என் மலர்tooltip icon

    தரவரிசை

    அப்புக்குட்டி கதாநாயகனாக நடித்துள்ள ‘காகித கப்பல்’ படம் இன்று வெளியாகியுள்ளது. அந்த படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.
    சிறுவயதிலேயே பேப்பர் பொறுக்கி பிழைப்பு நடத்தி வரும் அப்புக்குட்டி எதிலும் நேர்மையாக இருக்கவேண்டும் என்ற குறிக்கோளோடு வாழ்ந்து வருகிறார். இவரது நேர்மையே அவரை வாழ்க்கையில் பெரிய நிலைக்கு கொண்டு செல்கிறது. இவர் நாலு பேரை வேலையில் அமர்த்தும் அளவுக்கு பெரிய ஆளாக மாறிய பிறகு, தனது அம்மாவுக்காக வீடு வாங்க வேண்டும் என்று எண்ணுகிறார்.

    இந்நிலையில், நாயகி தில்லிஜாவின் அப்பா தொழில் ரீதியாக நஷ்டமடைந்து, மோசடி செய்ததாக கூறி ஜெயிலுக்கு போகிறார். அவரை வெளியே ஜாமினில் கொண்டு வருவதற்கு ரூ.20 லட்சம் வரை தேவைப்படுகிறது. இதற்காக தாங்கள் வாழ்ந்து வந்த வீட்டை விற்க ஏற்பாடு செய்கிறார்கள்.

    அந்த வீடு அப்புக்குட்டிக்கு அவரது நண்பர் மூலமாக தெரியவர, அதை வாங்குவதற்காக ரூ.20 லட்சம் முன்பணமாக கொடுக்கிறார். அதை வாங்கிக் கொண்ட நாயகி தனது அப்பாவை ஜாமினில் வெளியே கொண்டு வருகிறார். ஆனால், அந்த வீட்டை பத்திரப்பதிவு செய்வதற்கு முன்பாகவே அப்புக்குட்டியை போலீஸ் கைது செய்து ஜெயிலில் அடைக்கிறது.

    ஜெயிலில் இருந்து ஜாமினில் வெளியே வரும் அப்புகுட்டியின் நல்ல மனதை புரிந்து கொண்டு அவரையே தனது வாழ்க்கை துணையாக்கி தொழிலிலும் முன்னேற்றம் காண வைக்கிறார் நாயகி தில்லிஜா. இந்த சூழ்நிலையில், திரைப்பட இயக்குநர் எம்.எஸ்.பாஸ்கர், தான் எடுக்க இருக்கும் திரைப்படத்துக்கு பைனான்ஸ் கேட்டு அப்புக்குட்டியை அணுகுகிறார்.

    அப்புக்குட்டியோ, ஹீரோயின் ஆக வேண்டும் என்பது என் மனைவியின் சிறுவயது ஆசை. அவளை ஹீரோயினாக போட்டால், இந்த படத்தை நானே பணம் போட்டு தயாரிக்கிறேன் என்று கூறுகிறார். இதனால் கணவன், மனைவியை வைத்தே படத்தை இயக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார் இயக்குநர் எம்.எஸ்.பாஸ்கர்.

    கடைசியாக அந்த படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்தார்களா? இல்லையா? என்பதுதான் க்ளைமாக்ஸ்.

    நாயகன் அப்புக்குட்டி படிப்பறிவு இல்லாத முதலாளி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். படம் முழுக்க எதார்த்தமான நடிப்பில் கவர்கிறார். முதல் பாதியில் ஒரு கெட்டப்பிலும், பிற்பாதியில் ஒரு கெட்டப்பிலும் வந்து அசத்துகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் இவர் தேம்பி அழுவது நெஞ்சை நெகிழ வைக்கிறது.

    தமிழுக்கு அறிமுக நாயகியான தில்லிஜா, தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். எதார்த்தமான கதை என்பதால் இவருடைய நடிப்பும் எதார்த்தம் குறையாமல் இருக்கிறது. பார்க்கவும் அழகாக இருக்கிறார். அட்வகேட்டாக வரும் பவர் ஸடார் சீனிவாசன் சில காட்சிகளே வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார்.

    இயக்குனராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் படத்தில் இயக்குனராகவே வாழ்ந்திருக்கிறார். குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியில் இவர் அப்புக்குட்டிக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கும் காட்சிகளில் நெகிழ வைக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்குண்டான நடிப்பில் மிளிர்கிறார்கள்.

    பிரபலமான நடிகர்கள் இல்லாவிட்டாலும் எதார்த்தமான கதையை மட்டுமே நம்பி இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் சிவராமன். படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அழகாக வேலை வாங்கியிருக்கிறார். படம் எதார்த்தமான பதிவாக அமைந்திருப்பது மிகச்சிறப்பு. உழைப்பால் உயர்ந்துவரும் அப்புக்குட்டி சொந்தமாக வீடு வாங்கும் முயற்சியில் இறங்கும்போது அவருக்கு வரும் பிரச்சினை எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. இருப்பினும், படத்தில் பல காட்சிகள் செயற்கையாக அமைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.

    வெங்கி தர்ஷனின் ஒளிப்பதிவு சுமார் ரகம்தான். நிஷாந்தின் இசையில் ‘தல’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை சுமார் ரகம்தான்.

    மொத்தத்தில் ‘காகித கப்பல்’ கரை சேரும்.
    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ‘மோட்டு பட்லு’ கார்ட்டூன் தொடர் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    சர்க்கஸே கதியென்று கிடக்கும் சைவ சிங்கம், அங்கிருக்க பிடிக்காமல் ஒருநாள் சர்க்கஸ் கூடாரத்தில் தீ விபத்து ஏற்பட, இதுதான் தருணம் என்று அங்கிருந்து தப்பித்து, மோட்டு பட்லு வசிக்கும் நகரத்துக்குள் புகுந்துவிடுகிறது. சிங்கத்தை பார்த்து பயப்படும் பொதுமக்கள் மத்தியில், மோட்டுவும் பட்லுவும் அந்த சிங்கத்தை பிடிக்கின்றனர்.

    பிடிபட்ட சிங்கத்தை காட்டுக்குள் கொண்டு செல்ல திட்டமிடுகையில், விஞ்ஞானி ஒருவரின் அபூர்வ கண்டுபிடிப்பால் சிங்க பாஷையை புரிந்துகொண்டு, அந்த சிங்கம் எங்கிருந்து வந்தது, அதன் நிலைமை என்ன? என்பதை அறிந்துகொள்கிறார்கள். சர்க்கஸிலேயே வாழ்ந்ததால் அந்த சிங்கத்தை காட்டுக்குள் கொண்டுவிட்டால் அங்குள்ள விலங்குகளால் சிங்கத்துக்கு ஆபத்து ஏற்படும் என்று எண்ணி, அந்த சிங்கத்தை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    அதேநேரத்தில் காட்டுக்குள் ராஜாவாக வாழ்ந்துவரும் மற்றொரு சிங்கம் ஒன்று, அந்த காட்டை அழிக்க நினைக்கும் வேட்டைக்காரர்களிடமிருந்து தனது கூட்டாளிகளையும், காடுகளையும் காப்பாற்ற போராடுகிறது. அந்த போராட்டத்தில் அந்த சிங்கம் ஒருநாள் வீரமரணம் அடைய, வேட்டைக்காரர்களுக்கு சாதகமாக போய்விடுகிறது.

