலும் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவே இருக்கிறார்.

    பரோட்டா சூரி என்று பெயர் பெற்ற சூரியை இனிமேல் புஷ்பா புருஷன் என்றே அழைக்கலாம். அந்தளவிற்கு இப்படம் அவருக்கு பெயர் வாங்கி தந்திருக்கிறது. ஒரு மோதிரத்திற்காக திருமணம் செய்துக் கொண்டு படம் முழுவதும் புஷ்பா புருஷன், புஷ்பா புருஷன் என்று மற்றவர்களிடம் அவதிப்படுவது ரசிப்பு. கிளைமாக்ஸ் காட்சியில் ரோபோ சங்கர் சொல்லும் கதை திரையரங்கில் சிரிப்பு சரவெடி. இவருடைய நடிப்பு படத்திற்கு பெரிய பலம். ஆடுகளம் நரேன், ரவிமரியா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    காமெடி படத்தை கொடுத்து வெற்றி கண்டு வரும் இயக்குனர் எழில், இந்த படத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு வயிறு குலுங்க சிரிக்குமளவிற்கு படத்தை கொடுத்திருக்கிறார். சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். முதல் பாதியை விட இரண்டாம் பாதியை அதிகம் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

    சத்யா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். சக்தியின் ஒளிப்பதிவு படத்திற்கு அதிகம் கை கொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ காமெடி சரவெடி.
    செல்போன்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்த விளையாட்டு ஆங்ரி பேர்ட்ஸ். இதனை விரும்பும் குழந்தைகளை மேலும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் வெளியாகி இருக்கிறது ‘தி ஆங்ரி பேர்ட்ஸ்’ ஹாலிவுட் படம்.
    ஒரு தீவில் பலவிதமான பறவைகள் வசித்து வருகின்றன. இதில் சிவப்பு பறவை மிகவும் கோபக்கார பறவை. இந்த பறவை அடிக்கடி கோபப்படுவதால், மற்ற பறவைகள் அதை ஒதுக்கி வைக்கின்றன. ஒரு பிரச்சனையில் அந்த பறவைக்கு அதிகபட்ச தண்டனையும் கிடைக்கிறது.

    இந்த தண்டனை பெறும் இடத்தில் மஞ்சள் பறவை, பாம் பறவை மற்றும் பெரிய சிவப்பு பறவை ஆகியவை உள்ளன. இவர்களுடன் சிவப்பு பறவை நட்பாகிறது.

    இந்நிலையில், இந்த தீவுக்கு ஒரு பெரிய கப்பல் வருகிறது. இதிலிருந்து வரும் இரண்டு பன்றிகள் பறவைகளிடம் நட்பு காட்டுகிறது. மேலும் அந்த தீவில் ஒரு பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்கிறது. இதில் மேலும் இரண்டு பன்றிகள் கலந்துக் கொள்கின்றன. அப்போது பன்றிகள் வைத்திருக்கும் உண்டிகோலை அறிமுகம் செய்கிறார்கள்.

    இந்த பன்றிகள் மீது சிவப்பு பறவைக்கு சந்தேகம் ஏற்படுகிறது. உண்டிகோலை வைத்து அந்த கப்பலில் என்ன இருக்கிறது என்பதை பார்க்க செல்கிறது. அப்போது, அதில் கூட்டமாக பன்றிகள் இருப்பது தெரிகிறது.

    இதனால், கழுகின் உதவியை நாடுகிறது சிவப்பு பறவை. ஆனால், கழுகு இதற்கு உதவ மறுக்கிறது. இந்நிலையில் அந்த தீவில் மேலும் ஒரு பிரம்மாண்ட பார்ட்டி நடக்கிறது. இந்த பார்ட்டியின் முடிவில் பறவைகளின் அனைத்து முட்டைகளையும் பன்றிகள் எடுத்து சென்று விடுகின்றன.

    இதையறிந்த சிவப்பு பறவை மிகவும் கோபத்துடன் இருக்கும் பறவைகளை (ஆங்ரி பேர்ட்ஸ்) ஒன்று திரட்டி அந்த முட்டைகளை கைப்பற்ற நினைக்கிறது. இறுதியில் பன்றிகள் கூட்டத்தில் இருக்கும் முட்டைகளை ஆங்ரி பேர்ட்ஸ் கைப்பற்றியதா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

    ஆங்ரி பேர்ட்ஸ் கேமை மையமாக வைத்து ‘ஆங்ரி பேர்ட்ஸ்’ படம் வெளியாகியிருக்கிறது. கேமை ரசித்தவர்களை விட அதிகமாகவே இப்படம் கவர்ந்திருக்கிறது என்றே சொல்லலாம். குறிப்பாக குழந்தைகளின் ஆரவாரத்தை தியேட்டர்களில் காண முடிகிறது.

    நவீன கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. மேலும் தமிழ் மொழியில் பார்க்கும் போது, சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக சமீபத்தில் ரிலீசான தமிழ் படங்களின் வசனங்களை பேசி அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

    மொத்தத்தில் ‘ஆங்ரி பேர்ட்ஸ்’ அசத்தல் பேர்ட்ஸ். 
    டோனி ஜா நடிப்பில் உருவான ‘கில் ஜோன் 2’ படம் தற்போது தமிழில் ‘நிழல் யுத்தம்’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது.
    தாய்லாந்தில் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து வரும் டோனி ஜாவுக்கு ஒரேயொரு பெண் குழந்தை. புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அவளுக்கு, எலும்பில் ஒரு பகுதியை மாற்றம் செய்தால் அந்த நோய் குணமாகும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். வசதி வாய்ப்பில்லாத டோனி ஜா, அந்த எலும்பு பகுதியை தானமாக கொடுக்க யாராவது முன்வருவார்களா? என காத்திருக்கிறார்.

    மறுமுனையில், ஹாங்காங்கில் மர்மமான முறையில் பலர் கடத்தப்படுகிறார்கள். கடத்தப்பட்டவர்களின் உடல் உறுப்புகள் திருடப்பட்டு அவர்களின் சடலங்கள் கிடைக்கின்றன. இந்த கடத்தல் கும்பலை பிடிக்க, ஜிங் ஊ ரகசிய உளவாளியாக செயல்பட்டு வருகிறார்.

