என் மலர்tooltip icon

    தரவரிசை

    புதுமுகம் ராம்குமார், அருந்ததி ஆகியோர் நடிப்பில் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் ‘அர்த்தநாரி’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
    சென்னையில் நாசர் நடத்தி வரும் ஆசிரமத்தில் வளர்ந்தவர் நாயகன் ராம்குமார். இவரின் அப்பா, அம்மாவை சிறுவயதில் ரவுடிகள் கொன்றதால், நாசர் அவரை அரவணைத்து தனக்குப் பிறகு அந்த ஆசிரமத்தை கவனிக்கும் அளவிற்கு ஆளாக்கி இருக்கிறார்.

    இந்த நிலையில், போலீஸ் அதிகாரியாக இருக்கும் நாயகி அருந்ததியுடன் ராம்குமாருக்கு மோதல் ஏற்படுகிறது. பின்னர் ராம்குமார் ஆதரவற்றவர் என்று தெரிந்ததும் அவர் மீது அனுதாபப்படுகிறார் அருந்ததி. இந்த பழக்கம் நாளடைவில் இவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்த, இருவரும் காதலர்களாகிறார்கள்.

    இந்த நிலையில், நாசர் ஒருநாள் இறந்து போகிறார். இவர் இயற்கை மரணம் அடைந்துவிட்டதாக நினைத்திருந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று அருந்ததி மூலம் தெரிந்துக் கொள்கிறார் ராம்குமார். இதனால், நாசரை கொலை செய்தவர்களை பழிவாங்கத் துடிக்கிறார். ஆனால், அருந்ததியோ கொலை செய்தவர்களை கண்டுபிடித்து சட்டப்படி தண்டிக்க முயற்சிக்கிறார்.

    இறுதியில் கொலையாளியை கண்டுபிடித்தது யார்? கொலையாளியை ராம்குமார் பழி வாங்கினாரா? அருந்ததி சட்டப்படி தண்டனை வாங்கித் தந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ராம்குமார், முதல் பாதியில் வெகுளித்தனமான நடிப்பையும், பிற்பாதியில் ஆக்‌ரோஷமான நடிப்பையும் வெளிப்படுத்தி கலக்கியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அருந்ததி, கவர்ச்சியிலும், போலீஸ் அதிகாரியாகவும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். போலீஸ் அதிகாரிக்குண்டான கம்பீரத்துடன் படம் முழுக்க வருகிறார்.

    ஆசிரமம் நடத்துபவராக வரும் நாசர், தன்னுடைய அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். வில்லனாகவும், காமெடியனாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார் மொட்டை ராஜேந்திரன். மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    கிரைம் திரில்லர் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுந்தர இளங்கோவன். படத்தை போரடிக்காமல் விறுவிறுப்புடன் கொண்டு சென்றிருக்கிறார். அருந்ததிக்கு ஒரு ஹீரோ அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். சுவாரஸ்யமான காட்சிகள் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    செல்வ கணேஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியை திரில்லர் கதைக்கு ஏற்றாற்போல் இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ரஞ்சன் ராவ் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘அர்த்தநாரி’ ஆக்ரோஷம்.
    சந்தானம் நடிப்பில் திகில் கலந்த காமெடி படமாக உருவாகியுள்ள ‘தில்லுக்கு துட்டு’ படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படம் காமெடியுடன் திகிலை ஏற்படுத்தியுள்ளதா? என்பதை கீழே பார்ப்போம்...
    சிவன் கொண்ட மலை என்ற ஊரின் மலை மீது மர்ம பங்களா ஒன்று இருக்கிறது. பேய் இருப்பதால் அந்த ஊர் மக்கள் யாரும் அந்த பங்களாவுக்குள் போகவே பயப்படுகிறார்கள்.

    இது ஒருபுறம் இருக்க, சென்னையில் பெற்றோர் மற்றும் மாமா கருணாசுடன் வாழ்ந்து வருகிறார் சந்தானம். கருணாஸ் வைத்திருக்கும் லோடு வேனுக்கு தவணை கட்டாததால் கடன் கொடுத்த சேட்டு, அந்த வேனை எடுத்துச் சென்றுவிடுகிறார். இதுபற்றி கருணாஸ் சந்தானத்திடம் முறையிட, சந்தானம் பதிலுக்கு சேட்டுவின் காரை தூக்குவதற்காக சேட்டு வீட்டுக்கு கருணாசுடன் செல்கிறார். அப்போது, சேட்டு மகளான நாயகி சனாயா இவர்களை போலீசிடம் மாட்டி விடுகிறாள்.

    இதனால் கடுப்பான சந்தானம் நாயகியை எப்படியாவது பழிவாங்க வேண்டுமென்று துடிக்கிறாள். அதற்குள் நாயகி சனாயா, சந்தானத்தை தேடி அவரது வீட்டுக்கே வருகிறாள். அப்போதுதான் இருவரும் சிறுவயதில் ஒன்றாக படித்தவர்கள் என்பதும், இருவரும் ஒருவருக்கொருவர் நேசித்தவர்கள் என்பதும் தெரிகிறது. இதன்பிறகு, இருவரும் காதலிக்கிறார்கள்.

    இந்த விஷயம் நாயகியின் அப்பாவுக்கு தெரிய வருகிறது. சந்தானம் வசதியானவன் என்று நினைத்து இவர்களை சேர்த்து வைக்க நினைக்கிறார். பின்னர், சந்தானம் வசதியானவர் இல்லை என்று தெரியவந்ததும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதன்பிறகு, நாயகிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார். அப்போது சந்தானம் உள்ளே புகுந்து அதை கலைத்துவிடுகிறார்.

    சந்தானத்தை நேரடியாக எதிர்க்க முடியாத சேட்டு, ரவுடியான நான் கடவுள் ராஜேந்திரனின் உதவியை நாடுகிறார். சந்தானத்தை தீர்த்துக் கட்டுவதற்காக ராஜேந்திரன் பலே திட்டம் ஒன்றை போடுகிறார். அதன்படி, சந்தானத்திற்கு, சனாயாவை திருமணம் செய்து கொடுப்பதாக நம்ப வைத்து, சிவன் கொண்ட மலையில் இருக்கும் பங்களாவுக்கு அழைத்துச் சென்று அவரை கொலை திட்டம் போடுகிறார்கள்.

    அதன்படி, நாயகியின் அப்பா, சந்தானத்தை அந்த பங்களாவுக்கு குடும்பத்தோடு அழைத்து செல்கிறார். ஏற்கெனவே, பேய் இருக்கும் அந்த பங்களாவில் ராஜேந்திரனின் திட்டம் நிறைவேறியதா? அல்லது அங்கிருந்த பேய் இவர்களை ஆட்டுவித்ததா? என்பதை நகைச்சுவையுடன் திகில் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.


