என் மலர்tooltip icon

    தரவரிசை

    விஜய் சண்முகவேல் அய்யனார் இயக்கத்தில் கதிர், ஸ்வப்னா நடிப்பில் வெளியாகி உள்ள ‘ஒன்பதிலிருந்து பத்துவரை’ படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
    கால் டாக்சி ஓட்டுனரான நாயகன் கதிர், ரேடியோ ஜாக்கியான நாயகி ஸ்வப்னாவின் குரலை கேட்டு அவரது தீவிர ரசிகர் ஆகிறார். ஒருநாள் ஸ்வப்னா, கதிரின் காரில் பயணம் செய்கிறாள். பயணத்தின்போது ஸ்வப்னா ரேடியோ ஜாக்கி என்று தெரியாத கதிர், அவளிடம் கடுப்பாக நடந்து கொள்கிறான். இதனால், இவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது.

    ஒருகட்டத்தில் கதிர் தன்னுடைய ரசிகர் என்பதை தெரிந்துகொள்கிறார் ஸ்வப்னா. இதனால், கதிரிடம் அன்பாக பேசுகிறார். இதை கதிர் காதல் என்று தவறுதலாக புரிந்துகொள்கிறார். அதேநேரத்தில், சிட்டியில் நடந்துவரும் தொடர் கொலை விஷயமாக சிட்டி போலீஸ் கமிஷனரான சரவண சுப்பையா, ஹீரோவை தேடுகிறார்.

    இந்நிலையில், ஸ்வப்னா ஹீரோவின் காரில் பயணமானது அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காகத்தான் சென்றது என்பதை கதிர் அறிகிறார். இதையறியும் கதிர், ஸ்வப்னாவின் மொத்த குடும்பத்தையும் தனது காரில் கடத்துகிறார். இப்படி ஏகப்பட்ட சிக்கல்களுடன் பயணிக்கும் கதையில், இறுதியில், ஸ்வப்னாவை கதிர் கரம்பிடித்தாரா? அவரை எதற்காக கடத்தினார்? தொடர் கொலைகளுக்கும் கதிருக்கும் என்ன சம்பந்தம்? என்பதை விறுவிறுப்பாக சொல்ல வந்திருக்கிறார்கள்.

    கதிர் ஏற்கெனவே ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இது இவருக்கு இரண்டாவது படம். இப்படத்திலும் நடிப்பை வரவழைக்க ரொம்பவும் முயற்சி செய்திருக்கிறார். டப்பிங்கில் இவரது குரல் காமெடியாகவே இருக்கிறது. நாயகி ஸ்வப்னா மேனன், ரேடியோ ஜாக்கி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். பார்க்கவும் அழகாக இருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் சிரமப்பட்டிருக்கிறார்.

    போலீஸ் அதிகாரியாக வரும் இயக்குனர் சரவண சுப்பையா, கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருந்தாலும் மிகையான நடிப்பால் அவரை ரசிக்க முடியவில்லை. அரசியல்வாதியாக வரும் லிவிங்ஸ்டன் கலகலப்பூட்டியிருக்கிறார். மற்றபடி, படத்தில் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்கள் மட்டுமே உள்ளன. அவர்களும் பெரிதாக மனதில் பதியவில்லை.

    பயணத்தை மையமாக வைத்து ஒரு திரில்லான படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் விஜய் சண்முகவேல் அய்யனார். திரில்லாங்கான ஒரு கதையை திரில்லாக ரசிக்க முடியவில்லை. சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்யாதது இதற்கு காரணம். மேலும், படத்தில் சில லாஜிக் மீறல்களும் இருக்கின்றன. இதையெல்லாம் தவிர்த்தால் படம் நன்றாக இருந்திருக்கும்.

    எம்.கார்த்திக்கின் பின்னணி இசை மிரட்டியிருக்கிறது. ராஜரத்தினம் ஒளிப்பதிவும் படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘ஒன்பதிலிருந்து பத்துவரை’ சோக பயணம்.
    ‘புல்லுக்கட்டு முத்தம்மா’ என்ற கவர்ச்சி படத்தை இயக்கிய இயக்குனர் முத்துப்பாண்டி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம்தான் ‘கோடம்பாக்கத்தில் கோகிலா’. இப்படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
    மிகப்பெரிய நடிகையாக வேண்டும் ஆசையில் கிராமத்தில் இருந்து சென்னை கோடம்பாக்கம் ஏரியாவில் நுழைகிறாள் நாயகி கோகிலா. பேப்பரில் வந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு தவறான தயாரிப்பு நிறுவனத்தில் நுழைந்து வாய்ப்பு கேட்கிறாள். அவர்கள் இவளிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பித்துச் சென்று, ஹீரோ மற்றும் அவரது நண்பர்களிடம் சென்று உதவி கேட்கிறாள்.

    போதையில் இருக்கும் அவர்கள் கோகிலாவுக்கு உதவுவதாக கூறி, அவளிடம் தவறாக நடக்க முயற்சி செய்கிறார்கள். அப்போது அங்கு வரும் போலீஸ்காரர், கோகிலாவை காப்பாற்றி தன்னுடன் அழைத்து செல்கிறார். ஆனால், அந்த போலீஸ்காரர் அவளை கற்பழித்து, ஆந்திராவில் விபச்சாரத்துக்குள் தள்ளிவிடுகிறார்.

    அங்கிருந்து தப்பித்து சென்னை திரும்பும் கோகிலாவை பிடிக்க அவரது வாழ்வை சீரழித்த போலீஸ்காரரும், விபச்சார கும்பலின் தலைவனும் தீவிரமாக இருக்கின்றனர். இவர்களின் கண்ணில் படாமல் தப்பிக்க கோகிலா தலைமறைவாகிறாள். இந்நிலையில், ஒருநாள் போதையில் இருக்கும் ஹீரோ மற்றும் அவருடைய நண்பர்களின் கண்ணில் படுகிறாள் கோகிலா. ஏற்கெனவே, கோகிலாவை தவறவிட்ட நண்பர்கள் இந்தமுறை அவளை கடத்தி சென்று அவளை கற்பழித்துவிடுகிறார்கள்.

    விபச்சார கும்பலிடம் சிக்கியதால் எய்ட்ஸ் நோயாளியான கோகிலா, இவர்களின் முரட்டு தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் மயக்கமடைகிறாள். அவளை யாருக்கும் தெரியாமல் கொலை செய்துவிட முடிவெடுக்கிறார்கள். ஆனால், போலீசிடம் மாட்டிக் கொள்கிறார்கள். கோகிலாவும் கோமா நிலைக்கு சென்றுவிடுகிறாள்.

    இதன்பிறகு நண்பர்களின் கதி என்னவாயிற்று? கோமா நிலைக்கு சென்ற கோகிலா என்னவானாள்? என்பதே மீதிக்கதை.

    படத்தின் ஹீரோவான ராஜேஷ் ஹீரோவுக்கான தோற்றத்துடன் அழகாக இருக்கிறார். நடிப்பிலும் மிளிர்கிறார். அவருடைய நண்பர்களாக வருபவர்களும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை அழகாக செய்திருக்கிறார்கள். போலீஸ் உயரதிகாரியாக வரும் ‘பசங்க’ சிவகுமார், மிரட்டும் தொனியில் இருந்தாலும், அவரது நடிப்பு ஏனோ நம்மை ஈர்க்கவில்லை.

