என் மலர்tooltip icon

    தரவரிசை

    கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘அஞ்சுக்கு ஒண்ணு’ திரைப்படம் வெளியாகியுள்ளது. அந்த படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.
    நாயகன் அமர், சித்தார்த் உள்ளிட்ட 5 பேர் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருக்கிறார்கள். இவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி ஒன்றாக கட்டிட வேலை செய்கின்றனர். இவர்களுடைய மேஸ்திரி சிங்கம் புலி. இவர்கள் ஐந்து பேரும் எதை செய்தாலும் சேர்ந்தேதான் செய்வார்கள்.

    இவர்களுடன் கட்டிட வேலைக்கு நாயகி உமாஸ்ரீ வருகிறாள். சித்தார்த்துக்கு அந்த பெண் மீது காதல் வருகிறது. இருவரும் திருமணம் செய்துகொள்ள நினைக்கின்றனர். 5 நண்பர்களிடையே ஒரு பெண் குறுக்கிட்டதால், நட்பில் விரிசல் ஏற்படுகிறது. இவர்களை ஒன்றுசேர்க்கவும், அவர்களை திருத்தி நல்வழிக்கு கொண்டு வரவும் நாயகி முயற்சி செய்கிறாள்.

    இந்த முயற்சியில் நாயகிக்கு வெற்றி கிடைத்ததா? நண்பர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை.

    சித்தார்த் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதலியின் அன்புக்கும், நண்பர்களின் நட்புக்கும் இடையே சிக்கித் தவிப்பதை பிரதிபலிக்கிறார். நாயகி உமாஸ்ரீயை சுற்றி கதை நகர்கிறது. அந்த பாத்திரமாகவே அவர் மாறி இருக்கிறார்.  அமரின் காதலியாகவும், முதலாளியின் மகளாகவும் வரும் மேக்னா கச்சிதம். கட்டிட மேஸ்திரி சிங்கம் புலி, ரசிக்க வைக்கிறார். முத்துக்காளை, உமா, கசாலி, ஷர்மிளா உள்ளிட்ட மற்றவர்களும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.

    ஐந்து நண்பர்கள் இடையில் ஒரு பெண் வந்தால் என்ன பிரச்சினைகள் வரும் என்பதை தெளிவாக எடுத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஆர்வியார். அந்த பெண் நம்பிக்கை வைத்து, அவர்களின் வாழ்க்கையை மாற்றி அழகாக்குவது கதைக்கு பலம். மழைக்காலத்தில் கட்டிடத் தொழிலாளர்கள் படும் கஷ்டங்களை அருமையாக காட்டியுள்ளார்.

    காட்சிகள் திருப்பம் இல்லாமல் நகர்ந்தாலும், கிளைமாக்ஸ் எதிர்பாராதது. நண்பர்களின் கதையை இன்னும் ஆழமாக சொல்லி இருந்தால் படம் ஐந்தில் ஒன்றாக பேசப்பட்டிருக்கும். முதல்பாதியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். என்றாலும், கட்டிட கூலி தொழிலாளர்கள் வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்திருப்பது புதிய முயற்சி.

    சாகித்யா இசையில் பாடல்களை ரசிக்கலாம். பின்னணியும் பரவாயில்லை. நந்து ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவு.

    மொத்தத்தில் ‘அஞ்சுக்கு ஒண்ணு’ வித்தியாசமான சிந்தனை. 
    ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி ஆகியோர் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கியுள்ள கடவுள் இருக்கான் குமாரு படம் இன்று ரிலீசாகியுள்ளது. அந்த படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.
    ஜி.வி.பிரகாஷுக்கும் நிக்கி கல்ராணிக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெகிறது. திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் பேச்சுலர் பார்ட்டி கொண்டாடுவதற்காக பாண்டிச்சேரி வரை செல்வதற்கு நிக்கி கல்ராணியின் காரை வாங்கிக் கொண்டு செல்கிறார் ஜி.வி.பிரகாஷ். பாண்டிச்சேரியில் பார்ட்டி கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் வழியில், போலீஸ் அதிகாரிகளான பிரகாஷ் ராஜ், சிங்கம்புலி, ரோபோ சங்கர் ஆகியோர் இவர்களது காரை வழிமறித்து சோதனை செய்கிறார்கள்.

    அவர்களது காரில் மதுபாட்டில்கள் இருப்பதை பார்த்ததும், அவர்களை கைது செய்யப்போவதாக பிரகாஷ் ராஜ் மிரட்டுகிறார். உடனே பயந்துபோன ஜி.வி.யும், பாலாஜியும் அவர்களிடம் இருந்து தப்பித்து செல்கிறார்கள். ஆனால், பாலாஜியின் மொபைல் சிங்கம் புலியிடம் சிக்குகிறது. அதைவைத்து பிரகாஷ் ராஜ் அவர்களை பின்தொடருகிறார்.

    இதற்கிடையில், ஜி.வி.யின் முன்னாள் காதலியான ஆனந்தியும், திருமணம் செய்து கொள்ளப்போகும் நிக்கி கல்ராணியும் அவருக்கு தொடர்ந்து போன் செய்துகொண்டே இருக்கிறார்கள். ஆனந்தி ஜி.வி.யின் மீது பாசமாகவும், நிக்கி கல்ராணி ரொம்ப கண்டிஷனாகவும் நடந்து கொள்கிறார்.

    ஒருகட்டத்தில் ஜி.வி.பிரகாஷின் மனதில் சிறிய மாற்றம் ஏற்படுகிறது. நிக்கி கல்ராணியை திருமணம் செய்யலாமா? ஆனந்தியை திருமணம் செய்யலாமா? என்ற குழப்பமும் ஏற்படுகிறது. இறுதியில், ஜி.வி.யும், பாலாஜியும் பிரகாஷ் ராஜிடம் இருந்து தப்பித்தார்களா? ஜி.வி. யாரை திருமணம் செய்தார்? என்பதே மீதிக்கதை.

    ஜி.வி.பிரகாஷ் வழக்கம்போல் நண்பர்களோடு அரட்டையடிப்பது, நாயகிகளுடன் இணைந்து டூயட் ஆடுவது என்பது இல்லாமல் இப்படத்தில் கொஞ்சம் நன்றாகவே நடித்திருக்கிறார். நீண்ட வசனங்களைக்கூட அசால்ட்டாக பேசி அசர வைக்கிறார். நிக்கி கல்ராணி, ஆனந்தி என இரு கதாநாயகிகளுடன் நெருங்கி நடிப்பதில் எந்தவித தயக்கமும் இல்லாமல் தாராளமாக நடித்திருக்கிறார். அவர்களும் ஜி.வி.பிரகாஷுக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார்கள்.

    படத்திற்கு படம் ஆனந்தி மெருகேறிக் கொண்டே வருகிறார். நிக்கி கல்ராணியும் பார்க்க அழகாக இருக்கிறார். நடிப்பிலும் ஓகே சொல்ல வைக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி, ராஜேஷ் படத்தில் சந்தானம் இல்லாத குறையை நீக்கியிருக்கிறார். அவர் வரும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரில் ரசிகர்களின் கரவொலி காதை பிளக்கிறது.

    படத்திற்கு மற்றொரு பெரிய பலம் பிரகாஷ் ராஜ். காமெடி கலந்த வில்லத்தனத்தில் கலக்கியிருக்கிறார். ரொம்பவும் எதார்த்தமான நடிப்பில் அசர வைக்கிறார். அவருக்கு ரோபோ சங்கரும், சிங்கம் புலியும் கைகொடுத்து உதவியிருக்கிறார்கள். பேசுவதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தும் ஊர்வசியும், அந்த நிகழ்ச்சியை நடத்தும் இயக்குனராக வரும் மனோபாலாவும் நகைச்சுவையில் வயிறு குலுங்க வைத்திருக்கிறார்கள்.

