search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    என்னைப் பற்றிய செய்திக்கு விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை - இயக்குனர் லிங்குசாமி
    X

    லிங்குசாமி

    என்னைப் பற்றிய செய்திக்கு விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை - இயக்குனர் லிங்குசாமி

    • காசோலை பணமில்லாமல் திரும்பிய வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
    • சைதாப்பேட்டை நீதிமன்றம் அளித்த 6 மாத சிறை தண்டனை தீர்ப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது.

    இயக்குனர் லிங்குசாமி கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா ஆகியோரது நடிப்பில், 'எண்ணி ஏழு நாள்' என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக, தனது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் பெற்றிருந்தது. இந்த கடனை திருப்பிக் கொடுக்காமல் அடுத்தடுத்து அவர்கள் பல படங்களை தயாரித்ததையடுத்து, அந்த நிறுவனத்துக்கு எதிராக பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


    கார்த்தி - சமந்தா - லிங்குசாமி

    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பிவிபி நிறுவனத்திடம் பெற்ற ரூ.1 கோடியே 3 லட்சம் கடனை திரும்பச் செலுத்த லிங்குசாமிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, லிங்குசாமி, ரூ.1 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுனத்திற்கு வழங்கினார். இந்த காசோலைகள் வங்கியில் போதிய பணம் இல்லாமல் திரும்பி வந்ததையடுத்து இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு எதிராக பிவிபி நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது.


    லிங்குசாமி

    இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் செக் மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமி உட்பட அவரது சகோதரர்களுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. அதே சமயம் மேல் முறையீடு செய்ய அவகாசம் அளித்து உத்தரவிட்டது. அதன்பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரூ.10 ஆயிரம் அபராத தொகையை லிங்குசாமி செலுத்தினார்.


    லிங்குசாமி

    தற்போது இம்மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றம், மனுவை தள்ளுபடி செய்ததுடன், வட்டியுடன் சேர்த்து கடனை திருப்பி செலுத்த உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது. மேலும் கடந்த ஆகஸ்டு மாதம், சைதாப்பேட்டை நீதிமன்றம் அளித்த 6 மாத சிறை தண்டனை தீர்ப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது.



    லிங்குசாமி வெளியிட்ட அறிக்கை

    இந்நிலையில் இதுகுறித்த தன்னிலை விளக்கத்தை அறிக்கையின் வாயிலாக இயக்குனர் லிங்குசாமி தரப்பு வெளியிட்டுள்ளது. அதில், இன்று பல ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னைப் பற்றிய ஒரு செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை. இந்த வழக்கு பிவிபி கேப்பிட்டல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் இடையிலானது. அவர்கள் தொடுத்த வழக்கின் மேல்முறையீட்டில் நேற்று மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாங்கள் மாண்புமிகு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம் என்று இயக்குனர் லிங்குசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    Next Story
    ×