    சந்தானம், முந்தைய படங்களில் இருந்து இந்த படத்தில் ஹீரோவுக்குண்டான தகுதியில் கூடியிருக்கிறார். குறிப்பாக, நடனம், சண்டை காட்சிகள் ஆகியவற்றை ஒரு மாஸ் ஹீரோவுக்கு இணையாக செய்து காட்டியிருக்கிறார். இவருடைய தோற்றமும் அனைவரையும் ரசிக்க வைக்கிறது. படத்தில், ஒவ்வொரு காட்சியிலும் இவர் கொடுக்கும் கவுண்டர் வசனங்கள் திகில் படம் என்பதையும் தாண்டி காமெடி சரவெடியாக வெடித்திருக்கிறது.

    நாயகி சனாயா புதுமுகம் என்றாலும், நடிப்பில் அது தெரியவில்லை. அவரது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து ரசிக்க வைத்திருக்கிறார். சேட்டு பெண் என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். படம் முழுக்க சந்தானத்துடன் பயணிக்கும் கருணாஸ், அவருடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி கலகலப்பூட்டியிருக்கிறது. பேய்க்குப் பயந்து இவர் நடுங்கும் காட்சிகள் எல்லாம் நம்மையும் அறியாமல் சிரிப்பை வரவழைத்திருக்கிறது.

    சேட்டுவாக வரும் பாலிவுட் நடிகர் சௌரப் சுக்லாவுக்கு பொருத்தமான கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார். ஹைடெக்கான ரவுடியாக வரும் மொட்டை ராஜேந்திரன், சந்தானத்தை கொல்வதற்கு போடும் திட்டத்திலிருந்து இவரது நகைச்சுவை கலாட்டா ஆரம்பிக்கிறது. படத்தின் இறுதிவரை நகைச்சுவைக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார். குறிப்பாக உண்மையான பேயிடம் இவர் அடிவாங்கும் காட்சிகள் உச்சக்கட்ட காமெடி.

    சந்தானத்துக்கு அப்பாவாக வரும் ஆனந்த்ராஜ் ஹாலிவுட்டுக்கு இணையாக போடும் கெட்டப்புகள் எல்லாம் அசத்தல். நகைச்சுவையிலும் கலக்கியிருக்கிறார்.

    சின்னத்திரையில் வந்த ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் பல படங்களை கிண்டல், கேலி செய்த ராம்பாலா, ஒரு முழுநீள நகைச்சுவை படத்தை திகில் கலந்து சொல்லியிருக்கிறார். குறைந்த கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு படம் முழுக்க நகைச்சுவை விருந்து கொடுப்பது என்பது சவாலான விஷயம். அதை இயக்குனர் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

    சந்தானத்தை மாஸ் ஹீரோவாக காட்டும் வகையில் ஸ்டண்ட் மாஸ்டர் ஹரி தினேஷ் சண்டைக்காட்சிகளை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். காமெடி படத்திலும் திகில் கலந்து ரசிகர்களை பயமுறுத்தவும் செய்திருக்கிறார்.

    தமன் இசையில் பாடல்கள் சூப்பர். பின்னணி இசையிலும் திகிலூட்டியிருக்கிறார். தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவு காட்சிகளை கலர்புல்லாக காட்டியிருக்கிறது. திகிலூட்டும் காட்சிகளில் இவரது கேமரா கோணங்கள் நம்மை பயமுறுத்தியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘தில்லுக்கு துட்டு’ த்ரில்லான ஹிட்டு.
    சிவா, சென்ட்ராயன், பவர் ஸ்டார் ஆகியோர் நடிப்பில் கலகலப்பான காமெடி படமாக உருவாகியிருக்கும் படம் ‘அட்ரா மச்சான் விசிலு’. இப்படம் இன்று வெளியாகியுள்ளது. படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்...
    மதுரையில் வசிக்கும் சிவா, சென்ட்ராயன், அருண் பாலாஜி மூவரும் பவர் ஸ்டாரின் தீவிர ரசிகர்கள். மூன்று பேருக்கும் போதியான வருமானம் இல்லாவிட்டாலும், பவர் ஸ்டார் படம் வெளிவரும் போதெல்லாம் கடன் வாங்கியாவது கட்அவுட் வைப்பது போஸ்டர் அடிப்பது, பாலாபிஷேகம் செய்வது என ஆயிரக்கணக்கில் செலவு செய்து வருகின்றனர்.

    இதற்கிடையில் சிவாவும் நாயகி நைனா சர்வாரும் காதலித்து வருகிறார்கள். எந்த வேலைக்கும் செல்லாத சிவாவுக்கு அவ்வப்போது பண உதவிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில், அப்புக்குட்டி ரசிகர்களுக்கும், பவர் ஸ்டாரின் ரசிகர்களான நண்பர்களுக்கும் அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. இதை, அவ்வப்போது போலீஸ் அதிகாரியான ராஜ்கபூர் பஞ்சாயத்து செய்து தீர்த்து வைக்கிறார்.

    ஒருமுறை ராஜ்கபூர், சிவா மற்றும் அவரது நண்பர்களுக்கு உங்களை வைத்து உங்கள் தலைவர் பெரிய நிலைக்கு ஆளாகிவிட்டார். அவரை வைத்து நீங்கள் ஏன் பெரிய நிலைக்கு வரக்கூடாது. அவருடைய படங்களை வாங்கி, மதுரை ஏரியாவில் விநியோகம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறுகிறார். நண்பர்களும் அவரது அறிவுரையை ஏற்று, பணத்தை திரட்டி பவர் ஸ்டாரின் மேனேஜரான சிங்கமுத்துவிடம் ஒப்படைக்கிறார்கள்.

    சிங்கமுத்துவும் மதுரை ஏரியா விநியோகஸ்தர் உரிமையை சிவா மற்றும் அவரது நண்பர்களுக்கு கொடுக்கிறார். ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இதனால் நண்பர்கள் நஷ்டமடைகிறார்கள். இழந்த பணத்தை திருப்பி கேட்பதற்காக பவர் ஸ்டாரை நேரில் சந்திக்கிறார்கள். ஆனால், பவர் ஸ்டாரோ பணத்தை திருப்பி கொடுக்க முடியாது என கூறி இவர்களை அவமானப்படுத்தி திருப்பி அனுப்புகிறார்.

