என் மலர்tooltip icon

    தரவரிசை

    வெங்கேடஷ்-நயன்தாரா நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள ‘பாபு பங்காரம்’ படம் செல்வி என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. அந்த படம் எப்படியுள்ளது? என்பதை கீழே பார்ப்போம்...
    போலீஸ் அதிகாரியான வெங்கடேஷ் இரக்க குணமும், பிறருக்கு உதவும் மனம் கொண்டவராக இருக்கிறார். கேட்டரிங் நடத்தி வரும் நயன்தாராவும் அதே குணம் கொண்டவராக இருக்கிறார். இவரது அப்பா ஜெயப்பிரகாஷ் வருமான வரித்துறையில் பணியாற்றியவர். உயரதிகாரியை கொலை செய்தார் என்பதற்காக அவரை போலீஸ் தேடுகிறது. இதனால், அவர் நயன்தாராவை விட்டு தலைமறைவாகவே இருக்கிறார்.

    ஒருபக்கம் போலீஸ் அவரை கைது செய்ய முயற்சி செய்துகொண்டிருக்கும் நிலையில், மறுமுனையில் ரவுடிக் கும்பல் ஒன்றும் ஜெயப்பிரகாஷை தேடி வருகிறது. இந்நிலையில், நயன்தாராவை அப்பா இல்லாமல் கஷ்டப்படுவதை பற்றி கேள்விப்பட்ட வெங்கடேஷ், அவள்மீது இரக்கப்பட்டு, தான் போலீஸ் என்பதை அவளிடம் காட்டிக்கொள்ளாமல் அவளுக்கு உதவி செய்கிறார். நாட்கள் செல்ல செல்ல இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். இந்நிலையில், ஜெயப்பிரகாஷின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவரை பார்ப்பதற்காக வரும் ஜெயப்பிரகாஷை கைது செய்கிறார் வெங்கடேஷ்.

    தன்னுடைய அப்பாவை கைது செய்வதற்காகத்தான் வெங்கடேஷ் நல்லவன் போல் நாடகமாடினான் என்பதை அறிந்து நயன்தாரா, வெங்கடேஷ் மீது கோபம் கொள்கிறார். உண்மையில் ஜெயப்பிரகாஷ்தான் கொலை குற்றத்துக்காகத்தான் தலைமறைவாக இருந்தாரா? ரவுடிக் கும்பல் அவரை தேட காரணம் என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

    முதல்பாதி முழுக்க தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் நடித்திருக்கும் வெங்கடேஷ், இரண்டாம் பாதியில் ஆக்ஷன் காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். இப்படத்தின் போலீஸ் கதாபாத்திரத்திற்கும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இரண்டு வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களில் ரொம்ப மெனக்கெடுத்து நடித்திருக்கிறார்.

    நயன்தாரா தன்னுடைய அழகால் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார். நகைச்சுவை காட்சிகளாட்டும், ரொமான்ஸ் காட்சிகளாகட்டும் தனது பங்கை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார். பிரம்மானந்தம் காமெடி ரசிக்க வைக்கிறது. சம்பத் ரவுடி வில்லனாக வந்து மிரட்டியிருக்கிறார். ஜெயப்பிரகாஷ் பொறுப்பான அதிகாரியாகவும், பாசமுள்ள அப்பாவாகவும் மனதில் பதிகிறார். முரளி சர்மாவும் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை பதிவு செய்திருக்கிறார்.

    பலமுறை பார்த்த கதையையே கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டி எடுக்க நினைத்திருக்கிறார் மாருதி தசாரி. ஆனால், பெரிதளவில் எடுபடவில்லை. எளிதாக யூகிக்கக்கூடிய வகையில் அடுத்தடுத்த காட்சியமைப்புகள் அமைவதால் படம் விறுவிறுப்புக்கு தடை போடுகிறது. ஜிப்ரானின் இசையில் அமைந்துள்ள பாடல்கள் படத்திற்கு ஆறுதலாக அமைந்திருக்கிறது. அதேபோல் ரிச்சர்ட் பிரசாத்தின் ஒளிப்பதிவும் கலர்புல்லாக இருக்கிறது. குறிப்பாக பாடல் காட்சிகளை இவரது கேமரா அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘செல்வி’ செழிப்பாய் இல்லை.
    ‘குக்கூ’ என்ற படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான ராஜுமுருகன் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘ஜோக்கர்’ படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்..
    குரு சோமசுந்தரம் தன்னை ஜனாதிபதியாக நினைத்துக் கொண்டு ஊரில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறார். இவருக்கு உறுதுணையாக காயத்ரி கிருஷ்ணாவும், மு.ராமசாமியும் இருக்கின்றனர். இவர் என்னதான் ஊரின் நன்மைக்காக போராட்டங்கள் நடத்துவது, நீதிமன்றங்களில் வழக்கு நடத்துவது என்று இருந்தாலும், ஊர் மக்கள் அனைவரும் இவரை ஜோக்கராகத்தான் பார்க்கின்றனர்.

    சொந்த வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்தான் குரு சோமசுந்தரம் இவ்வாறு நடந்துகொள்வதற்கு காரணம் என்பது தெரிகிறது. அப்படி அவர் வாழ்க்கையில் என்னதான் நடந்தது? தான் செய்யும் இந்த காரியங்களால் அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகளுக்கு நியாயம் கிடைத்ததா? என்பதுதான் ஜோக்கர் படத்தின் மீதிக்கதை.

    ஒரு மனிதனின் ஏழ்மையை பயன்படுத்தி அரசியல்வாதிகள் எப்படி அரசியலாக்குகின்றனர் என்பதுதான் இப்படத்தின் கதை. நாட்டில் நடக்கும் அனைத்து அநியாயங்களையும் மிகவும் தைரியமாக இப்படத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறார் ராஜு முருகன். படத்திற்கு மிகப்பெரிய பலம் குரு சோமசுந்தரத்தின் நடிப்புதான். அவருடன் வரும் மு.ராமசாமி எதற்கெடுத்தாலும் வழக்கு போடுவது, மேலும் காயத்ரி கிருஷ்ணா அனைத்தையும் பேஸ்புக்கில் போட்டுவிடுவது என படத்தின் முதல் பாதி மிகவும் கலகலப்பாக நகர்கிறது. கிளைமாக்சில் கோர்ட்டில் சோமசுந்தரம் தைரியமாக பேசும் காட்சி ரசிக்க வைக்கிறது.

    நம்முடைய நிஜ வாழ்க்கையில் நடக்கக்கூடிய சம்பவங்களையும், நம்மை சுற்றியே இருக்கும் கதாபாத்திரங்களையும் தத்ரூபமாக காண்பித்திருப்பதால் படம் நம்மிடையே ஒன்றிவிடுகிறது. ஒரு கழிப்பிடத்தில்கூட இவ்வளவு பெரிய ஊழல் செய்யமுடியுமா? என்பதை இப்படத்தில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் ராஜு முருகன். படத்திற்கு மற்றொரு பெரிய பலம் வசனங்கள்தான். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என யாரையும் விட்டுவைக்காமல் அனைவரையும் விளாசி தள்ளியிருக்கிறார். இந்த மாதிரி வசனங்கள் வைப்பதற்கு உண்மையிலேயே தைரியம் வேண்டும்.

