என் மலர்tooltip icon

    தரவரிசை

    விஜய் வசந்த் - சிருஷ்டி டாங்கே நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘அச்சமின்றி’ படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்...
    விஜய் வசந்த், கருணாஸ், தேவதர்ஷினி, சண்முகசுந்தரம் நால்வரும் பிக் பாக்கெட் அடிப்பதையே தொழிலாக செய்து வருகிறார்கள். இவர்களுடைய ஏரியாவுக்கு இன்ஸ்பெக்டராக வருகிறார் சமுத்திரகனி. அதே ஏரியாவில் வாய் பேசமுடியாத வித்யா தனிமையில் வசித்து வருகிறார். அவர் மீது சமுத்திரகனி இரக்கம் காட்ட, அந்த இரக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது.

    இந்நிலையில், ஒருநாள் பஸ்ஸில் விஜய் வசந்தை சந்திக்கிறாள் சிருஷ்டி டாங்கே. இவர்களுடைய முதல் சந்திப்பே மோதலாக மாறி, போலீஸ் நிலையம் வரை செல்கிறது. ஒரு கட்டத்தில் தனது தவறை உணர்ந்த சிருஷ்டி டாங்கே, விஜய்யிடம் மன்னிப்பு கேட்கிறார். அதன்பிறகு, இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர்.

    இந்நிலையில், சமுத்திரகனி காதலிக்கும் வித்யா ஒரு விபத்தில் இறக்கிறாள். அது விபத்து இல்லை, திட்டமிட்டு செய்த கொலை என்று சமுத்திரகனிக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இதுகுறித்து விசாரிக்க களமிறங்க நினைக்கும்போது, அவரது உயரதிகாரி, போலீஸ் மற்றும் ரவுடி கும்பலின் உதவியோடு இவரை கொலை செய்ய திட்டமிடுகிறார்.

    அதிலிருந்து தப்பித்து செல்லும் சமுத்திரகனி, உயிர் பயத்தோடு ஓடிவரும் நாயகனையும் நாயகியையும் சந்திக்கிறார். சமுத்திரகனியை கொல்ல துடிப்பவர்களே, இவர்களையும் கொலை செய்ய துடிக்கிறார்கள் என்பதை ஒருவருக்கொருவர் அறிந்து கொள்கிறார்கள். மூன்று பேரும் இணைந்து தங்களை கொலை செய்ய நினைப்பவர்களை எதிர்க்க களமிறங்குகிறார்கள்.

    அப்போது தங்களை கொல்லத் துடிக்கும் ரவுடி கும்பலின் பின்புலத்தில் கல்வியமைச்சர் ராதாரவியின் உதவியாளர் ஜெயக்குமார் ஜானகிராமன் இருப்பது தெரியவருகிறது. சமுத்திரகனி, விஜய் வசந்த், சிருஷ்டி டாங்கே மூன்று பேரையும் அவர் கொல்ல துடிப்பதன் காரணம் என்ன? இந்த கொலை முயற்சியில் இருந்து தப்பித்தார்களா? வித்யாவை யார்? எதற்காக கொன்றார்கள்? என்பதற்கு விறுவிறுப்புடன் கூடிய பதிலை பிற்பாதியில் சொல்லியிருக்கிறார்கள்.

    பிக்பாக்கெட் திருடனாக வரும் விஜய் வசந்த் தனது நகைச்சுவை கலந்த எதார்த்த நடிப்பில் அனைவரையும் கவர்கிறார். முதல் பாதியில் இவரது கதாபாத்திரம் நகைச்சுவையாக நகர்ந்தாலும், சமுத்திரகனியிடம் இணைந்த பிறகு ஆக்சனுக்கு மாறுகிறது. ஆக்சன் காட்சிகளில் ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார். தனக்கேற்ற சரியான கதையை தேர்வு செய்து, நாயகன் அந்தஸ்தை முழுமையாக காட்டிக் கொள்ளாமல், தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை முழுமையாக கொடுத்திருக்கிறார்.

    சிருஷ்டி டாங்கே அழகு பதுமையாக படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். காதல் காட்சிகள் மட்டுமில்லாது, செண்டிமெண்ட் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார். பரபரப்பான காட்சிகளில் தனது நடிப்பை சிறப்பாக செய்து தனது கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார்.

    பொறுப்பான போலீஸ் அதிகாரியாக வரும் சமுத்திரகனி, வழக்கம்போல் தனது அசாத்தியமான நடிப்பை எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். தான் காதலித்த பெண்ணின் மரணத்திற்கு பிறகு செண்டிமெண்ட் கலந்த கோபத்தோடு எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகள் எல்லாம் பலே சொல்ல வைக்கிறது.

    ராதாரவியின் கதாபாத்திரத்தை ஆரம்பத்தில் வில்லத்தனமாக சித்தரித்து, இறுதியில் அவர் மிகவும் நேர்மையானவர் என்பதுபோல் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். இதை உணர்ந்து சிறப்பாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கு பெயர் வரும்படி செய்திருக்கிறார் ராதாரவி. குறிப்பாக, இறுதிக் காட்சியில் நீதிமன்றத்தில் இவர் பேசும் வசனங்கள் மிகவும் யோசிக்கக்கூடியதாக உள்ளது.

    இதுவரையிலான படங்களில் பிரியமான அம்மாவாக வந்த சரண்யா பொன்வண்ணன், இந்த படத்தில் பிடிவாத சரண்யாவாக நடித்துள்ளார். கல்வி நிறுவனங்கள் நடத்தும் மிகப்பெரிய தொழிலபதிரான இவர், தனது கட்டுப்பாட்டுக்குள் அனைவரையும் கொண்டு வரும் மிடுக்கான தோற்றத்துடன் கம்பீரமாக வலம் வந்திருக்கிறார். இவருக்கு இந்த கதாபாத்திரம் புதிது என்றாலும் அதை அழகாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். இனிமேல், சரண்யா பொன்வண்ணன் இதுமாதிரியான கதாபாத்திரங்களிலும் நடித்து அவரது நடிப்பு திறமையை இன்னும் மேலே கொண்டுவர வேண்டும் என்பதுதான் படம் பார்த்தவர்களின் ஆவலாக உள்ளது.

    வாய் பேசமுடியாமல் வரும் வித்யா, வக்கீலாக வரும் ரோகிணி, கலெக்டராக வரும் தலைவாசல் விஜய், கும்கி அஸ்வின் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கருணாஸ், தேவதர்ஷினி, சண்முக சுந்தரம் கூட்டணியில் காமெடி ரசிக்கும்படி இருக்கிறது.