    மோட்டு பட்லுவுக்கு இந்த விஷயம் தெரிந்துவிடவே, தங்களிடம் இருக்கும் சர்க்கஸ் சிங்கத்தை, காட்டு ராஜா சிங்கம் போல் நடிக்க வைத்து காட்டை அழிக்க நினைப்பவர்களை துரத்திவிட நினைக்கிறார்கள். ஆனால், சர்க்கஸ் சிங்கத்துக்கோ கம்பீரமாக கர்ஜிக்க கூட முடியவில்லை. அப்படியிருக்கையில், எப்படி அவர்களை துரத்த முடியும் என்று எண்ணும் மோட்லு, பட்லு சர்க்கஸ் சிங்கத்துக்கு பயிற்சி கொடுக்கிறார்கள்.

    இறுதியில், அந்த பயிற்சியில் சர்க்கஸ் சிங்கம் வெற்றி பெற்று, வேட்டைக்காரர்களை விரட்டி காட்டை காப்பாற்றியதா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

    குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன் தொடரான ‘மோட்டு பட்லு’ திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. கார்ட்டூன் படம் என்று அலட்சியமாக படம் பார்க்க சென்றவர்களுக்கு ஆச்சர்யம்தான் வருகிறது. நம்மையும் அறியாமல் படத்துக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது படம்.

    சைவ சிங்கத்துடன் பட்லுவும், மோட்டுவும் செய்யும் அட்டகாசங்கள் எல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன. குழந்தைகளுக்கான படம் என்றாலும் ஆக்ஷன், அட்வெஞ்சர், உணர்வுப்பூர்வமான காட்சிகளும் படத்தில் உண்டு. படத்தில் இடம்பெறும் வசனங்களும் குழந்தைகளின் மனதில் எளிதாக பதியும்படி உள்ளது சிறப்பு.

    படத்தில் காமெடி காட்சிகள் இருந்தாலும், இன்னும் கொஞ்சம் காமெடியை சேர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு ஆக்ஷனுக்கும் வித்தியாசமான இசையமைப்பில் கவர்கிறார் இசையமைப்பாளர்.

    மொத்தத்தில் ‘மோட்டு பட்லு’ குதூகலம்.
    அம்மன், அருந்ததீ ஆகிய பிரம்மாண்ட படங்களை இயக்கிய கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘சிவநாகம்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    இசைப் பிரியரான நாயகன் திகாந்த் மாஞ்சலே சொந்தமாக இசைக்குழு வைத்து நடத்தி வருகிறார். இந்தக் குழுவில் சேர்வதற்காக நாயகி ரம்யா பல முயற்சிகள் எடுக்கிறார். ஆனால், திகாந்த் அவரை ஒவ்வொருமுறையும் அவமானப்படுத்தி திருப்பி அனுப்பி விடுகிறார். ஒருவழியாக திகாந்தின் பெற்றோர் மனதில் இடம்பிடிக்கும் ரம்யா, அடுத்தபடியாக திகாந்தின் மனதிலும் இடம்பிடித்து அவரது இசைக்குழுவில் சேர்கிறார்.

    இந்நிலையில், உலக அளவில் நடக்கும் இசை நிகழ்ச்சி ஒன்றில் வெற்றிபெறுபவர்களுக்கு பழங்காலத்து கலசம் ஒன்று பரிசாக அறிவிக்கப்படுகிறது. நவசக்திகளால் வழிபாடு செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட அந்த கலசம் யாரிடம் இருக்கிறதோ, அவர்கள் மிகுந்த செல்வாக்குடனும், பலத்துடன் இருப்பார்கள் என்பது ஐதீகம்.

    அந்த கலசத்தை பற்றி தெரிந்துகொண்ட பெரிய செல்வந்தரான தர்ஷன், அதை எப்படியாவது அடையவேண்டும் என்று எண்ணுகிறார். இதற்கு, அந்த ஊரை சேர்ந்த முக்கியமானவர்களை தன்னுடைய கைக்குள் வைத்துக் கொள்கிறார். மேலும், சொந்தமாக இசைக்குழு ஒன்றை தொடங்கி, போட்டியில் வென்று கலசத்தை கைப்பற்றத் துடிக்கிறார்.

    ஆனால், ரம்யாவோ அந்த கலசத்தை கைப்பற்ற நினைப்பவர்கள் ஒவ்வொருவரையும், நாகமாக மாறி கொலை செய்கிறார். இறுதியில் அந்த கலசத்துக்கும் ரம்யாவுக்கும் என்ன சம்பந்தம்? அவள் ஏன் அந்த கலசத்தை கைப்பற்ற நினைக்கிறாள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் கதை முழுக்க ரம்யாவை மையப்படுத்தியே நகர்கிறது. அதை உணர்ந்து ரம்யாவும் அனைத்து காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக, சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். மாடர்ன் உடையிலும், பாரம்பரிய உடையிலும் இவரது தோற்றமே ரசிக்கும்படி இருக்கிறது. ஆக்ரோஷமான வசனங்கள் பேசும் இடங்களில் இவரது நடிப்பு பலே சொல்ல வைக்கிறது.

    நாயகன் திகாந்த் மாஞ்சலே தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பாடல் காட்சிகளில் சிறப்பாக நடனம் ஆடி அசத்தியிருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளிலும் சபாஷ் பெறுகிறார். தர்ஷன் மாடர்ன் வில்லனாக மிரட்டுகிறார். சாய்குமார் தனக்கே உரித்தான கம்பீரமான நடிப்பில் மிளிர்கிறார்.

    நட்சத்திரங்களுக்க்கு மேலாக படத்தில் பேசப்பட வைப்பது கிராபிக்ஸ் காட்சிகள்தான். இறுதிக்காட்சியில், மறைந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்தனை கிராபிக்ஸ் மற்றும் மார்பிங் முறையில் வரவழைத்திருப்பது பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டம். மேலும், கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் நாகம், பிரம்மாண்ட நடராஜர் சிலை மற்றும் போர் காட்சிகள் எல்லாம் படத்திற்கு பிரம்மாண்டத்தை கூட்டியிருக்கிறது.

    இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு இந்த படத்தை படமாக்கியிருக்கிறார். வழக்கம்போல, பழி வாங்கும் கதைதான் என்றாலும் அதை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். காட்சிகளுக்கு காட்சி விறுவிறுப்பாக செல்கிறது திரைக்கதை.

    குருகிரண் ஷெட்டியின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். வேணுகோபாலின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிதளவில் கைகொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘சிவநாகம்’ பக்தியை கூட்டும்.
    உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் உடன் இந்திய நடிகர் இர்பான் கான் நடித்து வெளியாகியிருக்கும் இன்ஃபர்னோ. இப்படம் எப்படி இருக்கிறது? என்பதை பார்ப்போம்.
    ஐரோப்பாவின் மிகப்பெரிய செல்வந்தரான பென் பாஸ்டர், பெருகி வரும் மக்கள் தொகையால் எதிர்காலத்தில் உலகம் பேரழிவை சந்திக்கப்போவதை உணர்ந்து மக்கள் தொகையை கட்டுப்படுத்த நினைக்கிறார். இதற்காக அவர், கொடிய வைரசை உருவாக்கி ரகசிய இடத்தில் வைக்கிறார். மேலும், அதனை கண்டுபிடிக்க பல புதிர்களையும் ஏற்படுத்தி வைக்கிறார்.

    இவரது திட்டத்தை அறியும் உளவுத்துறை இவரை சுற்றி வளைக்கிறது. தப்பிக்க முடியாத சூழ்நிலையில், இவர் தற்கொலை செய்துகொள்கிறார். பின்னர் அந்த வைரஸ் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கவும், அந்த புதிர்களை எல்லாம் சரியாக விடுவித்து வைரசை அழிக்கும் பணியை தொடங்குகிறார் சிட்சே பேபட். பெண் அதிகாரியான இவர், சவால் நிறைந்த இந்த வேலையை செய்து முடிக்க பேராசிரியரான டாம் ஹாங்க்ஸ் உதவியை நாடுகிறார்.

