என் மலர்tooltip icon

    தரவரிசை

    ராஜதுரை இயக்கத்தில் கௌதம் கார்த்திக்-ப்ரியா ஆனந்த் இணைந்து நடித்துள்ள `முத்துராமலிங்கம்' படத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமே நெப்போலியனின் பேச்சுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வருகிறது. நெப்போலியன்  சிறு வயதில் இருந்தே சிலம்பத்தின் முன் கத்தியை வைத்து ஆடுவதில் கைதேர்ந்தவர். இவருடைய மகனான நாயகன் கௌதம்  கார்த்திக்கும் சிலம்பம் கற்று கைதேர்ந்தவராக வலம் வருகிறார்.

    நெப்போலியனுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். இதில் இளைய மகன்தான் கௌதம் கார்த்திக். ஒருநாள் கௌதம் கார்த்திக்  ரோட்டில் நடந்துபோய்க் கொண்டிருக்கும்போது நாயகி பிரியா ஆனந்தை பார்க்கிறார். பார்த்தவுடனேயே அவள்மீது இவருக்கு  ஈர்ப்பு வந்துவிடுகிறது. அடுத்தடுத்த சந்திப்புகளில் இருவரும் நெருக்கமாகி, காதலர்களாகிறார்கள்.



    இவர்களது காதலுக்கு இரண்டுபேர் வீட்டிலும் சம்மதம் கிடைக்கிறது. ஆனால், நாயகிக்கு திருமணமாகாத ஒரு அக்கா,  அதேபோல் நாயகனுக்கு திருமணமாகாத ஒரு அண்ணன் இருப்பது இவர்களுடைய திருமணம் உடனே நடைபெற தடையாக  இருக்கிறது. எனவே, பெரியவர்கள் அனைவரும் நாயகியின் அக்காவுக்கும், நாயகனின் அண்ணனுக்கும் திருமணம் பேசி  முடிக்கின்றனர்.

    இந்நிலையில், பக்கத்து ஊரில் சிலம்பம் போட்டி நடைபெறப்போவதாக அறிவிப்பு வருகிறது. அந்த போட்டிக்கு சென்றால் ஏதாவது  பிரச்சினை வரும் என்பதற்காக தன்னுடைய கிராமத்தில் இருந்து யாரும் அந்த சிலம்பம் போட்டியில் கலந்துகொள்ளக்கூடாது  என்று நெப்போலியன் கட்டளையிடுகிறார். ஆனால், கௌதமோ அவரது பேச்சை மீறி, தனது நண்பர்களுடன் அந்த ஊரில்  நடக்கும் சிலம்பம் போட்டிக்கு போக தயாராகிறார்.



    கௌதம் கார்த்திக் தங்கள் ஊருக்கு சிலம்பம் ஆடவருவதை அறியும் பெப்சி விஜயன், கௌதம் வரும் வழியிலேயே ஆட்களை  வைத்து அவனை விரட்டிவிட நினைக்கிறார். அப்போது நடக்கும் சண்டையில் கௌதம் கார்த்திக் சிலபேரை தாக்கிவிடுகிறார்.  இதில் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்படுகிறார்கள்.  இது போலீசுக்கு செல்ல, பயந்துபோன நெப்போலியன், கௌதம் கார்த்திக்கை தலைமறைவாக சொல்கிறார். கௌதம்  கார்த்திக்கும் தலைமறைவாகிறார்.

    கௌதமை தேடி வரும் போலீஸ், அவர் தலைமறைவாக இருக்கிறார் என்பதை அறிந்ததும், நெப்போலியனை அவமானப்படுத்தி  போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்வதால் வெகுண்டெழும் கௌதம் கார்த்திக், தனது அப்பாவை  அவமானப்படுத்திய போலீசாரின் கையை வெட்டி விடுகிறார். இதன்பிறகு, இந்த பிரச்சினை பெரிய அளவில் செல்ல, இதை பற்றி  விசாரிப்பதற்காக போலீஸ் அதிகாரி வம்சி கிருஷ்ணா ஊருக்குள் வருகிறார்.



    ஆனால், அதற்குள் அந்த ஊரில் உள்ள ஆண்கள் எல்லோரும் தலைமறைவாகிறார்கள். இறுதியில், கௌதம் கார்த்திக், நெப்போலியன் கொலை குற்றத்தில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் முத்துராமலிங்கம் என்ற வீரத்திருமகனின் பெயருடன் வலம்வரும் கௌதம் கார்த்திக், அதற்குண்டான தோற்றத்தில்  அசர வைக்கிறார். ஆனால், இவருடைய நடிப்பில்தான் வீரம் எடுபடவில்லை. படத்தில் இவரது கதாபாத்திரம் மாஸாக  இருப்பதால், இவருடைய குழந்தை முகத்தில் மாஸ் நடிகருக்குடான நடிப்பை வெளிக்கொண்டு வரமுடியவில்லை. இருப்பினும்,  சண்டைக் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறார்.

    படத்திற்கு பெரிய பலம் நெப்போலியனின் தோற்றமும், அவருடைய வீரமான நடிப்பும்தான். திரையில் இவரை பார்த்தவுடனேயே  கண்டிப்பாக நம்மை ஏமாற்றமாட்டார் என்ற நம்பிக்கை நமக்குள் வந்துவிடுகிறது. பிரியா ஆனந்த் பள்ளி மாணவியாக கச்சிதமாக  வந்து போயிருக்கிறார். வழக்கமான கதாநாயகிபோல் இல்லாமல் இப்படத்தில் இவருக்கு நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய  வலுவான கதாபாத்திரம்தான். அதை அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார். விஜி சந்திரசேகர் வழக்கம்போல் வீரப்பெண்மணியாக  வந்து நம்மை கவர்கிறார்.



    முதல்பாதியை கலகலப்பாக கொண்டு செல்ல சிங்கம் புலியின் காமெடி மிகப்பெரிய உதவி செய்திருக்கிறது. பிற்பாதியில்  காமெடிக்கு விவேக் வந்தாலும், அவருடைய ஒருசில காமெடிகள்தான் ரசிக்க தோன்றுகிறது. போலீஸ் அதிகாரியாக வரும் வம்சி  கிருஷ்ணா, மற்றொரு ஊர் தலைவராக வரும் பெப்சி விஜயன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக  செய்திருக்கிறார்கள்.

    இயக்குனர் ராஜதுரை ஒரு சமூகம் சார்ந்தவர்களின் வீரத்தை மையப்படுத்தி இந்த படத்தை எடுத்திருக்கிறார். படத்தில் உள்ள  கதாபாத்திரங்கள் அனைத்தும் வீரத்துடன் வெகுண்டெழுவதுபோல் வருவதால் கொஞ்சம் டல்லடிக்கிறது. வசனங்கள் படத்திற்கு  பலமாக இருந்தாலும், அதை ஒருசில கதாபாத்திரங்கள் பேசும் தொனி அந்த வசனத்தின் மீதுள்ள பலத்தை  சீர்குலைத்துவிடுகிறது.