    ஏற்கெனவே, விஜய் வசந்தை வைத்து ‘என்னமோ நடக்குது’ என்ற ஹிட் படத்தை கொடுத்த ராஜபாண்டியே இப்படத்தையும் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களும், அரசாங்கமும், மக்களும் கல்வியை எப்படி நாடுகிறார்கள்? என்பதை விவாதத்துக்கு கொண்டு வந்து, அதற்கான தீர்வையும் சொல்லியிருக்கிறார். படத்தில் இவர் சொல்லியிருக்கும் கருத்தை எல்லோருக்கும் எளிதில் புரியும்படி திரைக்கதை அமைத்து இயக்கியிருப்பது படத்திற்கு பெரிய பலம். அதேபோல், கல்வி முறையில் கட்டாயம் மாற்றம் வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு படத்தை எடுத்திருக்கும் இந்த குழுவை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

    பிரேம்ஜி அமரனின் இசையில் பாடல்கள் எல்லாம் இளையராஜாவின் சாயல் இருக்கிறது. சுட்ட பழமாக இருந்தாலும் சுவையாக இருக்கிறது. பின்னணி இசையும் ரசிக்கும்படி இருக்கிறது. வெங்கடேஷின் ஒளிப்பதிவும் அருமையாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளில் எல்லாம் இவரது கேமரா சுழன்று படமாக்கியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘அச்சமின்றி’ ஒரு கல்வி புரட்சி.
    ரகுமான் நடிப்பில் கிரைம் திரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘துருவங்கள் பதினாறு’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    ரகுமான் கோயம்புத்தூரில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். காலையில் இவர் ஸ்டேஷனுக்கு வந்தவுடன் ரோட்டில் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட நிலையில் கிடப்பதாக தகவல் வருகிறது. அதேநேரத்தில் அந்த கொலை நடந்த ஏரியாவில் உள்ள ஒரு வீட்டில் ரத்தக்கறை இருப்பதாகவும், அந்த வீட்டில் உள்ள பெண்ணை காணவில்லை என்றும் இவருக்கு தகவல் வருகிறது.

    துப்பாக்கியால் சுடப்பட்ட நபர் யார்? அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்துகொண்டாரா? காணாமல் போனதாக கூறப்படும் பெண் யார்? அவள் உண்மையிலேயே காணாமல் போனாளா? என்பது குறித்து விசாரிக்க களமிறங்கும் ரகுமானிடம், அதே ஸ்டேஷனில் புதிதாக சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் இந்த சம்பவத்தை பற்றிய விவரங்களை ஆர்வத்துடன் சொல்கிறார். இந்த பிரச்சினையில் அவர் தனக்கு உறுதுணையாக இருப்பார் என்று எண்ணிய ரகுமான், அவரை தன்னுடன் அழைத்துக் கொண்டு, இந்த சம்பவங்களை பற்றிய விசாரணையில் இறங்குகிறார்.

    இறுதியில், இந்த சம்பவங்களுக்கு தொடர்புடையவர்களை இவர்கள் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதை பரபரப்பு, விறுவிறுப்பு கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

    ஒரு சாதாரண கதையை இவ்வளவு நேர்த்தியாகவும், விறுவிறுப்பாகவும் கொடுக்கமுடியுமா? என்று வியக்க வைத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் நரேன். கொலை விசாரணையை ஒவ்வொருவரின் கண்ணோட்டத்திலும் வைத்து பல்வேறு விதமான காட்சிகளை வைத்து படமாக்கியிருந்தாலும், பார்ப்பவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் அழகான திரைக்கதையை கையாண்டு சிறப்பாக இயக்கியிருக்கிறார்.

    அதேபோல், எடிட்டர் ஸ்ரீஜித் சாரங்கும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர். எந்த காட்சிக்கு இடையில் எந்த காட்சியை அமைத்தால் ரசிகர்கள் குழப்பமடைய மாட்டார்கள் என்பதை தனது கைநுனியில் வைத்துக்கொண்டு எடிட் செய்திருக்கிறார். அவருடைய எடிட்டிங் கதைக்கு எந்த இடைஞ்சலையும் கொடுத்துவிடாமல் அமைந்திருப்பது சிறப்பு.

    சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு கதையை நாம் நேரில் பார்ப்பதுபோன்ற அனுபவத்தை கொடுத்திருக்கிறது. அவ்வளவு நேர்த்தியாக இவரது ஒளிப்பதிவு அமைந்திருப்பது சிறப்பு. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாய் அமைந்திருக்கிறது. காட்சிகளுக்கேற்றவாறு வேறுபடுத்தி காட்டி, படம் முழுக்க புத்துணர்ச்சியோடு பயணிக்க உதவியிருக்கிறது.

    காவல்துறை அதிகாரியாக வரும் ரகுமான், படம் முழுக்க அலட்டல் இல்லாத, ஒரு போலீஸ் அதிகாரிக்குண்டான கம்பீரத்துடன் வலம் வந்திருக்கிறார். இவரது அனுபவ நடிப்பு எந்த இடத்திலும் அவரது கதாபாத்திரத்தை மிகைப்படுத்தாமல் சென்றிருக்கிறது. பல்வேறு தோற்றங்களில் வந்தாலும் ரசிக்க வைக்கிறார்.

    அதேபோல், டெல்லி கணேஷ், பிரகாஷ், சந்தோஷ் கிருஷ்ணா, கார்த்திகேயன், ப்ரவின், யாஷிகா, பாலா ஹாசன், வினோத் வர்மா என படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வலம் வருகின்றன. அனைவரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்து, படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.

    மொத்தத்தில் ‘துருவங்கள் பதினாறு’ படைக்கும் வரலாறு.

    ரஃபி, மீனாட்சி, மீரா நந்தன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நேர்முகம்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    சிறு வயதில் தாயை இழந்து சித்தி கொடுமைக்கு ஆளான ஆதித்யா மேனன், ஒரு மனோதத்துவ மருத்துவர். இவர் சொந்தமாக கிளினிக் ஒன்றை வைத்திருக்கிறார். இவருக்கு பெண்கள் என்றால் சுத்தமாக பிடிக்காது. அவரிடம் சிகிச்சைக்கு வரும் இளம் ஜோடிகளை இவர் பல நாள் அடித்து உதைத்து, அவர்களை பலவிதங்களில் பயமுறுத்தி பிரித்து அனுப்புகிறார்.

    இந்நிலையில், இவரிடம் நாயகன் ரஃபியும், அவரது காதலியான நாயகி மீனாட்சியும் மாட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் அந்த மருத்துவமனைக்கு வந்த பிறகு ஆதித்யா மேனன் அடைத்து வைத்துள்ள பல ஜோடிகளில் சிலர் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர்.

    இந்நிலையில், காணாமல் போன காதல் ஜோடிகளை பாண்டியராஜன் தலைமையிலான போலீஸ் குழு தேட ஆரம்பிக்கிறது. இறுதியில், காதல் ஜோடிகளை அடைத்து வைத்திருக்கும் ஆதித்யா மேனனை சட்டத்தின் முன் நிறுத்தியதா? அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜோடிகளை கொலை செய்த மர்ம நபர் யார்? என்பதை கண்டுபிடித்தார்களா? என்பதே மீதிக்கதை.

    அறிமுக நாயகன் ரஃபி-க்கு இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள். படத்தில் ரொம்பவும் சீரியசாய் வசனமெல்லாம் பேசியிருக்கிறார். இரண்டு நாயகிகளுடனும் டூயட் பாடுகிறார். ஆனால், நடிப்பதற்குதான் ரொம்பவும் திணறியிருக்கிறார். ‘கருப்பசாமி குத்தகைகாரர்’ படத்தில் குடும்ப பாங்கான பெண்ணாக வந்த மீனாட்சி, இந்த படத்தில் கிளமாரில் வந்து ரசிகர்களை அதிர்ச்சியாக்கியிருக்கிறார். ஆனால், அவரை அந்த கதாபாத்திரத்தில் ரசிக்கத்தான் முடியவில்லை. மற்றொரு நாயகியான மீரா நந்தன், பிளாஷ்பேக் காட்சியில் மட்டுமே வருகிறார். மற்றவர்களைவிட இவரது நடிப்பு ஓகேதான்.

    சைக்கோ வில்லனாக வரும் ஆதித்யா மேனன், படத்தில் ஏனோதானேவென்று நடித்திருக்கிறார். இவரை சரியாக வேலை வாங்கவில்லை என்றே தோன்றுகிறது. காமெடி போலீசாக வரும் பாண்டியராஜன், நெல்லை சிவா, சிஷர் மனோகர் ஆகியோரின் காமெடி பெரிதாக எடுபடவில்லை.

