என் மலர்tooltip icon

    தரவரிசை

    பிரஜின், நிஷாந்த், கருணாஸ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.
    நாயகன் பிரஜின் மற்றும் அவரது நண்பர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு, அந்த சந்தோஷத்தில் டாஸ்மாக்கில் சென்று பார்ட்டி கொண்டாடிவிட்டு, வழியில் ஒரு கடையில் சாப்பாட்டை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்புகிறார்கள்.

    இவர்கள் திரும்பிய மறுநிமிடம் இவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த இடத்தில் அரசியல் பிரமுகர் ஒருவரை ஒரு கும்பல் வெட்டி சாய்க்கிறது. சம்பவ இடத்திற்கு வரும் போலீசார், அப்போது அந்த கடைக்கு வந்து சென்றவர்களை பற்றிய விவரங்களை கேட்கிறது. அப்போது நாயகன் மற்றும் அவரது நண்பர்களை பற்றிய தகவலை போலீசாருக்கு கடைக்காரர் கொடுக்கிறார்.

    அதன்பேரில், பிரஜின் மற்றும் அவரது நண்பர்களை சந்தேகத்தின் பெயரில் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்கின்றனர். அப்போது, அங்கு ஏற்கெனவே சந்தேகத்தின் பெயரில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் டான்ஸ் மாஸ்டர் ஜான், நிஷாந்த் ஆகியோருடன் பிரஜின் மற்றும் அவரது நண்பர்கள் நட்புடன் பழகுகிறார்கள்.

    இந்நிலையில், அரசியல் பிரமுகருடன் வெட்டுப்பட்ட மற்றொருவர் ஆஸ்பத்திரியில் வாக்குமூலம் கொடுக்கும்போது, பிரஜின் நண்பர்களில் ஒருவனை சந்தேகமாக அடையாளம் காட்டுகிறார். ஆனால், போலீசார் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில், ஆஸ்பத்திரியில் வெட்டுப்பட்டு கிடந்த அரசியல் பிரமுகர் இறந்துபோக, போலீஸுக்கு உண்மையான குற்றவாளியை பிடிக்க நெருக்கடி வருகிறது.

    இதனால் போலீஸ் வேறு வழியில்லாமல் பிரஜினின் நண்பனையே குற்றவாளியாக காட்ட போலீஸ் முடிவெடுக்கிறது. இதனால், அவனை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு மற்றவர்களை விடுவிக்கின்றனர். இந்நிலையில், போலீஸ் உயரதிகாரியாக வரும் ரிச்சர்ட், பிரஜினின் நண்பன் உண்மையான குற்றாவளி இல்லை என்று அறிந்து, உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முயல்கிறார். மறுமுனையில் தனது நண்பனை மீட்பதற்காக பிரஜினும், நிஷாந்தும் உண்மையான குற்றவாளியை தேடி புறப்படுகிறார்கள்.

    இறுதியில், யார் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்தார்கள்? போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் பிரஜினின் நண்பன் வெளியே வந்தானா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

    பிரஜின் வடசென்னை வாலிபர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நடிப்பிலும் ஓகே சொல்ல வைக்கிறார். அவரது நண்பர்களாக வருபவர்களும் இயல்பாக வந்து நடித்து கொடுத்திருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் ரிச்சர்ட் கம்பீரமும், போலீஸ் அதிகாரிக்குண்டான மிடுக்குடன் சிறப்பாக நடித்திருக்கிறார்.

    மாஸ்டர் ஜான் லுங்கி கட்டிக்கொண்டு வடசென்னை ஏரியா தாதாவாக பளிச்சிடுகிறார். நிஷாந்த் வழக்கம்போல தனது கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். கருணாஸின் கெட்டப் மற்றும் அவரது நடிப்பும் பலே சொல்ல வைக்கிறது.

    ஆக்ஷன், திரில்லர் படமாக இருந்தாலும், காதல், காமெடி என அனைத்தையும் அளவாக சேர்த்துள்ளார் இயக்குனர் மோகன் ஜி. தான் சொல்ல வந்ததை ரொம்பவும் நேர்த்தியாக சொல்லியிருக்கிறார். நாயகியிடம் நாயகன் காதலை சொல்லும் காட்சிகள் புதுமையாக இருக்கிறது.

    இசையமைப்பாளர் ஜுபினின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் கிளைமாக்ஸ் வரை பின்னணி இசையால் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். பாடல்களிலும் தாளம் போட வைக்கிறார். ஒளிப்பதிவாளர் பாரூக் வண்ணாரப் பேட்டையின் மூலை முடுக்குகளையெல்லாம் நன்றாக படமாக்கியிருக்கிறார்.

    மொத்தத்தல் ‘பழைய வண்ணாரப்பேட்டை’ புதுசு.
    ரிஜன் சுரேஷ் - ஆர்ஷிதா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    வடசென்னையில் வாழக்கூடிய நாயகன் ரிஜன் சுரேஷுக்கு எந்த வேலை வெட்டியும் கிடையாது. தனது நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது, ஊர் சுற்றுவது இதுதான் அவருடைய பொழுதுபோக்கே. இவரை மாதிரியே இவருடைய நண்பர்களுடன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஊர் சுற்றி வருகிறார்கள்.

    அதேபோல், நாயகனுக்கு ஒரு குணாதிசயமும் உண்டு. அது என்னவென்றால், எந்த விஷயத்தை செய்யக்கூடாது என்று சொல்கிறோமோ, அந்த விஷயத்தை அவர் செய்ய வேண்டும் என்று நினைப்பவர். இப்படியாக, அவரது வாழ்க்கை சென்று கொண்டிருக்கையில், ஒருநாள் சாலையின் ஓரத்தில் இளநீர் குடித்துக் கொண்டு நிற்கும் இவரை பார்க்கும் நாயகி ஆர்ஷிதா, இவர் இளநீர் குடிக்கும் அழகை பார்த்து சிரித்து விடுகிறாள்.

    அந்த சிரிப்பை பார்க்கும் நாயகனுக்கு அவள் மீது காதல் வருகிறது. அன்றுமுதல் அவளை பின்தொடர்வதையே வேலையாக இருந்து வருகிறார் நாயகன். தன் பின்னாலேயே சுற்றுவதால் நாயகி, பொறுத்துக் கொள்ளமுடியாமல் அவளை பலமுறை எச்சரிக்கிறார். செருப்பை எடுத்துக் காட்டி அவமானப்படுத்துகிறாள். ஆனால், இதையெல்லாம் நாயகன் கண்டுகொள்வதாக இல்லை.

    ஒருபடி மேலே போய் நாயகனின் அப்பாவான பட்டிமன்றம் ராஜாவிடம் போய் புகார் செய்கிறார். அவருடைய பேச்சையும் நாயகன் கேட்பதாக இல்லை. போலீஸ் ஸ்டேஷனில் போய் புகார் கொடுத்தும் நாயகன் எதற்கும் அடங்கிய பாடில்லை. கடைசியில், நாயகனின் டார்ச்சரை தாங்கமுடியாத நாயகி என்ன முடிவெடுத்தாள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படம் முழுக்க வடசென்னையில் நடக்கிறது. வடசென்னையில் வாழக்கூடிய சில இளைஞர்களின் வாழ்க்கையை அப்பட்டமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் நாகராஜன். ஒரு பெண்ணை பிடித்துவிட்டால் எந்த பெண்ணை எப்படியாவது டார்ச்சர் செய்து, அவளை காதலிப்பதற்கு ஒத்துக் கொள்ள வைக்கும் இளைஞனின் அலுச்சாட்டியத்தை இப்படத்தில் காமெடியாக சொல்லியிருக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்வில் முதல் வெற்றி பெற்றுவிட்டார். மேலும், அவர்களை அழகாக வேலை வாங்கியிருப்பதும் நன்றாக தெரிகிறது.