    அதன்படி டாம் ஹாங்க்ஸ் மற்றும் பெலிசிட்டி ஜோன்ஸ் ஆகியோர் வைரசை கண்டுபிடிக்க புறப்படுகின்றனர். பென்னின் காதலியான பெலிசிட்டி, வைரசை தான் முதலில் கண்டுபிடித்து எப்படியாவது பரவ விட்டு தன் காதலனின் ஆசையை நிறைவேற்ற திட்டம்போடுகிறார். இதற்காகவே டாம் ஹேங்சுக்கு உதவுவதுபோல் அவருடன் செல்கிறார்.

    இது ஒருபுறமிருக்க, பென் பாஸ்டரின் ஏஜென்டாக இருந்த இர்பான் கானும் வைரசை அழிக்க புறப்படுகிறார்.

    விறுவிறுப்பாக நடைபெறும் இந்த மும்முனை தேடுதல் வேட்டையின் இறுதியில் டாம் ஹேங்ஸ், இர்பான் கான் ஆகியோரின் முயற்சி வெற்றி பெற்றதா? அல்லது பெலிசிட்டியின் தந்திரம் பலித்ததா? என்பதே படத்தின் மீதிக் கதை.

    செல்வந்தராக நடித்திருக்கும் பென் பாஸ்டர் கம்பீரமான தோற்றத்தில், முதல் காட்சியில் பேசும் வசனங்கள் ரசிக்கும்படி உள்ளது. காதல் காட்சிகளில் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஏற்படுத்துகிறார். டாம் ஹாங்க்சுக்கு படத்தின் முழு கதையையும் தாங்கி செல்லும் கதாபாத்திரம். வைரசை அழிப்பதற்கு இவர் எடுக்கும் முயற்சிகள் மற்றும் புதிர்களை விடுவிக்கும் காட்சிகளில் இவரது நடிப்பு பேசும்படியாக உள்ளது.

    பெரும்பாலான காட்சிகளில் நேர்மறையான கதாபாத்திரத்துடன் அழகாக நடித்திருக்கும் பெலிசிட்டி ஜோன்ஸ், கடைசி காட்சியில் தனது சுயரூபத்தை காட்டும்போது அரங்கமே அதிர்கிறது.

    இந்திய நடிகரான இர்பான் கானுக்கு ஸ்டைலான கதாபாத்திரம். ஹாலிவுட் முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும்படியாக தனது கதாபாத்திரத்தை மிகவும் திறம்பட செய்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மக்களுக்கு எதிரான வைரசை அழிக்கும் பணியை பொறுப்பேற்று வழிநடத்தும் சிட்சே பேபட்டும் காட்சிகளின் தன்மைக்கேற்ப அழுத்தமான நடிப்பை பதிவு செய்துள்ளார்.

    மொத்தத்தில் இன்ஃபர்நோ - அறிவியல் அபாயம்.
    லட்சுமி ராமகிருஷ்ணன் நடிப்பு, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘அம்மணி’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
    அரசு ஆஸ்பத்திரியில் ஆயா வேலை பார்த்து வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மகள் காதலித்தவனுடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்கிறாள். பெரிய பையன் எந்நேரமும் குடியே கதியென்று கிடக்கிறான். இளைய மகன் ஆட்டோ ஓட்டி பிழைப்பு ஓட்டி வருகிறான்.

    இவர்களுக்கு சொந்தமான வீட்டிலேயே அம்மணி பாட்டியும் வாடகைக்கு குடியிருக்கிறார். அம்மணி பாட்டிக்கு சொந்தம், பந்தம் யாரும் கிடையாது. வழியில் கிடைக்கும் பொருட்களை சேகரித்து, அதை கடையில் போட்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்து தினமும் சாப்பிட்டு எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறாள்.

    இந்நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தனது வீட்டு கடனை கட்ட பணம் தேவைப்படுகிறது. இதனால், தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அதன்மூலம் வரும் பணத்தில் அந்த கடனை கொடுத்துவிட்டு மீதியை மகன்களுக்கு பிரித்துக் கொடுக்கலாம் என முடிவெடுக்கிறார். அந்த நேரத்தில் அவரது மகன்கள், மகள் வழி பேரன் ஆகியோர் இவள் மீது பாசம் காட்டுகிறார்கள்.

    ஆனால், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வரும் பணம் கடனை கட்டுவதற்கே சரியாக போய்விடுகிறது. இதனால், விரக்தியடைந்த அவருடைய இளைய மகன், தனது பெயரில் அந்த வீட்டை எழுதி வாங்கிக் கொண்டு, குடிகார அண்ணனையும், லட்சுமி ராமகிருஷ்ணனையும் வீட்டை விட்டு விரட்டுகிறான்.

    இதனால் லட்சுமி ராமகிருஷ்ணன் மிகவும் மனமுடைந்து போகிறார். இந்த சூழ்நிலையை அவர் எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை

    படம் முழுக்க முழுக்க லட்சுமி ராமகிருஷ்ணனே நிறைந்திருக்கிறார். அவரைச் சுற்றியே கதை நகர்கிறது. ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் ஆயாவாக, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். பெரிய நட்சத்திரம் என்று பார்க்காமல் எந்த மாதிரியாகவும் தன்னால் நடிக்கமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் எல்லாம் இவரது நடிப்பு பலே சொல்ல வைக்கிறது.

    ஒரு இயக்குனராகவும் லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு படம் மெருகேறியிருக்கிறார். குடிசைப் பகுதியில் வாழ்பவர்களின் வாழ்க்கையை நம் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார். அதேபோல், பணம்தான் இன்றைய கால சூழ்நிலையில் முக்கியம் என்று இன்றைய தலைமுறையில் நடக்கும் நிகழ்வுகளை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். அதேபோல், படத்தில் இடம்பெறும் வசனங்களும் படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கிறது. குத்தாட்ட சுந்தரிகளின் நடனம் இல்லாமல், நெருக்கமான காதல் காட்சிகள் இல்லாமல் மனங்களுக்குள் நடக்கும் போராட்டத்தை மட்டுமே வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். இதற்காக லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.

    அம்மணி பாட்டியாக வரும் சுப்புலட்சுமி பாட்டியின் துறு துறு நடிப்பும் நம்மை கவர்கிறது. அதேபோல், லட்சுமி ராமகிருஷ்ணனின் இளைய மகனாக வரும் நிதின் சத்யாவின் நடிப்பும் அழகாக இருக்கிறது. அம்மாவிடம் கோபப்பட்டு இவர் பேசும் காட்சிகள் எல்லாம் பலே சொல்ல வைக்கிறது. எமதர்ம ராஜாவாக வந்து ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு சென்றிருக்கிறார் ரோபோ சங்கர்.

    இம்ரானின் ஒளிப்பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது. கே-யின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான் என்றாலும், பின்னணி இசை மென்மையாக வந்து வருடுகிறது.

    மொத்தத்தில் ‘அம்மணி’ அனைவருக்குமான படம்.
    விஜய் சேதுபதி - லட்சுமி மேனன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘றெக்க’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
    பிரபல தாதாவான கபீர் சிங்கின் ஆட்கள் மற்றொரு ரவுடியான ஹரிஷ் உத்தமனின் தம்பியை போட்டுத் தள்ளுகிறார்கள். இதனால் கோபமடைந்த ஹரிஷ் உத்தமன், கபீர் சிங்கை பழிவாங்க நேரம் பார்த்து காத்திருக்கிறார். இதன்பிறகு கதை 6 மாதத்திற்கு பின்னோக்கி நகர்கிறது.