    இதனால் மனமுடைந்த நண்பர்கள் தங்கள் பணத்தை பவர் ஸ்டாரிடமிருந்து மீட்டு அவருக்கு நல்ல பாடம் புகட்ட எண்ணுகிறார்கள். இதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

    பவர் ஸ்டார் இந்த படத்தில் வில்லன் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிகராகவே வரும் அவர் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இவர் படத்தில் பேசும் பஞ்ச் டயலாக்குகளுக்கு ரசிகர்களின் விசில் சத்தம் கண்டிப்பாக காதை பிளக்கும். மற்றவர்களை காப்பியடித்து நடித்தாலும், அதில், தனக்கு என்ன வருமோ அதை சரியாகவே செய்திருக்கிறார்.

    சிவா இன்னும் கொஞ்சம் அவரது முகத்தில் நடிப்பை வரவழைக்க முயற்சிக்கலாம். ரொமான்ஸ், சோகம், பழி வாங்க துடிப்பது என ஒவ்வொரு இடத்திலும் ஒரேமாதிரியான முகபாவனையில் நடித்திருந்தாலும் டைமிங் காமெடியால் ரசிக்க வைக்கிறார். இவர் ஆடும் நடனத்துக்காக இவருக்கு அடுத்த பாக்யராஜ் என்று பட்டம் கொடுக்கலாம் என்பதுபோல் இருக்கிறது. சென்ட்ராயன் இதுவரையிலான படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் ரசிக்க வைத்தவர், இந்த படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார். தனது கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

    மற்றொரு நாயகனாக வரும் அருண் பாலாஜியும் தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை கொடுத்திருக்கிறார். நாயகி நைனா சர்வாரும் அவருடைய பகுதியை சிறப்பாகவே செய்திருக்கிறார். பார்க்க கொழுக் மொழுக்வென கவர்ச்சியிலும் கிறங்கடித்திருக்கிறார். பவர்ஸ்டாரின் மேனேஜராக வரும் சிங்கமுத்து, அரசியல் நையாண்டியையும் உள்ளே புகுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். மற்றபடி, படத்தில் நடித்திருக்கும் சிறு சிறு கதாபாத்திரங்களும் நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

    ‘கச்சேரி ஆரம்பம்’ என்ற அதிரடியான ஒரு படத்தை  கொடுத்த இயக்குனர் திரைவண்ணன் முழுக்க முழுக்க காமெடியாக ஒரு படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். முதல் பாதி பவர் ஸ்டாரின் காமெடி என கதை நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் சிங்கமுத்து மற்றும் சிவாவின் நண்பர்கள் செய்யும் லூட்டி கலகலப்பூட்டியிருக்கிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

    என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர். குறிப்பாக, ‘யாரு யாரு இவ’ பாடல் ரசிகர்களை துள்ளி ஆட்டம் போட வைக்கிறது. ‘தேவதை தேவதை’ பாடல் அழகான மெலோடி என ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு சிறப்பாக கொடுத்திருக்கிறார். காசி விஸ்வா ஒளிப்பதிவு கண்ணுக்கு விருந்தாக இருக்கிறது.

    மொத்தத்தில் ‘அட்ரா மச்சான் விசிலு’ விசிலடிக்கலாம்.
    தி லெஜன்ட் ஆப் டார்சான் என்ற ஆங்கிலப் படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
    1884ம் ஆண்டு பெர்லின் மாநாட்டில் அரசியல் புள்ளிகள் ஆப்பிரிக்கன் காங்கோவை ஆளுக்கொரு பகுதியாக பிரித்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள். பெல்ஜியம் அரசர் லியோபோல்ட் யானை தந்தம், கனிம வளங்கள் உள்ள காங்கோ நதி பகுதியை எடுத்துக் கொள்கிறார்.

    அந்த பகுதியை மேம்படுத்துதளில் லியோபோல்ட் ஐந்து ஆண்டுகளில் மிகவும் கடனாளியாக மாறுகிறார். தன்னுடைய ராணுவத்திற்கு கூட சம்பளம் கொடுக்க முடியாத நிலைமைக்கு தள்ளப்படுகிறார். இதனால் தன்னுடைய இடது கையான லியோன்ரோம் அழைத்து ஓபர் புகர் வைரத்தை எடுத்து வர சொல்லி அனுப்புகிறார்.

    இதற்காக லியான்ரோம் காங்கோ காட்டுப் பகுதிக்கு செல்கிறார். அங்கு காட்டு வாசிகளின் பிடியில் லியோன்ரோம் சிக்குகிறார். காட்டுவாசி தலைவன், வைரம் வேண்டும் என்றால் காட்டில் இருந்து நகரத்திற்கு குடி பெயர்ந்த டார்சானை அழைத்து வரும்படி கேட்கிறார்கள். அதன்படி லியோன்ரோமும் டார்சனை அழைத்து வர செல்கிறார். ஆனால், அதற்கு பதிலாக டார்சானின் மனைவியை காட்டுக்கு அழைத்து வந்து விடுகிறார்.

    இறுதியில் டார்சான் காட்டுக்குச் சென்று தன் மனைவியை மீட்டாரா? லியான்ரோமுக்கு வைரம் கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    காட்டை விட்டு நாட்டுக் சென்ற டார்சான், மறுபடியும் காட்டு வரும் படியாக படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் டேவிட் யாட்ஸ். திரைக்கதையில் சிறு தோய்வு இருந்தாலும், நடிகர்கள், விஷுவல் எபெக்ட்ஸ், கிரியேட்டிவ் ஆகியவற்றில் டார்சான் முத்திரை பதிக்கிறது.

    டார்சான் வேடத்தில் அலெக்சாண்டர் ஸ்கார்ஸ்கார்ட் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது உடலமைப்பும், கதாபாத்திரத்திற்கு நன்றாகவே பொருந்திருக்கிறது. ஜேன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மார்கோட் ராபீ நடிப்பில் அசர வைக்கிறார். மலை அளவில் ஒரு கொரில்லாவுடன் சாதாரண மனிதன் மோதுவது போல் வந்த படங்களுக்கு மாறாக, கொரில்லாக்களின் உண்மையான சைஸில் அவற்றைக் காண்பித்திருப்பது நெருடலைத் தவிர்த்தாலும், பல ஆண்டுகளாக காட்டைவிட்டு ஒதுங்கி இருந்த டார்சான் காட்டுக்குள் சென்றதும் மரத்துக்கு மரம் தாவிச்செல்வதெல்லாம் லாஜிக் மீறலாக இருக்கிறது.

    மொத்தத்தில் ‘தி லெஜன்ட் ஆப் டார்சான்’ புதிய முயற்சி.
    சிபிராஜ், சத்யராஜ், பிந்துமாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘ஜாக்சன் துரை’ படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
    சென்னையில் சி.பி.சி.ஐ.டி பிரிவில் எஸ்.ஐ.ஆக பணிபுரிந்து வருகிறார் சிபிராஜ். அயன்புரம் என்ற கிராமத்தில் பேயால் ஊர் மக்கள் அவதிப்படுவதால் அதை விசாரிக்க இவர் அனுப்பப்படுகிறார். சிபியும் இந்த வழக்கை விசாரிக்க அந்த கிராமத்திற்கு செல்கிறார். கிராமத்தில் ஊர் தலைவரான சண்முக சுந்தரத்தின் மகளான பிந்து மாதவியை பார்க்கிறார். பார்த்தவுடனே இவர் மேல் காதல் வயப்படுகிறார்.