    இந்நிலையில், உடல் உறுப்புகளை கடத்தும் கடத்தல் கும்பல் தலைவனுக்கு இதயத்தில் கோளாறு இருக்கிறது. அவனுக்கு தேவையான இதயம் அவனது தம்பியிடம் இருக்கிறது. தம்பியை கொன்று அதை பெற முயற்சி செய்கிறார். இந்த வேலையை முடிக்க ஜிங் ஊ-க்கு உத்தரவு வருகிறது. இந்த தகவலை போலீசுக்கு தெரிவித்து கடத்தலையும் தடுத்து விடுகிறார். இங்கு ஏற்படும் மோதலில் தலைவனின் தம்பிக்கு அடிப்பட்டு அவர் கோமா நிலைக்கு சென்று விடுகிறார். மேலும் ஜிங் ஊ போலீஸ் அதிகாரி என்று கடத்தல் கும்பலுக்கு தெரிந்து விடுகிறது.

    இதனால் தலைவன், ஜிங் ஊவை பிணைக் கைதியாக பிடித்து வைத்து தம்பியின் இதயத்தை கைப்பற்ற நினைக்கிறார். மற்றொரு பக்கம் டோனி ஜா தன்னுடைய பெண் குழந்தைக்கு எலும்பு தானம் கொடுப்பவர் ஜுங் ஊ என்று தெரிந்து கொள்கிறார்.

    இறுதியில் ஜிங் ஊ, கடத்தல் கும்பல் தலைவனை பிடித்தாரா? டோனி ஜா தன்னுடைய பெண் குழந்தைக்கு எலும்பு பகுதியை மாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் டோனி ஜாவை விட ஜிங் ஊவை சுற்றியே கதை நகர்கிறது. வழக்கமான டோனி ஜாவை இந்த படத்தில் பார்க்க முடிகிறது. ஜிங் ஊ சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் திறமையாக நடித்திருக்கிறார்கள். படத்தில் இடம் பெற்ற ஆக்‌ஷன் காட்சிகள் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘நிழல் யுத்தம்’ வெற்றி.
    புதுமுகங்கள் வாசன், மிருதுளா நடிப்பில், சரவண பாண்டியன் இயக்கத்தில் வெளியாகி உள்ள ஜெனீபர் கருப்பையா படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
    பெற்றோரை இழந்த நாயகன் வாசன், நண்பர்களுடன் சேர்ந்து சொந்த ஊரிலேயே கிடைத்த வேலைகளை செய்து வாழ்ந்து வருகிறார். குறிப்பாக, ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் பெரிய தொழிலதிபர் சொல்லும் சிறு சிறு வேலைகளையும் செய்து வருகிறார்கள். சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும் பணம் இருந்தால் போதும் என்ற வகையில் அவரது வாழ்க்கை நகர்கிறது.

    இந்த சூழ்நிலையில் நாயகி மிருதுளாவை பார்க்கும் நாயகன் அவள் மீது காதல் கொள்கிறார். இருந்தும் தனது காதலை அவளிடம் சொல்லாமல் தூரத்தில் இருந்தே ரசிக்க ஆரம்பிக்கிறார்.

    இதற்கிடையில், நாயகனுக்கு ரியல் எஸ்டேட் அதிபருக்கு நெருக்கமான ஒருவரின் நட்பு கிடைக்கிறது. அவர் ஒரு நிலத்து பத்திரத்தை தனக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் முடித்துக் கொடுத்தால் நாயகனுக்கு ஒரு பெரிய தொகையை கமிஷனாக கொடுப்பதாக கூறுகிறார். நாயகனும், ஆசையில் அந்த பத்திரப்பதிவை கச்சிதமாக செய்து முடிக்கிறார். இது ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஆத்திரத்தை கொடுக்கிறது.

    அந்த ஆத்திரத்தின் விளைவு என்ன? நாயகன் தனது காதலை நாயகியிடம் சொல்லி அவருடன் சேர்ந்தாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

    நாயகன் வாசன், ஒரு நாயகனுக்குண்டான வசீகரம் இல்லாவிட்டாலும், நடிப்பிலாவது பாஸ்மார்க் பெறுவார் என்று எதிர்பார்த்தால் அதிலும் ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறார். குறிப்பாக இவருக்கு சுத்தமாக ரொமான்ஸே வரவில்லை. இருந்தும் இயக்குனர் ஏன்தான் ரொமான்ஸ் காட்சிகளை அவருக்கு வைத்தார் என்று தெரியவில்லை.

    நாயகி மிருதுளா விஜய் பார்க்க அழகாக இருக்கிறார். ஓரளவுக்கு தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். ரோகினி படத்தின் ஆரம்பத்திலும், இடையில் ஒரு சில காட்சிகளும் வருகிறார். அவர் தனக்குண்டான நடிப்பை அழகாக வெளிப்படுத்திருக்கிறார். மற்றபடி, எந்த கதாபாத்திரங்களும் மனதில் நிற்கவில்லை.

    இயக்குனர் சரவணபாண்டியன், இந்த படத்தில் விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்பதால், விவசாயம் பாதிக்கப்படுகிறது என்ற சமூக சிந்தனையுடன் இந்த படத்தை எடுக்க நினைத்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே இந்த விஷயத்தை கூறும் இயக்குனர், அதன்பிறகு கதையை வேறு திசைக்கு நகர்த்தி விடுகிறார். கடைசிவரை அவர் சொல்ல நினைத்ததை சொல்லாமலேயே படத்தை முடித்திருக்கிறார். அந்த கருத்தை மட்டும் வைத்துக் கொண்டு கதையை நகர்த்தி சென்றிருந்தால் ஓரளவுக்கு ரசித்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

    கிஷோர் குமாரின் பின்னணி இசை எடுபடவில்லை. பாடல்களும் பெரிதளவில் ஈர்க்கவில்லை.

    மொத்தத்தில் ‘ஜெனீபர் கருப்பையா’ வெறுப்பு.
    சுட்ட பழம் சுடாத பழம் என்ற பெயரில் புதிய படம் ஒன்று வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
    பெரிய கோடீஸ்வரரான ராஜூவின் மனைவிக்கு திடீர் பிரசவ வலி ஏற்படவே, வேறு வழியின்றி அருகிலிருக்கும் சாதாரண மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கேயே, ஒரு ஆட்டோ டிரைவரின் மனைவியும் பிரசவத்துக்காக அனுமதிக்கப்படுகிறார். அங்கே இருவருக்கும் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்தவுடன் ராஜூ தனது மனைவியையும் குழந்தையும் கூட்டிக் கொண்டு சென்றுவிடுகிறார்.