    படத்தில் அரசியல் சாயம் இருந்தாலும், ரசிக்கும்படியான ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார் ராஜு முருகன். அதற்காக அவரை பாராட்டலாம். ஷால் ரோல்டனின் இசையில் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற பாடல், காட்சியுடன் பார்க்கும்போது ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும் சூப்பர். செழியனின் ஒளிப்பதிவில் கிராமத்தின் அழகையும், அழுக்கையும் ஒருசேர காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு.

    மொத்தத்தில் ‘ஜோக்கர்’ சமூக அக்கறை.
    சுதீப்-நித்யாமேனன் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘முடிஞ்சா இவன புடி’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    நாயகன் சுதீப், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் தொழிலதிபர்களின் வீட்டில் புகுந்து, அவர்களின் கறுப்பு பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்து, ரகசிய இடத்தில் பதுக்கி வைத்து வருகிறார். அதன்படி, பெரிய தொழிலதிபரான முகேஷ் திவாரியின் வீட்டில் புகுந்து, அவர் பதுக்கி வைத்திருந்த கறுப்பு பணத்தையெல்லாம் திருடிச் சென்றுவிடுகிறார். கொள்ளைபோனது கறுப்பு பணம் என்பதால் முகேஷ் திவாரியால் போலீசில் புகார் அளிக்கமுடியவில்லை.

    இருப்பினும், தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரி மூலமாக அந்த பணத்தை திருடியவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், போலீசுக்கு ஒரு ரகசிய சி.டி. ஒன்று கிடைக்கிறது. அதில் சுதீப் திருடிய பணத்தை நண்பர்களுடன் பங்கிட்டு கொள்ளும் காட்சி பதிவாகியிருக்கிறது. அதில் தெரியும் சுதீப்பை பார்க்கும் ஒரு கைதி, சுதீப் ரியல் எஸ்டேட் செய்து வருவதாகவும், மிகவும் நல்ல மனிதர் எனவும் அவருக்கு சர்டிபிகேட் கொடுக்கிறார்.

    இதையடுத்து, சுதீப்பை கைது செய்யும் போலீசார், அவரை அடித்து உதைத்து விசாரிக்கின்றனர். அப்போது, சுதீப் அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லையென்றும், தனது அண்ணன் என்றும், தான் ஒரு அப்பாவி என்றும் கூறுகிறார். இதனால் குழப்பமடைந்த போலீஸ் அவரை விடுதலை செய்கிறது.

    இதையடுத்து, மற்றொரு தொழிலதிபரான சரத்லோகித்சவாவின் வீட்டிலும் கறுப்பு பணம் கொள்ளை போகிறது. இதற்கு காரணமும் சுதீப்தான் என்று முறையிட, போலீசார் கண்டுகொள்வதில்லை. இதனால், கோபமடைந்த முகேஷ் திவாரியும், சரத் லோகித்சவாவும் கொள்ளைபோன தங்களது பணத்தை தாங்களே மீட்டெடுக்க நினைக்கிறார்கள்.

    இறுதியில், அந்த கறுப்பு பணத்தையெல்லாம் சுதீப்பிடம் இருந்து மீட்டார்களா? உண்மையில் இந்த கொள்ளைகளுக்கெல்லாம் காரணம் யார்? என்பதை விறுவிறுப்பாக முடித்திருக்கிறார்கள்.

    நாயகன் சுதீப் படத்தின் கதையை பலமாக தாங்கி நிற்கிறார். அப்பாவித்தனம், அடிதடி என இருவேறு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். இரண்டு கதாபாத்திரங்களுக்கும் வெவ்வேறு விதமான நடிப்பை வரவழைத்து அசர வைத்திருக்கிறார். ஹீரோவுக்கே உரித்தான மாஸ், ஆக்ஷன், மசாலா, சென்டிமென்ட் என அனைத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார். படு ஸ்டைலிஷாக நடித்திருக்கிறார்.

    நித்யா மேனன், அழகு பதுமையாகவும் காதலனை நல்வழிப்படுத்தவும் வந்து செல்கிறார். நாசர், பிரகாஷ் ராஜ் ஆகிய இருவரும் தங்களுடைய காட்சிகளில் முத்திரை பதித்துள்ளார்கள். பிரகாஷ்ராஜ் தந்தையாக தனித்து நிற்கிறார். சதீஷின் டைமிங் காமெடி நகைச்சுவைக்கு கைகொடுக்கிறது. வில்லன்களாக வரும் முகேஷ் திவாரி, சரத் லோகிஸ்த்வா இருவரும் கொஞ்சம் மிரட்டியிருக்கிறார்கள். போலீஸாக வரும் சாய் ரவி மிரட்டலும் காமெடியும் கலந்து கொடுத்து அசத்தியிருக்கிறார்.

    இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்து கமர்ஷியல் படத்தை கொடுத்திருக்கிறார். படத்தில் அவரது பழைய படமான ‘வில்லன்’ படத்தின் சாயல் தெரிகிறதே தவிர, மற்றபடி, படத்தை இயக்கிய விதம் மிகவும் அருமை. படத்தில் காமெடி டிராக் என்று எதுவுமே வைக்காமல், ஹீரோவை வைத்தே காமெடி டிராக்கை உருவாக்குவதில் இவருக்கு நிகர் இவர்தான்.

    இமான் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடாவிட்டாலும், பின்னணி இசை அதிரடி காட்டியிருக்கிறது. ராஜரத்தினத்தின் ஒளிப்பதிவில் சண்டைக் காட்சிகளும், பாடல் காட்சிகளும் அபாரம்.

    மொத்தத்தில் ‘முடிஞ்சா இவன புடி’ பிடிச்சிருக்கு.
    விக்ரம் பிரபு எல்லை பாதுகாப்பு படை வீரராக நடித்துள்ள ‘வாகா’ படம் இன்று திரைக்கு வந்துள்ளது. அந்த படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்...
    விக்ரம் பிரபு படித்து முடித்துவிட்டு ஜாலியாக பொழுதைக் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். ஆனால், அவரது அப்பாவோ விக்ரம் பிரபுவை தன்னுடைய மளிகைக் கடையில் வேலைக்கு அமர்த்துகிறார். இதனால், தந்தையின் தொல்லையில் எப்படி விடுபடலாம் என்று காத்துக்கொண்டிருக்கும் விக்ரம்பிரபுவுக்கு, அவரது பெரியப்பா மகன் சத்யன் மூலமாக எல்லை பாதுகாப்பு படைக்கு ஆள் எடுப்பது தெரிய வருகிறது. அங்கு சென்றால் எந்நேரமும் சரக்கு கிடைக்கும் என்பதற்காக அதில் சேர முடிவெடுக்கிறார்கள்.