    யோகி பாபுவின் ஆலோசனை படி, பிந்து மாதவியை திருமணம் செய்ய சண்முக சுந்தரத்திடமே பெண் கேட்கிறார். அதே சமயம், பிந்து மாதவியின் தாய்மாமன் கருணாகரன் பிந்து மாதவியை ‘நான் தான் திருமணம் செய்வேன்’ என்று கேட்கிறார்.

    இரண்டு பேரும் ஒரே சமயத்தில் பெண் கேட்பதால், அந்த ஊரில் இருக்கும் பேய் பங்களாவில் 7 நாட்கள் தங்குபவருக்கே தன் பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக சண்முக சுந்தரம் கூறுகிறார். பிந்து மாதவியை திருமணம் செய்யும் ஆசையில் சிபிராஜும், கருணாகரனும் அந்த பங்களாவிற்குள் செல்கிறார்கள்.

    இறுதியில் பேய் பங்களாவில் என்ன நடந்தது? இருவரில் யார் பிந்து மாதவியை திருமணம் செய்துக் கொண்டார்கள்? ஊரே பயப்படும் அந்த பங்களாவில் இருப்பது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    பில்டப் விடும் எஸ்.ஐ. கதாபாத்திரத்துக்கு சரியாகப் பொருந்துகிறார் சிபிராஜ். முந்தைய படங்களில் விட இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பயம், காதல் என்று உணர்வுகளில் சரியாக பங்களித்துள்ளார். வழக்கமான கதாநாயகி போல் வந்தாலும், ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் பிந்து மாதவி.

    பிற்பாதியில் வரும் சத்யராஜின் நடிப்பு படத்திற்கு பலம். ஆனால், சத்யராஜின் வழக்கமான நக்கல் நையாண்டி காட்சிகள் இல்லாதது வருத்தம். பிந்து மாதவியை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையும், சிபிராஜுடன் பங்களாவிற்கு செல்லும் காட்சிகளிலும் கருணாகரன் தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    பேய் படங்கள் ஹிட்டாகி வரும் நிலையில், இந்த பேய் படத்தை இயக்கி இருக்கிறார் தரணி தரன். வலிமையான நகைச்சுவை நடிகர்களை வைத்துக் கொண்டு படத்தில் காமெடிக்கு பஞ்சம் ஏற்படுத்தி இருக்கிறார். முதல் பாதியில் உள்ள காமெடி காட்சிகள் கைகொடுத்தாலும் பிற்பாதியில் பெரியதாக எடுபடவில்லை. வழக்கமான பேய் என்றாலும் அதிலும் சிறிது காமெடி கலந்து வித்தியாசமான முறையில் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

    யுவாவின் ஒளிப்பதிவும், சித்தார்த் விபினின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘ஜாக்சன் துரை’ மிதமான மிரட்டல்.
    அப்துல் மஜித் இயக்கத்தில் ஸ்ரீராம், ஆரா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘பைசா’. இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
    சென்னையில் குப்பை சேகரித்து பிழைப்பு நடத்தி வருகிறார் நாயகன் ஸ்ரீராம். இவருக்கு ஆதரவாக இருந்த பாட்டி இறந்துவிடவே இவர் மட்டும் குடிசையில் வாழ்ந்து வருகிறார். அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார் நாயகி ஆரா. இவருக்கு பொய் சொல்வதும் திருடுவதும் பிடிக்காது.

    ஒரு நாள் ஆரா தான் வேலை செய்யும் சூப்பர் மார்க்கெட்டின் கரண்ட் பில்லை கட்ட செல்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக பணத்தையும், ஈ.பி. கார்டையும் தவறவிட்டு விடுகிறார். அந்த பணமும் ஈ.பி. கார்டும் ஸ்ரீராம் கையில் கிடைக்கிறது. ஆரா அதை தேடும் நிலையில், ஸ்ரீராம் பணத்தை கொடுக்கிறார். இதனால், இவர்களுக்குள் நட்பு ஏற்படுகிறது. இந்த நட்பு காதலாக மாறி இருவரும் காதலித்து வருகின்றனர்.

    இந்த சூழ்நிலையில், மதுசூதனன் தன்னுடைய கருப்பு பணத்தை பதுக்கி வைக்க சொல்லி ரவுடியான ராஜசிம்மனிடம் கொடுக்கிறார். ராஜசிம்மன் பணத்தை கூவத்தில் பதுக்கி வைக்கிறார். பதுக்கி வைத்த பணம் ஸ்ரீராமுக்கு கிடைக்கிறது. பணத்தை வைத்து ஸ்ரீராம் ஜாலியாக செலவு செய்து வருகிறார். காணாமல் போன பணத்தை தேடி ராஜசிம்மன் அலைகிறார்.

    இறுதியில், ராஜசிம்மனிடம் ஸ்ரீராம் கிடைத்தாரா? பணத்தை வைத்திருந்த ஸ்ரீராமுக்கு என்ன நடந்தது? ஆராவும் ஸ்ரீராமும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ‘பசங்க’, ‘கோலிசோடா’ ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீராம் இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். குப்பை பொறுக்கும் பையனாகவும், பணம் கிடைத்தவுடன் ஆடம்பரமாக செலவு செய்யும் பையனாகவும் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

    நாயகியாக நடித்திருக்கும் ஆரா, பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிந்திருக்கிறார் மதுசூதனன். படம் முழுக்க தன்னுடைய வில்லத்தனத்தால் மிரட்டி இருக்கிறார் ராஜசிம்மன். இழந்த பணத்தை தேடும் இவரது நடிப்பு படத்திற்கு விறுவிறுப்பை கொடுத்திருக்கிறது. மயில்சாமி, நாசர், சென்ட்ராயன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    விஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கிய அப்துல் மஜித், தற்போது இந்த படத்தை இயக்கியிருக்கிறார். குப்பை சேகரிக்கும் ஒருவனுக்கு பணம் கிடைத்தால் வாழ்க்கை எப்படி திசை மாறும் என்பதை கருவாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார். ஆனால், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாததால் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார். ரசிகர்களை கவரும் வகையிலான காட்சிகள் இல்லாதது வருத்தம்.

