என் மலர்tooltip icon

    தரவரிசை

    நடிகர் வீரபாரதி, நடிகை சமீரா நடிப்பில் உருவாகியுள்ள வென்று வருவான் படம் எப்படி இருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்..
    நாயகன் வீரபாரதியின் அம்மாவுக்கு கண் தெரியாது. சின்ன வயதில் இருக்கும்போது, அந்த ஊர் தலைவர் நாயகனின் அம்மா குளிப்பதை மறைந்து நின்று பார்க்கிறார். இதைப் பார்க்கும் வீரபாரதி அவரை அடித்துவிடுகிறான். இதை தனது அம்மாவிடம் வந்து கூறும் வீரபாரதியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், அந்த ஊரில் சாமியாராக திரியும் ஒருவருடன் காட்டுக்குள் அனுப்பி வைக்கிறாள்.

    காட்டுக்குள் சென்று வளரும் வீரபாரதி, நாகரீகம் இல்லாமல் முரடனாக வளர்கிறான். இந்நிலையில், ஊர் தலைவரும், அவரது மகனும் சேர்ந்து ஊருக்குள் அட்டகாசம் செய்கிறார்கள். இதனை அறியும் வீரபாரதி அடிக்கடி காட்டுக்குள் இருந்து ஊருக்குள் வந்து அனைவரையும் அடித்து துவம்சம் செய்துவிட்டு, மிரட்டி விட்டும் செல்கிறான்.

    வீரபாரதி யாரையெல்லாம் மிரட்டிவிட்டு செல்கிறானோ அவர்கள் எல்லாம் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். இந்நிலையில், ஊர் மக்கள் எல்லோரும் வீரபாரதிதான் அனைவரையும் கொன்றிருப்பான் என்று எண்ணி, அவனை போலீசில் ஒப்படைக்கிறார்கள்.

    உண்மையில், அவர்களையெல்லாம் வீரபாரதிதான் கொலை செய்தானா? அல்லது அவனது பெயரை பயன்படுத்தி வேறு யாராவது இந்த கொலைகளை செய்தார்களா? ஜெயிலுக்கு போன வீரபாரதியின் நிலை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகன் வீரபாரதி முரடன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகி சமீராவும் கிராமத்து பெண்ணாக அழகாக இருக்கிறார். ஊர் தலைவராக நடித்திருப்பவர் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். வீரபாரதியின் அம்மாவாக நடித்திருப்பவரும் கண் பார்வையற்றவராக சிறப்பாக நடித்திருக்கிறார்.

    படத்தில் காமெடிக்கு வையாபுரி, கிரேன் மனோகர் இருவரும் வருகிறார்கள். ஆனால், இவர்கள் இருவரும் காமெடி என்ற பெயரில் செய்யும் கலாட்டாக்கள் எல்லாமே சிரிப்பை வரவழைப்பதற்கு பதில் வெறுப்பைத்தான் வரவழைத்திருக்கின்றன.

    படத்தின் இயக்குனர் விஜேந்திரன், கதாபாத்திரங்களை புதுமுகங்களாக தேர்வு செய்திருந்தாலும், அனைவரும் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள். முதல் பாதியில் பெரும்பாலான காட்சிகள் முழுமையடையாமலேயே சென்றிருப்பது சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.

    இருப்பினும், பிற்பாதியில் முன்பாதியில் போடப்பட்ட முடிச்சுகளை அவிழ்க்கும் விதமாக அமைக்கப்பட்ட காட்சிகளில் எல்லாம் விறுவிறுப்பு தொற்றிக் கொள்கிறது. இயக்குனர், முதல்பாதியில் உள்ள காட்சிகளில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். முதல்பாதியில் சில காட்சிகளை டிரிம் செய்தால் படம் சுவாரஸ்யமாக இருக்கும் என நினைக்க தோன்றுகிறது.

    முரளி கிருஷ்ணனின் இசையில் பாடல்கள் ரசிக்க தோன்றுகிறது. பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஜெயச்சந்திரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலவீனமாக இருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் ஆரஞ்சு வண்ணத்தில் இருப்பது படத்தை பார்ப்பதற்கு தடை போடுகிறது.

    மொத்தத்தில் ‘வென்று வருவான்’ பொறுமையுடன் வெல்வான்.
    அர்வின், பவித்ரா கவுடா, சபீர் ஆகியோர் நடிப்பில் திரில் படமாக உருவாகியுள்ள படம் ‘54321’. படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்...
    நாயகன் அர்வினும், நாயகி பவித்ரா கவுடாவும் முதலில் நண்பர்களாக பழகி பின்னர் காதலர்களாகிறார்கள். அதன்பிறகு, இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறக்கிறது. இவர்களது குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக சென்றுகொண்டிருக்கிறது.

    இந்நிலையில், ஒருநாள் அர்வின் வேலைக்கு சென்றுவிட்டு, இரவில் தாமதமாக வீட்டுக்கு திரும்புகிறான். அதற்குள், வீட்டுக்குள் திருடன் ஒருவன் புகுந்து விடுகிறான். அவன் வீட்டுக்குள் பணத்தை திருடிக்கொண்டிருக்கும்போது வில்லனான சபீர் அந்த வீட்டுக்குள் நுழைகிறான். அவனைப் பார்த்ததும் அந்த வீட்டுக்குள்ளேயே திருடன் பதுங்கிக் கொள்கிறான்.

    வீட்டுக்குள்ளே வரும் சபீர், அர்வினின் மனைவியை அடித்து கட்டிப் போடுகிறான். அப்போது அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வரும் அர்வினையும் அடித்து கட்டிப்போடுகிறான். அதன்பிறகு, சபீர், அந்த வீட்டின் அறைக்குள் இருந்து ஒரு பெண் குழந்தையை கூட்டிவந்து, தான் தெருவில் அந்த குழந்தையை பார்த்ததாகவும், அவளை தனக்கு பிடிக்காததால் அழைத்து வந்ததாகவும் கூறி, அந்த குழந்தையையும் இவர்களுடன் சேர்த்து கட்டிப் போட்டு வைக்கிறான்.

    அப்போது, சபீர், அர்வினிடம் ஒரு நிபந்தனை வைக்கிறான். அதாவது, தான் வெளியில் இருந்து கூட்டி வந்ததாக கூறும் அந்த பெண்ணை அவன் குறிப்பிட்ட நேரத்திற்குள் கொலை செய்யவேண்டும் என்று கூறுகிறான். அப்படி அந்த குழந்தையை அர்வின் கொலை செய்யாவிட்டால், அவனது மனைவியை தான் கொன்றுவிடுவதாக அர்வினை மிரட்டுகிறான்.

    சபீர், அர்வீனை கொலை செய்யச் சொல்லும் அந்த பெண் குழந்தை யார்? அவளை எதற்காக அர்வினை கொலை செய்யச் சொல்கிறான். அர்வினுக்கும், சபீருக்கும் என்ன சம்பந்தம் என்பதை பிற்பாதியில் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

    கதாநாயகன் அர்வினுக்கு நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு இல்லை. படம் முழுக்க சபீரிடம் கெஞ்சுவது போலவே இவருடைய காட்சிகள் அமைந்துள்ளது. இருப்பினும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். சபீர், பைத்தியக்காரத்தனமான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். வில்லத்தனமான கதாபாத்திரத்திலும் மிரட்டியிருக்கிறார்.