    பின்னர் சில வருடங்களுக்கு பிறகு கதை ஆரம்பிக்கிறது. ஆட்டோ டிரைவரின் மகனும், கோடீஸ்வரரான ராஜூவின் மகனும் ஒரே பள்ளியில் ஒரே பெயருடன் படித்து வருகிறார்கள். இந்நிலையில், தொழில் போட்டியில் ராஜூவின் மகனை கடத்த பவர் ஸ்டார், ரோபோ சங்கர் அடங்கிய காமெடி கடத்தல்காரர்களிடம் பொறுப்பு வருகிறது. ஆட்டோ டிரைவரின் மகனின் பெயரும், கோடீஸ்வரன் ராஜூவின் மகனும் ஒரே பெயர் என்பதால், குழப்பத்தில் அந்த கடத்தல் கும்பல் ஆட்டோ டிரைவரின் மகனை கடத்திச் சென்றுவிடுகின்றனர்.

    பின்னர், அவர்களுக்கு தாங்கள் கடத்தியது தவறான குழந்தைதான் என்று தெரிய வருகிறது. அதன்பிறகு, அவர்கள் கடத்தியது கோடீஸ்வரனின் மகன்தான் என்று ஒரு டுவிஸ்ட் வருகிறது. இது எப்படி சாத்தியமாகும்? அது உண்மைதானா? என்பதை பிற்பாதியில் விளக்கியிருக்கிறார்கள்.

    கோடீஸ்வரனாக வரும் ராஜூ அறிமுகமாகும் படம் இதுதான் என்றாலும், திமிர் பிடித்த கோடீஸ்வராக நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. கடைசியில், கோடீஸ்வர திமிரை எல்லாம் விட்டுவிட்டு திருந்தும் காட்சிகளில் இவரது நடிப்பு பலே. ஆட்டோ டிரைவராக வருபவர் நடிப்பில் எதார்த்தம் காட்டியிருக்கிறார். மகன் மேல் பாசம் காட்டும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

    ரோபோ சங்கர், மகாநதி சங்கர், வடிவேல் பாலாஜி, கிரேன் மனோகர், பவர் ஸ்டார் சீனிவாசன் என மிகப்பெரிய நகைச்சுவை நட்சத்திர பட்டாளமும் உள்ளது. ஆனால், ஒரு சில காட்சிகளைவிட பெரும்பாலான காட்சிகள் நகைச்சுவை இல்லாமலேயே நகர்வது சற்று சலிப்பை தருகிறது.

    இயக்குனர் சிவா குழந்தைகளுக்கு கருத்து சொல்லும்படியான ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார். பணம் இருந்தால் மட்டும் ஒரு குழந்தை எல்லாவற்றிலும் முதன்மையாக வந்துவிட முடியாது என்பதையும் இப்படத்தில் ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் படத்தை கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    கார்த்திக் ஆச்சார்யா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை ரகம்தான். அசோக் ஒளிப்பதிவு சற்று படத்திற்கு பலம் கொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘சுட்ட பழம் சுடாத பழம்’ கொஞ்சம் புளிக்கிறது.
    பாபி சிம்ஹா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘மீரா ஜாக்கிரதை’. படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்....
    சென்னையில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் வழியாக செல்பவர்கள் பலர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். இதனால் அங்கு பேய் இருப்பதாக கூறி ஊர் மக்கள் பயப்படுகின்றனர். ஊரில் உள்ள ஒருவரும் கொடூரமான முறையில் இறந்ததையடுத்து இந்த பீதி மேலும் அதிகரிக்கிறது.

    ஆனால், ஒரு பைத்தியக்காரன் மட்டும் அந்த பாலத்தில் தைரியமாக நடமாடுகிறான். இந்த பாலத்தின் அருகில் பாபி சிம்ஹாவின் வீடு உள்ளது. பாபி சிம்ஹா வெளியூரில் வேலை செய்வதால், அந்த வீட்டில் அவரது மனைவியும் குழந்தையும் வசித்து வருகிறார்கள்.

    இதற்கிடையில், இந்த பாலத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடித்து குறும்படம் எடுக்கும் எண்ணத்துடன் சென்னையில் இருந்து கிளம்பி வருகிறார் நாயகன். கல்லூரி மாணவனான இவர், ஒரு நாள் இரவில் அந்த பாலத்தின் அருகில் கேமராக்களை பொருத்திவிட்டு செல்கிறார். மறுநாள் காலை வந்து பார்க்கும் போது, கேமரா உடைந்திந்தது. பைத்தியக்காரன் தான் கேமராவை உடைத்தான் என்று தெரிந்து அவனிடம் விசாரிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது.

    இறுதியில் அந்த பாலத்தில் மர்மமான முறையில் மனிதர்கள் இறக்க காரணம் என்ன? பைத்தியக்காரன் நாயகனிடம் சொன்னது என்ன? உண்மையில் அங்கு பேய் இருக்கிறதா? பாலத்திற்கும் பாபி சிம்ஹாவிற்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் பாபி சிம்ஹா வில்லனாக நடித்திருக்கிறார். இவரது நடிப்பை ஓரளவு ரசிக்க முடிகிறது. நாயகனாக நடித்திருப்பவர் தன்னால் முடிந்த அளவிற்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். பாபி சிம்ஹா நடிப்பில் இப்படம் நீண்ட காலங்களுக்கு முன்பே உருவாகியிருக்கிறது. ஆனால், தற்போதுதான் வெளிவந்திருக்கிறது.

    வழக்கமான கதையை வித்தியாசமான கோணத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கேசவன். காட்சிகளை பார்க்கும் போது பல படங்களின் சாயல் தெரிகிறது. காட்சிகளில் சுவாரஸ்யம் இல்லாதது படத்திற்கு பின்னடைவு.

    ராஜ் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை பெரிதாக எடுபடவில்லை. ஜெனீஷ் வீரபாண்டியன் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    மொத்தத்தில் 'மீரா ஜாக்கிரதை' மிரட்டவில்லை.
    சிம்பு-நயன்தாரா நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. பாண்டிராஜ் இயக்கத்தில் இசையமைப்பாளராக குறளரசன் அறிமுகமாகியிருக்கும் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா? என்று பார்ப்போம்....
    சிம்பு சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது உறவுக்காரரான சூரி எந்த வேலை வெட்டியும் இல்லாமல் சிம்புவுக்கு பைக் டிரைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், சிம்புவுக்கு  நயன்தாராவை திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் ஏற்பாடு செய்கின்றனர்.