    இசைஞானி இளையராஜா இசையில் பாடல்களில் கிராமத்து மணம் தவழ்கிறது. பின்னணி இசையிலும் தான் ராஜா என்பதை  நிரூபித்திருக்கிறார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவில் கிராமத்து அழகை அழகாக படம்பிடித்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘முத்துராமலிங்கம்’ வலுவில்லை.
    சாதிக்கத்துடிக்கும் இரண்டு கிராமத்து இளைஞர்கள் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதை சொல்லும் படம்தான் ‘கனவு வாரியம்’. இந்த படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.
    கிராமத்தில் வாழும் இளவரசுவின் மகனான நாயகன் அருண் சிதம்பரம் சிறு வயதில் இருந்தே எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இவருடைய நண்பர் யோக்ஜேப்பி தனது தங்கை நாயகி ஜியா சங்கருடன் வசித்து வருகிறார். அருண் சிதம்பரம், பள்ளியில் படிக்கும் காலத்திலேயே அறிவியல் மீது நாட்டம் கொண்டவர். படிப்பு தவிர எந்த ஒரு விஷயத்திலும் கேள்வி கேட்டு அதற்கு விடை காண வேண்டும். எதையாவது புதிதாக கண்டுபிடித்து சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்.

    இதனால் 8-வது வகுப்பிலேயே பள்ளி படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ரேடியோ மெக்கானிக்கிடம் சேர்ந்து அதில் ஆர்வம் காட்டுகிறார். புதிய கண்டுபிடிப்பில் தீவிரமாக இருக்கிறார். இந்த கால கட்டத்தில் ஊரில் கடும் மின்வெட்டு வருகிறது. தினமும் 18 மணி நேரம் மின்சாரம் இல்லை. இதற்கு மாற்று வழி என்ன என்பதை அருண் சிதம்பரம் யோசிக்கிறார். கல்வி அறிவை வளர்க்க பேராசிரியர் ஞானசம்பந்தம் நடத்தும் நூலகத்துக்கு சென்று புத்தகங்களை படிக்கிறார். மின் தட்டுப்பாட்டை போக்கும் புதிய முயற்சியில் இறங்குகிறார்.



    இதற்கிடையில் என்ஜினீயரிங் படித்து விட்டு சென்னை ஐ.டி. கம்பெனியில் அதிகம் சம்பளத்துக்கு வேலை பார்க்கும் யோக்ஜேப்பி, வேலை அழுத்தம் காரணமாக அதை விட்டு விட்டு கிராமத்துக்கு வந்து விவசாயம் பார்க்கிறார். படிக்காமல் ஆராய்ச்சி ஆராய்ச்சி என்று அலையும் அருண் சிதம்பரத்தையும், ஐ.டி. கம்பெனி வேலையை விட்டு விட்டு கிராமத்தில் விவசாயம் பார்க்கும் யோக் ஜேப்பியையும் அந்த ஊர் மக்கள் ஏளனமாக பார்க்கிறார்கள். கேலி செய்கிறார்கள்.

    இதையெல்லாம் மீறி விடாமுயற்சியில் ஈடுபடும் இருவரும் கடைசியில் சாதித்தது என்ன என்பது மீதிக்கதை.

    நாயகன் அருண் சிதம்பரத்துக்கு இது முதல் படம். என்றாலும், கதைக்கு தேவையான யதார்த்த நடிப்பை பதிவு செய்து பாராட்டு பெறுகிறார். கிராமத்தில் சாதிக்க துடிக்கும் சாதாரண இளைஞனாக வாழ்ந்து காடடி இருக்கிறார். யோக்ஜேப்பி ஐ.டி. வேலையைவிட்டு கிராமத்தில் விவசாயம் பார்க்கும் இளைஞனாக மாறி அசத்துகிறார். இன்றைய படித்த இளைஞர்களை விவசாயம் செய்ய தூண்டும் வகையில் அற்புதமாக நடித்திருக்கிறார்.



    நாயகி ஜியா சங்கர் பொருத்தமான தேர்வு. நகரத்தில் இருந்து கிராமத்துக்கு வந்து வாழும் பெண்ணாக முத்திரை பதிக்கிறார். காதல் காட்சிகளில் செயற்கைதனம் இல்லாமல் இவரது நடிப்பு யதார்த்தமாக அமைந்திருப்பது அருமை. முதல் படத்திலேயே மனதில் பதிகிறார்.

    மகன் சாதனை புரிய வேண்டும் என்பதை ஊக்கப்படுத்தும் தந்தையாக வரும், இளவரசு மிகைபடுத்தாத கிராமத்து அப்பாவாகவே கண்களுக்கு தெரிகிறார். மகன் மீது அக்கறை கொண்ட பாசம் நெகிழ வைக்கிறது. பிளாக் பாண்டி படம் முழுவதும் வந்து நகைச்சுவையில் தனித்துவமாக இடம் பிடிக்கிறார். இது இவருக்கு பெயர் சொல்லும் படமாகும் என்பது மட்டும் உண்மை.



    கதை, வசனம், பாடல், நடிப்பு, இயக்கம் என அருண் சிதம்பரம், நடிப்பை போலவே மற்ற விஷயங்களிலும் தனது திறமையை அருமையாக கையாண்டு இருக்கிறார். அமெரிக்காவில் அதிக சம்பளத்துக்கு பார்த்த வேலையை விட்டுவிட்டு சினிமாதுறைக்கு வந்தது சரிதான் என்பதை முதல் படத்திலேயே நிரூபித்திருக்கிறார். அவரது தந்தைக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

    கிராமத்து இளைஞர்களும் முயற்சி இருந்தால் நிச்சயம் சாதனை புரியலாம் என்பதை ஏற்கும் விதமாக சொல்லி இருக்கிறார். ஐ.டியில் வேலை பார்த்தாலும் விவசாயத்தில் சாதிக்க முடியும். அதிகம் படிக்காவிட்டாலும் அறிவியலில் சாதிக்க முடியும் என்பதை அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார்.

    40 சதவீத மக்களுக்கு 80 சதவீத விவசாயம் கைகொடுத்த காலம் மாறி, 80 சதவீத மக்களுக்கு 40 சதவீதமாக விவசாயம் குறைந்துவிட்டது. எனவே படித்தவர்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்டினால் தான் நாட்டை காப்பாற்ற முடியும். குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டியது அவசியம் என்ற முக்கியமாக கருத்துக்களை எடுத்துக்கூறி இளைஞர்களிடம் புதிய ஆர்வத்தை தூண்டியுள்ள இவரது முயற்சியை கைதட்டி பாராட்டலாம்.



    சர்வதேச அளவில் 2 ரெமி விருது உள்பட 7 சர்வதேச விருகளையும் கவுரவங்களையும் பெற்றுள்ள ‘கனவு வாரியம்‘ நமது ரசிகர்களிடமும் நனவு வாரியமாகும் வகையில் ரசிக்கும் சிராமத்து கதையுடன் நல்ல கருத்துக்களையும் கொண்டு சேர்த்துள்ள அருண் சிதம்பரம், ‘ஆகா ஓகோ’ சிதம்பரமாகி இருக்கிறார்.

    ஷியாம் பெஞ்சமின் ரசிக்கும் இசையை கொடுத்து இருக்கிறார். ரெமி விருது பெற்ற குழந்தைகள் பாடலுக்கு அருண் சிதம்பரத்தின் வரிகள் மெருகேற்றுகின்றன. பின்னணி இசை படத்துக்கு பலம். எஸ்.செல்வகுமார் தனது கேமராவால் கிராமத்து அழகை கண்முன்னே கொண்டு வந்து ரசிக்க வைத்திருக்கிறார். சினிமாத்தனம் இல்லாத இதுபோன்ற தமிழ் படங்கள் நிச்சயம் இளைஞர்களுக்கு புதிய சாதனைக்கு வழிவகுக்கும். ‘கனவு வாரியம்’ அப்துல்கலாம் இளைஞர்களுக்கு கூறிய அறிவுரையை நனவாக்கச் சொல்லும் அற்புதமான படைப்பு.