    ஜே.வி. இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். வேல் முருகனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘பைசா’ மதிப்பு குறைவு.
    20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக-கர்நாடக எல்லை வனப்பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த வீரப்பனை பற்றி இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள படம்தான் வில்லாதி வில்லன் வீரப்பன்.
    வீரப்பனை பிடிக்க தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் இணைந்து ஒரு தனிப்படையை உருவாக்கி, அவனை எப்படி சுட்டுக் கொன்றார்கள் என்பதை ராம்கோபால் வர்மா தனது பாணியில் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், வீரப்பன் சந்தனமர கடத்தலில் ஈடுபட்டது ஏன்? இதற்கு யார் காரணம்? என்பதையும் இந்த படத்தில் கூறியிருக்கிறார்.

    வீரப்பன் பற்றி பல பேர் பல கதைகள் கூறுகின்றனர். அவரைப் பற்றி பல்வேறு தொடர்களும், படங்களும் வந்துவிட்டன. இதில் எது உண்மை என்பது நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், ராம்கோபால் வர்மா தனக்கு தெரிந்த கதையை கொஞ்சம் திரில்லர் கலந்து சொல்ல நினைத்திருக்கிறார். இதில் வீரப்பனாக நடித்திருக்கும் சந்தீப் பரத்வாஜ், பார்க்க அச்சு அசல் வீரப்பனை போன்றே இருக்கிறார். நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார்.

    வீரப்பனை கொல்ல நடக்கும் திட்டத்தில் முதன்மையான போலீஸ் அதிகாரியாக வரும் சச்சின் ஜோசி, மிடுக்கிலும் நடிப்பிலும் தன் பங்கை சரியாக செய்தாலும், அவரிடமிருந்து ஏதோ ஒன்று குறைவதுபோல் தெரிகிறது. வீரப்பனின் மனைவியாக வரும் உஷா ஜாதவ் அப்பாவியான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவர்கள் தவிர படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் யாரும் மனதில் ஒட்டவில்லை.

    வீரப்பனை பற்றி முதலில் குறைவான நேரத்தில் அறிமுகப்படுத்திய விதம் அருமை. ஆனால், அவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பற்றி இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லியிருக்கலாம். முதல்பாதி கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும், பிற்பாதி விறுவிறுப்பாக வேகமெடுத்திருக்கிறது. மேலும், வீரப்பன் பற்றி நமக்கு தெரிந்த பல விஷயங்கள் இந்த படத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை.

    இப்படம் நேரடியான தமிழ் படமாக இருந்திருந்தால் கொஞ்சம் மனதில் ஒட்டியிருக்கும், படம் ஏதோ இந்தியில் இருந்து டப்பிங் செய்யப்பட்ட சீரியல் போன்ற உணர்வை தருகிறது. படத்தில் வரும் காடுகள் நடிகர்களைவிட மிரட்டியிருக்கிறது. சுவாரஸ்யமற்ற திரைக்கதை படத்தை சுமாரான படமாக ஆக்கிவிட்டது.

    மொத்தத்தில் ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ விறுவிறுப்பு இல்லை.
    அர்ஜுன்-ஷாம்-மனிஷா கொய்ராலா நடிப்பில் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் ‘ஒரு மெல்லிய கோடு’ படம் எப்படியிருக்கிறது என்பதை பார்ப்போம்...
    பிரபல பெண் தொழிலதிபரான மனிஷா கொய்ராலா மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக பலத்த பாதுகாப்புடன் ஆய்வுக்கூடம் ஒன்றில் வைத்திருக்கிறார்கள். ஆனால், அங்கிருந்து அவரது உடல் திடீரென காணாமல் போய்விடுகிறது.

    யார் அந்த உடலை திருடியிருப்பார்கள் என்று விசாரணை செய்வதற்கு போலீஸ் அதிகாரியான அர்ஜுன் நியமிக்கப்படுகிறார். அவர் மனிஷாவின் கணவரும் டாக்டருமான ஷாம் மீது சந்தேகப்படுகிறார். அவரிடம் மனிஷாவின் கொலை குறித்து விசாரணை நடத்துகிறார்.

    இறுதியில் மனிஷாவின் உடலை யார் கடத்தினார்கள் என்பதை அர்ஜூன் கண்டுபிடித்தாரா? எதற்காக மனிஷாவின் உடலை கடத்தினார்கள்? மனிஷா எப்படி கொல்லப்பட்டார்? எதற்காக கொல்லப்பட்டார்? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் படமாக்கியிருக்கிறார்கள்.

    அர்ஜூனுக்கு போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி. இந்த படத்திலும் அவர் தனது கதாபாத்திரத்தை சர்வசாதாரணமாக நடித்து அசத்தியிருக்கிறார். ஷாமிடம் விசாரணை நடத்தும் காட்சிகளில் எல்லாம் கம்பீரமான போலீசாக நம் கண்முன் நிற்கிறார். இதுவரை ஆக்ஷனில் அதிரடியான போலீஸ் அதிகாரியாக பார்த்த அர்ஜுன் இந்த படத்தில் அமைதியான போலீஸ் அதிகாரியாக நடிப்பில் அதிரடி காட்டியிருக்கிறார்.

    ஷாமுக்கு இந்த படத்தில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரம். ஆரம்பம் முதல் இவரை நமக்கு வில்லன் போலவே காட்டியிருக்கிறார்கள். எந்தவித கதாபாத்திரத்தையும் தன்னால் சிறப்பாக செய்யமுடியும் என்பதை இந்த படத்தின் மூலம் சிறப்பாகவே நிரூபித்திருக்கிறார் ஷாம்.

    மனிஷா கொய்ராலாவுக்கு இந்த படத்தில் மிகச்சிறிய கதாபாத்திரம்தான். சிறிய இடைவெளிக்கு தமிழில் நடித்திருந்தாலும், தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார். ஷாமின் காதலியாக வரும் அக்ஷா பட்டுக்கு இந்த படம் அழகான அறிமுகம் என்று சொல்லலாம். பார்ப்பதற்கும் அழகாக இருக்கிறார். அர்ஜுன் கூடவே விசாரணை அதிகாரியாக வரும் இந்த படத்தின் இயக்குனர் ரமேஷும் போலீஸ் அதிகாரியாக பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    ஒரே இரவில் நடக்கும் கதைதான் படம். படத்தில் ஒருகாட்சிகூட வீணடிக்காமல் படம் ஆரம்பத்திலிருந்தே கதைக்குள் சென்று, இறுதி வரை அந்த கதையை சுற்றி சுற்றி விறுவிறுப்பு குறையாமல் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். திரில்லர் படத்திலும் நம்மை பயமுறுத்தும்படியான காட்சிகளை வைத்து அசத்தியிருக்கிறார். ஒரு மர்மமான கொலைக்கு பின்னால் இருக்கும் பரபரப்பான சம்பவங்களை அழகான திரைக்கதை மூலம் ரசிகர்களின் ரசனைக்கேற்றவாறு கொடுத்திருக்கிறார். படத்தின் முடிவு யாருமே யூகிக்க முடியாத ஒரு முடிவாக கொடுத்திருப்பது சிறப்பு.

