என் மலர்tooltip icon

    தரவரிசை

    ஆடம் ஜான்சன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ், பானு, நடிப்பில் உருவாகி உள்ள `பாம்பு சட்டை' படத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
    சென்னையில் நடுத்தர குடும்பத்தில் தனது அண்ணி பானுவுடன் வாழ்ந்து வருகிறார் பாபி சிம்ஹா. தனது அண்ணன் இறந்ததால்,  அண்ணியை தனது அம்மாவாகவே மதித்து வரும் பாபி சிம்ஹாவுக்கு வேலை இல்லை. பல இடங்களில் வேலை தேடியும்  பலன்கிடைக்கவில்லை. இறுதியில் தண்ணீர் கேன் நிறுவனம் வைத்திருக்கும் மொட்டை ராஜேந்திரனிடம் வேலையில் சேர்கிறார்.  அதன் மூலம் தனது அன்றாட வாழ்க்கையை நடத்தி வரும் பாபி சிம்ஹா தனது அண்ணிக்கு வேறு திருமணம் செய்து வைக்க முயற்சி  மேற்கொள்கிறார். 

    தண்ணீர் கேன் போடும் வேலையை விருப்பமில்லாமல் செய்து வரும் பாபி சிம்ஹா, வேலைக்கு சேர்ந்த மறுநாளே, படத்தின் நாயகி  கீர்த்தி சுரேஷை சந்திக்கிறார். மேலும் முதல் சந்திப்பிலேயே கீர்த்தி மீது காதல் வயப்படுகிறார். பின்னரை கீர்த்தியை பார்ப்பதற்காகவே  தினமும் தண்ணீர் கேன் போடும் வேலையை தொடர்கிறார். பின்னர் ஒருநாள் தனது காதலை கீர்த்தியிடம் தெரிவிக்கிறார். 



    முதலில் காதலிக்க மறுக்கும் கீர்த்தி, பின்னர் பாபி சிம்ஹாவின் மனதை புரிந்து கொண்டு, அவரது காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார்.  கீர்த்தியின் தந்தையாக வரும் சார்லி சாக்கடை சுத்தம் செய்யும் தொழில் செய்பவர். இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவிக்கும் அவர்,  ஊரில் பாபி சிம்ஹாவையும், பானுவையும் சேர்த்து தவறாக பேசுவதாகக் கூறுகிறார். இதனால் கோபமடையும் பாபி தனது அண்ணியை  பற்றி அவதூறாக பேச வேண்டாம் என்று வெளியேறுகிறார். 

    இந்த பிரச்சனை பானுவுக்கு தெரியவர, தான் வேறு திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கிறார். பின்னர் பானுவின்  திருமணத்திற்காக தீவிரமாக வேலை செய்து வரும் பாபி சிம்ஹா, அதற்காக ஒரு மாப்பிள்ளையையும் தேர்ந்தெடுக்கிறார்.  இந்நிலையில், அந்த மாப்பிள்ளை ஒரு பிரச்சனையில் சிக்கிக்கொள்ள, அவரை மீட்க ரூ.5 லட்சம் பணத்தை தயார் செய்து செய்யும்  பாபி சிம்ஹா, வில்லனாக வரும் கே.ராஜனின் தலைமையிலான கள்ளநோட்டு கும்பலிடம் தனது பணத்தை இழக்கிறார். கடைசியில்  தனது பணத்தை எப்படி மீட்கிறார்? தனது அண்ணிக்கு திருமணம் செய்து வைத்தாரா? கீர்த்தி சுரேஷை கரம்பிடித்தாரா என்பது படத்தின்  விறுவிறுப்பான மீதிக்கதை.



    பாபி சிம்ஹா படத்தின் தொடக்கம் முதல், இறுதிவரை தனது தனித்துவமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக்‌ஷன்  காட்சிகளிலும் சரி, காதல் காட்சிகளிலும் சரி தனக்குரிய குறும்பு சேட்டைகளை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தில் நாயகனாக  இருந்தாலும் தனக்குரிய வில்லத்தனத்திலும் மிரட்டி உள்ளார். குறிப்பாக தனது மற்ற படங்களை விட இந்த படத்தில் காதல்  காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். 

    கீர்த்தி சுரேஷை பொறுத்தவரை சேலை மற்றும் சுடிதார்களில் அங்குமிங்கும் அழகான பெண்ணாக வலம் வருகிறார். திரையில்  தன்னை ரசிக்கும்படி படம் முழுக்க வந்திருக்கிறார். காதல் காட்சிகளிலும், நாயகனுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் முத்திரை  பதித்திருக்கிறார். இப்படத்தில் ஒரு உறுதியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் பானு தனக்குரிய காட்சிகளை சிறப்பாக  தந்திருக்கிறார். படம் முழுவதும் அழகான குடும்ப பெண்ணாக வலம் வருகிறார். அவர் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படி  உள்ளது. 



    படத்தில் வில்லனாக வலம் வரும் கே.ராஜன் படம் முழுவதும் மிரட்டி இருக்கிறார். இவருக்கு ஒரு வலிமையான கதாபாத்திரம்.  அவரது வசனங்களும், தோற்றமும், உடல் செய்கைகளும் ரசிக்கும்படி உள்ளது. அவருக்கு துணையாக வரும் ஜோக்கர் சோமசுந்தரம்  சூழ்நிலைக்கு ஏற்ப தனது போக்கை மாற்றிக் கொள்ளும் ஒரு நல்ல பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அவரது ஸ்டைல், ஜோக்கர்  படத்தில் இருப்பது போலவே இதிலும் பேசும்படியாக இருக்கிறது.  

    இயக்குநர் ஆடம் ஜான்சன் திரைக்கதையை சிறப்பாக அமைத்திருக்கிறார். இப்படத்தின் மூலம் இரு தகவல்களை தெரிவிக்கிறார்  இயக்குநர். தப்பு செய்பவர்கள் கண்டிப்பாக அதன் பலனை கண்டிப்பாக அனுபவிப்பார்கள். அதில் மாறுபாடு ஏதும் இல்லை என்ற ஒரு  தகவலும், சாப்பாடு கூட இல்லாத ஏழை மக்கள் தங்களது பிழைப்புக்காக, தவறான வழிக்கு செல்ல மாட்டார்கள். அந்த எண்ணமும்  அவர்களுக்கு வராது என்பதை தெரிவித்திருக்கிறார். படத்தில் வரும் ஒவ்வொரு வசனங்களுமே ரசிக்கும் படி உள்ளது.

    துப்புரவு தொழிலாளராக வரும் சார்லி தனது முதிர்ந்த நடிப்பை சிறப்பாக தந்திருக்கிறார். அவரது ஒவ்வொரு வசனங்களும் மனதில்  நிற்கிறது. மொட்டை ராஜேந்திரனை பொறுத்தவரையில், காமெடியில் கலக்கிய நேரத்தில் பாபி சிம்ஹாவுக்கு சில அறிவுரைகளை  கூறுவதன் மூலம் குணசித்திர கதாபாத்திரத்தையும் சிறப்பாக ஏற்று நடித்திருக்கிறார். 

    படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. வசனங்கள் மிகப்பெரிய பலம்.

    மொத்தத்தில் பாம்பு சட்டை, கனகச்சிதம்.
    ராமு செல்லப்பா இயக்கத்தில் நட்ராஜ், ராஜாஜி, சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் நடிப்பில் உருவாகி உள்ள `எங்கிட்ட மோதாதே' படத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
    1988-ல் நடக்கும் கதையில் படத்தின் நாயகர்கள் நட்ராஜ் மற்றும் ராஜாஜி இருவரும் நண்பர்கள். கட்அவுட்டுக்கு ஓவியம் வரையும்  தொழில் செய்து வருகிறார்கள். பின்னர் தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் நட்ராஜ், ராஜாஜியையும்  தன்னுடன் அழைத்து வருகிறார். பின்னர் தனது அம்மா மற்றும் தங்கை சஞ்சிதா ஷெட்டியையும் திருநெல்வேலி அழைத்து  வருகிறார். பின்னர் நட்ராஜ் மற்றும் ராஜாஜி அங்கேயே சொந்தமாக தொழில் செய்ய முடிவு செய்கின்றனர்.

    இதில் நட்ராஜ் தீவிர ரஜினி ரசிகராக ரஜினி படங்களை கட்அவுட்களில் வரைந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். ராஜாஜி  கமல் ரசிகராக கமல் படங்களை வரைய விரும்புகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் மாவட்ட ரசிகர் மன்றங்களில் உறுப்பினர்களாக  இணைகின்றனர்.



    அதேநேரத்தில் கமல் ரசிகரான ராஜாஜிக்கு, பார்வதி நாயரை பார்த்த உடனே காதல் வருகிறது. மறுபுறத்தில் நட்ராஜ் -  சஞ்சிதாவை காதல் செய்கிறார். ஒரு கட்டத்தில் இவர்களது காதல் ராஜாஜிக்கு தெரியவர நட்ராஜை விட்டு பிரிந்து தனியாக தொழில்  செய்ய ஆரம்பிக்கிறார்.