    நாயகி பவித்ரா கவுடாவுக்கும் படத்தில் நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு இல்லை. முதல்பாதியில் நாயகனை காதலிப்பதற்கு மட்டும் பயன்பட்டிருக்கிறார். ஒருகட்டத்தில், நாயகியை கட்டிப்போட்டுவிட்டு, வாயில் துணியை வைத்து கட்டிவைத்துவிடுகிறார்கள். அதன்பிறகு, அவரது கதாபாத்திரம் மௌனமாகவே போய்விடுகிறது.

    திருடனாக வரும் ஜெயக்குமார் ஜானகிராமன், வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்களால் பயந்து நடுங்குவதும், தான் மாட்டிக்கொள்வோமா என்று பயந்து நடக்கும் காட்சிகளில் எல்லாம் வித்தியாசமான முகபாவனைகளை காட்டி சிரிக்க வைத்திருக்கிறார்.

    தமிழ் சினிமாவுக்கு ஒரு வித்தியாசமான திரில்லர் கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராகவேந்திரா பிரசாத். படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவருக்கும் பிளாஷ்பேக் காட்சிகள் வைத்திருக்கிறார். ஆனாலும், திரைக்கதையின் சுவாரஸ்யத்தால் அந்த பிளாஷ்பேக் காட்சிகள் எல்லாமே ரசிக்க வைக்கிறது.

    நூறு பேரில் ஒருவருக்கு மட்டுமே இருக்கும் OCD என்ற நோயை பற்றி இப்படத்தில் குறிப்பிட்டிருக்கிறார். OCD நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவொரு விஷயமும் சரியாகவும், நேர்த்தியாகவும் இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். அப்படிப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கிவைக்காமல், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் என்ன? அவர்களை எப்படி கவனித்துக் கொள்ளவேண்டும் என்பதை இப்படத்தில் அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

    ஜோஸ்வா ஸ்ரீதரின் இசையில் படத்தில் பாடல்களே இல்லை. இருப்பினும், பின்னணி இசை திரில்லுடன் நகர்வது சிறப்பு. பானு முருகனின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது.

    மொத்தத்தில் ‘54321’ ரசிக்கலாம்.
    மலையாளத்தில் வெற்றிநடைபோட்ட ‘தட்டத்தின் மறையத்து’ படத்தின் ரீமேக்காக வெளிவந்துள்ளது ‘மீண்டும் ஒரு காதல் கதை’. இப்படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்..
    கதாநாயகன் வால்டர் பிலிப்ஸ் இந்து சமயத்தை சேர்ந்தவர். சிறுவயதிலேயே ‘பம்பாய்’ படத்தை பார்த்து, அதில் வரும் இந்துவான அரவிந்த்சாமி முஸ்லிம் பெண்ணான மனிஷா கொய்ராலாவை திருமணம் செய்துகொள்வது போல் தானும் ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறார்.

    வாலிபனான பிறகு, ஒரு முஸ்லிம் வீட்டு திருமணத்தில் கதாநாயகியான இஷா தல்வாரை சந்திக்கிறார். தான்நினைத்ததுபோல் அவர் இருப்பதைப் பார்த்த வால்டர் பிலிப்ஸ், பார்த்ததும் அவள்மீது காதல் வயப்படுகிறார். அவளிடம் பழகுவதற்கான முயற்சிகளில் இறங்கி, இறுதியில், அவளிடம் பழகி, தனது காதலை வெளிப்படுத்துகிறார் வால்டர்.

    ஆனால், இஷா தல்வாரோ.., ஆச்சாரமான முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்தவர். இதனால், பிலிப்ஸின் காதலை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ செய்யாமல் அமைதி காக்கிறார். பிலிப்சும் அவளுடைய பதிலுக்காக காத்திருக்கிறார்.

    சிலநாட்கள் கழிந்தும் இஷா தல்வாரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லையே என்று, அவளை பார்க்க அவளது வீட்டு சுவர் ஏறி குதித்து உள்ளே போகிறார் பிலிப்ஸ். ஆனால், இஷா தல்வாரின் அப்பா தலைவாசல் விஜய்யும், பெரியப்பா நாசரும் அவரை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைக்கின்றனர்.

    ஜெயிலுக்கு செல்லும் வால்டர் பிலிப்ஸ், தன்னுடைய காதலின் நிலை என்னவென்று தெரியாத நிலையில் இருக்கிறார். இறுதியில், அவர் ஜெயிலில் இருந்து வெளியே வந்து, தனது காதலில் வெற்றி கண்டாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

    கதாநாயகன் வால்டர் பிலிப்ஸ் தனது முதல் படத்திலேயே சிறப்பானதொரு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதல், ரொமான்ஸ் என காதல் நாயகனுக்குண்டான நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். நடனத்திலும் சிறப்பாக செய்திருக்கிறார்.

    இஷா தல்வார் ஒரு முஸ்லிம் பெண் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சில காட்சிகளில் இவருக்கு வசனங்கள் இல்லாவிட்டாலும் கண்களாலேயே பேசியிருக்கிறார். மேலும், தனது அழகால் ரசிகர்களை கட்டிப்போடவும் செய்திருக்கிறார்.

    நாசர் தனது அனுபவ நடிப்பை அழகாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். அதேபோல், நாசர் கூடவே வரும் தலைவாசல் விஜய்யும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். வால்டரின் நண்பனாக வரும் அர்ஜுனன் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக இருக்கிறது. மற்றபடி, படத்தில் நடித்திருக்கிற பிற கதாபாத்திரங்களும் கதைக்கேற்றவாறு தங்களது பாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    ‘தட்டத்தின் மறையத்து’ என்ற மலையாள படத்தின் ரீமேக்தான் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ யாக உருவாகியிருக்கிறது.  மலையாளத்தில் ஹிட்டான இப்படத்தை தமிழில் மித்ரன் ஜவஹர் தமிழில் இயக்கியிருக்கிறார். மலையாள ரசிக்களை கவர்ந்த அளவுக்கு தமிழ் ரசிகர்களை இப்படம் திருப்திப்படுத்தவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

    அழகான காதல் கதைதான் என்றாலும் திரைக்கதை மிகவும் மெதுவாக நகர்வதால் பொறுமையாக ரசிக்க முடியவில்லை.

    ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. மெலோடி பாடல்களை சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஷான் ரகுமானின் பின்னணி இசை கதைக்கு புத்துயிர் ஊட்டியிருக்கிறது. விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது. காதல் கதைகளுக்கு ஒளிப்பதிவுதான் மிகவும் முக்கியம். அதை சரியாக புரிந்துகொண்டு இந்த படத்தில் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    மொத்தத்தில் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ வேகம் இல்லை.
    பரத் ரெட்டி, விசாகா சிங், மீனாட்சி தீட்சித் ஆகியோர் நடிப்பில் திகில் படமாக வெளிவந்துள்ள ‘பயம் ஒரு பயணம்’ படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.
    போட்டோகிராபரான நாயகன் பரத் ரெட்டி, வித்தியாசமான புகைப்படங்கள் எடுப்பதற்காக தேக்கடியில் உள்ள காட்டுக்குள் பயணப்படுகிறார். புகைப்படங்கள் எடுத்து முடிப்பதற்குள் இரவாகிவிடுவதால் காட்டுக்குள்ளேயே இருக்கும் ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்குகிறார்.