    ‘பார்வை ஒன்றே போதுமே’, ‘பேசாத கண்ணும் பேசுமே’ உள்ளிட்ட காதல் படங்களை கொடுத்த முரளி கிருஷ்ணா, இப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் டுவிஸ்டுக்கு மேல் டுவிஸ்டுகள் வைத்துக்கொண்டே போயிருக்கிறார். இன்றைய டிரெண்டுக்கு ஏற்றார்போல் கிரைம் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார். ஆனால், இயக்கத்திலும், நடிகர்கள் தேர்விலும், அவர்களை வேலை வாங்கும் விஷயத்திலும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.

    ஜெகதீஷ் விஷ்வத்தின் ஒளிப்பதிவு மிகப்பெரியதாக கைகொடுக்கவில்லை. முரளி கிருஷ்ணாவின் இசையும் படத்தில் சொல்லும்படியாக இல்லை.

    மொத்தத்தில் ‘நேர்முகம்’ கோணல்.
    விஷால், தமன்னா, வடிவேலு, சூரி நடிப்பில் வெளியாகியிருக்கும் 'கத்தி சண்டை' திரைப்படம் எப்படியிருக்கிறது? என்பதைக் கீழே பார்ப்போம்...
    படத்தின் ஆரம்பத்தில் கண்டெயினரில் வருகின்ற பணத்தை மடக்கி அதனை கவர்மெண்டிடம் ஒப்படைக்கிறார் போலீஸ் அதிகாரி ஜெகபதி பாபு. அதற்கு அடுத்த காட்சியில் நாயகன் விஷால் என்ட்ரி ஆகிறார். அப்பாவியாக வரும் நாயகன் விஷால், நாயகி தமன்னாவைக் காதலிக்க அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தி தனது தங்கையின் மாப்பிள்ளையாக தேர்வு செய்கிறார் ஜெகபதி பாபு.

    திடீரென ஜெகபதி பாபுவை ஒரு கும்பல் கடத்தி விடுகிறது. அந்த கும்பல் ஜெகபதி பாபுவிடம் 10 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். பணம் கொடுக்கவில்லையென்றால் உனது குடும்பத்திற்கு தான் பாதிப்பு என அந்த கும்பல் ஜெகபதி பாபுவை மிரட்ட, அவர் விஷாலுக்கு போன் செய்து வீட்டின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள டைல்ஸ்க்கு அடியில பணம் இருக்கு எடுத்து வா எனக் கூறுகிறார். ஜெகபதி பாபு கூறியதுபோல பணத்தை எடுத்து செல்லும் விஷால் பணத்தைக் கொடுக்காமல் வில்லன்களிடம் சண்டை போட்டு ஜெகபதி பாபுவைக் காப்பாற்றி விடுகிறார்.

    விஷால் திடீரென ஒருநாள் ஜெகபதி பாபுவிடம் நான் ஒரு சிபிஐ அதிகாரி அன்னைக்கு வந்த கண்டய்னர்ல 300 கோடி பணம் வந்தது. ஆனால் நீ கவர்மெண்டிடம் ஒப்படைத்தது வெறும் 50 கோடிதான் என்று தனது ஐடி கார்டைக் காட்டி மிரட்டுகிறார்.

    இதற்கிடையில் வில்லன் தருண் அரோரா, ஜெகபதி பாபு இருவரும் ஓரிடத்தில் சந்திக்கின்றனர். அப்போது தருண் அரோரா ஜெகபதி பாபுவிடம் நீ நினைக்கிற மாதிரி விஷால் சிபிஐ ஆபிசர் கிடையாது. அவன் என்கூட தான் ஜெயிலில் இருந்தான். கண்டெயினரில் வந்த பணத்தைக் கொள்ளையடிக்க நான் திட்டம் போட்டேன். ஆனால் அவன் என்னோட திட்டத்தை ஒட்டுக்கேட்டு எனக்கு முன்னால வந்து உன்ன மிரட்ட ஆரம்பிச்சிட்டான் என்று கூறுகிறார். இதற்குப்பின் ஜெகபதி பாபு, தருண் அரோரா இருவரும் விஷாலைத் தேடி வருகின்றனர்.

    அதே நேரத்தில் விஷால் யார்? என்னும் விவரம் நாயகி தமன்னாவிற்கு தெரிந்து விடுகிறது. இதனால் விஷாலிடம் தமன்னா சண்டை போட விஷால்-தமன்னா இருவருக்குமான காதலில் விரிசல் விழுகிறது.

    திடீரென நடைபெறும் சிறிய விபத்தில் நாயகன் விஷால் தனது நினைவுகளை இழந்து விடுகிறார்.விஷால் இழந்துவிட்ட பழைய நினைவுகளை மீட்க வரும் டாக்டராக வைகைப்புயல் வடிவேலு இரண்டாம் பாதியில் என்ட்ரி ஆகிறார்.
    இழந்த நினைவுகளை விஷால் மீண்டும் பெற்றாரா? உண்மையில் விஷால் யார்? தமன்னா-விஷால் இருவரும் ஜோடி சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.

    நாயகன் விஷால் நடனம்,காமெடி,சண்டைக்காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். நாயகி தமன்னா கவர்ச்சியான உடைகளில் வந்து ரசிகர்களின் கண்களை குளிர செய்கிறார். காதல் மற்றும் பாடல் காட்சிகளில் வந்து செல்கிறார். எனினும் சைக்கலாஜி மாணவியாக வரும் தமன்னாவின் நடிப்பு மனதில் பதியவில்லை. படத்தின் முதல்பாதி காட்சிகளில் சூரியும், இரண்டாம் பாதி காட்சிகளில் வடிவேலுவும் ரசிகர்களை சிரிக்க வைக்கின்றனர். குறிப்பாக வடிவேலு வரும் காட்சிகளில் ரசிகர்கள் கரகோஷம் எழுப்புகின்றனர்.

    வழக்கமாக தனது படங்களில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர் சுராஜ் இந்த படத்தையும் காமெடியை மையமாக வைத்தே எடுத்திருக்கிறார். படத்தில் வடிவேலு, சூரி என முன்னணி நகைச்சுவை நடிகர்களை சிறப்பாக கையாண்டிருக்கிறார். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். திரைக்கதையை சரியாக கையாளாததால் படத்தின் ஒருசில இடங்களில் சற்றே தொய்வு ஏற்படுகின்றது.
     
    ஹிப்ஹாப் ஆதியின் இசையில் 'நான் கொஞ்சம் கருப்பு தான்' பாடல் காட்சி ரசிக்க வைக்கின்றது. மற்ற பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசையில் ஹிப்ஹாப் ஆதி ஸ்கோர் செய்கிறார். பாடல், சண்டைக்காட்சிகளுக்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம்.நாதன் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.

    மொத்தத்தில் 'கத்தி சண்டை' காமெடி சண்டை.
    அமீர்கான் நடிப்பில் வெளிவந்துள்ள ‘தங்கல்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    அரியானாவில் உள்ள ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த அமீர்கானுக்கு மல்யுத்தத்தில் அதிக ஈடுபாடு உண்டு. மல்யுத்தத்தில் சாதித்து நாட்டுக்கு பல பதக்கங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது அவரது ஆசை. தேசிய அளவில் மல்யுத்தத்தில் சாதிக்கும் அமீர்கான் தன்னுடைய குடும்ப சூழ்நிலையால் அடுத்த நிலையை எட்ட முடியாமல் போகிறது.