    காதலர்களை சேர்த்து வைப்பதை தனது லட்சியமாக கொண்டுவரும் விஜய் சேதுபதி, ஒருமுறை ஹரிஷ் உத்தமனுக்கு நிச்சயமான பெண்ணுக்கு அந்த திருமணத்தில் விருப்பம் இல்லாததால் அந்த பெண்ணை தூக்கிச் சென்றுவிடுகிறார். இதனால், ஹரிஷ் உத்தமன், விஜய் சேதுபதி மீது கோபத்தில் இருக்கிறார். அவரையும் சமயம் பார்த்து பழிவாங்க நினைக்கிறார்.

    இந்நிலையில், விஜய் சேதுபதியின் தங்கைக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அப்போது, டாஸ்மாக்கில் ஹரிஷ் உத்தமன் ஆட்களிடம் பிரச்சினையில் ஈடுபடுகிறார் விஜய் சேதுபதியின் நண்பர் சதிஷ். இந்த பிரச்சினை ஹரிஷ் உத்தமனிடம் செல்கிறது. நண்பனை மீட்பதற்காக வரும் விஜய் சேதுபதியிடம் ஹரிஷ் உத்தமன் மதுரையில் பெரிய அரசியல்வாதியின் பெண்ணான லட்சுமி மேனனை தூக்கச் சொல்கிறார். அப்படி அந்த வேலையை செய்யாவிட்டால் தங்கையின் திருமணத்தில் பிரச்சினை செய்வதாக கூறுகிறார். அதேநேரத்தில் லட்சுமி மேனன், கபீர் சிங்கை திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டிருப்பார்.

    தங்கையின் திருமணத்தில் பிரச்சினை ஏற்படுவதை விரும்பாத விஜய் சேதுபதி, ஹரிஷ் உத்தமன் சொன்ன வேலையை செய்ய முடிவெடுக்கிறார். தனது திருமணத்தை நிறுத்திய விஜய் சேதுபதி இந்த வேலையை செய்தால், ஒன்று அரசியல்வாதியிடம் மாட்டிக் கொண்டு இறந்துபோவான். அதேநேரத்தில் வேலையை சரியாக செய்தால், தனது தம்பியைக் கொன்ற கபீர் சிங்கை பழி வாங்கியதாக இருக்கும் என்று முடிவெடுத்துதான் இந்த வேலையை விஜய்சேதுபதியிடம் ஒப்படைத்திருப்பார் ஹரிஷ் உத்தமன்.

    இப்படியாக ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க ஆசைப்படும் ஹரிஷ் உத்தமனின் திட்டம் தெரியாமல் மதுரைக்கு செல்கிறார் விஜய் சேதுபதி. அங்கிருந்து லட்சுமி மேனனை தூக்கிக் கொண்டு வந்து ஹரிஷ் உத்தமனிடம் ஒப்படைத்து, தனது தங்கை திருமணத்தை நடத்தினாரா? அல்லது பிரச்சினை திசைதிரும்பியதா? என்பதே மீதிக்கதை.

    சேதுபதி படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் மற்றொரு மாஸ் படம். இப்படத்தில் ஆக்ஷனில் எல்லாம் விஜய் சேதுபதி அதிரடி காட்டியிருக்கிறார். அதேநேரத்தில், மாஸ் ஹீரோக்களுக்கு சவால்விடும்படியான காட்சிகளிலும் அசால்ட்டாக நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். அதேநேரத்தில், லட்சுமி மேனனுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள், வசனங்கள் உச்சரிப்பு என தனக்கே உரித்தான எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    லட்சுமி மேனன் இப்படத்தில் சற்று எடை கூடியிருக்கிறார். அதேநேரத்தில் அவருடைய மேக்கப்பும் அதிகமாக இருக்கிறது. இதையெல்லாம் கொஞ்சம் குறைத்திருந்தால் ரசித்திருக்கலாம். படத்தின் முதல்பாதியில் இவருடைய நடிப்பு ரொம்பவும் செயற்கைத்தனமாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் அதற்கான காரணத்தை சொல்லி, அவரது நடிப்புக்கு விளக்கம் கொடுத்திருப்பதால் அந்த கதாபாத்திரத்தை ரசிக்க முடிகிறது.

    விஜய் சேதுபதிக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமாரின் நடிப்பு பிரமாதம். மகனை புரிந்துகொண்ட தகப்பனாக அனைவர் மனதிலும் எளிதில் பதிகிறார். சதிஷின் காமெடி படத்தில் பெரிய அளவில் எடுபடவில்லை. கிஷோருக்கு இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரம். எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்யக்கூடிய கூடிய கிஷோர், இந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார். அதேபோல், கிஷோரின் காதலியாகவும், ஆசிரியையாகவும் வருபவரும் அழகாக நடித்திருக்கிறார்.

    வேதாளத்தில் வில்லத்தனத்தில் மிரட்டிய கபீர் சிங் இந்த படத்திலும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். ஹரிஷ் உத்தமன் அமைதியான வில்லனாக வந்து அசத்தியிருக்கிறார். இயக்குனர் ரத்தின சிவா, விஜய் சேதுபதியை மாஸ் ஹீரோவாக காட்டவேண்டும் என்பதற்காக அவருக்காகவே எடுக்கப்பட்ட கதையாக இருக்கிறது. படத்தில் நிறைய இடங்களில் விஜய் சேதுபதி பேசும் வசனங்கள் பஞ்ச் வசனங்களாக இல்லாவிட்டாலும் மாஸாக இருக்கிறது. கதை சரியாக இருந்தாலும் திரைக்கதை சற்று மெதுவாக நகர்கிறது.

    டி.இமான் இசையில் விர்று விர்று பாடல் மட்டும் அடிக்கடி கேட்கவேண்டும் போல் தோன்றுகிறது. மற்ற பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையில் இமான் அதிரடி கூட்டியிருக்கிறார். கே.எல்.பிரவினின் எடிட்டிங் காட்சிகளை துல்லியமாக வெட்டியிருக்கிறது. தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் சண்டைக் காட்சிகள் தத்ரூபமாக வந்திருக்கின்றன.

    மொத்தத்தில் ‘றெக்க’ பறந்தோடும்.
    பிரபு தேவா - தமன்னா ஆகியோர் நடிப்பில் திகில் படமாக உருவாகியுள்ள ‘தேவி’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்..
    மாடர்ன் பெண்ணை திருமணம் செய்ய நினைக்கும் பிரபுதேவா, பாட்டியின் விருப்பத்தின் பேரில் கிராமத்து பெண்ணான தமன்னாவை திருமணம் செய்ய நேரிடுகிறது. திருமணத்திற்கு பிறகு அவளை மும்பைக்கு அழைத்து செல்லும் பிரபுதேவா, அவளை எப்படியாவது பேசி கிராமத்திற்கு அனுப்பி வைத்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்.

    இந்நிலையில், பிரபுதேவா அலுவலகத்தில் உள்ளவர்கள் இவர்களுக்கு ஒரு பார்ட்டி வைக்கிறார்கள். அந்த பார்ட்டிக்கு தமன்னாவும் வருவேன் என்று அடம்பிடிக்க, பிரபுதேவா அவரையும் கூட்டிச் செல்கிறார். சென்ற இடத்தில் தமன்னா மாடர்ன் உடை அணிந்து பயங்கரமான நடனம் ஒன்றை ஆடுகிறார். மேலும், சரளமாக ஆங்கிலமும் பேசுகிறார்.