    கோகிலாவாக வரும் ஜகின், படம் முழுக்க ஒருவித பயத்துடனேயே நடித்துள்ளார். நடிப்பையும் தன்னுடைய முகத்தில் வரவழைக்க ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார். அதேபோல், ஹீரோவின் நண்பனின் மனைவியாக நடித்திருப்பவர் ஒவ்வொரு பேச்சுக்கும் தனது கையாலேயே சைகை காட்டி நடித்திருப்பது, அனுதாபத்திற்கு பதில் சிரிப்பைத்தான் வரவழைத்திருக்கிறது.

    இந்த படம் மூலம் சமூகத்திற்கு பல நல்ல கருத்துக்களை இயக்குனர் முத்துப்பாண்டி சொல்ல வந்திருக்கிறார். சினிமா ஆசையில் கோடம்பாக்கத்தில் நுழையும் பெண்கள் தவறான நபர்களிடம் சிக்கிக் கொண்டால் அவர்களின் நிலை என்ன? என்பதையும் போதைக்கு அடிமையாகும் ஆண்கள் தவறான பாதையில் செல்வதால் அவர்களின் குடும்பம் எந்த நிலைமைக்கு செல்கிறது? என்பதையும் இப்படத்தின் மூலம் சொல்ல வந்திருக்கிறார்.

    ஆனால், சரியான கதாபாத்திரங்கள் தேர்வு இல்லாததால் சொல்ல வந்த கருத்தை அனைவரும் புரிந்துகொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. கதாபாத்திரங்களையும், காட்சியமைப்புகளையும் சிறப்பாக தேர்வு செய்திருந்தால் சமூகத்திற்கு இந்த படம் நல்லதொரு பாடமாக அமைந்திருக்கும்.

    கண்ணன் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். பென் ஒளிப்பதிவு படத்தின் கதைக்கேற்றபடி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘கோடம்பாக்கத்தில் கோகிலா’ அழகாய் இல்லை.
    பனியுகத்தில் வாழ்ந்த உயிரினங்கள் பற்றிய கற்பனை கலந்த அனிமேசன் படம்தான் ஐஸ் ஏஜ். குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற இந்த படவரிசையில் ஐந்தாவது பாகமாக தற்போது திரைக்கு வந்திருக்கிறது ‘ஐஸ் ஏஜ் 5 கோலிசன் கோர்ஸ்’.
    பனியுக காலத்தில் மேனி-எல்லீ என்ற ஜோடிக்கு பிறந்த பெண் யானைக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், மேனி-எல்லீயின் திருமண நாள் வருகிறது. அந்த திருமண நாளை பார்ப்பதற்காக காட்டிலுள்ள எல்லா மிருகங்களும் ஒன்று சேர்கின்றன. கொண்டாட்டத்தின் போது யாரும் எதிர்பாராத வண்ணம் ஒரு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது.

    இது, மேனியின் ஏற்பாடாகத்தான் இருக்கும் என்று அனைவரும் வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது வாணவேடிக்கை அல்ல, விண்ணிலிருந்து வந்துகொண்டிருக்கும் விண்கல் என்பது அனைவருக்கும் தெரியவருகிறது, இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ஒட்டுமொத்த விலங்குகள் கூட்டமும் திகைத்துக் கொண்டிருக்கும்போதுதான், டைனோசர்கள் உள்ள பாதாள உலகத்திலிருந்து பூமிக்கு திரும்பும் ‘பக்’ எனும் நரி, விண்ணில் இருந்து வரும் விண்கல்லால் இந்த பூமியே அழியப் போகிறது என்று விலங்குகள் அனைத்தையும் பயமுறுத்துகிறது.

    இருப்பினும், அதை தடுக்க தான் ஒரு திட்டம் வைத்திருப்பதாகவும் அது கூறுகிறது. ‘பக்’கின் அந்த திட்டம் என்ன? பயமுறுத்திய பக்கின் திட்டத்தை விலங்குகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டனவா? பேரழிவிலிருந்து விலங்குகள் அனைத்தும் காப்பற்றப்பட்டனவா? என்பதே இந்த படத்தின் மீதிக்கதை.

    ஐஸ் ஏஜ் படங்களின் வரிசையில் 5-வது பாகமாக வெளிவந்துள்ள படம். முதல்பாகம் வெளிவந்து கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக இன்னமும் ஐஸ் ஏஜ் படங்களின் மீதான உள்ள எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்துள்ளதா என்றால், அது இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

    ஏனென்றால், வழக்கமாக எல்லா பாகங்களிலும் சொல்லப்படுகிற கதைதான். அதேபோல், முடிவு என்னவென்பதை ஆரம்பத்திலேயே யூகிக்கும்படியான கதையமைப்பு ஆகியவற்றால்தான் படத்தை கடைசிவரை சுவாரஸ்யம் இல்லாமல் செல்கிறது. அதேபோல், வழக்கமான முதல் பாகத்தில் வருகிற ஸ்க்ராட், சிட், மேனி, டியாகோ ஆகியவற்றுடன் அடுத்தடுத்த பாகங்களில் வந்த எல்லீ, பீச், ஜுலியன், ஷிரா, கிரானி ஆகிய கதாபாத்திரங்களும் இந்த பாகத்தில் வருகிறது. இதுமட்டுமில்லாமல், இந்த பாகத்தில் புதிதாக சில கதாபாத்திரங்களையும் இணைத்திருக்கிறார்கள்.

    புதிதாக வந்த கதாபாத்திரங்களை ரசிக்க முடிந்த அளவுக்கு பழைய கதாபாத்திரங்களில் ஸ்க்ராட்டை தவிர மற்ற கதாபாத்திரங்களை ரசிக்க முடியவில்லை. தொடர்ந்து பார்த்து வரும் கதாபாத்திரங்கள் என்பதால் போரடிக்கிறது. அதேபோல், ‘பக்’ கதாபாத்திரத்திரத்தின் மூளையில் இருக்கும் விஞ்ஞானி கதாபாத்திரம் வியக்க வைக்கிறது.

    அதேபோல், ஸ்க்ராட் அணில் மற்றும் பாட்டியாக வரும் க்ரானி ஆகியவை செய்யும் சேட்டைகளும் படத்தில் குழந்தைகளை குதூலகம் கொள்ள செய்கின்றன. இந்த கதாபாத்திரங்களுக்கு உண்டான காட்சிகள் குறைவாக இருப்பதால் படம் சுவாரஸ்யம் இல்லாமலே சென்றிருக்கிறது. எல்லா பாகங்களிலும் வரும் குடும்ப சென்டிமென்ட் காட்சிகள் இந்த படத்திலும் உண்டு. ஐஸ் ஏஜ் படங்கள் என்றாலே ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும். நண்பர்களென்றால் அவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக காட்சிகள் இருக்கும். அது இந்த பாகத்திலும் தொடர்கிறது.

