search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    முத்தத்தை திரையில் காட்டலாம் தவறில்லை- நானி பேச்சு
    X

    முத்தத்தை திரையில் காட்டலாம் தவறில்லை- நானி பேச்சு

    • 'ஹாய் நான்னா' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
    • இப்படம் டிசம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடிக்கும் திரைப்படம் 'ஹாய் நான்னா'. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

    'ஹாய் நான்னா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து நடிகர் நானி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.


    இந்நிகழ்வினில் நடிகர் நானி பேசியதாவது, 'நான்னா' திரைப்படம் மிக அழகான படம். படத்தை முழுதாகப் பார்த்த பிறகு சொல்கிறேன், இந்தப்படம் எனக்கு பெருமை தரும் படம். டிசம்பர் 7 திரையரங்குகள் கொண்டாடும் படமாக இது இருக்கும். ஒரு காதல் படம், ஆனால் பரபரவென போகும் கதை என கண்டிப்பாக உங்கள் மனதில் இடம்பிடிக்கும் படமாக இருக்கும். தமிழில் நான் நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து எப்போதும் எனக்கு ஆதரவு தந்து வருகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள். இது ஒரு முறை பார்க்கும் படமாக இருக்காது, மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கும் படைப்பாக இருக்கும் என்றார்.

    மேலும் அவர் பேசியதாவது, அம்மா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட் என பிரிக்க முடியாது. அன்பு ஒன்று தான். அம்மா படங்கள் எல்லாம் நிறைய வந்துவிட்டன. இப்போது அப்பா படங்கள் வர ஆரம்பித்துள்ளன. அது நல்லது என்றே நினைக்கிறேன். எனக்கு தமிழ் படங்கள் ரொம்பப் பிடிக்கும். மணிரத்னம் சார், கமல் சார் படங்களின் தீவிர ரசிகன் நான். ஆனால் தமிழ் முழுமையாக பேச வராது, இப்போது கற்றுக்கொண்டிருக்கிறேன். விரைவில் பேச முடியும் என நம்புகிறேன்.



    ஆரம்பத்தில் தமிழ் இயக்குனர்களோடு வேலை பார்த்தேன். ஆனால் அதை இங்குள்ள மக்கள் தெலுங்குப் படமாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். தெலுங்கு மக்கள் தமிழ்ப் படமாக பார்க்க ஆரம்பித்தார்கள். பின்னர் 'பாகுபலி', 'காந்தாரா' போன்ற படங்கள் வந்த பிறகு தமிழ் நடிகர், தெலுங்கு நடிகர் என்று பிரித்து பார்த்து படம் எடுக்க தேவையில்லை, சொல்லும் கதைக்கு உண்மையாக இருந்தால் போதும் அது மக்களிடம் போய்ச் சேரும் எனப் புரிந்தது. எனவே தான் நான் கதைகளுக்கு முக்கியத்துவம் தருகிறேன். தமிழ், தெலுங்கு எனப் பிரித்து வைக்க தேவையில்லை, என் எல்லாப் படங்களும் இங்கு தமிழில் வரும்.

    நடிகை மிருணாள் இந்தப் பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று மொத்த டீமும் நினைத்து தான் தேர்வு செய்தோம், அதை அவர் அற்புதமாக செய்துள்ளார். ஒரு மிகச்சிறந்த தமிழ் இயக்குனர், எனக்குப் பிடித்தவர், அவர் எனக்காக ஒரு கதை சொன்னார், விரைவில் அப்படம் பற்றிய அறிவிப்பு வரும்.

    எனக்கு இந்தப்படத்தில் சவாலாக இருந்தது என்னவெனில், நான் ஏற்கனவே 'ஜெர்ஸி'யில் அப்பாவாக நடித்துவிட்டேன். அது மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர். மீண்டும் அதே போல் ஆனால் அதிலிருந்து மாறுபட்டு நடிப்பது தான் சவாலாக இருந்தது.


    முன்னர் எல்லாம் முத்தக் காட்சியில் திரை இருட்டாகிவிடும், 2023-ல் கிஸ் பெரிய விஷயம் இல்லை. இங்கு கல்யாணம் ஆனவர் இருப்பீர்கள், மனைவியை முத்தம் கொடுக்காமல் யாராவது இருப்பார்களா? முன்னர் மாதிரி மரத்தை சுற்றுவது, பூவைக் காட்டுவது என்று இப்போதைய ஆடியன்ஸை ஏமாற்ற முடியாது. முத்தத்தை திரையில் காட்டலாம் தவறில்லை.

    நம் வாழ்க்கையில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள், படத்தில் மட்டும் ஏன் இருக்கக்கூடாது? என் படத்தில் அவர்கள் பெரிய இடம் வகிப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்தப்படம் ஆண்- பெண் உறவை மிகச்சிறப்பாக பேசும் படமாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் சிறப்பான படைப்பாக இருக்கும் என்று பேசினார்.

    Next Story
    ×