என் மலர்
சினிமா செய்திகள்

நடிகர் விஜய் நிறுத்தும் வேட்பாளர்களால் அபாயம்- ரகசிய கருத்துக் கணிப்பில் தகவல்
- அரசியலுக்கு நடிகர் விஜய் வருவது கொஞ்சம் கொஞ்சமாக உறுதியாகி வருகிறது.
- அதை கருத்தில் கொண்டுதான் தொகுதி வாரியாக நலத்திட்ட பணிகளை அவரது நற்பணி மன்றத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது கொஞ்சம் கொஞ்சமாக உறுதியாகி வருகிறது. அரசியலில் வலுவாக காலூன்ற வேண்டும் என்று நடிகர் விஜய் விரும்புகிறார். அதை கருத்தில் கொண்டுதான் தொகுதி வாரியாக நலத்திட்ட பணிகளை அவரது நற்பணி மன்றத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு முன்பு நடிகர் விஜயகாந்த் அரசியலில் காலடி எடுத்து வைத்தபோது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கினார். முதல் 2 தேர்தல்களிலும் அவர் சுமார் 10 சதவீத வாக்குகளை குவித்தார். 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அவர் நிறுத்திய வேட்பாளர்கள் பிரித்த வாக்குகள் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றி-தோல்வியை நிர்ணயம் செய்யும் வகையில் இருந்தன.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவர் நிறுத்தும் வேட்பாளர்களும் இதே போன்று தாக்கத்தை ஏற்படுத்துவார்களா? என்ற ரகசிய கருத்து கணிப்பு தமிழகம் முழுவதும் சமீபத்தில் ஒரு நிறுவனத்தால் நடத்தப்பட்டது. அந்த முடிவுகள் ஆச்சரியப்படும் வகையில் உள்ளன. பெரும்பாலான தொகுதிகளில் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது.
சராசரியாக தமிழகம் முழுவதும் 7 முதல் 10 சதவீதம் வாக்குகளை நடிகர் விஜய் நிறுத்தும் வேட்பாளர்களால் பிரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் பெரும்பாலான தொகுதிகளில் நடிகர் விஜய்க்கு தற்போது 3 முதல் 4 சதவீத ஆதரவே உள்ளது. அடுத்தடுத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அவரது பேச்சுக்கள், வாக்குறுதிகள் அவருக்கு இருக்கும் ஆதரவை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
விஜய் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க முடியுமா? என்பது கேள்வி குறியே என்று முதல் கட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆகையால் நடிகர் விஜய் தொடக்கத்திலேயே கூட்டணி சேர்ந்தால் தான் சாதிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடிகர் விஜய் கூட்டணி சேருவாரா? என்பது யாருக்கும் தெரியாது.