    அதன்படி, நயன்தாராவை பெண் பார்ப்பதற்காக  திருவாரூர் செல்கிறார்கள். பின்னர், நயன்தாராவிடம் பேசும் சிம்பு, தான் ஏற்கெனவே ஒரு பெண்ணை காதலித்ததாகவும், பின்னர் ஒருசில பிரச்சினைகளால் அந்த காதல் முறிந்துவிட்டதாகவும் கூறுகிறார். இதற்கு நயன்தாரா எந்தவித ரியாக்ஷனும் கொடுக்காமல் இருக்கிறார். அவருக்கு தன்னை பிடித்திருக்கிறதா? என்று தெரியாமலேயே சிம்பு குழப்பத்தில் இருக்கிறார்.

    இருப்பினும், இருவரும் நீண்டநாள் காதலர்கள் போல் நெடுநேரம் போனிலேயே பேசிக் கொள்கிறார்கள். இதற்கிடையில், இவர்களது திருமணத்துக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. ஒருநாள் நயன்தாராவின் அப்பா உதய் மகேஷும், சிம்புவின் அப்பா ஜெயப்பிரகாஷும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கிறார்கள்.

    அப்போது உதய் மகேஷ் கல்யாணத்துக்கு முன்பே தான் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அந்த பெண்ணுடனான காதல் முறிந்துவிட்டதாகவும், அவள் நினைவாகவே அவளது பெயரை தனது பெண்ணுக்கு வைத்திருப்பதாகவும் ஜெயப்பிரகாஷிடம் கூறுகிறார். இதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கும் ஜெயப்பிரகாஷ், அதை, அப்படியே நயன்தாராவின் அம்மாவிடம் சென்று கூறிவிடுகிறார்.

    இதனால் கோபமடையும் நயன்தாராவின் அம்மா, உதய் மகேஷை பயங்கரமாக திட்டிவிடுகிறார். தனக்கு இந்தமாதிரியான ஒரு அவமானத்தை ஏற்படுத்திவிட்ட ஜெயப்பிரகாஷை பதிலுக்கு தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்துகிறார் உதய் மகேஷ். இதனால் இவர்கள் இருவரின் குடும்பத்துக்குள்ளும் பிரச்சினை ஏற்படுகிறது.

    இறுதியில், சிம்பு-நயன்தாராவுக்குள்ளும் இதே பிரச்சினை எழுந்து, இறுதியில் பிரிய நேரிடுகிறது. இவர்களது திருமணமும் நின்றுவிடுகிறது. இதன்பிறகு, இவர்கள் குடும்பத்துக்குள் இருக்கும் பிரச்சினை தீர்ந்து கடைசியில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

    ஐடி கம்பெனியில் மேனேஜராக வரும் சிம்பு, ரொம்பவும் மெனக்கெடாமல் சிம்பிளான டயலாக், சிம்பிளான நடிப்பு என அசத்தியிருக்கிறார். காதல் பற்றி ஒவ்வொரு காட்சியிலும் இவர் கொடுக்கும் பஞ்ச் டயலாக்குகள் இன்றைய காதலர்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும். வழக்கமான ஆக்ஷன் காட்சிகள் என இல்லாமல், ஒரு பெண்ணிடம் அடங்கிப் போகும் வாலிபராக இந்த படத்தில் நடித்து கைத்தட்டல் பெறுகிறார்.

    நயன்தாரா ஒரு அழகான குடும்ப பெண்ணாக அனைவர் மனதிலும் எளிதாக பதிகிறார். ஆரம்பத்தில் இவரது கதாபாத்திரத்தை ஆக்ரோஷமாக காட்டினாலும் பின்னர் காதலுக்குள் சிக்கியவுடன் உருகி உருகி காதலிக்கிற சாதாரண பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்கிறார்.

    சிம்புவும், நயன்தாராவும் பேசும் காட்சிகள் திரையில் நீண்டநேரமாக வந்தாலும் படத்தை கலகலப்பாக கொண்டுபோவது சூரியின் காமெடிதான். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது இடையிடையில் சூரி கொடுக்கும் கவுண்டர் வசனங்கள் எல்லாமே கலகலப்பு. படம் முழுக்க சிம்புகூடவே பயணமாகியிருக்கும் சூரிக்கு இந்த படம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

    சிஐடியாக வரும் சந்தானம் ஒரு சில காட்சிகளே வந்தாலும், ரசிகர்களை கலகலப்பாக்கியிருக்கிறார். ஆண்ட்ரியா பிளாஷ்பேக் காட்சியிலே வந்தாலும் அழகாக இருக்கிறார். தனது கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார். சிம்பு - ஆண்ட்ரியா இடையேயான காதல் காட்சிகள் ரசிக்கும் படியாக உள்ளது. மற்றபடி, ஜெயப்பிரகாஷ், மதுசூதனன், உதய் மகேஷ், அர்ஜுனன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள்.

    சின்ன பசங்களை வைத்து படம் எடுத்துவந்த பாண்டிராஜ் ஒரு புதுமுயற்சியாக முழுக்க முழுக்க இளைஞர்களை கவரும் விதத்தில் ஒரு காதல் படத்தை எடுக்க முன் வந்து, அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். படத்திற்கு மிகப்பெரிய பலமே வசனங்கள்தான். சிம்புவும்-நயன்தாராவும் பேசிக்கொள்ளும் வசனங்கள் நிஜக்காதலர்கள் இயல்பாக எப்படி பேசிக்கொள்வார்களோ அதேமாதிரி அமைத்திருப்பது சிறப்பு. இவர்கள் பேசிக்கொள்வதை நீண்ட காட்சிகளாக வைத்திருப்பது சற்று போரடித்தாலும், இடையிடையே சூரியின் காமெடியை புகுத்தி படம் பார்ப்பதற்கு தடை ஏற்படாதவாறு கொண்டு சென்றிருக்கிறார். இதற்காக பாண்டிராஜை மீண்டும் ஒருமுறை பாராட்டலாம்.

    குறளரசன் படத்தின் மற்றொரு ஹீரோ என்றுகூட சொல்லலாம். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்பதை இந்த படத்தில் அமைத்துள்ள பின்னணி இசையின் மூலம் நிரூபித்திருக்கிறார். பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டாகியிருந்தாலும், அதை காட்சிப்படுத்தி பார்க்கும்போது மீண்டும் மீண்டும் பார்க்கவும், கேட்கவும் தோன்றுகிறது. சிம்பு-அதா சர்மாவும் இணைந்து ஆடும் பாடல் தியேட்டரில் ரசிகர்களை எழுந்து நின்று ஆடவைத்திருக்கிறது.

