என் மலர்tooltip icon

    தரவரிசை

    விஜய்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பரதன் இயக்கி வெளிவந்துள்ள ‘பைரவா’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    ஒய்.ஜி.மகேந்திரன் மேனேஜராக பணிபுரியும் தனியார் வங்கியில், வராத கடன் தொகையை வசூலித்து கொடுப்பவராக பணிபுரிந்து வருபவர்தான் விஜய். இவருடன் சதீஷும் சேர்ந்து அதே பணியை செய்து வருகிறார். ஒய்.ஜி.மகேந்திரன் சிபாரிசின் பேரில் வங்கியில் வாங்கிய ரூ.64 லட்சம் பணத்தை மைம் கோபி அந்த பணத்தை திருப்புக்கொடுக்க முடியாது என்று அவரை ஏமாற்றி விடுகிறார்.

    இதனால் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு பெரிய சிக்கல் ஏற்படுகிறது. அவரது மகளின் திருமணமும் நடக்கவுள்ளதால், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண விஜய்யின் உதவியை நாடுகிறார். விஜய்யும் மைம் கோபியை அடித்து துவம்சம் செய்து ஒய்.ஜி.மகேந்திரனுக்கு வரவேண்டிய பணத்தை மீட்டு கொடுக்கிறார்.

    அதன்பின்னர், ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் திருமணம் நடக்கிறது. அந்த திருமணத்திற்கு மணப்பெண்ணின் தோழியான கீர்த்தி சுரேஷ் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு வருகிறாள். கீர்த்தி சுரேஷை பார்த்ததும் அவள்மீது காதல் வயப்படுகிறார் விஜய். பின்னர், அவளையே சுற்றி சுற்றி வருகிறார்.

    திருமணம் முடிந்து, கீர்த்தி சுரேஷ் ஊருக்கு திரும்பும் வேளையில், பஸ் நிலையத்தில் வைத்து தனது காதலை வெளிப்படுத்த நினைக்கிறார் விஜய். ஆனால், அப்போது கீர்த்தி சுரேஷை ரவுடி கும்பல் ஒன்று தீர்த்துக்கட்ட வருகிறது. பின்னர், ஒரு டெலிபோன் அழைப்பு வந்ததும், அந்த ரவுடி கும்பல் கீர்த்தி சுரேஷை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டு சென்றுவிடுகிறது.

    இதைப் பார்க்கும் விஜய், அந்த ரவுடி கும்பலுக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் என்ன சம்பந்தம் என்று அவளிடமே கேட்கிறார். அப்போது, கீர்த்தி சுரேஷ் தான் திருநெல்வேலியில் மருத்துவ கல்லூரியில் படித்து வருவதாகவும், தன்னுடன் படித்து வந்த சக தோழியான அபர்ணா வினோத்தை கல்லூரியின் முதல்வரான ஜெகபதி பாபு ஆட்களை வைத்து கொலை செய்துவிட்டு, அவள்மீது தவறான பழியை சுமத்தி விட்டதாகவும் கூறுகிறாள். மேலும், இந்த கொலை சம்பந்தமாக ஜெகபதி பாபு மீது தான் வழக்கு தொடர்ந்திருப்பதால் எனக்கும், என்னுடைய குடும்பத்துக்கும் ஜெகபதி பாபுவால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும் கூறுகிறாள்.

    இதைக்கேட்ட விஜய், ஜெகபதி பாபுவின் ஆட்டத்துக்கு முடிவு கட்டும் முயற்சியில் களமிறங்குகிறார். இதில் விஜய் வெற்றி பெற்றாரா? நாயகியிடம் தனது காதலை வெளிப்படுத்தி ஒன்று சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

    விஜய்யின் படத்தில் அறிமுகமாகும் காட்சியே மிகப்பெரிய மாஸாக உள்ளது. முதல் ஆக்ஷன் காட்சியில் மைம் கோபியின் ஆட்களை கிரிக்கெட் விளையாடியே துவம்சம் செய்யும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்களின் ஆரவாரம் காதை பிளக்கிறது. கீர்த்தி சுரேஷிடம் காதல் செய்யும் காட்சிகளும், அவருடன் லூட்டி அடிக்கும் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது.

    ஜெகபதி பாபுவுக்கு விஜய் தான் யார் என்பதை அறிமுகம் செய்யும் காட்சியிலிருந்து, ஜெகபதி பாபு கொடுக்கும் ஒவ்வொரு இடையூறுகளையும் தகர்ந்தெறிந்து செல்லும் காட்சிகளில் எல்லாம் விஜய் மாஸ் காட்டியிருக்கிறார். இளமையான தோற்றம், ஸ்டைலான நடிப்பு, பவர்புல் வசனங்கள், அதிரடியான சண்டைக் காட்சிகள் என விஜய் தனியொரு ஆளாக படத்தை தாங்கிச் சென்றிருக்கிறார்.

    கீர்த்தி சுரேஷ் படம் முழுக்க அழகு பதுமையாக வலம் வந்திருக்கிறார். புடவையில் பார்க்கும்போது வழக்கம்போல கொள்ளை அழகு. விஜய்க்கு ஏற்ற ஜோடியாக இவர் அமைந்திருக்கிறார். ‘பாப்பா பாப்பா’ பாடலில் விஜய்யுக்கு இணையாக ஆட்டம் போட்டு கலக்கியிருக்கிறார். அந்த பாடலில் இவருடைய முக பாவணைகள் எல்லாம் மிகவும் ரசிக்க வைக்கிறது.

    வில்லன்களாக வரும் ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்கள். ஜெகபதி பாபுவுக்கு இப்படத்தில் கதையை தாங்கிச் செல்லும் கனமான கதாபாத்திரம். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். டேனியல் பாலாஜியும் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    காமெடிக்கு சதீஷ், தம்பி ராமையா, ஸ்ரீமன், நான் கடவுள் ராஜேந்திரன் என நகைச்சுவை நட்சத்திர பட்டாளம் இருந்தாலும், படத்தில் பெரிதாக காமெடி எடுபடவில்லை. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அதேபோல், ஒய்.ஜி.மகேந்திரனுக்கும் இன்னும் கொஞ்சம் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். அபர்ணா வினோத், சிஜா ரோஸ் ஒருசில காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைக்கிறார்.