    இளையராஜாவின் பின்னணி இசை மிரட்டியிருப்பது மட்டுமில்லாமல், படத்திற்கு விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது. அதிகமான காட்சிகள் மருத்துவமனையிலேயே படமாக்கியிருந்தாலும் அது தெரியாத அளவிற்கு கிருஷ்ணா ஸ்ரீராமின் ஒளிப்பதிவும், கிருஷ்ண ரெட்டியின் எடிட்டிங்கும் இருக்கிறது. மருத்துவமனையை செட் போட்டு அமைத்திருந்தாலும், அது செட் என்று தெரியாத அளவுக்கு அமைத்திருக்கிறார்கள்.

    மொத்தத்தில் ‘ஒரு மெல்லிய கோடு’ மிரட்டல்.
    சமுத்திரகனி நடிப்பு, எழுத்து, இயக்கத்தில் வெளிவந்திருககும் ‘அப்பா’ படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்...
    சமுத்திரக்கனியின் எழுத்து, இயக்கம், தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் அப்பா.

    3 அப்பாக்கள் அவர்களின் குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள், அப்பாக்களின் அரவணைப்பில் அந்த குழந்தைகள் எந்த மாதிரியாக வளர்ந்து சாதிக்கிறார்கள் என்பதை சொல்லும் படம்தான் அப்பா.

    சமுத்திரக்கனி தனது மகன் விக்னேஷுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்து வருகிறார். படிப்பு மட்டுமே வாழ்க்கையல்ல, அவன் வாழ்க்கையில் நல்ல, கெட்ட விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலேயே இவ்வாறு செய்கிறார்.

    அதேநேரத்தில் தம்பி ராமையா தனது மகனான ராகவனை, மிகவும் கண்டிப்புடன் வளர்த்து வருகிறார். தனது கனவுகளை, தனது லட்சியங்களை தனது மகன் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவனுக்கு படிப்பு மட்டும்தான் முக்கியம் என்று அழுத்தம் கொடுத்து வளர்த்து வருகிறார்.

    மறுமுனையில், நமோ நாராயணன் தனது மகனான நாசாத்தை எந்த வம்புக்கும் செல்லாமல், தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் இடம் தெரியாமலேயே வாழவேண்டும் என்று அறிவுரை கூறி வளர்த்து வருகிறார். இந்த மூன்று குடும்பங்களும் ஒரே பகுதியில் வசிக்கின்றன.

    இப்படியாக வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்து வரும் குழந்தைகளின் வாழ்க்கை எந்த நிலைக்கு சென்றது என்பதை எடுத்துச் சொல்லும் படமே ‘அப்பா’.

    சமுத்திரக்கனி, பொறுப்பான தந்தையாக படத்தில் ஜொலித்திருக்கிறார். இவர் மகனை மட்டுமல்லாது மகனின் நண்பர்களுக்கும் உதவும் தந்தையாக அனைவரையும் கவர்கிறார். தன் மகனை தொலைத்து தவிப்பது, தன் மனைவியை எண்ணி வருந்துவது என நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

    இன்றைய மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற முடியாமல் போனால் தற்கொலை செய்வது, கல்வி மட்டும்தான் வாழ்க்கை என்று வளர்க்கும் பெற்றோர்கள், தங்கள் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்கும் செயல்களினால் குழந்தைகள் வாழ்க்கையில் எந்தமாதிரியான துன்பங்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை இப்படத்தில் அப்பட்டமாக காட்சிப்படுத்தி சமூக அக்கறையுள்ள இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என வெற்றிநடை போடுகிறார் சமுத்திரக்கனி. இவரது வசனங்கள் படத்திற்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது.

    தம்பிராமையா கிடா மீசையோடு கண்டிப்பான தந்தையாக படம் முழுக்க வலம் வருகிறார். இவருடைய கதாபாத்திரம் அனைவரையும் கோபத்திற்கு ஆளாக்கினாலும், இறுதியில், அந்த கதாபாத்திரத்தின் தன்மை அனுதாபத்தை பெற்றுவிடுகிறது. தனது அனுபவ நடிப்பால் ரசிகர்களிடம் கைதட்டல் பெறுகிறார் தம்பி ராமையா. நமோ நாராயணாவுக்கு சிறு கதாபாத்திரம் என்றாலும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

    குழந்தை நட்சத்திரங்களான விக்னேஷ், ராகவ், யுவலட்சுமி, கேப்ரில்லா, நாசத், என அனைவரையும் சமுத்திரக்கனி திறம்பட திரையில் மின்ன வைத்திருக்கிறார். அனைவருடைய நடிப்பும் ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக, நாசத் அனைவர் மனதிலும் பதியும்படியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறான்.

    இளையராஜாவின் பின்னணி இசை படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. ஒரேயோரு பாடல் மட்டுமே இருந்தாலும் மனதில் எளிதாக பதிகிறது. ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

    மொத்தத்தில் ‘அப்பா’ மதிப்புக்குரியவர்.
    ரோலன்ட் எமெரிச் இயக்கத்தில் 1996ம் ஆண்டு உலகமெங்கும் வெளியாகி வசூலை வாரிக் குவித்த படம் ‘இண்டிபெண்டன்ஸ் டே’. சரியாக 20 வருடங்களுக்குப் பிறகு இப்படத்தின் 2ம் பாகமான ‘இண்டிபெண்டன்ஸ் டே : எழுச்சி அடைதல்’ தற்போது தமிழிலும் ரிலீசாகியிருக்கிறது. படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
    1996ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி அமெரிக்காவின் சுதந்திர தினம் மட்டுமல்ல, உலகத்தை அழிக்க நினைத்த வேற்று கிரகவாசிகளின் தாக்குதலை அமெரிக்கா முறியடித்த தினம். சரியாக 20 வருடங்கள் கழித்து, மீண்டும் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தயாராகிறது அமெரிக்கா. பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சுதந்திர தின உரையாற்றுவதற்காக தயாராகி வருகிறார் தற்போதைய ஜனாதிபதியான சீலா வார்டு.