    அதேபோல், பாலசுப்பிரமணியெம்மின் ஒளிப்பதிவு மிகவும் கலர்புல்லாக இருக்கிறது. காட்சிகள் ஒவ்வொன்றையும் இவரது கேமரா மிகவும் தெளிவாக படமாக்கியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘இது நம்ம ஆளு’ நமக்கேத்த ஆளுதான்.
    புதுமுகங்கள் விஜயகுமார், ஹென்னா பெல்லா மற்றும் மைம் கோபி நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் ‘உறியடி’ படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
    நாயகன் விஜய்குமாரும் மூன்று நண்பர்களும் திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்கள். ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் இவர்கள், வகுப்பு நேரத்தை தவிர தாபா என்னும் பெயரில் மைம் கோபி நடத்தி வரும் பாரில் தான் அதிக நேரம் குடித்து வருகிறார்கள்.

    இந்த பாரில் விஜய் குமாரின் நண்பர்களுக்கும் உடன் படிக்கும் சக மாணவர்களுக்கும் சண்டை ஏற்படுகிறது. இதன்பிறகு ஒருநாள் இதே பிரச்சினையை வைத்து நாயகன் நண்பர்களில் ஒருவனை எதிர்தரப்பு மாணவர்கள் கொலை செய்துவிடுகிறார்கள்.

    இந்த பிரச்சினையை வைத்து அரசியலில் பெரிய புள்ளியாக நினைக்கிறார் மைம் கோபி. இதனால் மாணவர்களுக்கு ஒரு பெரிய கலவரத்தை ஏற்படுத்துகிறார். இறுதியில் இந்த கலவரம் எங்கு முடிந்தது. மைம் கோபியின் திட்டம் நிறைவேறியதா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஜய் குமார், புதுமுகம் என்று தெரியாதளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார். அதுபோல் நண்பர்களாக வருபவர்களும் தங்களுடைய நடிப்பு திறனை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பார் ஓனராக வரும் மைம் கோபி வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவருடைய நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.

    அடிதடி, வன்முறையை மையமாக வைத்தே படம் இயக்கியிருக்கிறார் இயக்குனர் விஜய் குமார். படம் ஏ சான்றிதழுடன் வெளிவந்திருக்கிறது. அதற்கேற்போல் படத்தில் சண்டை, வெட்டு குத்து என அதிகமாகவே இருக்கிறது. வன்முறைகள் அதிகமாக இருப்பதால் ஒரு கட்டத்தில் படத்தை பார்க்கும் சலிப்பை ஏற்படுத்துகிறது. சுப்ரமணியபுரம் பாணியில் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.

    ஆண்டனி தாசன், மசாலா காபி இசையில் பாடல் அனைத்தும் கேட்கும் ரகம். விஜய் குமாரின் பின்னணி இசையை ஓரளவு ரசிக்க முடிகிறது. பால் லிவிங்ஸ்டானின் ஒளிப்பதிவு படத்திற்கு கை கொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘உறியடி’ சரவெடி.
    இந்தியில் வெளியான படத்தை தமிழில் டப் செய்து ஸ்லம்டாக் கோடீஸ்வரன் என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
    அனாதையான நாயகன் குப்பை பொறுக்கும் வேலை செய்து வருகிறார். இவரது வாழ்வின் லட்சியமே எப்படியாவது, எதையாவது செய்து கோடீஸ்வரனாக வேண்டும் என்பதுதான். இதற்காக தன்னுடன் குப்பை பொறுக்கும் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா பொட்டலம் விற்பது போன்ற சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்து வருகிறார். இருப்பினும், நாயகனுக்கு மனசாட்சி உறுத்தவே, நேர்மையான முறையில் கோடீஸ்வரனாக முயற்சி செய்கிறார். இருந்தாலும் பணத்துக்காக எதையும் செய்ய துணிந்தவராக இருந்து வருகிறார்.

    இதற்கிடையில், மிகப்பெரிய செல்வந்தரின் மகளான நாயகியை அவரது அப்பாவின் நெருங்கிய நண்பர் பணத்திற்காக கடத்திக் கொண்டு போய்விடுகிறார். பின்னர், அவரது அப்பாவையும் கொலை செய்துவிடுகிறார். நாயகி ஒரு குடிசையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் விஷயம் நண்பன் மூலமாக நாயகனுக்கு தெரிய வருகிறது. அவளை கடத்தினால் அவள் மூலமாக தங்களுக்கு பெரிய தொகை கிடைக்கும் என்று அவளை கடத்த திட்டம் போடுகிறார்கள்.

    அதன்படி, நாயகியை கடத்தி ஒரு காட்டுக்குள் கொண்டுபோய் ரகசிய இடத்தில் வைக்கிறார்கள். நாயகன் மற்றும் அவரது நண்பர்கள்தான் கடத்தியிருக்கிறார்கள் என்ற விஷயம் வில்லன் கும்பலுக்கு தெரிகிறது. இதனால், அவர்களை தேடி அலைகிறார்கள். அதேகட்டத்தில், போலீசும் நாயகியையும், அவளை கடத்திய கும்பலையும் தேடி அலைகிறது.

    வில்லன் கும்பலுக்கு நாயகியை தாங்கள்தான் கடத்திய விவரம் தெரிந்துவிட்டதை அறிந்துகொண்ட நாயகன், அவளை விட்டுவிட்டு எப்படியாவது தப்பித்துவிட நினைக்கிறாள். ஆனால், நாயகியோ தன்னை வில்லன் கும்பலிடமிருந்து காப்பாற்றினால், அவன் கேட்கும் தொகையை கொடுப்பதாக அவனிடம் கூறுகிறாள்.

