என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    என்மீது ஒரு பழிஉண்டு... அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது - வைரமுத்து
    X

    என்மீது ஒரு பழிஉண்டு... அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது - வைரமுத்து

    • திருத்தத்திற்கு ஒரு கருத்தமைதி வேண்டும். இருந்தால், அதற்கு நான் உடனே உடன்படுவேன்.
    • 'தெரிந்ததை மட்டும் சொல்வதல்ல பாட்டு; தெரியாததைச் சொல்லிக் கொடுப்பதும் பாட்டு' என்று மாற்ற மறுத்துவிட்டேன்.

    வைரமுத்து தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். இப்போதும் அவர் இளம் பாடலாசிரியர்களுக்கு போட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

    இந்நிலையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    என்மீது ஒரு பழிஉண்டு

    பாடல்களில்

    திருத்தம் கேட்டால்

    செய்யமாட்டேன் என்று

    அது முற்றிலும்

    உண்மைக்குப் புறம்பானது

    திருத்தத்திற்கு

    ஒரு கருத்தமைதி வேண்டும்.

    இருந்தால், அதற்கு நான்

    உடனே உடன்படுவேன்;

    மாற்றியும் கொடுப்பேன்;

    கொடுத்திருக்கிறேன்

    புன்னகை மன்னன் படத்தில்

    'வான் மேகம்

    பூப்பூவாய்த் தூவும்'

    என்றொரு பாட்டு

    மழையில் நனையும்

    ஒரு மான்குட்டி

    தன் கவிதையால் மழையைக்

    குளிப்பாட்டும் பாட்டு

    'மழைத்துளி தெறித்தது

    எனக்குள்ளே குளித்தது

    நினைத்தது பலித்தது

    உயிர்த்தலம் சிலிர்த்தது'

    என்று எழுதியிருந்தேன்

    'உயிர்த்தலம் என்பதைமட்டும்

    மாற்றிக்கொடுங்கள்' என்றார்

    இசையமைப்பாளர்

    ஏன் என்றேன்?

    'நீங்கள் எழுதிய பொருளில்

    புரிந்துகொள்ளாமல்

    அதைப் பெண்ணுறுப்போடு

    சம்பந்தப்படுத்திப்

    பிரச்சினை செய்வார்கள்' என்றார்

    சிந்தித்தபோது

    சரியென்றே பட்டது

    நான் உடனே

    'நினைத்தது பலித்தது

    குடைக்கம்பி துளிர்த்தது'

    என்று மாற்றிக்கொடுத்தேன்

    இதில் நியாயம் இருக்கிறது

    இன்னொரு படம் மனிதன்

    அதில்

    'வானத்தைப் பார்த்தேன்

    பூமியைப் பார்த்தேன்'

    என்றொரு பாடல்

    "குரங்கிலிருந்து பிறந்தானா

    குரங்கை மனிதன் பெற்றானா

    யாரைக் கேள்வி கேட்பது

    டார்வின் இல்லையே"

    என்று எழுதியிருந்தேன்

    இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின்

    உதவியாளர் லட்சுமி நாராயணன்

    என் காதோடு வந்து

    'டார்வின் என்பதை மட்டும்

    மாற்றுங்கள்; அது எல்லாருக்கும்

    புரியாது' என்றார்

    நான்

    புன்னகையோடு சொன்னேன்:

    'தெரிந்ததை மட்டும்

    சொல்வதல்ல பாட்டு;

    தெரியாததைச் சொல்லிக்

    கொடுப்பதும் பாட்டு'

    என்று மாற்ற மறுத்துவிட்டேன்

    எஸ்.பி.முத்துராமனிடம் சென்று

    நான் சொன்னதைச்

    சொல்லியிருக்கிறார்.

    அவரும் இதற்குமேல்

    வற்புறுத்த வேண்டாம் என்று

    வருத்தத்தோடு விட்டுவிட்டார்

    டார்வின் பேசப்பட்டது

    இப்படி

    நியாயமான பொழுதுகளில்

    மாற்ற மறுத்திருக்கிறேன்

    பாட்டுவரியின் திருத்தத்தைப்

    பொருளமைதியே தீர்மானிக்கிறது;

    நானல்ல

    ஆனால் பழி

    என்மீதே வருகிறது

    என்ன செய்ய?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    Next Story
    ×