    எம்.எஸ்.பாஸ்கர் கண்டிப்பான அப்பாவாக வந்து மிளிர்கிறார். அதிகார தோரணையுடன் இவர் பேசும் வசனங்கள் எல்லாமே ரசிக்க வைக்கிறது. ஜி.வி.யின் அப்பாவாக வரும் டி.சிவாவும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

    இயக்குனர் எம்.ராஜேஷ் வழக்கம்போல காமெடி கலந்த ஒரு படத்தையே கொடுத்திருக்கிறார். முந்தைய படங்களின் சாயல் இருந்தாலும் படத்தை ரசிக்கும்படி எடுத்திருப்பது சிறப்பு. ராஜேஷ் படங்கள் என்றாலே வயிறு குலுங்கு சிரித்துவிட்டு வரலாம் என்பதற்கு இந்த படமும் கியாரண்டி. முதல்பாதி கலகலப்பாக சென்றாலும், இரண்டாம் பாதியில் பாடல் காட்சிகளை புகுத்தி ஊர் சுற்றி முடித்திருப்பது ஏனோ சற்று சலிப்பை தருகிறது. அதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

    ஜி.வி.யின் இசையில் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் அடித்துள்ளது. திரையில் அதை பார்ப்பதற்கும், கேட்பதற்கும் அதிரடியாக இருக்கிறது. சக்தி சரவணனின் ஒளிப்பதிவு காட்சிகளை மிகவும் அழகாக படம்பிடித்திருக்கிறார். சேசிங் காட்சிகளில் எல்லாம் இவரது கேமரா பளிச்சிடுகிறது.

    மொத்தத்தில் ‘கடவுள் இருக்கான் குமாரு’ காமெடியில் கலக்குகிறார்.
    மோகன்லால், சத்யராஜ், அமலாபால் ஆகியோர் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ‘லைலா ஓ லைலா’ படம் தமிழில் டப்பாகி ‘முருகவேல்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. அந்த படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
    சத்யராஜ் அரசாங்கத்தின் உதவியுடன் மறைமுகமாக துப்பறியும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாளராக மோகன்லால் பணியாற்றி வருகிறார். மோகன்லாலுக்கும் ரம்யா நம்பீசனுக்கும் திருமணமாகி 6 மாதங்களுக்குள் பிரிந்து விடுகிறார்கள். தற்போது பணியில் தீவிரமாக பணியாற்றிவரும் மோகன்லால் யார் என்று தெரியாமலேயே அமலாபால் அவரை காதலிக்கிறார்.

    இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகளும் நடக்கிறது. இந்நிலையில், தீவிரவாதியான ராகுல்தேவை கண்டுபிடித்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் மோகன்லால். பின்னர் ராகுல் தேவுக்கும் கய்னாத் அரோராவுக்கும் பழக்கம் இருப்பதை அறியும் மோகன்லால், அவள் மூலம் தீவிரவாத கும்பலின் மொத்த நெட்வொர்க்கையும் கண்டுபிடிக்க நினைக்கிறார்.

    இதற்காக கய்னாத் அரோராவிடம் தான் யார் என்பதை கூறாமல் அவருடன் நெருக்கமாக பழகுகிறார் மோகன்லால். கய்னாத் அரோராவும் மோகன்லாலும் அடிக்கடி சந்திப்பதை நோட்டமிடும் அமலாபால், மோகன்லாலை பின் தொடருகிறார்.

    அந்த நேரத்தில் மோகன்லாலின் கட்டுப்பாட்டில் இருந்த ராகுல் தேவ் அங்கிருந்து தப்பிக்கிறார். கய்னாத் அரோராவை சந்திக்க மோகன்லால் அவள் வீட்டுக்கு செல்லும் நேரத்தில், ராகுல் தேவும் அங்கு வர, அவர்களுக்குள் துப்பாக்கி சண்டை நடக்கிறது. அப்போது அங்கு வரும் அமலாபால், மோகன்லால் பெரிய ரவுடி என்று நினைப்பதுடன், அவரை விட்டு பிரியவும் செய்கிறார்.

    இதுஒருபுறமிருக்க, ராகுல்தேவும் கய்னாத் அரோராவும் மோகன்லாலிடம் இருந்து தப்பித்து செல்கிறார்கள். இறுதியில், மோகன்லால் அவர்களை தேடிக் கண்டுபிடித்து ஒட்டுமொத்த தீவிரவாதிகளையும் கைது செய்தாரா? அமலாபாலை சமாதானப்படுத்தி வாழ்க்கையில் இணைந்தாரா? என்பதே மீதிக்கதை.

    மலையாளத்தில் வெளிவந்த ‘லைலா ஓ லைலா’ படத்தை தமிழில் டப்பிங் செய்து ‘முருகவேல்’ என்று தலைப்பு வைத்து வெளியிட்டுள்ளனர். படத்தின் நாயகன் மோகன்லால்தான். ஆனால், தமிழில் சத்யராஜை பிரதானமாக வைத்து விளம்பரம் செய்துள்ளார்கள். அதனை பார்த்துவிட்டு படம் பார்க்க செல்கிறவர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்கள்.

    மோகன்லால் தனது உடலமைப்புக்கு எந்தளவுக்கு சண்டைக் காட்சியில் நடிக்க முடியுமோ? அதை சரியாக புரிந்துகொண்டு ஆக்சனில் அசத்தியிருக்கிறார். அதேபோல், செண்டிமென்ட் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    சத்யராஜ் மொட்டைத் தலையுடன் பார்ப்பதற்கு வில்லன் ரேஞ்சுக்கு இருந்தாலும், படத்தின் மற்றொரு கதாநாயகன்போல் வருகிறார். இவர் பேசும் வசனங்கள் எல்லாம் நமக்கு புதிதாக இருக்கிறது. இருப்பினும், இந்த புதிய கெட்டப்பில் அவரை பார்க்கும்போது அழகாகவே இருக்கிறார். நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

    ரம்யா நம்பீசன் ஒரு சில காட்சிகளே வந்துபோனாலும் நிறைவை தந்திருக்கிறார். அமலாபால் முற்பாதியில் மோகன்லாலை காதலிப்பதும், பிற்பாதியில் அவருக்கு உறுதுணையாக இருப்பதும் என மாறுபட்ட நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ராகுல் தேவ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். அவருடைய காதலியாக கய்னாத் அரோரா கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார்.

    இயக்குனர் ஜோசி ஹாலிவுட் பாணியில் ஒரு திரைப்படத்தை கொடுத்திருக்கிறார். துப்பறியும் காட்சிகள் எல்லாம் மிகவும் அருமையாகவும் விறுவிறுப்பாகவும் செல்கிறது. படத்தில் ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது. தேவைக்கேற்ப செண்டிமெண்ட், காதல் காட்சிகளையும் வைத்திருப்பது சிறப்பு.

    கோபி சந்தர் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. லோகநாதனின் ஒளிப்பதிவு படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல உதவியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘முருகவேல்’ வெற்றி வேல்.
    காளிதாஸ்-அஷ்னா சவேரி நடிப்பில் அமுதேஸ்வர் இயக்கி வெளிவந்த ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
    காரைக்குடியில் இருக்கும் பிரபுவுக்கு திருமணமாகி முதல் குழந்தை பிறந்தவுடன் மனைவி இறந்து விடுகிறார். கைக்குழந்தையுடன் மலேசியாவிற்கு செல்லும் பிரபு, அங்கு தமிழர்கள் வாழும் பகுதியில் மீன் குழம்பு கடை வைத்து பெரியாளாகிறார்.

