என் மலர்
சினிமா செய்திகள்

விக்ரம் பிரபுவின் சிறை விமர்சனம்
- ஆயுத படை காவலர்களின் வலியையும், உணர்வுகளையும் தனது கேரக்டர் மூலம் விக்ரம்பிரபு பிரதிபலித்துள்ளார்.
- முதல் படம் என்று தெரியாத அளவிற்கு அழுத்தமான நடிப்பை அக்சய்குமார் கொடுத்துள்ளார்.
ஆயுதப்படை போலீஸ் ஏட்டான விக்ரம் பிரபு வேலூர் ஜெயிலில் கொலை குற்றவாளியாக இருக்கும் அக்சய்குமாரை சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து செல்கிறார். அவரோடு போலீஸ்காரர்கள் ஹரிசங்கர் நாராயணன் மற்றும் இன்னொருவரும் பாதுகாப்புக்கு செல்கிறார்கள். சிவகங்கைக்கு செல்லும் வழியில் திடீரென அக்சய் குமார் போலீஸ் துப்பாக்கியுடன் தப்பித்து விடுகிறார். இவரை பிடிக்க விக்ரம் பிரபு மற்றும் குழுவினர் முயற்சி செய்கிறார்கள்.
இறுதியில் அக்சய் குமாரை விக்ரம் பிரபு பிடித்தாரா? அக்ஷய் குமார் எப்படி குற்றவாளியாக மாறினார்? எதற்காக அக்ஷய் குமார் தப்பிச்சென்றார் என்பதே படத்தின் மீதிக்கதை.
போலீஸ் ஏட்டாக நடித்திருக்கும் விக்ரம்பிரபு படத்தின் கதாபாத்திரத்திற்கு தகுந்த இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுவரை இல்லாத அளவிற்கு நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். ஆயுத படை காவலர்களின் வலியையும், உணர்வுகளையும் தனது கேரக்டர் மூலம் பிரதிபலித்துள்ளார்.
இன்னொரு கதாநாயகனாக நடித்திருக்கும் அக்சய்குமார் கொலைக்குற்றவாளியாக படத்தின் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். முதல் படம் என்று தெரியாத அளவிற்கு அழுத்தமான நடிப்பை கொடுத்துள்ளார். கைதியாகவும், காதலியை பிரிவது. மற்றும் அவரை பார்க்க துடிப்பதிலும், தாயை நினைத்து கதறுவதிலும் அவரது நடிப்பு கைத்தட்டலை பெறுகிறது. கதாநாயகியான அனிஷ்மா அனில்குமார் எளிமையான கேரக்டரில் உணர்வுபூர்வமான நடிப்பை கொடுத்துள்ளார்.
விக்ரம் பிரபுவுடன் பாதுகாப்பு பணிக்கு போலீசாக செல்லும் ஹரிசங்கர் நாராயணன் கைதிகளை கொண்டு செல்லும் நிஜ போலீசாரின் முகபாவனைகளை அப்படியே பிரதிபலித்துள்ளார்.
ஆயுதப்படை காவலர்களின் பணிசுமை, வலிகள் மற்றும் பல ஆண்டுகளாக சிறையில் அடைபட்டு கிடக்கும் குற்றவாளிகளின் பரிதாப நிலை, அவர்களின் பின்னணி தகவல்களை உணர்வோடு மட்டுமின்றி எதிர்பார்ப்போடு இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ்ராஜகுமாரி. ஆயுதப்படை காவலருக்கும், கொலை குற்றவாளிக்கும் இடையே நடக்கும் உணர்வு போராட்டத்தை ஆர்ப்பாட்டமின்றி அமைதியாகவும் அழகாகவும் கொடுத்து இருக்கிறார். விறுவிறுப்பான திரைக்கதை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
மதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவும் ஜஸ்டின் பிரபாகரன் இசையும் ரசிக்க வைக்கிறது.