    இயக்குனர் பரதன், நாட்டுக்கு முக்கியமானது மருத்துவம். அந்த மருத்துவத்தை சொல்லிக் கொடுக்கக்கூடிய கல்வி நிறுவனங்கள் தகுதியான நபர்களிடம் இருக்கிறதா? என்பதை சுட்டிக்காட்டும்படியான படமாக இதை கொடுத்திருக்கிறார். விஜய் என்ற மாஸ் ஹீரோவை வைத்துக்கொண்டு தன்னால் என்ன கொடுக்கமுடியுமோ? அந்தளவுக்கு கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். இவருடைய வசனங்கள்தான் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. பஞ்ச் டயலாக்குகள் மட்டுமில்லாமல், சாதாரண வசனங்களிலும் ஒரு பஞ்ச் இருப்பது சிறப்பு. விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் திருப்தியை கொடுக்கும் என்று நம்பலாம். படத்திற்கு தேவையில்லாத காட்சிகள் ஆங்காங்கே இருப்பது படத்தின் வேகத்திற்கு தடை போடுகிறது. அந்த காட்சிகளை கொஞ்சம் நீக்கிவிட்டு பார்த்தால் படம் விறுவிறுப்பாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.

    சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதை காட்சிப்படுத்திய விதமும் அருமை. ஆனால், சில பாடல்கள் சரியான இடங்களில் அமையாதது சிறிது சலிப்பை ஏற்படுத்துகிறது. இதை சரிக்கட்டும் வகையில் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கியிருக்கிறது.

    அனல் அரசுவின் சண்டைக் காட்சிகள் எல்லாம் புத்தம் புதிதாகவும், ரசிக்கும்படியாகவும் அமைந்திருக்கிறது. சுகுமாரின் ஒளிப்பதிவும், சத்யாவின் ஆடை வடிவமைப்பும் கலர்புல்லாக இருக்கிறது. சுகுமாரின் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகளில் தனித்துவம் காட்டியிருக்கிறது. பிரவின் கே.எல். எடிட்டிங் படத்திற்கு இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்.  

    மொத்தத்தில் ‘பைரவா’ ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.
    ஜுராசிக் அட்டாக் என்ற பெயரில் ஹாலிவுட்டில் வெளிவந்த படம் தமிழிலும் டப்பாகி வெளியாகியுள்ளது. இப்படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்..
    அமேசான் காடுகளை சுற்றிப் பார்க்க நினைக்கும் தந்தை-மகன் இருவரும் ஒரு தனி விமானத்தில் பயணிக்கின்றனர். அமேசான் காடுகளின் மீது பயணிக்கும்போது, இவர்களுடைய விமானம் பழுதடைந்து காட்டுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகிறது. இந்த விபத்தில் இருவரும் சிறு காயத்துடன் தப்பித்தாலும், அங்கிருக்கும் டைனோசர், தந்தையை கொடூரமாக கொன்று விடுகிறது. மகன் மட்டும் தப்பித்து காட்டுக்குள் செல்கிறான்.

    அதேநேரத்தில் தீவிரவாத கும்பல் ஒன்று அமெரிக்காவின் பெண் அணு விஞ்ஞானியை கடத்திக் கொண்டுபோய் வைத்துவிடுகிறார்கள். அவளை மீட்பதற்காக அமெரிக்க ராணுவத்தின் 5 பேர் கொண்ட குழு காட்டுக்குள் பயணமாக தொடங்குகிறது. தீவிரவாதிகள் இருக்கும் காட்டுக்குள் விமானம் செல்ல முடியாது. மாறாக, ஆற்று வழிப் பாதையிலோ அல்லது நடந்துதான் செல்லவேண்டும்.

    எனவே, விமானம் மேலே பறந்து கொண்டிருக்கும்போதே பாராசூட் உதவியுடன் இவர்கள் கீழே குதிக்கிறார்கள். இவர்களும் டைனோசர் இருக்கும் காட்டுப் பகுதியிலேயே குதிக்கிறார்கள். அங்கிருக்கும் டைனோசரிடமிருந்து இவர்கள் தப்பித்து, அணு விஞ்ஞானியை காப்பாற்றினார்கள்? காட்டுக்குள் தப்பி ஓடிய மகன் என்ன ஆனான்? என்பதே மீதிக்கதை.

    ஜுராசிக் பார்க் பட வரிசையை தொடர்ந்து பார்த்தவர்களுக்கு இப்படம் மிகப்பெரிய ஏமாற்றத்தைத்தான் தரும். இப்படத்தில் கிராபிக்சில் உருவாக்கிய டைனோசர்கள் எல்லாம் ரொம்பவும் செயற்கையாக தெரிகிறது. படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளும் ரொம்பவும் செயற்கையாகவே தோன்றுகிறது.

    அதேபோல், படத்தில் டைனோசர் வரும் காட்சிகளும் மிகவும் குறைவே. அவற்றை வீரர்கள் சுடும்போது அவைகள் செத்து விழும் காட்சிகள் எல்லாம் நமக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கின்றன. ஜுராசிக் என்ற பெயரை வைத்துக் கொண்டு எப்படிவேண்டுமானாலும் படத்தை எடுத்தால் படத்தை பார்க்க வருவார்கள் என்று இயக்குனர் நினைத்திருப்பார்போல. டைனோசரின் தாக்குதலை கண்டு வரலாம் என்று நினைக்கும் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றம்தான்.

    மொத்தத்தில் ‘ஜுராசிக் அட்டாக்’ தாக்கம் இல்லை. 
    புதுமுகங்கள் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘உன்னை தொட்டு கொள்ள வா’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
    ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் நாயகி அஞ்சனாவுக்கு தன்னை ஒரு மர்ம உருவம் பின்தொடர்வது போலவே உணர்வு அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் பயந்து நடுங்கும் அஞ்சனாவை அவரது தோழிகள் கிராமத்தில் இருக்கும் அவளது பாட்டியின் வீட்டுக்கு கொண்டு போய் சேர்க்கிறார்கள்.

    நாயகி அஞ்சனாவின் தாத்தா லிவிங்ஸ்டன் மிகப்பெரிய ஜமீன்தார். அவர் இறந்துவிட்ட நிலையில் அவளது பாட்டி பல்லவி மட்டும் அந்த கிராமத்து வீட்டில் வசித்து வருகிறார்.

    பாட்டியின் வீட்டில் நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணி இருக்கும் அஞ்சனாவுக்கு அங்கேயும் மர்ம உருவத்தால் தொடர்ந்து அச்சுறுத்தல் வருகிறது. இதனால், அங்கேயும் நிம்மதியில்லாமல் தவிக்கிறாள் நாயகி. இதற்கிடையில், அந்த ஊருக்கு வரும் நாயகன் சிலம்பரசனும், அஞ்சனாவும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

    இந்நிலையில், தன்னை அச்சுறுத்தும் மர்ம உருவம் யார் என்று தெரியாமல் குழம்பி போகிறார் நாயகி. ஒருகட்டத்தில் தனது தாத்தா லிவிங்ஸ்டன் செய்த தவறால்தான் இந்த மர்ம உருவம் தன்னை துன்புறுத்துவதை கண்டறிகிறாள். அவளுடைய தாத்தா செய்த அந்த தவறு என்ன? அதனால் பாதிக்கப்பட்டது யார்? என்பதை சொல்வதே மீதிக்கதை.