    மொத்தத்தில் ‘கனவு வாரியம்’ நனவு வாரியம்
    தொகுப்பாளராக இருந்து நடிகராக உருவாகியிருக்கிற பாலா நடிப்பில் வெளிவந்துள்ள ‘கண்டேன் காதல் கொண்டேன்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    கல்லூரியில் படித்து வரும் நாயகன் பாலா ஒருநாள் சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது  கிங்ஸ் மோகனை சிலபேர் அடிக்க துரத்திக் கொண்டு வருகின்றனர். அப்போது, அவர்களிடமிருந்து கிங்ஸ் மோகனை காப்பாற்றி, எதற்காக அவர்கள் உன்னை அடிக்க வந்தனர் என்று கேட்கிறார் நாயகன்.

    பெண்களை ஒருதலையாக காதலித்து, அவர்கள் பின்னாலேயே சுற்றி வருவதாலேயே தன்னை இப்படி ஆட்கள் அடிக்க வருவதாக அவன் கூறுகிறான். அவனுக்கு காதலிப்பதற்கு நாயகன் சில ஆலோசனைகள் கொடுக்கிறார். அதை பார்த்து வியந்துபோன கிங்ஸ் மோகன், நாயகனிடம் நட்பை ஏற்படுத்திக்கொண்டு அவன்கூடவே சுற்றி வருகிறான். நாயகன் சொல்லும் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்கிறான்.

    ஒருநாள் இருவரும் நாயகியை பார்க்கிறார்கள். நாயகிக்கு நாயகனை பார்த்தவுடனேயே பிடித்துப்போய்விடுகிறது. அவனைக் காதலிக்கத் தொடங்குகிறாள். ஒருகட்டத்தில் நாயகனுக்கும் அவள் மீது காதல் வருகிறது. இந்நிலையில், பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவளான நாயகியின் வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்புகிறது.

    இதனால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கொடைக்கானலுக்கு செல்கிறார்கள். அங்கு சென்று பதிவு திருமணம் செய்துகொள்ள நினைக்கும் பட்சத்தில், 15 நாட்கள் கழித்துதான் அவர்கள் பதிவு திருமணம் செய்துகொள்ள முடியும் என்ற சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த 15 நாட்களுக்குள் இருவருக்கும் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் இரண்டு பேருக்கும் மனக்கசப்புகளும் வருகிறது.

    இதையெல்லாம் மீறி இவர்கள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

    நாயகன் பாலா ஏற்கெனவே சின்னத்திரையில் தொகுப்பாளராக பார்த்தவர்தான். தற்போது பெரிய திரையில் நடிகராக புரமோஷன் ஆகியிருக்கிறார். நாயகனுக்குண்டான அம்சங்கள் இருந்தாலும், நடிப்பில் இன்னும் கொஞ்சம் தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் நம்முடைய ஆசை.

    நாயகி அஸ்வினிக்கு வழக்கம்போல் தமிழ் சினிமாவில் வந்துபோகின்ற கதாநாயகி வேடம்தான் என்றாலும் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார். நாயகனின் நண்பனாக வரும் கிங்ஸ் மோகன் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பு. வேறு எந்த கதாபாத்திரங்களும் சொல்லும்படி எதுவும் இல்லை.

    இயக்குனர் வெங்கட் ஜி.சாமி குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை மட்டுமே ஒரு காதல் கதையை எடுக்க முனைந்திருக்கிறார். முன்பாதி கலகலப்பாக நகர்ந்தாலும், பிற்பாதி இழுஇழுவென இழுக்கிறது. முன்பாதியில் காட்டிய கவனத்தை பிற்பாதியில் காட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

    நாகா தத்தாவின் இசையில் பாடல்கள் எல்லாம் கேட்கும் ரகமாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையும் தேவைக்கேற்றார்போல் அமைத்திருக்கிறார். சுரேஷ் தேவனின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக இருக்கிறது.

    மொத்தத்தில் ‘கண்டேன் காதல் கொண்டேன்’ ஒருமுறை காணலாம்.
    ரிஷிகேஷ், விவேக் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரம்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    நாயகன் ரிஷிகேஷ், விவேக், அம்ஷத், அர்ஜுன் சிதம்பரம், சஞ்சிதா ஷெட்டி இந்த ஐந்து பேரும் கொள்ளையடித்து தங்களது தேவையை பூர்த்தி செய்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் கொள்ளையடிக்கும் பணத்தில், ஒரு பங்கை நரேனுக்கும் கொடுத்து வருகின்றனர்.

    சிறு சிறு கொள்ளைகளை நடத்தி வரும் இவர்களுக்கு ஒரு கண்டெய்னரில் விலையுயர்ந்த வைர கற்கள் வருவது நரேன் மூலமாக தெரிகிறது. அதை கொள்ளையடித்தால் தங்கள் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்று முடிவு செய்து, அதை கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார்கள்.

    அதன்படி, அந்த கண்டெய்னரில் உள்ள வைர கற்களை கொள்ளையடிக்கின்றனர். கொள்ளையடித்த கற்களை எல்லாம் தன்னுடைய இடத்துக்கு கொண்டு வரும்படி கூறும் நரேன் மீது ரிஷிகேஷுக்கு சந்தேகம் வருகிறது. இதனால் அந்த கற்களை  எல்லாம் வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்கிறார்.

    அப்போது, நரேனின் நண்பனான அர்ஜுன் சிதம்பரம் இவர்களுடன் சேர்ந்துகொண்டு, தனக்கு தெரிந்த பங்களாவில் அந்த கற்களை பத்திரமாக வைக்கலாம் என்று ஆலோசனை கூறுகிறான். அதன்படி, அந்த பங்களாவுக்குள் தாங்கள் கொள்ளையடித்த கற்களை கொண்டு போய் சேர்க்கின்றனர். அந்த பங்களாவுக்குள் ஒரு பேய் இருக்கிறது. அந்த பேய் இவர்களை அங்கிருந்து வெளியே செல்லவிடாமல் பங்களாவுக்குள்ளேயே சிறை வைக்கிறது. இதனால் பயந்துபோன அர்ஜுன் சிதம்பரம் நரேனுக்கு போன்போட்டு தகவல் சொல்ல, அடுத்தநாளே அர்ஜுன் இறந்துபோகிறான்.

    இறுதியில், இவர்களை வெளியே போகவிடாமல் தடுக்கின்ற பேய் யார்? அந்த பேய் நரேனின் ஆளை மட்டும் கொல்ல காரணம் என்ன? நரேனுக்கும் அந்த வீட்டில் உள்ள பேயுக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகன் ரிஷிகேஷ் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடித்தவர். அந்தவொரு தகுதியை மட்டுமே வைத்துக்கொண்டு இந்த படத்தில் கதாநாயகனாக களமிறங்கியிருக்கிறார். இந்த படத்தில் விவேக் பேசும் வசனம்தான் இவருடைய நடிப்புக்கும் பொருந்தியிருக்கிறது. அதாவது, இந்த மூஞ்சில மட்டும் ஏன் நடிப்பே வரமாட்டேங்குது? என்பதுதான். ரொம்பவும் அப்பாவியான இவரது முகத்தில் நடிப்பை வரவழைக்க ரொம்பவும் திணறியிருக்கிறார். வெறுமனே பொம்மை போல்தான் இவருடைய ஒட்டுமொத்த நடிப்பும் இருக்கிறது.

    சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ் என இரு கதாநாயகிகள் இருந்தாலும் படத்தில் எந்த காதல் காட்சிகளும் இல்லை. சஞ்சிதா ஷெட்டி படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். ஆனால், மியா ஜார்ஜுக்கே பிற்பாதியில் மட்டுமே வாய்ப்பு கொடுத்திருககிறார்கள். இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    விவேக் தனது பாணியிலான காமெடியில் மீண்டும் கலக்கியிருக்கிறார். அவ்வப்போது இவர் கொடுக்கும் கவுண்டர் வசனங்கள் தியேட்டரில் விசில் சத்தத்தை எழுப்புகிறது. நரேன் மீண்டும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் வந்து மிரட்டியிருக்கிறார். ஆரம்பத்தில் இவருடைய கதாபாத்திரம் வேறுவிதமாக சென்றாலும், பிற்பாதியில் இவர்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று சொல்லும் விதம் அருமை.

    இயக்குனர் சாய் பரத், தமிழ் சினிமாவுக்கு பழகிப்போன ஒரு பேய் கதையையே வித்தியாசமான கோணத்தில் படமாக்க முயற்சி செய்திருக்கிறார். படத்தில் காமெடி, திரில்லர் என இரண்டையும் சரியாக கலந்து கதையை கொண்டு போயிருக்கிறார். கிராபிக் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    அனிருத்தின் பிண்ணனி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. சில இடங்களில் இவரது பின்னணி இசை நம்மை மிரள வைக்கிறது. பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு நிறைவை கொடுத்திருக்கிறது. விக்னேஷ் விசுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘ரம்’ கிக் ஏற்றுகிறது. 
    ரகுமான் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பகடி ஆட்டம்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    நாயகன் சுரேந்தர் பெண்கள் விஷயத்தில் ரோமியோ. பார்க்கிற பெண்களையெல்லாம் அடையவேண்டும் என்ற எண்ணத்திலேயே சுற்றுபவர். இவருடைய அப்பா நிழல்கள் ரவி பெரிய செல்வந்தர், அம்மா ராஜஸ்ரீ பொறுப்பான குடும்பத் தலைவி. மகன் மீது அதிக பாசத்தை பொழிபவர்.

    இந்நிலையில், சுரேந்தர் ஒருநாள் மோனிகாவை பார்த்ததும் அவள்மீது ஆசைப்படுகிறார். மோனிகாவின் குடும்பம் அவளுடைய அக்கா கௌரி நந்தா ஆட்டோ ஓட்டி கொண்டுவரும் பணத்தில்தான் பிழைப்பு நடத்தி வருகிறது. தனது குடும்ப சூழ்நிலையை மறந்த மோனிகா தன் மீது சுரேந்தர் காட்டும் அக்கறையை காதல் என்று நம்பி அவனது வலையில் விழுகிறாள்.

    இதை அறிந்த கௌரி நந்தா, தனது தங்கையை அழைத்து கண்டிக்கிறாள். அக்காவின் கண்டிப்பில் மனம் திருந்திய மோனிகாவை தனது வழிக்கு கொண்டுவர சுரேந்தர் முயற்சி செய்கிறான். தனது அம்மாவிடம் அவளைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் கூறிவிட்டதாகவும், அம்மாவிடம் வந்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தனது வீட்டிற்கும் அழைத்து செல்கிறான்.

    இதையெல்லாம் உண்மை என்று நம்பி செல்லும் மோனிகாவை, சுரேந்தர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவளை தன்வசப்படுத்தி நெருக்கமாக இருக்கிறான். அதை வீடியோவும் எடுத்துவிடுகிறான். இதனால், தனது மானம் பறிபோனதே என்று பதறும் மோனிகா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்கிறாள்.

    தனது தங்கையின் இந்த பரிதாப முடிவுக்கு காரணமான சுரேந்தரை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று துடிக்கிறாள் கௌரி நந்தா. இந்நிலையில், சுரேந்தர் திடீரென காணாமல் போகிறார். அவரை கண்டுபிடிக்க நிழல்கள் ரவி தனது செல்வாக்கை பயன்படுத்தி கமிஷனர் அளவில் போய் பேசுகிறார்.

    இதனால், சுரேந்தரை கண்டுபிடிக்க அசிஸ்டென்ட் கமிஷனரான ரகுமான் நியமிக்கப்படுகிறார். அவர் சுரேந்தரை தனது போலீஸ் மூளையால் கண்டுபிடித்தாரா? காணாமல் போன சுரேந்தர் என்ன ஆனார்? என்பதற்கு பிற்பாதியில் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

    சுரேந்தர் பெண்கள் மீது மோகம் கொண்டவராக ஒரு ரோமியோ போல் படத்தில் வலம் வந்திருக்கிறார். படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். அதேபோல், நாயகியான மோனிகாவும் தோற்றத்திலேயே நம்மை கவர்கிறார். பள்ளிக்கூடத்திலிருந்து கல்லூரிக்கு போகும் பருவத்தில் உள்ள பெண்ணுக்குண்டான உடல்மொழியில் தனது நடிப்பை அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.

    ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த ரகுமான், இந்த படத்திலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். காணாமல் போன சுரேந்தரை கண்டுபிடிக்க இவர் வகுக்கும் வியூகங்கள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. ராஜஸ்ரீ, பையன் என்ன தவறு செய்தாலும், அது தனது மகன் செய்யவில்லை என்பதுபோன்ற வெகுளியான அம்மாவாக வலம் வந்திருக்கிறார். இவருடைய நடிப்பு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சுரேந்தரின் தந்தையாக வரும் நிழல்கள் ரவி, தனது அதிகாரப் பலத்தால் ஆணவத்துடன் பேசும் இடங்களில் எல்லாம் மிளிர்கிறார்.

    இயக்குனர் ராம் கே.சந்திரன், காதல் என்ற போர்வையில் பெண்களை நாசம் செய்யும் மோசமான இளைஞர்களுக்கு கடைசியில் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை இப்படத்தில் அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். முதல் பாதி, சுரேந்தர் மற்றும் மோனிகாவின் பின்புலம் இதைப்பற்றியே கதை நகர்வதால், படம் மெதுவாக நகர்வது போல் தோன்றுகிறது. ஆனால், பிற்பாதியில் ரகுமான் வந்தபிறகு, காணாமல் போனவனை கண்டுபிடிக்கும் விசாரணையில் படம் நகர்வதே தெரியாமல் செல்கிறது. முடிவும் எதிர்பார்த்தபடி அமைந்திருப்பது மிகச் சிறப்பு.

    கார்த்திக் ராஜா இசையில் அவரது அப்பா இளையராஜாவின் பாடல்களில் இரண்டை தனது பாணியில் அமைத்துக் கொடுத்திருக்கிறார். அந்த பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையும் கிரைம் திரில்லருக்குண்டான உணர்வை கொடுத்திருக்கிறது. கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘பகடி ஆட்டம்’ ஆடலாம்.
    பரத், கதிர், சஞ்சிதா ஷெட்டி, சாந்தினி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘என்னோடு விளையாடு’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    அக்கவுண்டன்டாக இருக்கும் பரத்துக்கு குதிரைப் பந்தயத்தில் மிகவும் ஆர்வம். பந்தயத்தில் எந்த குதிரை தோற்கும், எந்த குதிரை ஜெயிக்கும் என்பதை தனது கணக்கு மூளையால் கணிப்பதில் வல்லவர். இருப்பினும், இந்த குதிரை பந்தயத்தில் லட்சக்கணக்கான பணத்தை இழந்திருப்பார். இதற்கான காரணத்தை யோசிக்கும்போது, குதிரை பந்தயத்தில் மேட்ச் பிக்சிங் நடப்பதை கண்டுபிடிக்கிறார்.