    நாயகன் ரிஜன் சுரேஷ் வடசென்னை இளைஞனுக்குண்டான தோற்றத்துடன் படம் முழுக்க தனது வெகுளித்தனமான நடிப்பால் ரசிக்க வைக்கிறார். சினிமா பைத்தியமான இவர் எந்த இடத்திற்கு சென்றாலும் சினிமா டயலாக்கே பேசுவது ரசிக்க வைக்கிறது. போலீஸ் ஸ்டேஷனிலும் ரஜினி ஸ்டைலில் இன்ஸ்பெக்டரையே எதிர்த்து கேள்வி கேட்பது, இவருடைய டார்ச்சர் தாங்க முடியாத போலீஸ்காரர் அவரை என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்பது என படத்தில் காமெடிக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது.

    வசனங்கள் பேசும் ஸ்டைலிலும் இவர் ரசிக்க வைக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருந்தியிருக்காரா? அல்லது இவரை இயக்குனர் நன்றாக வேலை வாங்கியிருக்கிறாரா? என்பதுபோல் இருக்கிறது. நாயகி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். நாயகனின் டார்ச்சரை தாங்கமுடியாமல் தவிக்கும் காட்சிகளில் எல்லாம் இவரது நடிப்பு ஓகே சொல்ல வைக்கிறது. பட்டிமன்றம் ராஜா வழக்கமான கண்டிப்பான அப்பாவாக வந்து மனதில் பதிகிறார்.

    படத்தில் நாயகனுக்கு நண்பர்களாக வருபவர்களும் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். படம் ஆரம்பத்தில் பார்ப்பவர்களுக்கு ஏதோ புரியாத மாதிரி இருக்கும். ஆனால், நாயகனின் கோமாளித்தனமான கதாபாத்திரத்தை உணர்ந்து இந்த படத்தை பார்த்தால் கண்டிப்பாக அனைவரும் ரசித்து மகிழலாம்.

    ரஜின் மகாதேவ் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக, ‘வியாசர்பாடி அண்ணா கேடி’ பாடல் துள்ளி ஆட்டம் போட வைக்கிறது. ‘என் தேவதையோட’ பாடல் மெலோடியாக வந்து தாலாட்டுகிறது. பின்னணி இசையிலும் ஓகே சொல்ல வைத்திருக்கிறார். கல்யாண் ராமின் ஒளிப்பதிவும் ரசிக்க வைத்துள்ளது. பாடல் காட்சிகளில் இவரது கேமரா பளிச்சிடுகிறது.

    மொத்தத்தில் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ அழகு.

    விஜய் ஆண்டனி - அருந்ததி நாயர் நடிப்பில் பெரிதும் எதிர்பார்ப்புடம் வெளிவந்திருக்கும் ‘சைத்தான்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் விஜய் ஆண்டனிக்கும், அருந்ததி நாயருக்கும் திருமணம் ஆகிறது. திருமணமாகி சந்தோஷமாக வாழ்ந்து வரும் நிலையில், விஜய் ஆண்டனிக்கு மட்டும் அடிக்கடி ஒரு குரல் கேட்கிறது. அந்த குரல் அவரை தற்கொலை செய்ய தூண்டுகிறது.

    இந்த வசியக் குரலின் தாக்கத்தால் பலமுறை விஜய் ஆண்டனி தற்கொலைக்கு முயல்கிறார். ஒவ்வொருமுறையும் அவரது நண்பர்கள் அவரை காப்பாற்றி விடுகின்றனர். இந்நிலையில், தனது நண்பர் முருகதாஸுடன் காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, விஜய் ஆண்டனியை அந்த குரல் மீண்டும் தற்கொலைக்கு தூண்டுகிறது.

    அப்போது காரை விபத்துக்குள்ளாக்குகிறார் விஜய் ஆண்டனி. இந்த விபத்தில் நண்பன் முருகதாஸ் இறந்துபோக, விஜய் ஆண்டனி மட்டும் தப்பிக்கிறார். அதன்பிறகு, தனக்கு மட்டும் கேட்கும் அந்த குரலைப் பற்றி தனது அலுவலக மேலதிகாரியான ஒய்.ஜி.மகேந்திரனிடம் சொல்கிறார் விஜய் ஆண்டனி.

    ஒய்.ஜி.மகேந்திரன், விஜய் ஆண்டனியை மனோதத்துவ நிபுணரான கிட்டுவிடம் அழைத்துச் செல்கிறார். கிட்டு, விஜய் ஆண்டனியின் ஆழ்மனத்திற்குள் ஊடுருவி விசாரிக்கையில், பூர்வ ஜென்மத்தில் விஜய் ஆண்டனி, ஆசிரியராக இருந்ததாகவும், அவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்ததாகவும் அவள் விஜய் ஆண்டனிக்கு துரோகம் செய்துவிட்டு, அவரை கொன்றுவிட்டதாகவும் தெரிய வருகிறது.

    இந்த ஜென்மத்திலும் ஜெயலட்சுமிதான் விஜய் ஆண்டனியை கொலை செய்வதற்காக இதுமாதிரியான சம்பவங்களெல்லாம் நடப்பதாக தெரிய வருகிறது. அந்த ஜெயலட்சுமி தஞ்சாவூரில் இருப்பதாக அறிந்து அவரைத் தேடி அங்கு செல்கிறார் விஜய் ஆண்டனி. அப்போது, அங்கு பழைய ஜெயலட்சுமியின் போட்டோ இவருக்கு கிடைக்கிறது. அந்த ஜெயலட்சுமியின் புகைப்படம் தன்னுடைய மனைவியின் முகத்தோடு ஒத்துப்போவதை பார்த்து அதிர்ச்சியடைகிறார் விஜய் ஆண்டனி.

    இறுதியில், விஜய் ஆண்டனி அந்த ஜெயலட்சுமி யார் என்பதை கண்டறிந்தாரா? உண்மையிலேயே அவரால்தான் விஜய் ஆண்டனிக்கு தற்கொலை தொந்தரவு உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பதை திரில்லருடன் சொல்லியிருக்கிறார்கள்.

    படம் முழுக்க விஜய் ஆண்டனியை மையப்படுத்தியே கதை நகர்கிறது. இதனால், படத்தின் மொத்த பாரத்தையும் விஜய் ஆண்டனியே தனது தோளில் தாங்கி நடித்திருக்கிறார். பதட்டமான காட்சிகளில் எல்லாம் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    பூர்வ ஜென்மத்தில் வரும் ஆசிரியராகட்டும், இன்றைய ஜென்மத்தில் வரும் சாப்ட்வேர் இன்ஜினியராகட்டும் இரு வேறு கதாபாத்திரத்தின் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் தயக்கம் காட்டுகிறார். இனிவரும் படங்களில் அவற்றை சரிசெய்து கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.