    இவருடைய ஒரே மகனான நாயகன் காளிதாஸ் வளர்ந்து பெரியவனாகி கல்லூரியில் படித்து வருகிறார். நாயகி அஷ்னா சவேரியும் அதே கல்லூரியில் படித்து வருகிறார். இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மேலும் காளிதாசுக்கு மற்ற கல்லூரி மாணவர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

    பிரபுவுக்கு தன் மகன் காளிதாஸ் தன்னுடன் சகஜமாகவும் ஒரு நண்பர் போல பழக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், காளிதாசால் பிரவுடன் சகஜமாக பழக முடியவில்லை. இதனால் இருவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனை இருவருக்குள்ளும் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி விடுகிறது.

    பிரபுவின் நண்பரான ஒய்.ஜி.மகேந்திரன் அப்பா, மகனுக்குள் இருக்கும் பிரச்சனையை தீர்க்க நினைத்து பிரபுவையும் காளிதாசையும் வீட்டிற்கு அழைக்கிறார். அங்கு போதகரான கமல், இருவருக்கும் உள்ள பிரச்சனையை கேட்டறிகிறார். இவர்களை பரிகாரம் செய்ய வைத்து உருவம் அப்படியே வைத்துவிட்டு அவர்களுக்குள் இருக்கும் சிந்தனையை மாற்றிவிடுகிறார் கமல்.

    அதாவது பிரபு உடம்பில் காளிதாசின் இளமையான சிந்தனை, எண்ணம், செயல் ஆகியவை இருக்குமாறும் அதேபோல், காளிதாசின் உடம்பில் பிரபுவின் பொறுப்பான சிந்தனை ஆகியவற்றை மாற்றிவிடுகிறார்.

    இதன்பின் பிரபு, காளிதாஸ் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை சுவாரஸ்யமாகவும் காமெடி கலந்தும் சொல்லியிருக்கிறார்கள்.

    படத்திற்கு பெரிய பலம் பிரபு. முதற்பாதியில் மகன் மீது வைத்துள்ள பாசம், பொறுப்பானவராகவும் நடித்திருக்கிறார். பிற்பாதியில் இளைஞன் எண்ணத்துடன் எனர்ஜியாக நடித்திருக்கிறார். இவருடைய இளமையான நடிப்பு மிகவும் ரசிக்க வைத்திருக்கிறது.

    முதற்பாதியில் காளிதாசின் நடிப்பு பரவாயில்லை என்றாலும், பிற்பாதியில் அதற்கு எதிர்மறையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஆஷ்னா சவேரி படம் முழுக்க வருகிறார். இவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

    மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிந்திருக்கிறார் கமல். வீரமான பெண்ணாக நடித்திருக்கும் பூஜா குமார் நடிப்பு மிகவும் சிறப்பு. எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி ஆகியோர் அவர்களுக்கே உரிய அனுபவ நடிப்பால் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

    வித்தியாசமான கதையை தேர்வு செய்து படம் இயக்கியிருக்கிறார் இயக்குனர் அமுதேஸ்வர். முதற்பாதியை விட பிற்பாதியில் அதிகம் ரசிக்கும் படி இயக்கியிருக்கிறார். சிறப்பான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடம் அழகாக வேலை வாங்கியிருக்கிறார்.

    இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். லஷ்மனின் ஒளிப்பதிவில் மலேசியாவை அழகாக படம் பிடித்து காண்பித்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ சுவைக்கலாம்.
    சிம்பு-மஞ்சிமா மோகன் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வெளிவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்..
    சிம்பு படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். இவருடைய தங்கையின் தோழி நாயகி மஞ்சிமா மோகன். விஸ்காம் படித்துவரும் மஞ்சிமா மோகன் புராஜெக்ட் விஷயமாக சிம்புவின் வீட்டில் தங்கக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது வீட்டுக்கு வரும் மஞ்சிமா மோகனை பார்த்தவுடனே அவள் மீது காதல்வயப்பட்டு விடுகிறார் சிம்பு.

    மஞ்சிமாவுடன் நெருங்கி பழகி நட்பாகிறார். அப்போது, சிம்பு ஏன் வேலைக்கு போகவில்லை என்று மஞ்சிமா கேட்கிறார். அதற்கு சிம்பு, பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டும் என்ற தன்னுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறிய பிறகுதான் வேலைக்கு செல்லப்போவதாக கூறுகிறார்.

    அதன்பிறகு, மஞ்சிமா மோகனும் தனது சொந்த ஊரான மகாராஷ்டிராவுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மஞ்சிமாவுக்கும் சிம்புவைப் போன்றே நீண்ட தூரம் பைக்கில் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தும், இதுவரை பைக்கில் பயணித்ததே கிடையாது என்பதால் சிம்புவையும் கூட அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறார்.

    அதன்படி, இருவரும் சேர்ந்து பைக்கில் மகாராஷ்டிரா நோக்கி பயணமாகிறார்கள். மகாராஷ்டிரா நெருங்கும் சமயத்தில் எதிர்பாராத விதமாக இவர்களது பைக் விபத்துக்குள்ளாகிறது. அடிபட்டு கிடக்கும் சமயத்தில் தான் இறந்துவிடுவோமோ என்ற பயத்துல சிம்பு தன்னோட காதலை மஞ்சிமாவிடம் சொல்கிறார்.

    அதன்பிறகு, சிம்பு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். கண்விழித்து பார்க்கும்போது மஞ்சிமா மோகனை காணவில்லை. அப்போது அவருக்கு ஒரு போன் வருகிறது. அப்போதுதான் சிம்புவுக்கு மஞ்சிமா மோகன் அங்கிருந்து சென்றதற்கான காரணமும் அவளுக்கு ஏற்பட்டிருக்கிற பிரச்சினை குறித்து தெரிய வருகிறது.

    அதன்பிறகு சிம்பு, மஞ்சிமா மோகனை தேடிக் கண்டுபிடித்து அவளது பிரச்சினைக்கு தீர்வு கண்டாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

    ஒரு சாதாரணமான இளைஞனின் வாழ்க்கையில் வன்முறை நுழையும்போது, அந்த வன்முறை அவனது வாழ்க்கையை எப்படி திருப்பிப் போடுகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன். படத்திற்கு மிகப்பெரிய பலமே சிம்புதான். அவர் பேசும் வசனங்கள் ஆகட்டும், முகத்தில் கொடுக்கிற சின்ன சின்ன முகபாவனைகளாகட்டும் எல்லாமே ரொம்பவும் அழகாக இருக்கிறது. இந்த கதையில் சிம்புவை தவிர வேறு யாரையும் வைத்துப் பார்க்கமுடியவில்லை. அந்தளவுக்கு கதைக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் சிம்பு.

    மஞ்சிமா மோகன் ஆரம்பத்தில் சிம்புவுடன் நெருங்கி பழகும் காட்சிகளிலும், பிற்பாதியில் குடும்ப செண்டிமெண்டில் சிக்கி தவிக்கும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். கவுதம் மேனன் படங்களில் கதாநாயகியை ரொம்பவும் அழகாக காட்டியிருப்பார். அதேபோல், இந்த படத்திலும் மஞ்சிமா மோகனை ரொம்பவும் அழகாகவே காட்டியிருக்கிறார்.