    இதற்கிடையே ரஜினி, கமல் படங்கள் ஒரே சமயத்தில் ரிலீசாகிறது. இதில் கட்அவுட் வைப்பத்தில் ஏற்படும் பிரச்சனையில்   திரையரங்கு தாக்கப்படுகிறது. இதனால் கடுப்பாகும் தியேட்டர் உரிமையாளரும், அரசியல்வாதியுமான ராதாரவி கட்அவுட்  வைத்தால் படங்களை ரிலீஸ் செய்ய முடியாது என்கிறார்.

    பின்னர் அரசியல் பிரச்சனையாக மாறும் இந்த பிரச்சனையை தீர்த்து படத்தை ரிலீஸ் செய்ய ரஜினி-கமல் ரசிகர்கள் முடிவு செய்து,  அதற்காக போராடி வருகின்றனர். இதில் நட்டி, ராஜாஜியை கொல்ல ஆட்களை ஏவிவிடுகிறார் ராதாரவி. இந்த பிரச்சனைகளில்  இருந்து நட்டி, ராஜாஜி எப்படி தப்பித்தார்கள், ரஜினி-கமல் படங்களை எப்படி திரையிட்டார்கள், ராதாரவி சூழ்ச்சியில் இருந்து  தப்பித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    இப்படத்தில் நட்ராஜ், ரஜினி ரசிகராகவே வாழ்ந்திருக்கிறார். அவரது ஒவ்வொரு வசனங்களும், ரஜினியை பின்பற்றும் அவரது  உடல்அசைவுகளும் பார்ப்பதற்கு ரசிக்கும்படி உள்ளது. குறிப்பாக சிகரெட்டை தூக்கி போடுவது, நடை, உடை என ரஜினி ஸ்டைலில்  அசத்துகிறார். குறிப்பாக தனது தலைவர் படத்தை ரிலீஸ் செய்ய அவர் செய்யும் முயற்சிகள் ரசிக்கும்படி உள்ளது. நட்ராஜுடன் வரும்  நபர் படத்தில் காமெடியில் சிரிக்க வைக்கிறார்.

    இதற்கு முன்பு நடித்த படங்களை விட இப்படத்தில் ராஜாஜியின் நடிப்பும், அவரது செயல்களும் பார்க்கும்படி உள்ளது. கமல் ரசிகராக  மிரட்டியிருக்கிறார். காதல் காட்சிகளிலும் அந்த காலகட்டத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்.

    இப்படத்தில் ராதாரவி ஒரு மிடுக்கான தோற்றத்தில் நடித்துள்ளார். பயந்த சுபாவமாக வரும் இவர் தனது அடியாளின் மூலம் தான்  நினைப்பதை செய்து முடிப்பதில் நின்றுள்ளார். குறிப்பாக அரசியல்வாதிக்கு ஏற்ற சாதுர்யங்களும், சூழ்நிலைக்கு தகுந்தபடி நடந்து  கொள்வதிலும் தனது நடிப்பின் முதிர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.



    ராதாரவி சொல்வதை செய்து முடிக்கும் விஜய் முருகன் அவரது தோற்றத்திற்கு ஏற்ப அருமையான நடிப்பை வெளிப்படுத்தி  இருக்கிறார். படம் முழுக்க வில்லனாக வலம் வந்து மிரட்டி உள்ளார். சஞ்சிதாவின் நடிப்பை பொறுத்தவரையில் தனக்குரிய  பாணியில் சிறப்பாக நடித்துள்ளார். காதல் காட்சிகளில் உருகி தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முதல்முறையாக  இப்படத்தில் தாவணியில் வரும் பார்வதி நாயர் அவருக்கே உரித்தான ஸ்டைலில் நடித்திருக்கிறார். தாவணி கெட்அப் மட்டும்  அவருக்கு சரியாக அமையவில்லை. மற்றபடி காதல் காட்சிகளில் ரசிக்கும்படி இருந்தது.

    இயக்குநர் ராமு செல்லப்பா படத்தின் திரைக்கதையை சிறப்பாக அமைத்துள்ளார். 1980 களில் நடக்கும் கதையை அதற்கேற்ற  பாணியில் சிறப்பாக கையாண்டுள்ளார். படத்தின் வசனங்களும் ரசிக்கும்படி உள்ளது. படத்தில் ரஜினி, கமல் ரசிகர்கள் வரும்  காட்சிகளும், படத்தை ரிலீஸ் செய்ய போராடும் காட்சிகளும் அந்த காலத்திற்கே கொண்டு செல்கிறது.

    இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்தது சிறப்பு.

    மொத்தத்தில் என்கிட்ட மோதாதே, மிரட்டல்.
    இயக்குனர் கண்ணன் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள `தாயம்' படத்தின் விமர்சனத்தை கீழே பார்போம்.
    ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வேலைக்கான நேர்முக தேர்வு நடக்கிறது. இதில், நாயகன், நாயகி உள்பட 8  பேர் வருகிறார்கள். அவர்களை ஜெயக்குமார் ஒரு அறையில் அடைத்து வைக்கிறார். அந்த அறைக்குள் அவர்கள் 1 மணி நேரம்  இருக்க வேண்டும் என்றும், 1 மணி நேரத்திற்கு பிறகு யார் உயிரோடு இருக்கிறார்களோ, அவர்கள்தான் இந்த கம்பெனிக்கு தலைமை  அதிகாரி என்றும் கூறிவிட்டு, அறைக் கதவை அடைத்துவிட்டு செல்கிறார்.

    அந்த அறைக்குள் சென்றவுடன் 8 பேருக்கும் தான் யார் என்பதும், தன்னுடைய பின்புலம் என்னவென்பதும் மறந்துவிடுகிறது.  ஆனால், நம்மில் யாரோ ஒருவர் மட்டும்தான் வெளியே செல்ல முடியும் என்பதுமட்டும்தான் தெரிகிறது. அப்படியிருக்கையில், அந்த  அறைக்குள் இருந்து யார் உயிரோடு வெளியே வந்தார். அந்த அறைக்குள் அவர்களுக்குள் நடந்தது என்ன? என்பதை சஸ்பென்ஸோடு  சொல்லும் கதையே தாயம்.



    8 பேரை கொன்றால்தான் அந்த வேலை கிடைக்குமா? அப்படியென்ன அந்த பதவிக்கு மவுசு இருக்கிறது? என்பன போன்ற  கேள்விகளுக்கு கிளைமாக்சில் பதில் சொல்லியிருக்கிறார்கள். இருந்தாலும், கிளைமாக்சில் 7 பேரை கொன்றுவிட்டு, ஒருவர்  வெளியே வருவது போலவும் காட்டியிருக்கிறார்கள்.

    ஆங்கில படங்களில் இதுபோன்ற படங்கள் வெளிவந்து வெற்றிபெற்றுள்ளன. அதேநேரத்தில் ரசிக்கவும் வைத்துள்ளனர். அதைபோல்  இந்த படத்தையும் எடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் கண்ணன் ரங்கசாமி. இதற்காக, எண்டர்டெயின்மெண்டே  இல்லாமல் திரில்லிங்காக கொண்டு போயிருந்தாலும், அதை ரசிக்கும்படியாக எடுக்க தவறியிருக்கிறார்.



    படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வித்தியாசம் காட்டுவதுபோல், அவர்களுக்கென்று தனித்தனி குணாதிசயங்கள்  கொடுத்திருந்தாலும், காட்சிப்படுத்திய விதம் ரசிக்கும்படியாக இல்லை. கடைசியில், அவர்கள் அறைக்குள் அடைக்கப்பட்டது  மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைதான் என்று சொல்லி முடித்திருக்கிறார். ஆனால், அதை  சுவாரஸ்யமாக கொடுக்க தவறியிருக்கிறார். இதனால், படத்தை பார்க்கும் நமக்கும் சிகிச்சை அளிக்கவேண்டிய நிலைமை  ஏற்பட்டிருக்கிறது.

    ஒரு அறைக்குள்ளே நடக்கக்கூடிய சம்பவத்தை, ரொம்பவும் நேர்த்தியாக கையாண்டிருக்கவேண்டும். அதை அவர், பொறுப்புடன்  கையாளவில்லை என்றே தோன்றுகிறது. படத்தின் கதை சுவாரஸ்யம் இல்லாமல் நகர்வதால், படத்தின் இசையும் பெரிதாக  ரசிக்கும்படி இல்லை. மற்றபடி ஒளிப்பதிவு ரசிக்கும்படி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘தாயம்’ காயம்.
    ஆர்.கே.-நீது சந்திரா நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிக்கும் மூன்று பெண்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் டிவி நிருபர், இன்னொருவர் எம்.பி.சுமனின் மச்சினிச்சி, மற்றொருவர் துப்பாக்கி சுடும் வீராங்கனையான நீது சந்திரா.