    எனவே, திருமணத்திற்கு பிறகு தனக்கு பிறக்கப் போகும் மகனையாவது மல்யுத்தத்தில் சாதிக்க வைக்க வேண்டும் என்று எண்ணுகிறார். ஆனால், அவருக்கோ அடுத்தடுத்து பிறக்கும் நான்கு குழந்தைகளும் பெண் குழந்தைகளாகவே பிறக்கின்றன. பெண் குழந்தைகளால் மல்யுத்தத்தில் சாதிக்க முடியாது என்று நினைத்துக் கொண்டு தனது ஆசை நிறைவேறாத வருத்தத்தில் இருக்கிறார் அமீர்கான்.

    இந்நிலையில், ஒருநாள் அவரது குழந்தைகளில் மூத்த பெண்கள் இருவரும் ஒரு சிறிய தகராறில் இரண்டு பசங்களை புரட்டி எடுக்க, அதை பார்க்கும் அமீர்கான், பெண் குழந்தைகளாலும் சாதிக்க முடியும் என்று அந்த குழந்தைகள் இருவரையும் மல்யுத்த பயிற்சியில் களமிறக்குகிறார்.

    சிறு வயது முதலே இருவருக்கும் பயிற்சி கொடுக்கும் அமீர்கான், கடைசியில் தன்னால் சாதிக்க முடியாததை தனது பெண் பிள்ளைகளை வைத்து சாதித்தாரா? என்பதே மீதிக்கதை.

    இப்படம் மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகட்டின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அமீர்கான் அந்த கதாபாத்திரமாக நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட, வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். மூன்றும் பெண் குழந்தையாய் பிறந்தும், நான்காவதாக ஆண் குழந்தை பிறக்காதா? என்று ஏங்கும் இடங்களில் நம்மையும் ஏங்க வைத்துவிடுகிறார்.

    அதேபோல், மல்யுத்த பயிற்சிக்காக தன்னுடைய விளைநிலத்தை சீர்படுத்தும் இடங்களில் பரிவு ஏற்பட வைத்திருக்கிறார். அப்பாவாகவும், பயிற்சியாளராகவும் அசத்தியிருக்கிறார். மேலும், இந்த வயதிலும் தன்னை வருத்திக் கொண்டு உடல் எடையை கூட்டி, குறைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

    அமீரின் மனைவியாக வரும் சாக்க்ஷி தன்வர், நான்கு பெண்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நடிப்பிலும் ஓகே சொல்ல வைக்கிறார். அமீர்கானின் குழந்தைகளாக வரும் நான்கு பெண்களும் தங்கள் கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

    இப்படத்தில் அமீர்கானுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், அனைத்து கதாபாத்திரங்களும் சம பலம் கொடுத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் நிதேஷ் திவாரி. ஒரு சாதாரண கதையம்சமுள்ள படத்தில் செண்டிமென்ட், எதார்த்தமான காமெடி மற்றும் தந்தை-மகள் பாசப்பிணைப்பு என அனைத்தையும் சுவாரஸ்யமாகவும், அழகாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

    ப்ரீதம் சக்கரபோர்த்தியின் இசையில் பாடல்கள் சில ஏற்கெனவே ஹிட்டாகியுள்ள நிலையில், காட்சிகளுக்கேற்றவாறு பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். சேது ஸ்ரீராமின் ஒளிப்பதிவு மல்யுத்த காட்சிகளை எல்லாம் சிறப்பாக படமாக்கியிருக்கிறது. அதேநேரத்தில் கிராமத்தின் பசுமையையும், வறுமையையும் தெளிவாக கண்முன்னே கொண்டுவந்துள்ளது.

    மொத்தத்தில் ‘தங்கல்’ பதக்கம் வெல்லும்.
    சசிகுமார், கோவை சரளா, சங்கிலி முருகன், தான்யா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘பலே வெள்ளையத் தேவா’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    நாயகன் சசிகுமார் படித்து முடித்துவிட்டு அரசாங்க வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அம்மா ரோகிணி போஸ்ட் மாஸ்டராக பணி செய்து வருகிறார். இந்நிலையில், ரோகிணிக்கு மதுரை பக்கத்தில் உள்ள வயலூர் என்ற கிராமத்திற்கு பணி மாற்றம் வருகிறது.

    அந்த ஊரில் கேபிள் டிவி நடத்தி வரும் வளவன், எந்த வீட்டிலும் டிஷ் ஆன்டெனா மாட்டக்கூடாது என்றும் தனது கேபிள் டி.வி.யையே அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்றும் அராஜகம் செய்து வருகிறார். இதனால், அந்த ஊரில் யாரும் டிஷ் ஆன்டெனா வாங்குவதே கிடையாது.

    அதே ஊரில், கறிக்கடைக் காரர் பாலா சிங்கின் மகளான நாயகி தான்யா, மகளிர் சுயஉதவிக் குழுவில் பணியாற்றுகிறார். இவரை சசிகுமார் ஒருதலையாக காதலிக்கிறார். அதே ஊரில் வசிக்கும் கலகலப்பான தம்பதிகளான கோவை சரளாவையும், சங்கிலி முருகனையும் கைக்குள் போட்டுக் கொண்டு நாயகியை பின் தொடர்கிறார் சசிகுமார்.

    இந்நிலையில், அந்த ஊரில் சசிகுமார் வீட்டில் மட்டும் டிஷ் ஆண்டெனா இருப்பதை பார்க்கும் வளவன், ரோகிணியை அழைத்து மிரட்டுகிறார். இதனால், ரோகிணி தன்னுடைய வீட்டில் உள்ள டிஷ் ஆன்டெனாவை நீக்கி விடுகிறார். தாயை மிரட்டிய வளவனை, அடித்து உதைக்கிறார் சசிகுமார். இதற்கு பழிவாங்க திட்டமிடுகிறார் வளவன்.

    அதன்படி, போலீஸ் நிலையத்தில் சென்று தன்னுடைய ஆட்களில் ஒருவனின் கையை சசிகுமார் உடைத்து விட்டதாக புகார் கொடுக்கிறார் வளவன். அதன்படி, சசிகுமாரும் கைதாகிறார். போலீஸ் நிலையத்தில் சசிகுமார் மீது புகார் இருப்பதால், அவருக்கு அரசாங்க வேலை கிடைக்காத சூழ்நிலை உருவாகிறது.

    பின்னர், ஜெயிலில் இருந்து வெளியே வரும் சசிகுமார், விவசாயம் செய்யப்போவதாக தனது அம்மாவை சமாதானப்படுத்துகிறார். இதற்கிடையில், தன்னை ஜெயிலுக்கு அனுப்பிய வளவனை தனது பாணியில் எப்படி வீழ்த்துவது என்று திட்டம் போடுகிறார். இறுதியில், அவரை எப்படி பழிவாங்கினார்? நாயகனும், நாயகியும் இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை.

    சசிகுமார் தனக்கேற்ற கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். அதேபோல், இந்த படத்திலும் தனக்கு ஏற்றமாதிரி கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். முற்பாதியில், கோவை சரளா, சங்கிலி முருகன் தம்பதிகளிடம் சேர்ந்துகொண்டு நாயகியை விரட்டும் காட்சிகளில் அவருக்கே உரித்த ஸ்டைலில் நடித்திருக்கிறார். நடனத்தில் மட்டும் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் தேவை.