    அருந்ததி நாயர் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறார். திருமணமான பிறகு விஜய் ஆண்டனியிடம் ரொமான்ஸ் கலந்து இவர் பேசும் வசனங்கள் எல்லாம் கிளுகிளுப்பு ஊட்டியிருக்கிறது. கிட்டு, ஒய்.ஜி.மகேந்திரன், முருகதாஸ் என படத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியான கதாபாத்திரங்களும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

    இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தனது முதல் படத்திலேயே வித்தியாசமான ஒரு புது முயற்சியை கையிலெடுத்திருக்கிறார். படத்தின் முதல் பாதியில் என்ன நடக்கும்? ஏது நடக்கும்? என்ற பதைபதைப்பை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார். முதல்பாதியில் போடும் முடிச்சுகளுக்கு இரண்டாம் பாதியில் பதில் வருகிறது. அந்த பதில் நிறைய படங்களில் நாம் பார்த்திருப்பதுதான் என்றாலும், அது சரியானதுதான் என்பதுபோல் ஒத்துக்கொள்ள முடிகிறது. படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களுக்கும் சிறப்பான ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறார்.

    விஜய் ஆண்டனியின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். இப்படத்தின் முதல் பத்து நிமிட காட்சி வெளியிட்டபோதே அதில் வந்த பின்னணி இசை மிரட்டலாக இருந்தது. அதை படம் முழுக்க பார்க்கும்போது இன்னும் பிரம்மாண்டமாக இருக்கிறது. ‘ஜெயலட்சுமி’ என்று சொல்லும்விதத்தையே வித்தியாசமான முறையில் திரையில் அலறவிட்டிருப்பது சிறப்பு.

    பிரதீப் கலிபுரயாத்தின் ஒளிப்பதிவும் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியதுதான். ஒவ்வொரு காட்சியையும் மிகவும் அழகாக படமாக்கியிருக்கிறார். ஒவ்வொரு காட்சிக்கும் தேவைக்கேற்ற ஒளியமைப்பை வைத்து பார்ப்பவர்களுக்கு எந்த நெருடலும் இல்லாதவாறு கதையை நகர்த்துவதற்கு இவரது கேமரா ஒத்துழைத்துள்ளது.

    மொத்தத்தில் ‘சைத்தான்’ அனைவருக்கும் பிடிக்கும்.
    புதுமுக நடிகர் சஞ்சய், அருந்ததி நாயர் நடிப்பில் வெளிவந்துள்ள ‘விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்’ படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.
    சொந்தமாக தொழில் செய்யவேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் ஹீரோ சஞ்சய், தனது நண்பன் முருகதாஸ் மூலமாக வட்டிக்கு பணம் கொடுக்கும் சங்கிலியிடம் சென்று ஐந்து லட்சம் ரூபாய் கடனாக வாங்குகிறார். விரைவில், வங்கியில் கேட்டிருக்கும் லோன் கைக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையில், ஐந்து லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கி நண்பர்களுடன் சேர்ந்து செலவழித்துவிடுகிறார்.

    வங்கியிலிருந்து லோன் பணம் வரும் என்று பார்த்தால், லோன் அப்ளிகேஷனை அவரது அப்பா கிழித்துவிடுகிறார். இதனால், வங்கியிலிருந்து பணம் கிடைக்காத சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்கிடையே வாங்கிய பணத்துக்கு வட்டி கேட்டு வரும் சங்கிலி, நாயகனுக்கு கியாரண்டி கொடுத்த முருகதாஸை அடித்து துவம்சம் செய்கிறார்.

    பணப்பிரச்சினைக்கு என்ன செய்யலாம் என்று நாயகன் சஞ்சய் முழித்துக் கொண்டிருக்கும் நிலையில், சினிமா எடுக்கவரும் தம்பி ராமையா ரூபத்தில் அவருக்கு உதவி வருகிறது. தன் படத்தில் சஞ்சய் ஆறு நாள் நடித்துக் கொடுத்தால் ஆறு லட்சம் தருவதாக கூறும் தம்பிராமையாவின் பேச்சை கேட்டு அதில் நடித்தும் கொடுக்கிறார். அப்போது, வழியில் பார்க்கும் அருந்ததி நாயரை இவர்கள் ஹீரோயினாக முடிவு செய்து, அவருக்கு தெரியாமலேயே அவரை வைத்து படம் எடுத்து முடிக்கிறார்கள்.

    படம் முடிந்ததும் தம்பிராமையா நாயகனுக்கு 6 லட்ச ரூபாய்க்கான காசோலையை கொடுத்துவிட்டு ஊருக்கு சென்று விடுகிறார். அந்த காசோலையை சங்கிலியிடம் கொடுத்துவிட்டு வரும் சஞ்சய்க்கு வீட்டில் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அருந்ததி நாயரின் குடும்பம், சஞ்சய்யை தேடி அவரது வீட்டுக்கு வந்து நிற்கிறது.

    அருந்ததி நாயரும், சஞ்சய்யும் காதலிப்பதுபோல் தம்பிராமையா எடுத்த படம் யூடியூப்பில் வெளியானதால் அதைப்பார்த்து அருந்ததி நாயரை காணவில்லை என்று கூறி, அவரை எங்கு வைத்திருக்கிறாய் என்று சஞ்சயிடம் கேட்கிறார்கள். சஞ்சய் நடந்தவற்றையெல்லாம் சொல்கிறார். ஆனால், அவர்களோ நம்ப மறுக்கின்றனர். இந்நிலையில், தம்பி ராமையா கொடுத்த காசோலை வங்கியில் பணம் இல்லை என்று திரும்பி வருகிறது.

    இறுதியில், அருந்ததி நாயர் எங்கு சென்றார்? அவள் தன்னுடைய காதலி இல்லை என்பதை சஞ்சய் எப்படி நிரூபித்தார்? சங்கிலியிடமிருந்து நாயகன் தப்பித்தாரா? என்பதே மீதிக்கதை.

    படத்தின் ஹீரோவான சஞ்சய் மிகவும் கஷ்டப்பட்டு, ஏனோ, தானோவென்று நடித்திருக்கிறார். புதுமுகம் என்பதால் அவரிடம் இருந்து பெரிதாக நடிப்பு வரவில்லை. அருந்ததி நாயர் அழகாக இருக்கிறார். சென்டிமெண்ட் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்பு வழங்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

    பிச்சைக்காரர் முதற்கொண்டு பஸ் டிக்கெட் வரை எல்லாவற்றுக்கும் செக் எழுதிக் கொடுக்கும் மோசடிக்காரர் வேடத்தில் தம்பி ராமையா அழகாக பளிச்சிடுகிறார். வழக்கம்போல் தனது அனுபவ நடிப்பை கொடுத்து கைதட்டல் பெறுகிறார். சங்கிலியின் கையாளாக வரும் யோகி பாபு கொடுக்கும் சின்ன சின்ன கவுண்டர் வசனங்கள்கூட பலமாக சிரிக்க வைக்கிறது.