    ஒருகாலத்தில் குதிரை பந்தயத்தில் கொடிகட்டிப் பறந்த ராதாரவி, ஒரு தோல்வியால் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். பின்னர் நம்பர் 1 இடத்தை பிடிப்பதற்காக மீண்டும் போட்டியில் கலந்துகொள்ள வரும் ராதாரவி, தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருக்கும் யோக் ஜேப்பியிடம் பேரம் பேசுகிறார். இதை அறியும் பரத், அந்த பணத்தை கைப்பற்ற நினைக்கிறார்.

    இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மற்றொரு முனையில் பெண்களே பிடிக்காத கதிர், வேலை விஷயமாக சென்னை வரும்போது, கட்டாயத்தின் பேரில் சஞ்சிதா ஷெட்டியுடன் ஒரே வீட்டில் தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. சஞ்சிதா ஷெட்டியின் அப்பா, வீட்டின் பேரில் வாங்கிய கடனால், வீடு ஏலத்துக்குப் போகவே, அந்த வீட்டை எப்படியாவது மீட்கவேண்டும் என்று நினைக்கிறாள். இதை அறியும் கதிர், அவள் மீது பரிதாபப்பட்டு, அவளுக்காக அந்த பணத்தை தயார் செய்து அந்த வீட்டை மீட்டுக் கொடுக்க முடிவு செய்கிறார்.

    இறுதியில், பரத், கதிர் இருவரின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்ததா? இவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

    சென்னையின் முக்கிய பகுதியான கிண்டியில் நடைபெறும் குதிரை பந்தயத்தை இதுவரை தமிழ் சினிமாவில் ஒருசில காட்சிகள்தான் பெயரளவிற்கு வைத்திருந்தார்கள். குதிரை பந்தயத்தை மையமாக வைத்து முழுநீள படமாக இதுவரை எடுத்ததில்லை. இப்படியொரு கதையை தேர்வு செய்ததற்காகவே இயக்குனர் அருண் கிருஷ்ணசாமியை பாராட்டலாம். குதிரை பந்தயத்துக்கு பின் இருக்கும் அரசியல், பந்தயத்தில் வெல்லத் தேவையான சாதுர்யம் ஆகியவற்றை கதையாக்கி, குழப்பாத திரைக்கதை அமைத்து விறுவிறுப்பான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்.

    நாயகன் பரத்துக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்திருக்கும் படம். பந்தயத்தில் பணத்தை இழந்தாலும் அதை மீட்பதற்காக இவர் சாதுர்யமாக காய் நகர்த்தும் பாணி அனைவரையும் கவர்ந்திருக்கிறது. பெண்களை கண்டாலே எட்டி நிற்கும் கதாபாத்திரத்தில் கதிரின் நடிப்பு அசத்துகிறது. அதேநேரத்தில், ஒரு பெண்ணுக்காக அவர் படும் கஷ்டங்களையும் படத்தில் அழகாக பிரதிபலித்திருக்கிறார்.

    நாயகிகளான சாந்தினிக்கும், சஞ்சிதா ஷெட்டிக்கும் சரிசமமான கதாபாத்திரத்தை கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பதுபோல் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். ராதாரவி படத்தில் வந்தாலே போதும் என்று கூறும் அளவிற்கு, இந்த படத்திலும் ரொம்பவும் அசால்ட்டாக வந்து மிரட்டிவிட்டு போயிருக்கிறார்.

    யுவாவின் கேமரா, குதிரை பந்தயத்தில் புகுந்து விளையாடியிருக்கிறது. மற்ற காட்சிகளையும் ரொம்பவும் துல்லியமாக படமாக்கியிருக்கிறது. மோசஸ், சுதர்சன் எம்.குமார் ஆகியோரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான் என்றாலும், சுதர்சன் எம்.குமாரின் பின்னணி இசை கதையோடு பயணிக்கும்படி அமைந்திருப்பது பலம்.

    படத்தில் ஆங்காங்கே ஒருசில குறைகள் இருந்தாலும், படம் பார்க்கும் அனுபவத்தை அது கெடுக்கவில்லை. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஒரு திருப்தியான திரில்லர் படத்தை பார்த்த உணர்வை கொடுக்கிறது.

    மொத்தத்தில் ‘என்னோடு விளையாடு’ விளையாடலாம். 
    இளைஞர்களின் உருவாக்கத்தில் வெளிவந்துள்ள காதல் காவியமான ‘காதல் கண்கட்டுதே’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    நாயகன் கே.ஜி. படித்து முடித்துவிட்டு வேலை தேடி வருகிறான். நாயகி அதுல்யா ஒரு பத்திரிகையில் நிருபராக பணிபுரிந்து வருகிறாள். இருவரும் ஒருமுறை சந்தித்து நண்பர்களாக பழகி வருகிறார்கள். இவர்களுடைய நட்பு நாளடைவில் காதலாக மாறுகிறது.

    இந்நிலையில், அதுல்யா வேறு ஊருக்கு மாற்றலாக போகிறாள். இருப்பினும், நாயகனுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துகொண்டே இருக்கிறாள். அதுல்யாவுக்கு கூடவே பணிபுரியும் ஒருவரின் நட்பு கிடைக்கிறது. அவனிடம் பழகுவதை தனது காதலனிடம் மறைக்காமல் போனில் அவனைப் பற்றிய தகவலை சொல்கிறாள்.

    அடிக்கடி, தன்னுடன் வேலை பார்க்கும் அந்த நபரைப் பற்றி நாயகி கூறுவதை கேட்கும் நாயகனுக்கு ஒருகட்டத்தில் அவள்மீது வெறுப்பு வருகிறது. இதனால், இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு, பிரிந்து போகிறார்கள். இந்த பிரிவு தற்காலிகமாக இருந்ததா? அல்லது நீடித்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    முற்றிலும் புதுமுகங்களை வைத்து ஒரு அழகான காதல் படத்தை கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் சிவராஜ். பெரிய, பெரிய இயக்குனர்களால்தான் இந்த மாதிரியான அழகான, நேர்த்தியான படத்தை கொடுக்க முடியும் என்ற நிபந்தனையும் மீண்டும் ஒரு புதிய இயக்குனர் முறியடித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

    இன்றைய கால இளைஞர்களின் வாழ்க்கையை ரொம்பவும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். படத்தில் நடித்திருக்கிற கதாபாத்திரங்கள் அனைவரும் புதுமுகங்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    காதல், மோதல், ஊடல் என தமிழ் சினிமாவுக்கு அதர பழசான கதையாக இருந்தாலும், அதை எடுத்தவிதம் அருமை. ரொம்பவும் எளிமையான நடிப்பு, ஹீரோயிசம் இல்லாத கதாபாத்திரங்கள் என படத்தில் ஒவ்வொன்றும் பாராட்டக்கூடியதாக இருக்கின்றன.