    மூன்று பேரில், இரண்டு பேர் இறந்துவிட, நீது சந்திரா மட்டும் பலத்த காயத்துடன் உயிர்போகும் நிலையில் குத்துயிரும் கொலையிருமாக கிடக்கிறார். இந்த கொலையை விசாரிக்க ரெயில்வே போலீஸ் சிறப்பு பிரிவில் பணியாற்றும் ஆர்.கே.வை நியமிக்கிறார் எம்.பி.சுமன். அவர் அதே பெட்டியில் பயணம் செய்யும் தீவிரவாதியான ஆர்.கே.செல்வமணி மீது சந்தேகப்படுகிறார். ஆனால், அவர் இந்த கொலையை செய்யவில்லை என்பது தெரிந்ததும், அந்த கூபேயில் உடன் பயணிக்கும் மற்றவர்கள் மீது தனது சந்தேக பார்வையை செலுத்துகிறார் ஆர்.கே.



    இந்த கொலைக்கான விசாரணையை வெவ்வேறு கோணங்களில் விசாரிக்கும் ஆர்.கே.வுக்கு அந்த கொலைகளுக்கான பின்னணியும், அதன் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சிகரமான தகவல்களும் கிடைக்கிறது. இறுதியில், அந்த குற்றவாளி யார்? அவருக்கு என்ன தண்டனை கிடைக்கிறது? என்பதை எதிர்பாராத கிளைமாக்சுடன் கொண்டு போய் முடித்திருக்கிறார்கள்.

    ஆர்.கே. துணிச்சலான போலீஸ் அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கொலையின் காரணங்களுக்கான மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும்போதும், குற்றவாளிகளை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கும் வேளையிலும் நமக்குள்ளே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதேபோல், எதிரிகளை அடித்து துவம்சம் செய்யும் காட்சிகளிலும் இவரது ஆக்ஷன் பலே சொல்ல வைக்கிறது.



    இரட்டை வேடங்களில் வரும் நீது சந்திரா, தனது வித்தியாசமான நடிப்பால் இரண்டையும் வேறுபடுத்தி காட்டியுள்ளார். அவரை சுற்றியுள்ள மர்மங்கள் விலகும் கிளைமாக்ஸ் காட்சி நமக்கே மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுக்கிறது. ஆர்.கே.வுடன் படம் முழுக்க வலம் வரும் மற்றொரு போலீஸ் அதிகாரியான நாசர் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பு.

    எம்.பியாக வரும் சுமன், நடிகையாக வரும் இனியா, ரயில்வே போலீசாக வரும் ஜான் விஜய், டி.டி.ஆராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், டாக்டர்களாக வரும் சுஜா வருணி, தீவிரவாதியாக வரும் ஆர்.கே.செல்வமணி, கதாசிரியராக வரும் மனோபாலா என படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும், அவர்கள் அனைவருக்கும் சமமான பங்களிப்பு கொடுத்துருப்பது படத்திற்கு மேலும் பலமாக அமைந்திருக்கிறது.



    ஒரு ரெயிலில் நடக்கும் கொலை, அதை தொடர்ந்து நடைபெறும் விசாரணை என ஆரம்பத்தில் எடுக்கும் வேகம், கடைசிவரை குறையாமலேயே சென்றுள்ளது. இந்த கதை தமிழ் சினிமாவுக்கு புதிது. இந்த கதையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள்தான் படத்தின் முக்கிய சிறப்பம்சமே. இரண்டேகால் மணி நேரம் ஒரு விறுவிறுப்பான திரில்லிங்கான அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஷாஜி கைலாஷ்.

    சஞ்சீவ் குமாரின் ஒளிப்பதிவும் பாராட்டப்பட வேண்டியது. ரயிலில் நடக்கும் ஒரு கதையை இவரது கேமரா படத்தின் வேகம் குறையாமல் விறுவிறுப்பாக நகர உதவியிருக்கிறது. அதேபோல், தமனின் பின்னணி இசையும் படத்திற்கு விறுவிறுப்பு கூட்டியிருக்கிறது. அதேபோல், வசனங்களும் படத்திற்கு முதுகெலும்பாய் அமைந்துள்ளது.

    மொத்தத்தில் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ வேகம்.
    விஜய்மில்டன் இயக்கத்தில் பரத் - ராஜகுமாரன் ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘கடுகு’. இப்படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    நாகப்பட்டினம் மாவட்டத்தின் கடலோர கிராமமான தரங்கம்பாடியில் கவுன்சிலராக இருந்து வருகிறார் நாயகன் பரத். இவர் அந்த கிராமத்தில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர். இதனால், அந்த ஊரில் இவருக்கென்று ஒரு தனி மரியாதை இருக்கிறது. இந்நிலையில், அதேஊருக்கு மாற்றலாகி வரும் இன்ஸ்பெக்டரான வெங்கடேஷ், கூடவே தனக்கு சமையல்காரராக ராஜகுமாரானையும் அழைத்து வருகிறார்.

    வந்த இடத்தில் டீச்சரான ராதிகா பிரசித்தாவுக்கும் ராஜகுமாரனுக்கும் நட்பு உருவாகிறது. ராதிகா பிரசித்தா உடன் இருக்கும் சிறுமியிடம் ராஜகுமாரன் ரொம்பவும் அன்புடன் இருக்கிறார். இந்நிலையில், அந்த தொகுதிக்கு அமைச்சர் ஒருவர் வருவதையொட்டி அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் பரத். அடுத்ததாக அந்த தொகுதிக்கு எம்.எல்.ஏ. பதவிக்கு அந்த அமைச்சர்தான் பரத்தை பரிந்துரைக்கிறார்.



    ஊருக்கு வரும் அமைச்சர் பள்ளியில் நடக்கும் விழாவில் கலந்துகொள்கிறார். அப்போது பள்ளி மாணவியான கீரித்தியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறார். இதை பார்க்கும் பரத், அவரால்தான் தனக்கு எம்.எல்.ஏ.பதவி கிடைக்கவிருக்கிறது என்பதால் அதை கண்டும் காணாததுமாக சென்றுவிடுகிறார். ஆனால், பிரசித்தாவோ அமைச்சரிடமிருந்து அந்த மாணவியை காப்பாற்றுகிறாள்.

    இந்த விஷயம் பிரசித்தா மூலமாக ராஜகுமாரனுக்கு தெரிய வருகிறது. எந்தவிதத்திலும் அந்த பெண்ணுக்கு நீதி தேடிக்கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் ராஜகுமாரன் அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைக்கு அந்த அமைச்சரை எப்படி தண்டித்தார்? இதில் ராதிகா பிரசித்தா, பரத்தின் பங்கு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.



    நாயகன் பரத் படம் முழுக்க மிடுக்கான தோற்றத்துடன் ஒரு பெரிய மனிதர்போல் படம் முழுக்க அழகாக வலம் வந்திருக்கிறார். இவருடைய கெட்டப் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. இளம் அரசியல்வாதி போன்ற தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். முதல் பாதியில் வில்லத்தனம் கலந்ததுபோலவும், இரண்டாம் பாதியில் நல்லவனாகவும் தனது நடிப்பில் மாற்றம் கொடுத்து நடித்திருப்பது சிறப்பு.

    ராஜகுமாரனின் நடிப்புதான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. இதுவரையிலான படங்களில் அவரை காமெடிக்காக பயன்படுத்தியவர்கள், இந்த படத்தில் விஜய் மில்டன் அவருக்குள் இருக்கும் நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். அப்பாவியான தோற்றத்துடன் வலம்வரும் இவரது நடிப்பு அனைவரும் ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. அதேபோல், நடிப்பு என்று தெரியாத அளவுக்கு எதார்த்தமான நடிப்பை பதிவு செய்து கைதட்டல் பெறுகிறார்.



    ராதிகா பிரசித்தா, ஏற்கெனவே குற்றம் கடிதல் படத்தில் டீச்சராக வந்து தனது எதார்த்தமான நடிப்பால் அனைவரின் பாராட்டையும் பெற்றவர். இந்த படத்திலும் அவரது நடிப்பு ஒருபடி மேலே இருக்கிறது. தனது சொந்த கதையை சொல்லி அழும் காட்சிகளில் எல்லாம் அவர்மீது நமக்கும் இரக்கம் வருகிறது.

    பள்ளி மாணவியாக வரும் கீர்த்தி, மற்றும் அவளுக்கு அம்மாவாக நடித்தவரும், போலீஸ் ஏட்டு, இன்ஸ்பெக்டர் ஏ.வெங்கடேஷ் ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அமைச்சராக வரும் தயா வெங்கட்டும் காமம் கலந்த அரசியல்வாதியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.



    அரசியல் அதிகாரத்தின் மூலமாக சாமான்ய மக்களுக்கு நேரும் துயரங்களை தட்டிக்கேட்க துடிக்கும் எவருக்கும், நியாயமான தீர்வு கிடைத்ததே கிடையாது. அதேநேரத்தில், எந்தவொரு நியாயமும் கிடைக்கவில்லையெனில் ஒரு சாமான்யனின் கோபம் இப்படித்தான் வெளிப்படும் என்பதை இப்படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன்.