    போலீசாக வரும் பாபா சேகலை பெரிய வில்லனாக பார்க்கமுடியவில்லை. அவருடைய கதாபாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் வலு சேர்த்திருக்கலாம். அதேபோல், டேனியல் பாலாஜியின் கதாபாத்திரத்திற்கு வலுவில்லாதது மிகப்பெரிய ஏமாற்றம். சிம்புவின் நண்பனாக வரும் டான்ஸர் சதீஷ் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

    விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு கவுதம் மேனனுடன் சிம்பு இணைந்து வெளிவந்திருக்கும் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பையெல்லாம் படம் கண்டிப்பாக பூர்த்தி செய்திருக்கிறது எனலாம். படத்தின் முதல் பாதியிலேயே எல்லா பாடல்களும் வந்துவிடுகிறது. அப்போதே பிற்பாதி ஆக்ஷன் காட்சிகள்தான் வரப்போகிறது என்பது தெரிந்துவிடுகிறது. அதேபோல், பிற்பாதி முழுக்க ஆக்சன் காட்சிகளே வருகிறது.

    படத்தின் இறுதிவரை சிம்புவின் பெயரையே சொல்லாமல் சுவாரஸ்யமாக கொண்டு போயிருக்கிறார் இயக்குனர். இறுதியில், அந்த பெயரை சொல்லும்போது தியேட்டரே கைதட்டலில் அலறுவது சிறப்பு. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பிற்பாதி திருப்தியைக் கொடுக்கவில்லை என்பதுதான் பெரிய ஏமாற்றமே. அதேபோல், கிளைமாக்ஸ் காட்சி சிம்பு ரசிகர்களை திருப்திபடுத்தும் என்றாலும், சாதாரண மக்களுக்கு ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

    ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் எல்லாம் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ள நிலையில், படத்தில் விஷுவலாக பார்க்கும்போதும் நன்றாக இருக்கிறது. 10 நிமிட இடைவெளிக்கு ஒரு பாடல் வந்தாலும், ரசிக்கும்படியாகவே இருக்கிறது. ‘சோக்காலி’ பாடலை திரையில் பார்ப்பவர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் வைத்திருக்கிறார் இயக்குனர். பெரிதும் எதிர்பார்த்த ‘தள்ளிப்போகாதே’ பாடல் எடுக்கப்பட்ட விதம் மிகவும் அருமை. ரசிகர்களுக்கு இந்த பாடல் முழு திருப்தியை கொடுத்திருக்கிறது எனலாம்.

    டானின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பக்கபலமாக அமைந்திருக்கிறது. பாடல் காட்சிகளில் இல்லாம் இவரது கேமரா பளிச்சிடுகிறது. காட்சிகளையும் ரொம்பவும் கலர்புல்லாக காட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ அச்சமில்லை.
    சந்தோஷ், ஆஷ்லீலா, பவானி ரெட்டி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள ‘இனி அவனே’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
    நாயகன் சந்தோஸும் ஆஷ்லீலாவும் காதலர்கள். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பவே ஓடிப்போய் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். அதன்படி, இருவரும் கிளம்பி ஊட்டிக்கு வருகிறார்கள். ஊட்டியில் இவர்களுக்கு பவானி ரெட்டி அடைக்கலம் கொடுக்கிறாள். இவர்களுக்கு திருமணம் செய்துவைக்கவும் முடிவெடுக்கிறாள்.

    பவானி ரெட்டி அந்த ஊரில் மிகப்பெரிய புள்ளியின் தங்கை. ஊட்டியில் தனிமையில் வசித்து வரும் அவளது வீட்டிலேயே காதலர்கள் தங்குகிறார்கள். இவர்களுக்கு திருமணம் செய்துவைக்க ஜாதகம் பார்க்கிறார்கள். ஜாதகத்தில் இப்போதைக்கு திருமணம் செய்ய யோகம் இல்லை என்றும் ஒரு வாரம் கழித்து திருமணம் செய்துவைக்கும்படியும் ஜோசியர் சொல்லவே, திருமணம் தள்ளிப் போகிறது.

    இந்நிலையில், நாயகன் பவானி ரெட்டியிடம் விளையாட்டாக சிரித்து பேசுகிறான். அவளது அழகையும் வர்ணிக்கிறான். ஒருகட்டத்தில், பவானி ரெட்டிக்கு சந்தோஸ் மீது காதல் பிறக்கிறது. அவனை எப்படியாவது அடைய துடிக்கிறாள். அதற்காக சந்தோஸ் - ஆஷ்லீலாவின் காதலை பிரிக்க நினைக்கிறாள்.

    இறுதியில், அவர்களின் காதலை பிரித்து பவானி ரெட்டி நாயகனை கரம் பிடித்தாளா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

    நாயகன் சந்தோஸ் ஏற்கெனவே பரிச்சயமான முகம்தான். நிராயுதம் படத்தின் ஹீரோவாக நடித்த இவர், இப்படத்தில் கொஞ்சம் சிறப்பாக நடித்திருக்கிறார். சிறு சிறு சேட்டைகள் செய்வது, பவானி ரெட்டியிடம் சில்மிஷம் செய்வது என ரசிக்க வைக்கிறார். பாடல் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    ஆஷ்லீலா கதாநாயகனுடன் ஒட்டிக் கொண்டே வருகிறார். இவரது கதாபாத்திரத்திற்கு பெரிய வலு இல்லாவிட்டாலும் தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை அளவாக வெளிப்படுத்தியிருக்கிறார். பவானி ரெட்டிக்கு இப்படத்தில் வலுவான கதாபாத்திரம். ஆரம்பத்தில் நல்லவராகவும் பின்னர் வில்லியாகவும் இவரது கதாபாத்திரத்தின் பளு அறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

    படத்தில் திருநங்கையாக நடித்திருப்பவரும் தனது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். மற்றபடி, படத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியான கதாபாத்திரங்கள் எதுவும் இல்லை. பெற்றோரை விட்டு ஊரைவிட்டு ஓடிச் செல்லும் காதலர்கள் படும் அவஸ்தைகளை இந்த படத்தில் வேறு கோணத்தில் சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் சம்பத்ராஜ். கதைப்படி படம் நன்றாக இருந்தாலும், திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லாதது படத்தை ரசிக்க விடாமல் செய்கிறது. மேலும், திருநங்கைகளை மரியாதைப்படுத்தும் வகையில் இப்படத்தில் சில காட்சிகளை வைத்திருப்பது சிறப்பு.  

    சூர்யாவின் இசையில் பாடல்கள் ரசிக்கும்விதமாக இருக்கின்றன. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சேகரின் ஒளிப்பதிவில் ஊட்டியை அழகாக காண்பித்திருக்கிறார். பெரும்பாலான காட்சிகள் வீட்டிற்குள்ளேயே நகர்வதால் இவரது கேமராவுக்கு வாய்ப்பு குறைவாக இருப்பதாக தெரிகிறது.

    மொத்ததில் ‘இனி அவனே’ காதல் போட்டி.
    The Taking of Tiger Mountain என்ற ஆங்கில படம் ‘புலி மலை வேட்டை’ என்ற பெயரில் தமிழில் வெளிவந்திருக்கிறது. இப்படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்....
    ஜப்பானுக்கும் சீனாவுக்கும் 1946-ல் நடைபெற்ற போருக்கு பிறகு சீனாவில் உள்நாட்டு போர் ஆரம்பமானது. இந்த உள்நாட்டு போரில் ஆக் என்பவன் ஒரு குழுவுக்கு தலைமை தாங்கி புலி மலையில் வசித்து வருகிறான். அவர்களை எதிர்த்து போராடும் குழுவை தலைவன் என்பவன் வழிநடத்துகிறான்.