    எல்லை பாதுகாப்பு படைக்கான ஆள் தேர்வில் விக்ரம் பிரபு மட்டும் தேர்வாகிறார். சத்யனை உடல் எடையை காரணம் காட்டி நீக்குகின்றனர். அதன்பிறகு, இந்திய எல்லையில் பாதுகாப்பு பணிக்கு செல்லும் விக்ரம் பிரபுவுக்கு அங்கு தனிமை வாட்ட, சொந்த ஊரே பரவாயில்லை என்று முடிவெடுத்து அங்கிருந்து கிளம்ப பார்க்கிறார். அப்போது, எதேச்சையாக நாயகி ரன்யா ராவை பார்க்க, அவள் மீது காதல் கொள்கிறார். அவளுக்காக எல்லை பாதுகாப்பு படையிலேயே இருக்க முடிவு செய்கிறார்.

    விக்ரம் பிரபுவும், ரன்யா ராவும் அடிக்கடி சந்தித்து நட்பாகிறார்கள். பின்னர், அந்த நட்பு காதலாக மாறுகிறது. இந்நிலையில், காஷ்மிரீல் உள்நாட்டு கலவரம் வெடிக்கிறது. காஷ்மீரில் உள்ள பாகிஸ்தானியர்கள் எல்லோரும் வெளியேற வேண்டும் என்று போராட்டம் வலுக்கிறது. அப்போதுதான் தெரிகிறது நாயகி ரன்யா ராவ் பாகிஸ்தானி என்று. அதன்பின் பாகிஸ்தானுக்கு செல்லும் ரன்யா ராவுக்கு அங்கு செல்வதில் சில பிரச்சினைகள் ஏற்படுகிறது. அந்த பிரச்சினைகளில் இருந்து அவளை காப்பாற்றி பாகிஸ்தானுக்கு செல்லும் விக்ரம் பிரபு, அங்கு சிறை வைக்கப்படுகிறார்.

    எதற்காக அவர் சிறை வைக்கப்படுகிறார்? அங்கிருந்து அவர் தப்பித்து வந்தாரா? தனது காதலியை கரம்பிடித்தாரா? என்பதுதான் மீதிக்கதை.

    விக்ரம் பிரபு தோற்றத்தில் அச்சு அசலாக எல்லை பாதுகாப்பு படை வீரர் போல் இருக்கிறார். 6 அடி உயரம், அகன்ற மார்பு என ஒரு போர் வீரருக்கான உடல்வாகுடன் இந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சண்டைக் காட்சியில் மிரட்டியிருக்கிறார். ஆனால், ரொமான்ஸ் காட்சிகளில்தான் வழக்கம்போல் சொதப்பியிருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க விக்ரம் பிரபு இன்னும் கொஞ்சம் கற்றுக்கொள்ளவேண்டும்.

    ரன்யா ராவும் அவருடைய கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். படத்தின் கதை முழுக்க இவரைச் சுற்றித்தான் பயணிப்பதால் படம் முழுக்க வருகிறார். கதையின் ஆழம் மற்றும் அவரது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

    மிலிட்டரி என்றாலே போரின் போது மட்டும்தான் அவர்களுக்கு வேலை, மற்ற சமயங்களில் சரக்கு அடித்துவிட்டு, பார்ட்டி கொண்டாடி பொழுதை கழிப்பார்கள் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறன்றார்கள். ஆனால், வீடு, சொந்தம், பந்தம் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு, நாட்டிற்காக எல்லையில் யாரும் இல்லாத தனிமையில் வானத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டு படும் அவர்கள் படும் அவஸ்தையான வாழ்க்கையை இந்த படத்தில் சொல்லியிருக்கிறார் ஜி.என்.ஆர்.குமரவேலன். அவர்களுடைய வாழ்க்கையை சொல்ல நினைத்த இவருக்கு முதலில் பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.

    எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் கதையை சொல்ல வந்தாலும், இந்த படத்தின் மையக்கரு காதல்தான். காதலால் ஒரு மனிதன் எந்த நிலைமைக்கு செல்கிறான் என்பதுததான் கதை என்கிறபோது, அந்த காதல் காட்சிகளை சரியாக சொல்லாதது சற்று படத்திற்கு பின்னடைவாக இருக்கிறது. அதேநேரத்தில், பாகிஸ்தான் சிறையில் இந்தியர்கள் படும் வேதனைகளை இப்படத்தில் அழகாக சொல்லியிருக்கிறார். அதேபோல் வசனங்களும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

    டி.இமானின் இசையில் பாடல்கள் படத்திற்கு பெரிய வலு சேர்க்காவிட்டாலும், பின்னணி இசையை வழக்கம்போல் மிரட்டியிருக்கிறார். விக்ரம் பிரபு பாகிஸ்தான் சிறையில் தப்பிக்க நினைக்கும் காட்சிகளில் எல்லாம் இவரது பின்னணி இசை நம்மையும் அந்த காட்சியோடு ஒன்ற வைக்கிறது. சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு காஷ்மீரின் அழகை இன்னும் அழகாக காட்டியிருக்கிறது. அதேபோல், காடு, மலைகளும் அழகாக காட்டியிருக்கிறது. லால்குடி இளையராஜாவின் பாகிஸ்தான் அரங்குகள் உண்மையான பாகிஸ்தானுக்குள் நுழைந்த அனுபவத்தை கொடுக்கிறது.

    மொத்தத்தில் ‘வாகா’ விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம்
    பார்னே படங்களின் வரிசையில் ஐந்தாவதாக வெளிவந்திருக்கும் படம் ‘ஜேசன் பார்னே’. இப்படம் எப்படியிருக்கிறது என்பதை பார்ப்போம்...
    அம்னீசியாவால் பாதிக்கப்பட்ட பார்னே, தான் யாரொன்றே தெரியாமல் வாழ்ந்து வருகிறார். சட்டத்திற்கு புறம்பாக சண்டை போட்டு, அதன்மூலம் வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறார் பார்னே. இந்நிலையில், நிக்கி பார்சன் என்பவள் சிஐஏ-வின் மெயின் சர்வரை ஹேக் செய்துவிடுகிறாள். அப்போது, சிஐஏ-வில் பணிபுரிந்த பார்னேயின் அப்பாவின் இறப்பு பற்றிய ரகசிய தகவல்கள் அவளுக்கு கிடைக்கிறது.

    அதை ஒப்படைப்பதற்காக பார்னேவை சந்திக்க செல்கிறாள். அப்போது அவளை பின்தொடரும் எதிரிக்கூட்டம் அவளை சுட்டு வீழ்த்துகிறது. அவள் இறப்பதற்கு முன்பாக பார்னேவிடம், ஒரு ரகசிய சாவி ஒன்றை கொடுத்துவிட்டு இறக்கிறாள். அதன்மூலம், பார்னே தனது அப்பாவின் சாவுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து பழி வாங்கினாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

    ஜேசன் பார்னே படங்களின் பிரதானமே வேகமாக நகரும் திரைக்கதையும், திரில்லரும்தான். ஆனால், இந்த படத்தில் அதெல்லாம் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமோற்றமே. பார்னேவாக நடித்திருக்கும் மேட் டேம்னுக்கு வசனங்கள் குறைவுதான். ஆனால், அதற்கு மாறாக அலிசியா விக்கேண்டர் படம் முழுக்க பேசிக்கொண்டே வருகிறார்.