    சமீபகாலமாக சமூகத்தில் நிலவி வரும் பாலியல் சீண்டல்கள் எந்த வயது பெண்களாக இருந்தாலும் அவர்களை தொடர்ந்து வரும் மிகப் பெரிய ஆபத்தாகவே சுற்றிக் கொண்டிருக்கிறது. இதுபற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இருந்தால்தான் இந்தக் கொடூரங்கள் கொஞ்சமேனும் குறையும் என்பதை வலியுறுத்தும் படமாக இது அமைந்துள்ளது.



    படம் முழுவதும் ரொம்பவும் சீரியஸாக செல்லாமல் ஆங்காங்கே நகைச்சுவையும் கொடுத்து ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். இப்படத்திற்கு மேலும் பலம் சேர்ப்பதுபோல் இவரது வசனங்களும் அமைந்திருப்பது சிறப்பு. புளூபிலிம்ல நடிக்கிற நடிகைகளை தேடிப்பிடித்து ஆட்டோகிராப் வாங்குறீங்க. ஆனால் உங்க பக்கத்து வீட்ல இருக்குற தப்பே செய்யாத பெண்ணை பார்த்து தப்பா பேசுறீங்களே..? என்னதாண்டா உங்க பிரச்சினை…? என்று ராஜகுமாரன் கேட்கும் கேள்விக்கு யாரிடமும் பதில் கிடையாது என்பதுதான் உண்மை.



    அதேபோல், விஜய் மில்டனின் ஒளிப்பதிவும் பாராட்டும்படி இருக்கிறது. கதை நடக்கும் கிராமத்தின் அழகை அவர் பதிவாக்கியிருக்கும் விதமும், ஒருசில காட்சிகளில் அவர் வைத்திருக்கும் கேமரா கோணமும் பார்ப்பவர்களை கதையோடு ஒன்றி பயணிக்க உதவியிருக்கிறது. சுப்ரீம் சுந்தரின் சண்டை காட்சிகளில் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி அருமையாக இருக்கிறது. அருணகிரியின் இசையில் இரண்டே இரண்டு பாடல்கள்எதான் என்றாலும் அவை இரண்டும் முத்தானவை. முழுமையாக கேட்கும் அளவுக்கு இனிமையாக இருக்கிறது. கதையோடு ஒட்டியே பாடல்களும் நகர்வதால் ரசிக்கவே முடிகிறது. பின்னணி இசையும் கதைக்கு தேவையான அளவு அமைத்திருப்பது சிறப்பு.

    மொத்தத்தில் ‘கடுகு’ அவசியம் பார்க்கவேண்டிய படம்.
    ரஷ்ய மொழித் திரைப்படம் தமிழில் ‘கார்ட்டியன்ஸ் தி சூப்பர் ஹீரோஸ்’ படமாக வெளிவந்திருக்கிறது. இப்படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    உலகப்போருக்கு பின்னால் 1940-ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் பேட்ரியாட் என்ற அமைப்பு மரபணு சோதனையின் மூலம் ரகசியமாக பல கண்டுபிடிப்புகளில் ஈடுபடுகின்றனர். இந்த மரபணு சோதனையில் பல மனிதர்களையும், மிருகங்களையும் பயன்படுத்துகின்றனர். இந்த கண்டுபிடிப்புகள் எல்லாம் சோவியத் யூனியனில் இருந்து மறைக்கப்பட்ட நாடுகளில் நடைபெற்று வருகிறது.

    இந்த அமைப்பில் இருக்கும் பேராசிரியரான ஷெரின் மோட்டார் வாகனங்களை கட்டுப்பாட்டில் வைக்கும் எந்திரத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் வெறித்தனமாக இறங்குகிறார். ஆனால், துரதிருஷ்டவசமாக அவருக்கு அதில் தோல்வி ஏற்படுகிறது. ஆனால், இவரது சக ஊழியர் ஒருவர் மரபணு சோதனையில் வெற்றிகண்டு பலரது பாராட்டுக்களை பெறுகிறார்.



    ஷெரின் இனி எந்த கண்டுபிடிப்புகளிலும் ஈடுபடவேண்டாம் என்ற பேட்ரியாட் அமைப்பு உத்தரவிட, அவர்களுக்கு தான் சிறந்த விஞ்ஞானி என்று நிரூபித்து காட்ட ஷெரின், மரபணு சோதனைக்கான குறிப்புகளை திருடிச் சென்று தனித்து இயங்குகிறார். அவருடைய சோதனைக்காக பல மனிதர்களை பலிகடா ஆக்குகிறார்.

    இந்நிலையில், ஷெரினை கொல்வதற்காக சோவியத் யூனியன் களமிறங்கும்போது, இவருடைய விஞ்ஞான கூடத்தை வெடிகுண்டாக மாற்றி வெடிக்க செய்கிறார். அப்போது அங்குள்ள கெமிக்கல்கள் எல்லாம் வெடித்து சிதறியதில், மரபணு மாற்றத்தின் மூலம் ஷெரின் சக்திவாய்ந்த மனிதராக உருவெடுக்கிறார். அதற்குள், அவர் இயந்திரங்களை கட்டுக்குள் கொண்டுவரும் தன்னுடைய முயற்சியிலும் வெற்றி பெற்றிருக்கிறார். மேலும், சில மிருக மனிதர்களையும் அவர் மரபணு சோதனையின் மூலம் கண்டுபிடித்து, தனக்கு எதிரானவர்களை அழிக்க திட்டமிடுகிறார்.

    இந்நிலையில், சோவியத் யூனியனில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ராணுவத்தில் மனிதர்களுக்கு பதிலாக இயந்திரங்களை வைத்து சண்டையிடுவதற்கான சோதனை முயற்சி நடந்து வருகிறது. அப்போது நடக்கும் சோதனையில், அந்த இயந்திரங்கள் எல்லாம் சோவியத் யூனியனின் ராணுவத்தையே தாக்குகிறது. இந்த தவறு எங்கிருந்து நடக்கிறது, என்று யோசிக்கையில் ஷெரின்தான் இதையெல்லாம் செய்கிறார் என்பது தெரிகிறது.



    அவரை அழிப்பதற்கு இயந்திரங்களையும் சாதாரண மனிதர்களையும் அனுப்பினால் முடியாது என்று முடிவெடுக்கும் ராணுவம், அவர் உருவாக்கிய மிருக மனிதர்களை தேடிக் கண்டுபிடித்து, அவர்களை மனமாற்றம் செய்து, ஷெரினுக்கு எதிராக திரும்ப வைக்க முயல்கிறார்கள்.

    இதில் அவர்களுக்கு வெற்றி கிடைத்தா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

    ஆங்கிலத்தில் வெளிவந்த ரஷ்ய மொழிப்படமான ‘கார்டியன்’ படமே தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு கார்டியன்ஸ் தி சூப்பர் ஹீரோ என்ற பெயரில் தமிழில் வெளிவந்திருக்கிறது. படத்திற்கு மிகப்பெரிய பலமே படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள்தான்.

    குறிப்பாக, மிருக மனிதர்களின் ஆக்ரோஷமான சண்டை காட்சிகள் எல்லாம் கிராபிக்ஸ் காட்சிகள் என்று தெரியாதவாறு தத்ரூபமாக அமைந்திருக்கிறது. சூப்பர் ஹீரோ படங்களில் இந்த படமும் ஒரு முக்கிய இடம் பிடிக்கும். குறிப்பாக, காற்றைவிட வேகமாக போகக்கூடிய மனிதர், கற்களை தன்வசமாக்கிக் கொள்ளக்கூடியவர், தண்ணீராக மாறக்கூடிய பெண் ஆகியோரின் சண்டைக் காட்சிகளை தத்ரூபமாக உருவாக்கியெதல்லாம் அருமை.

    பின்னணி இசையும் படத்திற்கு விறுவிறுப்பு கொடுக்கிறது. சண்டைக்காட்சிகளுக்கு அமைத்திருக்கும் பின்னணி இசை படத்தை மேலும் விறுவிறுப்படைய வைக்கிறது.

    மொத்தத்தில் ‘கார்டியன்ஸ் தி சூப்பர் ஹீரோ’ சூப்பர்.
    ரஹ்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஒரு முகத்திரை' படத்தின் விமர்சனத்தை கீழே படிப்போம்.
    படத்தின் கதை நாயகிகளான அதிதி ஆச்சர்யா மற்றும் ஸ்ருதி ஆகிய இருவரை வைத்தே நகர்கிறது. நாயகிகள் இருவரும் ஒரே   கல்லூரியில் மனோநல மருத்துவ பிரிவை எடுத்து படித்து வருகின்றனர். கல்லூரியில் எலியும்-பூனையுமாக இருக்கும் அதிதி-ஸ்ருதி  கல்லூரியில் அடிக்கடி சண்டை பிடிக்கின்றனர். அதே நேரத்தில் அதிதி எப்போதும் பேஸ்புக்கே கதி என்று கிடக்கிறாள். பேஸ்புக்கில்  ரோஹித் என்ற இளைஞருடன் தொடர்ந்து பேசி வருவதுடன், தனது வாழ்க்கை சம்பந்தப்பட்ட அனைத்தையும் ரோஹித்துடன் பகிர்ந்து  வருகிறார்.