    இதையெல்லாம் பார்த்து அதிர்ந்துபோன பிரபுதேவா, அவளை பத்திரமாக வீட்டுக்கு அழைத்து வருகிறார். மறுநாள் எழுந்து பார்க்கும்போது முந்தைய நாள் நடந்தது எதுவுமே தமன்னாவுக்கு தெரிவதில்லை. அவள் உடம்பில் ஏதோ ஆவி புகுந்திருக்கலாம் என்று பயப்படும் பிரபுதேவா, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் அந்த வீட்டில் ஏற்கெனவே தங்கியிருந்தவர்கள் பற்றி விசாரிக்கிறார்.

    அப்போது சினிமாவில் பெரிய நடிகையாக ஆசைப்பட்டு பாதியிலேயே இறந்துபோன ரூபி என்ற பெண்ணின் ஆவி அந்த வீட்டில் இருப்பதும், அது தமன்னாவின் உடம்பில் புகுந்துள்ளதும் தெரிய வருகிறது. ஆவியை விரட்ட பல முயற்சிகள் செய்தும் பிரபுதேவாவால் முடியவில்லை.

    இதனால், ஆவியிடம் சமரசமாக பேசி, அந்த ஆவியிடம் 5 கண்டிஷன்களுடன் கூடிய அக்ரிமெண்ட் போடுகிறார். அந்த அக்ரிமெண்ட் படி நடந்தால் ரூபியின் ஆசையை நிறைவேற்ற பிரபுதேவா ஒத்துழைப்பதாக கூறுகிறார். மேலும், ஒப்பந்தம் முடிந்தபிறகு தமன்னாவின் உடம்பில் இருந்து ரூபி வெளியே சென்றுவிட வேண்டும் என்று கூறுகிறார்.

    பிரபுதேவா ஒப்பந்தப்படி ரூபியின் ஆவி நடந்துகொண்டதா? தமன்னாவின் உடம்பில் இருந்து ரூபியின் ஆவி வெளியே சென்றதா? என்பதே மீதிக்கதை.

    பிரபுதேவா இப்படத்தில் ரொம்பவும் இளமையாக தெரிகிறார். நடிப்பிலும் எதார்த்ததை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆவியை கண்டு பயப்படும் காட்சிகளில் எல்லாம் நம்மையும் சேர்ந்து பயமுறுத்துகிறார். அதேபோல், அவருக்கே உரித்தான காமெடித்தனம் இந்த படத்திலும் தனியாக பளிச்சிடுகிறது. வித்தியாசமான நடனத்திலும் அசர வைத்திருக்கிறார்.

    தமன்னா இரு வேறு கெட்டப்புகளில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கிராமத்து பெண்ணாக, அப்பாவி முகத்துடன் வலம் வரும் காட்சிகளில் எல்லாம் நெகிழ வைத்திருக்கிறார். அதேபோல், மாடர்ன் உடையில், ஸ்டைலாக நடனம் ஆடும் காட்சிகளில் எல்லாம் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்.

    ஆர்.ஜே.பாலாஜியின் காமெடி ரசிக்க வைக்கிறது. சதிஷின் வித்தியாசமான தலைமுடி, உடைகள் எல்லாம் பார்த்தாலே சிரிப்பை வரவழைக்கிறது. நாசர் சில காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைத்திருக்கிறார். ரூபியின் மேனேஜராக வரும் முரளி ஷர்மாவும் நடிப்பில் மிரட்டுகிறார். அதேபோல், நடிகராக வரும் சோனு சூட், தோற்றத்திலேயே மிரட்டுகிறார். எமி ஜாக்சன் ஒரு பாடலுக்கு வந்து நடனமாடியிருக்கிறார்.

    ஏ.எல்.விஜய் வித்தியாசமான ஒரு பேய் கதையை படமாக்கியிருக்கிறார். தமிழ் சினிமாவில் கோரமான பேய்களை பார்த்து வெறுத்துப்போனவர்களுக்கு இந்த படத்தில் அழகான, கிளாமரான பேயை கொண்டுவந்து ரசிகர்களை கிளுகிளுப்பூட்டியிருக்கிறார். படத்தில் கதாபாத்திரங்கள் தேர்வு எல்லாம் சிறப்பாக இருக்கிறது. திரைக்கதையும் விறுவிறுப்பாக செல்கிறது.

    ஷாஜித் - வாஜித் - விஷால் மிஷ்ரா ஆகியோரின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. கோபி சந்தரின் பின்னணி இசை மிரட்டல். மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

    மொத்தத்தில் ‘தேவி’ திகில் தேவி.
    சிவகார்த்திகேயன்- கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் ‘ரெமோ’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
    சிவகார்த்திகேயனுக்கு பெரிய நடிகராக வேண்டும் என்ற கனவு. ஆனால், அவருக்கு சரியாக வாய்ப்புகள் அமைவதில்லை.  கே.எஸ்.ரவிக்குமார் படத்துக்கு ஹீரோ தேர்வு செய்வதாக அறிந்து, அவரிடம் சென்று வாய்ப்பு கேட்கிறார். முதலில் காதல் காட்சியில் சிவகார்த்திகேயனை நடிக்கச் சொல்கிறார். ஆனால், அவருக்கோ ரொமான்ஸ் சுத்தமாக வருவதில்லை. இதனால், கே.எஸ்.ரவிக்குமார் சிவகார்த்திகேயனை நிராகரிக்கிறார்.

    இருப்பினும், அவருக்கு நகைச்சுவை நன்றாக வருவதை உணர்ந்து தான் அடுத்ததாக எடுக்கும் ‘அவ்வை சண்முகி’ படத்தை பற்றி அவரிடம் சொல்கிறார். அந்த படத்தில் ஹீரோ லேடி கெட்டப்பில் நடிப்பதாகவும் சிவகார்த்திகேயனிடம் சொல்கிறார். அந்த படத்திலாவது வாய்ப்பு வாங்கிவிட வேண்டும் என்று சிவகார்த்திகேயன் நினைக்கிறார்.

    கே.எஸ்.ரவிக்குமாரை பார்த்துவிட்டு திரும்பிவரும் வேளையில் கீர்த்தி சுரேஷை பார்க்கும் சிவகார்த்திகேயனுக்குள் கே.எஸ்.ரவிக்குமார் கேட்ட காதல், ரொமான்ஸ் எல்லாம் துளிர்விடுகிறது. எனவே, அவளை எப்படியாவது காதலிக்க வைக்கவேண்டும் என்று அவள் பின்னாலேயே சுற்றுகிறார். ஒருகட்டத்தில், கீர்த்தி சுரேஷை தேடி அவள் வீடு வரைக்கும் போகும் சிவகார்த்திகேயன், அங்கு கீர்த்தி சுரேஷுக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார்.

    இதற்கிடையில், சிவகார்த்திகேயன் லேடி நர்ஸ் கெட்டப்பில் சென்று கே.எஸ்.ரவிக்குமாரை கவர நினைக்கிறார். உடனே லேடி கெட்டப் போட்டு சென்று அவரிடம் சென்று நடித்துக்காட்டுகிறார். அப்படியும், கே.எஸ்.ரவிக்குமாருக்கு சிவகார்த்திகேயனின் நடிப்பு பிடிப்பதில்லை. இதனால், சோகத்தில் லேடி கெட்டப்பில் பஸ்ஸில் திரும்பும் சிவகார்த்திகேயனை யோகிபாபு சில்மிஷம் செய்கிறார்.