    சிஐஏ தலைமை அதிகாரியாக வரும் டாமி லீயு, கொலைகாரனாக வரும் வின்சென்ட்டும் ஜேசன் பார்னேவை கொல்வதற்காக முயற்சிக்கிறார்கள். ஆனால், பார்னேவை யாராலும் அழிக்கமுடியாது என்பதை முந்தைய பாகங்கள் கொடுத்துவிட்டதால், அடுத்தடுத்து எதிர்பார்க்கும்படியான காட்சிகளே வருவதால் ரசிக்க முடியவில்லை.

    படத்திற்கு மிகப்பெரிய பலம் சண்டைக்காட்சிகள்தான். கிரீஸில் நடக்கும் கலவரத்தின் நடுவில் பார்னேவை தேடும் வில்லன்களின் 20 நிமிட சேசிங் காட்சிகள் அதிரடியாக இருக்கிறது. தொடர்ந்து படமாக்கும் கேமராவும், கச்சிதமான எடிட்டிங்கும் அந்த காட்சிக்கு வலு சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘ஜேசன் பார்னே’ அதிரடி குறைவு.
    மோகன்லால்-கௌதமி நடிப்பில் வெளிவந்துள்ள ‘நமது’ படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்...
    சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக வேலை செய்கிறார் மோகன்லால். இவரது மனைவி கௌதமி, இல்லத்தரசி. இவர்களது மகன் விஷ்வாந்த் கல்லூரியிலும், மகள் ரைனா ராவ் பள்ளியிலும் படிக்கிறார்கள். இந்த நான்கு கதாபாத்திரங்களுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு கதைகள் இருக்கின்றன. தனித்தனியாக பயணிக்கும் இந்த 4 கதைகளும் ஒரு நேர்க்கோட்டில் முடிவதுதான் ‘நமது’ படம்.

    சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக இருந்துகொண்டு, புரோமோஷன் கிடைப்பதற்காக படும்பாட்டை மோகன்லால் இந்த படத்தில் தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக அவர் பொருந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், டப்பிங்கில் மோகன்லாலின் முந்தைய படங்களைவிட இந்த படத்தில் நிறைய மலையாள சாயல் இருக்கிறது.

    மளிகை சாமான் வாங்குவதில் 100 ரூபாய் மிச்சம் பிடிக்க ரூ.500 செலவழிக்கும் அளவுக்கு ரொம்பவும் அப்பாவித்தனமான குடும்ப பெண்ணாக நடித்திருக்கும் கௌதமி, இப்படத்தில் தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். நடுத்தர வர்க்கத்து பெண்ணாக நடித்திருந்தாலும், இவரது உடையில் மேல் வர்க்கத்து சாயல் இருப்பது நெருடலாக இருக்கிறது.

    கௌதமியின் தோழியாக வரும் ஊர்வசியின் குழந்தைத்தனமான நடிப்பு ரசிக்க வைக்கிறது. மோகன்லால்-கௌதமி ஆகியோரின் குழந்தைகளாக வரும் விஷ்வாந்த், ரைனா ராவின் நடிப்பும் ரசிக்கும்படியாக இருக்கிறது.

    இயக்குனர் சந்திரசேகர் ஏலட்டி நான்கு விதமான கதைகளை இப்படத்தில் சொல்லியிருக்கிறார். இதில் மோகன்லால் சம்பந்தப்பட்ட கதையை மட்டும் விறுவிறுப்பாக கூறியவர், மற்ற மூன்று பேரின் கதையையும் அந்த அளவிற்கு சொல்ல தவறிவிட்டார். மிகவும் மெதுவாக நகரும் திரைக்கதை படத்திற்கு பெரிய பலவீனமாக இருக்கிறது. ஆனால், நான்கு கதைகளும் ஒரே புள்ளியில் சந்திக்கும் கிளைமாக்ஸ் சூப்பர். அதேபோல், பொழுதுபோக்குக்கான எந்த அம்சமும் இந்த படத்தில் இல்லை. விறுவிறுப்புடன் கூடிய காட்சிப்படுத்துதல் இல்லாதது படத்தை ரசிக்க முடியாமல் சோர்வடைய வைக்கிறது. வசனங்கள் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

    மகேஷ் சங்கரின் இசை படத்தில் பெரிதாக எடுபடவில்லை. பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி கதையின் ஓட்டத்திற்கு தடை போடும் விதமாகவே இருக்கிறது. ராகுல் ஸ்ரீவத்சவ்வின் ஒளிப்பதிவு காட்சிகளை கலர்புல்லாக காட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘நமது’ நாட்டம் குறைவே.
    ஜீவா-நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘திருநாள்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
    தஞ்சாவூர், கும்பகோணத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரவுடி சரத் லோகித்சவாவிடம் அடியாளாக வேலை பார்த்து வருகிறார் ஜீவா. சரத் லோகித்சவாவும், நயன்தாராவின் அப்பா ஜோ மல்லூரியும் சேர்ந்து சாக்கு விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நயன்தாராவின் கனவில் ஜீவா வந்து தாலி கட்டுவது போன்று அடிக்கடி கனவு வருகிறது. அதனால், ஜீவா பார்த்தாலே கொஞ்சம் பயத்துடனே இருக்கிறார் நயன்தாரா.

    இந்நிலையில், நயன்தாராவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் யோகி தேவராஜ் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால் அந்த வீட்டுக்கு செல்லும் நயன்தாராவை ரவுடி கும்பல் ஒன்று கடத்தி சென்றுவிடுகிறது. அப்போது, ஜீவா தனியொரு ஆளாக சென்று அந்த ரவுடி கும்பலை அடித்து துவம்சம் செய்துவிட்டு நயன்தாரா காப்பாற்றுகிறார்.

    அப்போது, நயன்தாராவிடம் தான் அவளை நீண்ட நாட்களாக காதலிப்பதாக கூறுகிறார். நயன்தாராவும் ஜீவா மீதுள்ள பயத்தை நீக்கிவிட்டு அவரை காதலிக்க தொடங்குகிறார். இதெல்லாம் தெரியாத ஜோ மல்லூரி தனது மகளான நயன்தாராவுக்கு திருமணம் செய்துவைக்க மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்துக்கு ஏற்பாடு செய்கிறார். அப்போது, ஜீவா-நயன்தாரா காதல் விவகாரம் வெளிய தெரியவரவே, நயன்தாராவின் நிச்சயதார்த்தம் நின்றுபோகிறது.