    நாயகனின் நண்பனாக வரும் முருகதாஸ், மயில்சாமி, ரோபோ ஷங்கர் ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். விஜய் படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா இயக்கியிருக்கும் இந்த படத்தில் என்ன சொல்ல வந்திருக்கிறார் என்றே தெரியவில்லை. படத்தின் நிறைய காமெடியன்களை இறக்கிவிட்டால் போதும், கதையில் எதுவும் வேண்டாம் என்று இருந்துவிட்டார் போலும். படத்தின் கதைக்கும் தலைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இருப்பினும் சம்பந்தப்படுத்துவதற்காக ஒரு காட்சியை வைத்து முடித்திருக்கிறார்கள். நிறைய காட்சிகள் திணிக்கப்பட்டதுபோன்றே தெரிகிறது

    எஸ்.கே.மைக்கேல் தனது ஒளிப்பதிவில் படத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறார். . தேவராஜனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை சில நேரம் சீரியல் பார்க்கும் உணர்வைத் தருகிறது.

    மொத்தத்தில் ‘விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்’ சோகம்.
    ஜூலியன் பிரகாஷ் இயக்கத்தில் சுமார் 300 ஆண்டுக்கு முந்தைய சாயலுடன் எடுக்கப்பட்ட ‘இளமி’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
    1715 ஆம் ஆண்டில் நடக்கும் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் இளமி. மதுரை வட்டாரத்தில் இருக்கும் இரண்டு கிராமங்களுக்கிடையே சுமார் 200 ஆண்டுகளாக குல தெய்வத்தை யார் வைத்திருப்பது என்பதில் பிரச்சனை இருந்து வருகிறது. இதில் ஒரு ஊர் தலைவராக ரவி மரியா இருக்கிறார். இவரின் மகள் நாயகி அனுகிருஷ்ணா. இவர்கள் ஊரில் காளையை அடக்குபவர்களுக்குத்தான் பெண் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ரவிமரியாவின் காளையை யாரும் அடக்க முடியாததால் இவரே வெற்றி பெற்று வருகிறார்.

    மற்றொரு ஊரில் நாயகன்கள் யுவனும், அகிலும் வசிக்கிறார்கள். இதில் யுவன் விலங்குகளை வேட்டையாடுவதில் வல்லவர். அகில், காளையை சூழ்ச்சி செய்து தந்திரமாக அடக்குவதில் கில்லாடி. யுவனும் அனுகிருஷ்ணாவும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், ரவிமரியாவின் ஊரில் திருவிழா ஏற்பாடு நடக்கிறது. இரண்டு ஊருக்கும் ஒரே சாமி என்பதால், யுவன், அகில் இருக்கும் கிராமத்திற்கு மரியாதை கொடுக்காததால் கோபம் அடைகிறார்கள். குல தெய்வத்தை தங்களுடைய கிராமத்திற்கு கொண்டுவர வேண்டும் என்றும், ரவிமரியாவின் காளையை அடக்கி அவரது மகளை திருமணம் செய்யவும் திட்டம் போட்டு சூழ்ச்சி செய்கிறார் அகில்.

    முதலில் கிராம மக்களை ரவிமரியாவிற்கு எதிராக திருப்பி, திருவிழாவிற்கு வைத்திருக்கும் கலசத்தை திருடி கொண்டுவந்து விடுகிறார் அகில். இதனால் கோபத்தோடு கிராம மக்களோடு வரும் ரவிமரியாவிடம் ‘கலசத்தை தரவேண்டும் என்றால், உன் காளையை எங்கள் கிராம மக்கள் அடக்கி விட்டால், குலதெய்வத்தை ஒப்படைப்பதுடன், உன் மகள் அனுகிருஷ்ணாவை திருமணம் செய்து தரவேண்டும்’ என சவால் விடுகிறார்கள். இந்த சவாலை ரவிமரியாவும் ஏற்கிறார். இந்த போட்டியில் குதிக்கும் யுவன், அனுகிருஷ்ணாவை திருமணம் செய்யும் ஆசையில் காளையை அடக்கும் முயற்சியில் இறங்குகிறார்.

    இறுதியில், ரவிமரியாவின் காளையை அடக்கியது யார்? யுவனும், அனுகிருஷ்ணாவும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் யுவன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 18ம் நூற்றாண்டு பின்னணியில் கதை நகர்வதால், அந்த காலத்து இளைஞன் தோற்றத்திற்கு பொருந்தியிருக்கிறார். அனுகிருஷ்ணாவுடன் காதல் காட்சி, காளையை அடக்க பயிற்சி பெறுவது என நடிப்பில் திறமையை காண்பித்திருக்கிறார்.

    மற்றொரு நாயகனாக வரும் அகில், கம்பீரமான வில்லனாக நடித்திருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாகவே நடித்திருக்கிறார் அகில். நாயகியாக வரும் அனுகிருஷ்ணாவின் நடிப்பு அபாரம். யதார்த்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். ஊர் தலைவராக வரும் ரவிமரியா, தளபதியாக வரும் கிஷோர் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

    ஜல்லிக்கட்டை மையமாக வைத்து பல படங்கள் வெளிவந்திருந்தாலும், இப்படத்தில் ஜல்லிக்கட்டின் வரலாற்றையும், அதன் பெருமையையும் மிகவும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜூலியன் பிரகாஷ். காளையை அடக்குவதை தத்ரூபமாக காட்சிப்படுத்த முடியாததால், கிராபிக்ஸ் மூலம் அக்காட்சிகளை அழகாக சேர்த்திருக்கிறார். எந்த கதாபாத்திரங்களையும் குறை சொல்ல முடியாதளவிற்கு வேலை வாங்கியிருக்கிறார். ஜல்லிக்கட்டு மையமாக இருக்கும் படத்தில் காதலை புகுத்தி அதில் எதிர்பார்த்திராத கிளைமாக்ஸ் வைத்திருப்பது சிறப்பு.

    ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல் அனைத்து கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். யுகாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் ‘இளமி’ இளமை இனிமை.
    அரவிந்த் ஆகாஷ், சாந்தினி, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள ‘கண்ல காச காட்டப்பா’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்..
    தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர் ஒருவர் ஊழல் செய்ததில் 100 கோடி ரூபாய் கிடைக்கிறது. மலேசியாவில் இருக்கும் அந்த கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு பாலாஜியின் உதவியை நாடுகிறார் அமைச்சர். பாலாஜி மலேசியாவில் இருக்கும் அந்த பணத்தை வாங்கி, கொலம்பியாவில் இருக்கும் வங்கியில் போட்டு வெள்ளையாக்க முயற்சி செய்கிறார்.

    இதற்காக அந்த பணத்தை வாங்குவதற்காக விச்சுவை மலேசியாவுக்கு அனுப்புகிறார். மலேசியாவில் விச்சுவுக்கு உதவி செய்ய கிளப் டான்சரான சாந்தினியை பாலாஜி நியமிக்கிறார். அங்கு, இவர்களுக்கு முதல்கட்டமாக ரூ.20 கோடி கிடைக்கிறது. அதை கையில் வைத்துக் கொண்டு இருக்கும் வேளையில், சிறு சிறு திருட்டு வேலைகள் செய்யும் கல்யாண் மாஸ்டர், யோகி பாபுவுக்கு இவர்களிடம் இருக்கும் பெரும்தொகை பற்றிய தகவல் கிடைக்கிறது. அந்த பணத்தை கொள்ளையடித்தால் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்ற எண்ணத்தில் அதை கொள்ளையடிக்க முயல்கிறார்கள்.