    இதைப் பார்க்கும் கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயனை லேடி என்று நினைத்து யோகி பாபுவிடமிருந்து காப்பாற்றுகிறாள். அவர் நர்ஸ் கெட்டப்பில் இருப்பதை பார்த்து தான் டாக்டராக பணிபுரியும் மருத்துவமனையிலேயே அவருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறுகிறார். இது தனக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பாக கருதி, அந்த கெட்டப்பிலேயே இருந்து அவள் மனதை மாற்றி திருமணத்தை தடுத்து நிறுத்த நினைக்கிறார்.

    இறுதியில், சிவகார்த்திகேயன் லேடி கெட்டப்பில் இருந்து கீர்த்தி சுரேஷின் மனதை மாற்றி காதலில் ஒன்று சேர்ந்தாரா? சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தா? என்பதே மீதிக்கதை.

    சிவகார்த்திகேயன் சாதாரணமாகவும் லேடி கெட்ப்பிலும் அசத்தலாகவும் அழகாகவும் இருக்கிறார். அதிலும், லேடி கெட்டப்பில் நர்ஸாக நடை, உடை, பாவனை எல்லாம் நன்றாக செய்திருக்கிறார். அதேபோல், இந்த படத்தில் ஆக்ஷன் காட்சியிலும் சிவகார்த்திகேயன் வெளுத்து வாங்கியிருக்கிறார். அதிலும், லேடி கெட்டப்பில் எதிரிகளை அடித்து துவம்சம் செய்துவிட்டு முகத்தில் விழுந்த முடியை ஊதிவிடும் காட்சிகளில் ரசிகர்களின் கிளாப்ஸ் தியேட்டரை அதிர வைக்கிறது.

    கீர்த்தி சுரேஷ் இதுவரையிலான படங்களில் ரொம்பவும் அழகாக இருந்தார். இந்த படத்தில் கூடுதல் அழகாக இருக்கிறார். சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் கெமிஸ்டரி ஏற்கெனவே ஒர்க் அவுட் ஆகியுள்ள நிலையில், இந்த படத்திலும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. கீர்த்தி சுரேஷின் துருதுரு நடிப்பு ரசிகர்களை ரொம்பவும் கவர்ந்திருக்கிறது.

    சதீஷின் காமெடி படத்திற்கு பெரிதளவில் கைகொடுத்திருக்கிறது. சரண்யா பொன்வண்ணன் வழக்கம்போல் காதலுக்கு பச்சை கொடி காட்டும் அம்மாவாக நடித்து அசத்தியிருக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரன், யோகி பாபு ஆகியோரின் காமெடியும் பரவாயில்லை. கீர்த்திசுரேஷின் அப்பாவாக வரும் நரேன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

    இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் முழுக்க முழுக்க ஒரு காதல் கதையை படமாக்கியிருக்கிறார். படத்தின் கதை முழுக்க சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் இருவரை மட்டுமே முன்னிருத்தி கதையை நகர்த்தியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கு அவ்வளவாக வாய்ப்பு வழங்கவில்லை. அதேபோல் படத்தில் நிறைய லாஜிக் மீறல்களும் இருக்கிறது. சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷுக்கு கொடுத்த வாய்ப்பில் பாதியளவாவது மற்ற கதாபாத்திரங்களுக்கும் கொடுத்திருக்கலாம். அதேபோல், படத்தில் உள்ள லாஜிக் மீறல்களையும் தவிர்த்திருந்தால் படத்தை கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சிகளையும் தனது கலைக் கண்ணால் வண்ணமயமாகவும், அழகாகவும் படமாக்கியிருக்கிறார். அனிருத்தின் இசையும் படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கிறது. ரசூல் பூக்குட்டி, சிவகார்த்திகேயனின் குரலை அழகான பெண் குரலாக மிகவும் நேர்த்தியாக மாற்றியிருக்கிறார். முத்துராஜின் அரங்குகள் அருமையாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கிறது.

    மொத்தத்தில் ‘ரெமோ’ ஜொலிக்கிறான்.
    கெவின் கார்ட், டுவெய்ன் ஜான்சன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ‘Central Intelligence’ படம் தமிழில் ‘இருவர் படை’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    கெவின் கார்ட் தனது பழைய நண்பனான டுவெய்ன் ஜான்சனை 20 வருடங்களுக்கு பிறகு பேஸ்புக் மூலமாக கண்டுபிடித்து சந்திக்கிறான். இவர்கள் சந்திப்பு நடத்திய மறுநாளே சிஐஏ அவரது வீட்டுக்கு வந்து டுவெய்ன் ஜான்சனை பற்றிய தகவல்களை கெவினிடம் சொல்கிறார்கள்.

    அதன்படி, டுவெய்ன் ஜான்சன் ஒரு கொலையை செய்துவிட்டு, செயற்கைகோள் சம்பந்தப்பட்ட குறியீட்டு இலக்கங்களை தீவிரவாதிகளிடம் விற்கப் பார்க்கும் மோசமான நபர் என்பது கால்வினுக்கு தெரிய வருகிறது. இதனால், டுவெய்ன் ஜான்சனிடமிருந்து கெவின் கழன்று கொள்ள நினைக்கிறார்.

    ஆனால், டுவெய்ன் ஜான்சனோ கெவின் கார்ட்டிடம் உதவி கேட்கிறார். இறுதியில் கெவின் கார்ட் டுவெய்ன் ஜான்சன் பக்கம் நின்றாரா? அல்லது சிஐஏ பக்கம்? நின்று டுவெய்ன் ஜான்சனை காட்டிக் கொடுத்தாரா? என்பதே மீதிக்கதை.

    படம் ஒரு ஆக்ஷன் படத்துக்கான கருவாக இருந்தாலும், நகைச்சுவையே படத்தில் பிரதானமாக இருக்கிறது. காமெடி செய்வதில் கில்லாடியான கெவின் கார்ட்டுக்கு இந்த படத்தில் சிறப்பான கதாபாத்திரம். நண்பனின் தொல்லையை தாங்கமுடியாமல் அவரை கழட்டி விடும் காட்சிகளில் வித்தியாசமான முகபாவனைகளால் ரசிக்க வைத்திருக்கிறார். இப்படம் இவருக்காகவே எடுக்கப்பட்டிருப்பதுபோல் தோன்றுகிறது.

    டுவெய்ன் ஜான்சனின் உடல் அவரை காமெடியனாக ரசிக்க முடியாமல் செய்திருக்கிறது. கெவினுடன் வரும்போது அவருக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியிருக்கிறார். அதேநேரத்தில் அடிப்பட்டு கிடக்கும் நேரத்தில் தன்னுடைய வேதனையை சொல்லும் காட்சிகளில் எல்லாம் சிறப்பாக நடித்திருக்கிறார். இருப்பினும், ஆக்ஷனில் இருந்து வெளியே வர எடுத்திருக்கும் புதுமுயற்சிக்கு அவரை பாராட்டலாம்.

    இவர்கள் இரண்டுபேர்தான் பிரதான கதாபாத்திரங்களாக படத்தில் வருகிறார்கள். இவர்கள் இவருக்குமான உயர வேற்றுமையே இவர்களை நகைச்சுவை ஜோடியாக ஏற்றுக்கொள்ள வைத்திருக்கிறது. படம் முடிந்துவிட்டது என்று நினைத்து எழுந்தபின்னும் படம் ஒரு சில நிமிடங்கள் நீள்வதை தவிர்த்திருக்கலாம். கல்லூரி காலங்களை படமாக்கிய விதமும் அருமை.