    பவணின் இசையில் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது. பின்னணி இசையிலும் கதைக்கு தேவையானதை கொடுத்து கைதட்டல் பெறுகிறார். சிவராஜின் ஒளிப்பதிவு காட்சிகள் ஒவ்வொன்றையும் கலர்புல்லாக காட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘காதல் கண்கட்டுதே’ கைதட்டலாம்.
    1971-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போருக்கு காரணமான ‘காஸி’ என்ற பாக். நீர்மூழ்கி கப்பலை இந்திய கப்பற்படை வீழ்த்தி அழித்ததை மையமாக வைத்து வெளிவந்து படமே ‘காஸி’. இப்படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    இந்தியாவின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான INS விக்ராந்தின் செயல்திறனை நினைத்து பயப்படும் பாகிஸ்தான் கடற்படை, ராணுவத்தையோ, விமானங்களையே அனுப்பி அதை அழிக்கமுடியாத நிலையில், அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட அதிநவீன போர்க்கப்பலான ‘காஸி’யை வைத்து INS விக்ராந்த்தை அழிக்க, அது நிறுத்தப்பட்டிருக்கும் விசாகப்பட்டினம் துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.

    இது இந்திய உளவுத்துறை அறிந்து, இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய தலைமையகத்தில் உயர் அதிகாரிகளாக இருக்கும் ஓம் பூரி மற்றும் நாசருக்கு எச்சரிக்கிறது. அவர்கள் கிழக்கு கடற்கரையோர பாதுகாப்பை உறுதிப்படுத்த கோபக்கார கேப்டன் கே.கே.மேனன் மற்றும் சாதுர்யமான கேப்டன் ராணா ஆகியோர் பணிபுரியும் எஸ்21 நீர்மூழ்கி கப்பலை, காஸியை எதிர்க்க அனுப்புகிறார்கள்.

    காஸியை ஒப்பிடும்போதும் பலம் குறைந்த எஸ்-21 எப்படி பாகிஸ்தானின் சதியை முறியடித்து, அதற்கு கடலுக்குள்ளேயே எப்படி சமாதி கட்டுகிறார்கள் என்பதுதான் படத்தின் மீதி விறுவிறுப்பான கதை.

    படத்தின் நாயகன் ராணா டகுபதி, கப்பற்படை அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவர் அறிமுக காட்சியில் நடந்துவரும் கம்பீரமே இதற்கு சாட்சி. அதேபோல், வசனங்கள் உச்சரிப்பிலும் நமக்கு வெறி ஏற்றியிருக்கிறார். மற்றொரு கேப்டனாக வரும் கே.கே.மேனன் படத்தின் இன்னொரு ஹீரோ என்று சொல்லலாம். எதிரியை பார்த்தாலே அழித்துவிட வேண்டும் என்கிற இவரது ஆக்ரோஷமான நடிப்பு படத்தில் நன்றாகவே எடுபட்டிருக்கிறது.

    மற்றபடி, கப்பலின் மற்றொரு கேப்டனாக வரும் அதுல் குல்கர்னியும் இவர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு தனது சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். அகதியாக வரும் டாப்சியை பார்க்கும்போதே நமக்கும் சோகம் தொற்றிக் கொள்கிறது. மற்றபடி, எஸ் 21-ல் பணிபுரியும் வீரர்கள், ஓம் பூரி, நாசர் என அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்து நாம் ஒரு ஆழ்கடல் பயணம் செய்ததுபோன்ற ஒரு உணர்வை கொடுத்திருக்கிறார்கள்.

    அறிமுக இயக்குனர் சங்கல்ப், தான் புதுமுகம் என்று சொல்லமுடியாத அளவுக்கு ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படத்தின் திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார். நாம் படம் பார்க்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் ஒவ்வொரு சம்பவங்களையும் மிகவும் திரில்லாக நகர்த்தியிருக்கிறார். நாம் செய்திதாள்களில் படித்த சம்பவங்களை நேரில் பார்க்கும் அனுபவம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஒருசில காட்சிகள் நம்மை உணர்ச்சி பரவசத்தில் ஆழ்த்துகிறது என்றால் அது மிகையாகாது.

    குறிப்பாக, காஸியின் தாக்குதலில் இந்தியாவின் எஸ்-21 நீர்மூழ்கி கப்பல் லேசாக விபத்துக்குள்ளாகி தரை தட்டிவிடும். அப்போது, ஒரு குறிபிட்ட தொலைவு வரையே எஸ்-21-ஆல் தாக்குதல் நடத்த முடியும். ஆனால், காஸியோ அந்த எல்லையை தாண்டி நிற்கும். இருப்பினும், இவர்கள் சூழ்ச்சி வலை செய்து காஸியை தாக்கமுடியும் என்ற எல்லைக்கு கொண்டு வர வைக்கும் காட்சிகளில் எல்லாம் கண்ணிமைக்க முடியாமல் வைக்கிறது.

    மதியின் ஒளிப்பதிவு நாம் நீர்மூழ்கி கப்பலுக்குள் பயணிக்கும் உணர்வை கொடுத்திருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகளில் மிகவும் தத்ரூபமாக கையாளப்பட்டிருக்கிறது. கே-யின் பின்னணி இசை ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு இருக்கிறது. இடத்திற்கு தகுந்தாற்போல் தேவையான இசையை மட்டுமே கொடுத்து கைதட்டல் பெறுகிறார்.

    மொத்தத்தில் ‘காஸி’ போர் வீரர்களுக்கு பெருமை சேர்த்தது.
    சினிமாவின் முக்கிய கலைஞர்களான ‘லைட்மேன்’களின் நிஜ-நிழல் வாழ்க்கையை சொல்லும் படமாக உருவாகியுள்ள ‘லைட்மேன்’ படத்தின் விமர்சனத்தை கீழே விரிவாக பார்ப்போம்.
    கார்த்திக் நாகராஜன் கிராமத்து கூத்து கலைஞர். இவர் சினிமா ஆசையால் சென்னை வருகிறார். கூடவே தன்னுடைய மனைவியையும் அழைத்து வருகிறார். ஆனால் நடிக்க எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. எனவே, ஒரு நடிகையின் மேக்கப் மேனின் உதவியை நாடுகிறார். அவர் மூலம் சினிமாவில் லைட்மேன் ஆக பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கிறது.

    இந்த வேலை கடினமாக இருக்கவே, அவரை மதுப்பழக்கம் தொற்றிக் கொண்டு, அவரது பாதையை மாற்றிவிடுகிறது. இப்படியாக உண்மையிலேயே ‘லைட்மேன்’களாக இருப்பவர்களின் வாழ்க்கையை அவர்களே சொல்வதும் படமாக்கப்பட்டிருகிறது.

    திரைஉலகில் லைட்மேன்களின் பங்கு என்ன? திரை உலகத்துக்கு வெளிச்சம் தரும் இவர்களின் வாழ்க்கை இருள் சூழ்ந்து இருப்பது ஏன்? என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்வது மீதிக்கதை.

    நாயகன் கார்த்திக் நாகராஜன் கூத்து நடிகராக வரும் போது, பேசும் நீண்ட வசனங்களும், தமிழ் உச்சரிப்பும் அருமை. லைட்மேன் பாத்திரமாகவே மாறி ரசிகர்களை ஒன்ற வைக்கிறார். அவரது மனைவியாக வரும் ஜெனிபர், லைட்மேன்கள் வாசகன், கோவிந்த சுவாமிநாதன் உள்பட அனைவரும் தங்கள் பாத்திரங்களை சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார்கள்.