    அதேநேரத்தில், வாழ்க்கையில் எந்த முன்னேற முடியாத விரக்தியில் இருக்கும் நாயகன் அரவிந்த் ஆகாஷும், அவரது தாத்தாவான எம்.எஸ்.பாஸ்கரும் திருட்டு தொழில் செய்து பிழைப்பை நடத்தலாம் என்று முடிவெடுக்கின்றனர். இவர்களுக்கும் விச்சுவின் கைவசம் இருக்கும் ரூ.20 கோடி பற்றிய தகவல் கிடைக்க, அதை கொள்ளையடிக்க முடிவு செய்கின்றனர்.

    இந்நிலையில், விச்சுவை மலேசியாவுக்கு அனுப்பிய பாலாஜி விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு செல்கிறான். இதையறியும் விச்சு, தன்னை அனுப்பியது பாலாஜிக்கு மட்டுமே தெரியும் என்பதால், அந்த பணத்தை அவரே கைப்பற்ற நினைக்கிறார். இறுதியில், அந்த பணம் அமைச்சர் வசம் சென்றதா? அல்லது கொள்ளையடிக்க நினைத்த கும்பல் கைப்பற்றியதா? அச்சுவே அந்த பணத்தை கைப்பற்றிக் கொண்டாரா? என்பதை மீதிக்கதை.

    படத்தின் நாயகன் அரவிந்த் ஆகாஷ் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சியிலும், காமெடியிலும் ரசிக்க வைக்கிறார். இவருடைய தாத்தாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கரும் ஒரு காமெடி படத்துக்குண்டான நடிப்பை வரவழைத்து அனைவரையும் சிரிக்க வைக்கிறார்.

    படத்தின் காமெடிக்கு மிகப்பெரிய பலமே யோகி பாபுதான். இவர் வரும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரில் ஒரே சிரிப்பலைதான். குறிப்பாக இறுதிக் காட்சியில் இவருடைய காமெடி வயிற்றை புண்ணாக்குகின்றன. இவருடன் வரும் கல்யாண் மாஸ்டரும் யோகி பாபுவுக்கு இணையாக காமெடியில் கலக்கியிருக்கிறார்.

    கிளப் டான்ஸராக வரும் சாந்தினி அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான கவர்ச்சியுடன் வலம் வந்திருக்கிறார். அரசியல்வாதியாக வருபவர், விச்சு விஸ்வநாத், பாலாஜி ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
    இயக்குனர் மேஜர் கவுதம் தனது முதல் படத்திலேயே எல்லோரும் ரசிக்கும்படியும், கலகலப்பாகவும் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்பவர்களுக்கு பெரிய தொகையை திருடும் வாய்ப்பு கிடைத்தால் என்னவெல்லாம் யோசிப்பார்கள் என்பதை படம் முழுக்க கலகலப்புடன் சொல்லியிருக்கிறார்.

    திவாகர் சுப்பிரமணியமின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். அதேசமயம் பின்னணி இசையில் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். அரவிந்த் கமலநாதனின் ஒளிப்பதிவு மலேசியாவை வித்தியாசமான கோணத்தில் காட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘கண்ல காச காட்டப்பா’ மகிழ்ச்சி.
    அபி சரவணன், அதிதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பட்டதாரி’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
    பட்டதாரியான அபி சரவணன் படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். இவருக்கு பெண்களை கண்டாலே அலர்ஜி. இதனால் பெண்களுடன் பழகுவதை வெறுத்து வருகிறார். ஆனால், இவர்கள் நண்பர்களோ பல பெண்களிடம் பேசி வருகிறார்கள்.

    நாயகனின் இந்த குணமே அவர்மீது நாயகி அதிதிக்கு காதலை வரவழைக்கிறது. அவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஆனால் அபி சரவணனோ அதிதியின் காதலை ஏற்க மறுக்கிறார். இந்நிலையில், தனது அப்பாவின் அறிவுரையை ஏற்று ஓட்டல் ஒன்றை தொடங்குகிறார் நாயகன். அபி சரவணன் தனது காதலை மறுத்தாலும், அவரை விடாமல் பின்தொடர்ந்து வருகிறார் அதிதி.

    அபி சரவணன் பெண்களை வெறுக்க காரணம் என்ன? அதிதி, அபி சரவணனின் மனதை மாற்றி காதலிக்க வைத்தாரா? ஓட்டல் தொடங்கிய அபி சரவணன் அதை வெற்றிகரமான நடத்தினாரா? என்பதுதான் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அபி சரவணன், முந்தைய படங்களைவிட இதில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். ஒரு சில இடங்களில் செயற்கையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகிகளாக அதிதி மற்றும் ராஷிகா நடித்திருக்கிறார்கள். இதில் ராஷிகாவிற்கு மட்டுமே அதிக அளவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார். அதிதி கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

    அபி சரவணன் நண்பர்களாக நடித்திருப்பவர்கள் புதுமுகங்கள் என்பதால் அவர்களிடம் சிறந்த நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. இருந்தாலும், அவரவர் தங்களுடைய பங்கிற்கு ஓரளவு நடித்திருக்கிறார்கள். நண்பர்களில் ஒருவரான அம்பானி சங்கர் சிறப்பாக நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் மகாநதி சங்கர், அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

    வழக்கமான கதையை வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சங்கர் பாண்டி. திரைக்கதை வலுவில்லாமல் இருப்பது படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. காமெடிகள் பெரியதாக எடுபடவில்லை. சுவாரஸ்யமான காட்சிகளை வைத்திருந்தால் ரசித்திருக்கலாம். அடுத்தடுத்து என்ன காட்சிகள் வரும் என்று யூகிக்க முடியும் அளவிற்கு படத்தை கொடுத்திருக்கிறார்.

    படத்திற்கு ஒரே பலம் எஸ்.எஸ்.குமரனின் இசை. இவரது இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். சூரியனின் ஒளிப்பதிவும் படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘பட்டதாரி’ மதிப்பெண் குறைவு.

    ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சுனைனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘கவலை வேண்டாம்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்..
    ஜீவாவும், காஜல் அகர்வாலும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் ஒருகட்டத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள். திருமணம் செய்த நாளிலேயே இருவரும் கருத்து வேறுபட்டு பிரிந்து போகிறார்கள். பின்னர், சில காலம் கழிந்த நிலையில், ஜீவா சொந்தமாக ரெஸ்ட்ராண்ட் ஆரம்பிக்கிறார்.

    அதேசமயம் காஜல் அகர்வாலுக்கும், பாபி சிம்ஹாவுக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. மறுமுனையில் ஜீவாவை சுனைனா ஒருதலையாக காதலித்து வருகிறார். ஜீவாவுக்கோ காஜல் அகர்வாலுடன் சேர்ந்து வாழவேண்டும் என்பதுதான் விருப்பம்.

    இந்த நிலையில், பாபி சிம்ஹாவை திருமணம் செய்துகொள்வதற்காக ஜீவாவை முறைப்படி விவாகரத்து செய்ய காஜல் அகர்வால் முடிவெடுக்கிறார். இதற்காக ஜீவாவிடம் விவகாரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்க செல்கிறார். அப்போது, ஜீவா தன்னுடன் ஒருவார காலம் தங்கியிருந்து, தன்னுடைய சொல்படி நடந்தால் அவள் கேட்டபடி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டு தருவதாக சொல்கிறார்.