    போரில் ஜப்பான் விட்டுச் சென்ற அதிநவீன ஆயுதங்கள் எல்லாம் ஆக் குழுவின் வசம் இருக்கிறது. அதை வைத்து பொதுமக்களிடம் கொள்ளையடிப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறான் ஆக். அவர்களின் ஆயுத பலத்தை எதிர்த்து போராடி வருகிறான் தலைவன்.

    இவர்கள் இருவரால் நாட்டில் பெரிய கலவரம் ஏற்பட்டு வருவதை உணர்ந்த அரசாங்கம், பி.எல்.ஏ. என்ற அமைப்பை உருவாக்கி அதற்கு தலைவராக நாயகன் கன்யூ காங்கை நியமிக்கிறது. இவன் தலைமையில் 30 பேர் கொண்ட ஒரு குழு, புலி மலையை நோக்கி பயணமாகிறது. அதேநேரத்தில் பி.எல்.ஏ.வுக்கு உறுதுணையாக அரசாங்கம் நர்ஸ் ஒருவரையும், படை வீரன் ஒருவரையும் அனுப்பி வைக்கிறது. அவர்கள் எதிரிக்கூட்டத்துக்குள் சென்று உளவாளி போல் செயல்பட்டு பி.எல்.ஏ.வுக்கு தகவல் கொடுப்பதில் வல்லவர்கள்.

    இறுதியில், பி.எல்.ஏ.வுக்கு இவர்களின் செயல்பாடு எந்தளவுக்கு உதவியது. புலிமலையை பி.எல்.ஏ. அமைப்பு கைப்பற்றியதா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

    படத்தின் கதை முழுக்க 1950-களில் நடப்பதுபோல் படமாக்கியிருக்கிறார்கள். அந்தக்காலத்தில் பயன்படுத்தும் துப்பாக்கி, ஆயுதங்கள், உடைகள் என தேடிக் கண்டுபிடித்து இந்த படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். பனி மலையில் புலியிடம் இருந்து தப்பிக்கும் காட்சிகள் எல்லாம் புல்லரிக்க வைக்கின்றது.

    அதேபோல், படத்தில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கும் காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் கதை நகர்வது கொஞ்சம் மெதுவாக இருந்தாலும், பிறகு வேகம் எடுக்கிறது. படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

    வித்தியாசமான தலைமுடி, வித்தியாசமான உடைகள் என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் இயக்குனர் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார். பின்னணி இசை படத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்திருக்கிறது. பழைய காலத்தில் நடப்பதுபோன்ற கதையம்சத்தில் இருந்தாலும், ஆக்ஷன் காட்சிகளால் படம் வெகுவாக கவர்கிறது.

    மொத்தத்தில் ‘புலிமலை வேட்டை’ வேகம்.
    மா.கா.பா.ஆனந்த் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கடலை’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
    விவசாயம்தான் உயிர் என வாழ்ந்துவரும் பொன்வண்ணன், தனது மகன் மா.கா.பா.ஆனந்தையும் தன்னைப்போலவே விவசாயத்தில் ஈடுபடுத்துவதற்காக அவரை விவசாய கல்லூரியில் சேர்க்கிறார். ஆனால், இதில் விருப்பம் இல்லாத மா.கா.பா.ஆனந்த் படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றுகிறார்.

    விவாசயத்தில் ஈடுபடச் சொல்லும் தனது அப்பாவிடம், ஒண்ணே கால் வருடத்தில் தொழில் செய்து பெரிய தொழிலதிபராக ஆவதாகவும் கூறுகிறார். இதற்கிடையில், விவசாய கல்லூரியில் இருந்து புராஜெக்ட் செய்வதற்காக பொன்வண்ணன் வசம் வருகிறார்கள். அதில் ஒருவர்தான் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.

    அவரைப் பார்த்ததும் மா.கா.பா.ஆனந்துக்குள் காதல் பிறக்க, நண்பர்களுடன் சுற்றிக்கொண்டே ஐஸ்வர்யாவையும் காதலித்து வருகிறார். இந்நிலையில், ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஜான் விஜய் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க நினைக்க, அதை பொன்வண்ணன் தடுக்க நினைக்கிறார்.

    ஆனால், மா.கா.பா.ஆனந்தை தனது கைக்குள் வளைத்துப் போட்டுக் கொண்டு, பொன்வண்ணனுக்கு எதிராக காய் நகர்த்துகிறார் ஜான் விஜய். இதில் யார் வெற்றி பெற்றார்? என்பதே மீதிக்கதை.

    மா.கா.பா.ஆனந்த் பொறுப்பற்ற இளைஞன், அப்பாவுடன் மோதல், ஐஸ்வர்யாவுடன் காதல், யோகி பாபுவுடன் காமெடி என படம் முழுக்க ஜாலியாக வலம் வந்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். முந்தைய படங்களைவிட இந்த படத்தில் அவருடைய நடிப்பு கொஞ்சம் மெருகேறியிருக்கிறது.

    ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்த படத்தில் நடிப்பதற்கு சரியாக வாய்ப்பு வழங்கவில்லை. அவருடைய கதாபாத்திரம் வெறுமனே வந்து செல்வது பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. காமெடியன் யோகி பாபு படத்தின் இன்னொரு ஹீரோ என்று சொல்லுமளவுக்கு படம் முழுக்க வந்து ரகளை செய்திருக்கிறார். இவர் ஒவ்வொருத்தரையும் கலாய்க்கும் காட்சிகள் எல்லாம் வயிற்றை புண்ணாக்குகின்றன.

    பொன்வண்ணன் பொறுப்பான அப்பாவாக தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து மனதில் இடம்பிடிக்கிறார். ஜான் விஜய் வழக்கம்போல் தனது பாணியிலேயே வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.

    ஒரு பொழுதுபோக்கு படமாக மட்டுமில்லாமல் விவசாயிகளின் முக்கிய பிரச்சினையை படமாக கொடுத்ததற்கு இயக்குனர் சகாய சுரேஷுக்கு பெரிய கைதட்டல் கொடுக்கலாம். படத்தில் பேசப்படும் பிரச்சினைகள் அனைத்தும் நியாயம் என்றே சொல்ல வைக்கிறது. ஆனால், அதைத் தாண்டி அனைவரும் ரசிக்கும்படியான சுவாரஸ்யம் இருக்கிறதா என்றால், அதில்தான் கவனம் செலுத்தாமல் கொஞ்சம் சறுக்கியிருக்கிறார் இயக்குனர். விவசாயத்தின் மேன்மையை பற்றி எத்தனையோ படங்களில் சொல்லியிருப்பதால், சற்று வித்தியாசமாக கதைக்களத்தை அமைத்திருந்தால் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கும்.

    சாமின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ராகவின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கவரும் வகையில் இருக்கின்றன.

    மொத்தத்தில் ‘கடலை’ ருசி குறைவு.
    நதியா, இனியா நடிப்பில் ஆண்களே இல்லாமல் உருவாகியுள்ள படம் ‘திரைக்கு வராத கதை’. இப்படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்...
    கோவையில் கல்லூரியில் படிக்கும் இனியா தனது தோழிகளுடன் சேர்ந்து குறும்படம் ஒன்றை எடுக்கிறார். இது கல்லூரி பேராசிரியருக்கு பிடிக்காததால், யாருமே யோசிக்காத வகையில் ஒரு கதையை தயார் செய்துவருமாறு கூறுகிறார். இதனால், வேறு ஒரு கதையை யோசிக்கும் இனியா, அதை படமாக்குவதற்காக தோழிகளுடன் மலைப் பங்களாவுக்கு பயணமாகிறார்.