    முந்தைய பாகங்களை விட இந்த பாகத்தில் நிறைய டெக்னிக் விஷயங்களை கையாண்டிருக்கிறார்கள். அதேபோல், கடந்த பாகங்களின் சுவாரஸ்யங்களையும் இந்த படம் இழந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். காமெடியும் குறைவாகவே இருக்கிறது. எப்போவோ முடியவேண்டிய ஐஸ் ஏஜ் படவரிசையை தேவையில்லாமல் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

    மொத்தில் ‘ஐஸ் ஏஜ் -5 கோலிசன் கோர்ஸ்’ குளுமையில்லை.
    தெலுங்கில் வெளிவந்த ‘டார்லிங்’ படம் பிரபாஸ் பாகுபலி என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
    காலேஜ் படிக்கும் காலத்தில் இருந்தே பிரபாஸின் அப்பா பிரபுவும், காஜலின் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் நண்பர்களாக இருப்பதால் பிரபாஸும், காஜலும் சிறுவயதிலிருந்தே நெருங்கி பழகுகிறார்கள். ஒருகட்டத்தில் காஜலின் அப்பா, அவரை வெளிநாட்டுக்கு அழைத்து சென்றுவிடுகிறார். பிரபாஸ் இந்தியாவிலேயே வளர்ந்து பெரியவனாகிறார்.

    காலேஜில் படித்து வரும் பிரபாஸை பிரபல ரவுடியான முகேஷ் ரிஷியின் மகள் ஒருதலையாக காதலிக்கிறாள். பிரபாஸிடம் சென்று தனது காதலை சொல்லும்போது பிரபாஸ் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இதனால், அவள் தற்கொலைக்கு முயல்கிறாள். தனது மகளின் காதலை புரிந்துகொண்ட முகேஷ் ரிஷி, பிரபாஸை அழைத்து தனது மகளின் காதலை ஏற்றுக் கொள்ளுமாறு துப்பாக்கி முனையில் அவனை மிரட்டுகிறார்.

    உடனே, பிரபாஸ் தனக்கு ஏற்கெனவே ஒரு காதலி இருப்பதாகவும், அவள் தற்போது கோமா நிலையில் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒரு அனுதாப கதையை கூறி முகேஷ் ரிஷியிடமிருந்து தப்பிக்கிறார். இந்நிலையில், வெளிநாட்டுக்கு சென்ற காஜல் அகர்வால் திரும்பவும் இந்தியாவுக்கு வருகிறார். அவரை சந்திப்பதற்காக எதிர்பார்த்து காத்திருக்கும் பிரபாஸ், அவளை சந்திக்கும் முதல் சந்திப்பிலேயே முட்டி மோதிக் கொள்கிறார். பின்னர், ஒருகட்டத்தில் இருவரும் காதலர்களாகிறார்கள்.

    இதற்கிடையில், பிரபாஸ் தனக்கு ஒரு காதலி இருப்பதாக கூறியதெல்லாம் பொய் என்பது முகேஷ் ரிஷிக்கு தெரிய வருகிறது. பிரபாஸ் தற்போது காஜலை காதலித்து வருவதும் ரிஷிக்கு தெரிய வருகிறது. இதனால் கோபமடைந்த முகேஷ் ரிஷி, பிரபாஸின் காதலியை கொன்று தனது மகளுடன் பிரபாஸை சேர்த்து வைக்க முடிவெடுக்கிறார்.

    இறுதியில், முகேஷ் ரிஷியின் திட்டம் பலித்ததா? பிரபாஸும், காஜலும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.

    தெலுங்கில் ‘டார்லிங்’ என்ற பெயரில் வெளிவந்த படம் தமிழில் ‘பிரபாஸ் பாகுபலி’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. ‘பாகுபலி’ படத்தில் மாவீரனாக தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த பிரபாஸ், இப்படத்தில் மிகவும் சாக்லேட் பாயாக நடித்திருப்பது புது அனுபவத்தை கொடுத்திருக்கிறது. உயரமான தோற்றம், ஒல்லியான தேகம் என ஓரளவு கவர்ந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு பிரபாஸ் ஒரு மாவீரனாகவே கவர்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு சண்டைக் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.

    காஜல் அகர்வால் வழக்கம்போல் ரொமான்ஸ், பாடல் காட்சிகளில் எல்லாம் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பிரபு பாசமுள்ள அப்பாவாகவும் கலகலப்பான மனிதராகவும் மனதில் பதிகிறார். பிரபுவின் நண்பர்களாக வருபவர்களும் நடிப்பில் மிளிர்கிறார்கள். முகேஷ் ரிஷி ஹைடெக் வில்லனாக மிரட்டுகிறார்.

    குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு அழகான படத்தை கொடுத்திருக்கிறார் கருணாகரன். காதல் கதையில் அளவான காமெடி, அளவான ஆக்ஷன் கலந்து படத்தை எடுத்திருக்கிறார். தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு தமிழ் ரசிகர்களையும் இப்படம் கவரும் என்று எதிர்பார்க்கலாம். அந்தளவுக்கு இரண்டு தரப்பு ரசிகர்களும் கவர்கிற வகையில் படத்தை கொடுத்திருக்கிறார்.

    ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையை கதைக்கேற்றவாறு அமைத்திருக்கிறார். ஆண்ட்ரூ பாபுவின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சிகளையும் கலர்புல்லாகவும் அமைத்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘பிரபாஸ் பாகுபலி’ ரசிக்கலாம்.
    முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள கிழக்கு சந்து கதவு எண் இந்த வாரம் வெளியாகியிருக்கிறது. படம் எப்படி இருக்கிறது என்பதை கீழே பார்க்கவும்...
    சென்னையில் சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார் நாயகி ஹசிகா. இவள் வேலைபார்க்கும் கம்பெனியின் மேனேஜர், அழகான பெண்களை பார்த்தால் அவர்களை அடைந்துவிட துடிப்பவர். இதனால், நாயகி மீதும் இவருக்கு ஒரு கண்.

    இந்நிலையில், ஹசிகாவை காதலிப்பதாக அங்கு பணிபுரியும் திலீபன் என்பவர் அவருக்கு மெசேஜ் அனுப்புகிறார். இதையறியும் மேனேஜர், ஹசிகாவுக்கு மெசேஜ் அனுப்பியவரை கூலிப்படையை வைத்து கொலை செய்கிறார். பின்னர், ஒருநாள் நாயகி பணிபுரியும் கம்பெனியிலேயே வேலைக்கு சேருகிறார் நாயகன் சுபாஷ்.

    நாயகியுடன் நெருங்கிப் பழக ஆரம்பிக்கும் நாயகன், ஒருகட்டத்தில் அவளை காதலிக்கவும் தொடங்குகிறார். நாயகியும் இவரை காதலிக்க தொடங்குகிறாள். நாயகன் அவளிடம் காதலை சொல்வதற்கு முன்பாகவே, அனைவர் முன்னிலையிலும் தனது காதலை நாயகனிடம் வெளிப்படுத்துகிறாள் நாயகி.
     
    இதனால் கோபமடையும் மேனேஜர், நாயகனையும் கொலை செய்ய திட்டம் போடுகிறார். ஆனால், அதிலிருந்து நாயகன் தப்பித்து விடுகிறார். பின்னர், நாயகியிடம் சென்று அவளை அடைய விரும்புவதாகவும், இதற்கு சம்மதிக்காவிட்டால் நாயகனை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். இதனால், பயந்துபோன நாயகி, நாயகனுக்கு போன்போட்டு தன்னை அவனுடைய சொந்த ஊருக்கு அழைத்து சென்றுவிடுமாறு கூறுகிறாள்.