    இதையடுத்து, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ஜீவா, சுனைனா மற்றும் அவரவர்களுடைய நண்பர்கள், தோழிகள் பெரிய பட்டாளமே ஒரே வீட்டில் தங்குகிறது. இந்த கலகலப்பான காலகட்டத்தின் இறுதியில் ஜீவாவுக்கும் காஜலுக்கும் விவாகரத்து நடந்ததா? இல்லையா? யார், யாரை திருமணம் செய்தார்கள்? என்பதே மீதிக்கதை.

    எந்தவித லாஜிக்கும் இல்லாமல் படம் முழுக்க நகைச்சுவையை மட்டுமே நம்பி படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் டீகே. ஆனால் அந்த நகைச்சுவை ரசிக்கும்படி இல்லாதது படத்திற்கு பெரிய தொய்வு. தனது முந்தைய படத்தைப்போலவே இந்த படத்தையும் ஊட்டியிலேயே படமாக்கியிருக்கிறார். என்றாலும், வித்தியாசமான இடங்களை வித்தியாசமாக காட்டியவிதம் அருமை.

    நகைச்சுவை படங்களில் நடிப்பது ஜீவாவுக்கு ஒன்றும் புதிதல்ல. அவருக்கு ஏற்கெனவே அனுபவம் இருந்தாலும், அவருக்குண்டான நடிப்புக்கு இந்த படத்தில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருப்பது சற்று ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. பார்ப்பதற்கு ரொம்பவும் அழகாகவும், அவருடைய உடையலங்காரமும் ரசிக்கும்படி இருக்கிறது.

    காஜல் அகர்வால் படம் முழுக்க கவர்ச்சியை கொஞ்சம் தூக்கலாக வைத்து நடித்திருக்கிறார். காமெடி, சென்டிமென்ட் ஆகியவற்றில் இன்னும் கொஞ்சம் இவரிடம் வேலை வாங்கியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. சுனைனா, பாபி சிம்ஹா படம் முழுக்க வந்தாலும், அழுத்தமான கதாபாத்திரம் இல்லை. இருப்பினும், தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    பால சரவணன், ஆர்.ஜே.பாலாஜி படத்தின் காமெடிக்கு கொஞ்சம் துணை நின்றிருக்கிறார்கள். ஜீவாவின் அப்பாவாக வரும் மயில்சாமி காமெடி, சென்டிமென்ட் ஆகியவற்றில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, தனது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். மயில்சாமிக்கு ஜோடியாக வரும் மதுமிதா சில காட்சிகளே வந்தாலும் கலகலப்பூட்டியிருக்கிறார்.

    படத்திற்கு மிகப்பெரிய பலமே அபினந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவுதான். ஒவ்வொரு காட்சியையும் மிகவும் அழகாக தனது கேமராவில் படம்பிடித்திருக்கிறார். லியோன் ஜேம்ஸ்-ன் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையிலும் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    மொத்தத்தில் ‘கவலை வேண்டாம்’ கவலைக்கிடம்.
    ஹாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘பேண்டஸ்டிக் பீஸ்ட்ஸ்’ படம் தமிழிலும் வெளியாகியிருக்கிறது. அந்த படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்..
    அமெரிக்காவில் திடீரென ஒரு தாக்குதல் நடக்கிறது. இந்த தாக்குதலுக்கு தீய சக்திகளின் தலைவனான ஹிரிண்டல் வால்ட் காரணமாக இருக்குமோ என்ற அச்சம் அமெரிக்காவில் நிலவுகிறது. இதனால், மாயாஜால உலகிற்கும் சாதாரண மக்களுக்கும் இடையே போர் நிலவுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

    இதனை தடுப்பதற்காக மாயாஜால சமூகம் ஏற்கெனவே மாய விலங்குகளை வளர்க்க விதிக்கப்பட்ட தடையை மேலும் அதிகமாக்குகிறது. இந்நிலையில், நாயகன் எடி ரெட்மயானே மாய விலங்குள் அடங்கிய உலகத்தை ஒரு சூட்கேசில் வைத்துக் கொண்டு நியூயார்க் நகரத்துக்கு வருகிறான்.

    அந்த சூட்கேசுக்குள் இருக்கும் மிகப்பெரிய ராட்சத பறவையை அமெரிக்காவின் அரிசோனா காடுகளில் விட்டுச் செல்வதற்காக வருகிறான். ஆனால், அதற்குள் அவனுடைய சூட்கேஸ் பறிபோய்விடுகிறது. இந்நிலையில், அந்த சூட்கேசுக்குள் இருக்கும் மாய விலங்குகள் எல்லாம் வெளியே வந்துவிடுகிறது.

    இந்நிலையில், அமெரிக்காவில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்துகிறது. இதையெல்லாம் அறியும் மாயாஜால சமூகம் சூட்கேசுக்குள் இருந்து வெளியே வந்த விலங்குகள்தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று எண்ணுகின்றனர். எனவே, அந்த விலங்குகளை கொண்டு வந்த நாயகனை தேடிக் கண்டுபிடித்து அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்ற முடிவெடுக்கிறார்கள்.

    இதிலிருந்து நாயகன் எப்படி மீண்டு வந்தார்? அந்த விலங்குகளை எப்படி அவர் மீட்டுக் கொண்டு வந்தார்? என்பதே மீதிக்கதை.

    இந்த படம் ஹாரிபார்ட்டருக்கு 70 வருடத்துக்கு முந்தைய காலக்கட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகியிருக்கிறது. அந்த காலக்கட்டத்தில் உள்ள கட்டிடங்களை அழகாக உருவாக்கியிருக்கிறார்கள். அவை கிராபிக்ஸ் என்பதையும் மீறி தத்ரூபமாக இருப்பதாக சிறப்பு.

    அதேபோல், கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ள ஒவ்வொரு மிருகங்களும் பார்ப்பதற்கு ரொம்பவுமே ரசிக்க வைக்கின்றன. அதிலும், குறிப்பாக, திருடுவதையே வேலையாக கொண்டு வரும் மிருகம் செய்யும் சேஷ்டைகள் எல்லாம் சிரிக்க வைக்கின்றன. ராட்சத பறவை பார்க்கவே மிரள வைக்கிறது. இதேபோல், சூட்கேசுக்குள் இருக்கும் உலகத்தை மிகவும் அழகாக காட்டியிருக்கிறார்கள்.

    அந்த உலகத்திற்குள் வாழும் ஒவ்வொரு மிருகமும் எந்த சூழ்நிலையில் வாழவேண்டுமோ அந்த சூழ்நிலைக்கேற்றவாறு அந்த உலகத்தை படைத்திருப்பது ரொம்பவும் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது. படத்திற்கு பெரிய பலமே கிராபிக்ஸ் காட்சிகள்தான். படம் முழுக்க கிராபிக்ஸ் நிறைந்திருந்தாலும், அவை எல்லாமே தத்ரூபமாக இருக்கும்படி அமைத்திருக்கிறார்கள்.