    இதனால், மனமுடைந்த ஜோ மல்லூரி, சரத் லோகித்சாவாவுடன் சேர்ந்து செய்யும் தொழிலை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுக்கிறார். சரத் லோகித்சவாவிடம் சென்று தனக்கு வேண்டிய பணத்தை திருப்பித்தர கேட்கிறார் ஜோ மல்லூரீ. ஆனால், சரத்தோ, ஜோ மல்லூரிக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது என்று திருப்பி அனுப்புகிறார். ஜோ மல்லூரியை ஏமாற்றியது ஜீவாவுக்கும் பிடிக்கவில்லை.

    இதனால், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரத்துக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்து ஜோ மல்லூரிக்கு சேரவேண்டிய பணத்தை பெற்றுக் கொடுக்கிறார் ஜீவா. மறுமுனையில் சரத் லோகித்சாவாவை என்கவுண்டரில் சுட்டுத்தள்ள போலீஸ் அதிகாரியான கோபிநாத் சாட்சிகளை தேடி அலைகிறார்.

    இந்நிலையில், தனக்கு எதிராக போலீசில் வாக்குமூலம் கொடுத்ததாலும், தன்னை காட்டிக்கொடுக்க போலீசில் சாட்சியாக மாறிவிடுவான் என்ற பயத்தினாலும், ஜீவாவை கொலை செய்ய சரத் முடிவு செய்கிறார்.

    இதிலிருந்து ஜீவா எப்படி தப்பித்தார்? ஜீவா-நயன்தாரா காதல் என்னவாயிற்று என்பதே மீதிக்கதை.

    பிளேடு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜீவா, பிளேடை தனது வாயில் போட்டுக் கொண்டு ரவுடிகளை பந்தாடும் காட்சிகளில் எல்லாம் அழகாக நடித்திருக்கிறார். பிளேடை லாவமாக தனது வாயில் போட்டு எடுக்கும் காட்சிகள் எல்லாம் சூப்பர். ஆக்ஷன் மட்டுமில்லாமல் ரொமான்ஸ், சென்டிமெண்ட் காட்சிகளிலும் அழகான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். மற்ற படங்களைவிட இந்த படத்தில் கொஞ்சம் கூடுதல் அழகாகவும் இருக்கிறார்.

    நயன்தாரா நீண்ட இடைவெளிக்கு பிறகு கிராமத்து பெண்ணாக பார்த்ததில் அனைவருக்கும் சந்தோஷம். படம் முழுக்க பாவாடை, தாவணியில் பார்க்கும்போது ரொம்பவும் அழகாக இருக்கிறது. அதேபோல் துறுதுறு நடிப்பிலும் கவர்கிறார். சாதாரண கிராமத்தில் வாழும் பெண்ணாக கதாபாத்திரத்தை சித்தரித்துவிட்டு, அவருடைய முதுகில் டாட்டூஸ் குத்தியதை எல்லாம் காட்டியிருப்பது சினிமாத்தனத்தை காட்டுகிறது. அதை கொஞ்சம் மறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    ரவுடியாக வரும் சரத் லோகித்சவா வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். ஜோ மல்லூரி பொறுப்பான தந்தையாக மனதில் பதிகிறார். கோபிநாத் ஒரு சில காட்சிகளே வந்து மறைந்து போகிறார். அவரை போலீஸ் அதிகாரியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தாய்மாமாவாக வரும் முனீஸ்காந்த், கருணாஸ் செய்யும் காமெடிகள் எல்லாம் ரசிக்க வைக்கிறது.

    ஆக்ஷன், ரொமாண்டிக் கலந்த ஒரு கிராமத்து கதையாக படத்தை உருவாக்கியிருக்கிறார் பி.எஸ்.ராம்நாத். தனது முந்தைய படமான ‘அம்பா சமுத்திரத்தில் அம்பானி’ படத்திற்கு நேர் எதிராக இப்படத்தை கொடுத்திருக்கிறார். காதலுக்காக ரவுடி திருந்துவது என அதரபழசான கதையை தேர்ந்தெடுத்தாலும், ஜீவா-நயன்தாராவை இப்படத்திற்காக சரியாக தேர்ந்தெடுத்து படத்தை ஓரளவுக்கு சரிக்கட்டிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கு இணையாக செண்டிமென்ட் காட்சிகளும் நிரம்பியிருக்கிறது.

    ஸ்ரீ இசையில் ஒருசில பாடல்கள் குத்தாட்டம் போட வைக்கிறது. மெலோடியிலும் கவனத்தை ஈர்த்திருக்கிறார். பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்ரீக்கு இப்படம் பெரிய அளவில் கைகொடுக்கும் என நம்பலாம். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

    மொத்தத்தில் ‘திருநாள்’  கொண்டாட்டம்.
    புதுமுக நடிகர் அர்வி நடிப்பு மற்றும் இயக்கத்தில் பேய் படமாக வெளிவந்திருக்கும் ‘என்னமா கதவுடுறானுங்க’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
    நாயகன் அர்வி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் பேய்களுடன் நேரடியாக பேசுவதற்காக ஒரு மெஷின் ஒன்றை தயாரித்து, அதன்மூலம் பேய்களிடம் பேசி வருகிறார். அதே தொலைக்காட்சியில் நாயகி அலிஷாவும் தொகுப்பாளியான பணியாற்றி வருகிறார். அர்வி தயார் செய்யும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அவர்தான் தொகுப்பாளினியாக பணியாற்றுகிறார்.

    இந்நிலையில், ரவிமரியா மிகப்பெரிய பொருட்செலவில் கட்டிவரும் ஒரு கட்டிடத்தில் ஆவி இருப்பதாக அறியும் அர்வி, அங்கு சென்று தான் கண்டுபிடித்த மெஷினை வைத்து ஆவியிடம் பேசுகிறார். அப்போது, அவருடன் பேசும் ஆவி, அந்த கட்டிடம் எழுப்பப்பட்டிருக்கும் இடம் சுடுகாடு என்பதால், தங்கள் இடத்தை ஆக்கிரமித்துவிட்டதாக புகார் சொல்கிறது.

    இதை அப்படியே அர்வி தனது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்ய, ரவிமரியாவுக்கு பிரச்சினை வருகிறது. இதனால், ரவிமரியாவின் பகைக்கு ஆளாகிறார் அர்வி. இதன்பிறகு, மதுரைக்கு அருகில் கோட்டைமேடு என்ற கிராமத்தில் நடக்கும் கொலைகளுக்கு ஒரு பேய்தான் காரணம் என்றும், அதை கண்டுபிடிக்க அர்விக்கு அழைப்பு வருகிறது.