    இவர்கள் செல்லும் வழியில் மற்றொரு நாயகியான ஈடனுடைய கார் பழுதாகி நிற்கிறது. முன்பின் அறியாத அவளுக்கு உதவி செய்வதாக கூறி அவளையும் தங்களது காரில் ஏற்றிக் கொண்டு மலைப் பங்களாவுக்கு செல்கிறார்கள். அங்கு தனது தோழிகளை வைத்து குறும்படத்தை படம்பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இனியாவின் தோழி ஒருத்திக்கு அடிபட்டு விடுகிறது. இதனால், அவளுக்கு பதிலாக ஈடனை நடிக்குமாறு இனியா அழைக்கிறார்.

    முதலில் மறுக்கும் ஈடன் பின்னர் நடித்து கொடுத்து விட்டு அந்த பங்களாவை விட்டு செல்கிறார். இந்நிலையில், இனியாவின் தோழிக்கு ஈடன் இறந்துவிட்டதாக பேப்பர் செய்தி ஒன்று கிடைக்கிறது. இதனை பார்த்து இனியாவும் அவளது தோழிகளும் அதிர்ச்சியடைகிறார்கள். பின்னர், அவர்கள் எடுத்த குறும்படத்தின் வீடியோ பார்க்கிறார்கள். அதில், மற்றவர்களின் உருவம் எல்லாம் தெரிய, ஈடனின் உருவம் மட்டும் அதில் தெரியவில்லை.

    இதையடுத்து, இனியாவின் நடவடிக்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகிறது. அவளுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைக்கும் அவளது தோழிகள் டாக்டரிடம் அழைத்துச் செல்கிறார்கள். டாக்டர் இனியாவுக்கு ஒன்றும் இல்லை என்று கூற மேலும் அவர்கள் குழப்பம் அடைகிறார்கள். தங்கள் குழப்பத்தை தீர்த்துக் கொள்ள போலீஸ் அதிகாரியான நதியாவிடம் சென்று நடந்தவற்றையெல்லாம் கூறுகிறார்கள்.

    இறுதியில் ஈடன் உண்மையிலேயே இறந்துவிட்டாரா? இனியாவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு என்ன காரணம்? இறந்ததாக கூறப்படும் ஈடன் இவர்கள் கண்ணுக்கு மட்டும் தெரிந்ததற்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நதியாவின் நடிப்பு அபாரம். இன்னும் அதே இளமையோடு நடித்திருப்பது ரசிக்க வைத்திருக்கிறது. மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார்.

    இனியாவின் நடிப்பு இப்படத்தில் பேசும்படியாக அமைந்துள்ளது. துறுதுறுவென இருக்கும் பெண்ணாகவும், ஈடனின் ஆவி உள்ளே புகுந்த பின்பு வித்தியாசமான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ஈடன், ஆர்த்தி மற்றும் தோழிகளாக வருபவர்கள் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

    இப்படத்தில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள். ஒரு ஆண்கூட படத்தில் பார்க்க முடியவில்லை. பெண்களை மட்டுமே வைத்து படம் இயக்கிய இயக்குனர் துளசிதாஸுக்கு பெரிய பாராட்டுக்கள். பல இடங்களில் பெண்களிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். ஒரு சில இடங்களில் லாஜிக் இல்லாமல் காட்சிகள் நகர்வது படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. படத்தில் இடம்பெறும் காமெடி காட்சிகளும் ரசிக்கும்படியாக இல்லை. இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான காட்சிகள் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    ஸ்ரீகுமார் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். அரோல் கரோலியின் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. சஞ்சிவ் சங்கரின் ஒளிப்பதிவை ஓரளவு ரசிக்க முடிகிறது.

    மொத்தத்தில் ‘திரைக்கு வராத கதை’ சுவாரஸ்யம் குறைவு
    கார்த்தி நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் ‘காஷ்மோரா’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
    கார்த்தி தனது தந்தை விவேக் மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து பேய் ஓட்டி பிழைப்பை நடத்தி வருகிறார். ஆனால், உண்மையில் இவர் பேய் ஓட்டுபவர் கிடையாது. தனது குடும்பத்தில் உள்ளவர்களை வைத்து செட்டப்புகள் செய்து போலியாக இந்த வேலைகளை செய்து வருகிறார். மக்களும் இவருடைய சித்து விளையாட்டை உண்மையென்று நம்புகிறார்கள்.

    இந்நிலையில், டிவி நிகழ்ச்சி மூலமாக கார்த்தியின் புகழ் மேலும் பரவுகிறது. பின்னர் எம்.எல்.ஏ. சரத் லோகித்சவாவின் வீட்டுக்கு பேய் ஓட்ட செல்லும் கார்த்தி, அங்கு செய்யும் சித்து விளையாட்டுகள் அவருக்கு சாதகமாக அமைய, லோகித்சவாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாகிறார் கார்த்தி.

    மறுநாளே, லோகித்சவாவின் வீட்டுக்கு வருமான வரித்துறையின் சோதனை நடத்தவர, தன்னிடம் இருக்கிற கருப்பு பணத்தையெல்லாம் கார்த்தியின் வீட்டில் கொண்டு வைக்க தனது ஆட்களுக்கு கட்டளையிடுகிறார். அந்த சமயம் கார்த்தி, ஆந்திராவில் ஒரு பங்களாவுக்குள் இருக்கும் பேயை ஓட்ட செல்கிறார்.

    அங்கு இருக்கும் உண்மையான பேய் அந்த பங்களாவை விட்டு இவரை வெளியே செல்லவிடாமல் தடுக்கிறது. அதேநேரத்தில், கார்த்தி போலி சாமியார் என்பதையறியும் எம்.எல்.ஏ., லோகித்சவா தனது ஆட்களை அனுப்பி, அவரையும், தன்னுடைய பணத்தையும் திருப்பி எடுத்துவர கட்டளையிடுகிறார். ஆனால், கார்த்தியின் வீட்டுக்கு செல்லும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

    இந்நிலையில், கார்த்தி ஆந்திராவில் இருப்பதை அறியும் எம்.எல்.ஏ.வின் ஆட்கள் அங்கு பயணமாகிறார்கள். அதேநேரத்தில், கார்த்தி மாட்டிக்கொண்ட பங்களாவுக்குள் விவேக் மற்றும் அவரது குடும்பமும் வந்து மாட்டிக் கொள்கிறது. கார்த்தியை பங்களாவுக்குள் வைத்திருக்கும் அந்த பேய் யார்? அவரை எதற்காக அங்கிருந்து செல்லவிடாமல் தடுக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கார்த்தி இப்படத்தில் இரண்டுவிதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காஷ்மோரா கதாபாத்திரத்தில் ரொம்பவும் அழகாக இருக்கிறார். விவேக்குடன் இணைந்து இவர் செய்யும் கலாட்டாக்கள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. முதல் பாதியை இவரது கதாபாத்திரம் மிகவும் கலகலப்பாக கொண்டு சென்றிருக்கிறது.