    மொத்தத்தில் ‘இருவர் படை’ சபாஷ்.
    புதுமுகங்கள் நடிப்பில் பேய் படமாக வெளிவந்துள்ள ‘ஆசி’ படம் எப்படியுள்ளது என்பதை கீழே பார்ப்போம்...
    நாயகன் ரவி வர்ஸமாவுக்கு தங்கை மீது அளவு கடந்த பாசம். அவள் பரதநாட்டியம் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டாள் என்பதற்காக அதேஊரில் பரதநாட்டிய கலைஞரான நாயகி பிரியா அஸ்மிதாவிடம் தனது தங்கையை சேர்த்துவிடுகிறார். தனது தங்கையை அழைத்து வர அடிக்கடி அவளது வீட்டுக்கு நாயகன் செல்ல, இருவருக்கும் காதல் வளர்கிறது.

    நாயகனின் தாய்மாமா ராஜ்கபூர் அதேஊரில் வெண்கல சிலை செய்யும் தொழில் செய்துவருகிறார். ராஜ் கபூரின் மகளுக்கு நாயகன் மீது ஆசை. ஆனால், நாயகனுக்கும், அவனது தங்கைக்கும் அவளை பிடிப்பதில்லை. இதனால், அவளை ஓரங்கட்டியே வருகின்றனர். ஒருகட்டத்தில் நாயகனின் தங்கையால்தான் அவன் தனது மகளை திருமணம் செய்ய மறுக்கிறான் என்று நினைக்கும் ராஜ்கபூர், நாயகனின் தங்கையை அழைத்து கண்டிக்கிறார். அப்போது, அவளை அடித்துவிட அவள் கீழே விழுந்து இறந்துபோகிறாள்.

    இறந்துபோன உடலை மறைக்க அவளது உடலின் மீது வெண்கலத்தை உருக்கி ஊற்றி வெண்கல சிலையாக மாற்றிவிடுகிறார் ராஜ்கபூர். அதன்பிறகு, நாயகனின் தங்கை ஆவியாக மாறி சிலையில் இருந்து வெளியே வந்து தன்னை கொன்றவர்களை பலி வாங்க துடிக்கிறாள்.

    இறுதியில் அந்த ஆவியிடமிருந்து ராஜ்கபூர் மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பித்தார்களா? இல்லையா? நாயகனும், நாயகியும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் மீதிக்கதை.

    நாயகன் ரவி வர்ஸாமாவுக்கு படத்தில் நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. கொடுத்தவரைக்கும் தனது வேலையை ஓரளவுக்கு செய்திருக்கிறார். நாயகி பிரியா அஸ்மிதா பரதநாட்டிய கலைஞராக வருகிறார். ஆனால், எந்த காட்சியிலும் அதை தெளிவாக காட்டவில்லை. நாயகனின் தங்கையாக வரும் சிறுமிக்கு படத்தில் நிறைய காட்சிகள் இருக்கிறது. பேயாக வந்து பயமுறுத்துகிறார். ஆனால் நமக்குத்தான் பயம் வரவில்லை.

    படத்தில் நிறைய கிராபிக்ஸ் செய்திருக்கிறார்கள். ஆனால், எதுவும் தெளிவாக இல்லை. படத்தின் இயக்குனர் தற்போது தமிழ் சினிமாவில் பேய் படங்கள் கல்லா கட்டுவதை பார்த்து இவரும் ஒரு பேய் கதையை எடுத்திருக்கிறார். ஆனால், பார்த்து பார்த்து சலித்துப்போன ஒரு கதையையே எடுத்து வைத்துள்ளது ரசிக்க முடியவில்லை. மேலும், கதையின் நாயகர்கள் தேர்வும் சரியாக இல்லாதது படத்திற்கு மிகப்பெரிய தொய்வு.

    பேய் படங்களுக்கு பின்னணி இசைதான் பலமாக இருக்கவேண்டும். ஆனால், இப்படத்தில் எஸ்.வி.வெங்கடேஷின் இசை திருப்தி கொடுக்கவில்லை. பாடல்கள் எல்லாம் ஒரே இரைச்சலாகத்தான் இருக்கிறது. ஸ்ரீதர்-நட்ராஜ் ஆகியோரின் ஒளிப்பதிவும் படத்திற்கு கைகொடுக்கவில்லை.

    மொத்தத்தில் ‘ஆசி’ தூசி.
    நேசம் முரளி, லூதியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கொள்ளிடம்’ படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்..
    நாயகன் நேசம் முரளி கொள்ளிடம் பகுதியில் மிகப்பெரிய ரவுடியாக இருக்கிறார். கட்டப்பஞ்சாயத்து, கள்ளச்சாராயம் காய்ச்சுவது என அந்த ஏரியாவிலேயே மிகப்பெரிய ஆளாக திகழ்கிறார். இவருக்கு அரசியல் பின்புலம், உயரதிகாரிகளின் ஆதரவும் இருந்து வருகிறது. இதனால், இவரை யாராலும் ஒன்றும் செய்யமுடிவதில்லை.

    இந்நிலையில், அதே ஏரியாவில் சிறிய தாதாவான ராமச்சந்திரன் துரைராஜ், பள்ளியில் படிக்கும் மாணவனுடைய காதலுக்கு உதவப்போய், போலீசில் மாட்டிக் கொள்கிறார். மாணவன் காதலித்த பெண், போலீஸ் அதிகாரியின் மகள் என்பதால் அந்த பிரச்சினை பெரிய அளவுக்கு போகிறது. அந்த பிரச்சினையில் இருந்து எந்தவித பாதிப்பும் இல்லாமல் ராமச்சந்திரனை வெளியே கொண்டு வருகிறார் நேசம் முரளி.

    இதனால், போலீஸ் அதிகாரிக்கு நேசம் முரளி மீது கோபம் வருகிறது. அவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார். ஆனால், அரசியல் பின்புலமும், ஆள் பலமும் நேசம் முரளி பின்னால் இருப்பதால் சமயம் பார்த்து அவனை தீர்த்துக்கட்ட காத்துக் கொண்டிருக்கிறார்.

    இதற்கிடையில், நேசம் முரளி குறவர் இனத்தை சேர்ந்த நாயகி லூதியாவை பார்த்ததும் காதல்வயப்பட்டுகிறார். தனது காதலை அவளிடம் சொல்லும்போது, அவள் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை. இருப்பினும், அவளை ஒருதலையாகவே காதலித்து வருகிறார் நேசம் முரளி.

    இந்நிலையில், நேசம் முரளியின் தங்கைக்கு திருமணம் நடக்கிறது. திருமணத்தின்போது அனைவருக்கும் சாராயம் கொடுக்கப்படுகிறது. அதைக் குடிக்கும் பலர் அங்கேயே இறந்துபோகின்றனர். இதற்கு காரணம் நேசம் முரளிதான் என்று போலீஸ் அவரை கைது செய்ய முடிவு செய்கிறது.

    இதனால், தலைமறைவாகும் அவர் குறவர் இனத்தோடு போய் தஞ்சம் அடைகிறார். இறுதியில், அவரை போலீசார் கைது செய்தார்களா? சாராயம் குடித்தவர்கள் இறந்துபோக காரணம் என்ன? இதற்கெல்லாம் பின்புலமாக செயல்பட்டவர்கள் யார்? என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.

    நாயகன் நேசம் முரளி நாயகனுக்குண்டான தோற்றம் இல்லாவிட்டாலும், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அட்டாக் முருகன் என்ற பிரபல தாதாவாக வரும் இவருடைய நடவடிக்கைகள் எல்லாம் தாதாவை கண்முன் கொண்டுவருகிறது. ஆனால், நாயகியிடம் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில்தான் ரசிக்க முடியவில்லை.