    படத்தின் கதை முழுக்க நாயகி அஞ்சனாவே நிறைந்திருக்கிறார். அதனால், தனது கதாபாத்திரத்தின் வலு தெரிந்து ஓரளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கலாம். நிறைய காட்சிகளில் இவர் பயப்படுவதுகூட ரொம்பவும் செயற்கையாக இருப்பது படத்தை ரசிக்க தோன்றவில்லை.

    நாயகன் சிலம்பரசனுக்கு படத்தில் பெரிதாக வேலையில்லை. இருப்பினும், சில காட்சிகளே வந்தாலும் சிறப்பாக செய்திருக்கிறார். பாட்டியாக வரும் பல்லவி, தாத்தாவாக வரும் லிவிங்ஸ்டன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை அழகாக பதிவு செய்திருக்கிறார்கள். லிவிங்ஸ்டனிடன் உதவியாளராக வரும் காதல் தண்டபாணியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    மற்றபடி, படத்தில் உள்ள மற்ற கதாபாத்திரங்கள் எதுவும் மனதில் பதியவில்லை. இயக்குனர் ஆண்டாள் ரமேஷ் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே எடுத்த படம் இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. அதற்குள் நிறைய திகில் படங்கள் வெளியாகி, ரசிகர்களை பீதியாக்கியுள்ள நிலையில், இந்த படம் பெரிதாக பீதியை ரசிகர்களுக்கு கொடுக்கவில்லை. இருப்பினும், இன்னமும் கிராமங்களில் வழிபட்டு வரும் பெண் தெய்வங்கள் உருவான கதையை இந்த படத்தில் சொல்லியிருப்பதற்காக இயக்குனரை பாராட்டலாம்.

    வசந்தமணியின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. பின்னணி இசையும் மிரட்டவில்லை. சாய் நடராஜின் ஒளிப்பதிவு இன்னும் கொஞ்சம் வலு சேர்த்திருக்கலாம். கிராபிக்ஸ் காட்சிகளும் பெரிதாக இல்லை.

    மொத்தத்தில் ‘உன்னைத் தொட்டுக் கொள்ள வா’ தொட முடியவில்லை.
    புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் ‘பெய்யென பெய்யும் குருதி’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சியின் செயற்குழு கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூடுகிறது. இந்த கூட்டத்திற்கு வரும் முக்கிய தலைவர்களில் 40 பேரை மட்டும் மர்ம நபர்கள் சிலர், கொன்று அவர்களுடைய இதயத்தை எடுத்து சென்று விடுகிறார்கள்.

    இந்த சம்பவம் தமிழகம் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. இதுகுறித்த விசாரணையில் இறங்கும் போலீஸ் குழு, சம்பவ இடத்தில் இருந்த நாயகர்களான ஜனா, சீனிவாசன், ஹரிஸ், கணேசன், ராபின் ஆகியோரை பிடித்து வைத்து விசாரிக்கிறது. அந்த விசாரணையில், இவர்கள் ஐந்து பேரும்தான் அந்த கொலையில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது.

    அப்பாவிகளான இவர்களுக்கு பணத்தாசை காட்டி, இவர்களை கொலை செய்ய வைத்தது வேறொரு நபர் என்றும் தெரிய வருகிறது. இவர்களை கொலை செய்ய தூண்டிய அந்த மர்ம நபர் யார்? எதற்காக அந்த கட்சியின் முக்கிய பிரமுகர்களை அவர் கொலை செய்ய வைத்தார்? என்பதே மீதிக்கதை.

    நாயகர்களான ஜனா, சீனிவாசன், ஹரிஸ், கணேசன், ராபின் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஒவ்வொருவருடைய கதாபாத்திரத்தையும் வெவ்வேறு கோணத்தில் காட்டியிருக்கிறார் இயக்குனர். அந்த கதாபாத்திரங்களை உணர்ந்து இவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

    இயக்குனர் சுதாகர் சண்முகம் இன்றைய சினிமா உலகில் பெண்களே இல்லாத ஒரு படத்தை தைரியமாக இயக்கியிருக்கிறார். கதையாக இப்படத்தை கேட்கும்போது சுவாரஸ்யமாகவும், திரில்லாகவும் இருக்கிறது. ஆனால், அதை காட்சிப்படுத்திய விதத்தில் சுவாரஸ்யத்தையும், திரில்லையும் கொடுக்க தவறிவிட்டார். கொலை, கொலைக்கான விசாரணை என குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை சுற்றியே கதை நகர்வதால் படத்தை தொடர்ந்து ரசிக்க முடியவில்லை.

    தமிழ் சினிமாவுக்கு வழக்கமான பழிவாங்கும் கதை என்றாலும், அதை மாறுபட்ட கோணத்தில் சொன்னவிதம் அருமை.

    சீனிவாசன், கணேஷ் பாபு ஆகியோரின் ஒளிப்பதிவு படத்திற்கு சிறிது பலம் கூட்டியிருக்கிறது. ஜோஸ் பிராங்களின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசையிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    மொத்தத்தில் ‘பெய்யென பெய்யும் குருதி’ புதிய முயற்சி.
    கிறிஸ் பிராட், ஜெனிஃபர் லாரன்ஸ் நடிப்பில் வெளியாகியிருக்கும் 'பாசஞ்சர்ஸ்' திரைப்படம் எப்படியிருக்கிறது? என்பதைக் கீழே பார்ப்போம்...
    ஹோம்ஸ்டெட் என்ற நிறுவனம் 'தி குளோனி வேர்ல்ட் ஆப் ஹோம்ஸ்டெட்' என்ற உலகத்தை உருவாக்குகின்றனர். இந்த உலகத்திற்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம் என ஹோம்ஸ்டெட் நிறுவனம் கூறுகிறது. இதனைத் தொடர்ந்து கதாநாயகன் கிறிஸ் பிராட், கதாநாயகி ஜெனிஃபர் லாரன்ஸ் உட்பட கம்பெனியின் 258 ஊழியர்களுடன், 5000 பயணிகள் விண்கலமொன்றில் அந்த உலகத்துக்கு பயணம் செய்கின்றனர்.  

    அந்த உலகத்துக்கு பயணம் செய்ய 120 ஆண்டுகள் ஆகுமென்பதால் விண்கலத்தில் பயணம் செய்யும் அனைவரும், விண்வெளித் தூக்கத்துக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள். (இந்த விண்வெளித் தூக்கத்தால் 120 ஆண்டுகள் பயணம் செய்தாலும் தூங்கி அடுத்த நாள் எழுந்தது போல இருக்கும்). பயணத்தின் இடையில் கதாநாயகன் கிறிஸ் பிராட்டுக்கு திடீரென விழிப்பு வந்துவிடுகிறது.