    பெரிதும் எதிர்பார்த்த ராஜுநாயக் கதாபாத்திரம் நமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது. பெண்கள் மீது மோகம் கொள்ளும் படைத்தளபதியாக வரும் ராஜு நாயக் கதாபாத்திரத்தில் கார்த்திக் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் கார்த்திக் செய்யும் ஆக்சன் எல்லாம் ரசிக்க வைக்கிறது. இதற்காக கார்த்தி கடுமையாக உழைத்திருப்பது நன்றாகவே தெரிகிறது. அவருடைய கடின உழைப்புக்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது.

    ரத்னமகாதேவியாக வரும் நயன்தாரா ராணியாகவே படத்தில் வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.  நடை, உடை, கத்தி வீசும் தோரணை என அனைத்திலும் அசர வைக்கிறார். இந்த படத்தில் கார்த்திக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு விவேக்கின் காமெடியை ரசிக்க முடிகிறது. இவர் பேசும் கவுண்டர் டயலாக் எல்லாம் தியேட்டரில் சிரிப்பலையை வரவழைத்திருககிறது. ஸ்ரீதிவ்யா அழகாக இருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் மனதில் எளிதில் பதிந்துவிடுகிறார். எம்.எல்.ஏ.வாக வரும் சரத் லோகித்சவா, சாமியாராக வரும் மது சூதனன் ராவ் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    ‘ரௌத்திரம்’ ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என படத்திற்கு படம் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து இயக்கி வரும் கோகுல், மீண்டும் ஒரு வித்தியாசமான கதையை கொடுத்திருக்கிறார். சரித்திர பின்னணியில் வரும் காட்சிகள் நம்பக்கூடியதாக இல்லாவிட்டாலும், அவற்றை காட்சிப்படுத்திய விதம் அருமை. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

    அதேபோல், மிகவும் எதிர்பார்த்த ராஜுநாயக் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். முதல்பாதி காமெடியாக செல்கிறது. பிற்பாதியில், ஆக்ஷன், போர் காட்சிகள் என பிரம்மாண்டப்படுத்தியிருக்கிறார். படத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகளும் கைகொடுத்திருக்கின்றன.

    சந்தோஷ் நாராயணன் இசையில் ‘தமிழ் திக்கு திக்கு சார்’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது. ‘ஓயா ஓயா’ பாடல் அழகான மெலோடி. பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு காட்சிகள் ஒவ்வொன்றையும் தெளிவாக படமாக்கியிருக்கிறது. சண்டைக்காட்சிகளில் இவருடைய ஒளிப்பதிவு பிரம்மாண்டம் கூட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘காஷ்மோரா’ வித்தைக்காரன்.
    தனுஷ் இரட்டை வேடங்களில் முதன்முதலாக நடித்திருக்கும் ‘கொடி’ படம் தீபாவளி விருந்தாக வெளிவந்திருக்கிறது. படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்..
    காது கேட்காத, வாய் பேசமுடியாத கருணாஸுக்கு அரசியலில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற ஆசை. ஆனால், அவருடைய ஊனத்தால் அவரால் அரசியலில் சாதிக்க முடியவில்லை. தன்னால் முடியாததை தனது மகனை வைத்து சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் கருணாஸுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. அதில் ஒரு குழந்தையை அரசியலில் களமிறக்க திட்டமிடுகிறார்.

    எஸ்.ஏ.சந்திரசேகரின் கட்சியில் இருக்கும் கருணாஸ், ஒருமுறை விஷவாயு தொழிற்சாலையை மூடுவதற்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் தீக்குளித்து இறந்து போகிறார். சிறிய வயதிலிருந்தே அப்பாவுடன் கட்சி அலுவலகத்துக்கு சென்றுவரும் மூத்த மகன் தனுஷ் பெரியவனான பிறகு தனது அப்பாவின் ஆசைக்காக கருணாஸ் இருந்த கட்சியிலேயே சேருகிறார். இளைய தனுஷ் கல்லூரி பேராசிரியராக ஆகிறார்.

    இளம் வயதிலிருந்தே எதிர்கட்சியில் இருக்கும் திரிஷா மீது அரசியல்வாதி தனுஷுக்கு காதல். எதிரெதிர் கட்சிகளாக இருந்தாலும், இவர்கள் இரண்டு பேரும் காதலர்களாக வலம் வருகிறார்கள். அதேவேளையில், கல்லூரி பேராசிரியரான மற்றொரு தனுஷ், லெக்கான் கோழி முட்டையை டீத்தூளில் நனைத்து நாட்டுக் கோழி முட்டை என்று விற்று வரும் அனுபமா பரமேஸ்வனை காதலிக்கிறார்.

    அவள் ஏன்? அப்படி ஏமாற்றி விற்கிறார் என்று தனுஷ் கேட்கையில், தனது ஏரியாவில் இருக்கும் விஷவாயு தொழிற்சாலையை மூடுவதற்காக நிறைய பணம் தேவைப்படுவதால் அதற்காகத்தான் இந்த மாதிரியான ஏமாற்று வேலையை செய்து வருவதாக அனுபமா கூறுகிறார். இதைக் கேட்கும் தனுஷ், தனது அண்ணான அரசியல்வாதி தனுஷிடம் இதைப்பற்றி சொல்கிறார்.

    அந்த தொழிற்சாலையை மூடுவதற்காகத்தானே எனது அப்பா உயிரை விட்டார். அப்படியிருக்கையில் அந்த தொழிற்சாலையில் இருந்து எப்படி விஷவாயு வெளியே வருகிறது என்பது குறித்து கட்சி தலைமையிடம் சென்று நியாயம் கேட்கிறார் அரசியல்வாதி தனுஷ். ஆனால், கட்சி தலைமையோ, பல கோடிகளை லஞ்சமாக வாங்கிக் கொண்டு அந்த தொழிற்சாலையில் உள்ள விஷவாயுக்களை அப்புறப்படுத்தாமல் விட்டதற்கு உடந்தையாக இருப்பது தனுஷுக்கு தெரிய வருகிறது.

    இடைத் தேர்தல் நெருங்கி வருவதால் இந்த பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று தனுஷை எஸ்.ஏ.சந்திரசேகர் சமாதானப்படுத்துகிறார். வருகிற தேர்தலில் தனுஷுக்கு பதவி கொடுப்பதாகவும், அந்த பதவியை வைத்து அந்த தொழிற்சாலையில் உள்ள விஷவாயுக்களை அப்புறப்படுத்துமாறும் கூறுகிறார்.

    ஆனால், அதுவரை பொறுத்துக்கொள்ள முடியாத தனுஷ் இந்த விஷயத்தை எதிர்க்கட்சியை சேர்ந்த தனது காதலி திரிஷாவிடம் சென்று கூறி மனவேதனைப்படுகிறார். ஆனால், அரசியல் வேறு, காதல் வேறு என்று இருக்கும் திரிஷாவோ இந்த விஷயத்தை பொது மேடையில் போட்டு உடைக்கிறார். இதனால் கட்சி தலைமைக்கு தனுஷ் மீது கோபம் ஏற்படுகிறது.

    இந்நிலையில், இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயர்களை கட்சி தலைமை அறிவிக்கிறது. அப்போது தனுஷின் பெயரும் அந்த வேட்பாளர் பட்டியலில் இடம்பெறுகிறது. அவர் எதிர்க்கட்சியில் இருக்கும் தனது காதலி திரிஷாவை எதிர்த்து போட்டியிடுகிறார். அதேநேரத்தில், பேராசிரியர் தனுஷை கொலை செய்வதற்கு ரவுடி கும்பல் ஒன்று கிளம்புகிறது.