    நாயகி தான்யா, பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி. பார்க்க அழகாக இருக்கிறார். நடிப்பிலும் தனது தாத்தாவின் பெயரை காப்பாற்றியிருக்கிறார். கோவை சரளா - சங்கிலி முருகன் இருவரும் காமெடிக்காக இணைக்கப்பட்டிருந்தாலும், படத்தில் இவர்களுடைய காமெடி பெரிதாக எடுபடவில்லை. செல்பி காத்தாயி என்ற கதாபாத்திரத்தில் வரும் கோவை சரளா படம் முழுக்க செல்பி எடுப்பதுபோல் வரும் இவருடைய நடிப்பு ரொம்பவும் செயற்கையாக இருப்பதுபோல் தெரிகிறது.

    வளவன் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். ரோகிணி ரொம்பவும் தைரியமான பெண்ணாகவும், பொறுப்பான அம்மாவாகவும் வந்து தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். மற்றபடி, படத்தில் எந்த கதாபாத்திரங்களும் மனதில் பதியவில்லை.

    ஒரு கிராமத்து கதையில் காதல், காமெடி, பகை என அனைத்தும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் சோலை பிரகாஷ். ஆனால், படத்தில் காமெடி என்று எதிர்பார்த்து சென்றவர்களுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. நிறைய தமிழ் சினிமாக்களில் அரைத்த மாவையே இதிலும் சேர்த்து அரைத்திருக்கிறார். அதனால், படம் பெரிய அளவில் ரசிகர்கள் மனத்தில் ஒட்டவில்லை.

    ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு காட்சிகளை ரொம்பவும் கலர்புல்லாக படமாக்கியிருக்கிறது. இவருடைய ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் பக்கபலமாக இருக்கிறது. தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் பெரிதளவில் மனதில் பதியாவிட்டாலும், பின்னணி இசையில் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘பலே வெள்ளையத் தேவா’ பலவீனம்.
    எஸ்.வி.சேகர், விசு நடிப்பில் 34 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ‘மணல் கயிறு’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘மணல் கயிறு -2’ வெளிவந்திருக்கிறது. படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.
    முதல் பாகத்தில் திருமண புரோக்கராக வரும் விசுவிடம் எட்டு கண்டிஷன்கள் போட்டு, அவர் பார்த்து வைக்கும் சாந்தி கிருஷ்ணாவை திருமணம் செய்து கொள்கிறார் எஸ்.வி.சேகர். அதன்பிறகு, தனது எட்டு கண்டிஷன்களுக்கும் அவள் சற்றும் பொருத்தமானவள் இல்லை என்று தெரிந்ததும், வேறு வழியில்லாமல் அவளுடனேயே 34 வருடங்கள் வாழ்ந்து விடுகிறார்.

    35 வருடங்களுக்கு பிறகு மணல் கயிறு 2-ம் பாகத்தில் எஸ்.வி.சேகருக்கு திருமண வயதில் பெண் இருக்கிறாள். அவள்தான் பூர்ணா. திருமணத்தில் பூர்ணாவுக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. எந்நேரமும் பிசினஸிலேயே பிசியாக இருக்கிறாள். இந்நிலையில், பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்ய சம்மதிக்கும் பூர்ணா, தனது அப்பா போலவே தனக்கு வரும் மாப்பிள்ளை தன்னுடைய 8 கண்டிஷன்களுக்கும் ஒத்துப்போனவராக இருக்க வேண்டும் என்று கூறுகிறாள்.

    தனக்கு பெண் பார்த்த விசுவையே தனது பெண்ணுக்கும் மாப்பிள்ளை தேட அழைக்கிறார் எஸ்.வி.சேகர். அவர் பூர்ணாவின் எட்டு கண்டிஷன்களுக்கும் பொருத்தமானவர் அஸ்வின் சேகர்தான் என்று கூற இருவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு, அஸ்வின் சேகர் தன்னுடைய 8 கண்டிஷன்களுக்கும் எதிரானவர் என்பது பூர்ணாவுக்கு தெரிய வருகிறது.

    இதன்பிறகு இருவரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்தார்களா? இல்லையா? என்பதை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

    முதல்பாகத்தில் வந்த எஸ்.வி.சேகர், விசு, குரியகோஸ் ஆகியோர் அதே கதாபாத்திரங்களை இந்த பாகத்திலும் ஏற்று நடித்திருக்கிறார்கள். தங்களது அனுபவம் மிகுந்த நடிப்பை இதிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முதல் பாகத்தில் நடித்த சாந்தி கிருஷ்ணா வேடத்தில் ஜெயஸ்ரீ கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

    நாயகன் அஸ்வின் சேகர் ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட் என எல்லா ஏரியாவிலும் தனது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். பூர்ணாவுக்கு இப்படத்தில் பலமான கதாபாத்திரம். அவருடைய நடிப்பை பிரதிபலிக்கக்கூடிய கதாபாத்திரம் என்பதால் அவரும் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை கொடுத்து கைதட்டல் பெறுகிறார்.

    ஜோசியராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், அரசியல்வாதியாக வரும் நமோ நாராயணன், விளம்பர படம் இயக்குபவராக வரும் ஜெகன், அவரது உதவியாளராக வரும் ஜார்ஜ் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நாரதர் நாயுடுவின் உதவியாளராக வரும் சுவாமிநாதன், விசுவுக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்.

    முதல் பாதியில் எப்படி காமெடி, செண்டிமெண்ட், சமூக கருத்துக்கள் இருந்ததோ, அதையே இரண்டாம் பாகத்திலும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மதன்குமார். படத்தின் முதல் பாதி நாடகத்தன்மையுடன் இருந்தாலும் கலகலப்புடன் நகர்வதால் படம் பெரிதாக போரடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் பூர்ணாவின் திருமணம், அதன்பிறகு நடக்கும் பிரச்சினைகள், செண்டிமெண்ட் என கொஞ்சம் மெதுவாக நகரும் திரைக்கதை ரசிகர்களை சோர்வடைய வைக்கிறது. இருப்பினும், பாசிட்டிவான கிளைமாக்ஸ் ரசிகர்களை திருப்தியடைய வைக்கிறது.

    எஸ்.வி.சேகரின் திரைக்கதையோடு மதன்குமாரின் இயக்கமும் இணைந்து பயணித்திருப்பது படத்தை கொஞ்சம் சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறது.

    தரணின் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. குறிப்பாக, அனிருத் பாடியுள்ள ‘அடியே தாங்கமாட்டே’ பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. பின்னணி இசையும் ஓ.கே. ரகம்தான். ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக கைகொடுத்திருக்கிறது.

    மொத்தத்தல் ‘மணல் கயிறு 2’ அவிழ்க்க முடியாத முடிச்சு.
    ரிச்சர்டு, மனோ சித்ரா நடிப்பில் வெளிவந்துள்ள அந்தமான் படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்..
    அந்தமானில் இருந்து சென்னை வரும் விமானம் நடுவழியில் விபத்துக்குள்ளாகிறது. அப்போது, அதில் பயணம் செய்த ஒரு கர்ப்பிணிக்கு குழந்தை பிறக்கிறது. தாய் இறந்துவிட, குழந்தையை தலைவாசல் விஜய் தனது காப்பகத்தில் வைத்து வளர்த்து வருகிறார். அந்த குழந்தைதான் நாயகன் ரிச்சர்டு. வளர்ந்து பெரியவனாகும் ரிச்சர்டு, மண் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி படிப்பை படித்து வருகிறார்.

    ரிச்சர்டு தனது ஆராய்ச்சியின் மூலம் ஒரு மெஷின் ஒன்றை கண்டுபிடிக்கிறார். மண்ணின் தன்மை பற்றி அனைவரும் எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் அந்த மெஷினை உருவாக்கி வருகிறார். இதற்கிடையில், நாயகியை எதேச்சையாக சந்திக்கும் நாயகன் முதலில் அவளுடன் நட்பாக பழகிறார். பிறகு, அந்த நட்பு காதலாகிறது.