    இயக்குனர் வெங்கடேஷ் குமார்ஜியின் வசனம் ‘லைட்மேன்’ படத்துக்கு பலம் சேர்த்து இருக்கிறது. பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்த இவரது படைப்பும் குருவின் யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது. கதையுடன், லைட்மேன்களின் வாழ்க்கை, வலி, வேதனைகளையும் அவர்களிடமே கேட்டு படத்துடன் இணைத்திருப்பது புதிய யுக்தி.

    பல நடிகர்-நடிகைகளுக்கு ஏணியாக இருக்கும் ‘லைட்மேன்கள்’ பற்றி இதுவரை வெளிச்சத்துக்கு வராத உண்மைகளை, சோக வாழ்க்கையை இயக்குனர் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். ராகுல் ஒளிப்பதிவு நெகிழ வைக்கும் யதார்த்தம். டோனி பிரிட்டோவின் இசையை ரசிக்கலாம். காட்சிகளுக்கும் பலம் சேர்க்கிறது.

    லைட்மேன்களின் இருண்ட வாழ்க்கையை தனிகதையாக உருவாக்கி அதில் கொஞ்சம் சினிமா அம்சங்களையும் சேர்த்து இருந்தால், படம் ரசிகர்களையும் தன் வெளிச்சத்தால் கவர்ந்து இருக்கும். என்றாலும், இயக்குனர் சொல்ல நினைத்ததை லைட்மேன்களின் கதையுடன் அனுபவத்தையும் கலந்து சொல்லி அவரது நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

    மொத்தத்தில் ‘லைட்மேன்’  திரை கலைஞர்களுக்கு வெளிச்சம்.
    ‘ரிங்ஸ்’ என்ற பெயரில் திரில்லர் படமாக ஏற்கெனவே வெளிவந்த இரண்டு பாகங்களை தொடர்ந்து, தற்போது மூன்றாம் பாகம் வெளிவந்திருக்கிறது. இந்த படம் எப்படி திரில்லராக இருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    ரிங்ஸ் என்ற வீடியோவை பார்த்தவர்கள் அடுத்த 7 நாட்களுக்குள் இறந்துவிடுகிறார்கள். அந்த வீடியோவை பார்த்தவர்களுக்கு இது ஒரு சாபமாக ஆகிவிடுகிறது. இந்த சாபத்தில் இருந்து அவர்கள் விடுபடவேண்டுமென்றால், அந்த வீடியோவை பார்த்தவர் ஒரு காப்பி எடுத்து, அதை இன்னொருவரை பார்க்க வைக்க வேண்டும். இதுதான் படத்தின் கதைக்கரு.

    படத்தோட நாயகன் ஜானி காலெக்கியும், ஏமி தெக்கார்டியனும் நெருங்கிய காதலர்கள். இந்நிலையில், ஒருநாள் ஜானி படிப்பதற்காக ஏமியை பிரிந்து வெளியூர் செல்ல வேண்டியிருக்கிறது. அங்கு சென்ற நிலையிலும், தினமும் தனது காதலியிடம் ஜானி வீடியோ மூலம் பேசிக் கொண்டே இருக்கிறார்.

    இந்நிலையில், ஜானி படிக்கும் ஊரில் ஒரு பேராசிரியர் இருக்கிறார். அவருக்கு ரிங்ஸ் சம்பந்தமான வீடியோ ஒன்று கிடைக்கிறது. அந்த வீடியோவால் அவர் பாதிக்கப்படுகிறார். அதிலிருந்து அவர் தப்பிப்பதற்காக ஒவ்வொரு காப்பியாக எடுத்து வெளியிட்டு வருகிறார். இதில் ஜானியும் சிக்கிவிடுகிறார். இதன்பின்னர், தன்னுடன் தொடர்பில்லாமல் இருக்கும் ஜானியை தேடி ஏமி வருகிறாள்.

    இறுதியில், அவள் தனது காதலனை கண்டுபிடித்தாளா? தனது காதலனை பிடித்திருக்கும் சாபத்திலிருந்து அவனை மீட்டாளா? என்பதே மீதிக்கதை.

    ஏற்கெனவே, இந்த படத்தின் இரண்டு பாகங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் இந்த பாகத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை கொடுத்திருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை இந்த படம் ஓரளவுக்கு திருப்திப்படுத்தியிருக்கிறது. படத்தில் பெரும்பாலான காட்சிகள் திரில்லை கொடுக்காவிட்டாலும், ஒன்றிரண்டு காட்சிகள் கண்டிப்பாக திரில்லை கொடுத்திருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

    தனது காதலனுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்குவதற்காக ஹீரோயின் செல்லும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு டுவிஸ்டுகள் அவிழ்க்கப்படும். அந்த காட்சிகள் எல்லாம் ரொம்பவும் சுவாரஸ்யமாகவும், திரில்லாகவும் இருக்கும். படத்தின் கதாநாயகன், கதாநாயகியை பொறுத்தவரை ரெண்டு பேரும் ரொம்பவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் பேயை பார்த்து நடுங்கும்போது நமக்கும் பயம் வருகிறது.

    மேலும், இந்த படத்தில் கிராபிக்ஸ் பணிகள் ரொம்பவும் கவனிக்கப்பட வேண்டியவை. பேய் வரும் காட்சிகள் கிராபிக்ஸில் உருவாக்கியிருந்தாலும், அதை மிகவும் நேர்த்தியாக செய்திருப்பது சிறப்பு. டிவியில் இருந்து பேய் வரும் காட்சிகளில் எல்லாம் நம்மை உண்மையிலேயே நடுநடுங்க வைத்திருக்கிறார்கள்.

    ஷாரோயின் மியரின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரொம்பவும் தத்ரூபமாக படமாகியிருக்கின்றன. ஒவ்வொரு இடத்தில் இவருடைய ஒளிப்பதிவு கிராபிக்ஸையும் தாண்டி படமாகியிருப்பது சிறப்பு. மாத்தேவ் மார்கேசன் பின்னணி இசை படத்திற்கு மேலும் திரில்லிங்கை கொடுத்திருக்கிறது. படத்தில் இருக்கும் சிறிய பொருளில் வரும் சத்தத்தை வைத்தே நமக்கு திரில் கொடுக்கும் வித்தையை கற்று வைத்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘ரிங்ஸ்’ பயமுறுத்துகிறது.
    64 கலைகளில் ஒன்றான கூடு விட்டு கூடு பாய்வதை மையமாக வைத்து ‘பிரகாமியம்’ என்ற படம் வெளியாகியுள்ளது. இப்படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    ஆரூடத்திற்கும் உளவியலுக்கும் இடையில் நடைபெறும் மோதலில் ஏற்படும் விளைவுகளே படத்தின் கதை. மனோதத்துவ நிபுணரான நாயகன் பிரதாப், இவருக்கு ஜோசியத்தின் மீது நம்பிக்கையே கிடையாது. கை, கால் செயலிழந்த பிரதாப்புக்கும் ஜோசியர் ஒருவருக்கும் இடையே மோதல் இருந்துகொண்ட வருகிறது.