    இந்த சூழ்நிலையில், நீண்ட வருடங்களாக உடல்நிலை சரியில்லாமலிருந்த பழைய ஜனாதிபதி பில் புல்மேனுக்கு மீண்டும் வேற்று கிரகவாசிகளின் தாக்குதல் நடக்கப்போவதாக உணர்கிறார். இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வண்ணம் 3000 மைல் சுற்றளவு கொண்ட மிகப் பிரம்மாண்டமான விண்கலம் ஒன்று, உலகின் பாதுகாப்பு வளையத்தையும் மீறி தரையிறங்கி, பூமியின் மையப்பகுதியை துளையிடத் துவங்குகிறது. இதனால் இரண்டு மணி நேரத்தில் மொத்த உலகமும் அழியப்போகிறது என்ற அபாயத்தில் மக்கள் பரிதவிக்கிறார்கள்.

    இறுதியில் இந்த பேராபத்தை அமெரிக்க ராணுவம் எப்படி முறியடிக்கிறது? இந்த முறை வேற்று கிரகவாசிகளின் தாக்குதல்கள் எப்படிப்பட்டதாக இருந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    இப்படத்தில் பில் புல்மேன், ஜெப் கேல்டுப்ளம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். முதல் பாகத்திலும் நடித்த இவர்களுடன் லியம் ஹெம்ஸ்வொர்த் நடித்திருக்கிறார். கதையின் விறுவிறுப்புக்கு ஏற்க கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

    இப்படத்திற்கு கிராபிக்ஸ் தொழில்நுட்பங்கள், மலைக்க வைக்கும் போர்க்கருவிகள், சாகச சண்டைக்காட்சிகள், மிரளவைக்கும் ஒளிப்பதிவு, பிரமிக்க வைக்கும் பின்னணி இசை என டெக்னிக்கலாக மிகப்பெரிய உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள்.

    ஆனால், முதல் பாகத்திலிருந்த ஒரு சுவாரஸ்யமான கதையோ, பரபரப்பான திரைக்கதையோ, நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சிகளோ இப்படத்தில் இல்லை. வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டும் நிறைந்த படமாகவே இரண்டாம் பாகத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

    முதல் பாகம் வெளிவந்தபோது ‘ஏலியன்ஸ்கள்’ ரசிகர்களுக்கு புது விஷயம். ஆனால், அதன்பிறகு இதுபோன்ற பல படங்களை ரசிகர்கள் பார்த்துவிட்டதும்கூட, இப்படத்தின்மீது பெரிய ஈர்ப்பு வராததற்கு காரணமாக இருக்கலாம். ஹெரால்டு கிளோசர், தாமஸ் வான்கர் இணைந்து இசையமைத்துள்ள இப்படத்திற்கு மார்கஸ் போர்டெரர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர்களுடைய பங்களிப்பு படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் ‘இண்டிபெண்டன்ஸ் டே 2: எழுச்சி அடைதல்’ சுவாரஸ்யம் குறைவு.
    கலையரசன், காளி வெங்கட், வைஷாலி, ஷலின் ஜோயா ஆகியோர் நடிப்பில் கலகலப்பான காமெடி படமாக உருவாகியுள்ள ‘ராஜா மந்திரி’ படம் எப்படியிருக்கிறது என்று பார்ப்போம்.
    காளி வெங்கட்டும், கலையரசனும் அண்ணன், தம்பிகள். இவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டாலும், மற்றவர்களால் இவர்களுக்கு பிரச்சினையென்றால் ஒன்று சேர்ந்து கொள்வார்கள். இவருடைய அப்பா சொந்த ஊரிலேயே சிறியதாக சோடா கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். காளி வெங்கட்டுக்கு நெடுநாட்களாக பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். ஆனால், அவருக்கு எந்த பெண்ணும் அமையவில்லை.

    இவர்களது வீட்டுக்கு அருகிலேயே வைஷாலி மற்றும் அவரது குடும்பத்தினர் குடியேறுகிறார்கள். வைஷாலியை அண்ணன், தம்பி இருவரும் ஒன்றாக சேர்ந்து சைட் அடித்து வருகிறார்கள். இதில் கலையரசனுக்கு கல்லூரியில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்க, கலையரசன் தனது காதலுக்கு இடைஞ்சலாக இருப்பார் என்று நினைத்து அவனை கல்லூரிக்கு அனுப்பி விடுகிறார் காளி வெங்கட்.

    கல்லூரியில் நாயகி ஷலின் ஜோயாவை சந்திக்கும் கலையரசன், அவளை காதலித்து வருகிறார். இதன்பிறகு, கல்லூரி படிப்பு முடிந்து ஊருக்கு திரும்பும் கலையரசன், தனது அண்ணன் காளி வெங்கட், இன்னமும் வைஷாலியிடம் காதலை சொல்லாமல் அவள் பின்னாலேயே சுற்றி வருவதை பார்த்து, காளியை உசுப்பேற்றி விடுகிறான்.

    இதனால், காளி பிரச்சினையில் மாட்டிக்கொள்ள வைஷாலி குடும்பத்திற்கும், காளி குடும்பத்திற்கும் பிரச்சினை ஏற்படுகிறது. பின்னர் வைஷாலி குடும்பத்தினர் வீட்டை காலி செய்து வேறு ஊருக்கு சென்றுவிடுகின்றனர். இறுதியில், காளி வெங்கட் வைஷாலியை தேடிக் கண்டுபிடித்து அவருடன் சேர்ந்தாரா? கலையரசனின் கல்லூரி காதல் என்னாயிற்று? என்பதே மீதிக்கதை.

    காளிவெங்கட் முழுநீள கதாநாயகன் போல் படத்தில் வலம் வந்திருக்கிறார். காமெடி, செண்டிமென்ட் என எல்லாவிதத்திலும் அசத்தியிருக்கிறார். கூடவே ரொமான்ஸ் காட்சிகளிலும் நடித்திருக்கிறார். அதுவும் இவருக்கு ரொம்பவும் நன்றாக வந்திருக்கிறது. தன்னால் எந்தவொரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்யமுடியும் என்பதை இந்த படத்தில் நிரூபித்து காட்டியிருக்கும் காளி வெங்கட்டை பாராட்டியே ஆகவேண்டும்.

    இதுவரை காதல், ஆக்ஷன் என கலக்கிய கலையரசன் இப்படத்தில் காமெடியிலும் கலக்கியிருக்கிறார். மேலும், தனக்கே உண்டான காதல், ரொமான்ஸ் காட்சிகளிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வைஷாலி கிராமத்து பெண்ணாக மனதில் எளிதில் பதிகிறார். இவருடைய நடிப்பும் அபாரம். கிளைமாக்ஸ் காட்சியில் இவரது நடிப்பு பலே சொல்ல வைக்கிறது.

    இன்னொரு நாயகியாக வரும் ஷலின் ஜோயா மலையாளத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழுக்கு அறிமுகமாகும் முதல் படம். படத்தில் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். கலையரசனின் கல்லூரி நண்பனாக வரும் பாலசரவணன் காட்சிகள் எல்லாம் கலகலக்க வைத்திருக்கிறது.