    நாயகனும், நாயகியை அழைத்துக்கொண்டு அவனது சொந்த ஊருக்கு பஸ்ஸில் பயணம் செய்கிறார். செல்லும்வழியில் பஸ்ஸில் பயணம் செய்த திருடன் ஒருவன் நாயகனின் டிக்கெட்டையும், அவனது சூட்கேசையும் திருடிக் கொண்டு சென்றுவிடுகிறான். திருடன் தூக்கிச் சென்ற சூட்கேசில், ஒரு பிணம் இருப்பதை கண்டதும் அவன் அதிர்ச்சியடைகிறான். பின்னர், போலீஸ் விசாரிக்கையில், அது நாயகனுடைய சூட்கேஸ்தான் என்று போலீசார் கண்டுபிடிக்கின்றனர்.

    இதனால் நாயகனை போலீசார் பின்தொடர்கின்றனர். இறுதியில், அந்த பிணத்துக்கும் நாயகனுக்கும் தொடர்பு உள்ளதா? அந்த சூட்கேசில் இருந்த பிணம் யாருடையது? என்ற மர்மமான முடிச்சுகளுக்கு பிற்பாதியில் விளக்கம் சொல்லியிருக்கிறார்கள்.

    நாயகன் சுபாஷுக்கு ஹீரோயிசம் இல்லாத கதாபாத்திரம். இருப்பினும், தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி ஹசிகாவுக்கு கதையை தாங்கிச் செல்கிற வலுவான கதாபாத்திரம். ஆனால், அழுத்தமான காட்சிகளை நாயகிக்கு வழங்காததால் அந்த கதாபாத்திரத்தின் தன்மையே வலுவிழந்து போய்விட்டது.

    திலீபன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் முக்கியமான கதாபாத்திரமாக வலம்வந்திருக்கிறார். விசாரணை அதிகாரியாக வரும் சரவண சுப்பையா, போலீஸ் அதிகாரிக்குண்டான மிடுக்குடன் கச்சிதமாக கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார்.

    மாறிவரும் நாகரீக உலகில் பெண்கள் மாடர்னாக இருக்க ஆசைப்பட்டு தவறான பாதைக்கு செல்கின்றனர். இதனால், கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது என்பதை இப்படத்தின் மூலம் சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர். ஆனால், சரியான காட்சிப்படுத்துதல் இல்லாததால் சொல்ல வந்த கருத்து ரசிகர்களிடம் சரியாக சென்று சேரவில்லை. திரைக்கதை மிகவும் சொதப்பல்.

    வேலன் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை ஓரளவுக்கு நன்றாகவே இருக்கிறது. ஒளிப்பதிவும் சிறப்பாகவே இருக்கிறது.

    மொத்தத்தில் ‘கிழக்கு சந்து கதவு எண் 108’ பொலிவு இல்லை.
    ‘காதல்’ சுகுமார் இயக்கத்தில் அருண், அர்ஜுன், லீமாபாபு ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘சும்மாவே ஆடுவோம்’. இப்படம் எப்படியிருக்கிறது என்பதை உள்ளே பார்ப்போம்...
    ஒரு கிராமத்தில் ஜமீனாக இருக்கும் ஆனந்தன் அந்த ஊரில் உள்ள கூத்துக்கலைஞர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வரும் ஜமீனை, கூத்து கலைஞர்கள் அனைவரும் அவரை கடவுள் போல பார்த்து வருகின்றனர்.

    இருந்தாலும், ஜமீன் ஆனந்துக்கும் யுவராணிக்கும் திருமணமாகி பல ஆண்டு ஆகியும் அவருக்கு குழந்தையே இல்லை என்ற கவலையில் இருந்து வருகிறார். இந்த நிலையில், இவரது ஜோசியரான பாண்டு, ஜமீனுக்கு அவர் மனைவி மூலமாக முதல் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும், இரண்டாவதாகவே குழந்தை பிறக்கும் என்றும் கூறுகிறார்.

    இதனால் குழப்பத்தில் இருக்கும் ஜமீனின் சூழ்நிலையை புரிந்து, இந்த விஷயம் அறிந்து கூத்துக் கலைஞன் பாலாசிங்கின் மகளான அம்மு, ஜமீன் மூலமாக முதல் குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கிறாள். பாதி மனநிலையுடன் அம்முடன் ஒன்று சேருகிறார் ஜமீன். நாட்கள் கடந்ததும் அம்மு கர்ப்பமடைகிறாள். அதேநேரத்தில் யுவராணியும் கர்ப்பமடைகிறாள்.

    இருவருக்கும் ஒருநேரத்தில் ஒரே மருத்துவமனையில் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததும் அம்மு இறந்துபோகிறாள். ஜமீன் தான் செய்தது பெரிய குற்றமாக நினைத்து, அந்த குழந்தைக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி யுவராணிக்கு பிறந்த குழந்தையையும், அந்த குழந்தையையும் மாற்றி வைத்து விடுகிறார்.

    இரண்டு குழந்தைகளுக்கும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். ஜமீன் வீட்டில் வளரும் குழந்தையான அர்ஜுன் சினிமாவில் பெரிய ஹீரோவாகிறார். கூத்துக் கலைஞர்களுடன் வளரும் அருண், மெக்கானிக் கடை வைத்துக் கொண்டு, அர்ஜுனின் தீவிர ரசிகராகவும் இருக்கிறார்.

    அர்ஜுனின் தீவிர ரசிகராக இருக்கும் அருணுக்கு ஒரு சூழ்நிலையில், அர்ஜுனின் மாமாவால் அவமானம் நேரிடுகிறது. அர்ஜுனின் மாமா கூத்துக் கலைஞர்களுக்கு ஜமீன் வழங்கிய நிலத்தையெல்லாம் அபகரிக்க நினைக்கிறார். இதனால், சூழ்ச்சி செய்து அந்த நிலத்தை அபகரிக்க திட்டம் போடுகிறார்.

    அதன்படி, அர்ஜுனை ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து அவமானப்படுத்துவதாக கூறி, அவர்களுக்கு ஒரு சவால் விடுகிறார். அதாவது 30 நாட்களுக்குள் ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு படத்தை எடுத்துக் கொடுத்தால் ஜமீன் நிலத்தை அவர்களுக்கே பட்டா போட்டு கொடுத்துவிடுவதாகவும், அப்படி அவர்களால் முடியாவிட்டால் ஜமீன் கொடுத்த நிலத்தையெல்லாம் தன்னிடம் ஒப்படைத்துவிட்டு இந்த ஊரைவிட்டே வெளியேறவேண்டும் என்றும் கூறுகிறார்.

    இறுதியில், ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து அந்த சவாலை எதிர்கொண்டு தங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலத்தை மீட்டார்களா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

    நாயகன் அருண், மெக்கானிக் கடை வைத்திருப்பவராகவும், ஒரு நடிகனின் ரசிகராகவும் அழகாக நடித்திருக்கிறார். டான்ஸ் மற்றும் காதல் காட்சிகள், சண்டை காட்சிகளில் எல்லாம் ஓரளவுக்கு திருப்திப்படுத்தியிருக்கிறார். நடிகராக வரும் அர்ஜுனுக்கு சில காட்சிகளே இருந்தாலும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

    ஜமீனாக வரும் ஆனந்தன், முரட்டுத் தோற்றத்தில் இருந்தாலும் மிகவும் மென்மையான கதாபாத்திரம். ஒரு சில இடங்களில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தாலும், முக்கியமான காட்சிகளில் எல்லாம் சரியான வசன உச்சரிப்பு இல்லாதது கொஞ்சம் சோர்வடைய வைக்கிறது. நாயகி லீமா பாபு படம் முழுக்க வந்தாலும், அவரது கதாபாத்திரத்தை சரியாக பயன்படுத்தவில்லை. பாடல் காட்சிகளுக்கு மட்டுமே இவருக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

    கூத்து கலைஞராக வரும் பாலாசிங் தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார். பாலாசிங் மகளாக வரும் அம்மு, ஒருசில காட்சிகளே வந்தாலும், நிறைவாக செய்திருக்கிறார். சம்பத்ராம் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். இப்படத்தின் இயக்குனர் ‘காதல்’ சுகுமார் இப்படத்தில் இயக்குனராகவே நடித்திருக்கிறார்.