    அதன்படி, தனது குழுவுடன் சென்று அங்கு அவர்கள் சொன்னபடி பேய் இருக்கிறதா? என்று ஆராய்கிறார். அப்போது, மற்றொரு நாயகியான சௌம்யாவை பார்க்கும் அர்வி அவள் மீது காதல்வயப்படுகிறார். சௌம்யாவும் அர்வியை காதலிக்கிறாள். இந்நிலையில், அர்வியின் ஆராய்ச்சியில் அந்த ஊரில் ஆவி இல்லை என்று தெரிகிறது. ஆனால், அந்த ஊரில் உள்ள அனைவரும் ஆவிதான் இந்த கொலைகளையெல்லாம் செய்கிறது. அதை நீரூபித்துவிட்டுத்தான் அந்த ஊரை விட்டு செல்லவேண்டும் என்று அர்விக்கு கட்டளையிடுகின்றனர்.

    அதன்பிறகு நாயகன் அந்த ஆவியை கண்டுபிடித்தாரா? ஆவிதான் அந்த ஊரில் நடக்கும் கொலைகளையெல்லாம் செய்ததா? எதற்காக அந்த கொலைகளை அந்த ஆவி செய்கிறது? என்பதே மீதிக்கதை.

    ஹீரோயிசம் இல்லாத ஒரு கதையில் ஹீரோயிசம் காட்டி நடித்திருக்கிறார் நடிகர் அர்வி. மேலும், இவர் பேசும் வசனங்கள் அழகாக இருந்தாலும், அதை இவர் பேசும் விதங்கள் சரியாக இல்லை.

    படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும், யாருக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அர்வி தயாரிப்பாளர் என்பதால் தன்னைத்தானே முன்னிலைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காக மற்ற கதாபாத்திரங்களுக்கு எதுவும் முக்கியத்துவம் கொடுக்காதது போல் தெரிகிறது. சாம்ஸின் காமெடி ரசிக்க வைத்தாலும், அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பது சலிப்பைத்தான் ஏற்படுத்துகிறது. ரவிமரியா வழக்கம்போல் காமெடி வில்லனாக ரசிக்க வைத்திருக்கிறார்.

    தமிழ் சினிமாவில் எத்தனையோ பேய் படங்கள் வெளிவந்திருக்கிறது. எல்லா படங்களிலும் பேய் என்பது கொடூரமானது என்பதை காட்டியிருப்பார்கள். ஆனால், இந்த படத்தில் பேயிடம் நான் அன்போடு பழகினால், அதுவும் நம்மிடம் அன்பாக நடந்துகொள்ளும் என்று வித்தியாசமான கதையாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பிரான்சிஸ் ராஜ். ஆனால், சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்யாமல் கோட்டை விட்டுவிட்டார்.

    சிவபாஸ்கரின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்தான். ரவி விஜயானந்தின் இசை படத்திற்கு கொஞ்சம் கைகொடுத்திருக்கிறது. பேய் படத்திற்குண்டான வழக்கமான பயமுறுத்தும் காட்சிகள் இல்லாததால் கதைக்கு ஏற்றவாறு இசையமைத்திருக்கிறார். பாடல்களிலும் ஓரளவுக்கு தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘என்னமா கதவுடுறானுங்க’ கதவுடுறானுங்க....
    ஹாலிவுட் படமான ‘லைட்ஸ் அவுட்’ தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்...
    மனநிலை பாதிக்கப்பட்ட ஷோபிக்கு சிறு வயதில் டயானா என்ற தோழி இருக்கிறாள். தோல் வியாதியால் அவதிப்படும் டயனாவுக்கு வெளிச்சத்தில் இருப்பதற்கு பிடிக்காது. இதனால், எப்போதும் இருட்டிலேயே வாழ்கிறாள். இந்நிலையில், ஒருநாள் டயனா இறந்துபோகிறாள். இருப்பினும், மனநிலை பாதிக்கப்பட்ட ஷோபி அடிக்கடி தனிமையில் அமர்ந்து டயனாவுடன் பேசிக் கொண்டிருப்பதுபோலவே அவளது செயல்பாடுகள் இருக்கின்றன.

    இந்நிலையில், ஷோபிக்கு ஒருவருடன் திருமணம் ஆகிறது. அவன் மூலமாக ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். பின்னர் ஷோபியின் கணவன் அவரை விட்டுவிட்டு வேறொருத்தியுடன் சென்றுவிடுகிறான். அதன்பிறகு, ஷோபி இரண்டாவது ஒருவனை திருமணம் செய்துகொண்டு, அவன் மூலமாக ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். இந்த இரண்டு குழந்தைகளும் ஒரே வீட்டில் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள்.

    இந்நிலையில், அந்த வீட்டில் ஒரு அமானுஷ்ய சக்தி நடமாடுவது ஷோபியின் மகளுக்கு தெரிய வருகிறது. வெளிச்சத்தில் தெரியாத அந்த உருவம், இருட்டில் மட்டுமே தெரிகிறது. இதனால் அங்கு நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    இதற்கு பயந்துபோன ஷோபியின் மகள் அந்த வீட்டை காலி செய்துவிட்டு தனது ஆண் நண்பருடன் சேர்ந்து தங்கிக் கொள்கிறாள். இருப்பினும், தனது தம்பியையும், அம்மாவையும் அந்த பேயிடம் இருந்து காப்பாற்றுவதற்காக மறுபடியும் வீட்டிற்குள் வருகிறாள். இறுதியில், அந்த பேய் யார்? அவர்களை ஏன் அது பயமுறுத்துகிறது? அந்த பேயிடம் இருந்து இவர்கள் தப்பித்தார்களா? என்பதே மீதிக்கதை.

    படத்தின் ஆரம்பத்திலேயே கதைக்குள் கொண்டுபோய் விட்டார் இயக்குனர் டேவிட் சான்ட்பெர்க். அதன்பிறகு ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களுக்கு திகில் ஏற்படுத்திக் கொண்டேதான் நகர்கிறது. நிறைய காட்சிகள் இருட்டிலேயே படமாக்கியிருந்தாலும், அந்த திகில் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது.

    படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஒரு திகில் படம் பார்க்க வேண்டும் என்று நினைத்துச் செல்பவர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக ஒரு திகில் அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

    குறிப்பாக, லைட்டை ஆப் செய்துவிட்ட பிறகு ஒரு உருவம் தெரிவது போலவும், ஆன் செய்தபிறகு அந்த உருவம் மறைந்துபோவது போலவும், கடைசியில் அந்த உருவம் அருகில் வந்து நிற்கும் காட்சிகள் எல்லாம் திகிலின் உச்சக்கட்டம்.

    மொத்தத்தில் ‘லைட்ஸ் அவுட்’ திகில் அனுபவம்.
    ஜெய்-விடிவி கணேஷ்-சந்தானம் கூட்டணியில் வெளிவந்திருக்கும் படம் ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’. இப்படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
    ஜெய் கல்லூரி படிப்பை பாதியிலே முடித்துவிட்டு ஊரிலிருந்து வேலை தேடி சென்னைக்கு வருகிறார். சென்னை வரும் ஜெய் தனது மாமா விடிவி கணேஷுடன் தங்கிக் கொண்டு, அவர் சொல்லும் ஒவ்வொரு வேலைக்கும் சென்றுவிட்டு, பாதியிலேயே அந்த வேலை பிடிக்கவில்லை என்று சொல்லி திரும்பி வருகிறார்.