    இந்நிலையில், இருவருக்கும் இடையேயான சண்டை ஒருகட்டத்தில் கல்லூரியின் மூத்த பேராசிரியர் வரை வந்ததால் இருவரையும்  சமாதனம் செய்ய அவர் முயல்கிறார். சமாதானத்திற்கு நாயகிகள் இருவரும் ஒத்துவராததால் அவர்களுக்கு ஒரு போட்டி கொடுக்க  வேண்டும் என்று அவர் முடிவு செய்கிறார்.



    அதேநேரத்தில் மனோதத்துவத்தில் பிரபல மருத்துவரான ரஹ்மானை, கல்லூரிக்கு அழைத்து மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த  கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஆனால் கல்லூரிக்கு வர ரஹ்மான் மறுப்பு தெரிவித்து வருகிறார்.  இந்நிலையில், அதிதி-ஸ்ருதி ஆகிய இருவரும் குறிப்பிட்ட தேதிக்குள் ரஹ்மானை கல்லூரிக்கு அழைத்து வர வேண்டும் என்று  கல்லூரியின் தலைமை நிர்வாகியான பாண்டு உத்தரவிடுகிறார்.

    அதற்கான முயற்சியில் இருவரும் இறங்கிய போது, அதிதி தனது பேஸ்புக் நண்பரான ரோஹித்தின் உதவியை நாடுகிறார். கடைசியில்  இருவராலும் ரஹ்மானை கல்லூரிக்கு அழைத்து வர முடியவில்லை. ஆனால் குறிப்பிட்ட அதே தேதியில் ரஹ்மான் கல்லூரிக்கு  வருகிறார். தான் இந்த கல்லூரிக்கு வர அதிதியே காரணம் என்கிறார். அதிதியின் நண்பர் ரோஹித் கேட்டுக் கொண்டதாலேயே தான்  கல்லூரிக்கு வந்ததாக அவர் கூறுகிறார். பின்னர் அங்கு ஒருவாரம் தங்கியிருந்து பயிற்சி வகுப்பு எடுக்கும் ரஹ்மான் அதிதி-ஸ்ருதியை  சேர்த்து வைக்கிறார்.



    பின்னர் தோழிகளாக மாறிய அதிதி-ஸ்ருதி இருவரும் கல்லூரி படிப்பை முடித்து வீடு திரும்புகின்றனர். ஆனால் அதிதி தனது வீட்டுக்கு  செல்லாமல் சென்னையில் உள்ள ரோஹித்தை பார்க்க செல்கிறார். ஆனால் அதிதி சந்திக்க மறுக்கிறார் ரோஹித். அந்த நேரத்தில்,  அதிதியை சந்திக்கும் ரஹ்மான், அதிதியை தனது வீட்டிலேயே தங்க வைக்கிறார்.

    மறுபுறத்தில் படத்தின் ஹீரோவான சுரேஷ் ஒரு பிரபல ஐ.டி.கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவருக்கும் அந்த  கம்பெனியில்புதிதாக வேலையில் சேரும் மற்றொரு நாயகியான தேவிகாவுக்கும் இடையே காதல் மலர்கிறது. பின்னர் வேறு  கம்பெனிக்கு மாறும் தேவிகா சுரேஷை கலட்டி விடுகிறார். இதனால் வருத்தத்தில், நாயகன் போதை பழக்கத்திற்கு ஆளாகிறான்.  அதனைத்தொடர்ந்து போதை பழக்கத்தில் இருந்து மீள மனோ தத்துவ நிபுணரான ரஹ்மானிடம் சிகிச்சை பெறுகிறார் சுரேஷ்.



    அப்போது அதிதிக்கு ரஹ்மான் தான், ரோஹத் என்ற பெயரில் தன்னை ஏமாற்றி வருகிறார் என்ற உண்மை தெரிய வருகிறது. மேலும்  தன்னை வேண்டுமென்றே ரஹ்மான் சென்னை வரவழைத்துள்ளதை தெரிந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் உண்மை அனைத்தையும்  தெரிந்து கொண்ட அதிதியை கொலை செய்ய முடிவு செய்யும் ரஹ்மான், நாயகன் சுரேஷை கொலை செய்ய தூண்டுகிறார்.  கடைசியில் அதிதி என்ன ஆனார்? ரஹ்மானிடம் இருந்து தப்பித்தாரா? ரஹ்மான் ஏன் அதிதியை சென்னை வரவழைத்தார்? ஹீரோ  அதிதியை கொன்றாரா? இல்லையா? என்பது படத்தின் மீதிகதை.

    படத்தில் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ள ரஹ்மான் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான பங்களிப்பை சிறப்பாக அளித்திருக்கிறார்.  முந்தைய படங்களில் போலீசாக நடித்த ரஹ்மான் இப்படத்தில் மனோதத்துவ நிபுணராக அந்த கதாபாத்திரத்தை அவரது அனுபவ  நடிப்பால் சிறப்பாக ஏற்று நடித்துள்ளார்.

    படத்தின் நாயகனான சுரேஷ் ஐ.டி. ஊழியராகவும், காதலராகவும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். நாயகிகளில் ஒருவரான அதிதி திரையில்  சிறப்பாக நடித்துள்ளார். அழகான பெண்ணாக வரும் ஸ்ருதி, அதிதியுடன் சண்டை போடும் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். மற்றொரு  நாயகியான தேவிகா அழகான ராட்சசியாக வலம் வருகிறார். குறிப்பாக காதல் காட்சிகளில் அனைவரையும் கவரும் தேவிகா, காதலை  தூக்கி எறியும் காட்சியிலும் தனது சுயநலத்தை தெளிவாக வெளிப்படுத்தியிருப்பது ரசிக்க வைக்கிறது.



    பாலாஜி மற்றும் சுவாமிநாதன் அவர்களது கதாபாத்திரத்தை சிறப்பாக அளித்திருந்தாலும் காமெடியைப் பொறுத்தவரை இயக்குநர்  கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம்.

    படத்தின் இயக்குநர் செந்தில் நாடன் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படும் உறவால் பெண்கள் மாட்டிக் கொண்டு  பல இன்னல்களை அனுபவிப்பதை சிறப்பாக காட்டியுள்ளார். அதற்கேற்ப படத்தின் திரைக்கதையை சிறப்பாக அமைத்துள்ளார்.  விறுவிறுப்புடன் காட்சிகள் இருந்தாலும் வேகம் இல்லாததது படத்திற்கு சற்றே பின்னடைவு. சுரேஷ்-தேவிகா இடையேயான காதல்  காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.

    படத்தின் ஒளிப்பதிவை பொறுத்தவரை சரவணபாண்டியன் சிறப்பாக செயல்பட்டுள்ளார். படத்தை திரையில் காட்ட அவர்  மெனக்கிட்டிருக்கிறார். படத்தின் பின்னணி இசை ரசிக்கும்படி உள்ளது.

    மொத்தத்தில் `ஒரு முகத்திரை' மெதுவாக நகர்கிறது.
    என்.பி.இஸ்மாயில் இயக்கத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன், அப்புக்குட்டி மற்றும் புதுமுக நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாங்க வாங்க’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
    மெசேஜ் சொல்லும் ஏராளமான தமிழ் படங்கள் வந்திருந்தாலும், தற்கால சூழலுக்கு ஏற்ப சமூக வலைத்தள மோகத்தினால் போலி நட்புகளை நம்பி வாழ்வைத் தொலைக்கும் வாலிபர்களின் நிலை, சென்டிமென்ட், நகைச்சுவை, திரில்லர் கலந்த கலவையாக வந்திருக்கிறது ‘வாங்க வாங்க’.

    இயக்குனர் ஆக முயற்சி செய்யும் அப்புக்குட்டி, நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனிடம் கதை சொல்ல வருகிறார். அந்த கதையே ‘வாங்க வாங்க’ திரைக்கதையாக வெள்ளித்திரையில் விரிகிறது.

    நிவேதிதா, மதுசந்தா ஆகிய இருவரும் பேஸ்புக் மூலம், தொடர்பில் இருக்கும் குறிப்பிட்ட சில ஆண் நண்பர்களை வலையில் வீழ்த்தி தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது வாடிக்கை. இவர்கள் தங்கியிருக்கும் வீட்டிற்குள் பேய் இருக்கிறது. இந்த பேயானது, இவர்களை பார்க்க இரவு நேரங்களில் தனியாக வரும் ஆண் நண்பர்களை பயமுறுத்துவதும் தொடர்கிறது.

    இந்த பேயிடம் முதலில் சிக்குவது கராத்தே ராஜா தான். சட்டவிரோத பணப் பரிமாற்ற தொழில் செய்யும் கராத்தே ராஜா, மிகப்பெரிய தொகையுடன் வரும்போது, தனது பேஸ்புக் தோழி மதுசந்தாவை பார்க்க வருகிறார். ஆனால் வந்த இடத்தில் பேய் தாக்கி காணாமல் போகிறார். பணத்தை கொடுத்து அனுப்பிய நபரோ, கராத்தே ராஜாவை தேடுவதற்கு விக்கி, ஹனிபா ஆகியோரை அனுப்புகிறார்.