    விண்கலத்தில் இருக்கும் கணினி நாம் செல்ல வேண்டிய இடம் வந்துவிட்டது. பயணத்துக்கான ஆயத்தங்களை செய்து கொள்ளுங்கள் எனக் கூறுகிறது. இதனை நம்பி கிறிஸ் பிராட்டும் தனது வேலைகளைத் தொடர்கிறார். ஆனால் விண்கலத்தில் பயணிக்கும் மற்ற யாரும் தங்களது உறக்கத்தில் இருந்து விழிக்கவில்லை. இதனால் கிறிஸ் பிராட்டுக்கு சந்தேகம் வந்து இதற்கான காரணத்தை ஆராய்கிறார். அப்போது 90 ஆண்டுகளுக்கு முன்பே தான் எழுந்துவிட்ட உண்மை அவருக்குத் தெரிகிறது.

    90 ஆண்டுகள் தனியாக என்ன செய்வது எனத் தெரியாமல் கிறிஸ் பிராட் தவிக்கிறார். தனது வாழ்க்கை வீணாகி விட்டதே என சோகமாகிறார். தனிமையில் தவிக்கும்போது சில நேரங்களில் கதாநாயகி ஜெனிபர் லோபஸை எழுப்பலாமா? என யோசிக்கிறார். இப்படியே ஒரு வருடம் செல்கிறது. தனிமையில் தவிக்கும் கிறிஸ் பிராட் ஒரு கட்டத்தில் துணிந்து கதாநாயகி ஜெனிபர் லோபஸை எழுப்பி விடுகிறார். இதனைத் தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்கின்றனர். இதற்கிடையில் ஜெனிபர் லோபஸ்-கிறிஸ் பிராட் இடையே காதல் மலர்கிறது.

    இறுதியில் விண்கலத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் அந்த உலகத்துக்கு சென்றனரா? தன்னை உறக்கத்தில் இருந்து எழுப்பியது யார் என்ற உண்மை நாயகி ஜெனிபருக்குத் தெரிந்ததா? தான் எழுந்ததற்கான காரணத்தை கதாநாயகன் கிறிஸ் பிராட் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    குறைவான கதாபாத்திரங்கள் என்றாலும் இயக்குனர் மோர்டென் டில்டம் கதையை ரசிகர்களுக்கு போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார். கிறிஸ் பிராட், ஜெனிபர் லோபஸ் இருவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றனர். ரோட்ரிகோ பிரிட்டோவின் ஒளிப்பதிவும், தாமஸ் நியுமேன் இசையும் படத்திற்கு பக்கபலம்.

    மொத்தத்தில் இந்த 'பாசஞ்சர்ஸ்' பயணம் இனிதானது...
    அறிமுக நடிகர் குரு அரவிந்த், சாமந்தி நடிப்பில் வெளியாகியிருக்கும் 'சூரத்தேங்காய்' படம் எப்படியிருக்கிறது? என்பதைக் கீழே பார்ப்போம்.
    சிறு நகரமொன்றில் கதாநாயகன் குரு அரவிந்த் வாழைத்தார் கடை வைத்து நடத்தி வருகிறார். குரு அரவிந்துக்கு அப்பா கிடையாது அம்மா மட்டும் தான். தானுண்டு தனது வேலையுண்டு என அமைதியாக இருக்கும் குரு அரவிந்த் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்.

    குரு அரவிந்தின் மாமன் மகள் சாமந்தி (கதாநாயகி) அதே ஊரில் பிளஸ் ஒன் படித்து வருகிறார். சாமந்திக்கு குரு அரவிந்த் மீது காதல். அவரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால் நாயகன் குரு அரவிந்த் நாயகியைக் கண்டுகொள்ளாமல் சதாசர்வகாலமும் குடித்துக் கொண்டே இருக்கிறார்.

    அந்த ஊரின் கவுன்சிலர் தனது நான்கு தம்பிகளுடன் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சொத்து அபகரிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சிறு வயதில் குரு அரவிந்தின் தந்தையிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் கவுன்சிலர் அவரது தந்தையைக் கொன்று விடுகிறார். இதனை நேரில் பார்க்கும் குரு அரவிந்த் இதன் காரணமாக மிகுந்த அமைதியுடன் தனது வேலைகளைப் பார்த்து வருகிறார்.

    ஒருகட்டத்தில் குரு அரவிந்த்தின் அம்மா குடியை விட்டுவிடும்படி மகனிடம் கெஞ்சுகிறார். அம்மாவின் வார்த்தைகள் குரு அரவிந்தின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் குடியை விட்டு விடுகிறார்.

    மேலும், சாமந்தியிடமும் நன்றாகப் பேசி பழகுகிறார். இருவரது வீட்டிலும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சாமந்தியின் பெற்றோர் இடத்தை கவுன்சிலர் தனது தம்பிகளுடன் சேர்ந்து அபகரிக்கப் பார்க்கிறார். இதனால் குரு அரவிந்துக்கும், கவுன்சிலருக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது.

    இந்த மோதலில் கவுன்சிலர் மற்றும் அவரது தம்பிகளை எதிர்த்து குரு அரவிந்த் வெற்றி பெற்றாரா? சாமந்தியைக் கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகன் குரு அரவிந்த் நன்றாக நடித்திருக்கிறார். நடனம், ஆக்ஷன் காட்சிகளிலும் நன்றாக செய்திருக்கிறார். துடுக்குத்தனம் நிறைந்த பெண்ணாக நடித்திருக்கும் நாயகி சாமந்தி தனது கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். நாயகன் குரு அரவிந்த்தின் உறவினராக படம் முழுவதும் வரும் துணை நடிகர் ஜெயமணி படத்தில் காமெடி நடிகர் இல்லாத குறையைப் போக்கி படத்தின் கலகலப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறார்.

    சக்தியின் இசையில் படத்தின் பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. குடி தொடர்பாக இளைஞர்களின் வாழ்வு சீரழிவதை இயக்குனர் ஸ்ரீநிவாஸ் நன்றாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆனால் பெரும்பாலான காட்சிகளில் அழுத்தம் இல்லை. இதனால் படத்தில் ஆங்காங்கே தொய்வு ஏற்படுகிறது.

    மொத்தத்தில் 'சூரத்தேங்காய்' பலம் குறைவு.
    ராம் சரண், பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகியிருக்கும் 'சூப்பர் போலீஸ்' திரைப்படம் எப்படியிருக்கிறது? என்பதைக் கீழே பார்ப்போம்.
    அசிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனராக இருக்கும் ஹீரோ ராம்சரண் எங்கு அநியாயம் நடந்தாலும் உடனே தட்டிக் கேட்கிறார். இதன் காரணமாக 21 முறை வெவ்வேறு ஊர்களுக்கு ராம்சரண் டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார். எனினும் டிரான்ஸ்பருக்கு அஞ்சாத ராம்சரண் போராட்டம் நடத்தி போக்குவரத்தைக் தொந்தரவு செய்ததாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வை அடித்து விடுகிறார். இதனால் 22-வது முறையாக மும்பைக்கு ராம்சரண் டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார்.