    இந்நிலையில், ஜெய் கொரியர் கம்பெனியில் வேலை பார்க்கும் நண்பன் சந்தானத்துடன் சேர்ந்துகொண்டு அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் இவரும் கூடவே சென்று வருகிறார். அப்போது, ஒருநாள் நாயகி யாமி கௌதமை பார்க்கும் ஜெய் அவள்மீது காதல் வயப்படுகிறார். அவளை தினமும் சந்திப்பதற்காக அவள் இருக்கும் ஏரியாவில் கொரியர் சப்ளை செய்யும் பணிக்கு சேர்கிறார். கொரியர் சப்ளை செய்வதுபோல் அவளை தினமும் சந்தித்து தனது காதலை வளர்க்கிறார்.

    ஒருகட்டத்தில் யாமி கௌதமும் ஜெய் மீது காதல்வயப்படுகிறார். இதற்கிடையில், சென்னையில் மிகப்பெரிய டாக்டரான அஸ்டோஸ் ரானா, சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு வேலைகளை செய்து, அந்த கருமுட்டைகளை வெளிநாட்டுக்கு விற்பனை செய்து அதன்மூலம் பல கோடிகள் சம்பாதித்து வருகிறார்.

    இதை அறியும் தம்பி ராமையா, ராணாவை நேரடியாக எதிர்க்கமுடியாது என்பதற்காக சமூக ஆர்வலான நாசரின் உதவியை நாடுகிறார். ராணா செய்துவரும் தில்லுமுல்லுகள் பற்றிய விவரங்களை சேகரித்து அதை நாசருக்கு கொரியர் மூலம் அனுப்பி வைக்கிறார்.

    அந்த விவரங்கள் அடங்கிய பார்சலை சப்ளை செய்யும் பொறுப்பு ஜெய்க்கு வருகிறது. மறுபுறம் தம்பி ராமையா தன்னைப் பற்றிய விவரங்களை பார்சலாக அனுப்பிய விஷயம் ராணாவுக்கு தெரிய வருகிறது. அது நாசரிடம் சென்றடையாமல் எப்படி தடுப்பது என்ற முயற்சியில் இறங்குகிறார்.

    இறுதியில், நாசரின் கைக்கு அந்த பார்சல் கிடைத்ததா? அல்லது, அந்த பார்சலை அடைவதற்கு ராணா எந்தமாதிரியான முயற்சிகளை எடுத்தார்? என்பதே மீதிக்கதை.

    ஜெய் ஹீரோயிசம் இல்லாத ஹீரோவாக மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். இந்த படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்தாலும் ஜெய்யின் நடிப்பு ரசிக்கும்படியாகவே இருக்கிறது. நாயகியை பார்ப்பதற்காக இவர் செய்யும் வேலைகள் எல்லாம் ரசிக்கும்படி இருக்கிறது.

    பாலிவுட் வரவான நடிகை யாமி கௌதமுக்கு இப்படத்தில் பெரியதாக வேலை இல்லாவிட்டாலும் தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்திருக்கிறார். விடிவி கணேஷ், சந்தானம் ரெண்டு பேரும் படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல உதவியிருக்கிறார்கள். சந்தானம் அடிக்கும் கவுண்டர் வசனங்கள் அனைத்தும் புதிதாக கேட்பதுபோலவே இருப்பது சிறப்பு.

    டாக்டராக அஸ்டோஸ் ராணாவின் நடிப்பு மிரட்டும்படியாக இல்லை. அவருடைய கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம். நாசர், சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா ஆகியோரின் அனுபவ நடிப்பு படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்த்திருக்கிறது.

    சட்டத்திற்கு புறம்பாக செய்யப்படும் கருக்கலைப்புக்கு பின்னணியில் மிகப்பெரிய வியாபாரம் இருப்பதாக இப்படத்தில் இயக்குனர் பிரேம் சாய் சொல்ல வந்திருக்கிறார். சொல்ல வந்த கதையை தெளிவாகவும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். குழப்பும்படியான காட்சிகளை அமைக்கமால், ரசிகர்களை எளிதாக சென்றடைய என்னென்ன செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்திருக்கிறார். படத்தின் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சிறப்பாக அமைத்திருக்கலாம்.

    கார்த்திக் இசையில் பாடல்கள் அழகாக இருக்கிறது. சந்தீப் கௌடாவின் பின்னணி இசையும் சூப்பர். சத்யா பொன்மாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் எல்லாம் கலர்புல்லாக இருக்கிறது.

    மொத்தத்தில் ‘தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ மனதில் இடம்பெறும்.
    ராஜ்குமார்-மானசா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சண்டிக்குதிரை’ படம் இன்று வெளிவந்துள்ளது. படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்..
    கிராமத்தில் ராஜ்கமல் பொம்மைகள் செய்யும் தொழில் செய்து வருகிறார். இதுமட்டுமில்லாமல், அவ்வப்போது ஊர் தலைவர் சொல்லும் சில எடுபிடி வேலைகளையும் செய்து வருகிறார். அந்த ஊர் தலைவருக்கு காதல் என்றால் சுத்தமாக பிடிக்காது. இருப்பினும், ராஜ்கமலும், அவரது வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் நாயகி மானசாவும் ஒருவருக்கொருவர் காதலித்து வருகிறார்கள்.

    ராஜ்கமலின் பக்கத்து வீட்டிலேயே வசிக்கும் டெல்லி கணேஷின் மகளான திவ்யா, ராஜ்கமலிடம் சிறுவயதிலிருந்து அண்ணன் என்ற உரிமையில் பழகி வருகிறாள். பிளஸ் 2 படிக்கும் திவ்யாவும், காலேஜ் படிக்கும் ஹரியும் மறுமுனையில் காதலித்து வருகிறார்கள். இவர்கள் ஒருநாள் தனிமையில் அமர்ந்து பேசிக் கொண்டிப்பதை பார்க்கும் ராஜ்கமலின் நண்பன், அவளை திட்டி தீர்க்கிறார். இதனால் கோபமடைந்த திவ்யா பதிலுக்கு அவனை திட்டி அவமானப்படுத்துகிறாள்.

    இதனால் ராஜ்கமல் நண்பர் திவ்யா மீது கோபத்துடன் அங்கிருந்து கிளம்பி செல்கிறார். இது ராஜ்கமலுக்கு தெரிய வரவே, தனது நண்பனை அழைத்து சமதானப்படுத்துகிறார். இப்படியாக சென்று கொண்டிருக்கும்போது, ஒருநாள் ஹரியும்-திவ்யாவும் தனிமையில் சில்மிஷம் செய்துகொள்வதை ஹரி தனது செல்போனில் படம்பிடிக்கிறான். இதுபிடிக்காத திவ்யா, ஹரியின் செல்போனை புடுங்கி அந்த வீடியோவை அழித்துவிடுகிறாள்.