    பணத்துக்காக எதையும் செய்ய துணியும் நாயகன், அவளை காப்பாற்றி பெரிய கோடீஸ்வரனாகும் தனது லட்சியத்தை அடைந்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

    இந்தியில் வெளிவந்த அதர பழசான ஒரு படத்தை தமிழில் டப் செய்து ரிலீஸ் செய்திருக்கிறார்கள். ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஆஸ்கார் விருது வென்ற படத்தின் தலைப்பை தமிழில் வைத்துக் கொண்டு வெளிவந்த படம் என்பதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்று எண்ணி வைத்திருக்கிறார்கள். ஆனால், கொஞ்சம்கூட இந்த படத்தை நம்மால் ரசிக்க முடியவில்லை. படத்தின் கதாநாயகன் முதற்கொண்டு நடித்திருக்கும் எந்தவொரு கதாபாத்திரத்திற்கும் நடிப்பு என்பது சுத்தமாக வரவில்லை. அனைவரின் நடிப்பும் மிகவும் செயற்கையாக இருக்கிறது. அதனால், படத்தை துளியளவும் ரசிக்க முடியவில்லை.

    படத்தில் பணத்துக்காக எதையும் செய்ய துணியும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகன், பணத்துக்காக கூவம் ஆற்றில் குதிப்பது, லுங்கியை கழட்டிப்போட்டு ஜட்டியோடு நடுரோட்டில் டான்ஸ் போடுவது என அனைத்து சாகசங்களையும் செய்திருக்கிறார். பார்ப்பதற்கு காமெடியாக இருக்கிறதே தவிர, ரசிப்பதற்குத்தான் முடியவில்லை.

    படத்தின் இயக்குனர் கதாபாத்திரங்கள் தேர்வில் இருந்து ஒவ்வொரு விஷயத்திலும் கோட்டைவிட்டிருக்கிறார். பாடல்கள் எல்லா படத்தில் இருந்தும் காப்பியடித்து போட்டிருக்கிறார்கள். பின்னணி இசை ஒரே இரைச்சல். ஒளிப்பதிவு தெளிவாக இல்லை.

    மொத்தத்தில் ‘ஸ்லம்டாக் கோடீஸ்வரன்’ ரசிக்க முடியவில்லை.
    சூப்பர் ஹீரோ படமான எக்ஸ் மென் பட வரிசையில் 9-வது பாகமாக வெளிவந்திருக்கும் படம் எக்ஸ் மென் அப்போகலிப்ஸ். படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
    சூப்பர் ஹீரோ படமான எக்ஸ் மென் பட வரிசையில் 9-வது பாகமாக வெளிவந்திருக்கும் படம் எக்ஸ் மென் அப்போகலிப்ஸ். பல நூற்றாண்டுகளாக பூமிக்கு அடியில் கிடக்கும் அப்போகலிப்ஸ், அதிலிருந்து மீண்டு புதிய உலகத்திற்கு திரும்பி வருகிறார். புதிய உலகத்தின் மாறுதல் அவருக்கு பிடிக்காமல் போகவே, இந்த உலகத்தை அழித்து தனக்கேற்றாற்போல் அமைக்க நினைக்கிறார்.

    முந்தைய நூற்றாண்டில் தனக்கு உறுதுணையாக இருந்த 4 ம்யூட்டன்ஸ்களைப் போலவே இந்த புதிய உலகத்திலும் தனக்கு தேவையான 4 ம்யூட்டன்ஸ்களை தேடி புறப்படுகிறார். இறுதியில், 3 ம்யூட்டன்ஸ்களை தேடி கண்டுபிடிக்கும் அவர் 4-வது ம்யூட்டன்ஸை தேடிச் செல்லும்போது, அவரது கண்ணில் மேக்னடோ படுகிறார்.

    மேக்னடோ, பழைய சம்பவங்கள் இனிமேல் தனது வாழ்க்கையில் நடக்கக்கூடாது என்று முடிவெடுத்து, தனது குடும்பத்துடன் ஒரு கிராமத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவர் பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத விதமாக அவரது சக்தியை பயன்படுத்தும் நிலைமை ஏற்பட்டு விடுகிறது. இவர் ம்யூட்டன் என்று தெரிந்ததும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.

    மேக்னடோ இரும்பு சம்பந்தப்பட்ட எதையும் கட்டுப்படுத்தும் சக்தியை படைத்தவர் என்பதால், அவரை எதிர்க்க போலீஸ் துப்பாக்கிக்கு பதிலாக மரத்தினாலான அம்புகளை எடுத்துச் செல்கின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக நடக்கும் விபத்தில் மேக்னோடாவின் மகளும், மனைவியும் இறக்கிறார்கள். இதையடுத்து, கோபமடைந்த மேக்னடோ மீண்டும் தனது பழைய பாதையை நோக்கி பயணிக்கிறார்.

    மேக்னடோவை சந்திக்கும் அப்போகலிப்ஸ் அவரது பலத்தை இன்னும் அதிகரித்து தன்வசம் சேர்த்துக்கொண்டு புதிய உலகத்தை அழிக்க புறப்படுகிறார். இறுதியில், இவர்கள் இணைந்து இந்த உலகத்தை அழித்து அவர்களுக்கேற்ற உலகத்தை அமைத்துக் கொண்டார்களா? இல்லையா? என்பது மீதிக்கதை.

    ‘எக்ஸ் மேன்’ படவரிசையில் கடைசியாக வந்த ‘டெட் பூல்’ படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது. அதேபோல், எக்ஸ் மேன் அப்போகலிப்ஸ் படத்தை தயாரித்த மார்வலின் கடைசி படமான கேப்டன் அமெரிக்கா சிவில் வார் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆகையால், இந்த படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த எதிர்பார்ப்பை இந்த படம் ஓரளவுக்கு நிவர்த்தி செய்கிறது.

    கடந்த எக்ஸ் மென் படங்களைப் போலவே இந்த படத்திலும் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் வருகின்றன. கிட்டத்தட்ட 16 வருடங்களாக இப்படத்தின் ஒவ்வொரு பாகங்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது. எக்ஸ் மென் வரிசையை தொடங்கிய பிரையன் சிங்கர் தற்போது மீண்டும் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

    காமிக்ஸ் புத்தகங்களில் பெரிய வில்லனாக சித்தரிக்கப்பட்ட அப்போகலிப்ஸை இந்த படத்தில் பார்க்கும்போது அந்தளவுக்கு பெரிய வில்லனாக காட்டவில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது. மற்றபடி, படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் பிரம்மாண்டமாக இருக்கிறது. மேக்னடோவின் பின்னணி காட்சிகள் எல்லாம் சுவாரஸ்யமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மற்ற பாகங்களில் இருப்பதைவிட இதில் புதுப்புது கதாபாத்திரங்கள் வருகின்றன.