    இயக்குனர் ‘காதல்’ சுகுமார், கூத்துக் கலைஞர்களின் வலியையும், வேதனையையும் இந்த படத்தில் காட்ட நினைத்திருக்கிறார். ஆனால், சொல்ல வந்த விஷயத்தை விட்டு விலகி, கதையை வேறு கோணத்தில் கொண்டு சென்றுவிட்டார். அதேபோல், கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கையையும் இந்த படத்தில் பெரிதாக காட்டவில்லை. நடிகராக நம்மையெல்லாம் கவர்ந்த சுகுமார், இயக்குனராக மாறிய இரண்டு படங்களும் நம்மை கவரவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

    ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். வில்லியம்ஸ் ஒளிப்பதிவும் படத்தில் பெரிதாக எடுபடவில்லை.

    மொத்தத்தில் ‘சும்மாவே ஆடுவோம்’ ஆட்டம் சரியில்லை.
    கன்னடத்தில் வெளிவந்த திகில் படம் தமிழில் ‘நான் மாயா’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. இது எப்படி இருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்...
    நாயகன் ரவிச்சேத்தன், நாயகி காஜல் ராவத்தும் காதலர்கள். இருவரும் ஒரு பங்களாவுக்கு சென்று தனிமையில் உல்லாசமாக இருக்கிறார்கள். அப்போது, எதிர்பாராதவிதமாக காஜல் ராவத் இறந்துபோகிறாள். அவளை யாருக்கும் தெரியாமல் காட்டுக்குள் கொண்டு சென்று ஹரிஷ் ராஜ் புதைத்துவிடுகிறான்.

    அதன்பின்னர் சில ஆண்டுகள் கழித்து, அந்த பங்களாவுக்கு மாணவர்கள் நான்குபேர் வந்து தங்குகிறார்கள். அவர்களுக்கு அந்த வீட்டில் ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பதுபோல் தென்படுகிறது. பின்னர், சினிமா படம் எடுக்க வரும் நான்கு பேர் அந்த வீட்டில் தங்க, அவர்களுக்கும் அந்த அமானுஷ்ய சக்தி இருப்பதுபோல் தெரிகிறது.

    ஒருவழியாக அந்த பங்களாவுக்குள் பேய் இருப்பதை இவர்கள் உறுதி செய்கின்றனர். அந்த சூழ்நிலையில் பங்களாவின் காவலாளி மர்மமான முறையில் இறந்துபோக, இவர்களுக்கு பயம் தொற்றிக் கொள்கிறது. உண்மையில் பேய்தான் இவரை கொன்றதா? அல்லது வேறு யாராவது கொன்றார்களா? என்பதே மீதிக்கதை.

    திகில் படத்தை கவர்ச்சி கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய் சுரானா. ஆனால், காட்சிகள் கோர்வையாக இல்லாததால் படத்தை ரசிக்க முடியவில்லை. அதேபோல், திகில் காட்சிகளும் பெரிய அளவில் திகிலை ஏற்படுத்தவில்லை.

    படத்தில் நாயகியான காஜல் ராவத், கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளை  கிளுகிளுப்பாக படமாக்கியிருக்கிறார்கள். நாயகன் ரவிச்சேத்தன் தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். படத்தில் குறைவான கதாபாத்திரங்களையே பயன்படுத்தியிருந்தாலும், எந்த கதாபாத்திரமும் மனதில் பதியவில்லை.

    டேனியலின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பேய் படத்திற்குண்டான பின்னணி இசையை கொடுக்காதது வருத்தமே. பாபு ஒளிப்பதிவு கச்சிதம். குறிப்பாக இரவு நேர காட்சிகளுக்கு சரியான ஒளியமைப்பு வைத்து அழகாக படமாக்கியிருக்கிறார்.

    மொத்தத்தில் ‘நான் மாயா’ மயக்கவில்லை. 
    கேசவராஜன், சாக்‌ஷி அகர்வால், பவர்ஸ்டார் சீனிவாசன், ஆதவன், கருணாஸ், ரோபா சங்கர் ஆகியோர் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘கககபோ’. இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
    நாயகன் கேசவராஜன் படித்து விட்டு சென்னையில் தனது நண்பன் ஆதவன் உடன் தங்கி வேலை தேடி வருகிறார். கேசவனுக்கு, அவன் தொட்டதெல்லாம் துலங்காது என்ற ராசி. இப்படியிருக்கும் பட்சத்தில் அவனது குடும்பத்திலும் நிறைய பிரச்சினை இருக்கிறது. அவனுக்கும் நிறைய பிரச்சினை இருக்கிறது.

    அதேநேரத்தில், நாயகி சாக்ஷி அகர்வாலுக்கு நாயகனுக்கு நேர் எதிரான ராசி. தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய ராசி அவளுடையது. இவர்கள் இரண்டு பேருடைய ராசி ஒரேயொரு ஜோசியக்காரருக்கு மட்டுமே தெரியும். அந்த ஜோசியக்காரர் மூலம் நாயகியின் ராசி பற்றி தெரிந்துகொள்ளும் தொழிலதிபர் பஞ்சு சுப்பு அவளை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார். மறுமுனையில் நாயகியை எதேச்சையாக பார்க்கும் நாயகனும் அவளை ஒருதலையாக காதலித்து வருகிறார்.

    நாயகியை திருமணம் செய்துகொள்வதற்கு முன்பாக தனது நெருங்கிய நண்பர்கள் 7 பேர் மற்றும் நாயகியின் குடும்பத்தாருக்கும் பஞ்சு சுப்பு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்கிறார். அந்த விருந்தில் மதுவும் பரிமாறப்படுகிறது. அந்த விருந்துக்கு நண்பனுடன் அழையா விருந்தாளியாக வருகிறான் நாயகன். விருந்தில் அனைவரும் மது அருந்த, நாயகியும் மது அருந்து விடுகிறாள்.

    பின்னர், மாடிப்படியில் இருந்து இறங்கும்போது, நாயகனும் நாயகியும் மோதி ஒருவருக்கொருவர் உதட்டோடு உதடு முத்தமிட்டு கொள்கிறார்கள். போதையில் இருக்கும் நாயகி என்ன நடந்ததென்று தெரியாமல் எழுந்து போகிறாள். நாயகனும் வீடு திரும்புகிறான். மறுநாள் பார்க்கும்போது நாயகனுக்கு தொடர்ந்து நல்ல விஷயங்களாக நடக்கிறது. அதேநேரத்தில், நாயகிக்கு கெட்ட விஷயங்களாக நடக்கிறது.

    தனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியாமல் முழிக்கும் நாயகிக்கு அதற்காக காரணம் தெரிய வந்ததா? அவளுடைய வாழ்க்கை எந்த நிலைக்கு சென்றது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகன் கேசவராஜன் ஹீரோயிசம் இல்லாத ஒரு ஹீரோவாக நடித்திருக்கிறார். அப்பாவித்தனமான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். புதுமுகம் என்றாலும் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார். படம் வெளிவந்துள்ள இந்த சமயத்தில் அவர் உயிரோடு இல்லை என்பதுதான் சோகம்.

    சாக்ஷி அகர்வாலுக்கு ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம். படத்தின் கதை முழுவதும் இவரைச் சுற்றித்தான் நடக்கிறது. அதனால், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாகவே நடித்திருக்கிறார். இடைவேளைக்கு பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் இவரது கதாபாத்திரத்தை கொண்டு போயிருப்பது சிறப்பு. மேக்கப் மட்டும் குறைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.

    தொழிலதிபராக வரும் பஞ்சு சுப்பு அந்த கெட்டப்புக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அதேபோல், திருநங்கை கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். பஞ்சு சுப்புவின் நண்பர்களாக வரும் பவர் ஸ்டார், ரோபோ சங்கர், கருணாஸ், மதன்பாப், மயில்சாமி, சாண்டி உள்ளிட்டோரும் நாயகனின் நண்பனாக வரும் ஆதவனும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். மந்திரவாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் வரும் காட்சிகள் எல்லாம் கலகல காமெடி.

    இயக்குனர் விஜய் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை படமாக கொடுத்திருக்கிறார். மூடநம்பிக்கையாக கருதப்படும் ராசி, ஜோசியத்தை வைத்துக்கொண்டு அதில், நகைச்சுவை கலந்து ரசிகர்களின் ரசனைக்கேற்ப ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். படத்தில் நிறைய நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும், எல்லோருக்கும் சமமான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். குறிப்பாக, பவர் ஸ்டாருக்கு இந்த படத்தில் தனியாக ஒரு பாடல் வேறு கொடுத்து அசத்தியிருக்கிறார்.

    தினா, ஹமரா, பி.சி.சிவம் ஆகியோர் இசையில் பாடல்கள் சூப்பர். பின்னணி இசை ரொம்பவும் நன்றாகவே உள்ளது. இக்பால் ஒளிப்பதிவு பெரிய பட்ஜெட் படங்களுக்கு இணையாக உள்ளது.

    மொத்தத்தில் ‘கககபோ’ கலகல காமெடி.
    புதுமுகம் ராம்குமார், அருந்ததி ஆகியோர் நடிப்பில் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் ‘அர்த்தநாரி’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
    சென்னையில் நாசர் நடத்தி வரும் ஆசிரமத்தில் வளர்ந்தவர் நாயகன் ராம்குமார். இவரின் அப்பா, அம்மாவை சிறுவயதில் ரவுடிகள் கொன்றதால், நாசர் அவரை அரவணைத்து தனக்குப் பிறகு அந்த ஆசிரமத்தை கவனிக்கும் அளவிற்கு ஆளாக்கி இருக்கிறார்.

    இந்த நிலையில், போலீஸ் அதிகாரியாக இருக்கும் நாயகி அருந்ததியுடன் ராம்குமாருக்கு மோதல் ஏற்படுகிறது. பின்னர் ராம்குமார் ஆதரவற்றவர் என்று தெரிந்ததும் அவர் மீது அனுதாபப்படுகிறார் அருந்ததி. இந்த பழக்கம் நாளடைவில் இவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்த, இருவரும் காதலர்களாகிறார்கள்.

    இந்த நிலையில், நாசர் ஒருநாள் இறந்து போகிறார். இவர் இயற்கை மரணம் அடைந்துவிட்டதாக நினைத்திருந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று அருந்ததி மூலம் தெரிந்துக் கொள்கிறார் ராம்குமார். இதனால், நாசரை கொலை செய்தவர்களை பழிவாங்கத் துடிக்கிறார். ஆனால், அருந்ததியோ கொலை செய்தவர்களை கண்டுபிடித்து சட்டப்படி தண்டிக்க முயற்சிக்கிறார்.

    இறுதியில் கொலையாளியை கண்டுபிடித்தது யார்? கொலையாளியை ராம்குமார் பழி வாங்கினாரா? அருந்ததி சட்டப்படி தண்டனை வாங்கித் தந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ராம்குமார், முதல் பாதியில் வெகுளித்தனமான நடிப்பையும், பிற்பாதியில் ஆக்‌ரோஷமான நடிப்பையும் வெளிப்படுத்தி கலக்கியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அருந்ததி, கவர்ச்சியிலும், போலீஸ் அதிகாரியாகவும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். போலீஸ் அதிகாரிக்குண்டான கம்பீரத்துடன் படம் முழுக்க வருகிறார்.

    ஆசிரமம் நடத்துபவராக வரும் நாசர், தன்னுடைய அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். வில்லனாகவும், காமெடியனாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார் மொட்டை ராஜேந்திரன். மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    கிரைம் திரில்லர் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுந்தர இளங்கோவன். படத்தை போரடிக்காமல் விறுவிறுப்புடன் கொண்டு சென்றிருக்கிறார். அருந்ததிக்கு ஒரு ஹீரோ அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். சுவாரஸ்யமான காட்சிகள் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    செல்வ கணேஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியை திரில்லர் கதைக்கு ஏற்றாற்போல் இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ரஞ்சன் ராவ் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘அர்த்தநாரி’ ஆக்ரோஷம்.
    சந்தானம் நடிப்பில் திகில் கலந்த காமெடி படமாக உருவாகியுள்ள ‘தில்லுக்கு துட்டு’ படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படம் காமெடியுடன் திகிலை ஏற்படுத்தியுள்ளதா? என்பதை கீழே பார்ப்போம்...
    சிவன் கொண்ட மலை என்ற ஊரின் மலை மீது மர்ம பங்களா ஒன்று இருக்கிறது. பேய் இருப்பதால் அந்த ஊர் மக்கள் யாரும் அந்த பங்களாவுக்குள் போகவே பயப்படுகிறார்கள்.

    இது ஒருபுறம் இருக்க, சென்னையில் பெற்றோர் மற்றும் மாமா கருணாசுடன் வாழ்ந்து வருகிறார் சந்தானம். கருணாஸ் வைத்திருக்கும் லோடு வேனுக்கு தவணை கட்டாததால் கடன் கொடுத்த சேட்டு, அந்த வேனை எடுத்துச் சென்றுவிடுகிறார். இதுபற்றி கருணாஸ் சந்தானத்திடம் முறையிட, சந்தானம் பதிலுக்கு சேட்டுவின் காரை தூக்குவதற்காக சேட்டு வீட்டுக்கு கருணாசுடன் செல்கிறார். அப்போது, சேட்டு மகளான நாயகி சனாயா இவர்களை போலீசிடம் மாட்டி விடுகிறாள்.

    இதனால் கடுப்பான சந்தானம் நாயகியை எப்படியாவது பழிவாங்க வேண்டுமென்று துடிக்கிறாள். அதற்குள் நாயகி சனாயா, சந்தானத்தை தேடி அவரது வீட்டுக்கே வருகிறாள். அப்போதுதான் இருவரும் சிறுவயதில் ஒன்றாக படித்தவர்கள் என்பதும், இருவரும் ஒருவருக்கொருவர் நேசித்தவர்கள் என்பதும் தெரிகிறது. இதன்பிறகு, இருவரும் காதலிக்கிறார்கள்.