    ஒருநாள் ஜோசியர் பிரதாப்பை சந்தித்து, உனக்கு திருமணமே நடக்காது, அப்படி நடந்தாலும் உன் மனைவியோடு நீண்டகாலம் வாழமுடியாது. அதேபோல், உனக்கு குழந்தையும் பிறக்காது, அப்படி பிறந்தாலும் இது உயிரோடு இருக்காது. உன்னால் இந்த வாழ்க்கையை நிம்மதியாகவும் வாழமுடியாது என்று கூறிவிட்டு செல்கிறார்.

    இதை பொய்யாக்கி நிரூபிக்க அவர் எடுக்கிற சில முயற்சிகள் சமூகத்தில் பலவித விளைவுகளை ஏற்படுத்துகிறது. அந்த விளைவுகள் என்னென்ன? ஜோசியத்தை அவர் பொய்யாக்கி காட்டினாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

    படத்தின் தலைப்பான பிரகாமியம் என்பது 64 கலைகளில் ஒன்றாகும். மற்றொருவரின் மனதை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கலையான கூடு விட்டு கூடும் பாயும் வித்தையை இது குறிக்கிறது. தமிழ் சினிமாவுக்கு அரிதான இந்த கதையை இயக்குனர் பிரதாப் தைரியத்துடன் கையிலெடுத்திருக்கிறார். ஆனால், அதை அழகாகவும், தெளிவாகவும் காட்சிப்படுத்துவதற்கு தவறியிருக்கிறார்.

    படத்தின் இயக்குனரும், ஹீரோவும் ஒருவரே. இரண்டுவிதமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், இரண்டுமே ரொம்பவும் மிகையாக இருப்பதால் ரசிக்க முடியாமல் போகிறது. இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள். இரண்டு பேரின் நடிப்பும் ரொம்பவும் செயற்கையாக தெரிகிறது. படத்தில் அனைவரின் வசனங்கள் உச்சரிப்பும் ரொம்பவும் செயற்கையாக தெரிகிறது. எனவே, அவர்கள் அனைவரையும் கதையோடு ஒன்றி பார்க்க முடியவில்லை.

    மொத்தத்தில் ‘பிரகாமியம்’ பிரியமில்லை.
    சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் ‘எஸ்3’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் போலீஸ் கமிஷனர் ஒருவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை பற்றி துப்பு துலக்குவதற்கு ஆந்திர அரசு, தமிழக போலீஸின் உதவியை நாடுகிறது. எனவே, இந்த கொலையை பற்றி விசாரணை செய்வதற்காக தமிழக அரசு சார்பில் சூர்யா நியமிக்கப்படுகிறார்.

    இதற்காக விசாகப்பட்டினம் வரும் சூர்யாவை விமான நிலையத்தில் இருந்தே அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பின்தொடர்கிறார் ஸ்ருதிஹாசன். அதேசமயம் சூர்யா, கமிஷனரை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்குகிறார்.

    ஒருகட்டத்தில் போலீஸ் கமிஷனர் கொலையில் பெரிய முக்கிய புள்ளிகளின் தொடர்பு இருப்பது சூர்யாவுக்கு தெரிய வருகிறது. அதாவது, வெளிநாட்டிலிருக்கும் வெளிநாட்டு கழிவுகளை இந்தியாவுக்குள் கொண்டுவந்து, ஒரு மர்ம கும்பல் அதை எரிக்கும்போது, காற்று மாசுபட்டு நிறைய குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், அந்த கும்பல் வெளிநாட்டில் காலாவதியான மருந்துகளை இந்தியாவுக்கு கொண்டு வந்து அதை விற்பனை செய்வதையும் அறிகிறார். இந்த கும்பலை பிடிக்க முயற்சி எடுத்த கமிஷனர் அந்த கும்பலால் கொலை செய்யப்பட்டதும் சூர்யாவுக்கு தெரிய வருகிறது. மேலும், இந்த கும்பலுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் புள்ளிகளும், பெரிய பண முதலைகளும் இருப்பது தெரிய வருகிறது.

    இதையெல்லாம் தனது போலீஸ் மூளையால் சூர்யா கண்டுபிடித்து, சட்டத்தின் முன் அவர்களை எப்படி தண்டித்ததார்? சூர்யாவை தொடர்ந்து பின்தொடரும் ஸ்ருதிஹாசனின் பின்னணி என்ன? என்பதை மிகவும் விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.

    ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகமாக ‘எஸ்-3’ படம் வெளிவந்திருக்கிறது. கடந்த இரண்டு பாகத்திலும் துரை சிங்கமாக சீறிப் பாய்ந்த சூர்யா, இந்த படத்திலும் தனது ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் கூட்டியிருக்கிறார். படத்தில் எதிரிகளிடம் ஆக்ரோஷமாக இவர் பேசும் வசனங்களில் எல்லாம் அனல் தெறிக்கிறது. படத்தின் பெரும்பகுதியை இவரே ஆக்கிமிரத்திருக்கிறார். எனவே, தனது கதாபாத்திரத்தை உணர்ந்து அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

    ஸ்ருதிஹாசன் வழக்கம்போல் இல்லாமல் இப்படத்தில் பொறுப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அனுஷ்காவுக்கு முந்தைய பாகங்களைப் போல் இப்படத்தில் ஒன்றிரண்டு காட்சிகள் வந்து போவது மாதிரியான கதாபாத்திரம்.

    படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் மிகவும் வேகமாக நகர்வதால் சூரியின் காமெடியை யோசித்து சிரிப்பதற்கே நேரம் இல்லாமல் போகிறது. இவருடன் வரும் ரோபோ சங்கருக்கும் இந்த படத்தில் சிறப்பான காமெடி, குணச்சித்திர கதாபாத்திரம். அதை உணர்ந்து அவர் சிறப்பாக செய்திருக்கிறார். பாடகர் கிரிஷ் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். முதல் படத்திலேயே அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    அரசியல்வாதியாக வரும் சரத் சக்சேனா பார்வையாலேயே மிரட்டுகிறார். இளம் வில்லனாக வரும் தாகூர் அனூப் சிங் தமிழுக்கு புதிது என்றாலும், தனது கதாபாத்திரத்தை அழுத்தமான நடிப்பால் அழகாக பதிவு செய்திருக்கிறார். முந்தைய பாகங்களில் நடித்த ராதாரவி, யுவராணி, நாசர், விஜயகுமார் ஆகியோரும் தங்களது அனுபவ நடிப்பால் படத்திற்கு பலம் கொடுத்திருக்கிறார்கள்.

    முந்தைய பாகங்களைப் போலவே இந்த பாகத்தையும் இயக்குனர் ஹரி, பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு போயிருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை காட்சிகளின் வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறார். ஆனால், இந்த வேகம் ஒருகட்டத்தில் சலிப்படைய செய்துவிடுகிறது.

    கனல் கண்ணனின் சண்டைக் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலம். வி.டி.விஜயன், டி.எஸ்.ஜாய் ஆகியோர் படத்தொகுப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் வேகத்தை சற்று குறைத்து ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் ரசிப்பதற்கு நேரம் கொடுத்திருக்கலாம். பிரியனின் ஒளிப்பதிவில் சண்டை காட்சியில் கேமரா சுழன்று விளையாடியிருக்கிறது. பாடல் காட்சிகளிலும் இவரது கேமரா பளிச்சிடுகிறது.

    ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் பார்க்கவும், ரசிக்கவும் வைக்கிறது. பின்னணி இசையில் வழக்கம்போல் ஆக்ஷன் படத்திற்குண்டான வேகத்தையும், விறுவிறுப்பையும் கொடுத்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘எஸ்3’ வேகம்.

    ×