    அவற்றையெல்லாம் இயக்குனர் அழகாக வேலை வாங்கியிருக்கிறார். முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை. கிளைமாக்ஸ் காட்சி எல்லோரும் யூகிக்கும்படி இருப்பதால் சுவாரஸ்யம் இல்லாமல் படம் முடிகிறது.

    மொத்தத்தில் ‘எக்ஸ் மென்-அப்போகலிப்ஸ்’ ரசிகர்களுக்கான படம்.
    விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் படம் ‘மருது’. இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
    ராஜபாளையம் மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் விஷால். சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்த இவரை அப்பத்தாவான கொள்ளப்புள்ளி லீலாதான் வளர்த்து வருகிறார். இவருடைய நண்பரான சூரியும், இவருடனே வளர்ந்து வருகிறார். அப்பத்தாவை சாமியாகவே மதிக்கும் விஷால், அவர்மீது மிகுந்த அன்பும், அவர் பேச்சுக்கு எதிர்பேச்சு பேசாத செல்லப்பிள்ளையாக இருக்கிறார்.

    இந்நிலையில், ஒருநாள் கடையில் இருக்கும்போது, அங்கு வரும் ஸ்ரீதிவ்யா மீது தவறுதலாக விஷாலின் கைபடவே, ஸ்ரீதிவ்யா விஷாலை கன்னத்தில் அறைந்து விடுகிறார். கோபமடைந்த அப்பத்தா, ஸ்ரீதிவ்யாவை பதிலுக்கு அறைகிறார். இதனால், இவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது.

    இருப்பினும், ஸ்ரீதிவ்யாவின் துணிச்சல் அப்பத்தாவுக்கு பிடித்துப்போக தன் பேரனுக்கு அவள் பொருத்தமாக இருப்பாள் என்று சூரியிடம், விஷாலை எப்படியாவது ஸ்ரீதிவ்யாவை காதலித்து திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யும்படி கூறுகிறார். சூரி, விஷாலையும், ஸ்ரீதிவ்யாவையும் சேர்த்து வைக்க பல முயற்சி செய்து, ஒருவழியாக இரண்டு பேரையும் காதலிக்க வைக்கிறார்.

    இந்நிலையில், ராஜபாளையம் பகுதியில் மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்து வரும் ராதாரவியின், வலதுகையாக செயல்பட்டு வரும் ஆர்.கே.சுரேஷ், எம்.எல்.ஏ. ஆவதற்கு முயற்சி செய்து வருகிறார். இதற்கிடையில், அந்த பகுதியில் நடக்கும் கொலைகளுக்கு சுரேஷ்தான் காரணம் என்று ஸ்ரீதிவ்யாவின் அப்பா மாரிமுத்து கோர்ட்டில் வழக்கு தொடுக்கிறார்.

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்தால் தனது எம்.எல்.ஏ. கனவு பலிக்காமல் போய்விடும் என்பதால், ஆர்.கே.சுரேஷ் மாரிமுத்துவிடம் வழக்கை வாபஸ் வாங்கச் சொல்கிறார். ஆனால், மாரிமுத்துவோ அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் மாரிமுத்துவை கொலை செய்ய ஆர்.கே.சுரேஷ் முடிவெடுக்கிறார்.

    இந்த விஷயம் விஷாலுக்கு தெரிய வந்ததும் ஸ்ரீதிவ்யாவுக்காக ஆர்.கே.சுரேஷை எதிர்க்க புறப்படுகிறார். இறுதியில், ஆர்.கே.சுரேஷை எதிர்த்து ஸ்ரீதிவ்யாவையும் அவளது அப்பாவையும் விஷால் காப்பாற்றினாரா? ஊரே எதிர்க்க பயப்படும் ஆர்.கே.சுரேஷை ஸ்ரீதிவ்யாவின் அப்பா மட்டும் எதிர்க்க காரணம் என்ன? என்பதே மீதிக்கதை.

    விஷால், கறுப்பு தோலும், தொடை தெரியும் அளவுக்கு கைலி உடுத்தி, ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளிக்குண்டான உடல்வாகுடன் காட்சியளிக்கிறார். இவர் அந்த கதாபாத்திரமாக நடித்திருக்கிறார் என்பதைவிட வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அதேபோல், அப்பத்தா மீது பாசம் காட்டும் பேரனாகவும், பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் இளைஞனாகவும், வில்லனை எதிர்க்கும் விதத்தில் சீறிப் பாயும் புலியாகவும் நடிப்பில் சபாஷ் பெறுகிறார்.

    ஸ்ரீதிவ்யா கிராமத்து பெண்ணாக மனதில் பதிகிறார். இவருக்கு படத்தில் பெரிதாக வசனங்கள் இல்லாவிட்டாலும், துணிச்சலான பெண்ணாக நடித்து அசர வைக்கிறார். விஷாலின் உயரத்துக்கு ஸ்ரீதிவ்யா பொருத்தமாக இருப்பாரா? என்று யோசித்தாலும், ஓரளவுக்கு நிறைவை கொடுத்திருக்கிறார்.

    சூரி, வழக்கமான காமெடியில் கலக்கியிருந்தாலும், இதில் குணச்சித்திர கதாபாத்திரத்தை கலந்து நடித்து அசத்தியிருக்கிறார். குறிப்பாக, இறுதிக் காட்சியில் அப்பத்தாவுக்காக இவர் கதறி அழும் காட்சிகள் எல்லாம் சிறப்பு. மென்மையான வில்லனாக வரும் ராதாரவி நடிப்பில் மிரள வைக்கிறார். அவருடைய முடி ஸ்டைல், முகத்தோற்றம் என அனைத்தும் கவரும் படியாக இருக்கிறது.

    ஆர்.கே.சுரேஷ் படத்தின் இன்னொரு ஹீரோ என்றே சொல்லலாம். அந்தளவுக்கு வில்லத்தனத்தில் அனைவரையும் மிரட்டியிருக்கிறார். படத்தில் பல காட்சிகளில் விஷாலை மிஞ்சும் வசனங்களையும், நடிப்பையும் பதிவு செய்திருக்கிறார். அப்பத்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகை லீலா, நம்ம வீட்டிலும் இப்படி ஒரு அப்பத்தா இருந்தால் எப்படி இருக்கும்? என்ற உணர்வை கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் ஹீரோயினைவிட முக்கியமான கதாபாத்திரம் இவருடையது. படம் முழுக்க இவருடைய கதாபாத்திரமே ஓங்கியிருக்கிறது. அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். இறுதிக்காட்சியில் கண்கலங்க வைக்கிறார்.

    ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’ போன்ற மண் சார்ந்த படங்களை உணர்ச்சிப்பூர்வமாக கொடுத்த முத்தையாவின் படைப்பில் வெளிவந்துள்ள படம்தான் இந்த ‘மருது’. ஒரு சாதாரண மூட்டை தூக்கும் தொழிலாளியை மையப்படுத்தி இந்த படைப்பை உருவாக்கியிருக்கிறார். முத்தையாவின் முந்தைய படங்களில் அவரது வசனம்தான் படத்தின் ஹீரோ. அதேபோல், இந்த படத்திலும் வசனங்கள்தான் படத்தின் முதல் ஹீரோ. அதேபோல், அந்த வசனங்களை அதற்கேற்ற கதாபாத்திரங்கள் பேசும்போது நமக்கே ஒருவித உணர்ச்சி பெருக்கெடுக்கிறது. விஷாலை ஆர்.கே.சுரேஷ் ஓரங்கட்டிவிடுவாரோ என்ற பயம் படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டாலும், யாருக்கும் பாதகம் ஏற்பட்டு விடாதவாறு சரிசமமான திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார்.

    இமானின் இசையில் அமைந்துள்ள பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பக்கபலம். ‘சூறாவளிடா....’ ‘அக்கா பெத்த ஜக்கா வண்டி’ ஆகிய பாடல்கள் தியேட்டரில் துள்ளி ஆட வைக்கிறது. ‘கருவக்காடு கருவாயா’ பாடல் அழகான மெலோடி ரகம். பின்னணி இசையிலும் தன் பங்குக்கு வெளுத்து வாங்கியிருக்கிறார். படத்திற்கு மற்றொரு பெரிய பலம் வேல்ராஜின் ஒளிப்பதிவு. ராஜபாளையத்தின் வாழ்வியலை இவரது கேமரா அழகாக நம் முன் காட்டியிருக்கிறது. சண்டைக்காட்சிகளில் இவரது கேமரா சுழன்று வேலை பார்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘மருது’ வெற்றி பெறுவான்.
    நரேன்-விஜயலட்சுமி மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள ‘கத சொல்லப்போறோம்’ படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
    நரேன்-விஜயலட்சுமி தம்பதியருக்கு மருத்துவமனையில் ஒரு அழகான பெண் குழந்தை பிறக்கிறது. பிறந்ததும் அந்த குழந்தையை வேறொரு பெண் திருடி சென்றுவிடுகிறார். அந்த பெண்ணின் முகத்தை பார்த்திருக்கும் நரேன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். போலீசாரும் அந்த பெண்ணை நரேனுடன் சேர்ந்து தேடி வருகின்றனர்.

    இந்நிலையில், போலீசாருடன் நரேன் ரோட்டில் நின்று கொண்டிருக்கும்போது, குழந்தையை கடத்திய அந்த பெண் இவர்களை பார்த்து ஓட்டம் பிடிக்கிறார். இதை பார்த்த நரேனும், போலீசாரும் அந்த பெண்ணை துரத்துகின்றனர். அப்போது, அந்த பெண் எதிரில் வந்த வாகனத்தில் மோதி கீழே விழுகிறார். அவளை நரேன் மருத்துவமனையில் அனுமதிக்கிறார். அங்கு அந்த பெண் கோமா நிலைக்கு போகிறார்.

    தனது குழந்தையை கடத்திய அந்த பெண்ணின் கையில் குழந்தை இல்லாததால் நரேன் என்ன செய்வதென்று யோசிக்கிறார். மேலும், அந்த பெண் கோமா நிலையில் இருந்து திரும்பினால்தான் தனது குழந்தை பற்றிய விவரம் தெரியும். அதனால், அந்த பெண்ணுக்கு தன் சொந்த செலவிலேயே சிகிச்சை செய்து வருகிறார். 8 வருடங்களாக அந்த பெண் கோமா நிலையில் இருந்து பின் இறந்துபோகிறார்.

    தனது குழந்தை கடைசிவரை எங்கிருக்கிறது என்று தெரியாமல் போனதால் மிகவும் வருத்தத்துடன் இருக்கிறார் நரேன். இந்நிலையில், ஒரு அனாதை ஆசிரமத்தில் நரேனின் குழந்தை வளர்வதாக அவருக்கு தகவல் வருகிறது. அந்த குழந்தை நரேனின் குழந்தைதானா? அந்த குழந்தை எப்படி அங்கு சென்றது? என்பதை அழகான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார்கள்.

    நரேன் தனது அனுபவ நடிப்பால் மிகவும் கவர்கிறார். மகளை தொலைத்த அப்பாவின் வேதனையை தனது நடிப்பால் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல், விஜயலட்சுமியும் தனது நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார். குழந்தையை பறிகொடுத்த வேதனையில் இவர் துடிக்கும் காட்சிகள் எல்லாம் அற்புதம்.

    மற்றபடி படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது குழந்தை நட்சத்திரங்களைத்தான். அவர்கள் எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஆசிரமத்தில் வளரும் குழந்தைகளுக்கும், வீட்டில் பெற்றோருடன் வளரும் குழந்தைகளுக்கும் போட்டி நடைபெறும் காட்சிகளில், ஆசிரமத்தில் வளரும் குழந்தைகளின் வேதனையை அவர்கள் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்கள்.

    தவறானவர்களின் கையில் கிடைத்தால் பெற்றோர்கள் இருந்தும் அந்த குழந்தை தனது மகிழ்ச்சி மற்றும் உரிமையை பறிகொடுக்க நேரிடும் என்பதை இப்படத்தில் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் கல்யாண் குமார். மேலும், ஆசிரமங்களில் வளரும் குழந்தைகளின் வேதனையையும், பிஞ்சு மனதிலும் மிகப்பெரிய நல்லெண்ணங்கள் உண்டு என்பதையும் இப்படத்தில் ஆழமாக சொல்லியிருக்கிறார். அவருக்கு பாராட்டுக்கள். அதேபோல், ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடித்திருப்பவர்களை நன்றாக வேலை வாங்கியிருப்பதுதான் சிறப்பு.

    பவன் குமார் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசை தேவைக்கேற்றாற்போல் இருக்கிறது. ஜெமின் ஜாம் அயானத் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.

    மொத்தத்தில் ‘கத சொல்லப்போறோம்’ கேட்கலாம்.
    ×