    இறுதியில், கோபம் கொண்ட கட்சி தலைமை தனுஷுக்கு போட்டியிட வாய்ப்பு அளித்ததன் காரணம் என்ன? தனது காதலியை எதிர்த்து தனுஷ் வென்று விஷவாயு தொழிற்சாலையை அப்புறப்படுத்தினாரா? தம்பியை கொலைசெய்ய கிளம்பும் கொலை கும்பலை ஏவிவிட்டது யார்? தனது தம்பியை அரசியல்வாதி தனுஷ் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

    தனுஷ் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரத்திங்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வெவ்வேறு விதமான நடிப்பையும், தனது உடல்மொழியையும் மாற்றி நடித்திருக்கிறார். அரசியல்வாதி கெட்டப்பில் ரொம்பவும் ‘மாஸாக’ தெரிகிறார். அப்பாவியான கெட்டப்பில் தனக்கே உரிய சாந்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன், ரொமான்ஸ் என இரண்டிலும் அவரது தனித்தன்மை இந்த படத்திலும் பளிச்சிடுகிறது.

    அரசியல்வாதி தனுஷின் காதலியாக வரும் திரிஷாவுக்கு இப்படத்தில் பலமான கதாபாத்திரம். மேடைப் பேச்சாளராக தனது நடிப்பை ரொம்பவும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். அரசியலில் பெரிய இடத்துக்கு வரவேண்டுமானால் எதை வேண்டுமானாலும் செய்ய துணியும் துணிச்சலான பாத்திரத்தை அலட்டாமல் செய்து பளிச்சிடுகிறார்.

    படத்தில் பேசவைக்கக்கூடிய மற்றொரு கதாபாத்திரம் எஸ்.ஏ.சந்திரசேகர்தான். ஒரு அரசியல்வாதிக்கே உரிய மிடுக்கு இவரிடம் அதிகமாகவே தோன்றுகிறது. அதேநேரத்தில், ரொம்பவும் அலட்டிக் கொள்ளாமல் மிகவும் மென்மையான அரசியல்வாதியாக மனதில் அழகாக பதிந்திருக்கிறார். மற்றொரு நாயகியான அனுபமா பரமேஸ்வரன் பார்க்க அழகாவும், நடிப்பில் மென்மையும் கலந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

    தனுஷின் அப்பாவாக வரும் கருணாஸ் ஆரம்பத்தில் ஒருசில காட்சிகளே வந்தாலும், காது கேட்காத, வாய் பேசமுடியாத கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இவருடைய மனைவியாக வரும் சரண்யா பொன்வண்ணன் வழக்கம்போல தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்களை எடுத்த துரை.செந்தில்குமார் தனது முந்தைய படங்களைவிட முற்றிலும் மாறுபட்ட ஒரு படத்தை எடுத்திருக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்விலேயே முதல் வெற்றியடைந்துவிட்டார். மற்றபடி, அவர்களை நன்றாக வேலைவாங்கி இந்த படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார்.

    அரசியல் பற்றிய கதை என்றாலும், பிரச்சினைக்குள் ஆழமாக செல்லமால் தன்னுடைய எல்லை எதுவரை? என்பதை புரிந்துகொண்டு அதை நேர்த்தியாக செய்திருக்கிறார். திரைக்கதை விறுவிறுப்பாக செல்வது ரசிகர்களை இருக்கையை விட்டு எழுந்திருக்க விடாமல் செய்கிறது. மேலும், வசனங்களும் படத்திற்கு பக்கதுணையாக நிற்கிறது.

    வெங்கடேஷின் ஒளிப்பதிவு படத்தை சுவாரஸ்யமாக கொண்டுசெல்ல உதவியிருக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்திற்கு பலமாக இருக்கிறது. ‘ஏய் சுழலி’ பாடல் கேட்பதற்கு மட்டுமில்லாமல் காட்சியப்படுத்திய விதமும் நன்றாக இருக்கிறது. பின்னணி இசையிலும் வழக்கம்போல மிரட்டியிருக்கிறார்.

    மொத்தத்தில் ‘கொடி’ வெற்றிக்கொடி.
    ராகுல், சாய் என புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘நீ என்பது’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்..
    நாயகன் ராகுல் ஒரு லாரி டிரைவர். இவருடைய லாரியின் கிளீனராக வேலை செய்பவர் பிளாக் பாண்டி. ஒருநாள் இவர் லாரியில் செல்லும் இவர் கண்முன் ஒரு பாலம் இடிந்து விழுகிறது. அப்போது, அந்த பாலத்தில் பயணம் செய்த பஸ் பாலத்தோடு சேர்ந்து கீழே விழுகிறது. அதில் பயணித்த அனைவரையும் நாயகன் காப்பாற்றுகிறார்.

    இதன்பிறகு, பாலம் புதிதாக கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அதுவரையில், மாற்று வழிப்பாதையாக நாயகி வைத்திருக்கும் கடை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்படுகிறது. அப்போது நாயகி சாய், பைக்கை ஓட்டத்தெரியாமல் நாயகனுடைய லாரியில் வந்து இடிக்கிறாள். ஆரம்பமே இவர்களது சந்திப்பு மோதலில் ஆரம்பிக்க, அதுவே சில நாட்களில் காதலாக மாறுகிறது.

    இதேவேளையில், நாயகியின் முறைமாமன் அதே ஊரில் மிகப்பெரிய ரவுடியாக வலம் வருகிறார். அவருக்கும் நாயகிக்கும் திருமணம் செய்துவைக்க ஏற்கெனவே முடிவு செய்து வைத்திருக்கிறார்கள். இருப்பினும் நாயகனும், நாயகியும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார்கள்.

    ஒருகட்டத்தில் இவர்களது காதல் முறைமாமனுக்கு தெரியவர, நாயகியை கண்டிக்கிறான். ஒருகட்டத்தில் நாயகனும், நாயகியும் நெருக்கமாகிறார்கள். இதில் நாயகி கர்ப்பமாகிறார்கள். இந்த விஷயம் நாயகியின் பெற்றோருக்கும் தெரிய வருகிறது. இறுதியில், நாயகனும், நாயகியும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

    நாயகன் ராகுல் லாரி டிரைவர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவர் செய்யும் ரொமான்ஸ் காட்சிகளெல்லாம் ரசிக்க முடியவில்லை. படம் முழுக்க ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தி வெறுப்பை வரவழைத்திருக்கிறார்.

    நாயகி சாய் ஆரம்பத்தில் நடிப்பதற்கு ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார். இருப்பினும், செல்லச்செல்ல இவருடைய நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. செண்டிமெண்ட் காட்சிகளில் எல்லாம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாண்டி லிங்கேஸ்வரன் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். அவரது அம்மாவாக நடித்திருப்பவரும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

    மற்றபடி, படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் புதுமுகங்களாக இருப்பதால், அவர்களிடமிருந்து அவ்வளவாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. படத்தின் இயக்குனர் ரஹீம், ஆரம்பத்தில் ஒரு கதையை சொல்லவந்து அதன்பிறகு அந்த கதையோடு ஒட்டாமல் வேறொரு கதைக்கு சென்றுவிட்டார். படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக நகராதது படத்திற்கு பெரிய தொய்வை கொடுத்திருக்கிறது.

    ரவி கே மேனன் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசை படுமோசம். ஷாஜி, உதய் ஆகியோரின் ஒளிப்பதிவில் காட்சிகளை இன்னும் கொஞ்சம் தெளிவாக படமாக்கியிருக்கலாம்.

    மொத்தத்தில் ‘நீ என்பது’ ரசிக்க முடியவில்லை.
    ×