    இரவு அந்த வீட்டில் தங்கி தான் எடுத்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது, அவருக்கு அங்கு ஒரு மெமரி கார்டு கிடைக்கிறது. அதில் என்ன இருக்கிறது என்று எடுத்து பார்க்கிறார். அந்த மெமரி கார்டில் பெண்கள், ஆண்கள் என நண்பர்கள் கூட்டம் குடித்துவிட்டு, கும்மாளம் போடுவதுபோல் போட்டோக்கள் இருக்கிறது.

    அதை பார்த்துவிட்டு, பத்திரிகையில் இருக்கும் தனது நண்பருக்கு போன் போட்டு சில விஷயங்களை கூறுகிறார். அப்போது, அங்கு சில அமானுஷ்ய விஷயங்கள் எல்லாம் நடக்க ஆரம்பிக்கிறது. ஒரு பெண் பேய் அவரை விடாமல் துன்புறுத்துகிறது. இதனால், அங்கிருந்து அவர் தப்பித்து வெளியே வருகிறார்.

    அவர் வரும்போது, ஒரு வருஷத்துக்கு முன்னால் நடந்த சம்பவங்கள், அப்போது இறந்து போனவர்கள் எல்லோரும் அவருடைய கண் முன்னால் வந்து போகிறது. எதனால் அப்படி தெரிகிறது? அந்த மெமரி கார்டுக்கும் அந்த பேய்க்கும் என்ன சம்பந்தம்? அந்த பேய் இவரை ஏன் விடாமல் துன்புறுத்துகிறது? என்பதுதான் இப்படத்தின் மீதிக் கதை.

    நாயகனாக நடித்திருக்கிற பரத் ரெட்டியை சுற்றித்தான் இந்த கதை முழுக்க நகர்கிறது. தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக, பேயை பார்த்து பயப்படும் காட்சிகளில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மனைவி, குழந்தைகளிடம் பாசம் காட்டும்போது நடிப்பில் மிளிர்கிறார். இந்த படத்தில் விசாகா சிங், மீனாட்சி தீட்சித் என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

    இதில் விசாகா சிங் ஒரு பேயாக நடித்திருக்கிறார். இவர் வரும் காட்சிகள் எல்லாமே பயங்கரமான திகிலை ஏற்படுத்துகிறது. அதே சமயத்தில் செண்டிமென்ட், பாசம் என எல்லாவற்றிலும் அவரது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இன்னொரு கதாநாயகியாக வரும் மீனாட்சி தீட்சித், ஒருசில காட்சிகளே வந்தாலும், தனது அழகாலும், நடிப்பாலும் ரசிக்க வைத்திருக்கிறார்.

    ஜான் விஜய், ராம்தாஸ், சிங்கம் புலி, யோகி பாபு, ஊர்வசி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருககிறார்கள். குறிப்பாக, சிங்கம்புலி, யோகி பாபு வருகிற காட்சிகள் எல்லாம் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறது.

    பேய் படம் எடுப்பது இப்போதைக்கு டிரெண்டாகி வரும் சூழ்நிலையில், முழுக்க முழுக்க ஒரு திகில் நிறைந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மணிசர்மா. ஒரு சில காட்சிகளில் லாஜிக் இல்லாமல் இருந்தாலும் கடைசிவரை படத்தை போரடிக்காமல் கொண்டு போயிருப்பது சிறப்பு.

    ஒய்.ஆர்.பிரசாத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருந்தாலும், பின்னணி இசையில் திகிலை வரவழைத்திருக்கிறார். ஆண்ட்ரூவின் ஒளிப்பதிவில் தேக்கடியின் அழகு பளிச்சிடுகிறது.

    மொத்தத்தில் ‘பயம் ஒரு பயணம்’ திகிலூட்டும் பயணம்.
    ஜாக் ஹஸ்டன், மோர்கன் பிரீமென், நசானின் போனியாடி ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவந்திருக்கும் ‘பென்ஹர்’ படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்..
    இயேசு வாழ்ந்த காலத்தில் நடக்கிறது கதை. ரோமில் யூதப் பிரபுவாக இருக்கும் ஜுடோ பென்ஹர். அவருடைய பால்ய நண்பன் டோபி கெப்பெல், ரோமின் படைத்தளபதியாக இருக்கிறாள். யூதப்பிரபுவான பென்ஹரை பற்றி அவருடைய பால்ய நண்பன் தவறான குற்றச்சாட்டு எழுப்புகிறான். இதனால், பென் ஹர் மீது தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படுகிறான்.

    கைதான பென் ஹர், கப்பலில் வேலை செய்யும் அடிமைகளுள் ஒருவராக அனுப்பப்படுகிறார். அடிமையாக சென்ற எவரும் மீண்டும் திரும்பி வரமுடியாது. ஆனால், பென்ஹர் 5 ஆண்டுகள் அடிமை வாழ்க்கைக்கு பிறகு அங்கிருந்து தப்பி தனது நண்பனை பழிவாங்க வருகிறார்.

    தப்பி வந்தவர், தனது நண்பரை பழிவாங்கினாரா? பென்ஹர் குடும்பத்தின் நிலை என்னவானது என்பதை படத்தின் கதை.

    ‘பென் ஹர்: எ டேல் ஆப் த கிறைஸ்ட்’ என்ற நாவலை அடிப்படையாக கொண்டு இதுவரை நான்கு முறை ‘பென்ஹர்’ படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. எந்தவொரு தொழில்நுட்ப வசதியும் இல்லாமல், முந்தைய படங்களில் வந்த குதிரைப் பந்தயக் காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. அதே பிரமிப்புடன் பல காட்சிகள் கடந்த 4 பாகங்களிலும் இடம்பெற்றிருந்தது. இந்த படத்திலும் அதையே எதிர்பார்த்துச் சென்றால், மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது. எடிட்டிங், கிராபிக்ஸ் காட்சிகள், இசை என பலவற்றிலும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.

    ஜூடோ பென்ஹராக வரும் ஜாக் ஹஸ்டன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். யூத பிரபுவாக இருக்கும் பென்ஹர், தனது நண்பனின் துரோகத்திற்கு ஆட்பட்டு, ஐந்து வருட அடிமை வாழ்க்கையை நிதானமாக கடைப்பிடித்து, பின் அங்கிருந்து தப்பித்து தன் நண்பனையே பழிவாங்க துடிப்பது என அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

    இயேசு வாழ்ந்த காலத்தில் கதை நகர்வதால், கதையின் நடுவில் ஆங்காங்கே இயேசு வந்து செல்கிறார். அவர் பென்ஹருடன் உரையாடும் காட்சிகள் அனைத்தும் படத்திற்கு வலு கூட்டியிருக்கிறது. பென்ஹரை சாட்டையால் அடித்துக் கூட்டிச் செல்லும்போது இயேசு குடிக்க தண்ணீர் கொடுப்பார். அதேபோல், இயேசுவை சிலுவையில் அறைய கொண்டு செல்லும்போது பென்ஹர் தண்ணீர் கொடுக்க முயல்வார். அப்போது, இயேசு ‘என் மக்களுக்காக நான் விரும்பி இந்த தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன்’ என்று அந்த தண்ணீரை குடிக்கமாட்டார். இந்த காட்சி உண்மையிலேயே உணர்ச்சிப்பூர்வமான காட்சியாக அமைந்திருக்கிறது.