    இதற்கிடையில் தந்து தோழியின் திருமணத்திற்காக நியூயார்க்கிலிருந்து ஹீரோயின் பிரியங்கா சோப்ரா மும்பை வருகிறார். திருமணம் முடிந்து தான் தங்கியிருக்கும் அறைக்கு பிரியங்கா சோப்ரா திரும்பும்போது வழியில் ஒரு பெட்ரோல் பங்கில் இறங்குகிறார்.

    அங்கு ஒரு கும்பல் பெட்ரோலில் கலப்படம் செய்கிறது. இதனை அந்த வழியாக செல்லும் துணை கலெக்டர் தட்டிக்கேட்க அவரை அந்தக் கும்பல் உயிருடன் எரித்து விடுகிறது. இதனைப் பார்க்கும் பிரியங்கா சோப்ரா போலீசுக்கு போன் செய்து இந்த கொலை நடந்ததாக தெரிவிக்கிறார்.

    இந்த வழக்கு ராம்சரண் கைக்கு வருகிறது. இதுகுறித்து விசாரணை செய்யும் ராம்சரண் கொலை தொடர்பாக பிரியங்கா சோப்ராவை சந்தித்து விளக்கம் கேட்கிறார். ஆரம்பத்தில் ராம்சரண் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் பிரியங்கா சோப்ரா, ராம்சரணின் அறிவுரையால் மனம் மாறி தனக்குத் தெரிந்த விவரங்களை ராம்சரணிடம் தெரிவிக்கிறார்.

    இதற்கிடையில் போலீசில் உண்மையை சொன்னதற்காக பிரியங்கா சோப்ராவை அந்த கும்பல் தொந்தரவு செய்கிறது. இதனால் ராம்சரண், பிரியங்கா சோப்ராவை தனது வீட்டிற்கு அழைத்து வந்து தங்க வைத்துக்கொள்கிறார். பின்னர், பிரியங்கா சோப்ரா-ராம்சரண் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர்.

    ஒரு கட்டத்தில் இது ஒரு சாதாரண வழக்கு இல்லை, ஆயில் மாபியா என்ற மிகப்பெரிய நெட்வொர்க் கும்பல் இந்த வழக்குக்குப் பின்னால் இருக்கிறது என்ற உண்மை ராம்சரணுக்குத் தெரிய வருகிறது. இதனால் ஆயில் மாபியா நெட்வொர்க் குறித்த விவரங்களை ராம்சரண் சேகரிக்க ஆரம்பிக்கிறார்.

    இறுதியில் அந்த ஆயில் மாபியா கும்பலை ராம்சரண் ஒழித்தாரா? பிரியங்கா சோப்ரா-ராம்சரண் இடையிலான காதல் என்னவானது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கதாநாயகன் ராம்சரண் தனது பாணியில் நடிப்பு, நடனம், ஆக்ஷன் என எதிலும் குறைவைக்கவில்லை. ஏசிபி வேடத்திற்கு ராம்சரண் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். கதாநாயகி பிரியங்கா சோப்ரா தனது வழக்கமான நாயகி ரோலை நிறைவாக செய்திருக்கிறார்.

    இயக்குனர் அபூர்வா லாகியா ஒரு ஆக்ஷன் படத்தை விறுவிறுப்பாகக் கொடுத்திருக்கிறார். ஆர்.ஜே.குருராஜின் ஒளிப்பதிவில் பாடல்கள், காட்சிகள் அனைத்தும் கலர்புல் ரகம். வழக்கம்போல இல்லாமல் அமர் முஹில், ஆனந்த் ராய் ஆனந்த், சிரந்தன் பத், மீட் புரோஸ் அஞ்சன் என இப்படத்துக்கு நான்கு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர்.

    காட்சிகள், திரைக்கதை ஆகியவற்றில் ஒருசில குறைகள் இருந்தாலும் ராம்சரணின் ஆக்ஷன் காட்சிகளுக்காக இப்படத்தை ஒருமுறை பார்க்கலாம்.

    மொத்தத்தில் 'சூப்பர் போலீஸ்' ஆக்ஷன் மசாலா.
    பகவதி பாலா, செல்வா, காயத்ரி நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘தலையாட்டி பொம்மை’ திரைப்படம் எப்படியிருக்கிறது? என்பதைக் கீழே பார்ப்போம்.
    ஒரு வீட்டில் வசிக்கும் மூன்று நண்பர்கள் பெண்களை ஏமாற்றி தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களைக் கெடுத்துக் கொன்று விடுகின்றனர். ஒருநாள் ஹீரோயின் காயத்ரி தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடி வருகிறார். மூன்று நண்பர்களில் ஆட்டோ டிரைவராக வரும் பகவதி பாலா காயத்ரி மற்றும் அவரது காதலனை ஏமாற்றி தங்களது வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

    நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து காயத்ரியின் காதலனைக் கொன்று விடுகின்றனர். காதலனை காப்பாற்றப் போராடும் காயத்ரியையும் அடித்து விடுகின்றனர். இதில் காயத்ரி மயக்கமடைந்து விடுகிறார். ஆனால், காயத்ரி இறந்து விட்டதாகக் கருதும் மூவரும் வீட்டின் தோட்டக்காரனை அழைத்து நாயகியை வீட்டிற்கு பின்னால் புதைத்து விடும்படி கூறுகின்றனர்.

    இதற்கிடையில் காயத்ரி உயிரோடு இருப்பதை அறிந்த தோட்டக்காரன் அவர் மீது இரக்கம் கொண்டு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அடைக்கலம் கொடுக்கிறார். நண்பர்கள் மூவரும் தங்கியிருக்கும் வீட்டின் சொந்தக்காரர் அமெரிக்காவிலிருந்து வர, தோட்டக்காரன் மற்றும் வீட்டின் உரிமையாளர் உதவியுடன் காயத்ரி அந்த வீட்டில் வந்து தங்குகிறார்.