    மொத்தத்தில் ‘பேண்டஸ்டிக் பீஸ்ட்ஸ்’ பிரமிப்பு.
    கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘அஞ்சுக்கு ஒண்ணு’ திரைப்படம் வெளியாகியுள்ளது. அந்த படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.
    நாயகன் அமர், சித்தார்த் உள்ளிட்ட 5 பேர் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருக்கிறார்கள். இவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி ஒன்றாக கட்டிட வேலை செய்கின்றனர். இவர்களுடைய மேஸ்திரி சிங்கம் புலி. இவர்கள் ஐந்து பேரும் எதை செய்தாலும் சேர்ந்தேதான் செய்வார்கள்.

    இவர்களுடன் கட்டிட வேலைக்கு நாயகி உமாஸ்ரீ வருகிறாள். சித்தார்த்துக்கு அந்த பெண் மீது காதல் வருகிறது. இருவரும் திருமணம் செய்துகொள்ள நினைக்கின்றனர். 5 நண்பர்களிடையே ஒரு பெண் குறுக்கிட்டதால், நட்பில் விரிசல் ஏற்படுகிறது. இவர்களை ஒன்றுசேர்க்கவும், அவர்களை திருத்தி நல்வழிக்கு கொண்டு வரவும் நாயகி முயற்சி செய்கிறாள்.

    இந்த முயற்சியில் நாயகிக்கு வெற்றி கிடைத்ததா? நண்பர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை.

    சித்தார்த் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதலியின் அன்புக்கும், நண்பர்களின் நட்புக்கும் இடையே சிக்கித் தவிப்பதை பிரதிபலிக்கிறார். நாயகி உமாஸ்ரீயை சுற்றி கதை நகர்கிறது. அந்த பாத்திரமாகவே அவர் மாறி இருக்கிறார்.  அமரின் காதலியாகவும், முதலாளியின் மகளாகவும் வரும் மேக்னா கச்சிதம். கட்டிட மேஸ்திரி சிங்கம் புலி, ரசிக்க வைக்கிறார். முத்துக்காளை, உமா, கசாலி, ஷர்மிளா உள்ளிட்ட மற்றவர்களும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.

    ஐந்து நண்பர்கள் இடையில் ஒரு பெண் வந்தால் என்ன பிரச்சினைகள் வரும் என்பதை தெளிவாக எடுத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஆர்வியார். அந்த பெண் நம்பிக்கை வைத்து, அவர்களின் வாழ்க்கையை மாற்றி அழகாக்குவது கதைக்கு பலம். மழைக்காலத்தில் கட்டிடத் தொழிலாளர்கள் படும் கஷ்டங்களை அருமையாக காட்டியுள்ளார்.

    காட்சிகள் திருப்பம் இல்லாமல் நகர்ந்தாலும், கிளைமாக்ஸ் எதிர்பாராதது. நண்பர்களின் கதையை இன்னும் ஆழமாக சொல்லி இருந்தால் படம் ஐந்தில் ஒன்றாக பேசப்பட்டிருக்கும். முதல்பாதியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். என்றாலும், கட்டிட கூலி தொழிலாளர்கள் வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்திருப்பது புதிய முயற்சி.

    சாகித்யா இசையில் பாடல்களை ரசிக்கலாம். பின்னணியும் பரவாயில்லை. நந்து ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவு.

    மொத்தத்தில் ‘அஞ்சுக்கு ஒண்ணு’ வித்தியாசமான சிந்தனை. 
    ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி ஆகியோர் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கியுள்ள கடவுள் இருக்கான் குமாரு படம் இன்று ரிலீசாகியுள்ளது. அந்த படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.
    ஜி.வி.பிரகாஷுக்கும் நிக்கி கல்ராணிக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெகிறது. திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் பேச்சுலர் பார்ட்டி கொண்டாடுவதற்காக பாண்டிச்சேரி வரை செல்வதற்கு நிக்கி கல்ராணியின் காரை வாங்கிக் கொண்டு செல்கிறார் ஜி.வி.பிரகாஷ். பாண்டிச்சேரியில் பார்ட்டி கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் வழியில், போலீஸ் அதிகாரிகளான பிரகாஷ் ராஜ், சிங்கம்புலி, ரோபோ சங்கர் ஆகியோர் இவர்களது காரை வழிமறித்து சோதனை செய்கிறார்கள்.

    அவர்களது காரில் மதுபாட்டில்கள் இருப்பதை பார்த்ததும், அவர்களை கைது செய்யப்போவதாக பிரகாஷ் ராஜ் மிரட்டுகிறார். உடனே பயந்துபோன ஜி.வி.யும், பாலாஜியும் அவர்களிடம் இருந்து தப்பித்து செல்கிறார்கள். ஆனால், பாலாஜியின் மொபைல் சிங்கம் புலியிடம் சிக்குகிறது. அதைவைத்து பிரகாஷ் ராஜ் அவர்களை பின்தொடருகிறார்.

    இதற்கிடையில், ஜி.வி.யின் முன்னாள் காதலியான ஆனந்தியும், திருமணம் செய்து கொள்ளப்போகும் நிக்கி கல்ராணியும் அவருக்கு தொடர்ந்து போன் செய்துகொண்டே இருக்கிறார்கள். ஆனந்தி ஜி.வி.யின் மீது பாசமாகவும், நிக்கி கல்ராணி ரொம்ப கண்டிஷனாகவும் நடந்து கொள்கிறார்.

    ஒருகட்டத்தில் ஜி.வி.பிரகாஷின் மனதில் சிறிய மாற்றம் ஏற்படுகிறது. நிக்கி கல்ராணியை திருமணம் செய்யலாமா? ஆனந்தியை திருமணம் செய்யலாமா? என்ற குழப்பமும் ஏற்படுகிறது. இறுதியில், ஜி.வி.யும், பாலாஜியும் பிரகாஷ் ராஜிடம் இருந்து தப்பித்தார்களா? ஜி.வி. யாரை திருமணம் செய்தார்? என்பதே மீதிக்கதை.

    ஜி.வி.பிரகாஷ் வழக்கம்போல் நண்பர்களோடு அரட்டையடிப்பது, நாயகிகளுடன் இணைந்து டூயட் ஆடுவது என்பது இல்லாமல் இப்படத்தில் கொஞ்சம் நன்றாகவே நடித்திருக்கிறார். நீண்ட வசனங்களைக்கூட அசால்ட்டாக பேசி அசர வைக்கிறார். நிக்கி கல்ராணி, ஆனந்தி என இரு கதாநாயகிகளுடன் நெருங்கி நடிப்பதில் எந்தவித தயக்கமும் இல்லாமல் தாராளமாக நடித்திருக்கிறார். அவர்களும் ஜி.வி.பிரகாஷுக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார்கள்.

    படத்திற்கு படம் ஆனந்தி மெருகேறிக் கொண்டே வருகிறார். நிக்கி கல்ராணியும் பார்க்க அழகாக இருக்கிறார். நடிப்பிலும் ஓகே சொல்ல வைக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி, ராஜேஷ் படத்தில் சந்தானம் இல்லாத குறையை நீக்கியிருக்கிறார். அவர் வரும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரில் ரசிகர்களின் கரவொலி காதை பிளக்கிறது.

    படத்திற்கு மற்றொரு பெரிய பலம் பிரகாஷ் ராஜ். காமெடி கலந்த வில்லத்தனத்தில் கலக்கியிருக்கிறார். ரொம்பவும் எதார்த்தமான நடிப்பில் அசர வைக்கிறார். அவருக்கு ரோபோ சங்கரும், சிங்கம் புலியும் கைகொடுத்து உதவியிருக்கிறார்கள். பேசுவதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தும் ஊர்வசியும், அந்த நிகழ்ச்சியை நடத்தும் இயக்குனராக வரும் மனோபாலாவும் நகைச்சுவையில் வயிறு குலுங்க வைத்திருக்கிறார்கள்.