    இருப்பினும் பென்ஹர் படத்தின் பழைய பாகங்களில் உள்ள சுவாரஸ்யங்கள் இப்படத்தில் இல்லாதது மிகப்பெரிய பலவீனமே.

    மொத்தத்தில் ‘பென்ஹர்’ பெரிய ஏமாற்றம்.
    ஸ்ரீகாந்த்-சந்தானம்-சுனைனா நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘நம்பியார்’. அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.
    ஸ்ரீகாந்தை கலெக்டராக்க வேண்டும் என்று அவரது அப்பா விருப்பப்படுகிறார். ஆனால், இதில் துளியும் விருப்பம் இல்லாத ஸ்ரீகாந்த், அப்பாவின் விருப்பத்தின் பேரில், ஐ.ஏ.எஸ். தேர்வை எழுதி வருகிறார். இவருக்கு ஒரு பலவீனம் உள்ளது. அதாவது, இவருக்குள் இருக்கும் நல்ல மனசாட்சி, கெட்ட மனசாட்சி இரண்டையும் அடிக்கடி மனதில் போட்டு குழப்பிக் கொள்வார்.

    நல்ல மனசாட்சியாக தன்னையே நினைத்துக் கொள்ளும் ஸ்ரீகாந்த், கெட்ட மனசாட்சிக்கு ஒரு உருவம் கொடுத்து, அதற்கு பெயரும் வைக்கிறார். அவர்தான் சந்தானம். சந்தானத்துக்கு நம்பியார் என்றும் பெயர் வைக்கிறார். இந்நிலையில், ஒருநாள் விபத்தில் எதேச்சையாக சுனைனாவை சந்திக்கிறார் ஸ்ரீகாந்த். முதலில் மோதலில் ஆரம்பிக்கும் இவர்களது சந்திப்பு நாளுக்கு நாள் காதலாக மாறுகிறது.

    இப்படியாக ஸ்ரீகாந்த் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில் அவருடைய மனதுக்குள் இருக்கும் கெட்ட மனசாட்சியான சந்தானம் வெளிவருகிறார். அவர் குடிப்பழக்கமே இல்லாத ஸ்ரீகாந்தை குடிக்க வைக்கிறார். முதன்முதலாக குடிப்பதால், போதை தலைக்கேறிய ஸ்ரீகாந்த், தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பல கெட்ட விஷயங்களை செய்கிறார். அதாவது, ஏரியா போலீசிடம் சண்டை போடுவது, கண்ணில் கண்டவர்களை எல்லாம் அடிப்பது, சுனைனாவிடம் தவறாக நடக்க முயற்சிப்பது இப்படிப்பட்ட பல கெட்ட விஷயங்களை செய்கிறார். இதனால் அவர் பல பிரச்சினைகளிலும் மாட்டிக் கொள்கிறார்.

    இறுதியில், இந்த பிரச்சினைகளில் எல்லாம் இருந்து ஸ்ரீகாந்த் எப்படி மீண்டார்? தனது அப்பாவின் கனவை அவர் நிறைவேற்றினாரா? காதலியுடன் கைகோர்த்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகன் ஸ்ரீகாந்துக்கு இப்படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். காதல், சென்டிமெண்ட, காமெடி என எல்லாவற்றிலும் தனது சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்ரீகாந்துக்கு இப்படம் பெரிய ஹிட் கொடுத்துள்ளது. தயாரிப்பாளராகவும் இந்த படத்தின் மூலம் வெற்றி கண்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

    இன்னொரு ஹீரோ என்று சொல்லும்படி இருக்கிறது சந்தானத்தின் கதாபாத்திரம். அவருடைய கதாபாத்திரத்தின் பெயர்தான் இந்த படத்தின் தலைப்பும்கூட. அதனால், தன்னுடைய கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும், இவர் படத்தில் வருகிற காட்சிகள் எல்லாமே ரசிகர்களை கலகலக்க வைத்திருக்கிறது. ஒரு வில்லத்தனமான கதாபாத்திரம் என்றாலும், அதை காமெடியாக, கலகலப்பாக கொண்டுபோயிருப்பது இவருக்கே உரிய தனிச்சிறப்பு. இந்த படத்திற்கு பெரிய பக்கபலமாக இருக்கிறார் சந்தானம்.

    நாயகி சுனைனா, அழகிலும் கவர்ச்சியிலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய அழகான நடிப்பாலும் ரசிகர்களை கட்டிப்போடுகிறார். மற்றபடி, படத்தில் நடித்திருக்கும் பிற கதாபாத்திரங்கள் அனைவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    இயக்குனர் கணேஷாவுக்கு இதுதான் முதல்படம். முதல்படத்திலேயே வித்தியாசமான கதைக்களத்தை கையாண்டிருக்கிறார். நம்மை சுற்றி எதிர்மறையான சிந்தனைகள் இல்லாமல், நேர்மையான சிந்தனைகள் இருந்தாலே எல்லாம் நன்மையில் முடியும் என்பதை இந்த படத்தில் ரொம்பவும் அழகாக சொல்லியிருக்கிறார். படத்தில் இடம்பெறும் வசனங்கள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. திரைக்கதையில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.  

    விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் எல்லாம் கேட்கும் ரகம். இந்த படத்தில் சந்தானத்தை ஒரு பாடல் பாடவைத்திருக்கிறார். அது ஒரு தைரியமான முயற்சி என்றுதான் சொல்லவேண்டும். பின்னணி இசையை ரொம்பவும் அழகாக கொடுத்திருக்கிறார்.  எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு இப்படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘நம்பியார்’ ரசிக்கலாம்.
    விஜய்சேதுபதி, தமன்னா, சிருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘தர்மதுரை’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்..
    விஜய் சேதுபதி, தமன்னா, சிருஷ்டி டாங்கே மூன்று பேரும் ஒரே மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்கள். மூன்று பேரும் நல்ல நண்பர்களாக பழகிக் கொண்டிருக்கையில் சிருஷ்டி டாங்கே மட்டும் விஜய் சேதுபதியை காதலிக்கத் தொடங்குகிறார். அப்போது விஜய் சேதுபதி இப்போதைக்கு படிப்புதான் முக்கியம், படிப்பு முடிந்தபிறகு அதுபற்றி பேசிக் கொள்ளலாம் என்று அவருக்கு அறிவுரை கூறுகிறார்.

    இதனால், தமன்னாவுக்கும் விஜய் சேதுபதியை பிடித்துப் போகிறது. இதற்கிடையில், கல்லூரி படிப்பும் முடிவுக்கு வர, அனைவரும் அவரவர் ஊருக்கு திரும்புகிறார்கள். கல்லூரி பேராசிரியர் ராஜேஷின் அறிவுரையை ஏற்று தனது கிராமத்திலேயே டாக்டராக பணிபுரிகிறார் விஜய் சேதுபதி.

    இந்நிலையில், அதே கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவை பார்த்ததும் காதல் வயப்படுகிறார் விஜய் சேதுபதி. தனது அண்ணன் அருள்தாசை அழைத்துச்சென்று ஐஸ்வர்யாவை பெண் கேட்பதுடன், திருமணத்தை பேசி முடிக்கிறார்.