    வீட்டில் அவரைப் பார்க்கும் நண்பர்கள் மூவரும் காயத்ரி பேய் வடிவில் வந்து விட்டதாக பயப்படுகின்றனர். அதற்கேற்றவாறு காயத்ரியும் பேய் போல நடித்து நண்பர்கள் மூவரையும் மிரட்டுகிறார். ஒருகட்டத்தில் காயத்ரிக்கு உண்மையிலேயே பேய் பிடிக்கிறது. இறுதியில் காயத்ரியைப் பிடித்த பேய் அவளைவிட்டு விலகியதா? நண்பர்கள் மூவரும் திருந்தினார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    'தலையாட்டி பொம்மை' என தலைப்பு வைத்து பேய்க்கதை ஒன்றை திகிலுடன் சொல்ல இயக்குனர் பகவதி பாலா முயற்சி செய்திருக்கிறார். ஆனால், தொடர்பில்லாத கதை, வலுவில்லாத திரைக்கதை, மோசமான ஒளிப்பதிவு, தெரிந்த நடிகர்கள் இல்லாதது போன்றவற்றால் அவரின் முயற்சி ரசிகர்களைக் கவரவில்லை.

    மொத்தத்தில் 'தலையாட்டி பொம்மை' தள்ளாட்டம்.
    வீடியோ விளையாட்டாக பலரை கவர்ந்த ‘அஸஸின்ஸ் கிரீட்’ என்ற ஆட்டம், அதே பெயரில் ஹாலிவுட் திரைப்படமாக உருவாகியுள்ளது. கடும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
    வீடியோ விளையாட்டுகளாக உருவான கதாபாத்திரங்களை மையப்படுத்தி, பெரிய திரைக்காக தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் பல பெரிய அளவிலான வெற்றியை தரவில்லை என்ற மனக்குறையும், அதிருப்தியும் பலகாலமாக ரசிகர்கள் மத்தியில் நிலை கொண்டுள்ளது.

    அவ்வகையில், வீடியோ விளையாட்டாக பலரை கவர்ந்த ’அஸஸின்ஸ் கிரீட்’ என்ற ஆட்டம், ஹாலிவுட்டில் பெரிய திரைக்கான சினிமாப் படமாக உருவாகவுள்ளது என்ற செய்திகளும், இந்தப் படத்தில் இடம்பெறவுள்ள நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியலும், அதையடுத்து வெளியான ஆர்ப்பாட்டமான டிரெய்லரும் ரசிகர்களின் நெஞ்சங்களில் ஒருவிதமான ஆர்வத்தீயை மூட்டி விட்டிருந்தன என்றால், அது மிகையல்ல.

    சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள ’அஸஸின்ஸ் கிரீட்’ திரைப்படம், அந்த ஆர்வத்தீயை கொளுந்துவிட்டு எரியச் செய்துள்ளதா? அல்லது, நீர்த்துப்போக வைத்துள்ளதா? என்பதை இங்கே பார்ப்போம்!

    விபச்சார தரகரை கொன்ற குற்றத்துக்காக படத்தின் நாயகன் கேல்லம் லின்ச்-க்கு (மைக்கேல் ஃபாஸ்பென்டர்) மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், அவனது நன்னடத்தையை காரணம் காட்டி, தண்டனை ரத்து செய்யப்பட்டு, சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறான்.

    இந்த மன்னிப்புக்கும், விடுதலைக்கும் பின்னணியில் பிரபல கோடீஸ்வரருக்கு சொந்தமான ஒரு தொழில் நிறுவனம் இருந்துள்ள ரகசியம் கேல்லம் லின்ச்சுக்கு தெரியாமல் பாதுகாக்கப்படுகிறது.

    இயேசு கிறிஸ்துவின் காலத்திலும், சாலமன் மன்னரின் காலத்திலும் நடைபெற்ற சிலுவை யுத்தங்களை எதிர்த்துவந்த புனிதப் போராளிகளின் வம்சாவழியை சேர்ந்த அகுலய்ர் டி நெர்ஹா என்பவரின் நேரடி வழித்தோன்றலான கேல்லம் லின்ச்சை வைத்து, உலகம் முழுவதும் நடைபெற்றுவரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அவன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கோடீஸ்வரரின் ’ஆப்ஸ்ட்டர்கோ’ நிறுவனம் தெரிவிக்கிறது.

    ‘அனிமஸ்’ என்ற இயந்திரத்துடன் கேல்லம் லின்ச் இணைக்கப்படுகிறான். அந்த இயந்திரத்தின் உதவியுடனும், அவனது மூதாதையரான அகுலய்ர் டி நெர்ஹாவின் பழைய நினைவலைகளின் துணையுடனும் ’ஏடனின் ஆப்பிள்’ என்ற கருவியைத் தேடி, கண்டுபிடிக்கும் காரியத்தில் கடந்தகாலத்தை நோக்கி, கேல்லம் லின்ச் களமிறக்கப்படுகிறான்.

    ஆனால், இந்த சாகசத் தேடலில் எல்லாமே திட்டமிட்டப்படி நடக்க சாத்தியமில்லை. தனது வாழ்க்கையைப்பற்றி அறியவந்த சில உண்மைகள் பொய்யான புனைக்கதைகள் என்பதை உணருகிறான்.

    அவனை இந்த அரிதான காரியத்தில் களமிறக்கிய ’ஆப்ஸ்ட்டர்கோ’ நிறுவனம் உண்மையிலேயே உலக அமைதியை விரும்புகிறதா?, ஏடனின் ஆப்பிளை அந்த நிறுவனம் பெறுமா? என்ற கேள்விக்கு ’அஸஸின்ஸ் கிரீட்’ படம் பதில் தருகிறது.

    புவிஈர்ப்பு விசைக்கு வசப்படாமல் அந்தரத்தில் உயரப் பறக்கும் சாகச காட்சிகள், கடந்த காலத்தின் பக்கம் பின்நோக்கி செல்லுதல் போன்ற ’அஸஸின்ஸ் கிரீட்’ விளையாட்டின் சிறப்பம்சங்களையும், இந்தப் படத்தின் டிரெய்லரையும் ஒப்பிட்டு பார்த்து, பரவசப்பட்ட ரசிகர்களின் பரவலான எதிர்பார்ப்பை இந்தப் படம் ஓரளவுக்கு நிறைவு செய்கிறது.

    படத்தின் முதுகெலும்பாக அமைக்கப்பட்டுள்ள ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாம் சிலிர்ப்பை ஊட்டினாலும், கடந்த காலத்தில் நடைபெற்றதாக காட்டப்பட வேண்டிய திரைக்கதையின் அமைப்பு நிகழ்காலத்தை சுற்றியே வட்டமடிப்பதால், அந்த காட்சிகளை எல்லாம் சுவைபட ரசிக்கவும், ருசிக்கவும் இயலவில்லை என்பது மிகப்பெரிய குறையாகவே தோன்றுகிறது.