    எம்.எஸ்.பாஸ்கர் கண்டிப்பான அப்பாவாக வந்து மிளிர்கிறார். அதிகார தோரணையுடன் இவர் பேசும் வசனங்கள் எல்லாமே ரசிக்க வைக்கிறது. ஜி.வி.யின் அப்பாவாக வரும் டி.சிவாவும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

    இயக்குனர் எம்.ராஜேஷ் வழக்கம்போல காமெடி கலந்த ஒரு படத்தையே கொடுத்திருக்கிறார். முந்தைய படங்களின் சாயல் இருந்தாலும் படத்தை ரசிக்கும்படி எடுத்திருப்பது சிறப்பு. ராஜேஷ் படங்கள் என்றாலே வயிறு குலுங்கு சிரித்துவிட்டு வரலாம் என்பதற்கு இந்த படமும் கியாரண்டி. முதல்பாதி கலகலப்பாக சென்றாலும், இரண்டாம் பாதியில் பாடல் காட்சிகளை புகுத்தி ஊர் சுற்றி முடித்திருப்பது ஏனோ சற்று சலிப்பை தருகிறது. அதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

    ஜி.வி.யின் இசையில் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் அடித்துள்ளது. திரையில் அதை பார்ப்பதற்கும், கேட்பதற்கும் அதிரடியாக இருக்கிறது. சக்தி சரவணனின் ஒளிப்பதிவு காட்சிகளை மிகவும் அழகாக படம்பிடித்திருக்கிறார். சேசிங் காட்சிகளில் எல்லாம் இவரது கேமரா பளிச்சிடுகிறது.

    மொத்தத்தில் ‘கடவுள் இருக்கான் குமாரு’ காமெடியில் கலக்குகிறார்.
    மோகன்லால், சத்யராஜ், அமலாபால் ஆகியோர் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ‘லைலா ஓ லைலா’ படம் தமிழில் டப்பாகி ‘முருகவேல்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. அந்த படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
    சத்யராஜ் அரசாங்கத்தின் உதவியுடன் மறைமுகமாக துப்பறியும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாளராக மோகன்லால் பணியாற்றி வருகிறார். மோகன்லாலுக்கும் ரம்யா நம்பீசனுக்கும் திருமணமாகி 6 மாதங்களுக்குள் பிரிந்து விடுகிறார்கள். தற்போது பணியில் தீவிரமாக பணியாற்றிவரும் மோகன்லால் யார் என்று தெரியாமலேயே அமலாபால் அவரை காதலிக்கிறார்.

    இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகளும் நடக்கிறது. இந்நிலையில், தீவிரவாதியான ராகுல்தேவை கண்டுபிடித்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் மோகன்லால். பின்னர் ராகுல் தேவுக்கும் கய்னாத் அரோராவுக்கும் பழக்கம் இருப்பதை அறியும் மோகன்லால், அவள் மூலம் தீவிரவாத கும்பலின் மொத்த நெட்வொர்க்கையும் கண்டுபிடிக்க நினைக்கிறார்.

    இதற்காக கய்னாத் அரோராவிடம் தான் யார் என்பதை கூறாமல் அவருடன் நெருக்கமாக பழகுகிறார் மோகன்லால். கய்னாத் அரோராவும் மோகன்லாலும் அடிக்கடி சந்திப்பதை நோட்டமிடும் அமலாபால், மோகன்லாலை பின் தொடருகிறார்.

    அந்த நேரத்தில் மோகன்லாலின் கட்டுப்பாட்டில் இருந்த ராகுல் தேவ் அங்கிருந்து தப்பிக்கிறார். கய்னாத் அரோராவை சந்திக்க மோகன்லால் அவள் வீட்டுக்கு செல்லும் நேரத்தில், ராகுல் தேவும் அங்கு வர, அவர்களுக்குள் துப்பாக்கி சண்டை நடக்கிறது. அப்போது அங்கு வரும் அமலாபால், மோகன்லால் பெரிய ரவுடி என்று நினைப்பதுடன், அவரை விட்டு பிரியவும் செய்கிறார்.

    இதுஒருபுறமிருக்க, ராகுல்தேவும் கய்னாத் அரோராவும் மோகன்லாலிடம் இருந்து தப்பித்து செல்கிறார்கள். இறுதியில், மோகன்லால் அவர்களை தேடிக் கண்டுபிடித்து ஒட்டுமொத்த தீவிரவாதிகளையும் கைது செய்தாரா? அமலாபாலை சமாதானப்படுத்தி வாழ்க்கையில் இணைந்தாரா? என்பதே மீதிக்கதை.

    மலையாளத்தில் வெளிவந்த ‘லைலா ஓ லைலா’ படத்தை தமிழில் டப்பிங் செய்து ‘முருகவேல்’ என்று தலைப்பு வைத்து வெளியிட்டுள்ளனர். படத்தின் நாயகன் மோகன்லால்தான். ஆனால், தமிழில் சத்யராஜை பிரதானமாக வைத்து விளம்பரம் செய்துள்ளார்கள். அதனை பார்த்துவிட்டு படம் பார்க்க செல்கிறவர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்கள்.

    மோகன்லால் தனது உடலமைப்புக்கு எந்தளவுக்கு சண்டைக் காட்சியில் நடிக்க முடியுமோ? அதை சரியாக புரிந்துகொண்டு ஆக்சனில் அசத்தியிருக்கிறார். அதேபோல், செண்டிமென்ட் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    சத்யராஜ் மொட்டைத் தலையுடன் பார்ப்பதற்கு வில்லன் ரேஞ்சுக்கு இருந்தாலும், படத்தின் மற்றொரு கதாநாயகன்போல் வருகிறார். இவர் பேசும் வசனங்கள் எல்லாம் நமக்கு புதிதாக இருக்கிறது. இருப்பினும், இந்த புதிய கெட்டப்பில் அவரை பார்க்கும்போது அழகாகவே இருக்கிறார். நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

    ரம்யா நம்பீசன் ஒரு சில காட்சிகளே வந்துபோனாலும் நிறைவை தந்திருக்கிறார். அமலாபால் முற்பாதியில் மோகன்லாலை காதலிப்பதும், பிற்பாதியில் அவருக்கு உறுதுணையாக இருப்பதும் என மாறுபட்ட நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ராகுல் தேவ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். அவருடைய காதலியாக கய்னாத் அரோரா கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார்.

    இயக்குனர் ஜோசி ஹாலிவுட் பாணியில் ஒரு திரைப்படத்தை கொடுத்திருக்கிறார். துப்பறியும் காட்சிகள் எல்லாம் மிகவும் அருமையாகவும் விறுவிறுப்பாகவும் செல்கிறது. படத்தில் ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது. தேவைக்கேற்ப செண்டிமெண்ட், காதல் காட்சிகளையும் வைத்திருப்பது சிறப்பு.

    கோபி சந்தர் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. லோகநாதனின் ஒளிப்பதிவு படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல உதவியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘முருகவேல்’ வெற்றி வேல்.
    ×