    ஆனால், விஜய் சேதுபதி நன்கு படித்தவராக இருப்பதால், ஏழ்மையான குடும்பத்தில் பெண் எடுப்பது அருள்தாஸ் மற்றும் அவரது தம்பி சௌந்தர்ராஜுக்கு பிடிக்கவில்லை. அதனால், விஜய் சேதுபதிக்கு தெரியாமல் எம்.எஸ்.பாஸ்கரிடம் சென்று அதிக வரதட்சணை கேட்டதால் திருமணம் நின்று போகிறது. அந்த அவமானத்தில் ஐஸ்வர்யாவும் தற்கொலை செய்து கொள்கிறாள்.

    உண்மையை அறிந்த விஜய் சேதுபதி, சகோதரர்கள் மீது வெறுப்பு கொள்கிறார். அவர்களை அவமானப்படுத்தும் விதமாக அடிக்கடி குடித்துவிட்டு ஊரில் அனைவரிடமும் தகராறு செய்து வருகிறார். தங்களது குடும்பத்திற்கு இதனால் அவமானம் ஏற்படுவதாக நினைத்து விஜய் சேதுபதியை கொல்ல அருள்தாஸ் மற்றும் அவரது தம்பிகள் திட்டமிடுகிறார்கள்.

    அவர்களிடமிருந்து தப்பிக்க விஜய் சேதுபதி ஊரிலிருந்து வெளியேறி, தனது கல்லூரி தோழிகளான தமன்னாவையும், சிருஷ்டி டாங்கேவையும் சந்திக்க புறப்படுகிறார். இறுதியில், தமன்னாவையும், சிருஷ்டி டாங்கேவையும் விஜய் சேதுபதி சந்தித்தாரா? அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் என்ன? என்பதே மீதிக்கதை.

    விஜய் சேதுபதி வழக்கம்போல் இந்த படத்திலும் தனது எதார்த்தமான நடிப்பை அழகாக பதிவு செய்திருக்கிறார். கிராமத்து பின்னணியில் உருவாகும் படங்களில் நடிக்க விஜய் சேதுபதிக்கு சொல்லித் தரவேண்டியதில்லை. அவரே அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி செய்திருப்பது அழகாக தெரிகிறது. ஐஸ்வர்யாவை பறிகொடுத்த வேதனையில் அழும் காட்சிகளில் எல்லாம் நம்மையும் கண்கலங்க வைத்துவிடுகிறார்.

    தமன்னா இப்படத்தில் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். கவர்ச்சி வேடத்தில் இல்லாமல் ஒரு குடும்ப பாங்கான பெண் வேடத்தில் தமன்னா அழகாக இருக்கிறார். பிற்பாதியில் இவரது நடிப்பு அபாரம். சீனு ராமசாமி அவரை வேலை வாங்கியிருப்பது நன்றாகவே தெரிகிறது. சிருஷ்டி டாங்கே ஒருசில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கிறார்.

    அதேபோல், ஐஸ்வர்யா ராஜேஷூம் ஒரு சில காட்சிகளே வந்தாலும், அவரது கதாபாத்திரம் படத்தில் நிலைத்து நிற்கிறது. அவரது நடிப்பும் பலே சொல்ல வைக்கிறது. எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்துவரும் அருள்தாஸ், இந்த படத்திலும் தனது திறமையான நடிப்பால் அழுத்தமாக பதிகிறார். சவுந்தர்ராஜாவும் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

    படத்திற்கு மற்றொரு ஆணிவேராக இருப்பது ராதிகா சரத்குமார்தான். விஜய் சேதுபதியின் அம்மாவாக வரும் இவருடைய நடிப்பு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. குறைவான வசனங்களாக இருந்தாலும், தேவைக்கேற்ப அதை தெளிவாக பேசி அந்த காட்சிக்கு மெருகூட்டியிருக்கிறார்.

    பேராசிரியராக வரும் ராஜேஷின் அறிவுரைகள் எல்லாம் இன்றைய காலத்தில் மருத்துவ படிப்பு படிக்கும் இளைஞர்களுக்கு சவுக்கடிபோல் இருக்கிறது. இயக்குனர் சீனு ராமசாமி வழக்கம்போல் கிராமத்து பின்னணியில் இந்த படத்தையும் கொடுத்திருக்கிறார். மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்கள் கிராமத்திலும் பணியாற்ற முன்வரவேண்டும். வெளிநாடு தேடி செல்லக்கூடாது என்று சொல்ல வந்திருக்கும் இயக்குனர், அதனூடே ஒரு அழகான காதலை, குடும்ப பின்னணியில் கலந்து சொல்லியிருக்கிறார். படம் ஆரம்பம் முதல் கடைசி வரை எந்தவொரு காட்சியும் போரடிக்கும் வகையில் இல்லாதது சிறப்பு.

    யுவன் இசையில் பாடல்கள் சூப்பர். குறிப்பாக, ‘மக்கா கலங்குதப்பா’ பாடல் தியேட்டரில் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது. ‘ஆண்டிப்பட்டி கனவா காத்து’ பாடல் அழகான மெலோடி. பின்னணி இசையும் பலம் சேர்த்திருக்கிறது. சுகுமாரின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை தெளிவாக காட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘தர்மதுரை’ தரமான படம்.
    மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன், அர்ச்சனா சிங் நடிப்பில் வெளிவந்துள்ள ‘யானை மேல் குதிரை சவாரி’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
    மொட்டை ராஜேந்திரனும், சுவாமிநாதனும் சேர்ந்து கிராமத்தில் சிறியதாக நெசவு தொழில் செய்து வருகிறார்கள். அதே ஊரில் வசதி படைத்தவராக இருக்கும் முத்துராமன் இவர்களைவிட கொஞ்சம் பெரிதளவில் நெசவு தொழில் செய்து வருகிறார். இவர்கள் மூவருக்கும் ஒரே ஒற்றுமை இருக்கிறது. அது என்னவென்றால், மூன்று பேரும் பெண்கள் விஷயத்தில் பலவீனமானவர்கள்.

    எந்த பெண்ணை பார்த்தாலும், அந்த பெண்ணை அடையவேண்டும் என்று நினைப்பவர்கள். இந்நிலையில், முத்துராமனுடைய கம்பெனியில் வேலை பார்த்து வருகிறாள் நாயகி அர்ச்சனா சிங், அவளை அடைய வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார் முத்துராமன். அதேபோல், அதே கிராமத்தில் இருக்கும் ராஜேந்திரனும், சுவாமிநாதனும் அவளை அடைய துடிக்கின்றனர்.

    தாயார் மறைவுக்கு பிறகு தனது தம்பியுடன் தனிமையில் வசித்துவரும் அர்ச்சனா சிங்கை தேடி, ஒருநாள் அவளது அத்தை வருகிறாள். தனது மகன் அர்ச்சனாவை திருமணம் செய்துகொள்ள ஆசையோடு இருப்பதாக அவளிடம் கூறுகிறாள். தனக்கு ரூ.4 லட்சம் கடன் இருப்பதாகவும், ஆளுக்கு பாதிப் பாதி கடனை அடைத்துவிட்டால் இந்த திருமணத்தை நடத்திவிடலாம் என்றும் யோசனை கூறுகிறாள்.