    இதேபோல் பேஸ்புக் தொடர்பு பழக்கத்தில் நிவேதிதாவின் நண்பர் ஒருவர் வீட்டிற்கு வரும்போது அவரை பேய் அடித்துக் கொல்கிறது. ஒரு கட்டத்தில் அந்த வீட்டில் பேய் இல்லை என்பதும், பெண்கள் இருவரும் திட்டமிட்டே கொலை செய்ததும் தெரிகிறது.

    குறிப்பிட்ட வாலிபர்களை மட்டும் வீட்டிற்கு வரவழைத்து இவர்கள் கொலை செய்வது ஏன்? அவர்களுக்கிடையே உள்ள பிரச்சினை என்ன? என்பதே மீதி கதை.

    பவர்ஸ்டார் சீனிவாசன், அப்புக்குட்டி இருவருக்கும் கதைசொல்லும் கதாபாத்திரம் என்பதால் நடிப்பதற்கான வாய்ப்பு குறைவு. மெசேஜ் சொல்லும் படம் என்பதால் கதாநாயகர்கள் என தனியாக யாருக்கும் அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. அந்த வேலையை புதுமுகங்களான விக்கி, ஹனிபா, ராஜேஷ் மோகன், கராத்தே ராஜா, பாபு ஆகியோர் பகிர்ந்து செய்துள்ளனர்.

    விக்கியும், ஹனிபாவும் சட்டவிரோதமாக பணப் பரிமற்றம் செய்யும் நபர்களாக, கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பெண்களை தந்திரமாக வலையில் வீழ்த்தும் கேரக்டரில் கராத்தே ராஜா தனக்குரிய பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்.

    இடைவேளைக்கு பிறகு வந்தாலும் ஸ்ரேயாஸ்ரீ, ஒரு மலைவாழ் பெண் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். காதல், சென்டிமென்ட் இரண்டிலும் அழுத்தமான நடிப்பை பதிவு செய்துள்ளார்.

    பேஸ்புக்கில் நண்பர்களை வசியம் செய்யும் கதாபாத்திரங்களான நிவேதிதா, மதுசந்தா இருவரும் குறை சொல்ல முடியாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக இறுதிக்காட்சியில் பணத்தாசை பிடித்த பெண்ணாக தன்னை காட்டிக்கொள்ளும் நிவேதிதா, நடிப்பில் பாராட்டு பெறுகிறார்.

    கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் என ஒட்டுமொத்த வேலையையும் செய்துள்ள என்.பி.இஸ்மாயில், சமூக கருத்தினை, ‘வாங்க வாங்க’ என்று அழைத்து சொன்னதற்கு முதலில் பாராட்டு தெரிவிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் போலி நட்பினால் ஏற்படும் பின்விளைவுகள், மோசடி பெண்களை நம்பி வாழ்க்கையை தொலைக்கும் இளைஞர்கள் என சமூகம் சார்ந்த பிரச்சனைகளை படம்பிடித்து காட்டியிருப்பது சிறப்பு.

    மெசேஜ் சொல்லும் படமாக இருந்தாலும், அதில் திரில்லர், சென்டிமென்ட் மற்றும் கதைப்பின்னல்களை வைத்து திரைக் கதையை நகர்த்தியிருக்கிறார். சி.பி.சிவன், பகவதி பாலாவின் ஒளிப்பதிவும் ராஜேஷ் மோகனின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘வாங்க வாங்க’ - பொறுமையா பாருங்க.
    ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘புரூஸ்லீ’ படம் எப்படியிருக்கிறது என்பதை கிழே விரிவாக பார்ப்போம்.
    நாயகன் ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்தே மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர். ஆனால், புரூஸ்லி படம் பார்க்கும்போது மட்டும் ஆக்ரோஷமாக இருக்கிறார் என்றதும், அவரது அம்மா இவருக்கு புரூஸ்லி என்று பெயர் வைத்து அழைக்கிறார். புரூஸ்லி என்ற பெயர் வைத்ததும் யாருக்கும் பயப்படாமல் தைரியமாக சுற்றித்திரியும் ஜி.வி.பிரகாஷ் ஒரு ரவுடியிடம் மாட்டி அடிவாங்கிய பிறகு, எந்த பிரச்சினையிலும் மூக்கை நுழைக்காமல் அமைதியான வழியில் செல்கிறார்.

    இந்நிலையில், நாயகி கீர்த்தி கர்பந்தாவும் ஜி.வி.பிரகாஷும் காதலித்து வருகிறார்கள். அதேநேரத்தில், பிரபல தாதாவாக வலம்வரும் முனீஸ்காந்த், அமைச்சரான மன்சூர் அலிகானை கொலை செய்கிறார். அதை ஜி.வி.பிரகாஷ், நாயகி கீர்த்தி கர்பந்தா, ஜி.வி.பிரகாஷின் நண்பரான பாலசரவணன் மூன்று பேரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துவிடுகின்றனர்.



    இதனால் முனீஸ்காந்த்தால் அவர்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வந்தார்கள்? என்பதே மீதிக்கதை.

    ஜி.வி.பிரகாஷ் இதுவரையிலான படங்களில் எப்படி நடித்தாரோ, அதிலிருந்து கொஞ்சம்கூட மாறாமல் அப்படியே இந்த படத்திலும் நடித்திருக்கிறார். அவரது நடிப்பினால் இதுவரை சற்று அதிருப்தியில் இருந்தவர்களுக்கு, இந்த படத்தைப் பார்த்ததும் கோபம் எகிறும் என்பது நிச்சயம். அந்த அளவிற்கு, காமெடி என்ற பெயரில் இவர் செய்யும் சேட்டைகள் சிரிப்பை வரவழைக்கவில்லை.



    நாயகி கீர்த்தி கர்பந்தாவுக்கு முதல் படம் என்றாலும், ஏற்கெனவே தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நாயகிபோலவே தெரிகிறார். மிகவும் அழகாக இருக்கிறார். கவர்ச்சியிலும் தாராளம் காட்டியிருக்கிறார். கதையில் சுவாரஸ்யம் இல்லாததால் இவருடைய நடிப்பு படத்தில் எடுபடாமல் போய்விட்டது. சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரலாம்



    பாலசரவணன் காமெடிக்கென்று வந்தாலும், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றும் நடித்திருக்கிறார். படம் முழுக்க ஜி.வி.பிரகாஷ் கூடவே வந்தாலும், படத்தில் இவர் செய்யும் ஒருசில காமெடிகளைத்தான் ரசிக்க முடிகிறது. மற்றபடி நிறைய காட்சிகள் சிரிப்பை வரவழைக்கவே இல்லை.

    சமீபகாலமாக நடிப்பில் முத்திரை பதித்து வரும் முனீஸ்காந்தை இந்த படத்தில் வெறுமனே உட்கார வைத்தே வேலை வாங்கியிருக்கிறார்கள். நடிப்பதற்கான வாய்ப்பு கொஞ்சம்தான். மன்சூர் அலிகான் ஒரு காட்சியில் வந்தாலும் தனது தனித்துவமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். மொட்டை ராஜேந்திரன் வழக்கமான காமெடியில் ரசிக்க வைக்கிறார்.



    இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் தன் படத்திற்கு உலகப் புகழ்பெற்ற ‘புரூஸ்லி’ என்ற தலைப்பை வைத்துவிட்டு, சண்டையில் கவனம் செலுத்தவில்லை. அதேநேரத்தில் நகைச்சுவையிலும் கவனம் செலுத்தவில்லை. காமெடி படம் என்று சொல்லிவிட்டு எந்த இடத்திலும் காமெடி வராததுபோலவே படமாக்கியிருந்தால் எந்தளவுக்கு கோபம் வருமோ, அதுதான் இந்த படத்தை பார்க்கும்போதும் வருகிறது.

    நடிப்பில் கவனம் செலுத்தாத ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசையில் ரொம்பவும் கவனம் செலுத்தி கைதட்டல் பெறுகிறார். அதேபோல், பாடல்களிலும் இவர் அதிக கவனம் செலுத்தியிருப்பது தெரிகிறது. பி.வி.சங்கரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. இவரது கேமரா காட்சிகளை ரொம்பவும் கலர்புல்லாக அமைத்திருக்கிறது. இவ்வளவு நல்ல டெக்னீசியன்களை வைத்துக்கொண்டு படத்தை சொதப்பியிருப்பதுதான் ரொம்பவும் வருத்தத்திற்குரிய ஒன்று.