    லூதியா குறத்தி வேடத்தில் கச்சிதமாக இருக்கிறார். வசன உச்சரிப்பில்தான் கொஞ்சம் திணறியிருக்கிறார். புதுமுகம் என்பதால் இவரிடமிருந்து பெரிதாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. வடிவுக்கரசி தனக்கே உரித்தான கம்பீரத்துடன் இப்படத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார். வீர வசனம் பேசும் இடங்களில் வடிவுக்கரசி பளிச்சிடுகிறார்.

    சிறிய தாதாவாக வரும் ராமச்சந்திரன் துரைராஜ் பல படங்களில் பார்த்த முகம்தான். பார்வையாலேயே மிரட்டும் இவர், இந்த படத்திலும் மிரட்டலாக வருகிறார். ஒருசில காட்சிகளே வந்தாலும் சிறப்பாக செய்திருக்கிறார். மற்றபடி, படத்தில் சொல்லிக்கொள்ளும்படியாக கதாபாத்திரங்கள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

    நாயகன் நேசம் முரளியே இந்த படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு குறவர் இனத்தை பற்றிய படம் வெளிவந்திருக்கிறது. நிறைய படங்களில் அவர்களை பற்றிய உயர்வான எண்ணங்களை நாம் பார்த்திருப்போம். அதேயே இந்த படத்திலும் காட்டியிருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு அதரப்பழசான கதைதான் என்றாலும், காட்சியமைப்பிலும், திரைக்கதையிலும் ஏதாவது வித்தியாசம் காட்டியிருக்கலாம்.

    ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக, காதலைப் பற்றி தேவா பாடல் பாடும் பாட்டு ரசிக்க வைத்திருக்கிறது. ராஜகோபாலின் ஒளிப்பதிவில் கொள்ளிடம் பகுதியை இன்னும் கொஞ்சம் அழகாக காட்டியிருக்கலாம்.

    மொத்தத்தில் ‘கொள்ளிடம்’ அழகில்லை.
    டெலிபதி என்பதை கருவாக வைத்து ‘நுண்ணுணர்வு’ என்ற படம் வெளிவந்துள்ளது. அந்த படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்..
    ஒருவருடைய மனதில் ஏற்படும் உணர்வை, அவருடைய செயல்பாடுகளை இன்னொருவரால் அறிய முடியுமானால் அதை ‘டெலிபதி’ என்று சொல்வார்கள். அந்த ‘டெலிபதி’யை கருவாக வைத்து நுண்ணுணர்வு என்ற பெயரில் படமாக எடுத்துள்ளார்கள். படத்தின் கதை முழுக்க ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

    நாயகி இந்திரா ஆஸ்திரேலியாவில் டெலிபதி பற்றிய ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டிருக்கிறார். அதேநேரத்தில் நாயகன் மதிவாணனோ பயிற்சி பல் மருத்துவராக ஆஸ்திரேலியாவின் மற்றொரு பகுதியில் பணியாற்றி வருகிறார். இவர் தங்கியிருக்கும் வீட்டில் உள்ள நண்பனோ பெண்கள் விஷயத்தில் ரொம்பவும் மோசமானவனாக இருக்கிறான். இருப்பினும், நாயகன் அதில் தலையிடாமல் தனது வேலையை மட்டும் செய்து வருகிறார்.

    ஒத்த கருத்துடைய இருவரால் டெலிபதி மூலமாக பார்க்காமலேயே, எந்தவித தொடர்பும் இல்லாமலேயே பேசிக் கொள்ளலாம் என்பதை நாயகி தனது ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கிறாள். அதனால், ஒவ்வொரு முறையும் நாம் யாரையாவது டெலிபதி மூலமாக கனெக்ட் பண்ண முடிகிறதா? என்று முயற்சி செய்கிறாள்.

    அப்போது நாயகியின் ஆசைகள் நாயகனுடன் ஒத்துப்போகவே இருவருக்கும் டெலிபதி கனெக்ட் ஆகிறது. இருவரும் அடிக்கடி டெலிபதி மூலமாக பேசிக்கொள்கிறார்கள். ஒருவரையொருவர் பார்க்க முடியாவிட்டாலும் பேசமுடிகிறது. ஒருவர் பேசுவது மற்றவருக்கு கேட்கிறது. ஒருவருக்கு அடிபட்டால் மற்றவருக்கும் வலிக்கிறது.

    நாயகனும், நாயகியும் டெலிபதி மூலமாக தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை பார்க்கும் நாயகியின் அப்பா, அவளுக்கு பைத்தியம் பிடித்திருப்பதாக கூறி ஆஸ்பத்திரிக்கு அழைக்கிறார். அவளோ, தான் டெலிபதி மூலமாக பேசிக்கொள்வதாக கூறி மருத்துவமனைக்கு வர மறுக்கிறாள். நாயகியை அடையத் துடிக்கும், அவளது நெருங்கிய உறவுக்கார பையன் நாயகியின் அப்பாவை தாக்கி அவளை கடத்துகிறான்.

    அதேநேரத்தில், நாயகன் தனது நண்பனுடன் கேம்ப் செல்கிறார். அங்கு நண்பன் ஒரு பெண்ணை கொலை செய்துவிடுகிறான். இந்த கேஸை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியிடம் நாயகன் உண்மையை சொல்லிவிடுகிறான். தன்னை மாட்டிவிட்டவனை கொலை செய்ய நாயகனின் நண்பன் முடிவெடுக்கிறான்.

    இதிலிருந்து நாயகன் தப்பித்து, நாயகியை கண்டுபிடித்து அவருடன் சேர்ந்தாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

    இப்படத்தின் கரு என்பது மிகவும் அருமையான ஒன்று. யாரும் நடிப்பதற்கு ஏற்றுக்கொள்ளும் கதையை தேர்ந்தெடுத்தவர் கதாபாத்திரங்கள் தேர்வில் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். நாயகன் மதிவாணன் ஏற்கெனவே ‘மகா மகா’ என்ற படத்தில் நடித்தவர். அந்த படத்திலிருந்து இந்த படத்தில் கொஞ்சம் நடிப்பில் தேறியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

    அதேபோல், இந்திராவும் ஏற்கெனவே ‘மகா மகா’ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் முழுநீள ஹீரோயினாக வருகிறார். நாயகனுடன் டெலிபதி மூலமாக பேசிக்கொள்ளும் காட்சிகளில் எல்லாம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்திராவின் அப்பாவாக நடித்திருப்பவர், நாயகனின் நண்பனாக வருபவர் என படத்தில் ஒருசில கதாபாத்திரங்கள்தான் வருகின்றன. அவர்கள் முழுமையாக நடிப்பை கற்றுக்கொண்டவர்கள் இல்லையென்றாலும், சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

    குண்டு பெண்ணாக வருபவர் காமெடி என்ற பெயரில் செய்யும் செய்கைகள் எல்லாம் வெறுப்பை கொடுக்கின்றன. அதையெல்லாம் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. படம் முழுக்க ஆஸ்திரேலியாவில் படமாக்கியிருக்கிறார்கள். இருப்பினும், பெரும்பாலான காட்சிகள் வீட்டுக்குள்ளேயே படமாகியிருப்பது படத்தை ரசிக்க வைக்க மறுக்கிறது. அதேபோல், திரைக்கதையும் ரொம்பவும் மெதுவாக நகர்வது படத்தை முழுவதுமாக உட்கார்ந்து பார்க்கமுடியவில்லை.

    தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு இந்த படத்தில் இன்னும் நிறைய கலவைகளை சேர்க்கவேண்டும். எனினும், இயக்குனரின் புதுமுயற்சியை பாராட்டித்தான் ஆகவேண்டும். மாயு கணேசன் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    மொத்தத்தில் ‘நுண்ணுணர்வு’ உணர்வு இல்லை.
    ×