    இந்நிலையில், பல அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்துவிழுந்து நிறைய பேர் இறக்கிறார்கள். இடிந்து விழுந்த கட்டிடம் எழுப்பப்பட்ட இடத்தின் மண்ணை நாயகன் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அந்த இடத்தில் கட்டிடமே எழுப்ப முடியாத அளவில் மண்ணின் தன்மை இருப்பதை கண்டறிகிறார். இந்த விபத்துக்கு காரணமான வில்லனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி, கமிஷனரிடம் புகாராக கொடுக்கிறார்.

    கமிஷனரும் வில்லனை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார். அதன்படி, வில்லனும் கைதாகிறார். பின்னர், தனது பண பலத்தாலும், அதிகார பலத்தாலும் சிறையில் இருந்து வெளியே வரும் வில்லன், தனது ஆட்களை வைத்து தனக்கு எதிராக ஆதாரங்களை திரட்டிய ரிச்சர்ட்டை அடித்து துவம்சம் செய்கிறார்.

    ரிச்சர்டு இறந்துவிட்டதாக வில்லன் நினைத்துக் கொண்டிருக்கையில், அவனை காப்பாற்றி தலைவாசல் விஜய்யும், நாயகியும் அந்தமானுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்தமானுக்கு செல்லும் நாயகன், அங்கேயும் வில்லன் சட்டவிரோதமாக போதை மருந்து கடத்திக் கொண்டிருப்பதை கண்டுபிடிக்கிறார். இதையறியும் வில்லன், நாயகன் உயிரோடு இருப்பதை அறிந்து அவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார்.

    இதிலிருந்து நாயகன் தப்பித்தாரா? தனது காதலியுடன் மீண்டும் இணைந்தாரா? என்பதே மீதிக்கதை.

    நாயகன் ரிச்சர்டு கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் மற்றொரு படம். இப்படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆராய்ச்சி மாணவர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நாயகி மனோசித்ரா பார்க்க அழகாக இருக்கிறார். நடிப்பிலும் ஓகே சொல்ல வைக்கிறார்.

    தலைவாசல் விஜய், மனோபாலா, கிரேன் மனோகர், சாம்ஸ், போண்டா மணி உள்ளிட்டோருக்கு சரியான வாய்ப்புகள் கொடுக்கவில்லை. இருப்பினும், தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். இயக்குனர் ஆதவன் உண்மைக் கதையோடு சேர்ந்த சமூகத்திற்கு அத்தியாவசியமான கருத்தை படத்தின் மூலம் சொல்ல வந்திருக்கிறார். நடிகர்களை இன்னும் கொஞ்சம் அழகாக வேலை வாங்கியிருக்கலாம். திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம்.

    செல்வாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். செல்வதாசனின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    மொத்தத்தில் ‘அந்தமான்’ பார்க்கலாம்.
    புதுமுகங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘விருகம்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    நாயகன் சிவாவுக்கு நான்கு நண்பர்கள். நண்பர்கள் அனைவரும் ஒவ்வொரு வேலையில் இருக்கிறார்கள். இந்நிலையில், நண்பர்களில் ஒருவர் கதை எழுதுவதில் வல்லவர். அவருக்கு தினமும் இரவில் மர்ம நபர் ஒருவர் தனது நண்பர்களை கொலை செய்வது போல் கனவு வருகிறது.

    அப்படி இவர் கனவில் கொல்லப்படும் ஒவ்வொரு நண்பனும் மறுநாள் காணாமல் போகிறார்கள். இதனால் பயந்துபோன அவர், இதுபற்றி நாயகன் சிவாவிடம் கூறுகிறார். சிவாவும் தனது நண்பனின் கனவில் தோன்றிய இடத்திற்கு சென்று அங்கு ஏதாவது தடயம் இருக்கிறதா? என்று தேடிப் பார்க்கிறார்.

    ஆனால், அப்படி அவர்கள் கொலை செய்யப்பட்டதற்காக தடயங்கள் எதுவுமே அந்த இடத்தில் இருப்பதில்லை. உண்மையில் நடந்தது என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    தமிழ் சினிமாவுக்கு வழக்கமான பழிவாங்கும் கதையையே ‘விருகம்’ படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிவா. இவரே நாயகனாகவும் படத்தில் நடித்திருப்பதால், இவரிடமிருந்து நடிப்பாவது புதிதாக வரும் என்றால் அதுவும் இல்லை. நடிப்பை முகத்தில் கொண்டுவர ரொம்பவுமே சிரமப்பட்டிருக்கிறார். ஆக்ரோஷம், ரொமான்ஸ் என எதுவுமே இவரிடமிருந்து பெரிதாக வெளித் தெரியவில்லை.

    நாயகியாக ஜென்னிஸ், ஒரு சில காட்சிகள் வந்தாலும், மனதில் பதிய மறுக்கிறார். நடிப்பிலும் சுமார் ரகம்தான். நண்பர்களாக வருபவர்களும் புதுமுகங்கள் என்பதால் அவர்களிடமிருந்தும் பெரிதாக நடிப்பை எதிர்பார்க்கமுடியவில்லை. இயக்குனர் சிவா, திரில்லர் கதையில் இன்னும் ஏதாவது புதுமையை புகுத்தியிருக்கலாம். அதேபோல், கதாபாத்திரங்களையும், இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டு வேலை வாங்கி நடிக்க வைத்திருக்கலாம்.

    பிரபுவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் திரில்லிங் பிரதிபலிக்கவில்லை. எஸ்.ஏ.ராஜீன் ஒளிப்பதிவும் பெரிதாக எடுபடவில்லை.

    மொத்தத்தில் ‘விருகம்’ வெறுமை.
    2014-ல் ஹாலிவுட்டில் வெளிவந்த ‘3 days to kill’ சினிமா தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. அப்படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    அமெரிக்காவின் சிஐஏ அமைப்பு உல்ப் தலைமையில் இயங்கும் பயங்கரவாத கும்பலை கண்டுபிடிக்க 10 வருடங்களாக முயற்சி செய்து வருகிறது. உல்ப் எப்படி இருப்பான் என்பது சிஐஏ அமைப்புக்கு தெரியாது. இருப்பினும், அவனது கும்பலின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது சிஐஏ. அதன்படி, ஜெர்மனியில் உல்ப் கும்பல் அணு ஆயுதங்களை கைமாற்றப் போவதாக செய்திகள் கிடைக்கிறது.

    அவனையும் அவனது கும்பலையும் பிடிக்க கெவின் கான்ஸ்டர் தலைமையில் குழு களமிறங்குகிறது. ஜெர்மனியில் உல்ப் கும்பலைப் பிடிக்க முற்படும்போது, இருவருக்கும் மிகப்பெரிய சண்டை நடக்கிறது. இதில் உல்ப் கும்பல் அனைவரையும் தாக்கிவிட்டு, தப்பிக்க நினைக்கிறது. அப்போது கெவின் தனியொரு ஆளாக இருந்து அவர்களை சுட்டு வீழ்த்துகிறார்.

    இதில், ஒருவன் மட்டும் தப்பித்துச் செல்கிறான். அந்த நேரத்தில் கெவினின் உடல்நிலையும் மோசமாகி மயக்கமடைகிறார். அவரது உடல்நிலையை காரணம் காட்டி சிஐஏ அவரை பணியில் இருந்து விலக்குகிறது. மேலும், டாக்டர்களும் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாகி வருவதாகவும் கூடிய விரைவில் அவர் இறந்துவிடக்கூடும் என்று கூறுகிறார்கள்.