    மொத்தத்தில் ‘புரூஸ்லி’ கோமாளி.
    புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘கன்னா பின்னா’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    நாயகி அஞ்சலி ராவ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு இருந்து வருகிறார். இவரைப்போலவே சினிமாவில் கேமரா மேன், இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்ற கனவோடு அவரது நண்பர்களுடம் உடனிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு படத்தை எடுக்கவேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில், நாயகி ஒரு தயாரிப்பாளரை பார்த்து கதை சொல்வதற்காக செல்கிறார். அப்போது, அந்த தயாரிப்பாளர், ஆக்ஷன், செண்டிமெண்ட் இல்லாமல் முழுக்க முழுக்க காமெடியான ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள், படம் பண்ணலாம் என்று கேட்கிறார். நாயகியும் தன்னிடம் ‘கன்னா பின்னா’ என்ற தலைப்பில் ஒரு காமெடி இருப்பதாக அவரிடம் கூறுகிறார்.



    தலைப்பிலேயே மயங்கிப்போன தயாரிப்பாளர் மேற்கொண்டு அவரிடம் எந்த கதையும் கேட்காமல், அட்வான்ஸ் தொகையாக ரூ.5 லட்சத்தை கொடுத்துவிட்டு, அவரை ஒப்பந்தம் செய்கிறார். வீட்டுக்கு திரும்பிய நாயகி, தனது நண்பர்களிடம் நடந்ததை சொல்கிறாள். கதையே இல்லாமல் கதை இருப்பதாக பொய் சொல்லி தயாரிப்பாளரிடம் பணம் வாங்கிவிட்டு வந்திருப்பதாக நாயகி ஒரு குண்டை போடுகிறார்.



    இருப்பினும், தயாரிப்பாளர் கொடுத்த தேதிக்குள் ஒரு காமெடி கதையை தயார் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் மூன்றுபேரும் கதையை தேடி புறப்படுகிறார்கள். அப்போது, நாயகன் தியா நாயரை சந்திக்கிறார்கள். பஸ் ஸ்டாண்டில் சாக்லேட் கொடுத்து பெண்களை தன்னை காதலிக்கும்படி கெஞ்சும் நாயகனை பார்த்ததும் அவனை சுற்றிவந்தால் ஒரு காமெடி கதை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவனை பின்தொடர முடிவு செய்கிறார்கள்.

    இறுதியில் அவர்களுக்கு நல்ல கதை கிடைத்து, படம் எடுத்தார்களா? நாயகனின் குடும்பம் எவ்வளவு சிறந்தது. நாயகனைச் சுற்றி எந்தமாதிரியான சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெறுகிறது? என்பதை நகைச்சுவையுடன் சொல்ல கடுமையாக முயற்சி செய்திருக்கும் படம்தான் ‘கன்னா பின்னா’.



    இப்படத்தின் நாயகன் தியா நாயர்தான் இயக்குனரும்கூட. படம் முழுக்க அவர் வெகுளித்தனத்துடனயே நடித்திருக்கிறார். எந்தளவுக்கு வெகுளித்தனம் என்றால், பேஸ்புக் கணக்கை தொடங்குவதற்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்யக்கூடிய அளவுக்கு வெகுளியான ஆள். வில்லத்தனமான கதாபாத்திரத்திற்கு பொருந்தக்கூடிய உடலமைப்பை வைத்துக்கொண்டு கோமாளித்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை பார்க்கும்போது ஏனோ ரசிக்க முடியவில்லை.

    அதேபோல் நாயகி அஞ்சலி ராவ், படத்தை பார்ப்பவர்களின் வேதனை தெரியாமல், அடிக்கடி வந்து சிரித்து பார்ப்பவர்களை மேலும் வெறுப்பேற்றியிருக்கிறார். வில்லனாக வரும் சிவாவுக்கு வில்லத்தனமான கதாபாத்திரத்திற்கு பொருத்தமான உடலமைப்பு இருந்தும், இவருடைய நடிப்புக்கு ஏற்ற கதாபாத்திரம் இல்லாதது வருத்தம். இனிவரும் படங்களில் தனக்கு பொருந்தக்கூடிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்தால் சிறப்பாக இருக்கும்.



    நாயகனின் நண்பர்களாக வருபவர்கள், நாயகியின் நண்பர்களாக வருபவர்கள் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். படத்தில் வரும் நிறைய கதாபாத்திரங்களும் ஜிம்மில் ஓர்க் அவுட் பண்ணியவர்கள் போல கட்டுமஸ்தான உடம்புடனே வருகிறார்கள். அந்த உடம்பை வைத்துவிட்டு காமெடி பண்ணுவதுபோல் நடிக்க முற்படும்போது அது எடுபடாமல் போய்விடுகிறது. இயக்குனர் தியா நாயர் படத்தின் தலைப்புக்கேற்றவாறு கன்னா பின்னாவென்று படத்தை எடுத்து வைத்திருக்கிறார்.

    ரோஷன் சேதுராமன் இசையில் ‘லிங்கரி மிட்டாய்’ பாடல் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், அதை படமாக்கியவிதம் பாடலை கெடுத்துவிட்டதுபோல் தெரிகிறது. மற்ற பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஜெரால்டு ராஜமாணிக்கத்தின் ஒளிப்பதிவும் பரவாயில்லை ரகம்தான்.

    மொத்தத்தில் ‘கன்னா பின்னா’ கண்ணை மூடித்தான் பார்க்கணும்.

    சிபிராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வாஸ்து மீனை மையமாக வைத்து வெளிவந்துள்ள ‘கட்டப்பாவ காணோம்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    சிறுவயதில் இருந்தே ராசியில்லாத பையன் என்ற அடைமொழியோடு வளர்ந்து வருகிறார் நாயகன் சிபிராஜ். இவருடைய அப்பா சித்ரா லட்சுமண் பல தொழில்களை செய்தும் நஷ்மடைந்து கடைசியில் ஜோசியராக மாறிவிடுகிறார். இந்நிலையில், சிபிராஜ் ஒருநாள் நாயகி ஐஸ்வர்யாவை கிளப்பில் பார்க்கிறார்.

    இருவரும் ஒருவருக்கொருவர் பேசி நெருக்கமாகிறார்கள். ஐஸ்வர்யா தன்னிடம் தான் ராசியில்லாத பையன் என்று கூறும் சிபிராஜுடைய அப்பாவித்தனம் பிடித்துப்போக, அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார் ஐஸ்வர்யா. ஒருகட்டத்தில் இருவரும் காதலர்களாகிறார்கள்.



    திருமணம் செய்ய ஆசைப்படும் இவர்களுக்கு ஜோசியத்தின் மீது நம்பிக்கையுள்ள சித்ரா லட்சுமணனோ ரெண்டுபேருக்கும் ராசி சரியில்லை என்று திருமணத்துக்கு தடை போடுகிறார். இருப்பினும், அதை பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் இரண்டுபேரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். தனியாக வீடு பிடித்து குடியும் போகிறார்கள்.

    இந்நிலையில், மிகப்பெரிய தாதாவான மைம் கோபியும் ஜோசியத்தின் மீது நம்பிக்கையுடையவராக இருக்கிறார். இவர் கட்டப்பா என்று வாஸ்து மீனை வளர்த்து வருகிறார். அதனால்தான் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் இருந்து வருகிறார்.



    இந்நிலையில், அந்த மீனை யோகி பாபு திருடிச் சென்றுவிடுகிறார். திருடிச் சென்றவர் அந்த மீனை தண்ணி லாரியில் போட்டுவிடுகிறார். கடைசியில் அந்த மீன், வளர்ப்பு மீன்கள் கடை வைத்திருக்கும் லிவிங்ஸ்டன் வசம் சென்றுவிடுகிறது. ஏர்ஹோஸ்டசான சாந்தினி, தனது சிறுவயது தோழனான சிபிராஜுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக அந்த வாஸ்து மீனை வாங்கிக் கொண்டு, சிபிக்கு பரிசாக கொடுக்கிறாள். அதேநேரத்தில், காணாமல் போன வாஸ்து மீனை திருடியவனை தனது ஆட்களை விட்டு தேடி வருகிறார் மைம் கோபி.

    இறுதியில், அந்த வாஸ்து மீன் மைம் கோபியின் கைக்கு கிடைத்ததா? சிறு வயதில் இருந்தே ராசியில்லாத பையன் என்று வளர்ந்த சிபிராஜ் கையில் கிடைத்த வாஸ்து மீன் அவருக்கு ராசியை கொடுத்ததா? வாஸ்து மீன் தனது கைக்கு வந்தபிறகு சிபிராஜின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    சிபிராஜ் இப்படத்தில் ஹீரோயிசம் காட்டாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். படத்தில் இவருக்கு ஆக்ஷன் காட்சிகளே கிடையாது. முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் கூடிய கதாபாத்திரம். அதிலும், கதைக்கு என்ன தேவையோ அதற்கேற்ற நடிப்பை மட்டும் கொடுத்து கைதட்டல் பெறுகிறார்.

    ஐஸ்வர்யா ராஜேஷ் மாடர்ன் பெண்ணாக வருகிறார். இந்த படத்தில் மதுபானங்கள் குடிப்பதுபோன்றெல்லாம் துணிச்சலாக நடித்திருக்கிறார். படத்தில் இவருடைய கதாபாத்திரம்கூட துணிச்சல்மிக்கதுதான். அதே துணிச்சலுடன் நடித்து அசத்தியிருக்கிறார். அதேநேரத்தில் படத்தில் இரட்டை அர்த்த வசனங்களும் பேசி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.