    கதாநாயகன் மீட்பதற்காக செல்லும் ’ஏடனின் ஆப்பிள்’ கருவியின் செயல்பாடு என்ன?, அது அளிக்கக்கூடிய பலன் என்ன? எப்போது, எந்தச் சூழலில் அதை பயன்படுத்தலாம்? போன்ற விளக்கங்கள் எதுவும் விவரிக்கப்படாததால், இந்த விளையாட்டை பயன்படுத்தி வரும் பலருக்கு படத்தின் திரைக்கதை என்ற அம்சம் ஏமாற்றம் அளிப்பதாகவே அமைந்துள்ளது.

    இதற்கிடையில், ’ஆப்ஸ்ட்டர்கோ’ நிறுவனத்தின் உரிமையாளரான ஆலன் ரிக்கின்ஸ் (ஜெரெமி அயர்ன்ஸ்) மற்றும் அவரது மகளும் படத்தின் நாயகியுமான சோபியா (மேரியன் கோட்டிலார்ட்) இடையிலான அதிகாரப் போட்டி, நாயகனின் உண்மையான நோக்கம் என்ன? ஆகியவற்றை படத்தின் இயக்குனரான ஜஸ்ட்டின் கர்ஸல் உரிய முறையில் பதிவு செய்ய தவறிவிட்டதால், படத்துக்கும் ரசிகர்களுக்கும் இடையில் உணர்வுப்பூர்வமான ஒட்டுறவு இல்லாமல் போனதை, சில தொய்வான காட்சிகள் நிரூபிக்கின்றன.

    மிகசிறந்த நட்சத்திரங்களை தேர்வு செய்திருந்தும், அவர்களுக்கான திறமை பளிச்சிடும் காட்சி அமைப்புகளை வைக்க தவறியதால் ’சும்மா’ திரையில் வந்துபோகும் நடிகர்கள் அளவுக்கே அவர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது இயக்குனரின் மிகப்பெரிய குறை என்றும் கூறலாம்.

    மிகப் பிரபலமான வீடியோ விளையாட்டாக அறியப்படும் ’அஸஸின்ஸ் கிரீட்’ பலவீனமான திரைக்கதை மற்றும் அழுத்தமில்லாத பாத்திரப் படைப்பால் ரசிகர்களை பெரிதாக கவர்ந்து, ஈர்க்கத் தவறிவிட்டது.

    மொத்தத்தில், ’அஸஸின்ஸ் கிரீட்’ ‘அசட்டு கிரீட்’ ஆகவே தோன்றுகிறது.
    புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏகனாபுரம்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    ஏகனாபுரத்தில் வசித்து வரும் கதாநாயகன் ரவி பறை இசைக் கலைஞன். அந்த ஊரில் வாத்து மேய்க்க வரும் நாயகி ரித்திகா மீது அவருக்கு காதல் வருகிறது. ரித்திகாவும் ரவியை விரும்புகிறார். இந்நிலையில் வாத்து முட்டை வியாபாரியான ராஜசிம்மன் தவறான முறையில் ரித்திகாவை அடைய முயற்சிக்கிறார்.

    இந்த விஷயம் ரித்திகா மூலம் ரவிக்கு தெரிய வருகிறது. ரித்திகாவை ராஜசிம்மனிடமிருந்து காப்பாற்றி அவளை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார் ரவி. அந்த நேரத்தில் அந்த ஊரில் பெரிய மனுஷியாக இருக்கும் ஜோதிஷா, ரவியின் காதலுக்கு குறுக்கே நின்று ரவியையும், ரித்திகாவையும் சேரவிடாமல் தடுக்கிறார்.

    ஜோதிஷா எதற்காக ரவியின் காதலை எதிர்த்து அவர்களை சேரவிடாமல் தடுக்கிறாள்? என்பதை இறுதியில் சொல்லியிருக்கிறார்கள்.

    கதாநாயகனாக வரும் ரவிக்கு முதல் படம் என்றாலும், தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுக்க ரொம்பவுமே முயற்சி செய்திருக்கிறார். நடனம், சண்டைக் காட்சிகளில் அனுபவம் இல்லையென்பதால் ரசிக்க முடியவில்லை. வாத்து மேய்க்கும் பெண்ணாக வரும் ரித்திகா, கிராமத்து இளம் பெண்ணுக்குண்டான தோற்றத்திற்கு பொருந்தியிருக்கிறார். அதேபோல், கிராமத்து பெண்ணுக்குண்டான நளினங்களையும் தனது நடிப்பால் சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

    ஊர் பெரிய மனுஷியாக வரும் ஜோதிஷா வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். வில்லனாக வரும் ராஜசிம்மன் பார்வையிலேயே மிரட்டுகிறார். மற்றபடி, படத்தில் உள்ள நிறைய கதாபாத்திரங்களும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    இயல்பான கிராமத்து கதையாக இப்படம் அழகாக மனதில் பதிகிறது. கிராமத்து மக்களின் முகங்கள், கிராமத்து பின்புலங்கள் என எதுவுமே செயற்கையாக தெரியாமல் அப்படியே நேரில் பார்ப்பது போன்ற உணர்வில் இயக்குனர் சுரேஷ் நட்சத்திரா படமாக்கியிருக்கிறார். அதேபோல், படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்களிலும் ஹீரோயிசம் காட்டாமல் எதார்த்தமாக படமாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.

    முதல் பாதி மட்டும் ரொம்பவும் மெதுவாக நகர்வதுபோன்ற உணர்வை கொடுக்கிறது. அதேபோல் எடிட்டிங்கிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. மணிமாறன் இசையில் பாடல்கள் எல்லாம் இளையராஜாவை ஞாபகப்படுத்துகிறது. ஏ.எஸ்.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு கதையோடு ஒன்றி பயணிக்க உதவி செய்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘ஏகனாபுரம்’ எதார்த்தபுரம்.
    சுரேஷ் ரவி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பேய் படமாக வெளிவந்துள்ள ‘மோ’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    நாயகன் சுரேஷ் ரவி மற்றும் அவரது நண்பர்களான ரமேஷ் திலக், தர்புகா சிவா ஆகியோர் இணைந்து நூதனமான முறையில் மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இவர்கள் சினிமாவில் துணை நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முனிஸ்காந்தை வைத்து பேய் போல் மேக்கப் போட்டு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உலவ விடுகின்றனர். பின்னர், அங்கு பேய் இருப்பதாகவும் அதை விரட்டுவதாகவும் கூறி அந்த அடுக்குமாடி குடியிருப்பின் செகரட்டரியான செல்வாவை ஏமாற்றி பணம் பறித்து வருகிறார்கள்.