    இயக்குனர் உஷா கிருஷ்ணன் தனது முதல்படமே ஒரு கிராமத்து பின்னணியில் காமெடி, செண்டிமென்ட் கலந்து குடும்பத்துடன் பார்க்கும்படியான ஒரு அற்புதமான படத்தை கொடுத்திருக்கிறார். நமது குடும்பத்திலும் இப்படியொரு அண்ணன்-தம்பி இருக்கமாட்டார்களா? என்று ஏங்கவைக்கும் அளவுக்கு கதையை உருவாக்கியிருக்கிறார். அளவான கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு விறுவிறுப்பான திரைக்கதையுடன் ரசிக்கும்படியான ஒரு கதையை கொடுத்த இவருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம். ஒரு காட்சி சோகமாக சொல்லும்போதே, அடுத்த காட்சியை கலகலப்பாக கொடுத்து ரசிகர்களை இருக்கையை விட்டு எழுந்திருக்க விடாமல் செய்திருக்கிறார்.

    பி.சி.முத்தையா ஒளிப்பதிவில் கிராமத்து அழகு பளிச்சென்று இருக்கிறது. கதைக்கு தேவையான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசையும் கதைக்கேற்றவாறு உள்ளது.

    மொத்தத்தில் ‘ராஜா மந்திரி’ மகுடம் சூடும்.
    அறிமுக நாயகன் சிரிஷ், டாக்டர் மாயா, சென்ட்ராயன், பாபி சிம்ஹா ஆகியோர் நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் படம் ‘மெட்ரோ’. இப்படம் எப்படியிருக்கிறது என்பதை பார்ப்போம்.
    நாயகன் சிரிஷும் அவரது நண்பரான சென்ட்ராயனும் ஒரு பத்திரிகையில் பணிபுரிந்து வருகிறார்கள். நாயகனின் அப்பா போலீஸ் வேலையில் இருந்து ஓய்வானவர். இவரின் தம்பி சத்யா, இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர்களது குடும்பம் நடுத்தர குடும்பம் என்பதால், செலவுகளை குறைத்து, திட்டம் போட்டு வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் சத்யா, மற்ற மாணவர்களைப் போல் தானும் விலையுயர்ந்த பைக், போன் வைத்து சுற்றவேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதையெல்லாம் வீட்டில் கேட்கும் சத்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. சத்யாவுடன் படிக்கும் நிஷாந்த் ஒருநாள் விலையுயர்ந்த போன் ஒன்றை வைத்துக்கொண்டு பேசி வருவதை பார்க்கும் சத்யா, அவனிடம் அதை எப்படி வாங்கினாய் என்று கேட்கிறார்.

    அப்போது, நிஷாந்த், சத்யாவை பைக்கில் அழைத்துச்சென்று சாலையில் செல்லும் ஒரு பெண்ணின் கழுத்தில் கிடக்கும் செயினை பறித்துக்கொண்டு செல்கிறார். பின்னர், மறைவான இடத்துக்கு சென்று சத்யாவிடம், தான் இப்படி செயினை பறித்துதான் ஆடம்பரமாக செலவு செய்து வருகிறேன் என்று கூறுகிறார். உனக்கும் விருப்பம் இருந்தால் என்னுடன் சேர்ந்துகொள் என்றும் கூறுகிறார்.

    ஆடம்பரத்துக்கு ஆசைப்பட்டு சத்யா, நிஷாந்துடன் சேர்ந்து செயின் பறிக்க முடிவு செய்கிறார். இந்த கூட்டத்துக்கு தலைவனாக இருக்கும் பாபி சிம்ஹா, பறிக்கும் நகைகளை விற்கும் தொகையில் முக்கால் வாசியை எடுத்துக் கொண்டு மீதியை அனைவருக்கும் தருவது சத்யாவுக்கு பிடிக்கவில்லை. எனவே, தான் பறிக்கும் நகைகளை தானே விற்று பணமாக்க முடிவு செய்கிறார். இது பாபி சிம்ஹாவுக்கு தெரிய வந்ததும், சத்யாவை அழைத்து கண்டிக்கிறார். இருந்தும் சத்யா பாபி சிம்ஹாவை எதிர்க்க முடிவு செய்கிறார்.

    இறுதியில், பாபி சிம்ஹா-சத்யா இருவருக்கும் உண்டான மோதல் எங்குபோய் முடிந்தது? சத்யாவின் குடும்பம் இதனால் எந்தளவுக்கு பாதிப்பை அடைந்தது? என்பதே மீதிக்கதை.

    நாயகன் சிரிஷுக்கு முதல் படம்தான் என்றாலும் சிறப்பானதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முதல் பாதியில் இவருக்கு சரியாக வாய்ப்பு வழங்காவிட்டாலும், இரண்டாம் பாதியில் ஓரளவுக்கு வந்து தனது கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். நாயகி மாயா, இப்படத்தில் கதாநாயகி ஒருவர் வேண்டும் என்பதற்காக சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி, இவருக்கு காட்சிகள் மிகமிக குறைவு.

    சத்யாவுக்கு இப்படத்தில் கதையை தாங்கிச் செல்லும் அளவிற்குண்டான கதாபாத்திரம். தனது நடிப்பால் அதை ஓரளவுக்கு பூர்த்தி செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். பாபி சிம்ஹா மீண்டும் ஒரு வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு இவரை இந்த கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. அவரும் தனக்கே உரிய பாணியில் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

    நாயகன் கூடவே வரும் சென்ட்ராயன் இதுவரையிலான படங்களில் காமெடி வேடம் ஏற்று நடித்தவர், இப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகனின் அம்மா, அப்பா கதாபாத்திரத்தில் நடித்தவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

    செயின் பறிப்பை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன், படம் முழுக்க செயின் பறிப்பு சம்பவங்கள் இருந்தாலும் திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்வதால் படம் பார்ப்பதற்கு சலிப்பு ஏற்படாமல் செல்கிறது. ஒரு செயின் பறிப்பு கும்பலுக்கு பின்னால் என்னென்ன பிரச்சினைகள் உள்ளது என்பதையும் எடுத்துக் கூறியிருக்கிறார்.

    ஜோகன் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. பின்னணி இசையிலும் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார். இவருடைய இசை படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது எனலாம். உதயகுமார் தனது கேமராவால் விதவிதமான கோணங்களில் காட்சிகளை அமைத்து ரசிக்க வைத்திருக்கிறார். இரவு நேர காட்சிகளில் எல்லாம் சரியான ஒளியமைப்பை வைத்து சிறப்பாக செய்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘மெட்ரோ’ வேகமெடுக்கும்.
    ×