    காளி வெங்கட் படத்தின் காமெடிக்கு ரொம்பவும் உதவியிருக்கிறார். சர்ப்ரைஸ் ஷீலாவாக வரும் சாந்தினி கலகலப்பான பெண்ணாக வந்து ரசிக்க வைக்கிறார். மைம் கோபி ரெண்டு, மூன்று காட்சிகள் வந்தாலும் வில்லத்தனத்தில் மிரட்டிவிட்டு போயிருக்கிறார். யோகி பாபுவுக்கும் ஒரு சில காட்சிகள்தான். இருப்பினும், அவர் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பு கொடுக்கிறது.

    சித்ரா லட்சுமணன், களவாணி திருமுருகன், டிடெக்டிவாக வரும் சரவணன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள்.

    இயக்குனர் மணி சேயோன் தனது முதல்படத்திலேயே மூடநம்பிக்கையை கதைக்கருவாக வைத்துக் கொண்டு அதில் வெற்றிபெற முயற்சி செய்திருக்கிறார். வாஸ்து மீன் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு அதைச் சுற்றி நடக்கும் கதையை நகைச்சுவையோடு கொண்டுபோய் ரசிக்க வைத்திருக்கிறார். இருப்பினும், படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இருப்பதால் குடும்பத்தோடு சென்று பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது. அதையெல்லாம் கொஞ்சம் தவிர்த்திருந்தால் அனைவரும் ரசிக்கும்படியான படமாக இது இருந்திருக்கும் என்பது மட்டும் உண்மை.


    ஆனந்த் ஜீவாவின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக படமாக்கியிருக்கிறது. வீட்டுக்குள் நடக்கும் காட்சிகளில் எல்லாம் தேவையான ஒளியில் படமாக்கி கைதட்டல் பெறுகிறார். பாடல் காட்சிகள் குளுமை இருக்கிறது. சந்தோஷ் குமார் தயாநிதியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.

    மொத்தத்தில் ‘கட்டப்பாவ காணோம்’ காமெடி கலாட்டா.
    கிங் காங் என்ற கொரில்லா குரங்கை மையமாக வைத்து உருவாகியுள்ள `காங்: ஸ்கல் ஐலேண்ட்' படத்தின் விமர்சனத்தை கீழே படிப்போம்.
    அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி ஜான் குட்மேன். பசுபிக் பெருங்கடலில் அவர் நடத்திய ஆராய்ச்சியின் போது மறைவாக உள்ள ஸ்கல் ஐலேண்ட் என்ற தீவு  ஒன்றை கண்டுபிடிக்கிறார். யாரும் நுழைய முடியாத அளவுக்கு அந்த தீவில் ஒருவித சூறாவளி போன்ற சுழற்காற்று ஒன்று  தடுக்கிறது. எனவே அங்கு ஆராய்ச்சி மேற்கொண்டால் பல புதுமையான கனிமங்கள் மற்றும் படிமங்கள் கிடைக்கும் என்று நம்பும்  விஞ்ஞானி குட்மேன் அந்த தகவலை தனக்கு நம்பமகமான முன்னாள் ராணுவ வீரர், படத்தின் ஹீரோவான டாம் ஹிடில்சனிடமும்,  பெண் புகைப்பட கலைஞர் ஒருவரிடமும் தெரிவிக்கிறார்.

    அதனைத்தொடர்ந்து அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அமெரிக்க அரசிடம் இருந்து அனுமதி பெற்று அந்த தீவுக்கு தனது  விஞ்ஞானிகள் குழுவுடன் செல்கிறார். அந்த விஞ்ஞானிகள் குழுவுடன், அமெரிக்க ராணுவக்குழு ஒன்றும், மருத்துவக்குழு ஒன்றும்  செல்கிறது.



    அந்த தீவுக்கு செல்லும் இராணுவ குழுவை சாமுவேல் ஜேக்சன் வழிநடத்தி செல்கிறார். மூன்று குழுக்களும் அந்த தீவினை நெருங்கும்  போது சுழற்காற்று வீசுத் தொடங்குவதால் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தீவுக்குள் நுழைகின்றனர்.

    தீவுக்குள் நுழையும் போதே ஒருவித புதுமையை உணரும் அந்த குழுவினர் அங்கு தரையிறங்கும் முன்பு பாறைப்படுகையை  கண்டறிய குண்டுமழை பொழிகின்றனர். அப்போது எதிர்பாரதவிதமாக வரும் கிங்காங் மீதும் அக்குழு தாக்குதல் நடத்துகிறது. அதனை  கண்டு மிரண்ட கிங்காங் தன்னை தாக்கும் ஹெலிகாப்டர்களை அடித்து நொறுக்கி துவம்சம் செய்கிறது. இதில் ராணுவ குழுவில் உள்ள  பெரும்பாலானோர் பலியாகின்றனர். உயிர்தப்பும் மற்ற குழுவினர் கிங்காங்கிடமிருந்து தப்பிக்க காட்டுக்குள் செல்கின்றனர்.



    அதே நேரத்தில் அந்த காட்டுக்குள் வசிக்கும் காட்டுவாசி குழு மற்றும் இதற்கு முன்பு ஆராய்ச்சி செய்ய வந்து அந்த காட்டுக்குள் சிக்கிக்  கொண்ட விஞ்ஞானி ஒருவரையும் உயிர்தப்பியவர்களில் சிலர் சந்திக்கின்றனர். அங்கு பல ராட்சத விலங்குகளை பார்க்கும் ஆராய்ச்சி  குழுவினர் ஒருவித பெரிய பல்லி போன்ற விலங்கிடம் சிக்கிக் கொள்கின்றனர். அவர்கள் எப்படி தப்பித்தார்கள்? அவர்களை கிங்காங்  எப்படி காப்பாற்றியது. ஏன் காப்பாற்றியது ? ஏன் காப்பாற்றியது என்பது படத்தின் மீதி கதை.

    படத்தில் டாம் ஹிடில்சன், ஜான் குட்மேன், சாமுவேல் ஜாக்சன், பிரெய் லார்சென், ஜேசன் மிட்செல், ஜான் ஆர்டிஸ், கோரி  ஹாக்கின்ஸ், தாமஸ் மேன் உள்ளிட்ட அனைவரும் தங்களது நடிப்பை சிறப்பாக தந்துள்ளனர். குறிப்பாக ஜான் ரெய்லி வரும் காட்சிகள்  அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது. சரியான நேரத்தில் அவரது காமெடியும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.



    படத்தில் டப்பிங் கலைஞர்கள் தமிழுக்கு ஏற்றவாறு அழகாக, நேர்த்தியாக குரல்களை கொடுத்துள்ளதால் தமிழில் படம் பட்டயை  கிளப்புகிறது என்று சொல்லலாம். குறிப்பாக படத்தை 3டி-யில் பார்க்க ரம்மியமாக உள்ளது.

    படத்தின் இயக்குநரான ஜோர்டன் ரோபர்ட்ஸ் காட்சிகளை நேர்த்தியாக வடிமைத்துள்ளார். குறிப்பாக கிங்காங் வரும் காட்சிகளும் சரி,  ராட்ச பல்லி உள்ளி காட்டு மிருகங்களை திரையில் பார்க்க ரம்மியமாக உள்ளது. படத்தின் கதையை பொறுத்தவரை அமெரிக்க தனது  ஆயுதங்களை பொதுவான இடத்தை தேர்வு செய்து அதில் சோதனை செய்து பார்க்கும். அதாவது வியட்நாம் போர் என்பது நாம்  அறிந்ததே. முன்பு ஒருமுறை தனது ஆயுத பலங்களை வியட்நாமின் மீது சோதித்து பார்த்தது. அந்த நேரத்தில் வியட்நாமில் உள்ள  மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டாலும், அந்த போரில் அமெரிக்க படை தோல்வியையே சந்தித்தது. அமெரிக்க படைகளை விரட்ட  வியட்நாம் படை கொரில்லா படைபெயடுப்பை நடத்தியது. அந்த கதையை மையக் கருத்தாகக் கொண்டு இந்த கதை உருவாகியுள்ளது  என்றும் பார்க்கலாம்.



    படத்தின் வி.எப்.எக்ஸ் காட்சிகளை பொறுத்தவரை தொழில்நுட்பக் கலைஞர்கள் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். குறிப்பாக காடுகள்  மற்றும் அதன் தோற்றம் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. மேலும் கிங்காங் வரும் காட்சிகளும் சரி, ராட்ச பல்லி உள்ளி காட்டு மிருகங்கள்  வரும் காட்சிகளும் ரசிக்கும்படி உள்ளது. பிரம்மிக்க வைக்கிறது.

    மொத்தத்தில் `காங்: ஸ்கல் ஐலேண்ட்' கர்ஜனை
    ×