    யாருமில்லாமல் அனாதையாக வாழ்வதைவிட, அந்த கடனை அடைத்துவிட்டு மாமனோடு சேர்ந்து வாழலாம் என்று முடிவெடுக்கிறாள் அர்ச்சனா சிங். அதன்படி, தனது முதலாளி முத்துராமனிடம் சென்று பணம் கேட்கிறாள். அவரோ, பணம் வேண்டுமென்றால் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று அவளிடம் கூறுகிறார். இதனால், கோபமடைந்த அர்ச்சனா, அவரிடமிருந்து பணத்தை வாங்காமல் திரும்பி செல்கிறாள். பள்ளியில் படிக்கும் தனது தம்பியின் தோழர்கள் இவளுக்கு உதவ முன் வருகிறார்கள்.

    இறுதியில், கடனுக்கு தேவையான பணத்தை திரட்டி, தனது மாமாவோடு அர்ச்சனா ஜோடி சேர்ந்தாளா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகன் என்று யாரும் கிடையாது. நாயகி அர்ச்சனா சிங் பார்க்க அழகாக இருக்கிறார். படத்தின் கதையே இவரைச் சுற்றித்தான் இருப்பதால், இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து நடித்திருக்கலாம். படத்தில் நாயகன் இல்லாததால் இவருக்கு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. படம் முழுக்க சோகம் வழிந்த முகத்துடனே வருவதால் ரசிக்க முடியவில்லை.

    படத்தின் நாயகர்களான மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன், முத்துராமன் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். முத்துராமன் வழக்கம்போல் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். மொட்டை ராஜேந்திரனும், சுவாமிநாதனும் படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல உதவியிருக்கிறார்கள்.

    ஐஸ் வண்டிக்காரராக வரும் கிருஷ்ணமூர்த்தியின் கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறது. ஆரம்பத்தில் நாயகிக்கு உதவுவதுபோல் வந்து, பிற்பாதியில் அவரே வில்லனாக மாறுவது சிறப்பு. இயக்குனர் கருப்பையா முருகன் ஹீரோவே இல்லாத ஒரு வித்தியாசமான கதையை உருவாக்கியிருக்கிறார். படத்தில் சஸ்பென்ஸ் காட்சிகள் இருந்தாலும், அது எளிதாக யூகிக்கக்கூடிய அளவுக்கு இருப்பதால் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடுகிறது. வசனங்கள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது.

    இமாலயன் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். தாஜ்நூர் தன்னுடைய பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மோகனின் ஒளிப்பதிவும் பரவாயில்லை ரகம் தான்.

    மொத்தத்தில் ‘யானை மேல் குதிரை சவாரி’ சொகுசு இல்லை.
    வெங்கேடஷ்-நயன்தாரா நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள ‘பாபு பங்காரம்’ படம் செல்வி என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. அந்த படம் எப்படியுள்ளது? என்பதை கீழே பார்ப்போம்...
    போலீஸ் அதிகாரியான வெங்கடேஷ் இரக்க குணமும், பிறருக்கு உதவும் மனம் கொண்டவராக இருக்கிறார். கேட்டரிங் நடத்தி வரும் நயன்தாராவும் அதே குணம் கொண்டவராக இருக்கிறார். இவரது அப்பா ஜெயப்பிரகாஷ் வருமான வரித்துறையில் பணியாற்றியவர். உயரதிகாரியை கொலை செய்தார் என்பதற்காக அவரை போலீஸ் தேடுகிறது. இதனால், அவர் நயன்தாராவை விட்டு தலைமறைவாகவே இருக்கிறார்.

    ஒருபக்கம் போலீஸ் அவரை கைது செய்ய முயற்சி செய்துகொண்டிருக்கும் நிலையில், மறுமுனையில் ரவுடிக் கும்பல் ஒன்றும் ஜெயப்பிரகாஷை தேடி வருகிறது. இந்நிலையில், நயன்தாராவை அப்பா இல்லாமல் கஷ்டப்படுவதை பற்றி கேள்விப்பட்ட வெங்கடேஷ், அவள்மீது இரக்கப்பட்டு, தான் போலீஸ் என்பதை அவளிடம் காட்டிக்கொள்ளாமல் அவளுக்கு உதவி செய்கிறார். நாட்கள் செல்ல செல்ல இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். இந்நிலையில், ஜெயப்பிரகாஷின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவரை பார்ப்பதற்காக வரும் ஜெயப்பிரகாஷை கைது செய்கிறார் வெங்கடேஷ்.

    தன்னுடைய அப்பாவை கைது செய்வதற்காகத்தான் வெங்கடேஷ் நல்லவன் போல் நாடகமாடினான் என்பதை அறிந்து நயன்தாரா, வெங்கடேஷ் மீது கோபம் கொள்கிறார். உண்மையில் ஜெயப்பிரகாஷ்தான் கொலை குற்றத்துக்காகத்தான் தலைமறைவாக இருந்தாரா? ரவுடிக் கும்பல் அவரை தேட காரணம் என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

    முதல்பாதி முழுக்க தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் நடித்திருக்கும் வெங்கடேஷ், இரண்டாம் பாதியில் ஆக்ஷன் காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். இப்படத்தின் போலீஸ் கதாபாத்திரத்திற்கும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இரண்டு வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களில் ரொம்ப மெனக்கெடுத்து நடித்திருக்கிறார்.

    நயன்தாரா தன்னுடைய அழகால் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார். நகைச்சுவை காட்சிகளாட்டும், ரொமான்ஸ் காட்சிகளாகட்டும் தனது பங்கை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார். பிரம்மானந்தம் காமெடி ரசிக்க வைக்கிறது. சம்பத் ரவுடி வில்லனாக வந்து மிரட்டியிருக்கிறார். ஜெயப்பிரகாஷ் பொறுப்பான அதிகாரியாகவும், பாசமுள்ள அப்பாவாகவும் மனதில் பதிகிறார். முரளி சர்மாவும் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை பதிவு செய்திருக்கிறார்.

    பலமுறை பார்த்த கதையையே கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டி எடுக்க நினைத்திருக்கிறார் மாருதி தசாரி. ஆனால், பெரிதளவில் எடுபடவில்லை. எளிதாக யூகிக்கக்கூடிய வகையில் அடுத்தடுத்த காட்சியமைப்புகள் அமைவதால் படம் விறுவிறுப்புக்கு தடை போடுகிறது. ஜிப்ரானின் இசையில் அமைந்துள்ள பாடல்கள் படத்திற்கு ஆறுதலாக அமைந்திருக்கிறது. அதேபோல் ரிச்சர்ட் பிரசாத்தின் ஒளிப்பதிவும் கலர்புல்லாக இருக்கிறது. குறிப்பாக பாடல் காட்சிகளை இவரது கேமரா அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘செல்வி’ செழிப்பாய் இல்லை.
    ‘குக்கூ’ என்ற படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான ராஜுமுருகன் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘ஜோக்கர்’ படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்..
    குரு சோமசுந்தரம் தன்னை ஜனாதிபதியாக நினைத்துக் கொண்டு ஊரில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறார். இவருக்கு உறுதுணையாக காயத்ரி கிருஷ்ணாவும், மு.ராமசாமியும் இருக்கின்றனர். இவர் என்னதான் ஊரின் நன்மைக்காக போராட்டங்கள் நடத்துவது, நீதிமன்றங்களில் வழக்கு நடத்துவது என்று இருந்தாலும், ஊர் மக்கள் அனைவரும் இவரை ஜோக்கராகத்தான் பார்க்கின்றனர்.