    பின்னர் ஒருநாள் திவ்யாவின் செல்போனுக்கு அவர்கள் சில்மிஷம் செய்த வீடியோ தெரியாத ஒரு நம்பரிலிருந்து வருகிறது. இது ஹரியின் வேலையாகத்தான் இருக்கும் என்று நினைத்து, அவனிடம் சென்று பயங்கரமாக சண்டை போட்டு விட்டு வீடு திரும்புகிறாள். பின்னர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்கிறாள்.

    ஆனால், உண்மையில் அவள் தற்கொலை செய்துகொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறாள் என்பது ராஜ்கமலுக்கு தெரிய வருகிறது. இதற்கிடையில் ராஜ்கமலின் காதலியான மானசாவின் தம்பி மலைப்பகுதியில் கொலை செய்யப்பட்டும், மானசா பயங்கரமாக தாக்கப்பட்டும் கிடக்கிறார்கள்.

    இந்த கொலைகளை செய்வதற்கு யார் காரணம்? எதற்காக செய்கிறார்கள்? என்பதை ராஜ்கமல் எப்படி கண்டறிந்தார்? என்பதே மீதிக்கதை.

    சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்திருக்கும் ராஜ்கமல், சின்னத்திரையில் நடித்ததுபோன்றே பெரிய திரையிலும் நடித்திருக்கிறார். சின்னத்திரையில் கொடுத்த ஓவர் ஆக்டிங் பெரிய திரைக்கும் கொடுத்திருப்பதால், இவரது நடிப்பு எடுபடவில்லை. செண்டிமென்ட், எமோஷன் காட்சிகளில் எல்லாம் இவரது நடிப்பு ரொம்பவும் அதிகமாக இருப்பதால் ரசிக்க முடியவில்லை. இவரை இயக்குனர் சரியாக வேலை வாங்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. சரியான இயக்குனர்களின் படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் ராஜ்கமலுக்கு நல்லது நடக்க வாய்ப்பிருக்கிறது.

    கதாநாயகியாக வரும் மானசாவின் கதாபாத்திரத்திற்கு சரியாக வலு இல்லாவிட்டாலும், கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். மற்றொரு காதலர்களாக வரும் ஹரி-திவ்யாவின் காதல் காட்சிகள் எல்லாம் ரசிக்க வைக்கிறது. திவ்யாவை சுற்றித்தான் கதையே நகர்ந்து செல்கிறது. அதனால், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார் திவ்யா.

    டெல்லிகணேஷின் அனுபவ நடிப்புக்கு இந்த படம் தீனி போடவில்லை. மற்றபடி, படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் யாரும் பெரிதாக மனதில் பதியவில்லை.

    இயக்குனர் அன்புமதி, இந்த படத்தின் கதையை வித்தியாசமாக எழுதியிருந்தாலும் காட்சியப்படுத்திய விதத்தில் கோட்டை விட்டுவிட்டார். படத்தை ரசிக்க முடியாத அளவுக்கு காட்சிப்படுத்தியது ரசிகர்களை சோர்வடைய வைத்திருக்கிறது. திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சிறப்பாக அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதேபோல், ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக வேலை வாங்கியிருக்கலாம்.

    வீராவின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்தான். வரஸ்ரீயின் இசையில் பாடல்கள் சுமார்தான் என்றாலும், பின்னணி இசை கதையின் ஓட்டத்தை ஓரளவுக்கு தூக்கி நிறுத்தியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘சண்டிக்குதிரை’ நொண்டியடிக்கிறது.

    ஹாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குனரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவந்துள்ள படம்தான் இது. படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்...
    மனிதர்களுக்காக கனவுகளை சேகரித்து, அவர்களுக்கு அளித்துவரும் கனவுகளின் பூதத்தை ஒருமுறை ஷோபியா என்ற சிறுமி பார்த்துவிடுகிறாள். அவள் தன்னை பார்த்துவிட்டதால், அவள் மூலமாக தனக்கு பிரச்சினை ஏற்படும் என்று பயந்து அவளை தன்னுடைய இடத்துக்கு அழைத்துச் செல்கிறது பூதம். அதன்பின்னர், இருவரும் ஒருவருக்கொருவர் பேசி நெருங்கிய நண்பர்களாகிறார்கள்.

    பூதங்கள் வசிக்கும் இடத்தில் இந்த கனவு பூதம் மட்டும்தான் மாமிசங்களை உண்ணாது. மற்ற பூதங்கள் அனைத்தும் மனிதர்களை கொன்று தின்னக்கூடியது. இந்நிலையில், பூதங்களின் இடத்தில் வசிக்கும் ஷோபியாவை மோப்பம் பிடிக்கும் மாமிசம் தின்னும் பூதங்கள், அவளை எப்படியாவது கண்டுபிடித்து தின்றுவிட முயற்சி செய்கின்றன.

    அவர்களிடமிருந்து ஷோபியாவை ஒவ்வொரு முறையும் கனவுகளின் பூதம் காப்பாற்றி வருகிறது. இந்நிலையில், மாமிசம் தின்னும் பூதங்களின் அட்டகாசம் அதிகரிக்கவே, அவற்றையெல்லாம் கொல்ல கனவுகளின் பூதம் ஒரு திட்டம் தீட்டுகிறது. அது என்ன திட்டம் என்பதை மீதிப்படம் சொல்கிறது.

    கனவு பூதமாக நடித்திருப்பவருக்கு பின்னணி குரல் கொடுத்திருப்பவர் பிரபல தமிழ் நடிகர் நாசர். அவருடைய குரலில் வெளிவந்த இப்படத்தின் டீசரில் பார்க்கும்போது, இவ்வளவு பெரிய உருவத்துக்கு அவருடைய குரல் பொருந்தவில்லையோ என்று தோன்றியது. ஆனால், படத்தில் கதையோடு ஒன்றி பார்க்கும்போது அவரது குரல் மிகவும் பொருத்தமாகவே உள்ளது.

    ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் படங்களில் உள்ள பிரம்மாண்டத்துடனே இந்த படமும் வெளிவந்திருக்கிறது. படத்தின் கதை பெரிதாக இல்லாவிட்டாலும், கிராபிக்ஸ் காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. ஷோபியாவாக வரும் சிறுமியின் துறுதுறு நடிப்பு நம்மை கவர்கிறது. மிகப்பெரிய பூதங்களை திரையில் பார்க்கும் நம்மை பிரமிக்க வைக்கிறார் இயக்குனர். படத்தில் பெரிதாக கதாபாத்திரங்கள் இல்லாவிட்டாலும், குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை மட்டும் ரசிக்க வைத்திருக்கிறார்.

    ஜான் வில்லியம்ஸின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. கதையோட்டத்திற்கு தகுந்தவாறு இவரது பின்னணி இசை அமைந்திருப்பது சிறப்பு.

    மொத்தத்தில் ‘தி பிஎஃப்ஜி’ நல்ல நண்பன். 
    ×