    ஒருகட்டத்தில் சுரேஷ் ரவி மற்றும் அவர்கள் கூட்டாளிகளின் நாடகம் செல்வாவுக்கு தெரிய வருகிறது. இதனால், அவர் இவர்களை போலீசில் மாட்டிவிடப் போவதாக கூற, அவர்களோ பயந்து நடுங்குகிறார்கள். அவர்களின் பயத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட செல்வா, தனக்கு தொழில்முறை போட்டியாளராக இருக்கும் மைம் கோபி வாங்கவிருக்கும் பாழடைந்த பள்ளியில் பேய் இருப்பதாக கூறி, அந்த பள்ளியை அவர் வாங்கவிடாமல் செய்யவேண்டும் என்று கட்டளையிடுகிறார்.

    மைம் கோபிக்கும் கெட்ட சக்திகள் மீது நிறைய நம்பிக்கை இருக்கிறது. இதனால், இவர்கள் பேய் இருப்பதாக பயமுறுத்தினால் மைம் கோபி அந்த பள்ளியை வாங்கமாட்டார் என்பது தெரிந்தே செல்வா இந்த வேலையை இவர்களை வைத்து செய்யச் சொல்கிறார். சுரேஷ் ரவியின் கூட்டாளிகளும் வேறு வழியில்லாமல் இதற்கு ஒப்புக் கொள்கிறார்கள்.

    இறுதியில் அந்த பாழடைந்த பள்ளிக்கு சென்ற நண்பர்களின் கதி என்னவாயிற்று? இவர்கள் திட்டம் பலித்ததா? என்பதே மீதிக்கதை.

    சின்னத்திரையில் தொகுப்பாளராக வலம்வந்த சுரேஷ் ரவி இப்படத்தில் முழுநீள கதாநாயகனாக மாறியிருக்கிறார். கதைக்கு முக்கியத்துவமான படம் என்றாலும், இவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.

    ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள இரண்டாவது பேய் படம். இப்படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் இல்லாவிட்டாலும், தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். முண்டாசு பட்டி படத்திற்கு பிறகு முனீஸ்காந்த் தனியொரு ஆளாக காமெடி செய்யும் வாய்ப்பு இப்படத்தில் கிடைத்திருக்கிறது. ஒருசில இடங்களில் இவரது காமெடி சிரிக்க வைத்தாலும், நிறைய இடங்களில் வலுக்கட்டாயமாக காமெடி திணிக்கப்பட்டிருக்கிறது.

    ரமேஷ் திலக், தர்புகா சிவா, யோகி பாபு ஆகியோரும் படத்தின் காமெடிக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள். செல்வா, மைம் கோபி ஆகியோர் தங்களது அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

    ஆரம்பம் முதல் இறுதி வரை கதையை விட்டு வெளியே செல்லாமல் கதையோடு காமெடி காட்சிகளை கொடுத்த இயக்குனரை பாராட்டலாம். படத்திற்கு பெரிய பலமே இந்த காமெடிதான். ஜெப கூட்ட காட்சிகள், யோகி பாபு இங்கிலீஸ் பேசும் காட்சிகள், முனிஸ்காந்த் பேய் வேஷம் போடும் காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சிகள் ஆகியவை தியேட்டர்களில் சிரிப்பு சரவெடி. யோகி பாபுவுக்கு இன்னும் காட்சிகள் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

    படத்தில் பாடல் இல்லையென்றாலும, பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் இசையமைப்பாளர்  சந்தோஷ் தயாநிதி. அதேபோல், விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருப்பது சிறப்பு.

    மொத்தத்தில் ‘மோ’ அமோகம்.
    புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி உள்ள மியாவ் படம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள கீழே பார்ப்போம்...
    ராஜா, சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் இவர்கள் நான்கு பேரும் பெரிய பணக்காரர்கள் என்பதால் தினமும் குடியும், கும்மாளமுமாக இருக்கிறார்கள். அதேநேரத்தில் அந்த குடியிருப்பில் தங்கியிருக்கும் பெண்களை கேலி, கிண்டல் செய்வதையும் வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள்.

    இந்நிலையில், அதே குடியிருப்பில் வசிக்கும் நாயகி ஊர்மிளா காயத்ரியை இவர்கள் கிண்டல் செய்ய, அவள் நண்பர்களில் ஒருவரை அடித்து விடுகிறாள். இதனால், நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஊர்மிளாவை பழிவாங்க துடிக்கிறார்கள். அன்றிலிருந்து நண்பர்களில் ஒருவன் திடீரென கொல்லப்படுகிறார். அந்த கொலையை செய்தது ஒரு பூனை என்று அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் அனைவரும் நம்புகிறார்கள்.

    ஆனால், கொல்லப்பட்டவனின் நண்பர்களோ இதற்கு ஊர்மிளாதான் காரணம் என்று அவள்மீது பழியை போடுகிறார்கள். இந்த கொலை விசாரணை போலீஸ் வசம் செல்ல, அடுத்ததாக மற்றொரு நண்பரும் கொல்லப்படுகிறார். இவரும் பூனையால் கொல்லப்பட்டதாக கூற, போலீஸ் குழம்புகிறது.

    இறுதியில், நண்பர்கள் பூனையால்தான் கொல்லப்பட்டார்களா? பூனை உருவத்தில் மிரட்டும் அந்த நபர் யார்? மற்ற நண்பர்கள் அந்த பூனையிடம் இருந்து தப்பித்தார்களா? என்பதே மீதிக்கதை.

    படத்தின் நாயகர்களான ராஜா, சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இருப்பினும், வசதியான இளைஞர்கள் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார்கள்.

    மாடல் அழகியாக நடித்திருக்கும் நாயகி ஊர்மிளா காயத்ரி, துணிச்சலான பெண்ணாகவும், தன் மேல் விழுந்த பழியை துடைக்க போராடும் கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். பிற்பாதியில் வரும் ஷைய்னி கவர்ச்சியால் ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார்.

    ஷெல்பி என்னும் கதாபாத்திரத்தில் பூனை நடித்திருக்கிறது. பூனையை வைத்து சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம். குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் யுவினாவும் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறாள். வாட்ஸ் அப் மணி கதாபாத்திரத்தில் வரும் டேனியலின் காமெடி படத்தில் எடுபடவில்லை.

    பேய் பழி வாங்கும் வழக்கமான கதையையே படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சின்னாஸ் பழனிச்சாமி. எல்லா பேய் படங்களிலும் வரும் வழக்கமான கதை, வழக்கமான காட்சிகள் என கொடுத்திருந்தாலும், புது முயற்சியாக பூனை பழி வாங்குவதாக அமைத்திருப்பது படத்திற்கு புதுமையாக இருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்கு கொஞ்சம் கைகொடுத்திருக்கிறது.

    ஸ்ரீஜித் எடவனா இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் தேவை. போஜன் கே.தினேஷின் ஒளிப்பதிவு ஓரளவுக்கு ரசிக்கும்படி உள்ளது.

    மொத்தத்தில் ‘மியாவ்’ சத்தம் போதவில்லை.
    ×