    இந்நிலையில், கெவின் தனது வாழ்நாளின் கடைசியில் தனது குடும்பத்துடன் சேர்ந்து வாழ முடிவு செய்கிறார். இதற்காக தன்னை விட்டு பிரிந்துசென்ற மனைவியையும், குழந்தையும் தேடி செல்கிறார். அவர்களை சந்தித்து இனிமேல் சிஐஏ வேலைக்கு செல்லமாட்டேன் என்ற வாக்குறுதியோடு சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

    இந்நிலையில், உல்ப்பை தேடிக் கண்டுபிடிக்க சிஐஏ அமைப்பால் நியமிக்கப்பட்ட பெண் ஒருத்தி, கெவினை சந்திக்கிறாள். அவள் கெவினை வற்புறுத்தி உல்ப்பை கண்டுபிடிக்க உதவி கோருகிறார். முதலில் இதற்கு கெவின் மறுக்கிறார். ஆனால், அவளோ கெவியின் வாழ்நாளை நீட்டிப்பதற்காக விலையுயர்ந்த மருந்து ஒன்றை தான் வைத்திருப்பதாகவும், அந்த மருந்து வேண்டுமானால், தனக்கு உதவி செய்யவேண்டும் என்று கூறுகிறாள்.

    தனது வாழ்நாளை நீட்டிக் கொள்வதற்காக அவளுக்கு உதவி செய்வதற்கு கெவின் முன்வருகிறார். ஆனால், இந்த விஷயம் தனது குடும்பத்துக்கு தெரியாமல் பார்த்துக்கொள்கிறார்.

    கடைசியில் கெவின் எப்படி தனது குடும்பத்தை சமாளித்து உல்ப்பை தேடும் பணியை செய்து முடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கெவின் காஸ்ட்னர் செண்டிமென்ட், ஆக்ஷன் என இரண்டிலும் தனது அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். தனது குடும்பத்திற்கு தெரியாமல் உல்ப்பை தேடும் காட்சிகளிலும், அதேநேரத்தில் தனது குடும்பத்திலிருந்து அழைப்பு வந்ததும், அந்த பணியை அப்படியே விட்டுவிட்டு ஓடி வருவதும் என ஆங்காங்கே ரசிக்க வைக்கிறார்.

    மனைவியாக வரும் கோனி நீல்சன், மிகவும் அழகாக வந்து போயிருக்கிறார். செண்டிமென்ட் காட்சிகளில் எல்லாம் ரசிக்க வைக்கிறார். இவர்களுக்கு குழந்தையாக நடித்திருப்பவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் சண்டைக் காட்சிகளுக்கு இணையாக செண்டிமென்ட் காட்சிகளை வைத்து ஓரளவுக்கு ரசிக்கும்படி படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஜோசப் மெக்கிண்டி நிக்கோல். சண்டை காட்சிகளை எதிர்பார்த்து சென்றவர்களுக்கு ஓரளவுக்கே திருப்தி ஏற்படும். மற்றபடி படம் ரசிக்கும்படி இருக்கிறது.

    தியரி ஆர்போகஸ்ட் ஒளிப்பதிவு படத்தில் நேர்த்தியாக இருக்கிறது. ரச்செலின் இசையும் மிரட்டல்.

    மொத்தத்தில் ‘த்ரி டேஸ் டு கில்’ ரசிக்கலாம்.
    விக்ரம் பிரபு - ஷாமிலி ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘வீரசிவாஜி’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    பாண்டிச்சேரியில் கால் டாக்சி டிரைவராக இருக்கிறார் விக்ரம் பிரபு. இவருக்கு சொந்தமென்று சொல்வதற்கு யாருமில்லை என்றாலும், வினோதினி இவரை தம்பி போல பார்த்துக் கொள்கிறார். இவரும் வினோதினியை அக்கா என்று சொல்லி அவருக்கு உறுதுணையாக இருக்கிறார்.

    வினோதினிக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில், ஒரு நாள் விபத்தில் நாயகியை சந்திக்கும் விக்ரம் பிரபு பார்த்தவுடனேயே காதல் வயப்படுகிறார். மோதலில் தொடங்கும் இவர்களின் சந்திப்பு நாளடைவில் காதலாக மாறுகிறது. அதைத் தொடர்ந்து யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோருடனும் இவருக்கு நட்பு ஏற்படுகிறது.

    இந்நிலையில், வினோதினியின் குழந்தைக்கு மூளையில் கட்டி வர, உடனே ஆபரேசனுக்கு ரூ.25 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. உடனே, விக்ரம் பிரபு தன்னிடம் இருக்கும் கால்டாக்சியை விற்று ரூ. 5 லட்சம் கொண்டு வருகிறார். ஆனால், அந்த பணம் ஆபரேசனுக்கு போதுமானதாக இல்லாததால் யோகி பாபு, ரோபோ சங்கரின் மூலம் குறைந்த பணத்துக்கு அதிக பணம் தருவதாக கூறும் ஜான் விஜய்யை சந்திக்கிறார்.

    அவரிடம் தன்னிடம் இருக்கும் ரூ.5 லட்சத்தையும் கொடுக்கிறார் விக்ரம் பிரபு. மறுநாள் பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறும் ஜான் விஜய், மறுநாள் யாருக்கும் தெரியாமல் ஓடி விடுகிறார். இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் விழிக்கும் விக்ரம் பிரபு, அவரை தேடிக் கண்டுபிடிக்க புறப்படுகிறார். ஒருகட்டத்தில் ஜான் விஜய்யை பிடித்து, தனக்கு சேரவேண்டிய மொத்த பணத்தையும் எடுத்துக் கொண்டு திரும்பி வரும் வேளையில், இவருடைய கார் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகிறது.

    இந்த விபத்தில் விக்ரம் பிரபுவின் தலையில் அடிப்பட்டு, அவருக்கு பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போகிறது. இறுதியில், விக்ரம் பிரபுவுக்கு பழைய நினைவுகள் திரும்பி வந்ததா? இவர் கொண்டு வந்த பணத்தை வைத்து குழந்தைக்கு ஆபரேஷன் நடந்ததா? என்பதே மீதிக்கதை.

    விக்ரம் பிரபு கால் டாக்சி டிரைவராக வந்தாலும், படம் முழுக்க கலர்புல் உடையுடனே வருகிறார். இவருக்கு ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் சிறப்பாக வருகிறது. ஆனால், ரொமான்ஸ் காட்சிகளில்தான் ரொம்பவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். அதேபோல், கலகலப்பான காட்சிகளிலும் நடிக்க திணறியிருக்கிறார்.

    குழந்தை நட்சத்திரமாக ரசித்த ஷாமிலி நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது கதாநாயகியாக மாறியிருக்கிறார். விஜய் ரசிகையாக வரும் இவருடைய நடிப்பு பரவாயில்லை. வழக்கமான ஹீரோயின்போல் காதல், டூயட்டுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.

    படத்திற்கு மிகப்பெரிய பலமே யோகி பாபு, ரோபோ ஷங்கர் கூட்டணியின் காமெடிதான். ரமேஷ் - சுரேஷ் என வரும் இவர்களின் காமெடி படம் முழுக்க வந்து ரசிகர்களை கலகலப்பூட்டியிருக்கிறது. ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் வழக்கம்போல் சத்தம் போட்டுக்கொண்டே வந்து மிரட்டுகிறார்கள்.