    சொந்த வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்தான் குரு சோமசுந்தரம் இவ்வாறு நடந்துகொள்வதற்கு காரணம் என்பது தெரிகிறது. அப்படி அவர் வாழ்க்கையில் என்னதான் நடந்தது? தான் செய்யும் இந்த காரியங்களால் அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகளுக்கு நியாயம் கிடைத்ததா? என்பதுதான் ஜோக்கர் படத்தின் மீதிக்கதை.

    ஒரு மனிதனின் ஏழ்மையை பயன்படுத்தி அரசியல்வாதிகள் எப்படி அரசியலாக்குகின்றனர் என்பதுதான் இப்படத்தின் கதை. நாட்டில் நடக்கும் அனைத்து அநியாயங்களையும் மிகவும் தைரியமாக இப்படத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறார் ராஜு முருகன். படத்திற்கு மிகப்பெரிய பலம் குரு சோமசுந்தரத்தின் நடிப்புதான். அவருடன் வரும் மு.ராமசாமி எதற்கெடுத்தாலும் வழக்கு போடுவது, மேலும் காயத்ரி கிருஷ்ணா அனைத்தையும் பேஸ்புக்கில் போட்டுவிடுவது என படத்தின் முதல் பாதி மிகவும் கலகலப்பாக நகர்கிறது. கிளைமாக்சில் கோர்ட்டில் சோமசுந்தரம் தைரியமாக பேசும் காட்சி ரசிக்க வைக்கிறது.

    நம்முடைய நிஜ வாழ்க்கையில் நடக்கக்கூடிய சம்பவங்களையும், நம்மை சுற்றியே இருக்கும் கதாபாத்திரங்களையும் தத்ரூபமாக காண்பித்திருப்பதால் படம் நம்மிடையே ஒன்றிவிடுகிறது. ஒரு கழிப்பிடத்தில்கூட இவ்வளவு பெரிய ஊழல் செய்யமுடியுமா? என்பதை இப்படத்தில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் ராஜு முருகன். படத்திற்கு மற்றொரு பெரிய பலம் வசனங்கள்தான். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என யாரையும் விட்டுவைக்காமல் அனைவரையும் விளாசி தள்ளியிருக்கிறார். இந்த மாதிரி வசனங்கள் வைப்பதற்கு உண்மையிலேயே தைரியம் வேண்டும்.

    படத்தில் அரசியல் சாயம் இருந்தாலும், ரசிக்கும்படியான ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார் ராஜு முருகன். அதற்காக அவரை பாராட்டலாம். ஷால் ரோல்டனின் இசையில் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற பாடல், காட்சியுடன் பார்க்கும்போது ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும் சூப்பர். செழியனின் ஒளிப்பதிவில் கிராமத்தின் அழகையும், அழுக்கையும் ஒருசேர காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு.

    மொத்தத்தில் ‘ஜோக்கர்’ சமூக அக்கறை.
    சுதீப்-நித்யாமேனன் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘முடிஞ்சா இவன புடி’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    நாயகன் சுதீப், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் தொழிலதிபர்களின் வீட்டில் புகுந்து, அவர்களின் கறுப்பு பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்து, ரகசிய இடத்தில் பதுக்கி வைத்து வருகிறார். அதன்படி, பெரிய தொழிலதிபரான முகேஷ் திவாரியின் வீட்டில் புகுந்து, அவர் பதுக்கி வைத்திருந்த கறுப்பு பணத்தையெல்லாம் திருடிச் சென்றுவிடுகிறார். கொள்ளைபோனது கறுப்பு பணம் என்பதால் முகேஷ் திவாரியால் போலீசில் புகார் அளிக்கமுடியவில்லை.

    இருப்பினும், தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரி மூலமாக அந்த பணத்தை திருடியவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், போலீசுக்கு ஒரு ரகசிய சி.டி. ஒன்று கிடைக்கிறது. அதில் சுதீப் திருடிய பணத்தை நண்பர்களுடன் பங்கிட்டு கொள்ளும் காட்சி பதிவாகியிருக்கிறது. அதில் தெரியும் சுதீப்பை பார்க்கும் ஒரு கைதி, சுதீப் ரியல் எஸ்டேட் செய்து வருவதாகவும், மிகவும் நல்ல மனிதர் எனவும் அவருக்கு சர்டிபிகேட் கொடுக்கிறார்.

    இதையடுத்து, சுதீப்பை கைது செய்யும் போலீசார், அவரை அடித்து உதைத்து விசாரிக்கின்றனர். அப்போது, சுதீப் அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லையென்றும், தனது அண்ணன் என்றும், தான் ஒரு அப்பாவி என்றும் கூறுகிறார். இதனால் குழப்பமடைந்த போலீஸ் அவரை விடுதலை செய்கிறது.

    இதையடுத்து, மற்றொரு தொழிலதிபரான சரத்லோகித்சவாவின் வீட்டிலும் கறுப்பு பணம் கொள்ளை போகிறது. இதற்கு காரணமும் சுதீப்தான் என்று முறையிட, போலீசார் கண்டுகொள்வதில்லை. இதனால், கோபமடைந்த முகேஷ் திவாரியும், சரத் லோகித்சவாவும் கொள்ளைபோன தங்களது பணத்தை தாங்களே மீட்டெடுக்க நினைக்கிறார்கள்.

    இறுதியில், அந்த கறுப்பு பணத்தையெல்லாம் சுதீப்பிடம் இருந்து மீட்டார்களா? உண்மையில் இந்த கொள்ளைகளுக்கெல்லாம் காரணம் யார்? என்பதை விறுவிறுப்பாக முடித்திருக்கிறார்கள்.

    நாயகன் சுதீப் படத்தின் கதையை பலமாக தாங்கி நிற்கிறார். அப்பாவித்தனம், அடிதடி என இருவேறு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். இரண்டு கதாபாத்திரங்களுக்கும் வெவ்வேறு விதமான நடிப்பை வரவழைத்து அசர வைத்திருக்கிறார். ஹீரோவுக்கே உரித்தான மாஸ், ஆக்ஷன், மசாலா, சென்டிமென்ட் என அனைத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார். படு ஸ்டைலிஷாக நடித்திருக்கிறார்.

    நித்யா மேனன், அழகு பதுமையாகவும் காதலனை நல்வழிப்படுத்தவும் வந்து செல்கிறார். நாசர், பிரகாஷ் ராஜ் ஆகிய இருவரும் தங்களுடைய காட்சிகளில் முத்திரை பதித்துள்ளார்கள். பிரகாஷ்ராஜ் தந்தையாக தனித்து நிற்கிறார். சதீஷின் டைமிங் காமெடி நகைச்சுவைக்கு கைகொடுக்கிறது. வில்லன்களாக வரும் முகேஷ் திவாரி, சரத் லோகிஸ்த்வா இருவரும் கொஞ்சம் மிரட்டியிருக்கிறார்கள். போலீஸாக வரும் சாய் ரவி மிரட்டலும் காமெடியும் கலந்து கொடுத்து அசத்தியிருக்கிறார்.

    இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்து கமர்ஷியல் படத்தை கொடுத்திருக்கிறார். படத்தில் அவரது பழைய படமான ‘வில்லன்’ படத்தின் சாயல் தெரிகிறதே தவிர, மற்றபடி, படத்தை இயக்கிய விதம் மிகவும் அருமை. படத்தில் காமெடி டிராக் என்று எதுவுமே வைக்காமல், ஹீரோவை வைத்தே காமெடி டிராக்கை உருவாக்குவதில் இவருக்கு நிகர் இவர்தான்.

    இமான் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடாவிட்டாலும், பின்னணி இசை அதிரடி காட்டியிருக்கிறது. ராஜரத்தினத்தின் ஒளிப்பதிவில் சண்டைக் காட்சிகளும், பாடல் காட்சிகளும் அபாரம்.

    மொத்தத்தில் ‘முடிஞ்சா இவன புடி’ பிடிச்சிருக்கு.
    விக்ரம் பிரபு எல்லை பாதுகாப்பு படை வீரராக நடித்துள்ள ‘வாகா’ படம் இன்று திரைக்கு வந்துள்ளது. அந்த படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்...
    விக்ரம் பிரபு படித்து முடித்துவிட்டு ஜாலியாக பொழுதைக் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். ஆனால், அவரது அப்பாவோ விக்ரம் பிரபுவை தன்னுடைய மளிகைக் கடையில் வேலைக்கு அமர்த்துகிறார். இதனால், தந்தையின் தொல்லையில் எப்படி விடுபடலாம் என்று காத்துக்கொண்டிருக்கும் விக்ரம்பிரபுவுக்கு, அவரது பெரியப்பா மகன் சத்யன் மூலமாக எல்லை பாதுகாப்பு படைக்கு ஆள் எடுப்பது தெரிய வருகிறது. அங்கு சென்றால் எந்நேரமும் சரக்கு கிடைக்கும் என்பதற்காக அதில் சேர முடிவெடுக்கிறார்கள்.

    எல்லை பாதுகாப்பு படைக்கான ஆள் தேர்வில் விக்ரம் பிரபு மட்டும் தேர்வாகிறார். சத்யனை உடல் எடையை காரணம் காட்டி நீக்குகின்றனர். அதன்பிறகு, இந்திய எல்லையில் பாதுகாப்பு பணிக்கு செல்லும் விக்ரம் பிரபுவுக்கு அங்கு தனிமை வாட்ட, சொந்த ஊரே பரவாயில்லை என்று முடிவெடுத்து அங்கிருந்து கிளம்ப பார்க்கிறார். அப்போது, எதேச்சையாக நாயகி ரன்யா ராவை பார்க்க, அவள் மீது காதல் கொள்கிறார். அவளுக்காக எல்லை பாதுகாப்பு படையிலேயே இருக்க முடிவு செய்கிறார்.

    விக்ரம் பிரபுவும், ரன்யா ராவும் அடிக்கடி சந்தித்து நட்பாகிறார்கள். பின்னர், அந்த நட்பு காதலாக மாறுகிறது. இந்நிலையில், காஷ்மிரீல் உள்நாட்டு கலவரம் வெடிக்கிறது. காஷ்மீரில் உள்ள பாகிஸ்தானியர்கள் எல்லோரும் வெளியேற வேண்டும் என்று போராட்டம் வலுக்கிறது. அப்போதுதான் தெரிகிறது நாயகி ரன்யா ராவ் பாகிஸ்தானி என்று. அதன்பின் பாகிஸ்தானுக்கு செல்லும் ரன்யா ராவுக்கு அங்கு செல்வதில் சில பிரச்சினைகள் ஏற்படுகிறது. அந்த பிரச்சினைகளில் இருந்து அவளை காப்பாற்றி பாகிஸ்தானுக்கு செல்லும் விக்ரம் பிரபு, அங்கு சிறை வைக்கப்படுகிறார்.

    எதற்காக அவர் சிறை வைக்கப்படுகிறார்? அங்கிருந்து அவர் தப்பித்து வந்தாரா? தனது காதலியை கரம்பிடித்தாரா? என்பதுதான் மீதிக்கதை.

    விக்ரம் பிரபு தோற்றத்தில் அச்சு அசலாக எல்லை பாதுகாப்பு படை வீரர் போல் இருக்கிறார். 6 அடி உயரம், அகன்ற மார்பு என ஒரு போர் வீரருக்கான உடல்வாகுடன் இந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சண்டைக் காட்சியில் மிரட்டியிருக்கிறார். ஆனால், ரொமான்ஸ் காட்சிகளில்தான் வழக்கம்போல் சொதப்பியிருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க விக்ரம் பிரபு இன்னும் கொஞ்சம் கற்றுக்கொள்ளவேண்டும்.

    ரன்யா ராவும் அவருடைய கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். படத்தின் கதை முழுக்க இவரைச் சுற்றித்தான் பயணிப்பதால் படம் முழுக்க வருகிறார். கதையின் ஆழம் மற்றும் அவரது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

    மிலிட்டரி என்றாலே போரின் போது மட்டும்தான் அவர்களுக்கு வேலை, மற்ற சமயங்களில் சரக்கு அடித்துவிட்டு, பார்ட்டி கொண்டாடி பொழுதை கழிப்பார்கள் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறன்றார்கள். ஆனால், வீடு, சொந்தம், பந்தம் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு, நாட்டிற்காக எல்லையில் யாரும் இல்லாத தனிமையில் வானத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டு படும் அவர்கள் படும் அவஸ்தையான வாழ்க்கையை இந்த படத்தில் சொல்லியிருக்கிறார் ஜி.என்.ஆர்.குமரவேலன். அவர்களுடைய வாழ்க்கையை சொல்ல நினைத்த இவருக்கு முதலில் பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.

    எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் கதையை சொல்ல வந்தாலும், இந்த படத்தின் மையக்கரு காதல்தான். காதலால் ஒரு மனிதன் எந்த நிலைமைக்கு செல்கிறான் என்பதுததான் கதை என்கிறபோது, அந்த காதல் காட்சிகளை சரியாக சொல்லாதது சற்று படத்திற்கு பின்னடைவாக இருக்கிறது. அதேநேரத்தில், பாகிஸ்தான் சிறையில் இந்தியர்கள் படும் வேதனைகளை இப்படத்தில் அழகாக சொல்லியிருக்கிறார். அதேபோல் வசனங்களும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

    டி.இமானின் இசையில் பாடல்கள் படத்திற்கு பெரிய வலு சேர்க்காவிட்டாலும், பின்னணி இசையை வழக்கம்போல் மிரட்டியிருக்கிறார். விக்ரம் பிரபு பாகிஸ்தான் சிறையில் தப்பிக்க நினைக்கும் காட்சிகளில் எல்லாம் இவரது பின்னணி இசை நம்மையும் அந்த காட்சியோடு ஒன்ற வைக்கிறது. சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு காஷ்மீரின் அழகை இன்னும் அழகாக காட்டியிருக்கிறது. அதேபோல், காடு, மலைகளும் அழகாக காட்டியிருக்கிறது. லால்குடி இளையராஜாவின் பாகிஸ்தான் அரங்குகள் உண்மையான பாகிஸ்தானுக்குள் நுழைந்த அனுபவத்தை கொடுக்கிறது.

    மொத்தத்தில் ‘வாகா’ விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம்
    ×