    இந்த விஷயம் நாயகியின் அப்பாவுக்கு தெரிய வருகிறது. சந்தானம் வசதியானவன் என்று நினைத்து இவர்களை சேர்த்து வைக்க நினைக்கிறார். பின்னர், சந்தானம் வசதியானவர் இல்லை என்று தெரியவந்ததும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதன்பிறகு, நாயகிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார். அப்போது சந்தானம் உள்ளே புகுந்து அதை கலைத்துவிடுகிறார்.

    சந்தானத்தை நேரடியாக எதிர்க்க முடியாத சேட்டு, ரவுடியான நான் கடவுள் ராஜேந்திரனின் உதவியை நாடுகிறார். சந்தானத்தை தீர்த்துக் கட்டுவதற்காக ராஜேந்திரன் பலே திட்டம் ஒன்றை போடுகிறார். அதன்படி, சந்தானத்திற்கு, சனாயாவை திருமணம் செய்து கொடுப்பதாக நம்ப வைத்து, சிவன் கொண்ட மலையில் இருக்கும் பங்களாவுக்கு அழைத்துச் சென்று அவரை கொலை திட்டம் போடுகிறார்கள்.

    அதன்படி, நாயகியின் அப்பா, சந்தானத்தை அந்த பங்களாவுக்கு குடும்பத்தோடு அழைத்து செல்கிறார். ஏற்கெனவே, பேய் இருக்கும் அந்த பங்களாவில் ராஜேந்திரனின் திட்டம் நிறைவேறியதா? அல்லது அங்கிருந்த பேய் இவர்களை ஆட்டுவித்ததா? என்பதை நகைச்சுவையுடன் திகில் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.


    சந்தானம், முந்தைய படங்களில் இருந்து இந்த படத்தில் ஹீரோவுக்குண்டான தகுதியில் கூடியிருக்கிறார். குறிப்பாக, நடனம், சண்டை காட்சிகள் ஆகியவற்றை ஒரு மாஸ் ஹீரோவுக்கு இணையாக செய்து காட்டியிருக்கிறார். இவருடைய தோற்றமும் அனைவரையும் ரசிக்க வைக்கிறது. படத்தில், ஒவ்வொரு காட்சியிலும் இவர் கொடுக்கும் கவுண்டர் வசனங்கள் திகில் படம் என்பதையும் தாண்டி காமெடி சரவெடியாக வெடித்திருக்கிறது.

    நாயகி சனாயா புதுமுகம் என்றாலும், நடிப்பில் அது தெரியவில்லை. அவரது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து ரசிக்க வைத்திருக்கிறார். சேட்டு பெண் என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். படம் முழுக்க சந்தானத்துடன் பயணிக்கும் கருணாஸ், அவருடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி கலகலப்பூட்டியிருக்கிறது. பேய்க்குப் பயந்து இவர் நடுங்கும் காட்சிகள் எல்லாம் நம்மையும் அறியாமல் சிரிப்பை வரவழைத்திருக்கிறது.

    சேட்டுவாக வரும் பாலிவுட் நடிகர் சௌரப் சுக்லாவுக்கு பொருத்தமான கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார். ஹைடெக்கான ரவுடியாக வரும் மொட்டை ராஜேந்திரன், சந்தானத்தை கொல்வதற்கு போடும் திட்டத்திலிருந்து இவரது நகைச்சுவை கலாட்டா ஆரம்பிக்கிறது. படத்தின் இறுதிவரை நகைச்சுவைக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார். குறிப்பாக உண்மையான பேயிடம் இவர் அடிவாங்கும் காட்சிகள் உச்சக்கட்ட காமெடி.

    சந்தானத்துக்கு அப்பாவாக வரும் ஆனந்த்ராஜ் ஹாலிவுட்டுக்கு இணையாக போடும் கெட்டப்புகள் எல்லாம் அசத்தல். நகைச்சுவையிலும் கலக்கியிருக்கிறார்.

    சின்னத்திரையில் வந்த ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் பல படங்களை கிண்டல், கேலி செய்த ராம்பாலா, ஒரு முழுநீள நகைச்சுவை படத்தை திகில் கலந்து சொல்லியிருக்கிறார். குறைந்த கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு படம் முழுக்க நகைச்சுவை விருந்து கொடுப்பது என்பது சவாலான விஷயம். அதை இயக்குனர் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

    சந்தானத்தை மாஸ் ஹீரோவாக காட்டும் வகையில் ஸ்டண்ட் மாஸ்டர் ஹரி தினேஷ் சண்டைக்காட்சிகளை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். காமெடி படத்திலும் திகில் கலந்து ரசிகர்களை பயமுறுத்தவும் செய்திருக்கிறார்.

    தமன் இசையில் பாடல்கள் சூப்பர். பின்னணி இசையிலும் திகிலூட்டியிருக்கிறார். தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவு காட்சிகளை கலர்புல்லாக காட்டியிருக்கிறது. திகிலூட்டும் காட்சிகளில் இவரது கேமரா கோணங்கள் நம்மை பயமுறுத்தியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘தில்லுக்கு துட்டு’ த்ரில்லான ஹிட்டு.
    சிவா, சென்ட்ராயன், பவர் ஸ்டார் ஆகியோர் நடிப்பில் கலகலப்பான காமெடி படமாக உருவாகியிருக்கும் படம் ‘அட்ரா மச்சான் விசிலு’. இப்படம் இன்று வெளியாகியுள்ளது. படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்...
    மதுரையில் வசிக்கும் சிவா, சென்ட்ராயன், அருண் பாலாஜி மூவரும் பவர் ஸ்டாரின் தீவிர ரசிகர்கள். மூன்று பேருக்கும் போதியான வருமானம் இல்லாவிட்டாலும், பவர் ஸ்டார் படம் வெளிவரும் போதெல்லாம் கடன் வாங்கியாவது கட்அவுட் வைப்பது போஸ்டர் அடிப்பது, பாலாபிஷேகம் செய்வது என ஆயிரக்கணக்கில் செலவு செய்து வருகின்றனர்.

    இதற்கிடையில் சிவாவும் நாயகி நைனா சர்வாரும் காதலித்து வருகிறார்கள். எந்த வேலைக்கும் செல்லாத சிவாவுக்கு அவ்வப்போது பண உதவிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில், அப்புக்குட்டி ரசிகர்களுக்கும், பவர் ஸ்டாரின் ரசிகர்களான நண்பர்களுக்கும் அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. இதை, அவ்வப்போது போலீஸ் அதிகாரியான ராஜ்கபூர் பஞ்சாயத்து செய்து தீர்த்து வைக்கிறார்.

    ஒருமுறை ராஜ்கபூர், சிவா மற்றும் அவரது நண்பர்களுக்கு உங்களை வைத்து உங்கள் தலைவர் பெரிய நிலைக்கு ஆளாகிவிட்டார். அவரை வைத்து நீங்கள் ஏன் பெரிய நிலைக்கு வரக்கூடாது. அவருடைய படங்களை வாங்கி, மதுரை ஏரியாவில் விநியோகம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறுகிறார். நண்பர்களும் அவரது அறிவுரையை ஏற்று, பணத்தை திரட்டி பவர் ஸ்டாரின் மேனேஜரான சிங்கமுத்துவிடம் ஒப்படைக்கிறார்கள்.