    படத்தின் முதல்பாதியை மிகவும் கலகலப்பாக கொண்டு போயிருக்கிறார் இயக்குனர் கணேஷ் விநாயக். முதல் பாதி எதை நோக்கி பயணிக்கிறது என்பது தெரியாமலே நகர்ந்தாலும், குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு சூடு பிடிக்கிறது. படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் இருக்கின்றன. கடைசியில் படத்தை எங்கு முடிப்பது என்று தெரியாமல் குழம்பி நின்றுள்ளார் இயக்குனர்.

    இமான் இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர். குறிப்பாக சொப்பன சுந்தரி பாடல் எழுந்து நின்று ஆட வைக்கிறது. தாறுமாறு பாடலும் ரசிக்கும் ரகம். பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. சுகுமார் ஒளிப்பதிவு காட்சிகளை தெளிவாக படமாக்கியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘வீர சிவாஜி’ வீரம் குறைவு
    மலையாளத்தில் ‘ஆடுபுலியாட்டம்’ என்ற பெயரில் ஜெயராம் - ரம்யா கிருஷ்ணன் நடித்த படமே தமிழில் ‘செண்பக கோட்டை’ என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது. படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    காட்டுவழியாக செல்லும் அரசர் வேடர் குலத்தை சேர்ந்த பெண்ணை பார்த்தவுடன் காதல்வயப்படுகிறார். அந்த பெண்ணின் தந்தையிடம் பேசி அவளை திருமணமும் செய்துகொள்கிறார். பின்னர் அவளுக்காக அந்த காட்டுக்குள்ளேயே செண்பக கோட்டை ஒன்றை கட்டிக் கொடுத்து, அவளை அதற்கு அரசியாக முடிசூட்டி விட்டு தனது நாட்டுக்கு திரும்புகிறார்.

    இவர் சென்ற நேரம், எதிரிகள் இவரது நாட்டை சூழ்ந்துவிடுகின்றனர். இவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படுகின்றன சூழ்நிலை உருவாகிறது. இதனால், உயிரை காப்பாற்றிக் கொள்ள செண்பக கோட்டைக்கு வருகிறார். செண்பக கோட்டையில் அரசியாக இருக்கும் வேடர் குலத்து பெண், அரசனின் உயிரை காப்பாற்றுவதற்காக தனது உயிரை மாய்த்துக் கொண்டு, பேயாக மாறி அந்த கோட்டையையும் மன்னனையும் காப்பாற்றி வருகிறாள்.

    பின்னர், பல நூறு வருடங்களுக்கு பிறகு கதை நகர்கிறது. செண்பகக் கோட்டையில் வசித்து வந்த அனைவரும் இறந்துபோக அந்த கோட்டையே பாழடைந்து போகிறது. ஆனால், அந்த பெண்ணின் ஆவி மட்டும் அந்த கோட்டையை சுற்றி வருகிறது. இந்நிலையில், அந்த ஆவியை சாந்தப்படுத்துவதற்காக கோட்டையின் வாயிலில் காளி கோவில் ஒன்றை நிறுவி, அந்த கோவிலில் பூஜை செய்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன்.

    கணவனை இழந்த ரம்யா கிருஷ்ணனுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில், செண்பக கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களை அபகரிக்க நினைக்கும் நரேன், அதை செய்ய முடியாததால் ஜெயராம் உதவியை நாடுகிறார். ஜெயராமும் பணத்துக்காக அதை செய்ய முடிவெடுக்கிறார்.

    அதற்காக செண்பகக் கோட்டைக்கு செல்லும் ஜெயராம், ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவளது குழந்தையிடம் நல்ல விதமாக பழகி அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகிறார். ஒருகட்டத்தில் ரம்யா கிருஷ்ணனையும் திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு செண்பகக் கோட்டைக்கு சொந்தமான நிலங்களின் பத்திரங்களை எல்லாம் தன் பெயரில் மாற்றிக் கொண்டு இவர்களை விட்டு செல்கிறார்.

    ஜெயராம் சென்றதும் ரம்யா கிருஷ்ணனின் மகள் இறந்து போகிறாள். ரம்யா கிருஷ்ணனும் என்ன ஆனாள் என்று தெரியவில்லை. சில ஆண்டுகள் கழிந்த நிலையில், ஜெயராமுக்கு திருமணமாகி குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில், ஒரு ஆவி இவர்களது குடும்பத்தை தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறது. இதனால், சாமியாரான ஓம் பூரியை நாடுகிறார் ஜெயராம். அவர் மூலமாக, ரம்யா கிருஷ்ணன் மகளுடைய ஆவிதான் இவரது குடும்பத்தை பழிவாங்க துடிக்கிறது என்பதை அறிந்து கொள்கிறார்.

    இறுதியில், அந்த ஆவியிடமிருந்து ஜெயராம் தனது குடும்பத்தை காப்பாற்றினாரா? அல்லது ஆவி இவரது குடும்பத்தை பழி வாங்கியதா? என்பதே மீதிக்கதை.

    ஜெயராம் இரு விதமான கெட்டப்புகளில் வந்து அசத்தியிருக்கிறார். ரம்யா கிருஷ்ணனுடன் வரும்போது இளமையான தோற்றத்திலும், அதன்பிறகு, ஒரு குழந்தைக்கு அப்பாவான பிறகு தாடி லுக்கிலும் பார்க்க ரொம்பவும் அழகாகவே இருக்கிறார். தனக்கே உரித்த தனி பாணியில் சிறப்பாகவும் நடித்திருக்கிறார்.

    ரம்யா கிருஷ்ணனுக்கு அம்மன் வேடமேற்று நடிப்பதற்கு சொல்லித்தர தேவையில்லை. அந்த கதாபாத்திரத்திற்கு அப்படியே அச்சு அசலாக பொருந்தியிருக்கிறார். செண்டிமென்ட் காட்சிகளில் வழக்கம்போல் தனது யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜெயராமின் குழந்தையாக நடித்துள்ள சிறுமியும், ரம்யா கிருஷ்ணனின் குழந்தையாக வரும் சிறுமியும் குறை சொல்லமுடியாத அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

    ‘ஆடுகளம்’ நரேன் ஒரேயொரு காட்சியில் வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார். சம்பத்துக்கும் பெரிய அளவில் காட்சிகள் இல்லாவிட்டாலும், அழகான கதாபாத்திரம், அதை உணர்ந்து செய்திருக்கிறார். சாமியாராக வரும் ஓம் பூரி ஆர்ப்பாட்டமில்லாத, அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார்.

    இப்படத்தில் மூன்று விதமான கதைகளை சொல்லி, அதை ஒவ்வொன்றுக்கும் தொடர்புபடுத்தியிருக்கிறார் இயக்குனர் தாமரைக்குளம் கண்ணன். படத்தின் முதல் பாதியிலேயே கதையை சொல்லி முடித்துவிடுகிறார். அதன்பிறகு, படத்தில் என்ன சொல்லப் போகிறார் என்று பார்த்தால், ரம்யா கிருஷ்ணன் - ஜெயராம் காதல், அதைத் தொடர்ந்து துரோகம், திரில் என படத்தை கொண்டு போய் ரசிக்க வைத்திருக்கிறார்.

    ரத்தீஷ் வேகாவின் இசையில் ரம்யா கிருஷ்ணன் ஆடிப் பாடும் சாமி பாடல் ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ஜித்து தாமோதரின் ஒளிப்பதிவு காட்சிகளை ரொம்பவும் அழகாக படமாக்கியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘செண்பகக் கோட்டை’ சுற்றி பார்க்கலாம்.

    ×