    சிங்கமுத்துவும் மதுரை ஏரியா விநியோகஸ்தர் உரிமையை சிவா மற்றும் அவரது நண்பர்களுக்கு கொடுக்கிறார். ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இதனால் நண்பர்கள் நஷ்டமடைகிறார்கள். இழந்த பணத்தை திருப்பி கேட்பதற்காக பவர் ஸ்டாரை நேரில் சந்திக்கிறார்கள். ஆனால், பவர் ஸ்டாரோ பணத்தை திருப்பி கொடுக்க முடியாது என கூறி இவர்களை அவமானப்படுத்தி திருப்பி அனுப்புகிறார்.

    இதனால் மனமுடைந்த நண்பர்கள் தங்கள் பணத்தை பவர் ஸ்டாரிடமிருந்து மீட்டு அவருக்கு நல்ல பாடம் புகட்ட எண்ணுகிறார்கள். இதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

    பவர் ஸ்டார் இந்த படத்தில் வில்லன் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிகராகவே வரும் அவர் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இவர் படத்தில் பேசும் பஞ்ச் டயலாக்குகளுக்கு ரசிகர்களின் விசில் சத்தம் கண்டிப்பாக காதை பிளக்கும். மற்றவர்களை காப்பியடித்து நடித்தாலும், அதில், தனக்கு என்ன வருமோ அதை சரியாகவே செய்திருக்கிறார்.

    சிவா இன்னும் கொஞ்சம் அவரது முகத்தில் நடிப்பை வரவழைக்க முயற்சிக்கலாம். ரொமான்ஸ், சோகம், பழி வாங்க துடிப்பது என ஒவ்வொரு இடத்திலும் ஒரேமாதிரியான முகபாவனையில் நடித்திருந்தாலும் டைமிங் காமெடியால் ரசிக்க வைக்கிறார். இவர் ஆடும் நடனத்துக்காக இவருக்கு அடுத்த பாக்யராஜ் என்று பட்டம் கொடுக்கலாம் என்பதுபோல் இருக்கிறது. சென்ட்ராயன் இதுவரையிலான படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் ரசிக்க வைத்தவர், இந்த படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார். தனது கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

    மற்றொரு நாயகனாக வரும் அருண் பாலாஜியும் தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை கொடுத்திருக்கிறார். நாயகி நைனா சர்வாரும் அவருடைய பகுதியை சிறப்பாகவே செய்திருக்கிறார். பார்க்க கொழுக் மொழுக்வென கவர்ச்சியிலும் கிறங்கடித்திருக்கிறார். பவர்ஸ்டாரின் மேனேஜராக வரும் சிங்கமுத்து, அரசியல் நையாண்டியையும் உள்ளே புகுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். மற்றபடி, படத்தில் நடித்திருக்கும் சிறு சிறு கதாபாத்திரங்களும் நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

    ‘கச்சேரி ஆரம்பம்’ என்ற அதிரடியான ஒரு படத்தை  கொடுத்த இயக்குனர் திரைவண்ணன் முழுக்க முழுக்க காமெடியாக ஒரு படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். முதல் பாதி பவர் ஸ்டாரின் காமெடி என கதை நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் சிங்கமுத்து மற்றும் சிவாவின் நண்பர்கள் செய்யும் லூட்டி கலகலப்பூட்டியிருக்கிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

    என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர். குறிப்பாக, ‘யாரு யாரு இவ’ பாடல் ரசிகர்களை துள்ளி ஆட்டம் போட வைக்கிறது. ‘தேவதை தேவதை’ பாடல் அழகான மெலோடி என ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு சிறப்பாக கொடுத்திருக்கிறார். காசி விஸ்வா ஒளிப்பதிவு கண்ணுக்கு விருந்தாக இருக்கிறது.

    மொத்தத்தில் ‘அட்ரா மச்சான் விசிலு’ விசிலடிக்கலாம்.
    தி லெஜன்ட் ஆப் டார்சான் என்ற ஆங்கிலப் படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
    1884ம் ஆண்டு பெர்லின் மாநாட்டில் அரசியல் புள்ளிகள் ஆப்பிரிக்கன் காங்கோவை ஆளுக்கொரு பகுதியாக பிரித்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள். பெல்ஜியம் அரசர் லியோபோல்ட் யானை தந்தம், கனிம வளங்கள் உள்ள காங்கோ நதி பகுதியை எடுத்துக் கொள்கிறார்.

    அந்த பகுதியை மேம்படுத்துதளில் லியோபோல்ட் ஐந்து ஆண்டுகளில் மிகவும் கடனாளியாக மாறுகிறார். தன்னுடைய ராணுவத்திற்கு கூட சம்பளம் கொடுக்க முடியாத நிலைமைக்கு தள்ளப்படுகிறார். இதனால் தன்னுடைய இடது கையான லியோன்ரோம் அழைத்து ஓபர் புகர் வைரத்தை எடுத்து வர சொல்லி அனுப்புகிறார்.

    இதற்காக லியான்ரோம் காங்கோ காட்டுப் பகுதிக்கு செல்கிறார். அங்கு காட்டு வாசிகளின் பிடியில் லியோன்ரோம் சிக்குகிறார். காட்டுவாசி தலைவன், வைரம் வேண்டும் என்றால் காட்டில் இருந்து நகரத்திற்கு குடி பெயர்ந்த டார்சானை அழைத்து வரும்படி கேட்கிறார்கள். அதன்படி லியோன்ரோமும் டார்சனை அழைத்து வர செல்கிறார். ஆனால், அதற்கு பதிலாக டார்சானின் மனைவியை காட்டுக்கு அழைத்து வந்து விடுகிறார்.

    இறுதியில் டார்சான் காட்டுக்குச் சென்று தன் மனைவியை மீட்டாரா? லியான்ரோமுக்கு வைரம் கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    காட்டை விட்டு நாட்டுக் சென்ற டார்சான், மறுபடியும் காட்டு வரும் படியாக படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் டேவிட் யாட்ஸ். திரைக்கதையில் சிறு தோய்வு இருந்தாலும், நடிகர்கள், விஷுவல் எபெக்ட்ஸ், கிரியேட்டிவ் ஆகியவற்றில் டார்சான் முத்திரை பதிக்கிறது.

    டார்சான் வேடத்தில் அலெக்சாண்டர் ஸ்கார்ஸ்கார்ட் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது உடலமைப்பும், கதாபாத்திரத்திற்கு நன்றாகவே பொருந்திருக்கிறது. ஜேன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மார்கோட் ராபீ நடிப்பில் அசர வைக்கிறார். மலை அளவில் ஒரு கொரில்லாவுடன் சாதாரண மனிதன் மோதுவது போல் வந்த படங்களுக்கு மாறாக, கொரில்லாக்களின் உண்மையான சைஸில் அவற்றைக் காண்பித்திருப்பது நெருடலைத் தவிர்த்தாலும், பல ஆண்டுகளாக காட்டைவிட்டு ஒதுங்கி இருந்த டார்சான் காட்டுக்குள் சென்றதும் மரத்துக்கு மரம் தாவிச்செல்வதெல்லாம் லாஜிக் மீறலாக இருக்கிறது.

    மொத்தத்தில் ‘தி லெஜன்ட் ஆப் டார்சான்’ புதிய முயற்சி.
    ×